என் மேகம் ???

Wednesday, December 22, 2010

துரத்தும் கனவுகள்

யானையும் பாம்பும்
இனம்புரியா உணர்வுகளும்
துரத்தும் கனவுகளில்
அலுப்பு கொண்டு...
புது கனவுகளைத்
துரத்திச் சென்றேன்


வயிற்றுப்பாடே கனவென்ற
அவலநிலைக் கனவுகளும்
சொகுசுகள் மட்டும்
மலைப்பாம்பாய் சுற்றிய
சைக்கோ கனவுகளும்
வன்முறையும் கொடூரமும்...

துரத்தத் தொடங்க...

சிறுவர் கனவினுள்
அடைக்கலம் புகுந்தேன்
சாக்லேட்டும் தேவதைகளும்
பனிப்பொழிபவும் மலர்களும்
பேசும் விலங்குகளும்
இரசிக்கத் தொடங்கையில்

என் வருகையால்...
எங்கிருந்தோ வந்தன
பேய்களும் பிசாசுகளும்
திக்கற்ற காடும்
வெற்று வீடுகளும்

பதறிச் சென்று
குழந்தையின் கனவில்
நுழைந்திட முயன்றேன்
புன்னகை கவராது
கனவுக்குள் வ்ழியில்லை
கனவுள் செல்லவில்லை

என்ன கனவோ?
குழந்தை சிரித்தது
குழந்தைச் சிரிப்பை
கனவாகக் கொண்டுவந்தேன்
புன்னகையுடன் விழித்தேன்

Monday, December 20, 2010

புனித ஜார்ஜ் கோட்டை

சென்னை வந்து பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும், சென்னையில் இருக்கும் முக்கிய இடங்களுக்கு சென்றது மிகக்குறைவே!!! சென்ற வாரம் புனித ஜார்ஜ் கோட்டை செல்ல முடிவு செய்தோம். கடற்கரை ஓரத்தில் சில்லென்ற காற்று வீச, கோட்டைக்கு எதிரே இருந்த் பூங்காவில் காரை நிறுத்தினோம். இப்பொழுது சட்டமன்றம் அங்கில்லாததாலோ என்னவோ, வாகனங்கள் ஏதும் காணவில்லை. இந்தியாவின் உயரமான கொடிக்கம்பத்தில் கம்பீரமாகப் பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய கொடி வரவேற்றது.



புகைப்படம்: வலை




நுழைவாயிலில் கையெழுத்திட்டு, சிறு அகழிபோன்றதொரு அமைப்பைக் கடந்தோம். சின்ன சின்ன பீரங்கிகள் அணிவகுத்து நின்றன. வலப்புறம் கண்காட்சியகம் நின்றது. வெள்ளியன்று சென்றதால் கண்காட்சியகம் விடுமுறையென மாதா கோயில் சென்றோம். அது, 1678-80 AD காலகட்டத்தில் கட்டப்பட்டது. சர்ச்சை சுற்றிலும்... கல்லறைகள் 1700 காலகட்டத்தைச் சுற்றி இருந்தவர்களின் கல்லறைகள். சின்ன சின்ன கல்லறைகள் முதல் பல வருடம் வாழ்ந்து மறைந்தவரின் கல்லறைகள். பலருக்கு எங்கோ பிறந்து இங்கு விதி முடிந்திருந்தது ... மூன்று நூற்றாண்டுகள் கடந்து நிற்பது போன்ற உணர்வு மனதைப் பிசைந்தது.

மாதா கோயில் விரிந்து இருந்தது; பெரிய பெரிய கதவுகளும் சன்னல்களும் என்று பிரும்மாண்டமாகத் தெரிந்தது. குழந்தையுடன் மறைந்த தாய், திருமணமான மூன்றே மாதங்களில் மறைந்த ஆசை மனைவி, அன்புக் கணவன், நெருங்கிய தோழமை, மேலதிகாரி பணியாளர் என்று பலரின் மறைவின் பின்னணிகளை தாங்கி நின்றன சுவர்களும் தூண்களும். சில இடங்களில் மரணத்திற்கு வருந்தும் பளிங்குச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. மேற்கத்தியரோடு, இந்தியரைக் குறிக்கும் தாடியுடன் ஓர் உருவமும், சற்றே மொட்டைத்தலையுடன் ஓர் உருவமும் காண முடிந்தது. ஞானஸ்தானத் தொட்டி ஒன்றும் இருந்தது. அக்கோயிலில் ஞானஸ்தானம் செய்யப்பட்டவர்கள், திருமணம் செய்து கொண்டவர்கள், கல்லறையில் புதைக்கப்பட்டவர்கள் என்று பல கோப்புகள் இருந்தன. எழுத்துக்கள் முத்து முத்தாக அழகாக இருந்தன.


ஞாயிறன்று மீண்டும் அருங்காட்சியகம் சென்றோம். அன்று சர்ச்சுக்கு விடுமுறை. இந்த அருங்காட்சியகம் முன்பு மீட்டிங், லாட்டரி, பொழுதுபோக்கு, தேநீர் விடுதி போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டது. பின்பு பண்டகச்சாலையாகவும் இருந்துள்ளது. மூன்று தளங்களில் காட்சியகம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இரண்டு தளங்களுக்கு மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி. நுழைவுச்சீட்டு ஐந்து ரூபாய்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மிக வலுவான கோட்டை என்று சொல்ல இயலாது.. ஆனால் மிக வலுவான ஒரு சரித்திரத்தை உருவாக்கிய பங்கு இதற்கு உண்டு. இந்த கோட்டை கட்டப்படாது இருந்தால் இந்திய சரித்திரமே மாற்றி எழுதப்பட்டிருக்கலாம். அப்பொழுது சூரட்டில் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை இருந்தது. இந்த கோட்டை கட்ட அனுமதி கேட்டு வந்த பதில் பட்டும்படாமலும் இருந்தது. அந்த கடிதம் உரிய நேரத்தில் வந்திருந்தால், ஒருவேளை கோட்டை கட்டப்படாது போயிருக்கலாம். ஆனால்... காலம் தன் கோலம் வரைந்தது. பிரிட்டிஷ் சரித்திரத்தின் மிகப்பெரிய ராஜ்யமும், இந்திய சரித்திரத்தின் வலிகள் நிறைந்த காலமும் கோட்டையின் அஸ்திவாரத்தில் தொடங்கியது. இங்கிலாந்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் புனித ஜார்ஜின் நினைவாக கோட்டைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இது முதலில் வர்த்தக பரிமாற்றத்திற்காகக் கட்டப்பட்டது தான்... பின்னர் அரசியல் கோட்டையானது.

கீழ்தளத்தில் சிறு பீரங்கிகள், கோட்டைக் கதவுகளைத் தகர்க்க உதவும் கருவி, போரில் பயன்படுத்திய குண்டுகள் (எம்டன் என்பது சென்னையைத் தாக்கிய ஜெர்மானிய கப்பல் என்று அறிந்தேன்), சீருடைகள், போருடைகள், படைக் கொடிகள், பதக்கங்கள், வாட்கள், துப்பாக்கிகள், போர்சிலீன் பாத்திரங்கள், கலைப்பொருட்கள்,கோட்டையின் மாதிரி ... என்று பலவும் கண்காட்சியில் இருக்கின்றன.

மேல்தளத்தில் பகோடா (அ) வராகன் முதற்கொண்டு, பணம், அணா, பைசா , ரூபாய் என்று பல்வேறு காலங்களில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள் இருக்கின்றன. பல மேற்கத்திய அதிகாரிகள், இராணிகள் மற்றும் நவாபுகளின் படங்களும் பார்வைக்கு உள்ளன. ஆங்கிலே ஓவியர்கள் இருவர் நம் நாட்டைச் சுற்றிப்பார்த்து வரைந்த பதிப்போவியங்கள் நாம் காணவேண்டிய ஒன்று. திருச்சி மலைக்கோவில், மதுரை அரண்மனை, ஆற்காடு, ஆரணி, காஞ்சீபுரம் மற்றும் சென்னையின் சில இடங்களில் காணப்படும் அமைதியும் அழகும் மனதை ஈர்க்கின்றன.

எல்லாம் பார்த்து வெளிவரும் பொழுது மனம் சற்று அழுத்தமாகத்தான் இருந்தது. நாம் அடிமையாகக் கிடந்த காலத்தை நினைவுறுத்தும் சின்னம் அல்லவா?


குறிப்பு: பாதுகாக்கப்படும் சின்னம் ஆதலால், புகைப்படம் எடுக்கவில்லை. பிளாஷ் இல்லாமல் புகைப்படமெடுக்கலாம், ஆனால் நான் எடுக்கவில்லை.

Sunday, December 19, 2010

பாட்டும் பரதமும்


இந்த பாட்டும் பரதமும் பெண்ணுக்கு சொல்லிக் கொடுக்க அனுப்பியதென்னவோ படிப்பைத் தவிர ஏதேனும் கற்றுக் கொள்ளட்டும் என்று தான். அவளுக்கு மிக விருப்பம். எனவே தொடர்கிறது. என்றாலும், எனக்கோர் ஏக்கமுண்டு... எனக்கு இதெல்லாம் தெரியாது... அவளைப் பாடச்சொல்லியோ ஆடச்சொல்லியோ இரசிக்கும் பொறுமையும் கிடையாது. டி.வி.யில் “தகதிமி” என்றோ “சரிகம” என்றோ இருந்தால் அடுத்த சேனலுக்கு ஓடும் ஆள் நான்.

இப்படி இருக்கையில் தான் பெண்ணுக்கு சலங்கை அணி விழா வந்தது. அதாவது, இதுவரை காலை வைத்து சத்தம் செய்து நடன்ம் ஆடியவர்கள், இனி, சலங்கை அணியும் தகுதி அடைந்து சலங்கை ஒலியில் ஆடும் தகுதி பெறுகிறார்கள். ஒரு level என்று வைத்துக் கொள்ளலாம் (என் புரிதல் தவறெனில் திருத்தவும்). நெருங்கிய உறவினர்களை உரிமையாகவும் , நெருங்கிய தோழமைகளை முடிந்தால் வரவும் என்று வற்புறுத்தாமலும் அழைத்தேன். எனக்கே பாட்டும் பரதமும் போர் என்றால், அவர்கள் பாவம் எனக்காக வந்து பொறுத்துக் கொள்ள வேண்டுமே என்றுதான் அளவான அழைப்பு.


ஆனால் சலங்கை அணி விழா சிறப்பாகவே அமைந்தது. எனக்கு அது ஒரு வித்யாசமான் சுவாரஸ்யமான அனுபவம். ஆசிரியர் ஒவ்வொரு தாளக்கட்டு மற்றும் முத்திரை பற்றி சொல்லி அபிநயம் பிடிக்க வைத்ததில் சுவாரசியமாகச் சென்றது நிகழ்ச்சி. முடிவில் “தீராத விளையாட்டுப் பிள்ளை...” என்று கண்ணனுடன் ஆடியபொழுது எல்லோரும் சொக்கித்தான் போனோம். பரதம் கூட சுவாரஸ்யமாக இருக்கும் என்று பலரிடமும் சொல்லத் தொடங்கினேன்.

அடுத்து பாட்டு... கச்சேரி என்றால் என்ன என்று அவளுக்கு அறிமுகப்படுத்த “சென்னையில் திருவையாறு” செல்ல டிக்கட் எடுத்தார் அவள் அப்பா. எனவே... கச்சேரி களைகட்டியது. “மிருதங்கம்”, “கடம்”, “தம்புரா”, “கஞ்சிரா”, “வயலின்” என்று பக்கவாத்தியங்களை அவளுக்கு அறிமுகப்படுத்தினேன் (எல்லாம் கேள்வி ஞானம் தான்). “தம்புரா” சத்தமே கேட்கலையே அது எதுக்கு என்றாள். (கேட்ட ஆளைப் பாருங்க...). என்றாலும் மனம் தளராது, அவளுக்கு “தம்புராவின்” ஒலியை உணர்த்தி (ஒருமாதிரி அதுதான் தம்புரா சத்தம் என்று அறிந்திருந்தேன்), அது இலயம் சேர்க்கும் என்றேன் (இலயம்??... no explanations please....). ஏன் நிறைய இராமர் பாட்டு என்றாள். பாடப்பட்ட சிவன் பாட்டு ஒன்றை நினைவுறுத்தினேன். என்றாலும் நிறைய இராமர் பாட்டு என்றாள்.

"இவர் பட்டம்மாள் என்ற இசை மேதையின் பேத்தி” என்று அவளுக்கு சில அறிமுகங்கள் கொடுக்க முயன்றேன். அவங்க அம்மா யாரு... அவங்க இவங்க பாடறதைப் பார்க்க வரலையா என்ற கேள்விகளுக்கு நான் விழித்திருந்தேன். சில பாடல்களுக்கு அவள் தாளம் போட்டாள் (இராகம் தெரியவில்லை, தாளம் தெரிந்திருந்தது; எனக்கு ரெண்டும் ஒண்ணு தான்). எல்லோரும் தலையையோ கையையோ ஆட்ட நான் கொஞ்சம் கூச்சத்துடன் விழித்துகொண்டிருந்தேன். ஆனால், “நித்யஸ்ரீ” அவர்களின் பாடல் கேட்க மிக இனிமையாக இருந்தது. இராகம், தாளம், சுருதி, இலயம் எதுவும் தெரியாவிட்டாலும் இசைவெள்ளம் மனதை மகிழ்வித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் மெய்மறந்து பாடுவதைக் கண்ட பொழுது “Bliss" என்று தோன்றியது என்றார் கணவர். பக்கவாத்தியங்களின் இசைமட்டும் இருந்த நொடிகளும் இசையின் இனிமையைப் பறைசாற்றின.

மனதில் இருக்கும் சில "prenotions" தள்ளி வைத்துவிட்டு பார்த்தால்தான் சில விஷயங்களின் அழகை சிறிதேனும் இரசிக்க இயலுகிறது.

ஓசை விரிவடைந்தால் இசை
அசைவு விரிவடைந்தால் நடனம்
புன்னகை விரிவடைந்தால் சிரிப்பு
மனம் விரிவடைந்தால் தியானம்
வாழ்க்கை விரிவடைந்தால் விழா
பக்தன் விரிவடைந்தால் இறைவன்
உணர்ச்சிகள் விரிவடைந்தால் மெய்மறந்த இன்பம்
வெறுமை விரிவடைந்தால் பேரின்பம்

- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்


Wednesday, December 8, 2010

காயங்கள்

அன்பைக் கொட்டி
உறவை வளர்த்தேன்
வெட்டிச் சென்றன
சொற்கள்

விலகி நின்று
புன்னகை செய்தேன்
காயம் வடுவாக...

ஆசையை நூற்று
கனவுகள் நெய்தேன்
கிழித்துச் சென்றது...
காலம்

நம்பிக்கை நூற்று
நனவை நெய்தேன்
கனவே நனவாக...

Saturday, December 4, 2010

கேள்விகள்

பிறப்பு
இறப்பு
இரு வரிகளிடை
விரிந்து கிடக்கிறதா?
சுருங்கிக் கிடக்கிறதா?
வாழ்க்கை...

--------------

கைநிறைய
வாழ்க்கை கொடுத்து
விரலிடுக்கில்
கசிய விட்டான்...
கையில் இருப்பதை
ருசிக்கவா?
கசிவதைக் கண்டு
கலங்கவா?

------------

Thursday, December 2, 2010

பயணக் குறிப்புகள்

வாழ்க்கையே ஒரு நெடும் பயணம் தான். அது முடிவதற்குள் ஒவ்வொருவருக்கும் பல விதமான அனுபவங்கள். வாழ்வின் அனுபவங்கள் என்று பார்த்தால், நான் பார்த்த, கேட்ட, படித்த என்ற அனுபவங்கள் மண்ணின் ஒரு துகள் அளவு கூட கிடையாது. என்றாலும், மனதை ஒரு நொடியேனும் தொட்டுச் சென்ற நொடிகளைப் பதிவு செய்யும் ஆசையுடன் இந்த குறிப்புகள்.

எங்கே தொடங்குவது என்று யோசித்தபொழுது, வாழ்வின் தொடக்கமான பிறப்பே , யாரிடம் தொடங்கியது என்று அறியாதவர்களின் தேடல் நினைவுக்கு வந்தது. இந்த அனுபவங்கள் இல்லையென்றால் “கன்னத்தில் முத்தமிட்டால்...” அமுதாவின் தேடலைப் புரிந்திருக்க இயலாது.

அன்று விடுதியில் அந்த பெண்ணைப் பார்த்தவுடன் எங்கள் புருவம் உயர்ந்தது. தென்னாட்டுப் பெண்ணாக உருவம் இருக்க, பேசியது என்னவோ ஆங்கிலம்... அதுவும் accent-உடன். அலட்டலோ என்றெண்ணியபடி பெயர் கேட்டோம், “எம்மா” என்றாள். “ஹேமா” தான் சரியாக விழவில்லையோ என்றெண்ணினோம். உண்மையில் அவள் பெயர் எம்மா தான். பால்குடி வயதிலேயே வறுமையின் பிடியினால் வெளிநாட்டிற்கு தத்தாகச் சென்றிருந்தாள். வயது வந்தவுடன் தன் தாயைத் தேடி ஒரு மாத விடுப்பில் வந்திருந்தாள். மதுரை அருகே ஏதோவொரு கிராமத்தில் வீட்டு வேலை செய்பவர் என்ற தகவல் மட்டுமே அவளிடம் இருந்தது. அவள் அம்மா கிடைத்தாரா எனத் தெரியவில்லை, ஆனால் அவளது தேடல் ஒரு கேள்வியாக மனதில் தங்கி விட்டது.

நாங்கள் குடியிருந்த வீட்டில் வளைய வருவாள் பதின் வயதில் ஒரு பெண். காலில் கொலுசொலிக்க, கையில் வளை குலுங்க முகம் முழுதும் சிரிப்புடன் அவள் வந்தால் அந்த பகுதியே கலகல என்று இருக்கும். அவள் தாய்க்கு அவளைக் கண்டாலே முகம் பொலிவுறும். சில நாட்கள் காணவில்லை. என்ன என்று விசாரித்ததில், “அவள் தத்து பிள்ளை” என்ற உண்மையை யாரோ அவளிடம் கூற அவள் தன் கூட்டிற்குள் சுருண்டு கொண்டாள். என்ன என்று சொல்ல? பெண் வேண்டுமென ஆசையாக தத்தெடுத்த பெற்றோருக்கும் வேதனை. சில நாட்களில் நாங்கள் அங்கிருந்து குடி பெயர்ந்ததால் அந்த பெண் மீண்டும் கலகல என்று ஆனாளா என்று தெரியவில்லை. ஆனால் தன்னைப் பெற்றோர் இவரில்லை என்றால் ஏற்படும் அதிர்ச்சி அலைகள் மனதைத் தொட்டுச்சென்றது.

ஆதரிக்க யாருமின்றி தடுமாறும் பிள்ளைகளின் வேதனை ஒரு விதம் என்றால், தத்தெடுக்கப்பட்டு பெற்ற பிள்ளையாக வளர்த்தாலும், உண்மை தெரியும் வேளையில் பிள்ளைகளின் வேதனை ஒரு விதம்.

வாழ்க்கையில் தான் எத்தனை விசித்திரங்கள்?

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்

Tuesday, November 30, 2010

நட்பூ

நட்புக்கு காலத்தைக் கடத்தும் சக்தி உண்டு. பால்ய சினேகத்தைக் காணும் பொழுது பால்யத்திற்கும், கல்லூரி சினேகிதத்தைக் காணும் பொழுது கல்லூரிக்கும் காலம் கடந்து இடம் மாறி செல்கிறோம். அன்று சாலையைக் கடந்த வேளையில் பெயர் சொல்லி அழைத்த நட்பு ஓடி விளையாடிய பருவத்திற்கு அழைத்துச் சென்றது. “எப்படி கண்டுபிடிச்ச” என்ற கேள்விக்கு “எப்படி மறக்க முடியும்” என்ற பதில் பன்னீர் தூவலாக மனதைக் குளிர்வித்தது. நினைவுகள் பகிர்ந்து மனம் மகிழ்ந்தோம்.

மிகவும் நான் மிஸ் செய்த நட்பொன்று உண்டு. சென்ற வருடம் “அழியாத கோலமாக” எழுதிய கடிதம் ஒன்றைப் பகிர்ந்து மகிழும் வாய்ப்பு இந்த வருடம் அமைந்தது. என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள பதிவுலகம் அளித்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தேன். அப்படி இப்படி தேடி LinkedIn & Facebook துணையுடன் 13 வருடங்கள் கழித்து தொடர்பு கொண்டோம். சென்ற வாரம் அவளை சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது.


விடிய விடிய கதை தான். இரு பெண் குழந்தைகள் முதற்கொண்டு சில ஒற்றுமைகள் கண்டு மகிழ்ந்தோம். எனது சின்ன சின்ன பிரச்னைகள் அவள் கடந்து வந்த பிரச்னைகள் முன்னும் அவள் சந்தித்த மனிதர்களின் பிரச்னைகள் குறித்தும் பேசிய பொழுதும் காணாமல் போயின. நான் பகிர்ந்த கடிதம் மூலம் வலைப்பக்கம் பற்றி அறிந்து, அவளும் அவள் தாய்மொழியில் வலைபாய்கிறாள் என்பதும், அது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்பதும் மகிழ்ச்சி தந்தது. எந்த ஒரு விஷயமும் அழகாக சொல்வாள்; அவள் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்... என்ன ... ஒருவர் வலைப்பக்கத்தை மற்றவர் படிக்க இயலாது... இருவருக்கும் மற்றவர் தாய்மொழி தெரியாது.

கிளம்பும் பொழுது அவளது நூலக அறைக்கு அழைத்துச் சென்றாள். 07-03-1996 என்று எழுதப்பட்டு அன்புடன் நான் பரிசளித்த ஷேக்ஸ்பியரின் கவிதைத் தொகுப்பு என் கையெழுத்துடன் இருந்தது. 1999 டிசம்பரில் அவள் தோட்டத்தில் பூத்த மலரொன்று பதப்படுத்தப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் 2000 ஆண்டு ஜனவரியில் அவள் தோட்டத்தில் பூத்த மலரொன்று பதப்படுத்தப்பட்டிருந்தது. நூற்றாண்டுகளின் இணைப்பாக அப்புத்தகம் என்றாள். மனம் நெகிழ்ந்தது. அவள் தோட்டத்து மலரொன்று இன்று என் புத்தகத்துள்ளும்.... ”நட்பூ”வின் வாசத்துடன்...

இன்னும் மேலே!!!

உங்கள் குழந்தை என்ன ஆகவேண்டும் என்ற கனவேதும் இன்றி, அவர்களைக் கனவு காண விட்டால் அந்த கனவைப்பற்றி கேட்கும் சுவாரஸ்யமே தனி. ”டீச்சர் , சயண்டிஸ்ட் ” எல்லாம் ஆக வேண்டாம் என்று சென்ற வருடம் சொன்ன பெண்ணிடம் இந்த வருடம் கேட்டேன்.

“என்ன ஆகலாம்னு முடிவு செஞ்சாச்சா நந்து?”

“இன்னும் இல்லைமா”

“டாக்டர்.. இஞ்சினியர் ... இதெல்லாம் வேண்டாமா?” (மெட்ரிக்கா சிபிஎஸ்ஈயா என்று எனக்கு இன்னும் கன்ப்யூஷன்... இந்த மாதிரி கனவு என்றால் மெட்ரிக்கில் தூக்கிப்போட்டு விடலாம் இல்லையா?)

“அய்யோ டாக்டர் இல்லைமா... எனக்கு இரத்தம்னாலே பயம்... அதுவுமில்லாம... someone's life is at risk"

"இஞ்சினியர்?"

"கவுன்சிலிங்க்கு நம்ம வீட்டுக்கு வந்த அக்கா சொன்னாங்கம்மா , நாம் எப்பவும் நம்ம அம்மா அப்பாவுக்கு மேலே போகணும். நான் எங்க அம்மா அப்பாவுக்கு மேலே வரணும்னு இஞ்சினியர் ஆக்றேன். நீ இன்னும் மேலே போகணும்னு...”

”அதனால?”

“நான் இன்னும் மேலே போகணும்னா பைலட் ஆகலாம்னு யோசிச்சேன்மா.... but. if I am a doctor someone's life is at risk. If I am a pilot my life is at risk. அதனால் இப்போதைக்கு ரைட்டர் இல்லைனா ஆர்கியாலஜிஸ்ட் ஆகலாம்னு இருக்கேன்...”

பார்ப்போம்... இன்னும் காலம் விரிந்து கிடக்கிறது அவளுக்கு, அவளுக்கானதைத் தேர்ந்தெடுக்க...

Sunday, November 28, 2010

நீயா நானா ...

முல்லையின் அழைப்பின் பேரில் இந்த பதிவு. வெகு நாட்களாகிவிட்டது இந்த அழைப்பு வந்து... இது சில அனுபவங்களின் பகிர்வு என்று கொள்ளலாம்.

முல்லை கூறியது போல் “வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.” இது மிக உண்மை

இனி அவரைப் பதிவிட தூண்டிய கேள்வி: ”இன்ட்ர்வுயூவிலே ஒரே மாதிரி - ஈக்வல் டாலன்டோட ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருந்தா..”. எனக்கு முன் இந்த கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன். பாலைக் கொண்டு அது முடிவு செய்யப்பட மாட்டாது என்பது திண்ணம். ஆனால் இந்த கேள்வியின் தொடர்ச்சியாக ஓடிய சில சிந்தனைகள்... பெரும்பாலும், ஒரு ஆண் திறமைசாலி என்று சக ஆண் ஊழியர்களிடம் பெயர் பெற எடுக்கும் முயற்சிகளுக்கு ஒருபடி மேல் நின்றால் தான் பெண் திறமைசாலியாக அங்கீகரிக்கப்படுகிறாள் என்று பல வேளைகளில் நான் எண்ணிக் கொண்டதுண்டு; கேட்டதும் உண்டு. எந்த ஒரு இடத்திலுமே அலுவலகமோ/வீடோ பெண்ணுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு திரை இருந்து கொண்டே தான் இருக்கிறது... பல நேரங்களில் அவள் கிழித்துக் கொண்டு தன்னை வெளிப்படுத்துகிறாள்.

சமீபத்தில் ஆண் ஒருவர், குழந்தை பிறந்து கவனித்துக் கொள்வதால் தன் மனைவியின் கேரியர் வீணாகலாம் என்று வருந்தினார். குழந்தையைக் கவனித்துக்கொள்வதென்றால் யாரேனும் விட்டுக்கொடுக்க வேண்டும்... பெரும்பாலும் அது பெண்ணாக இருக்கிறாள். “பரவாயில்லை... மனைவிக்காக யோசிக்கிறார் இல்லை..” என்றாள் ஒரு பெண். ஆம் அவர் யோசித்தால் போதும் ... பெண் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். ஒருவர் ஒன்றும் செய்யாது பச்சாபப்படுவதையே பெருமையாக எண்ணும் அளவுக்கு தான் ஆண்கள் பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றனர்.

“மெடர்னிட்டி லீவ்” குறித்து நான் கேட்ட கமெண்ட் “வேலை செய்யாமல் ஜாலியா சம்பளம் வாங்குவீங்க...”. சற்றே மனம் வருந்தியது. என்ன சொல்ல? ஆணுக்கு இணையா எல்லா வேலையும் செய்வியா... எங்கே என்னை மாதிரி சட்டைபோடாமல் நட பார்க்கலாம் என்ற அபத்தமான கேள்வி போல் இருக்கின்றது. “எங்கே என்னை போல் பத்து மாசம் சுமந்து பெத்து போடு பார்க்கலாம்” என்று ஏன் யாரும் கேட்பதில்லை. குழந்தை பெண்ணால் தான் பெற முடியும் (”ஆண் பெற்றவன் ஆண் மகனே” என்று பாட்டு மட்டும் தான் எழுதிக் கொள்ள முடியும்)... சிலகாலம் பெண்ணால் மட்டுமே குழந்தையைப் பேண முடியும். மனிதர்கள்... பகுத்தறிவுடையவர்கள் என்று சொல்லிக் கொள்வதால்... “நீ என் சக மனுஷி... பிள்ளை பேற்றுக்காக நீ எதையும் இழக்க வேண்டாம் என்ற மனிதத்துவ குணம் தான் பிரசவகால விடுமுறை. அதை பொருள்மயமாகக் காணத் தொடங்கினால்... என்ன சொல்வது ?


வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு தான் எத்தனை பிரச்னைகள் இங்கு. என் தோழி ஒருவர் ஒருவர் கூறினார், “நம் வயதில் பல பெண்கள் வீட்டில் இருக்க முடிவு செய்கின்றனர்” என்று. சற்றே யோசித்தால் நாங்கள் கூட வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதிகள் தேவைப்படும்பொழுது கிடைப்பதால்தான் வேலையில் நீடிக்க முடிகிறது என்று தோன்றியது. சமீபத்தில் தோழி ஒருவர் குழந்தைகளைப் பேண வேலையை விட்ட பொழுது “நல்ல முடிவு” என்று ஏகப்பட்ட பாராடுதல்கள் ஆண்களிடம் இருந்து. பெரும்பாலானோர் இப்படி தான் உள்ளனர். மனைவி வீட்டில் இருந்து எல்லாம் கவனிக்க வேண்டும்... வேலை பார்க்கும் பெண்ணிடம் “உங்களுக்கென்னங்க இரண்டு சம்பளம்” என்று சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள். வீட்டில் இருப்பதோ வேலையில் இருப்பதோ விஷயம் அல்ல... சக மனுஷி என்ற எண்ணம் இருந்தால் போதும்.


இப்படி பேசினால், ஆண்கள், இப்ப என்ன நாங்க வீட்ல உட்கார்ந்துக்கணுமா என்று கேட்பார்கள். வீட்டில் இருப்பது யார் என்பது விஷயம் அல்ல, ஆண் பெண் பேதம் தேவையில்லை. வாழ்க்கை “நீயா நானா” என்றால் முட்டிக்கொண்டு தான் நிற்கும்... “நீயும் நானும்” என்றால் தான் இனிமையாக நகரும். ஒரு pressurised ப்ராஜக்ட் , இரவு பகல் வேலை செய்ய வேண்டும் என்னும் ஒரு நிலையில் பல பெண்கள் இல்லாமல் போவது “இயலாது” என்பதால் அல்ல... வீட்டில் அந்த அளவு சப்போர்ட் இருக்காது.... பெரும்பாலான வீடுகளில் ஆண் ஒரு வாரம் வேலையே கதி என்று கிடந்து வீட்டில் எதுவும் கவனிக்காவிட்டாலும் வாழ்க்கை ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் ... ஆனால் பெண் அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டால் நிலைமை தலைகீழ்...இருவரும் புரிதலுடன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால் “win--win ” situation... ஆனால் ஏனோ பெரும்பாலோருக்கு இது அமைவதில்லை.

நான் பார்த்தவரையில் பெரும்பாலும் பெண் பொறுத்துக் கொண்டு விட்டுக்கொடுத்து செல்வதால் தான் குடும்பம் என்ற அமைப்பு இன்னும் இருக்கின்றது. ஆண்கள் பொறுப்புகளைப் பகிராது சுமையாக்கினால், என்றும் இப்படியே செல்லாது... எனவே இணைந்து பகிர்ந்து புது உலகம் காணும் உள்ளம் ஆண் பெண் இருவருமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். திறமை பொறுத்து பார்த்தால் ஆண்/பெண் இருவருமே சரிசமம் தான். எனவே பெண்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் அவர்கள் திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள சில வசதிகள் செய்வதும் நலம். தற்காலங்களில் ஒரு குடும்பத்தின் “ப்ரட் வின்னர்ஸ்” ஆண்களாக மட்டும் இருப்பதில்லை... பெண்களும்தான்.

Monday, November 15, 2010

...

முகமூடி
========

யூனிபார்ம் அல்லாத
வேறு உடையில்
காணும் பொழுது
குழம்பித் தான் போகிறேன்

முகமூடி களைந்து
முகம் காட்டும்
பழகிய மனிதர்களைக்
காண்பது போல்...

விபத்து
=======

கனவுகளின் மிச்சம்
கடமைகளின் சொச்சம்
தீராத ஏக்கம்
சொல்லாத விஷயம்
தீண்டாத இன்பம்
துளைக்காத துன்பம்
இன்னும் பலவற்றை
நசுக்கிச் சென்றிடும்
வாகனம் ஒன்று...

பிணைப்பும் இழப்பும்
====================

பிணைப்பின் இன்பம்
அறியவில்லை
பிணையும் வரை...

பிணைந்த பின்
இழப்பின் பயம்
சுழலத் துவங்கும்...

இழப்பின் வலி
ஊடுருவும் வரை
அறியவில்லை

இழந்த பின்...
இழப்பின் பயம்
காணவில்லை

Friday, October 15, 2010

ஏதோ ஒன்றுக்காக...

சிக்னலில் தினம்
கடந்து செல்கிறார்கள்
அவனோ... அவளோ...

ஒளிரும் பந்து
மென் பொம்மை
அசைந்தாடும் பூ

என்று...

மாறிக் கொண்டே
இருக்கும்
விற்பனைப் பொருட்கள்

மாறவே மாறாத
வயிற்றுப் பசிக்காக...

Friday, October 8, 2010

எங்க வீட்டு கொலுவிலே....




“அம்மா நம்ம வீட்ல கொலு வைப்போமா?” என்ற கேள்வி சற்றே யோசிக்க வைத்தது. சிறு வயதில் இந்த கேள்வி நாங்கள் கேட்ட பொழுது “அதெல்லாம் நமக்கு வழக்கமில்லை” என்ற பதில் கிடைக்கும். “அம்மா பாட்டு கத்துக்கவா; டான்ஸ் க்ளாஸ் போறேனே”.... எல்லாவற்றுக்கும் இப்படி தான் பதில் கிடைக்கும். யாருக்கு வழக்கம் என்று சொல்லிக்கொள்ள அருகிலேயே இரண்டு மாமிகள் வீடு உண்டு. போய் தெரிந்த இரண்டு பாடல்கள் பாடி சுண்டலோ பொரியோ வாங்கி வருவோம்.

“ஹிந்து, க்றிஸ்டியண்ஸ் முஸ்லீம்-னா என்னம்மா? அவங்க என்ன பேசுவாங்க... ஹிந்தியா, தமிழா, இங்கிலீஷா?”. இந்த கேள்விகளுக்கே மதத்தைப் பற்றி கூற ஆரம்பித்தாகி விட்டது, இதில் எதற்கு பண்டிகைகளுக்கு ஜாதியை இழுத்துக் கொண்டு என்று, “கொலு வச்சா தினம் சுண்டல் செஞ்சு பூஜை பண்ணனும், அம்மாவுக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி. முடியாதுடா...” என்று தாஜா செய்ய ஆரம்பித்தேன். ”இல்லை, எனக்கு கொலு வேணும்” என்று அடம் தொடங்கியது.

எல்லாம் இந்த பெரிய அமாவாசைக்கு விடுமுறை கொடுத்த பள்ளியால்... அன்று கொலு வைக்கப்படும் நாள் என்றும் மிஸ் சொல்லி இருந்தார்களாம். எனக்கே அன்றுதான் தெரியும் மகாளய அமாவாசைக்கு தான் நவராத்திரி துவங்கும் என்று. சிறுவயதில் எங்கள் அடம் பார்த்து அம்மா சொன்ன ஐடியா தான் குழந்தைகள் வைக்கும் கொலு. வீட்டின் அருகில் காலி இடத்தை சுத்தம் செய்து, மரக்கிளைகளால் பந்தல் செய்து, செங்கல் படிகள் அமைத்து, எல்லோர் வீட்டில் இருந்தும் கொலு பொம்மைகள் கொண்டு வந்து... தினம் ஒருவர் வீட்டில் இருந்து நைவேத்தியம் வைத்து... விளக்கேற்றி என்று ஜாலியாக கொலு வைத்துள்ளோம்.

எனவே அதே முறையைப் பின்பற்ற முடிவு செய்தேன். “சரி, இடம் தரேன், நீங்களே கொலு வைங்க... தினம் சாயங்காலம் சாமி கும்பிடணும்...சாமிக்கு பொரி, பழம்னு ஏதாவது வைக்கணும். சரியா?, என்றேன். சந்தோஷமாக கொலு தொடங்கியது. இரண்டு அட்டைப்பெட்டிகள் கொலு படிக்கு எடுத்து கொடுத்தேன். புத்தகங்கள் மூன்றாம் படியானது. நான் அலுவலகம் சென்று விட்டேன். மாலையில் அழகான கொலு வீட்டில் இருக்க, “எங்க வீட்டு கொலுவிலே...” என்று பாடல் ஆடல் என்று அமர்க்களப்படுத்தினர் குழந்தைகள்.


Monday, September 27, 2010

பெரியவர்கள்

குழந்தைகளின் கனவை
விற்று
போர் புரிந்தனர்

கனவு தொலைத்தவர்களை
மிரட்டி
சிரிக்க வைத்தனர்

சிரிப்பைக் களவாடி
வேஷம்
போடத் துவங்கினர்

தொலைத்த சிரிப்பையும்
கலைத்த கனவையும்
மீட்டுத் தருவதாக...

Friday, September 10, 2010

கதைகள்

காரணக் கதைகள்
சிரிப்பாணிக் கதைகள்
நீதிக் கதைகள்
புதிர்க் கதைகள்
பட்சிக் கதைகள்
விலங்கு கதைகள்
மண்ணின் கதைகள்
மக்கள் கதைகள்
உறவுக் கதைகள்
பிரிவுக் கதைகள்
கோயில் கதைகள்
கோவின் கதைகள்
நாடோடிக் கதைகள்
நாட்டின் கதைகள்
பூக்களின் கதைகள்
பூவையர் கதைகள்

பேனாவின் நுனியில்
அடங்கிடும்
எழுதப் பட்ட கதைகள்

நாவின் நுனியில்
அடங்கிடும்
சொல்லப்பட்ட கதைகள்

காற்றைப் போல்
உலகை நிறைத்து
உலவிக் கொண்டிருக்கும்
சொல்லப்படாத கதைகள்...

Wednesday, August 25, 2010

மானாட மயிலாட....

சுதந்திர தினம், நந்தினியின் பிறந்த நாள், பள்ளி ஆண்டுவிழா என பரபரவென்று கடந்துவிட்டது ஆகஸ்ட் 15. "நட்பு வளையங்கள்" என்ற தலைப்புடன் உலகின் நடனங்கள் இடம் பெற்றிருந்தன. சிறார்களின் நடனம் மிக அழகாக இருந்தது.

Dr. YGP அவர்களின் தலைமையில், கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர் சிறப்பு விருந்தினராக அமைந்த விழாவில் Dr. YGP அவர்களின் பேச்சு தனி முத்திரை பதித்தது. அழகாக கொஞ்சமும் டீசன்சி குறையாது ஆடிய சிறார்களைப் புகழ்ந்த அவர், மானாட மயிலாட நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆடுவதைக் காண முடிவதில்லை என்றும், இது போல் பள்ளிவிழாக்களைத் தொகுத்து வழங்க வேண்டும் என்றும் கூறினார். இதனால் பணம் வராது, ஸ்பான்ஸர் கிடைக்காது... ஆனால் மாதம் ஒரு முறை இது போன்ற விழாக்களைத் தொகுத்து அளித்தால் நம் கலாச்சாரம் போற்றப்படும் என்றார். இது போன்ற பேச்சைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது போன்று தவறுகளைச் சுட்டிக்காட்டும் நல்ல மனிதர்கள் தான் நல்ல வழிகாட்டுதல்கள்.


அடுத்து விழா பற்றி.... சப்பான், சீனா, பெர்சியா, இந்தியா, ஸ்பானிஷ், ஆப்பிரிக்கா, சிவப்பிந்தியர், பாலே என்று வண்ண உடைகளில் வண்ணமிகு உலகைச் சுற்றிக்காட்டினர் சிறார்கள் ஆடல்களில்... அவர்களது உழைப்பும் ஆசிரியர்களின் உழைப்பும் தெளிவாகத் தெரிந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் சின்னஞ்சிறு மலர்கள் சப்பான் நடனம் ஆடினர். நந்தினியிடம் , "சப்பான் பாட்டு தான் கொஞ்சம் ஸ்லோ. குட்டீஸ் synch பண்ணி ஆடலை" என்றேன். "ஏம்மா , அதுங்க தலை ஆட்டறதைப் பார்த்தியா எவ்ளோ அழகு. அதை விட்டுட்டு synch என்னத்துக்கு" என்று இரசித்ததை நான் இரசித்தேன். இன்னும் அவள் எனக்கு குழந்தை தான்... ஆனால் குழந்தைகளை அவர்கள் செயல்களை இரசிக்கும் அவளது செய்கை மனதை நெகிழ்த்தியது (பல்பு வாங்கினதை இப்படி ஃபீலிங் கொடுத்து மறைக்கலாமானு யாரோ சொல்றது என் காதில விழலை)

நந்தினியும் சீன நடனத்தில் இருந்தாள். அவள் நடனத்தை விட, அவள் கூந்தலை இரசித்துக் கொண்டிருந்தோம். சும்மாவே அவள் கூந்தல் நேராக அழகு என பலரும் கூறுவதுண்டு. நடனத்தில் நெளி நெளியாக அழகாக இருந்தது. "நந்துகுட்டி உன் ஹேர் அழகுடா... என்ன பண்ணினார் மேக்கப் மேன்?". "ரொம்ப அழகா இருந்தது இல்ல அம்மா.... விக் வச்சார்" (அடுத்த பல்பு). எவ்ளோ பல்பு நீ கொடுத்தாலும் உன் முன்னால் நான் ட்யூப்லைட் தான் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவதில்லை (இதுக்கு பேரு தான் சப்பைக்கட்டு)

சரி விடுங்க... எல்லா கொண்டாட்டங்களும் நல்லபடியா முடிஞ்சது.

Friday, July 30, 2010

இருக்கலாம்...

ஒரு நொடியில்...

நிகழ்ந்து இருக்கலாம்
நிகழாது இருக்கலாம்
விபத்து

முடிந்து இருக்கலாம்
முடியாது இருக்கலாம்
வாழ்க்கை

இனிப்பாக்கலாம்
இருட்டாக்கலாம்
இருக்கும் நொடிகளை

Tuesday, July 27, 2010

கொலை செய்யாதீங்க ப்ளீஸ்....

சிறகு விரிக்கப்போகும் பிள்ளைகளைக் காணும் ஆயிரம் ஆசைகளுடன் இறைவனுக்கு நன்றி கூறி வாகனத்தில் வரும் ஒரு குடும்பம்.

மதம் பிடித்த யானையாக கட்டுப்பாடின்றி காரில் வரும் ஒரு கும்பல்.

மத யானையின் வழியில் இருந்து விலகி வந்தாலும் தடைகளைத் தகர்த்து நாசம் செய்திடும் யானை..

யாருக்கு என்ன என்று யோசிக்கிறீர்களா? எங்கோ ஒரு குடும்பம் அழிகிறது (அ) பிள்ளையோ/தாயோ/தந்தையோ அன்புக் குடும்பத்தை இழந்து தனிமரம் ஆகின்றனர் (அ) யாரையாவது இழந்து தவிக்கும் குடும்பம்

எங்கேனும் இது நடந்து கொண்டே தான் இருக்கிறது... குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களால்.
"குடி குடியைக் கெடுக்கும்"... குடித்து விட்டு வண்டி ஓட்டினால் பிறர் குடியைக் கெடுக்கும். தற்கொலையே குற்றம்... கொலை செய்ய ஏன் துணிகிறீர்கள்?

கொலை செய்யாதீங்க ப்ளீஸ்....குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதும் கொலைக்கான முயற்சிதான்

நீர்க்குமிழிக் கனவுகள்

நீர்க்குமிழி ஊதுகிறாள்
சின்னப் பெண்

வண்ணமயமாக பறக்கின்றன
என் கனவுகள் போல

காலம் போல காற்று
பட்டென உடைக்கிறது

கலகலவென சிரித்து
மீண்டும் ஊதுகிறாள்

சிறுமியாக மாறிடும்
கனவொன்று மிதந்து செல்கிறது
நீர்க்குமிழியாக...

Monday, July 26, 2010

சக்குவின் ஆபீஸ் உத்யோகம்

என் பேரு சக்கு... சகுந்தலானு சொன்னா யாருக்கும் தெரியாது. தலைப்பைப் பார்த்து ஆபீஸ்ல உத்யோகம்னு நினைச்சுடாதீங்க... நான் வீட்டு வேலை பார்க்கற ஆளு. அப்புறம்னு கேக்கறீங்களா, என் ஆபீஸ் உத்யோகம் பத்தி சொல்லித்தான் ஆகணும். அதுக்கு முன்னாடி செல்வி பத்தி சொல்லணும்.

செல்வி ஒட்டு உறவெல்லாம் கிடையாது... என் சிநேகிதி. சின்ன வயசு சிநேகமும் கிடையாது. ஒரு நாலஞ்சு வருஷப் பழக்கம் ... அவ்வளவுதான். அதுக்குள்ள நகமும் சதையுமா பழகிட்டோம். அவ புதுசா எங்க பேட்டைக்கு குடி வந்தாள்... நல்ல சிரிச்ச மூஞ்சி, நைச்சியமான பேச்சுனு எனக்கு பிடிச்சு போச்சு. என்னவோ ஒரு பாசம்... நிறைய உதவி செய்வேன். அதெல்லாம் சொல்ல வரலை...அவளும் நல்லா தான் பழகுவாள்... அப்பப்ப கொஞ்சம் வியாபார புத்தியைக் காட்டுவானாலும் நான் பெரிசா எடுத்துக்க மாட்டேன்...

ம் அவ ஒண்ணும் வியாபாரி இல்லை... என்னை மாதிரி வீட்டு வேலை செய்யறவ தான்.. அப்பப்ப கையில காசு இருந்தால் அப்பளம், துணினு இங்கிட்டு வாங்கி அங்கிட்டு வித்துடுவா. அவசரத்துக்கு என்கிட்ட கைமாத்து வாங்கினால் உடனே கொடுக்காமல் புது சேலையைக் கட்டிட்டு வந்து அழகா இருக்கானு கேட்பாள். அடுத்த மாசம் திருப்பி கொடுக்கறேம்பா. அடுத்த மாசம் துணில காசைப் போட்டுட்டு "கொஞ்சம் இருக்கா, காசு புரட்டிடறேன்" அப்படீம்பா. அந்த காசை இட்லிகடை ஆயாவுக்கு நான் கடனா கொடுத்திருந்தா மாசம் ஒரு தரம் இட்லியாவது தரும். இவ என் காசை வச்சிட்டு வியாபாரம் பண்ணுவாள்... நான் கம்னு இருப்பேன்... அதென்னவோ மனசுல தோணினாலும் கண்டுக்காமல் இருப்பேன். ஆனால் காசைக் கரெக்டா திருப்பி கொடுத்துடுவா.

சரி.. இப்ப என்ன அவளுக்குங்கறீங்க... நான் யமுனாக்கா வீட்ல வேலை பார்த்துட்டு இருந்தேனா... அந்த அக்கா என்னை அவங்க வேலை பார்க்க்ற ஆபீஸ்ல சேர்த்து விட்டாங்க. எனக்கும் ஆபீஸ் உத்யோகம் கிடைச்சுது... உத்யோகம் என்ன உத்யோகம்... அதே பெருக்கறதும் தொடைக்கறதும் தான்.. ஆபீஸ் போறேன்னு சொல்லிக்கலாம். இப்ப செல்விக்கு ஆபீஸ் ஆசை வந்துடுச்சு. "யக்கா... அந்தம்மாட்ட சொல்லி எனக்கொரு வேலை போட்டு கொடுக்க சொல்லேன்" அப்படீனு ஆரம்பிச்சுது. எனக்கு சங்கடமா போச்சு. யமுனாக்காக்கு செல்வியை ஏனோ பிடிக்காது "அவ பேச்சும், பார்வையும்... ரொம்ப தளுக்கா பேசறா...எனக்கு பிடிக்காது" அப்படீனு சொல்லி வீட்டு வேலைக்கே அவளை எடுத்துக்கலை. இதை அவகிட்ட சொல்லி மனசைக் கஷ்டப்படுத்த இஷ்டமில்லாமல், நேரம் கிடைக்கிறப்ப யமுனாக்காகிட்ட சொல்லி பார்க்கலாம்னு இருந்தேன்.

ஒரு நாள் பார்த்தால் வேலைக்கு ஆள் எடுக்கறாங்களாமேனு வெளிய நின்னுட்டு இருந்தது. அன்னிக்கு யமுனாக்காவை வழில பார்த்தேன். "யக்கா... நம்ம செல்வி வந்துருக்கு. நல்ல பொண்ணு தான். உங்க ஊர்ப்பக்கம் தான் அது. பேச்சு இருந்தாலும் வீட்ல பிக்கல் பிடுங்கல் கிடையாது ஒழுங்கா வேலைக்கு வரும்னேன்". அக்கா சிரிச்சுகிட்டே போய்ட்டாங்க. அதுக்கு வேலை கிடைச்சிடுச்சு. அட!!! ஒரே இடம் வேலை; எனக்கு ஒரே சந்தோஷம்... மறு நாள் அவளைப் பார்க்கறேன்; மூஞ்ச வெடுக்குனு வெட்டிகிட்டு போறாள். எனக்கு ஒண்ணும் புரியல... சரி வேலை கிடைச்ச பவுசுனு விட்டுட்டேன்.

சிரிச்ச மூஞ்சியா தெரிஞ்ச முகம் விடியா மூஞ்சியா மாறிடிச்சு. தினம் அது கூட முகத்த தூக்கி வச்சுட்டு வேலை செய்ய வேண்டியதா போயிடிச்சு. ஒரு நாள் மனசு கேக்காம "ஏண்டி செல்வி என்ன ஆச்சு உனக்கு?" அப்படீனேன். அவ்ளோதான் "வெளங்குவியாடீ நீ.. எனக்கு வேலை கிடைக்க கூடாதுனு என்ன மாய்மாலம் பண்ணின... எனக்கு இந்த ஊரு இல்ல... பிக்கல் பிடுங்கல் கிடையாதுனு சொன்னியாமே!!! இதெல்லாம் சொன்னால் இவ அடிக்கடி ஊருக்குப் போய்டுவாள், சொகுசுக்காரி வேலைக்கு வர மாட்டானு வேலை தர மாட்டாங்கனுதான செஞ்ச...நீயெல்லாம் ஒரு பொம்பளைனு பழகினேன் பாருனு" காறி துப்பிட்டாள்.

எனக்கு யார் கூடயும் சண்டை போட பிடிக்காது. நல்லது செய்யப் போய் இப்படி பேச்சு வாங்கினதுல மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. இப்படி செஞ்ச உதவி எல்லாம் மறந்து எப்படி பழிபோடறானு மனசு தவிச்சுது... எனக்கும் காறித் துப்பத்தெரியும். போய் தொலையுதுனு விட்டுட்டேன். தினம் முகத்துல முழிக்கறது விதி... இனி ஜென்மத்துக்கும் புது சிநேகிதம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இது தான் கதையானு கேக்கறீங்களா? கடைசியா ஒண்ணு சொல்லணும். இரண்டு மாசத்தில ஆபீஸை இழுத்து மூடிட்டாங்க. ரெண்டு பேரும் திரும்ப வீட்டு வேலை தான் செய்யறோம். இப்ப நான் இருக்கேன், செல்வி இருக்கா, எங்க மனக்கசப்பு இருக்குது ஆனால் மனக்கசப்புக்கு காரணமான ஆபீஸ் உத்யோகம் தான் இல்ல.

Thursday, July 22, 2010

மருத்துவமனை பொழுதுகள்

தூய்மையின் நெடியா
வலியின் நெடியா
என்று புரியாது
நகரும் நொடிகள்....

வந்து செல்வோருடன்
வந்து செல்லும்
அலுப்பும் மாற்றமும்

வீட்டின் நிம்மதி
பணத்தின் மதிப்பு
நட்பின் ஆறுதல்
உறவின் பலம்
என்று...
வாழ்க்கை பாடத்துடன்
ஊர்ந்து செல்லும்
மருத்துவமனையில் பொழுதுகள்

Monday, July 19, 2010

நாங்க நாய் வளத்த கதை...

"உங்க ஆத்தா கிளி வளத்தா...மாடு வளத்தா... கோழி வளத்தா...முயல் வளத்தா... ஏன் பாம்பு கூட வளத்தா (அம்மாவும் பாம்புகளும் என்று தனிப்பதிவு போடுமளவு அம்மாவுக்கும் பாம்புக்குமான தொடர்பு விசேஷமானது).... நாய் தான் வளர்க்கலை.." என்ற வசனத்துடன் தான் அம்மாவின் நாய் வளர்ப்பு துவங்கியது. எங்களை வளர்த்து திருப்தி அடையாமல் குவாட்டர்ஸில் வீடு மாறி சற்றே பெரிய வீடு வந்ததும், அம்மாவின் நாய் ஆசை தீவிரமானது. கொழுக் மொழுக் என்று சுற்றித்திரிந்த தெரு நாய்க்குட்டி ஒன்றை வீட்டிற்கு அழைத்து வந்தோம்.

மணி என்று அதற்கு பெயரிட்டோம். எங்களைப் பொறுத்தவரை நாய் என்றால் "மணி (அ) சீஸர்" என்ற பெயரிலோ ... நிறத்தைப் பொறுத்து "ப்ரளனி, வைட்டி, பிளாக்கி" என்ற பெயரிலோ அழைக்கப்பட வேண்டும். எங்கள் நாய்க்கு கறுப்பு , வெள்ளை என்று இரு நிறமும் இருந்ததால் நிறப்பெயரின் குழப்பம் தவிர்க்க மணி என்று அழைக்கப்பட்டது. மிக்க நன்றி உணர்வுடைய நாய்... காலையில் ஊர் சுற்றினால் மாலை வீடு வந்து சேர்ந்து விடும். இரண்டு நாட்கள் காணவில்லை என்று தேடினால்.... விஷம் சாப்பிட்டு இறந்து கிடந்தது.

சில நாட்கள் சும்மா இருந்த அம்மாவால் வெள்ளை வெளேரென்று "கஷ்க் மொஷ்க்" என்று தாய் மடி விட்டு பிரிந்து சில நாளே ஆன அந்த நாய்க்குட்டியின் மீது கண் வைக்காமல் இருக்க இயலவில்லை. வந்து ஒரு வாரம் கூட இல்லை... வெராந்தாவில் சுற்றிக் கொண்டிருந்த குட்டியை ஒரு ரவுடி நாய்க்கூட்டம் அள்ளிச் சென்று குதறிச் சென்று விட்டது. பைரவருக்கு ஒரு பூஜை போட்டு அம்மா நாய் வளர்க்கும் ஆசைக்கு மூட்டை கட்டினார்கள்.

விடாது கருப்பு என்பது போல் ... இப்பொழுது நாய் ஆசை என் தம்பிக்கு பிடித்தது. எங்கள் குடும்ப நண்பர் கே.சி மாமா என்று இருந்தார். அவர் வீட்டில் ஏராளமான நாய்கள். நல்ல அல்சேஷன் குட்டி ஒன்றை எங்களுக்கு அன்பளிப்பாக அளித்தார். உயர்சாதி நாயென்று அதற்கு "சீஸர்" பெயர் சூட்டப்பட்டது. அப்பொழுது நான் "வைட்டி" என்று அழகான முயல் வளர்த்து வந்தேன். நண்பனின் எதிரி, எனக்கும் எதிரி என்று சீஸ்ர் எனது எதிரி ஆனான். ஆனால், முதன் முதலில் சீசரும் வைட்டியும் சந்தித்தபொழுது இருவருமே தலை தெறிக்க வந்த பாதையில் ஓடினார்கள். மழை இரவு ஒன்றில் வைட்டி குட்டி ஈன்றிருந்த வேளையில் சீசரும் வராந்தாவில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குள் பிரச்சனை இல்லை.

ஒரு மதிய வேளையில் குழாயில் இருந்து கொட்டும் நீரைப் பார்த்து சீஸர் வெறித்தனமாகக் குரைத்த பொழுது அந்த சந்தேகம் எழுந்தது. அன்றே மிருக வைத்தியர் அழைக்கப்பட்டு அதன் நோய் உறுதி செய்யப்பட்டது. வைத்தியர் ஊசி எடுத்து வரச் சென்ற இடைவெளியில் தப்பித்து சென்றாலும், வளர்த்த தன் எசமானனுக்கு கட்டுப்பட்டு வந்தது அந்த நன்றி உள்ள ஜீவன். எதிரி என்றாலும் மனம் கரைந்தது. சீஸரைப் புதைத்து கல்லொன்று நினைவாக வைத்தோம். பைரவருக்கு மீண்டும் ஒரு பூசை; நாய் ஆசை முற்றிலும் ஒழிந்தது. தெருவில் போகும் நாய்க்கு மீந்த சோறு மட்டும் போடுவோம்.

என்றாலும்... கடைசியாக நிகழ்ந்த நிகழ்வும் சொல்லத்தான் வேண்டும். நந்தினி பிறந்திருந்த நேரம்... தாய்ப்பால் அருந்திவிட்டு தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தது அந்த அழகான வெள்ளைக்குட்டி. "இந்த நாய் வளர்ப்போம்; பால் வைப்போம்" என்று சிரட்டை எடுத்தார் என் கணவர். எல்லா கதையும் சொல்லி, "தயவு செய்து நாய் வளர்ப்பு வேண்டாம். பால் வைக்க வேண்டாம்" என்று நானும் என் அம்மாவும் கெஞ்சினாலும் ," இதெல்லாம் ஒரு காரணமா" என்று அதற்கு பாலூட்டி மகிழ்ந்தார். மறுநாள் பால் கிண்ணத்துடன் நாங்கள் குட்டியைத் தேடினோம்.... நம்புங்கள் .... எங்கள் வீட்டைச் சுற்றி மூங்கில் மரங்கள் உண்டு. அவற்றிடையே கழுத்தை நுழைத்து மூச்சு திணறி உயிர் இழந்திருந்தது அந்த அப்பாவி ஜீவன். ஒரு கணம் எனக்கு அது கழுத்தை நுழைத்து தற்கொலை செய்தாற் போல் இருந்தது... மணியின் மரணம் கூட தற்கொலையோ என்று எண்ணத்தூண்டியது இந்நிகழ்வு.


இந்த கதை எல்லாம் சொல்லி நாய் வளர்க்கக்கூடாது என்றால் "அட போம்மா.... நாங்க நல்லா நாய் வளர்ப்போம் ; வாங்கி கொடு" என்கிறார்கள் குட்டீஸ். பட்... எனக்கு அவங்களை வளர்க்கவே டைம் பத்தலை... இதில் நாய் வேறயா... எனவே மீன், லவ் பேர்ட்ஸ் என்று சமாளித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு நாய் படற பாட்டைக் கேட்டிருந்தால் நீங்களும் சொல்லுங்க. ..

Thursday, July 15, 2010

அவனும் அவளும்...

அம்மாவின் வலியினிடையே
அழுகையின் ஓசையுடன் தான்
இவ்வுலகைக் கண்டார்கள்
அவனும் அவளும்...


குப்புற விழுந்து
விழுந்து எழுந்து
கொஞ்சு மழலை பேசி
தளிர் நடை பயின்று
இல்லம் மகிழ வளர்ந்தனர்
அவனும் அவளும்...


அவள்...
பொம்மைகளைத் தாலாட்டி
சொப்பில் சமைத்த பொழுது
அவன்...
பைக்கும் காரும்
ஓட்டிப் பழகினான்

அவளால் அடுக்கப்பட்ட பொருட்கள்
அவனால் கலைக்கப்பட்டது
அவள் மீண்டும்
அடுக்கினாள் அழுதுகொண்டே
அவன் மீண்டும்
கலைத்தான் சிரித்துக் கொண்டே

பாடங்களும் பரீட்சைகளும்
ஒன்றானாலும்...

பழக்க வழக்கங்களும்
கட்டுப்பாடுகளும்
அவளுக்கு அறிமுகமானது

பருவத்தின் திமிரும்
சுதந்திரக் காற்றும்
அவனுக்கு அறிமுகமானது

அவள்...
கனவுகளின் வாசத்தில்
இராஜகுமாரனைத் தேடினாள்

அவன்..
கனவுகளின் உலகில்
தேவதைகளுடன் வாழ்ந்தான்

காலம் என்னும் புதிரால்
அவளுக்கு
அவன் இராஜகுமாரன் ஆனான்
அவனுக்கு
அவள் மனைவி ஆனாள்

அவள் வீடு அம்மா வீடானது
அவன் வீடு புகுந்த வீடானது
இல்லத்தின் அரசியாக
அவள் வேலைக்கு வந்தாள்

பெயர் முதற்கொண்டு
எல்லாம் மாறி அவள் வந்தாள்
கண்ணீர் கூட கண்களுக்குள் என..

இன்றும்
அவள் கனவுகளை
அடுக்கிக் கொண்டிருக்கிறாள்
அவன் ...
கலைத்துக் கொண்டிருக்கிறான்

Wednesday, July 14, 2010

என்னத்த சொல்ல?

குட்டிப் பெண்ணுக்கு திடீரென 2012 பயம். “அம்மா காலண்டர்-ல தேதி தீர்ந்துட்டால் உலகம் அழிஞ்சுடும். நாமெல்லாம் செத்துடுவோம்” என்று ஒரே அழுகை. வேறு காலண்டர் வாங்கலாம். எங்க பாட்டி, பாட்டிக்கு பாட்டி எல்லாம் வாழ்ந்த உலகத்தில், நீ பாட்டியாகி வாழ்வாய் என்றெல்லாம் கூறி சமாதானம் செய்ய முயன்றேன். ம்ஹூம் ... திடீரென சற்றே யோசித்து, “செத்து போனால் மேலேயா போவோம்” என்றாள். “ஆமாம்” என்றேன். “அங்கே டி.வி இருக்குமா?” என்றாள். “ம்” என்றேன். ”அப்ப சரி ” என்று சென்றுவிட்டாள். ஹ்ம்ம்.... என்னத்த சொல்ல?


“அம்மா காலிஃப்ளவர் ஃப்ரை பண்ணிக் கொடும்மா... ரொம்ப நாள் ஆச்சு” என்றாள்.
“சரியா வர மாட்டேங்குது கொஞ்ச நாள் ஆகட்டும்” என்றேன்
“முயற்சி செய் அம்மா, உனக்கு நல்லா வரும்” என்றாள் (சுட்டி டி.வி டோரா எபக்ட்)
“அட சே!!! கடைக்கு காலிஃப்ளவர் சரியா வர மாட்டேங்குது , சமைக்க சரியா வர மாட்டேங்குதுனா சொன்னேன்” . ஹ்ம்ம்.... என்னத்த சொல்ல?

Thursday, July 8, 2010

மனம்

மனம் ஒரு குளம்
கலங்கித் தெளிந்தது
கல்பட்டு குளம்
கல்லெறிந்தவன் அறியவில்லை...
பதறி நிற்பவை
மீன்களும் பறவைகளும்

மனம் ஒரு மாயை
நேர்மனதிற்கு
கோணல்கள் தெரிவதில்லை
கோணல் மனதிற்கு
நேர்மனதும் கோணல் தான்

மனம் ஒரு கண்ணாடி
தன்னை மட்டும்
கண்டு கொண்டிருந்தால்
மற்றவர் மனம்
பார்ப்பதில்லை

Wednesday, July 7, 2010

பாடம்

சற்றே குறைந்தாலும்
ஏற்றாத பேருந்து
தந்திடும் பாடம்...
சில்லறையின் மதிப்பு

இலட்சம் கோடியின்
மதிப்பு தெரிய
தேவைப்படுவதில்லை...
பாடம்

சிலவேளைகளில்...
பணத்தின் நிராகரிப்பில்
நிம்மதி உண்டு
பலருக்கும் ...
புரியாத பாடம்

Tuesday, July 6, 2010

வலிமையற்ற தோளினாய் போ போ போ

வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ

இன்று பார தத்திடை நாய்போல
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.

Wednesday, June 30, 2010

கனவு கலைப்பு

தேவதைகளின் நட்பு
உல்லாச பயணம்
ஐஸ்கிரீம் தீவு..

ஏதோ ஒன்று...
கலைந்து தான் போகிறது

பள்ளி செல்ல
மகளின்
துயில் கலைக்கும் வேளையில்...

Monday, June 28, 2010

தத்துவம் நம்பர்...

சில சமயம் தத்துவார்த்தமான சிந்தனைகளில் மன்சு போகும் தெரியுமா...அப்ப சில சமயம் "மொக்கை" தத்துவமும் "வாழ்க்கை" தத்துவமும் பிச்சுகிட்டு வரும். இப்பவே சொல்லிட்டேன் இதைப் படிச்சுட்டு திட்டாதீங்க.. இன்னிக்கு எனக்குள் உதிச்ச இந்த இரட்டை தத்துவம் தான் பதிவு.

சரி.. இன்னிக்கு சாப்பிட்டுட்டு இருந்தோமா... (யார் சமைச்சதுங்கற இரகசியம் எல்லாம் சொல்ல மாட்டேன்), பிரியாணியும் இருந்தது. அதில போட்ட பட்டை, கிராம்பு, ஏலக்காய் etc etc இங்கிலீஷ்ல என்ன தமிழ்ல என்னனு ஒரு பேச்சு... அப்ப தோணுச்சு
"எந்த மொழியில பட்டை, கிராம்பு, ஏலக்காய் பத்தி தெரிஞ்சுகிட்டாலும் சமைக்க தெரிஞ்சா தான் பிரியாணி வரும்" (ஹ்ம்.. கிட்ட தட்ட இதைத் தான் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாதுனு சொல்லி வச்சிருக்காங்க)

இப்படி ஒரு தத்துவம் தோணினதால, ஒரு சின்ன விசயத்துல காயம்பட்ட மனசு இன்னும் தத்துவார்த்தமா யோசிச்சு சொன்னது, "சில சமயம் நாமே வலிய போய் கேட்காமலே உதவி செஞ்சா, அவங்களுக்கு உதவியோட அருமை புரியறது இல்லை...உதவியும் வாங்கிட்டு...பிரதிபலனா காயப்படுத்துவாங்க" (ஹ்ம்...கிட்டதட்ட இதைத்தான் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைனு சொல்லி வச்சிருக்காங்க சுற்றம் என்ன ... நட்பு முதற்கொண்டு எல்லா வட்டத்துக்கும் பொருந்தும்)

Wednesday, June 23, 2010

ஒரு கணம்...

மகிழ்ச்சியில்
பகிர்ந்து கொண்ட
தித்திக்கும் கணங்கள்...

சோகத்தில்
தோள் சாய்த்த
ஆறுதல் கணங்கள்...

தடுமாற்றத்தில்
கை கொடுத்த
உதவி கணங்கள்...

சச்சரவுகளும்
சமாதானமும் நிறைந்த
சிறுபிள்ளை கணங்கள்...


எல்லாவற்றையும்
மறக்கச் செய்யும்
கணமும் உண்டு...

ஈகோ தலையெடுத்து
உறைந்து போன
ஒரு கணம்....

Tuesday, June 15, 2010

தூக்கம், கடன், இடம்...

தூக்கம்
பொம்மையைத் தாலாட்டி
தூங்க வைக்கிறாள்
சின்னக் குழந்தை..
குழந்தையைத் தூங்கவைக்க
வழியறியாது
விழித்திருக்கிறாள் தாய்...

கடன்
அன்புடன் தான்
கொடுக்கப்பட்டது கடன்
கடனாக மட்டுமே
திருப்பப்பட்ட பொழுது
தொலைக்கப் பட்ட அன்பு
மனதைக் காயப்படுத்தியது...


இடம்
கடந்து செல்லகிறது
வெற்று வாகனம்
அறிந்தவரெனினும்
மனதில் இடமில்லாமல்
வெறுமையால் அடைக்கப்பட்டு
இருக்க இடமின்றி செல்கிறது

Sunday, June 13, 2010

அருவிக் குளியல்

வழக்கமான ஊட்டி கொடைக்கானல் அல்லாது எங்கு செல்லலாம் என்ற பொழுது நினைவு வந்தது கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் அண்ணியின் அழைப்பு. எனவே அருவியில் நனைந்து வருவோம் என பிடித்தோம் நெல்லை எக்ஸ்ப்ரஸ். அங்கிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் இருந்தது கல்லிடைக்குறிச்சி. வெயில் இருந்தாலும் வழியெங்கும் பசுமை மனதையும் கண்ணையும் குளிர்வித்தது. கோவையின் சிறுவாணி நீர் சுவை சென்னை வந்ததோடு மறந்து போயிருந்தது. மீண்டும் இனிப்பான தாமிரபரணி நீரை ருசிக்க இனிமையாக இருந்தது.




அலுப்பு தீர குளித்து, உண்டு உறங்கி முதலில் சென்றது பாபநாசம் தலையணை. தண்ணீர் அழகாக ஓடிக் கொண்டிருந்தது. சிறிதாக வழிந்து விழும் இடத்தில் படிகள் போன்ற அமைப்புண்டு. அதில் அமர்ந்து குளிக்கலாம்... அப்படியே மேலேறி நீரில் நடக்கலாம். அருகில் இருந்து படம் எடுக்க இயலவில்லை... கூட்டம்... எனவே அகஸ்தியர் அருவி போகும் வழியில் இருந்து ஒரு வியூ.

தலை அணை


மறுநாள் ப்ளான் அகஸ்தியர் அருவி , காரையார் அணை. (வருடம் முழுதும் தண்ணீர் இருக்குமாம்) அகஸ்தியர் அருவியில் ஆசை தீர குளித்து விட்டு அருகில் ஒரு வியூ பாயிண்ட்; அதன் பின் காரையார் அணை சென்றோம். மூன்று வகை குரங்குகள் காண முடிந்தது; மிலா ஒன்று குறுக்கே ஓடியது; புள்ளிமான் கூட்டம் ஒன்று மரங்களுக்கிடையே வேடிக்கை பார்த்தது; ஆங்காங்கே மயிலகளும் தட்டுபட்டன.


அகஸ்தியர் அருவி


வியூ பாயிண்ட் வியூஸ்



பசுமை


உணவு உண்ண ஓர் இடம்



நீரோட்டம் என்றால் மீன் பிடிக்காமலா? (கிடைத்தது தலைபிரட்டை... அதாங்க tadpole)


அன்பான குடும்பம்




காரையார் அணையில் படகு மூலமாக பாண தீர்த்தம் செல்லலாம் ; ஒருவருக்கு 20 ரூ படகில் செல்ல. "சின்ன சின்ன ஆசை" பாடலி வரும் இடம் என்று சொல்லிக் கொண்டே சென்றோம். படகு நெருங்கும் பொழுதே "சோ" என்று என்று கொட்டும் அருவி மனதைக் கவர்ந்தது. நல்ல வெயில். அருவி என்றாலே அதை அடைய நாம் கொஞ்சம் மேலேறத் தான் செல்ல வேண்டும்... வெயில் என்பதால் நீரளவு கம்மி... எனவே மழைக்காலங்களை விட கூடுதலாக நடந்து சென்று அருவியின் அருகில் ஒரு துளியாக உணர்ந்தோம். "ஆண்கள்", "பெண்கள்" என்று மாற்றி மாற்றி சிறிது நேரம் குளிக்க அனுமதித்தார்கள். தண்ணீ "சில்லென்று" மேலேவிழுந்தது. முதல் நிலை நீர் என்பதால் சுவையோ சுவை. இடத்தை விட்டு அகல மனமே இல்லை.

பாண தீர்த்தம்




காரையார் படகு பயணத்தின் பொழுது தெரிந்த காட்டுத்தீ


மறுநாள் கல்லிடைக்குறிச்சி ஆற்று நீரில் ஆசை தீர நீராடினோம்.



அன்று மாலை "ஆதிவராக" சுவாமி கோவிலுக்கு ஒரு விசிட். இங்கே அக்ரகாரம் இருக்காம் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த அம்மாவிடம் "அதுக்கென்ன" என்றேன். இல்லை... வீடெல்லாம் நீளமா இருக்குமாம் என்றார். சட்டென்று மருமகள் அவள் தோழி இல்லத்துள் அழைத்துச் சென்றாள். பக்கவாட்டில் அறைகள் இல்லாமல் நெடுகச் சென்றது வீடு. ஒரு நூறு வருஷத்துக்கு முன்பு நான் இருந்திருந்தால் இங்கு கால் வைத்திருக்க முடியாது என்று எண்ணிக்கொண்டேன். அதன்பின் கோயில் விசிட்... மடியில் இலட்சுமியைத் தாங்கி வராக அவதாரத்தில் பெருமாள் காட்சி தந்தார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலும் பெரிதாக இருந்தது.


மறு நாள் மணிமுத்தாறு அருவி. டேமில் இருந்து வரும் நீர் ஆதலால் சில்லென்று இல்லை. என்றாலும் அருவி நீரில் மூச்சு முட்ட குளிப்பது சுகம் தானே!!! யாரும் இல்லை... நானும் என் பெண்ணும் அருவியில் அமர்ந்து குளித்தோம். ஆசை தீர குளித்துவிட்டு மணிமுத்தாறு அணையை ஒரு பார்வை பார்த்து விட்டு புறப்பட்டோம் குற்றாலம் நோக்கி.


மணிமுத்தாறு



குற்றாலத்தில் தண்ணீர்வரத்து இல்லை. ஐந்தருவியில் குழாயில் வருவது போலவும், மெயின் ஃபால்ஸில் தலையை நனைக்கும் அளவுக்கும் நீர் வர, அதற்கும் ஒரு க்யூ நின்றது. சொம்பு வைத்து நீர் பிடித்து குளிக்கவும் செய்தனர். அங்கிருந்து சில கி.மீ தூரத்தில் உள்ளது செங்கோட்டை. அங்கிருந்து தினமும் புனலூருக்கு ஒரு பாசஞ்சர் ட்ரெய்ன் உள்ளது. இயற்கை காட்சிகளை இரசித்து செல்ல அருமையான வாய்ப்பு. 9:45க்கு ஒன்று புறப்பட்டது. நபர் ஒருவருக்கு 4 ரூபாய் என்று தென்மலைக்கு டிக்கட் வாங்கிக்கொண்டோம்.



பச்சை பசேல் என்று இயற்கை சிரிக்கிறாள்.



வழியில் மூன்று குகைப்பாதைகள். அதில் ஒன்று கிட்டதட்ட ஒரு மைல் நீளமாம். கும்மிருட்டில் நல்ல வேளையாக கோச்சில் லைட் எரிகிறது. மற்ற இரண்டும் சின்ன குகைகள் தான்.




தென்மலையில் இறங்கினோம். சுற்றுவதற்கு நிறைய இடம் இருந்தாலும், சற்று தொலைவில அணைக்கும், மான் சரணாலயத்திற்கும் ஒரு பஸ்ஸில் டூர் இருந்தது. அதன் பின் காரில் பாலருவி சென்றோம். நல்ல வெயில். ஆனால் அருவியை நோக்கி நகர நகர சில்லென்று இருந்தது. இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் குளிக்க தனி இடம். பெண் காவலர்களும் உண்டு. உடைமாற்றும் அறைக்கு சென்ற பொழுது பெண்காவலர் அமைதியாக வந்து காவல் இருந்து விட்டு பின் மீண்டும் அருவி நோக்கி சென்றார். பாலருவி குளியலுடன் அருவிப்பயணம் முடிந்தது.


தென்மலையில் இருந்து இறங்கும் வழியில் இரயில் செல்லும் பாலம்


தாமிரபரணி நீரின் சுவையோடு அழகான நினைவுகளும் மனதோடு ஒட்டிக்கொண்டது.

Friday, May 28, 2010

சாரல்

நிறைந்து வழியும்
பேருந்தில்
பத்திரமாகப் பயணிக்கும்
மீதிச் சில்லறைகள்...

குட்டிப்பெண்
சொகுசாகப் பயணித்தாலும்
காசு வாங்காத
ஷேர் ஆட்டோ....

பெரிய குழந்தையை
மடியில் இருத்தி
இடமளிக்கும்
இரயில் பயணம்...


கண்ணாடி கடிகாரமென
நொடியில் சரிசெய்தாலும்
கட்டணம் வசூலிக்காத
சின்ன கடைகளின்
பரந்த மனம்....


அவ்வப்பொழுது
தூறும் சாரலில்
குளிர்ந்து செல்லும்
வாழ்க்கைப் பயணம்...

Tuesday, May 18, 2010

பூ வாசம் வீசும் ...

"பூ வாசம் வீசும் பெண்ணே நான் பூ வரைந்தால்..." என்பது போல்...
படத்தில்...
பூ மலரும் பொழுது வாசமும் வந்தால்... அருவி கொட்டும் பொழுது சில்லென்ற காற்று வீசினால்.... இப்படி தான் கவனம் ஈர்த்தது 4D சினிமா... சென்னை அபிராமி மாலில்....

என்ன தான் என்று பார்க்க முடிவு செய்தோம். கொஞ்சம் வித்யாசமான அனுபவம் தான்.

திரைக்கு முன்னால் மூன்று வரிசை இருக்கைகள் இருந்தன. அமர்ந்த சற்று நேரத்தில்...இனிய மணம். ஹ்ம்... இதெல்லாம் பெரிய விஷயமா என்று எண்ணும் பொழுதே 3D... சாரி 4D படம் தொடங்கியது. கேமரா ஜூம் இன்... நம் சேர் கொஞ்சம் முன்னால் நகரும்... ஜூம் அவுட்...நம் சேர் கொஞ்சம் பின்னால் நகரும். அட!! என்று 4D அனுபவத்திற்கு தயாராகும் மனம். 3D படத்துடன் உண்மை அனுபவங்களும் இணைத்தால் 4D... (அப்ப 5D????)

எறும்பொன்றுடன் காட்டில் துவங்கும் பயணம் காட்டுத்தீயைக் கடந்து முடியும். எறும்பின் கரடுமுரடான பயணத்தின் பொழுது இருக்கை கட கடவென்று ஆடியது... இலையில் ஜிவ்வென்று பறக்கும் பொழுது விஷ் என்று காற்று முகத்தில் அறைய இருக்கை ஸ்லோ மோஷனில் நகர்ந்தது. ஆறொன்றைக் கடக்கும் பொழுது சில்லென்று காற்று வருடிச் சென்றது.

சிலந்திப் பூச்சியிடம் மாட்டும் பொழுதும், சில உருளல்களின் பொழுதும் இருக்கை முதுகிலும் காலிலும் லேசாகக் குத்தியது. 3D-ல் மலர் மெல்ல அருகில் தெரிந்து தொட முயன்ற பொழுது வாசம் வீசி மறைந்தது. காட்டுத்தீயின் ஓசை காதருகில் சடசடவென்று பொரிந்தது (நல்ல வேளை வெப்ப காற்று வரவில்லை... ஒரு நிமிடம் காட்டுத்தீக்கு காரணமான அந்த சிகரெட் சுட்டு விடுமோ என்ற பயம் இருந்தது). அழகான காட்சிகளுடன் முடிவு வந்தது பத்து நிமிடத்தில்...

அடுத்த பத்து நிமிடத்திற்கு "பாழடைந்த சாலை" என்று ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போல் இருக்கைகள் ஆட 4D சினிமா தொடர்ந்தது. அவ்வப்பொழுது இருக்கைகள் குத்த... சில் காற்று வீச என்று ஒரு வழியாக முடிந்தது. பரவாயில்லை... கொஞ்சம் வித்யாசமான அனுபவம் தான்.

Friday, May 14, 2010

விடுமுறை காலம்

புத்தகம் வாசிக்க
ஏகாந்தம் உண்டு
நினைத்ததை செய்ய
நிறைய நேரமுண்டு
என்றாலும்....
வீட்டில் இருக்க இயலவில்லை


இறைந்த பொருட்களை
ஒதுக்க தேவையில்லை
உணவு வகைகள் தேடி
சமைக்க தேவையில்லை
என்றாலும்....
வீட்டில் ஓய்வெடுக்க மனதில்லை

இது...
விடுமுறை காலம்
சுட்டி டி.வி ஓடவில்லை
சுட்டிகளின் சத்தமில்லை
என் குரல் எதிரொலிக்கும்
வீட்டில் இருக்க விருப்பமில்லை

Tuesday, April 27, 2010

நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா?

கதை சொல்லிகள் பற்றிய பதிவுகள் படிக்கும் பொழுதே மனதை நிறைத்து நின்றனர் அம்மாவும் மாம்மையும். குழந்தை பருவத்தில் இருந்து வாழ்க்கை முழுக்க அலுக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் கதைகளை... கதை சொல்லிகளிடமிருந்து.

மாம்மை .... கதை என்றவுடன் இவர் நினைவு தான் மனதை நிறைக்கின்றது. மாம்மை ஒரு கத சொல்லுங்க என்றால், "நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா, வாழ்ந்த கத சொல்லவா, தாழ்ந்த கத சொல்லவா" என்று மரப்பாச்சி பொம்மை சொன்னதாக கூறி ஆரம்பிக்கும் அழகே தனி. ஏதேதோ கதைகள் கூறுவார்... "பொன்னேங்கர தாசி கதை" , செவ்வாய்க்கிழமை விரதக் கதை , இலச்சுமி கதை , அவ்வை கதை, விக்ரமாதித்யன் கதை, இராமன் கதை, பாண்டவர் கதை, என்று பல கதைகள் அடக்கம். அவர் கூறும் பாம்பு கதைகள் சுவாரசியமானவை... சுடுகாடு வரை வந்து எட்டிப்பார்க்கும் கொம்பேறி மூர்க்கன், கண்ணைக் கொத்தும் பச்சை பாம்பு, பழி வாங்கக் காத்திருந்து திருமணத்தன்று பூவிலிருந்து தீண்டிய பூநாகம் என்று சுவாரசியங்கள் நிறைந்தவை. அது போக அவ்வப்பொழுது "கொழுக்கட்டையை" "அத்திரி பாச்சா" என்று சொல்லி மனைவியின் உடம்பை "கொழுக்கட்டை" போல் வீங்க வைத்த முட்டாள் மாப்பிள்ளை, மாவுக்கு ஆசைப்பட்டு ஆட்டுரலில் தலை விட்ட மாப்பிள்ளை என்ற நாடோடிக் கதைகளும்... சில கதைகளே என்றாலும் எல்லா கதைகளும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது... இன்றும் நினைத்தால் இனிக்கும் கதைகள். குழந்தைகளுக்கு நன்கு கதை சொல்வதாக நினைத்துக்கொள்ளும் எனக்கு, யோசித்துப்பார்த்தால் அவரது திறமையில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை என்றே தோன்றுகிறது.

ஐயம்மை... இவர்களும் கதை சொல்வார்கள்... திகிலூட்டும் பேய்க்கதைகள். சுள்ளி பொறுக்க சென்ற பொழுது நடுக்காட்டில் அழைத்த முனியும், கன்னிப்பெண்ணைப் பிடித்தாட்டிய பேயும், யாருக்கு உடல் நலமில்லை என்றாலும் "எல்லாம் அவளால் தான்" என்று இறந்து போன யாரோ ஒருவரையும் பற்றியும் கூறி திகிலூட்டுவார். திகிலாக இருந்தாலும் கதை கேட்டுவிட்டு பின்னர் பயந்து கொண்டிருப்போம். இப்பொழுது சிரிப்பாக இருப்பது அப்பொழுது திகில் தான்.

அம்மா... எனக்கு அம்மா சொன்ன கதைகள் நினைவில் இல்லை. ஆனால் அம்மா என் குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்டுவது கண்டு தான் நான் கதை சொல்லக் கற்றுக் கொண்டேன். நாய், பூனை காக்கா என்று எதையாவது வைத்து அவர் கதை கூறும் சுவாரசியத்தில் குழந்தைகள் இரண்டு வாய் அதிகம் உண்ணுவர். டி.வி.யில் ஒருமுறை கதைசொல்லி ஒருவர் குழந்தைகளுக்கான கதை ஒன்றை அபிநயத்தோடு கூறிய பொழுது கதை சொல்வது என்பது ஒரு தனி கலை என்று தோன்றியது. இப்பொழுது என் இரு பெண்களும் அழகாகக் கற்பனை கலந்து கூறும் கதைகள் இனிமை... இனிமை... இனிமை...

அம்புலி மாமா, பாலமித்ரா, கோகுலம் , சிறுவர் மலர் மற்றும் படக்கதைகள் தந்த சுவாரசியங்கள் தனி ரகம். இன்றும் தேவதைக்கதைகளும், நாடோடிக் கதைகளும் மனதை மயக்குகின்றன. கற்பனைகளும் கனவுகளும் நிறைந்த அந்த மாயா உலகிற்கு இட்டுச் செல்லும் கலை கதைசொல்லிகளுக்கு மட்டுமே கைவரும். "நிலவில் இருக்கும் முயலும்", "கடலுள் உப்பை இன்னும் சிந்தும் கருவியும்" என்று இன்னும் பாட்டி சொன்ன கதைகள் கூறும் பொழுது கதை சொன்ன முன்னோரும் கதையோடு நம்முடன் வாழ்கின்றனர்.

Friday, April 23, 2010

பானகம்

சமீபத்தில் "தோசா காலிங்" சென்றிருந்தேன். மெனுவில் "பானகம்" இருந்தது. விளக்கத்தில் "பனம்பழமும் கருப்பட்டியும் கலந்த பானம்" என்று குறிப்பு இருந்தது. குடித்துப் பார்த்தேன்... கருப்பட்டியின் சுவையுடன் சற்றே வித்யாசமாக இருந்தது.


சிறு வயதில் வீட்டில் விழா என்றாலும் சரி ஊர்த்திருவிழா என்றாலும் சரி... அண்டா நிறைய பானகம் கரைக்கப்பட்டு தம்ளர் தம்ளராக காலியாகும். இந்த பானகம் வெல்லம், புளி/எலுமிச்சை சாறு மற்றும் ஏலப்பொடி சேர்த்து செய்யப்பட்டது. இன்றும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் ருசி தனி.

அதன் பிறகு நன்னாரி சர்பத் அந்த இடத்தைப் பிடித்தது. மஞ்சள் நிறத்தை விட சிவப்பு நிறம் தான் பிடிக்கும். அதைக் குடித்து வாய் சிவப்பதை இரசிக்கலாமே!!! எலுமிச்சை, சர்பத், தண்ணீர் ஐஸ்பார் என்று ஒரு பெரிய குண்டா நிறைய கரைத்தால்... குடித்துக்கொண்டே இருப்போம் கோடை வெயிலுக்கு. ”கண் மார்க்” சர்பத் என்று தேடி வாங்குவோம். நாக்கில் சிவப்பு நிறம் ஒட்டுவது போல் இன்றும் மனதோடு இருக்கும் ருசி அது. இன்றும் ஊருக்கு சென்றால் சர்பத் கடை தேடித்தான் கால்கள் ஓடும். தண்ணீருடன் ஒரு ருசி, சோடாவுடன் ஒரு ருசி என்று இன்றும் என்னுடைய all time favorite சர்பத் தான்.

அதன் பிறகு ரஸ்னா சீசன். பவுடராக ஒரு பாக்கட், சிரப்பாக ஒரு பாக்கட் என்று சற்றே வித்யாசமாக சுவையுடன் வரும் அதைக் கலப்பதே ஒரு தனி கலை. அந்த பவுடரையும் சர்க்கரையும் கரைத்து சிரப்பை சேர்த்து, துணியில் வடிகட்டி கான்ஸண்ட்ரேட் தனி கவனத்துடன் தயாராகும். அப்புறம் தண்ணீர் சேர்த்து, கடையில் இருந்து ஐஸ்பார்களை வாங்கி வந்து ரஸ்னா ரெடியானால் "ஐ லவ் யூ ரஸ்னா" என்று அந்த குட்டிப்பெண்ணை எண்ணியபடி நாமும் ருசிக்கலாம். இன்றும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் ருசி தனி.

சமீப நாட்களாக இந்த வேலை எல்லாம் கிடையாது... மிராண்டா, பான்டா, கோக் , பெப்ஸி என்று பெரிய பாட்டில்கள் வாங்கப்பட்டு தொண்டையை நனைக்கின்றன. இதன் ருசியும் தனிதான்... ஏனோ எனக்கு நாவில் ஒட்டாத ருசி...

Tuesday, April 20, 2010

அம்மாவின் பொய்கள்

அசோகமித்திரனின் "ஒற்றன்" நாவல் படித்தேன். அயோவா நகரில் உலகின் பல பகுதியில் இருந்து வந்து தங்கி கருத்துக்கள் பரிமாறிய எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை புனைகதையுருவில் இலேசான நகைச்சுவை இழையோட எழுதி உள்ளார். சுவாரசியமாக உள்ளது.

திடீரென ஒரு சந்திப்பில் கூடி இருக்கும் எழுத்தாளர்கள் அவரவர் மொழியில் பாட்டுப்பாட அழைக்கப்படுகிறார்கள். எல்லோரும் பாடுகிறார்கள்.

"என் அறையைப் பகிர்ந்த எழுத்தாளனிடம் நான் ஒரு இரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். "உனக்குத் தெரியுமா? நான் பாட்டேதும் பாடவில்லை, எங்கள் தமிழ் மொழியின் முப்பது எழுத்துக்களைத்தான் நான் ராகம் போட்டு பாடினேன்"

அவன் வியப்படைவதாகத் தெரியவில்லை. "அப்படியா? நானல்லவா அப்படி சமாளித்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். நானும் எங்கள் மொழி எழுத்துக்களைத்தான் பாட்டாகப் பாடினேன்"


"அம்மாவின் பொய்கள் " என்ற அத்தியாயத்தில் வந்த ஞானக்கூத்தன் கவிதை மிகவும் பிடித்தது.

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறத் தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
அத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சென்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

–ஞானக்கூத்தன்


Monday, April 19, 2010

குழந்தை மனமும் பெரிய மனமும்

அன்று குட்டிப்பெண் காலையிலேயே மூட் அவுட். பின்னே? அவளது பிரிய தலையணை உறை எங்களால் தூக்கி எறியப்பட்டது. டிவி பார்க்கும் பொழுது, உணவு உண்ணும் பொழுது, படுக்கும் பொழுது, விளையாட்டுக்கு இடையில் என்று அந்த தலையணை உறை அணிவிக்கப்பட்ட தலையணை அவளுடன் தான் உறைந்து இருக்கும்.

அது படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல... வீடு முழுதும் இழுக்கப்பட்டு அழுக்காகும்... திடீர் என நாங்கள் கவனித்து துவைத்து காயப்போட்டால், அது காய்ந்து வரும் வரை இவள் படுத்தும் பாடு ஒரு தனிக்கதை. எவ்வளவு துவைத்தாலும் அழுக்காகத் தெரிகிறது என்ற பின் தான் தூக்கி போட முடிவு செய்தோம். அவளுக்கு தெரியாமல் செய்வதாக செய்தாலும், அவளுக்கு தெரிந்துவிட்டது. அது தான் காலை நேரத் தலையாயப் பிரச்னை....

ம்... நான் கூட சிறு வயதில் அம்மா தூக்கிப் போட்ட எனது ஆரஞ்சு பாவாடை சட்டை நினைத்து நிறைய இரகளை பண்ணி இருக்கிறேன். அது இப்பொழுதும் என்னுள் ஒரு ஏக்கப் பெருமூச்சைக் கொண்டு வரும். இன்று நான் கவனித்துப் பார்த்தால்... இதே போல் தான் மோகிக்கு மெல்லிய துணி, நிவிக்கு மிக்கி மவுஸ் போர்வை, அபிக்கு நூல்கள் தொங்கும் துணி என்று ஏதேனும் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது.

வேறு விஷயங்கள் நுழைய நுழைய இந்த குழந்தைத்தனமான ஈர்ப்புகள் மறைகின்றனவா?.... இல்லை யோசித்துப் பார்த்தால்... தீங்கில்லா சில குழந்தைதனங்கள் என்று மறையும் என்றெண்ணியபடி கோபம், ஆசை, போட்டி, பொறாமை என்ற பெரியதனமான அழுக்குகளைச் சுமந்து திரிந்து கொண்டிருக்கிறோம்...

Monday, April 5, 2010

குட்டி தேவதைக்குப் பிறந்த நாள்

இன்று எங்கள் குட்டி தேவதை யாழினிக்குப் பிறந்த நாள். சாக்லேட்டுகளுடன் பிறந்தநாளைக் கொண்டாட ஸ்கூலுக்கு சமர்த்தாகக் கிளம்பிச் சென்றுவிட்டாள் தேவதை. அவளது ஒவ்வொரு வளர்ச்சியும் மனதுள் வியப்புக் குறிகளை நிரப்பிக்கொண்டே தான் இருக்கிறது.



இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்குட்டிக்கு



தித்திக்கும் தேவதையின் பிறந்தநாளின் கூடுதல் மகிழ்ச்சி, இந்த வார தேவதையில் “வலையோடு விளையாடு” பகுதியில் இந்த வலைத்தளம் பற்றிய தொகுப்பில் யாழின் இனிய லூட்டிகள் இடம் பெற்றிருப்பது.

Friday, March 19, 2010

கனவு



ஐஸ்க்ரீம் மணலும்
சாக்லேட் மரங்களும்
பழரச ஆறும்
பரந்து விரிந்த தீவில்
பசியாறி ஆடிப்பாடிய
ஒரு குழந்தையின் கனவில்
பெரியவர்களைக் காணவில்லை



தங்க மணலும்
பணம் காய்க்கும் மரமும்
வெள்ளி ஓடையும்
காசு மழை பொழியும்
கனவொன்றில் அவர்கள்
பசி தாகத்தோடு
தொலைந்து கொண்டிருந்தார்கள்...

Monday, March 15, 2010

ஃபிஷ்பெக்கர்

பறவைகளின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
நான்: இது என்ன?
யாழ்: க்ரோ

இது என்ன?
வுட் பெக்கர்.

ஏன் வுட்பெக்கர்?
மரத்த கொத்தும்.

இது என்ன?
"..."

"மீன் கொத்திட்டு இருக்கு பாரு."
"ஃபிஷ் பெக்கர்"


**************************************************

நான்: இது என்ன?
யாழ்: நேஷனல் ஃப்ளேக்

இது என்ன?
நேஷனல் எம்ப்ளம்

இது என்ன?
நேஷனல் டைகர்


**************************************************

யாழ்: "அம்மா பசிக்குது."
நான்: "பழம் சாப்பிடறியா?"
"வாழைப்பழம் இருக்கா?"
"இருக்கு"
"அது வேண்டாம். ஆப்பிள் இருக்கா?"

"இருக்கு "
"அது வேண்டாம். கொய்யாப்பழம் இருக்கா?"

"இல்லை"
"கொய்யாப்பழம் தான் எனக்கு பிடிக்கும். அது தான் வேணும்"
???


*************************************

Wednesday, March 10, 2010

தேடல்

வாழ்க்கை என்பதே தேடல் நிறைந்தது தானே? எங்கே தேடல் தொடங்கியது என்று யோசித்துள்ளீர்களா? குழந்தைகளாக இருக்கும் பொழுது தேடுவது போல் எனக்கு தெரியவில்லை. அழகாக பூவொன்று மலர்வது போல், அவர்களது முன்னேற்றம் ஒவ்வொன்றாக நிகழ்கிறது. என்றாலும் வாழ்வின் தேடலின் அவசியம் கருதியா என்று தெரியவில்லை... நாம் தேடலை அறிமுகப்படுத்தி விடுகிறோம்.

"காணோம்... காணோம் முட்டாச்" என்று ஆரம்பித்து, "காக்கா ஓச்" என்று கூறி அழகாக ஒரு தேடலுக்கான ஆரம்பம் கொடுக்கிறோம். பின் அது கண்ணாமூச்சியாகவும், ஒளிந்து பிடித்து விளையாட்டாகவும் மாறுகிறது. சில சமயங்களில் நல்ல ட்ரெய்னிங் கொடுக்க புதையல் வேட்டையும் சொல்லித்தரப்படும்.

இந்த சுவாரசியங்களின் முடிவில் நிஜ தேடல்கள் தொடங்கும். படிப்பு, வேலை, பொருள், துணை என்று பட்டியல் நீண்டு கொண்டிருக்கும். இதெல்லாம் முடிந்த ஒரு கணத்தில் கொஞ்ச நாள் தேடலை மறந்து இருப்போம் என்று தூங்கி எழுந்த ஒரு நாளில் முதல் கேள்வியாக வந்தது கணவரின் "என் பர்ஸைப் பார்த்தியாம்மா?" என்ற கேள்வி. நித்தம் தவிர்க்க முடியாத தேடலாகப் போகிறது என்ற உண்மையின் முன்னுரையுடன் என் முன் அந்த கேள்வி சிரித்தது. சிலருக்கு இது மனைவி கை தவறி வைத்த கம்மலாகவோ, சாவியாகவோ இருக்கலாம்.

என்ன ஆச்சர்யம்? தொலைந்தது சாவியோ, பர்ஸோ... ப்ரிட்ஜ் முதற்கொண்டு வீட்டின் அங்குலம் விடாது தேட வேண்டும் என்று அறிந்து கொண்டேன். எண்ணூறு சதுர அடி வீட்டை எட்டு வருடமாக தேடல் நடந்தாலும் இன்னும் கைமறந்து வைக்கப்படும் பொருள் எங்கிருக்கும் என சட்டென்று அறிய இயல்வதில்லை. பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எப்பொழுது முடியும் தேடல்? படிப்பு , வேலை என்று பெரிய பெரிய தேடல்கள் தராத தத்துவங்களைச் சின்ன சின்ன விஷயங்கள் தந்து விடுவது கூட ஆச்சர்யம் தான்.

தேடல் என்று இந்த பதிவு என் மனதில் தோன்றிய நேரத்தையும் நான் சொல்ல வேண்டும். ஊரில் வீட்டைப் பூட்டிக் கிளம்பி இரயிலைப் பிடிக்க வேண்டிய ஒரு அவசர கணத்தில் வீட்டைப் பூட்ட பூட்டும் சாவியும் இல்லை என்று அறிந்தோம். அப்பொழுது தோன்றியது, "பூட்டிய பின் சாவி தொலைந்தால் கூட ஊருக்குப் போய் வந்து பின் பூட்டை உடைக்கலாம். ஆனால் பூட்டவே சாவி இல்லை என்றால் எப்படி கிளம்ப முடியும்?" என்ன ஒரு தத்துவம் என்று எண்ணிய வேளையில் தான் தேடல் தொடங்கியது.

Wednesday, March 3, 2010

தீயினால் சுட்ட புண்

அவள் முழுப்பெயர் என்ன என்று யோசிக்கிறேன். நினைவில் வரவில்லை. வித்யாசமான பெயர்... பெயரைச் சுருக்கித்தான் அழைப்போம்... சரி விடுங்கள் பெயரைச் சொல்லி என்ன செய்ய? அவள் எனக்கு தூரத்து உறவு.. எப்படி என்றால்...சரி விடுங்கள் உறவைச் சொல்லி என்ன செய்ய?

விடுமுறைக்கு செல்லும் பொழுது விளையாடி உள்ளோம். கிணற்றில் எட்டி பார்த்து திட்டு வாங்கி உள்ளோம்; தேங்காய் பூ பறித்து சொப்பில் சமைத்துள்ளோம்; அவள் மாமா ஊரிலிருந்து கொண்டுவரும் முந்திரி கொட்டைகளை அனலில் இட்டு உடைத்து சாப்பிட்டுள்ளோம், பால் நிலா பொழியும் இரவுகளில் கதைகள் பேசி சிரித்துள்ளோம்.

ஏதோ ஒரு நாளில் கிணற்றை மறைத்த சுவரில் சாய்ந்து, கூரையில் தனித்து நிற்கும் மரப்பல்லிகளைப் பார்த்தவாறு, பெரியவர்கள் சண்டையில் சிறியவர்கள் பேசாது இருந்துள்ளோம்; என்றாலும் சில நேரங்களில் குப்பை கொட்ட வெளியே செல்லும் பொழுது சந்தித்தால் இரகசியமாகப் புன்னகைத்துள்ளோம்.

அவளுக்கு நல்ல சிரித்த முகம். அவள் கையெழுத்து அழகு ஆனால் படிப்பில் சுமார் என்பதெல்லாம் எனக்கு அப்பொழுது தெரியாது; விளையாட நட்பு பூக்கும் மனம் இருந்தால் போதுமே!!! நன்றாக படிப்பாளாம், ஆனால் மெதுவாக எழுதுவதால் மதிப்பெண் கம்மியாம்.

அது பதின்மம் தொட்ட பருவம் என்று எண்ணுகிறேன். ஒற்றை ரோஜாவை அழகாக கூந்தலில் பக்கவாட்டில் செருகி இருந்தாள். தோட்டத்தில் பூத்த ரோஜாவாக இருக்குமோ? தெரியவில்லை? அதற்கும் அவள் படிப்புக்கும் என்ன சம்மந்தம்? அன்று அவளுக்கு பரீட்சை பேப்பர் கொடுத்தார்கள். "ஸ்டைலா பூவை யாரை மயக்க வச்சுட்டு வர? மார்க் வாங்காதவளுக்கெல்லாம் பூ தேவையா?" என்ற சொற்கள் தீயின் வெம்மையைக் கூட மறக்கச் செய்துவிட்டது. மறுநாள் காலை அடுப்பெரிக்க வைத்த மண்ணெண்ணெய் பூவை எரித்துவிட்டது.

பூவாக மலர்ந்த முகத்தை கருகியதாக இன்னும் எண்ண இயலவில்லை. அந்த ஆசிரியை என்ன ஆனார் என்பதெல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் கனமான மனதுடன் இந்த நிகழ்வை எண்ணும் பொழுது, சமூகத்தின் சில அழுகிய முகங்களையும் காணும் மனத்திண்மையைக் குழந்தைகளுக்கு அளிக்கும் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு என்று தோன்றுகிறது.

Sunday, February 28, 2010

மீன் பிடிக்க போவோமா?



மீன் பிடித்து இருக்கிறீர்களா? சிறுவயதில் ஆற்றிலும் அருவியிலும் குளிக்கும் பொழுது, "ஒன் டூ த்ரீ" என்று சொல்லி துண்டை விரித்து மீன் பிடித்துள்ளோம். அது அடுத்த நொடி துள்ளி குதித்து மாயமாகும். இது தான் எனது மீன் பிடி அனுபவம். கோயிலுக்கு போவோமா என்றால் குட்டீஸ் எல்லாம் கிளம்புவதாக இல்லை. மீன் பிடிக்க போவோமா என்று தூண்டில் போட்ட உடன் எல்லாரும் ரெடி. இப்பொழுது தூண்டில் வேண்டுமே? தொடங்கின முயற்சிகள்.

தூண்டில் பண்ண என்ன எல்லாம் வேண்டும்? எனக்கு தெரியவில்லை. ஆனால் நந்துவின் சித்தப்பா சித்திக்கு தெரிந்திருந்தது. "ஆப்பரேஷன் ஃபிஷ் கேட்ச் தொடங்கியது". மண்புழுவுக்கு மண்ணைக் கிளறினால், சின்ன பூச்சிகள் தான் சிரித்தன. எனவே மைதாமாவில் கேசரி பவுடர் போட்டு பிசைந்தோம். மைதா மாவு மெதுவாக நீரில் கரையுமாம், எனவே வேறெந்த மாவை விட மைதா தேர்வு பெற்றது. மீன் பிடிக்க கொக்கியும் தூண்டில் பண்ண நரம்பும் ஃபேன்ஸி ஷாப்பில் கிடைத்தது.





தூண்டிலை நீரில் மிதக்க வைக்கவும், மீன் மாட்டினால் அறிந்து கொள்ளவும் ஒரு மிதவை தேவைப்பட்டது. சென்ற முறை கோயிலில் பொறுக்கிய மயிலறகு உதவியது. இறகுகளை விலக்கிவிட்டு, அந்த இறகு காம்பை மிதவை ஆக்கினோம்.




பெரிய குச்சியின் நுனியில் நரம்பைக் கட்டி விட்டு, பின் இறகு காம்பை நன்கு சுற்றி, சற்று இடைவெளி நரம்பை விட்டு, நுனியில் கொக்கி மாட்டினால் தூண்டில் ரெடி. மைதா மாவை சின்னதாக எடுத்து புழு போல் கொக்கியில் மாட்டினால் "ஒன் டூ த்ரீ" சொல்லி மீனைப் பிடிக்க வேண்டியது தான்.




தூண்டிலைப் போட்டுக் காத்திருக்க வேண்டும். உணவு நீரின் அடியில் செல்ல மிதவை நீரில் மிதக்க, மீன் மாவை உண்ணத் தலைப்பட்டால், இறகுக்காம்பு அசையும்; ஒரு சுண்டு சுண்டி தூண்டிலை எடுத்தால் மீன் மாட்டி இருக்கும்.



சொல்வது எளிதாக இருக்கிறது, ஆனால் மீன் என்னவோ நந்துவின் சித்தி போடும் தூண்டிலுக்கு தான் சிக்கியது.



ஆறு மீன்களைப் பிடித்து, இரசித்து மீண்டும் நீரிலேயே விட்டு விட்டோம். தூண்டில் பண்ண நந்துவின் சித்தப்பா போட்ட டீல் அது. டீல் இஸ் எ டீல் இல்லையா? எனவே மீன்கள் துள்ளி மறைந்தன.




சுவாரசியமான பொழுதை முடித்து பரபர உலகிற்கு மீண்டும் வந்தோம்... தூண்டிலில் சிக்கிய மீன்களாக....

Tuesday, February 23, 2010

உடை சுதந்திரம்

காற்றை ஆடையாக்கி
துள்ளித் திரியும்
குழந்தை அவள்

பொம்மைகளுக்கு
உடை உடுத்தி
சிரித்திருப்பாள்

குழந்தையென்றாலும்
ஒரு நாள்...
ஆடை கட்டாயமானது

சின்னப்பெண்ணிடம்
யாசித்து நிற்கின்றன
ஆடை களைந்த பொம்மைகள்

பொம்மைகளேனும்
இருக்கட்டும் ஃப்ரீயாக
என்கிறாள் குழந்தை

கோபம் கொள்கிறாள் தாய்...
ஆப்பிள் உண்ட
ஏவாளின் மீது

Saturday, February 20, 2010

கிறுக்கல்கள்

வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டினால் பதின்மத்தின் பக்கங்கள் பெரும்பாலும் குழப்பமான கிறுக்கல்களாகவே தெரிகிறது.

பதின்மம்... தனது தனித்துவத்தைக் கண்டுணர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு போராட்டமாக இருந்ததோ என்று தோன்றுகிறது. “படிப்ஸ்” என்று மட்டுமே இருந்தாலும், பல குழப்பங்களுடன் தான் இருந்தது பதின்மம். ஒழுங்காகப் பள்ளி வந்து கொண்டிருந்த ரெஹானா, பர்கானா, அனிதா எல்லாம் பள்ளியில் இருந்து திடீரென நின்ற பொழுது... , பசங்க பொண்ணுங்க என்ற பாகுபாடின்றி கிரிக்கெட், செவென் ஸ்டோன்ஸ், மசாமஸ் என்று விளையாடிக் கொண்டிருந்த பொழுது பானு திடீரென வாசற்படி தாண்டி வரமறுத்தது என்று... வகுப்பில் சின்ன பெண்கள் எல்லாம் படித்துக்கொண்டிருக்க, பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டம் மட்டும் என்ன தான் பேசி சிரித்துக்கொள்கிறார்களோ என்று...

சந்தோஷமாக வெளியே செல்ல கிளம்பிய காலம் போய், வெளியே சென்றால் என்ன அத்துமீறல்களோ என்று மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது வீட்டுக்குள் சுருங்கிக் கொண்ட காலமும் அதுதான்.”படி தாண்டாதே” என்று அம்மா கூறவில்லை, நானே வீட்டிற்குள அடைந்து கொண்டேன். வாசிப்பு என்ற பொன்னுலகம் என்முன் விரிய ஆரம்பித்ததும் அப்பொழுது தான். என்னவென்றே புரியாத மன உளைச்சல்களோடு மூச்சிரைப்பு நோயும் உச்சகட்டத்தை அடைந்து என்னைப் பாடாகப் படுத்தியது. அம்மாவையும் அப்பாவையும் மிகவும் கவலைப்படுத்துவேன். விளையாட்டு என்ற ஒன்று என்னிடம் இருந்து அன்னியப்பட்டுப் போனது.

பள்ளியில் உணவு இடைவேளையில் மாடிப்படிகளில் அமர்ந்து, நானும் ஸ்ரீதேவியும் கேட்க சாரதா அழகாக கல்கியின் பொன்னியின் செல்வனை இரசித்துக் கூறுவாள், இரசித்துக் கேட்போம். வந்தியத் தேவனையும், குந்தவியையும், அருண்மொழியையும் வானதியையும் நினைத்து நினைத்து சிரிப்போம். மரணத்தின் தீவிரம் புரிந்ததும் இந்த பருவம் தான். சாரதாவின் அப்பாவிற்கு கேன்சர் என்று ஒரு முறை அவள் வீட்டிற்கு சென்றிருந்தோம். சில நாள்கள் கழித்து அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதைக் கனமாக்கியது. “இந்த வருஷம் எங்க வீட்ல நெல்லி நிறைய காய்த்தது... ஏதோ நடக்கும்னு தெரியும்” என்று அவள் கூறியது இன்னும் ஒலிக்கிறது. இப்பொழுதும் தோட்டத்தில் நெல்லியோ மல்லியோ நிறைய காய்த்தால், பூத்தால் மனதுள் திகில் குடியேறும்.

ஒழுங்காக படித்துக் கொண்டிருந்த உமா மகேஸ்வரி காதல் என்று ஓடிப்போனாள். ஒரு மாதம் கழித்து கணவனிடம் அடி உதை வாங்கிக் கொண்டிருந்தாள். சுமதியும் காதலனுடன் ஓடிபோய் விஷம் குடித்தாள். காதலன் இறந்துவிட, அவன் போட்ட 7 பவுன் சங்கிலியைத் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் பழையபடி சிரித்து வளைய வந்தாள். இருவரின் இந்த கதைகள் காதல் என்பது ஒரு க்ரேஸ் என்ற என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது.

பத்தாம் வகுப்பில் மார்க்‌ஷீட் வாங்கிவிட்டு அண்ணன் கல்யாணத்திற்கு ஊருக்கு சென்று விட்டேன். வருவதற்குள் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கும் நாள் கடந்துவிட்டதால் இடம் இல்லை என்று சொல்லிவிட, அரசு பள்ளியில் இருந்தவளை கான்வெண்ட்டில் சேர்த்து விட்டனர். தாவணியில் சென்று கொண்டிருந்தவள் ஸ்கர்ட் & ப்ளவுஸ் என்று மாறியது வித்யாசமாக இருந்தது. சுற்றி எல்லோரும் ஆங்கிலத்தில் பேச, நான் ஒரு தனி தீவாக உணரத்தொடங்கினேன். மெல்ல என்னுள் தாழ்வு மனப்பான்மை புகுந்தது. (இன்று வரை அது ஏதேனும் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு திடீரென்று உறக்கம் கலைந்து எழும் :-)) நாகலஷ்மி என்ற ஆங்கில ஆசிரியை அதை உணர்ந்து என்னை வெளியே கொண்டுவர முயற்சித்தார். எனக்கென சின்ன நட்பு வட்டம் கிடைத்தது சற்றே ஆறுதல். என்றாலும் மிகுந்த மன அழுத்தம் கொண்ட நாட்களும் அதுவே. அடிக்கடி உண்டியல் காசு பஸ் செலவுக்கும், அப்பாவின் மோதிரம் ஸ்கூல் பீஸுக்கும் மாயமாகும் வேளையில், என் உடல் நலக்குறைவால் மிகவும் மனம் வருந்திக்கொண்டிருந்த பெற்றோரிடம் பள்ளி பிடிக்கவில்லை என்று சொல்லாது தோட்டத்தில் இருளிடம் என் கண்ணீரைப் பகிர்ந்து கொண்டேன்.

இதோ முடிந்துவிடும் பள்ளிபடிப்பு என்று இருந்த வேளையில், கல்லூரியிலும் பெரும்பாலோர் ஹாஸ்டலராக இருக்க, நட்பு வட்டம் பெரிதாக இல்லை. ஆண்/பெண் நட்பின் எல்லைக்கோடு பற்றி கேள்விகளும் பதில்களும் எனக்குள்ளே சுற்றிக் கொண்டிருந்தன. கிட்டதட்ட கான்வெண்ட் போல் தான் என்றாலும் சில நட்புக்களால் மனம் சற்றே தெளிவாக இருந்தது. எல்லா வேளைகளிலும் எனக்கென்ற முகம் “படிப்பு” என்று மட்டுமே இருந்தது. பெரும்பாலும் பேசியதில்லை. அமைதியான பார்வையாளராக இருந்துள்ளேன். ஆனால் எனக்குள் என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. கவிதைகள் காகிதங்களில் எழுதப்பட்டு கசக்கி எறியப்பட்டன. (கற்பனை தான் எத்தனை சுகம்... கண்ணாடி மாளிகை என்றாலும் கற்பனை தான் எத்தனை சுகம்) தாழ்வு மனப்பான்மையை விரட்டி மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயற்சிகள் நடந்தன. கல்லூரி இறுதியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் கூட, தன்னம்பிக்கை என்பது சென்னையில் வந்து வேலை செய்ய ஆரம்பித்த பின் தான் வேரூன்றியது. உற்சாகம், விளையாட்டு எல்லாம் மீண்டும் என்னிடம் குடிவந்தது. உடல்நலமும் மேம்பட்டது. தோழி பாரதியின் உற்சாகமான நட்பு மிக முக்கியமானது.

இன்று யாரேனும் “you are aggressive", "talkative" , “டீச்சரா இருந்திருப்பீங்களோ” என்று கூறும் பொழுது இருளில் கரைந்த அந்த கண்ணீர்க்கணங்களைப் எண்ணி சிரிக்காது இருக்க இயலவில்லை. வெகு நாட்களாக மனதில் கனத்துக் கிடந்த பதின்மம் பற்றி கூற அழைத்த அமித்து அம்மாவிற்கு நன்றி.

Wednesday, February 10, 2010

நினைவு அஞ்சலி

படிக்கப்படாத புத்தகங்கள்
புரட்டிக் கொண்டே இருக்கின்றன
மனதின் பக்கங்களை...

தோட்டத்துச் செடிகள்
பரப்பிக் கொண்டே இருக்கின்றன
நினைவுகளின் வாசத்தை...

வீட்டுச் சுவர்கள்
விளம்பிக் கொண்டே இருக்கின்றன
ஏதேனும் ஒரு நினைவை...

நாட்காட்டி தாள்கள்
உதிர்ந்து சுட்டிக்காட்டும்
நாள் மட்டுமா
நினைவு அஞ்சலி?


உருண்டோடி விட்டன இரு வருடங்கள் மாமா மறைந்து... கடைசியாக தொலைபேசியில் தான் பேசினேன். அப்பாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அப்பொழுது குழந்தைகளைப் பெற்றோர் உதவியுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். மாமா குழந்தைகளைக் கவனிக்க வரட்டுமா என்றார். ஊர் விட்டு ஊர் அலைய வைக்க வேண்டாம் என்று, நான் சமாளித்துக் கொள்வேன் என்றேன். அப்பொழுதும் விடவில்லை , "அப்பாவால் சாமானெல்லாம் வாங்கிப் போட முடியாதில்லையா... நான் வந்து பார்க்கிறேன்" என்றார். "இல்லை மாமா நீங்கள் அலைய வேண்டாம் நாங்கள் சமாளித்துக் கொள்வோம்" என்றேன். இப்பொழுது நினைத்தாலும் அந்த அன்பில் மனம் நெகிழும்.

Monday, February 1, 2010

மயிலிறகோ நினைவுகள்

தைப்பூசம்.... ஊரில் குலதெய்வ வழிபாடு. பெளர்ணமி இரவில் விளக்கு பூஜையும், மறு நாள் சிறப்பு பூஜையும் என்று வருடா வருடம் இருக்கும். நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் பழநியில் இருந்து எடுத்து வைத்த பிடி மண்ணாக கம்பந்தட்டைகளுக்கு கீழ் இருந்த முருகன், இன்று கோயிலும் மண்டபமுமாக வளர்ந்திருந்தார். சாத்தூரில் இருந்து சில கி.மீ தொலைவில் பனையடிப்பட்டியில் கோயில் அமைந்திருக்கிறது. வழியில் சாலையில் சோள/கம்பந் தட்டைகளைப் போட்டு, வண்டி ஏறி செல்ல செல்ல தான்யங்களை உதிர்த்துக் கொள்கிறார்கள். ஆங்காங்கே தான் பசுமை தெரியும்... மற்றபடி வெய்யிலின் உக்கிரத்தை ஏற்றுவது போல மஞ்சள் நிறத்தில் சோளக்கதிர்களும் கம்பங்கதிர்களும்...




திருமணமான உடன், குழந்தைகள் மொட்டை என்பது தவிர இந்த வழிப்பாட்டிற்கு பரபர சென்னையில் இருந்து செல்வது என்பது எங்களுக்கு இயலாதது தான். எப்பொழுதும் அத்தையும் மாமாவும் தவறாமல் செல்வார்கள் எங்களுக்கும் சேர்த்து. சென்ற முறை, நினைவில் மட்டுமே மாமா தங்கியதால் செல்ல அனுமதி இல்லை. இந்த முறை அத்தைக்கும் அலைச்சல் இயலவில்லை என்று எப்பொழுதும் செல்பவர்களைத் தவிர குடும்பத்தினர் எல்லோரும் சென்றிருந்தோம். எப்பொழுது நாங்கள் சென்றாலும் இதை செய், அதை செய் என்று அத்தை மாமா சொல்ல ஈடுபாட்டுடன் செய்வோம். இந்த முறை இருவரும் இன்றி உற்றாரும் உறவினரும் இருந்தாலும் அன்னியமாக இருந்தது வழிபாடு; பெரியவர்கள் இருக்கும் பொழுதை விட இல்லாத பொழுதுதான் அவர்களின் சிறப்பு அழுத்தமாகப் புரிகிறது... எத்தனை வயதானாலும்... சில நினைவுகள் மயிலிறகாக மனதை வருடினாலும் மீண்டும் வராத காலங்கள் என்று மனதையும் பாரமாக்கும்.




முருகனைக் காண்பதை விட மயிலைக் காணத்தான் குழந்தைகள் ஆர்வத்துடன் இருந்தார்கள். பூஜை, அன்னதானம் முடிந்ததும் மயிலைத் தேடி குயில்களுடன் கிளம்பினோம். முட்புதர்களும் பார்த்தீனியமும் மண்டிக்கிடந்த நிலத்தில் நடந்தோம்.




“புளியந்தோப்பில் மயில் அடையும்” என்றார் ஆடு மேய்ப்பவர். குயிலொன்று கால்கள் பின்ன “புலி வருமா” என்று தயங்கியது. அது ரசத்துக்கு போடும் புளி என்று தெளிவு படுத்தி நடந்தோம். ஆங்காங்கே மயில் இறகுகள் மழலைகளுக்காக இறகை உதிர்த்து சென்றிருந்தன.



கிள்ளைகளின் முன் ஓடி மறைந்தன இரு மயில்கள்; வானில் பறந்து மறைந்தது மற்றொரு மயில். நான்கைந்து புளியமரம் தோப்பாக நின்றது. மயிலைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் இறகுகள் சேகரித்தனர் குழந்தைகள். மயிலிறகு மட்டுமல்ல... பருந்து, குயில் என்று எல்லா பறவைகளின் இறகுகளும் கோலமிட்டிருந்தன மழலைகளுக்காக. உறவோடு கூடி திண்ணையில் ஆடி, ஆற்றில் நீராடி என்ற காலங்களைத் தர இயலாவிட்டாலும் மயிலிறகைத் தேடிய பொழுதுகள் இதமாக இருக்குமா அவர்கள் மனதில்?



சாத்தூரில் சேவும், கருப்பட்டி மிட்டாயும் வாங்கினோம். முன்பெல்லாம் ஓலைப்பெட்டியில் மணமுடன் வரும்... பின் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டு வரும்... இப்பொழுது ப்ளாஸ்டிக் கவர் தான்...அதனால் தான் ருசி குறைந்துவிட்டதோ?

மெலிதான பாரம் மனதில் தங்க முடிந்தது கோயில் பயணம்.

Thursday, January 28, 2010

இங்கிலீஷ் அமெரிக்கா

குட்டிப் பெண்ணுக்கு ஊருக்கு போவது முன்பெல்லாம் பிடிக்காது. இப்ப "மீ த ஃபர்ஸ்ட்". ஆனால் மேடம் அஞ்சு நாள் ஊருக்கு போகணும்னு கிளம்புவாங்க... அப்புறம் போன உடனே "வீட்டுக்கு போகலாம்னு" ஆரம்பிப்பாங்க... இப்ப அப்படி ஊருக்கு போகணும்னு சொன்னவங்க கிட்ட
"நீ ஊருக்கு போ...நான் அமெரிக்கா போறேன்..." என்றேன்.
"இங்கிலீஷ் அமெரிக்காவா தமிழ் அமெரிக்காவா?"
"ம்...இங்கிலீஷ் அமெரிக்கா"
"சரி போ"


*****************************

மேடம்க்கு லீவு... எனக்கு ஆபீஸ்... ஆனாலும் பெரியவங்களை தொந்தரவு படுத்தக் கூடாதே!! எப்பவும் போல் குளி, சாப்பிடு என்றேன்... கோபம் வந்துவிட்டது. "நீ மட்டும் உன் இஷ்டத்துக்கு இருப்ப. நான் என் இஷ்டத்துக்கு இருக்கக்கூடாதா?". ஒரு நிமிஷம் என்ன சொல்றதுனு புரியலை... அப்புறம் , "எல்லாமே நீயா செய்யறப்ப உன் இஷ்டத்துக்கு இரு" என்றேன்... நியாயமாகப் பட்டது போல்.. ஒத்துக்கொண்டாள்

*****************************

ஆபிளில் இருந்து சீக்கிரம் வந்து பீச்சுக்கு அவளுடன் சென்று கொண்டிருந்தேன். அங்கு காக்கை கூட்டம் இருந்தன. நம்ம குட்டீஸ்க்கு உடனே சந்தேகம் வருமே ... ஒரு புழுவைப் பார்த்தால் கூட அதோட அம்மா அப்பா எங்கே என்று கேட்டு ..எல்லாம் ஆபீஸ்ல இருந்து வர்ற வரை அது விளையாடும்னு சமாளித்தாலும் கேள்வி கேட்டு...
"இதெல்லாம் அம்மா காக்காவா அப்பா காக்காவா?"
"ரெண்டும் இருக்கு"
"எதெல்லாம் அம்மா காக்கா?"
"தெரியலை பார்க்கலாம்"
அப்பொழுது சில காக்கைகள் பறந்தன.
"அதெல்லாம் ஏன் சீக்கிரம் போகுது"
"ம்... அதெல்லாம் வீட்டுக்கு போகுது"
"ஓ!! அப்ப அதெல்லாம் அம்மா காக்காவா?"
"..."

***********************
ஃபைட்டர் ஃபிஷ் முட்டை போட்டிருந்தது. எனவே பெண் மீனைத் தனியாக போட்டோம்.
"மேல் ஃபிஷ் என்ன பண்ணும்?"
"மீன் குட்டியைப் பாதுகாக்கும்..."
ஏனோ அவளுக்கு சமாதானம் ஆகவில்லை.

மாலை அலுவலகத்திற்கு ஃபோன். "அம்மா... முட்டை எல்லாம் காணோம். இந்த மேல் பைட்டர் தின்னுடுச்சு போல... நாம தப்பு பண்ணிட்டோம். அடுத்த தடவை ஃபீமேல் ஃபைட்டரை தான் பாதுகாக்க விடணும்"

************************

Tuesday, January 26, 2010

காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...

பெட் வேண்டும் என்று வீட்டில் குழந்தைகள் ஒரே கெஞ்சல். மீன் உண்டு. அடுத்த படியாக பராமரிக்க எளிது என்று லவ் பேர்ட்ஸ் வாங்கினோம். வரும் பொழுதே சின்னப் பெண்ணிடமிருந்து கேள்வி, "அது ரெண்டும் லவ் பண்ணுதா அம்மா?". அவ்வப்பொழுது இப்படி ஏதேனும் ஒரு கேள்வி வந்து கொண்டேதான் இருக்கும் விளம்பரம் கண்டாலோ, படம் பார்த்தாலோ... "நீங்க ரெண்டு பேரும் எப்ப ஃபர்ஸ்ட் பார்த்தீங்க? என்ன பேசினீங்க?". வியப்பாகத் தான் உள்ளது கேள்விகள். சிரித்துக் கொண்டே பதில்கள் சொல்ல கற்றுக்கொண்டோம். மனம் கொசுவர்த்தி சுற்றியது...

அன்று பள்ளியில் இருந்து வந்த பொழுது அடுப்படியில் புதிதாக பெண் ஒருவர் இருந்தார். புன்னகைத்தவரை யோசனையுடன் பார்த்தபடி அம்மாவை நோக்கினேன். தீவிரமாக சமையல் செய்து கொண்டிருந்தார் அம்மா; என்னைப் பார்க்க விரும்பவில்லை. எப்பொழுது ஊருக்கு வந்தாலும் சிரிப்போடு கும்மாளம் அடிக்கும் அண்ணன் , ஹாலில் சற்று சீரியசாக சிரிக்க முயன்றார். சற்று நேரத்தில் புரிந்துவிட்டது... இருவரும் ஊரை விட்டு ஓடி வந்திருந்தார்கள் என்று. எப்படி லவ் பண்ணி இருப்பார்கள் என்ற கேள்வி மனதைப் பிறாண்டியது. டி.வி நிகழ்ச்சிகள் கூட சென்சார் செய்யப்பட்ட காலகட்டம், "லவ்" என்று சொல்வதே தவறாக இருந்தது... "ஹீரோவும் ஹீரோயினும் இது பண்ணுவாங்க" "வில்லன் அந்த பொண்ணை இது பண்ணிடுவான்" என்ற "இது" அதன் இடம் பொறுத்து பொருள் கொள்ளப்பட்டது. மனதைப் பிறாண்டிய கேள்வியைக் கேட்க இயலாமலே அவர்கள் ஊருக்கு போய்விட்டார்கள்.

ஊரில் திருவிழாவுக்கு வந்த எல்லா உறவினர்களும் கூடியிருந்தோம். குழந்தையைத் தொட்டிலில் கிடத்திவிட்டு, அடுப்படியில் வேலை உள்ளதா என எட்டிப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்த அண்ணியிடம் இரகசியமாக, "அண்ணி, அண்ணனை எப்ப நீங்க முதல்ல பார்த்தீங்க?" என்றோம். அண்ணியின் முகம் பூவாக மலர "நான் காலேஜுக்கு போக பஸ் ஸ்டாண்ட்ல நிப்பேன். உங்க அண்ணனும் அங்க வருவாக... .". அண்ணி சொல்ல ஆரம்பித்த வேளையில், "அதுக தான் கூறு இல்லாமல் கேக்குதுனா நீயும் இப்படி கூறுகெட்டதனமா சொல்லிட்டு இருப்பியா?" என்ற அம்மாவின் கத்தலில் எங்கள் அவை கலைந்தது. "எப்படி லவ் வந்து இருக்கும்" என்ற கேள்வி பதில் இல்லாமலே எல்லோர் மனதிலும் தங்கி விட்டது.

”அண்ணி உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க” என்று அம்மா முன்பாக அண்ணியிடம் கேட்க எனக்கு தைரியம் வந்தது எனது திருமணத்திற்குப் பின் தான்.

இப்பொழுது எதையும் உனக்கு தேவையற்றது என்ற பதிலாலோ, பதில் சொல்லாமலோ மழுப்ப முடியாது. அவர்களுக்குப் ஏற்ற பதில் சொல்ல கற்றுக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. காலத்தின் தேவைக்கேற்ப எல்லா விஷயங்களும் மாறிக்கொண்டே தான் உள்ளன

Monday, January 25, 2010

சாலையோரம் - தொடர் பதிவு

சாலையோரம் தொடர் பதிவிற்காக தீபா அழைத்திருந்தார். நான் வாகனம் ஓட்டுவதில்லை... சாலை பயத்தால்... சாலை ஓரம் இரண்டு நிமிடம் நின்று போக்குவரத்து நிறைந்த பாதையைப் பாருங்கள்... எல்லா வாகனங்களுக்கும் ஒரு ஒற்றுமை... வேகம்... வேகம்... வேகம்... எதைப் பிடிக்க இவ்வளவு வேகம் என்று தோன்றும். நிதானமாகச் செல்பவருக்கு வசை கிடைக்கும். ஆங்காங்கே இடித்தாலும் குறையாத வேகம்... சாலையைக் கடப்பவரைப் பற்றி கவலைப்படாத வேகம்.. இது என்று நிதானம் ஆகுமோ என்ற பயம் வேகமாக மனதைக் கவ்வும்.

தீபா அழகாக சொல்லி இருப்பார் "It may not be your fault, but it's your accident. அதனால் மற்றவர்களின் தவறுக்கும் தயாராக இருங்கள்.". வரக்கூடாத திசையில் வந்து நேராக மோதி நம்மை முறைப்பார்கள். அன்று சாலையில் காரைத் திருப்ப இடது புறம் வரும் வண்டிகளையும், பக்கவாட்டிலும் பார்த்துக் கொண்டே திருப்பினால், எதிர் திசையில் சைக்கிளில் ஒருவர் மோதுவது போல் வருகிறார். எத்தனை பக்கம் பார்க்க இயலும்? கொஞ்சம் சுற்று என்றாலும் சரியான வழியில் வருவது நன்று.

மற்றோருநாள் காரைத் திருப்ப முயலும் பொழுது, கிடைத்த சிறு சந்தில் , வேறு இரு வாகனங்கள் ஓவர்டேக் செய்ய முயன்று... முன் கதவு ஜாம் ஆகிவிட்டது. உள்ளே குழந்தை இருந்ததால் நியாயம் பேசவும் நேரம் இல்லை. ஏன் இந்த வேகம்? முன்னால் செல்லும் வாகனத்தில் குழந்தை இருக்கலாம், கர்ப்பிணி இருக்கலாம், நோயுற்றவர் இருக்கலாம்... ஒரு சிறு இடி கூட அது பெரிய விஷயம் ஆகலாம். வேகம் விவேகமல்ல....

மற்றொன்று நெரிசல். நாம் நெரிசல் நேருவதைத் தவிர்க்கலாம். வரிசையாக எல்லோரும் நிற்பார்கள். சிலர் மட்டும் வேகமாக முன்னால் சென்று சாலையின் நடுவில் நின்று, எதிர்ப்பக்கம் வாகனம் வருவதைத் தடுப்பார்கள். அப்புறம் ட்ராபிக் ஜாம் தான். யாரும் நகர முடியாது. சத்யம் தியேட்டர் வாயிலில் காட்சிக்கு நேரம் இருந்ததால் சாலையோரம் வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. ஒரு பக்கம் போக்குவரத்து ஒழுங்காக சென்று கொண்டிருக்கிறது. ஒருத்தன் சாலையை மறித்துக் கொண்டு காரில நடுவே புக முயல்கிறான். மற்றவர்ளுக்கு இடையூறு செய்து அப்படி என்ன அவசரம் ? அவனை விட்டால் தான் போக்குவரத்து சீர்படும் என்பதால் அவனுக்கு நடுவில் வழிவிட வேண்டி இருந்தது. இது போல் நடு சாலையில் முந்தி சென்று நெரிசலை உண்டாக்காதீர்கள்.

இரவில் வாகனம் ஓட்டுவதில் பல சிக்கல்கள். "ஹை பீம்" போட்டுவிட்டு வரும் வாகனத்தால் முன்னால் இருக்கும் வாகனம் தெரிவதில்லை. என் கணவர் எப்பொழுதும் ஹை பீம் போட விரும்புவதில்லை. அன்று அப்படி தான் .. எதிரே வரும் வாகனங்களின் "ஹை பீம்" வெளிச்சம் மறைந்ததும் பார்த்தால் சற்றே முன்னால் இருளின் அரக்கன் போல ப்ரேக் லைட் இன்றி செல்கின்றது ஒரு லாரி. நாம் லோ பீம் போட்டால் எதிரில் வரும் வாகனத்தின் ஹை பீமில், முன்னால் இருக்கும் ஓளியற்ற வாகனங்கள் தெரிவதில்லை. முதலில் லாரிகள் ப்ரேக் லைட் ஒழுங்காகப் போட்டால் நிறைய விபத்துக்கள் தவிர்க்கப்படும். நாமும் லோ பீமில் ட்ரைவ் பண்ண முயல்வது நல்லது.

வாகனம் ஓட்டுபவரும் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில் வேலைப்பளுவால் மனச்சோர்வடைந்த உறவினர், பைக்கில் ஒரு விநாடி நிலை குலைந்து போனார்... தலைக்கவசம் இருந்த்தால் சிறு சிராய்ப்புடன் தப்பினார். ஆனால் அந்த சில மணி நேரங்கள் அவரது குடும்பத்தினர் தவித்த தவிப்பு.... இரு சக்கர வாகனம் என்றால் தலைக்கவசம் கண்டிப்பாக அணியுங்கள். உங்கள் நன்மைக்காகவும் மற்றவர் நன்மைக்காகவும், உடல் சோர்வோ மனச்சோர்வோ உணர்ந்தால் வாகனம் ஓட்டாதீர்கள்; சிறிதளவு மது எடுத்துக் கொண்டாலும் வாகனம் ஓட்டாதீர்கள்.

எல்லோருக்கும் தேவை நிதானம்... சற்று முன்பே கிளம்பினால் வேகம் தேவைப்படாதே!!! வேகம் எமனின் கோட்டை தவிர எந்த கோட்டையையும் பிடிக்க விடாது; தேவையற்றது வேகமும், நெரிசல் உண்டாக்குவதும்.

அடிக்கடி பிரதான சாலையில் ஆம்புலன்ஸ் சைரன் அடித்தாலும், நகர இயலாத நெரிசலால் வேகமாக செல்ல இயலாததைக் காணலாம். வி.ஐ.பி கள் சாதாரணமாக செல்ல சாலையில் வழி ஏற்படுத்தப்படும் ஊரில் , துடிக்கும் உயிருக்கு செல்ல முடியாத நெரிசல் என்பது வேதனையான விஷயம்.

தங்கள் அனுபவங்களைப் பகிர நான் அழைப்பது
அமித்து அம்மா
பின்னோக்கி
அகஆழ்