பொன்னி அவசரமாக வேலைகளை முடித்துக் கொண்டிருரந்தாள். மனம் முழுவதும் ராதா தான். இவளைத் தேடிக் கொண்டிருப்பாளே? இன்னிக்கு மட்டும் லீவு எடு என்று எவ்வளவு கெஞ்சினாள். வீட்டுக்காரம்மாவும் நல்லவள் தான். இன்று உறவினர்கள் வருகிறார்கள் என்று வேலையை சீக்கிரம் முடித்துவிட்டுப் போகச் சொல்லி இருந்தாள். ஹாலில் ஏதோ ஸ்ரீதேவி படம் ஓடிக் கொண்டிருரந்தது. அடிக்கடி இங்லீஷ் காதில் விழுந்தது. ராதா தான் மீண்டும் நினைவில் வந்தாள்.
என்ன சுட்டிப் பெண் அவள். அம்மா கஷ்டம் புரிந்து பதவிசாக நடந்து கொள்கிறாளே!!! பொன்னிக்கு வேடந்தாங்கல் பக்கம் ஊர். ஸ்கூலுக்கு போகாமல் மாடு மேய்க்க போகும்பொழுதெல்லாம் அப்பா பிரம்பால் அடித்து ஸ்கூலில் விட்டது மட்டும் நினைவில் இருக்கிறது. கஷ்ட ஜீவனம் தான் என்றாலும் அம்மா அப்பா மாமா சித்தப்பா என்று நாலு உறவாவது இருந்தது. அந்த கஷ்டம் சின்ன கஷ்டமாகக் கடவுளுக்குத் தெரிந்தது போல்… அப்பாவை அழைத்துக் கொண்டார். அம்மா கொஞ்ச நாள் போராடி கஞ்சி ஊத்தினாள். வேலை கிடைப்பதே திண்டாட்டம் ஆக யாருக்கோ வாழ்க்கைப்பட்டு இவளை விட்டுப் போனாள். அம்மா என்று போனவளுக்கு உதையும் திட்டும் தான் கிடைத்தது..அம்மாவிடமிருந்தும் புது அப்பாவிடமிருந்தும்.. கொஞ்ச நாள் சித்தப்பா கஞ்சி ஊற்றினார். சித்தி வந்த பிறகு அதிலும் மண் விழுந்தது. மாடு மேய்த்து நாலு காசு கொடுத்தால் சித்தி கஞ்சாவது ஊற்றினாள். பதினைந்து வயதில் ஒரு லாரி டிரைவரோடு சென்னைக்கு கனவுகளோடு வந்தவளை ஒரு கனவாகவே விட்டு ஓடி விட்டான். அதன் பிறகு பொன்னிக்கு போராட்டம் தான். பெற்ற பிள்ளையாவது ஏதோ நாலு எழுத்து படிக்க வேண்டுமென்று பள்ளிக்கூடம் அனுப்பினாள்.
அது சுட்டி தான். தானும் படித்து சின்ன சின்ன வேலைகளை அக்கம்பக்கம் செய்து நாலு காசும் சம்பாதிப்பதால் இருக்கும் விலைவாசியில் வயிறு ஒட்டாது கஞ்சியாவது குடிக்க முடிகிறது. ஏதோ குப்பத்து பிள்ளைகளுக்கென யாரோ புண்ணியவதி இலவசமாக் என்னெனன்வோ ட்யூஷன் எடுக்கிறார்கள். போய் பார்க்க கூட இவளுக்கு நேரம் இருந்ததில்லை. ராதா தான் வந்து இங்லீஷ் சொல்லிக் கொடுத்தாங்க.. கணக்கு சொல்லிக் கொடுத்தாங்க..கம்ப்பூட்டர் சொல்லிக் கொடுத்தாங்க ..கராத்தே சொல்லிக் கொடுத்தாங்க..படம் வரைஞ்சோம்.. என்று இவள் வேலை முடிந்து
அசதியுடம் வரும் பொழுது சொல்லுவாள். கேட்க கூட நேரமின்றி காலையில் வைத்த கஞ்சியைக் குடித்து விட்டு இவள் படுத்துவிடுவாள். அங்கே போற நேரத்துக்கு எங்கேயாவது வேலை செய்யேன் என்று வாய் வரும் வரை வார்த்தைகளை முழுங்கிவிட்டு படுப்பாள். இவளாவது கொஞ்சம் குழந்தையாக இருக்கட்டுமே என்று தோன்றும்…
இன்று அங்கே ஆண்டு விழாவாம். வாம்மா நான் டான்ஸ் ஆடறேன்.. இங்லீஷில் கதை எல்லாம் சொல்லுவேன் என்று ஆசையாகச் சொன்னதால் தான் இன்று யோசனை… நேரமாகி விட்டது.. முடிந்ததோ என்னவோ…ஸ்கூலில் எல்லாம் இங்லீஷ் , கம்ப்பூட்டர் எல்லாம் பேச்சுக்கு தான்.. அங்கெல்லாம் போய் இப்படி கேட்க முடியுமா தெரியவில்லை…”வரேம்மா” சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்தாள். ஹாலில் ஸ்ரீதேவி ஏதோ இங்கலீஷில் பேசிக் கொண்டிருக்க வீட்டுக்காரம்மா கண்ணில் தணணியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ராதா சொன்ன வழியை மனதில் கொண்டு அந்த தெருவுக்கு வந்தாள். எல்லாம் உயர்ந்த காம்பவுண்டு சுவருடன் கூடிய வீடுகள். அந்த ஒரு வீடு தான் திறந்திருந்தது. எனவே கண்டு பிடிக்க முடிந்தது. உள்ளே நுழையவும் ராதா ஓடி வரவும் சரியாக இருந்தது. “வந்துட்டியாம்மா…” ஆசையுடன் கைகளைப் பற்றிக் கொண்டாள். டான்ஸ் முடிஞ்சுடுச்சு இங்லீஷ் பேசறதைக் கேட்கவாவது வருவியானு பார்த்தேன். இழுத்துக் கொண்டு போனாள். இருபது முப்பது குழந்தைகள்… கொஞ்சம் பெரியவர்கள்…டீச்சர்க்ளோ… தெரியவில்லை…தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது…வந்தது தப்போ…
அவளைப் போல் நாலைந்து பேரைப் பார்க்க முடிந்தது.
மீன் விற்கும் ரோசியும் கூட கண்ணில் பட்டாள். இங்லீஷில் ஏதோ நாடகம் …அதில் ரோசி பெண் மேரி ஏதோ பேச ரோசி பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். நாடகம் முடிந்துவிட்டது…கைதட்டல்… அடுத்து ராதா…அய்யோ இந்த பெண் என்ன சொல்கிறது? ஒன்றும் புரியவில்லை ஆனால் சந்தோஷமாக இருந்தது…கையை ஆட்டி ஆட்டி சைகைகளுடன் ஏதோ இங்லீஷில் பேசியது. ஏதோ கதை போல….. முடிந்தவுடன் மீண்டும் கைதட்டல்… அடுத்து தோட்டக்கார முனியனின் மகன்.. கைதட்டல்… அடுத்து… என்று இங்லீஷில் பேச… அங்கிருந்த சொற்ப அம்மா அப்பாக்கள் ஒன்றும் புரியாமலே இரசித்துக் கொண்டிருந்தார்கள் ஆனந்த கண்ணீருடன்.
பி.கு: சென்ற வருடம் கமலாலயம் என்ற அமைப்பில் குழந்தைகளுக்கு கணினி கற்றுத்தர ஞாயிற்று கிழமைகள் செல்வதுண்டு. அங்கு பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் குடும்பத்து குழந்தைகளுக்கு மாலை பொழுதுகளில் இங்கிலீஷ், கணக்கு என்று பாடங்களுடன், புகைப்படம், கராத்தே , கணினி என்று இன்னும் சில கலைகளும் இலவசமாகக் கற்றுக் கொடுத்தனர். ஆங்கிலம் என்றாலே மிரண்ட குழந்தைகள், அந்த பயிற்சிகளால், அவர்களது ஆண்டு விழாவில் ஆங்கில நாடகம், பேச்சு என்று நிகழ்ச்சிகள் தந்தனர். அதன் அடிப்படையில் உருவான கதை .
அதீதம் செப்டம்பர் 25 இதழில் வெளியாகி உள்ள கதை.. சுட்டி இங்லீஷ் விங்லீஷ்