என் மேகம் ???

Wednesday, April 29, 2009

பயம்

"பே" என்ற சத்தத்தில்
திடுக்கிட்டு திரும்பினேன்
பயந்தது நான் மட்டுமே
கலகலவென்று அருகில்
சிரித்தது மழலை...

முன்னொரு பொழுதில்
நானும் இருந்திருக்கலாம்
பயம் அறியாமல் சிரித்தபடி...

தனிமையின் துணையில்
அடிவயிற்றில் சுருள்கிறது
ஆளில்லா இடத்தில்
நெஞ்சில் மிதிக்கிறது
அரவமில்லா பொழுதில்
மூச்சை அடைக்கிறது

எப்பொழுது என்னுள்
நுழைந்தது என்று தெரியவில்லை
ஆனால் எப்படியோ
என்னுடன் இருக்கிறது

தனிமையான நாளில்
இருளின் அடர்த்தியில்
நிசப்தம் நுழையும் பொழுது
என்னுள் படர்கிறது

வெளிச்சத்தில் வந்து
கூட்டத்துடன் கலந்தேன்
யாரும் கவனிக்கவில்லை என
என்னுள் மீண்டும் எழுந்தது

இப்பொழுது எல்லோரும்
என்னைப் பார்க்கிறார்கள்
என்று மீண்டும்
என்னுள் துளிர்க்கின்றது

எப்பொழுதும் இல்லாவிடினும்
அவ்வபொழுது வந்து
என்னுடன் எப்பொழுதும்
இருக்கிறது ...

பயமுறுத்தினாலும் சிரிக்கும்
மழலையைக் கண்டு யோசிக்கிறேன்
எப்போழுது என்னுள்
நுழைந்திருக்கும் என்று...

Monday, April 20, 2009

மீண்டு வரட்டும் உயிரினங்கள்!!

கா கா என்றே கரைந்திடும் காகம் !!
பக் பக் என்றே அழைத்திடும் மாடப்புறா!!
கண்ணே மணியே காண்பாய் இவற்றை
கவளச் சோற்றினை வாயில் வாங்குவாய்!!!

பரபரவென்ற நகர வாழ்வில்..

கீச் கீச் என்றே அரிசி கொத்தும்
சிட்டுக்குருவி காண்பதில்லை
கீ கீ என்றே பழங்கள் தின்ன
பறக்கும் கிளிக்கூட்டம் தெரிவதில்லை

மருண்ட பார்வையுடன் கழுத்தை சாய்த்து
அழகாய் மைனா பார்ப்பதில்லை
குப்பை கிளறி குஞ்சுகளுடன்
கோழியும் சேவலும் உலவுவதில்லை

கோடை வெயிலுக்கு இதமாகக்
கூவும் கருங்குயிலும் கேட்பதில்லை
உயரே வானில் வட்டமிடும்
பருந்தும் இப்பொழுது பறப்பதில்லை

தோகையுள்ள காகம் போல் இருக்கும்
செம்போத்தைக் கண்டால் கூறும்
"சிவ சிவ" இப்பொழுது கூறுவதில்லை

கழுத்தில் வெண்மை தெரிய
வட்டமிடும் கருடனைக் கண்டு
"கிருஷ்ண கிருஷ்ண" என்றும் சொல்வதில்லை

பொதி சுமந்தும் உதைத்தும் கத்தும்
கழுதைகள் கண்ணில் படுவதில்லை
ஐந்தாறு குட்டிகளுடன் சாக்கடையில் புரளும்
கரும்பன்றிக் கூட்டம் தென்படுவதில்லை

நீர் விடுத்து பாலருந்தும் அன்னம்
கதைகளில் மட்டும் நான் கேட்டது போல்
நான் உணவுண்ண அம்மா காட்டிய
உயிரினங்களைப் பற்றி உனக்கு உரைக்கிறேன்!!!

உன் காலம் வரும் பொழுதேனும்
பூமியின் பசுமை காத்து...
மீண்டு வரட்டும் உயிரினங்கள்!!
அதுவரை காகமும் புறாவும் கண்டு
உணவு கொள்வாய் கண்மணியே!!!

சின்ன சின்ன தருணங்கள்

பெண்கள் இருவரும் வளர்கிறார்கள் என்று அவர்களது வார்த்தைஜாலம் சொல்கிறது. அவர்களது அலுப்பு, நம்பிக்கை, உற்சாகம் அனபை வெளிப்படுத்தும் விதம், சில சின்ன சின்ன புத்திசாலித்தனங்கள் என்று எல்லாமே பூரிக்க வைக்கின்றன.

சின்ன சின்ன புத்திசாலித்தனம்?
குட்டிப்பெண் விலங்குகளைக் கண்டுபிடித்து பொருத்தும் விளையாட்டு விளையாடினாள். பொருத்தியதும் தனியாக வைக்கச் சொன்னேன். முதலில் பொருத்தி பொருத்தி தனியாக அடுக்கியவள், பின்பு அந்த அடுக்கியதன் மீதே வைத்து பொருத்த ஆரம்ப்பித்தாள்.

சின்ன சின்ன குறும்புகள்?
என்னை மறைந்து வந்து அடிக்கிறாள். "யாருடா அடிச்சது" என்றால், "அம்மா நீயே அடிச்சுகிட்ட தெரியலையா?" என்கிறாள்.

சின்ன சின்ன அலுப்புகள்?
லொக் லொக் என்று இருமிக் கொண்டிருந்தாள் குட்டிப்பெண்
நான்: "கஷாயம் போட்டு தரவா?"
கு.பெ: வேண்டாம்
நான்:வெந்நீர் வச்சு தரவா?
கு.பெ:வேண்டாம்
நான்:விக்ஸ் போட்டு விடவா?
கு.பெ:பேசாமல் அந்த பாயாசத்தையே தா!!!

சின்ன சின்ன நம்பிக்கைகள்?
தலைவலித்தது. ஆனாலும் டி.வி சத்தம் குறையவில்லை.
நீங்கள் எல்லாம் என்னை பார்த்துக்கவே மாட்டீங்க என்றேன். உடனே குட்டிப் பெண் "நான் உன்னை பார்த்துக்குவேன் அம்மா" என்றாள். "சும்மா சொல்லாதே" என்றேன். "நம்பிக்கை வைம்மா. ஒரு முறை முயற்சி பண்ணி பாரேன். அப்புறம் சொல்லு" என்றாள். சுட்டி டி.வி அவளது நம்பிக்கையை நல்ல ரேட்டிங்கில் வைத்துள்ளது.

சின்ன சின்ன கலாய்ப்புகள்?
கைகால் எல்லாம் வலிக்குது, எனக்காக கொஞ்சம் எக்ஸர்சைஸ் பண்ணேன் என்றவுடன் குட்டிப்பெண் தீவிரமாக எக்ஸர்சைஸ் செய்தாள். அம்மா இது உனக்கு ஓவரா இல்லை என்று கலாய்க்கிறாள் பெரியவள்

நாங்க ஆபீஸ்ல ஒரு "வாக்கிங் க்ளப்" ஆரம்பிச்சிருக்கோம் என்றால், பெரியவள் "அம்மா, தப்பா சொல்ற.. உனக்கு டாக்கிங் க்ளப் தான் ஒத்து வரும்" என்கிறாள்.

குழந்தைகளிடையே காணும் அன்புத்தருணங்கள் மனதை நனைக்கின்றன

இப்பொழுது நந்து வளர வளர சீண்டல் வளர்கிறது; யாழ் வளர வளர அடம் அதிகமாகிறது. சித்திரை பிறக்க கண்ணாடி, காசு, பழம் எல்லாம் வைத்திருந்தேன். காலையில் கண்ணை மூடி அழைத்துச் சென்று காட்டுவதாகக் கூறினேன். அதன்படி நந்துவுக்கு செய்தேன். சற்று நேரத்தில் யாழ் விழிக்க, "யாழ் கண் திறக்காதே" என்று கூறி நந்து அவள் கண்ணை மூடி அழைத்துச் சென்றது அழகு. இந்த அன்பிற்காகவே வருடா வருடம் வைக்க வேண்டும் சித்திரை கனி.

இந்த அன்பு கொஞ்ச நேரம் தான். மீண்டும் சண்டை. இருவரையும் ஒரு அறையுள் அனுப்பிவிட்டு, சமாதானம் ஆகி இருவரும் சேர்ந்து வெளியே வந்தால் ஒழிய என்னுடன் பேச வேண்டாம் என்றேன். இரண்டு நிமிடம் கூட இல்லை இரண்டு பேரும் வெளியே வந்து "வெவ் வெவ் வெவ்.." என்று முகம் காட்டிவிட்டு கூடி விளையாடினார்கள். அழகு. மீண்டும் சண்டை என்பது வேறு விஷயம். சண்டையிடும் பொழுது விலக்கி வைக்காது சேர்த்து வைத்து சேர்ந்து வந்தால் தான் உண்டு என்ற முறையே அவர்களிடையே அன்பை வளர்ப்பதை உணர முடிகிறது.

Thursday, April 16, 2009

வாழ்க்கை

கவலைப்படும் காலம் போய்
பேஜாரான பொழுது புரிந்தது
சென்னை வாழ்க்கையின் ஆக்ரமிப்பு

*****************

பட்டாணி உரிக்கும் பொழுது
நெளிகின்ற புழுவை
அம்மாவை நினைத்துக் கொண்டே
தோலோடு தள்ளும் பொழுது
ஒலிக்கிறது மகளின் குரல்
இதற்கு தான் நான்
பட்டாணி உரிப்பதில்லை என்று
வாழ்க்கை சக்கரம் தான்...
நேற்று நான் இருந்த இடத்தில்
இன்று என் மகள்

****************

சக்கரம் போல் தானோ வாழ்க்கை?
ஓயாது பாரமிழுத்து
பழுதானால் ஒட்ட வைத்து
இற்றுப் போகும் வரை
ஓடிக் கொண்டிருக்கும்
இற்றுப் போனால்
மற்றொன்று பாரமிழுக்க
ஒதுங்கிக் கொள்ளும்

****************
ஏசியின் குளிர்ச்சியில்
பழகிக்போன சில மனங்களுக்கு
வெயிலில் துவளும் கால்கள்
கண்ணுக்குத் தெரிவதில்லை

சில நேரங்களில்...
வெயிலில் துவண்ட கால்கள்தான்
ஏசிக்கு செல்லும்
ஊக்கம் கொடுத்தது என்பதும்
சிலருக்குத் தெரிவதில்லை

*******************

Tuesday, April 14, 2009

சென்னை டூ குருவாயூர் (3)

சென்னை டூ குருவாயூர் (1)

சென்னை டூ குருவாயூர் (2)

மாலை கொச்சினிலிருந்து வேன் பிடித்து குருவாயூருக்கு வந்து சேர்ந்தோம். இரவு 9:30க்கு மேல கடையெல்லாம் திறந்து இருக்காதுங்கறதால உடனடியா சாப்பாட்டை முடிச்சிட்டு தரிசனம் பத்தி யோசிச்சோம். பத்து வருஷம் முன்னாடி நான் நந்தினிக்கு சோறுட்டப் போன பொழுது அவ்வளவு கூட்டம் இருந்ததில்லை. நிதானமா சோறூட்டி தரிசனம் முடிச்சு மழம்புலா எல்லாம் போனோம். அப்ப நான் இருந்தது கோவையில். நாலு வருஷம் முன்னாடி யாழினிக்கு சோறுட்டப் போன பொழுது , நல்ல கூட்டம், அதனால் சோறூட்டிட்டு வெளியில் இருந்தே குருவாயூரப்பனை வணங்கி வந்து விட்டோம்.

இப்பவும் அப்படி தான் கூட்டம் இருக்கும்னு சொன்னாங்க. 7 - 8:30 மற்றும் 11 - 12:30 மணிக்கு எல்லாம் பூஜை நடக்கும் பொழுது வரிசை நகராது. எனவே அதைப் பொறுத்து தரிசனம் ப்ளான் பண்ணனும் என்றார்கள். மேலும் 1:00 முதல் 4:00 மணி வரை நடை சாற்றி விடுவார்களாம். காலையில் 3:00 மணிக்கு நிர்மால்ய தரிசனம் (இறைவன் முந்திய தின அலங்காரத்தோடு இருப்பார். தேவர்கள் இரவில் வந்து பூஜித்து சென்றிருப்பர் என்பதால், அவர்கள் பூஜித்தவுடன் அவரை தரிசிப்பது மிக நன்று என்பது நம்பிக்கை). அதற்கு செல்ல என் அம்மா, என் தம்பி மனைவியின் பெற்றோர் மட்டும் தயாராகினர். விழித்தால் நானும் வருகிறேன் என்று கூறினேன். மற்றவர்கள் மறுநாள் சோறூட்டுவதைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம் என்று எண்ணிணோம். இரண்டு கைப்பிள்ளைகளுடன் 8:30க்குள் கோயில் செல்ல தயாராவதென முடிவு செய்தோம்.

காலை 2 மணிக்கு எல்லாம் எழுந்து கோயில் வாசலுக்கு 2:30 மணிக்குச் சென்ற பின் தான் கவனித்தேன் நான் கண்ணாடி அணியவில்லை, சுடிதார் அணிந்திருந்தேன். சரி குருவாயூரப்பன் நிஜக் கண்களில் தரிசிக்க சொல்கிறார் என்று சென்றாலும் , "பாண்ட், சட்டை, சுடிதார் அணிந்தவர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று நோட்டீஸ். அப்படியே மிரண்டு விசாரித்தால் சுடிதாருக்கு விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது என்றார்கள். என்றாலும் கொஞ்சம் பதற்றத்துடன் நான் வரிசையில் சுடிதார்களைத் தேடி ஒன்றிரண்டு கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஆண்கள் வேட்டி அணிந்து சட்டை அணியாது செல்ல வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார் அல்லது பாவாடை சட்டை அணிந்திருக்க வேண்டும்.

இந்த அதிகாலை தரிசனத்துக்கு மட்டும் 2 வரிசை, பெண்கள் மட்டும் என்று ஒரு வரிசை , கலந்து நின்று ஒரு வரிசை. இந்த பெண்கள் வரிசை வேகமாக நகரும் என்று சொல்லப்பட்டதால் நான், என் தாயார், அத்தை அந்த வரிசையிலும் மாமா இன்னொரு வரிசையிலும் நின்றோம். எங்கள் வரிசை கட கட என வரிசை நகர்ந்து 3:30 தரிசனம் கிடைத்த பொழுது அலங்காரம் கலைத்து அபிஷேகம் ஆரம்பித்து இருந்தது. ஒரு நொடி தான் அந்த இருளில் எனது கண்ணாடி இல்லாத கண்களுக்கு சுமாராக தென்பட்ட கடவுளை தரிசித்து வெளியேறினேன்.

குருவும் வாயுவும் சேர்ந்து விஷ்ணுவுக்கு எடுத்த கோயிலாதலால், குருவாயூரப்பன் என்ற பெயர். குருவாயூர் சென்றவர்கள் மம்மியூர் சிவனையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பிரகாரத்தின் ஓரிடத்தில் அங்கிருந்தே சிவனை வழிபடலாம் என்று இருந்தது. அங்கிருந்து சிவனை வணங்கினோம்.

சந்நிதிக்கு வெளியே எல்லாவற்றுக்கும் பெரிய வரிசை... பிரசசாத டிக்கட் வாங்க, பிரசாதம் வாங்க என்று... பிரசாத டிக்கட்டும், அன்ன பிரசன்ன டிக்கட்டும் வாங்கி வெளியே வந்தால், மாமா இன்னும் வரிசையில் நிற்கிறார். நாங்கள் ரூமுக்கு திரும்பினோம். மாமா திரும்பி வரும் பொழுது மணி 5:15. 5:30க்கு என் கணவர் தரிசனம் காண போய் 8:30க்கு திரும்பினார்.

சாமி தரிசனத்திற்கு தான் பெரிய வரிசை. கோயிலுக்குள் நுழைந்து பிரசாதம் வாங்க, துலாபரம் கொடுக்க, சோறூட்ட வரிசை சிறிதாகத்தான் இருந்தது. அந்த வரிசையில் சென்று இரு குழந்தைகளுக்கு (தம்பி மகன் ஒன்று, தம்பி மனைவியின் அண்ணன் மகன் ஒன்று) சோறூட்டினோம். உள்ளே கேமரா கொண்டு செல்ல முடியாது. ஆனால் அங்கேயே டிஜிடல் கேமராவில் எடுத்து முகவரி கொடுத்தால் அனுப்பி வைக்கிறார்கள். குழந்தைகளுக்கு கோயிலுக்கு வரும் வழியில் சிறிய பட்டு துண்டு வாங்கியிருந்தோம். அதை உடுத்தி, தந்தை மடியில் வைத்து இலையில் பரிமாறப்பட்ட இனிப்பு, அப்பளம், பழம், சோறு என எல்லாவற்றிலும் ஒரு துளி வைக்க, சுவைத்து உண்டனர் கிள்ளைகள். பின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அம்மாக்கள் மட்டும் அன்னப்ரசன்னத்திற்கான டிக்கெட்டில் தரிசனம் முடித்து வந்தனர். அவர்களுக்கு 15 நிமிடத்தில் தரிசனம் முடிந்தது. மற்றவரெல்லாம் சந்நிதி முன் வணங்கி தலைகளுக்கு நடுவே தெரிந்த இறைவனை கொஞ்சம் தரிசித்துவிட்டு வந்தோம். ஏகாதிசியிலும் பெளர்ணமியிலும் அன்னபிரசன்னம் இருக்காதாம்.

கடையில் புகுந்து கேரளா ஸ்டைலில் சந்தன கலரில் குட்டீஸ்க்கு உடை வாங்கினோம். அடுத்து செண்றது "புன்னத்தூர் கோட்டா" எனப்படும் யானைகளின் சரணாலயம்(?). கோயில் அருகே இருந்து இங்கு செல்ல ஆட்டோவில் 35 ரூ. ஆங்காங்கே யானைகளைக் கட்டி வைத்திருந்தார்கள். பல யானைகளுக்கு வால் நுனி மொன்னையாகவோ முடியின்றியோ இருந்தது. யானை முடி வாங்குவது சட்டப்படி குற்றம் என்று அறிவிப்பு இருந்தது. யானைகள் வெயிலுக்கு குளிர்ச்சியாக களிமண்ணை வாரிப் போட்டுக்கொண்டு தண்ணியையும் ஊற்றிக் கொண்டிருந்தன. அங்கிருந்த ஒருவர் கிட்டதட்ட 64 யானைகள் இருப்பதாகக் கூறினார். ஒரு யானை கூன் போட்டு மிகத் தள்ளாட்டமாகத் தெரிந்தது. அதற்கு 70 வயது என்றார். 11 மாதக் குட்டி தான் சிறிய யானை என்றார். அப்படியே சைக்கிள் கேப்பில் யானை முடி வேண்டுமா என்றார். வாலின்றி களையிழந்த யானையைப் பார்த்தபடி நகர்ந்தோம். சில யானைகள் ஆடிக் கொண்டே இருந்தன. சில யானைகள் காதருகே கம்பு வத்திருந்தார்கள். அது அசையாமல் நின்றது. கம்பு இருந்தால் ஆள் இருப்பதாக எண்ணிக் கொள்ளுமாம். மேலும் ஒரு யானைக்கு இரு பாகன்கள் இருப்பராம். யானை தன் பாகனுக்கு மட்டுமே அடிபணியுமாம். அந்த யானைகள் (அவ்வள்வு பெரிய உருவம்) கட்டி இருப்பதைக் காணச் சற்று வருத்தமாகவே இருந்தது. ஆனால் குழந்தைகள் யானைகளின் சேட்டைகளை இரசித்தார்கள்.

வாலில்லாமல் ஒரு யானை

ஆடிக் கொண்டே ஒரு யானை


கம்பில் அடங்கிய ஒரு யானை


சோம்பல் முறிக்கும் ஒரு யானை

களிமண் குளியலில் ஒரு யானைசில யானைகளின் புகைப்படங்கள்

பிறகு வேன் பிடித்து திருச்சூர் சென்று சென்னை எக்ஸ்பிரஸில் சென்னை திரும்பி பயணத்தை முடித்துக் கொண்டோம்.

சென்னை டூ குருவாயூர் (2)

தண்ணீர் விளையாட்டுக்கள் வீகாலேண்ட்ல கலக்கலா இருக்கும்னு சொன்னதால் எங்கள் பெரும்பான்மை நேரம் தண்ணீர் தான். தண்ணியை நல்ல பராமரிச்சு வச்சிருக்காங்க. நேரம் ஆனதால் ஒரு வழியா தண்ணியை விட்டு வெளியேறினோம். இரவு உணவுக்கு "பத்திரி" அப்படினு அரிசி மாவுல மெல்லிசா சப்பாத்தி மாதிரி பண்ணி ஒரு ஐட்டம், நல்லா இருந்தது. அலைச்சலும் உண்ட களைப்பும் தூக்கத்தை வாவானு சொல்லிடுச்சு.

மறுநாள் கொச்சின் படகு பயணம் போக முடிவு பண்ணினோம். நிறைய பேர் போனதால் ஒரு படகை ஒரு மணி நேர வாடகைக்கு அமர்த்தி ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தோம். பாட்டெல்லாம் போட்டதால் குட்டீஸ் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

நாங்க போன படகு

அன்னம் போல ஒரு படகு (பின்னாடி கொச்சின் ஷிப் யார்டு)


கப்பல்ல கன்வேயர் வழியாக சரக்கு ஏற்றுகிறார்கள்

கப்பல்ல ப்ளூ கலர் கண்டய்னரை லோட் பண்றாங்க (மேல ஒரு கண்ணாடி கூண்டுல ஆபரேட்டர் போல..)


கப்பல்ல இந்த குழாய் வழியாக தான் எண்ணெய் ஏற்றுவாங்களாம்...படகில் இருந்து தெரிந்த சில கட்டடங்கள்


போல்காட்டி பாலஸ். இது டச்காரங்க 1774-ல் கட்டின அரண்மனை, இப்போ KTDC ஹெரிடேஜ் ரிசார்ட்டாம்.


கரையோரமா... ஏசியோட போல்காட்டி பாலஸ்ல ஒரு காட்டேஜ்


அடுத்த பதிவுல குருவாயூர் விசிட்...

Monday, April 13, 2009

சென்னை டூ குருவாயூர் (1)

யுகாதி ஒட்டி லீவு இருந்தததால தம்பி பையனுக்கு குருவாயூரில் சோறு ஊட்டறதுனு முடிவாச்சு. கொச்சின்ல உறவினர் இருக்கிறதால் ஒரு மினி டூர் ப்ரோக்ராம் போட்டோம். இந்த மாதிரி டூரெல்லாம் ஒரு கும்பலா போனால் தான் கலகலப்பே. கலகலப்புக்கு குறைச்சல் இல்லாமல் கைக்குழந்தையில் இருந்து கொள்ளுப்பாட்டி வரை எல்லா வயதிலேயும் மக்களோட ஆலப்பே எக்ஸ்ப்ரஸ்ல ஏறினோம்.

ட்ரய்ன்ல போறதுல என்ன பிரச்னைனா, எல்லாரும் கீழ் பெர்த் தேவைப்படற ஆளாத்தான் இருப்பாங்க. இப்பவும் அப்படிதான், கைக்குழந்தையோட ரெண்டு பேர், மூட்டு வலியோட மூணு பேரு, பாட்டி ஒருத்தங்க, குட்டீஸ் ரெண்டு பேரு; ஆனாலும் அப்படி இப்படி சமாளிச்சிட்டோம். நைட் திடீர்னு ஒரு குழந்தை அழுது. என்னடானு பார்த்தால் என் பொண்ணு மேல் பெர்த்ல படுத்திருந்தவள் அதைப் பிடிச்சுட்டு தொங்கிட்டு இருக்காள். அப்படியே தூக்கி திரும்ப மேல் பெர்த்ல படுக்க போட்டோம்.அவள் தூக்கத்திலேயே இந்த விஷயம் நடந்ததால விழுந்து எந்தரிச்சு ஏறப்பார்த்து தொங்கினாளா இல்லை விழும்போதே பிடிச்சிக்கிட்டாளானு கடைசி வரைக்கும் புதிராவே போய்டுச்சு. ரெண்டு பக்கமும் கம்பி இருக்கிறதால் கீழ விழ மாட்டானு மேல் பெர்த்ல போட்டால் இந்த கதி. (வரும்பொழுது ஒரு வேட்டியை குறுக்கே கட்டிட்டோம்)

தூங்கி எந்தரிச்சு பார்த்தால் சிலுசிலுனு காத்து கேரளாவில இருக்கீங்கனு சொல்லுது.கொஞ்ச நேரத்தில எர்ணாகுளம் வந்திடும்னாங்க. அங்க இருந்து கொச்சின் எவ்ளோ தூரம்னு கேட்டேன். ஒரு மாதிரி பார்த்துட்டு ரெண்டும் ஒண்ணுதான்னாங்க. (நான் இஸ்டரி ஜாக்ரபி எல்லாம் வீக்கு..). ஒரு வழியா எர்ணாகுளம்ல இறங்கினோம். கேரளானா பச்சை பசேல்னு எதிர்பார்த்தால், அங்கேயும் இண்டு இடுக்கு விடாமல் கடையும் வீடுமாத்தான் தெரிஞ்சுது. ஆனா சில இடங்கள்ல ஒவ்வொரு வீடும் ஒரு கவிதையா தனித்துவத்தோட ஓவியம் போல அழகா தெரிஞ்சுது.

சில தென்னை மரங்கள்ல தென்னை மட்டையை வச்சே ஏதோ செடியை மரத்தோட சேர்த்து கட்டி இருந்தாங்க. இங்கே ஆர்கிட் பூக்கள் நல்லா வருமாம். அதனால் தென்னை மரத்தில் எல்லாம் இந்த ஆர்க்கிட் கொடியை படர விடறாங்க அழகுக்காக. அது தென்னை மரத்திலேயே வேர் பிடிச்சு படர்ந்துக்குமாம்.

வீகாலேண்ட் போகும் முன்னாடி எங்கேயாவது பக்கத்தில சும்மா போகலாம்னு பார்த்தோம். அங்கே இருந்த நல்ல விஷயங்கள்:

1. பேரம் கிடையாது. ஆட்டோ என்றாலும் சரி கடை என்றாலும் சரி எல்லாரும் ஒரே விலை, சரியான விலை தான் சொல்லுவார்களாம்.

2. பக்கத்தில் சுய சேவை கடைக்குச் சென்றிருந்தோம். கையில் பையில்லை, அங்கும் ப்ளாஸ்டிக் பையில்லை, ஒத்த ரூபா கொடுத்தால் "eco friendly reusable bag" என்று மெல்லிய துணிப்பை போன்ற பை கொடுக்கிறார்கள். நல்ல பழக்கம். எல்லோரும் இதைப் பின் பற்றினால் ப்ளஸ்டிக் பைகள் சில நாட்களில் காணாமல் போகும்.
அப்புறம் வீகாலேண்ட் போனோம். வாங்கிற காசுக்கு வஞ்சனை இல்லாம நிறைய ரைட்ஸ் இருந்தது. பாதிநாள் குட்டீஸை வச்சு ரங்க ராட்டினம் முடிஞ்ச வரை சுத்திட்டு கடைசில தண்ணில போய் விழுந்தோம். "வேவ் பூல்" சூப்பரா இருந்தது. அது போக இரண்டு மூணு நீச்சல் குளம் இருந்தது. எல்லாம் நடக்கிற உயரத்தில தண்ணி. அதனால் தைரியமா குட்டீஸை உள்ளே இறக்கி விட்டுட்டு வேடிக்கை பார்த்தோம். கொஞ்ச நேரத்தில சறுக்குறது, குழாய்ல சறுக்கிறது வளைஞ்சு வளைஞ்சு சறுக்கிறதுனு குட்டீஸ் கொளுத்தற வெயிலுக்கு தண்ணில வாழ்க்கையை எஞ்சாய் பண்ணாங்க.

நட்பு பாராட்டும் மீன்கள்


(பதிவு ரொம்ப பெரிசா ஆகுது. அதனால் மீதி அடுத்த பதிவில்...)

தொலைந்து போன கவிதைகள்

உண்ணும் பொழுதும்
உறங்கும் பொழுதும்

சிரிக்கும் பொழுதும்
சிந்திக்கும் பொழுதும்

சமைக்கும் பொழுதும்
துவைக்கும் பொழுதும்

வெளியில் சென்றாலும்
வீட்டில் இருந்தாலும்

விலகி நில் என்றாலும்
ஒட்டி நிற்கும் குழந்தை போல

என்னுடன் எப்பொழுதும்
இருக்கிறது ஏதேனும் ஒரு கவிதை

மனம் மூடிக் கிடந்ததால்
ஒவ்வொருமுறையும்...
தொலைந்து போனது

Thursday, April 9, 2009

பெண் என்றால்...

அலுவலகத் தோழிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவர்களைக் காணச் செல்ல பேசிக் கொண்டிருந்த பொழுது, ஒரு பெண் "ஹ்ம்.. ஆண்குழந்தை தானே!!" என்று அலுத்துக்கொண்டார். மற்றொருவர் "ஆ.. ஆண்குழந்தையா?" என்று அதிர்ச்சி அடைந்தார்.

எனக்கு இந்த ரியாஷன்ஸைப் பார்த்தால் ஊர்ப்பக்கம் இவை பெண்குழந்தைக்கு வந்திருக்கும் என்று தோன்றியது.

மாலை கணவருடன் பேசிக்கொண்டிருந்தேன். இம்முறை அவரது பிறந்த நாளுக்கு பெண்கள் இருவரும் பிறந்த நாள் வாழ்த்து எழுதி ஒரு வெண்பலகையைக் கொடுத்து இருந்தார்கள். அதைப் பார்த்த அவரது அலுவலக நண்பர், "உங்களுக்குப் பெண் குழந்தையா?" என்று கேட்டாராம். இவர், "ஆமாம் , எப்படி சொன்னீங்க?" என்றதற்கு "எனக்கு ஒரு பையன் இருக்கிறான் , பரிசெல்லாம் கொடுக்க மாட்டான் ", என்றாராம்.

சமீப காலங்களில் நிறைய பேர் பெண் குழந்தை வேண்டும் என்று விரும்புவதைக் காண முடிகிறது. பெண் என்றால் செலவு/சிரமம் என்ற எண்ணங்களை விட அன்பு/பாசம் என்ற எண்ணங்கள் ஊடுருவுவதைக் காண முடிகிறது.

எனக்கு பெண் சிசு கொலை பற்றியும் சமீபத்தில் அதைப் பற்றி நான் வாசித்து பதைத்த இராஜம் கிருஷ்ணன் மற்றும் வாஸந்தியின் நாவல்கள் (தலைப்பு மறந்துவிட்டது) நினைவுக்கு வந்தன.

மாற்றங்கள் எப்பொழுதும் உடனே வருவதில்லை. சின்ன சின்ன மாற்றங்கள் ஒரு நாள் நல்ல மாறுதலை ஏற்படுத்தி இருக்கும். இப்பொழுது நகர்ப்புறங்களில் பெண் குழந்தையைப் பற்றி உருவாகும் மாற்றம் விரைவில் கிராமப்புறங்களிலும் ஏற்படட்டும்.

கணங்களின் கனம்

இன்று மட்டும் வீட்டில் இரேன்
என்ற மகளின் கெஞ்சலும்
ஐ! இன்று நீ வீட்டிலா?
என்ற மகளின் குதூகலமும்
சொல்கிறது...
நான் இல்லாத
கணங்களின் கனத்தை!!!

என் கண்கள் வழியே
என் குடும்பத்தினர் தேவதைகள்
எனக்கு என் குடும்பமே சிறந்தது
என்ற மகளின் கவிதை
சொல்கிறது...
சேர்ந்து இருந்த
கணங்களின் கனத்தை!!!

Wednesday, April 8, 2009

குழந்தைகளை க்ளாஸுக்கு அனுப்பலாமா?

இது போன்ற கேள்விகளுக்கு ஆம்/இல்லை என்ற நேரடி பதில் கிடையாது என்பது எனது அனுபவ பாடம். இதற்கான பதில் குழந்தைகளின் விருப்பம் மற்றும் பெற்றோரின் புரிந்து கொள்ளுதலுடன் தொடர்புடையது.

குழந்தைகள் படிப்பைத் தவிர வேறு ஒன்றைத் தெரிந்து கொள்ளுதல் அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும் மற்றும் அவர்களுக்கு ஒரு வடிகாலாகக் கூட இருக்கலாம். என் கல்லூரி தோழிக்கு நடனம் விருப்பம். மகிழ்ச்சி என்றாலும் வேதனை என்றாலும் அவளுக்கு நடனம் ஒரு வடிகாலாக இருப்பதை கவனித்து நான் வியந்துள்ளேன். எனவே என் குழந்தைகளுக்கும் அது போன்ற ஒரு exposure தேவை என்று எண்ணிணேன்.

ஆனால் க்ளாஸ் எப்பொழுது அனுப்புவது ? எந்த க்ளாஸ் அனுப்புவது? முதலில் அவளுக்கு நடனத்தில் விருப்பம் உண்டு என்று நடனத்தில் சேர்த்தேன். முதலில் ஆசையாகச் சென்றவள், பின் மறுத்து விட்டாள். சரி என்று நிறுத்திவிட்டேன். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சேர்கிறேன் என்றாள் சேர்த்துவிட்டேன். இப்பொழுது நடனம், இசை, வரைதல் என அவளுக்கு விருப்பமானவற்றை அவளே கேட்டு கற்றுக் கொள்கிறாள். சில நேரங்களில் அவளே தன்னை நடனத்திலோ, இசையிலோ ஈடுபடுத்திக் கொள்வதைக் காண மகிழ்ச்சியாக இருக்கும். அவள் தோழியின் தாயாரும் இது போல், வரைதல் மட்டுமே அவளுக்குப் பிடிகிறதென மற்ற க்ளாஸ்களை எடுத்துவிட்டு வரைதலில் மட்டும் சேர்த்துள்ளார்.

இங்கு அவர்களின் விருப்பத்துடன் க்ளாஸில் சேர்ப்பதால் அவர்கள் அதை விருப்புடன் கற்றுக் கொள்கிறார்கள். மேலும் இதில் சிறக்க வேண்டும் என்ற அழுத்தம் இல்லாது, அவர்களது திறனுக்கு என்ற புரிந்து கொள்ளலுடன் பெற்றோர் அனுப்புவதால், பிரச்னைகள் இல்லை.

இதையே சிலர், "அவள் என்ன க்ளாஸ் போகிறாள்" என்று கேட்டு தம் குழந்தைகளிடம் திணிக்கும்பொழுது அழுத்தம் ஏற்பட்டு எதிர்ப்பு ஏற்படுகிறது. நாம் குழந்தைகளிடம் எதையும் எதிர்பார்க்காது அவர்கள் விருப்பம் அறிந்து அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காது மகிழ்ச்சி கொடுக்கும் என்ற புரிந்து கொள்ளலுடன் தாராளமாக க்ளாஸ் அனுப்பலாம் என்பது எனது கருத்து.

Sunday, April 5, 2009

குட்டி நிலவுக்குப் பிறந்தநாள்

பால் போன்றதொரு முழுநிலவு தினத்தில்
ஒரு நிலவில் ஒளிர்ந்த வானம்
இன்னொரு முழு நிலவாக
உன் வரவில் மேலும் ஒளிர்ந்தது...

டாம் ஒன்று தனியாக
என்ன செய்வதென்று திணறிய பொழுது
ஜெர்ரியாக நீ வர
வீடு மேலும் கலகலத்தது...

பொம்மையுடன் விளையாடி
களைத்த குட்டிப் பெண்ணுக்கு
குட்டித் தங்கையாக நீ வர
குடும்பம் முழுமை பெற்றது...

கண்ணே மணியே...
மாணிக்கமே மரகதமே...
என்று தொடங்கி
ஐஸ்க்ரீமே, ரசகுல்லாவே
என்று தொடர்ந்து
முடிவே இல்லை உனை
கொஞ்சும் வார்த்தைகளுக்கு...

எங்கள்...
குட்டி தேவதைக்கு
குட்டி நிலவுக்கு
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு
மலர்ந்து சிரிக்கும் வாடாமலருக்கு..
(யாழினிக்கு)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!

Saturday, April 4, 2009

சின்ன சின்ன ஆசை

பத்து மணி வரை
படுக்கையில் புரள ஆசை

சுவையான உணவு பரிமாறப்பட்டு
சுடச் சுட உண்ண ஆசை

நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி
நாளொன்று கழிக்க ஆசை

என் அம்மாவுக்கும் இருந்திருக்கலாம்
சின்ன சின்ன ஆசைகள்
இன்று வரை இயலவில்லை
இன்று...
என் குழந்தைகளுக்கும் அவள் அம்மா!!!

Thursday, April 2, 2009

அழியாத கோலங்கள் (தொடர் பதிவு)

அன்புத் தோழி கவிதாவுக்கு,
நலம். நலமறிய ஆவல். எப்படி இருக்கிறாய் ? உன்னை நினைத்தாலே கலகல என்ற சிரிப்பொலி மனதில் சங்கீதமாக ஒலிக்கிறது. கடைசியாக நாம் சந்தித்தது என் திருமணம் நிச்சயமான சேதியுடன். அமெரிக்காவில் இருந்து உன் வீட்டிற்கு செல்லும் வழியில் சென்னையில் ஒரு பொழுது மட்டுமே பேச முடிந்த பொழுது கூட என்னவரைப் பற்றி கேட்டு என்னை சிரிக்க வைத்துவிட்டு சென்றவள் தான்... அதன் பின் உன்னைப் பற்றி தகவல் பெற முடியவில்லை.

உனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கலாம் என்று அறிகிறேன். ஒரு குழந்தை தானா? எனக்கு கண்ணின் மணி போன்ற இரு பெண்கள். நண்பர்கள் எல்லோருக்கும் உன்னைத் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று வருத்தம் இருக்கிறது. தினம் மின்னஞ்சலுடன் விளையாடும் துறையில் இருந்து கொண்டு, தகவல் தொடர்பில் சுருங்கிய உலகத்தில், தொடர்பின்றி இருப்பது வேடிக்கையாக இல்லை... வாழ்க்கையே வேடிக்கையாகத் தான் உள்ளது. ஆனால் நட்பு என்பதே இதமான உணர்வு. எவ்வளவு நாட்கள் கழிந்தாலும் மீண்டும் சந்திக்கும் பொழுது மீண்டும் அதே உலகில் அதே உணர்வுடன் நுழைகிறோம்.

இன்று வீடு, அலுவலகம் என்று இரட்டைக் குதிரை சவாரியில் , நான் செய்யும் சர்க்கஸ் வேலைகளை நினைத்தால், முதன் முதலில் இருவருக்கும் அறிமுகமில்லா சென்னை மாநகரில் வேலை நிமித்தம் அறிமுகமாகி மகளிர் விடுதியில் அறைத் தோழிகளாக இருந்த நாளில் இருந்த நானா என்ற ஆச்சர்யம் எழாமல் இல்லை.

நினைத்துப் பார்க்கிறேன் நம் விடுதி நாட்களை. கலீர் என்ற சிரிப்போடு நாம் வலம் வருகையில் திட்டி புகார் செய்த பெண்கள் பின் நம் பக்கம் சேர்ந்ததும், மற்றவரிடம் திட்டு வாங்கியதும், விடுதியில் உம்மென்று தனிமைச் சிறையில் இருந்த பெண்களும் நட்பானதும், நமக்கென ஒரு உலகம் விடுதியில் உருவானதும்...ம்.. நேற்று வரை குழந்தைகள் உலகத்தில் தான் என் முழு நேரமும்... குழந்தைகள் சற்றே வளர்ந்து அவர்கள் உலகை உருவாக்கும் இந்த நாட்களில் தான் என்னால் என் உலகில் உலவ சற்று நேரம் கிடைக்கிறது.

ஒரு நாள் சட்டென்று நினைத்துக் கொண்டு திருப்பதி சென்றோம் நினைவிருக்கிறதா? இப்பொழுது அலுவலகம் கிளம்புவது கூட சட்டென்று முடிவதில்லை... பால் ஃப்ரிஜில் வைத்தாச்சா? குழந்தைகளுக்கு எல்லாம் தயாரா? இன்னும் என்னென்ன வேண்டும் என்ற பட்டியலை சரி பார்த்து... சில சமயங்களில் அலுத்தாலும் சொந்தங்களின் அரவணைப்பில் அலுப்பு மறைகிறது.

விடுதியில் ஒரு சிவராத்திரி விழித்திருந்து விடிய விடிய கதை பேசியதை மறக்க முடியுமா? இப்பொழுதெல்லாம் கிழமைகள் தெரிவது கூட பிள்ளைகள் பள்ளி செல்வதால் தான், இதில் சிவராத்திரியும் ஏகாதசியும் செய்திகளைப் பார்த்தால் தான் தெரிகிறது. கிரிக்கெட் பார்த்து செய்த ஆர்ப்பாட்டங்கள் கொஞ்சமா? காலை நாளிதழ் செய்திகள் சுடசுட படித்து விவாதிப்போமே? இன்று விளம்பரங்களில் வருவதால் டோனி பெயர் தெரிகிறது. பாகிஸ்தானில் எமர்ஜென்சி என்று ஒரு வாரம் கழித்து தெரிந்து கொள்கிறேன். எப்படி மாறினேன் என்று எனக்கு புரியவில்லை.

அலுவலகத்தில் இருந்து ஆற அமர நடந்து வந்து, சுட சுட இருக்கும் உணவை சாப்பிட்டு (அது சூடா இருந்தா தான் சுவை தெரியாது என்பது வேறு விஷயம்) கதை அடித்து விட்டு கனவுகளுடன் கண்ணுறங்குவோம். இன்று , மழலைகள் ஏங்கும் முன் பர பர என வீட்டிற்கு ஓடி, அவர்களுக்கு அமுதூட்டி, கதை கூறி உறங்க வைத்து, நாளை என்ன சமையல் என திட்டமிட்டு மறுநாள் விரைவில் எழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தூங்கினால் கனவுகளுக்கு கூட நேரமில்லை; என்றாலும் வாழ்வின் சுவைக்கு குறைவில்லை.

திருமணத்திற்கு முன் என் கண்களுக்குள் என்னவர் பற்றிய கனவுகள் விரிந்ததில்லை. மேற்படிப்பும், வேலையும் தான் கண்களுக்குள் இருந்தன. ஒரு மெல்லிய இசைக்கு மயங்குவது போல், இனிமையான தென்றலில் இலயிப்பது போல் குடும்பம் என்ற நூலில் கட்டுண்டேன். குடும்பம் என்ற மையப் புள்ளியில் தொடங்கி படிப்பு, வேலை என்று விரிந்த என் உலகம் மீண்டும் ஒரு குடும்பம் என்ற மையப் புள்ளியில் இலாவகமாக சுருங்கிய விந்தையை இன்னும் இரசிக்கிறேன்.


இராமாயணத்தின் மீதான பார்வை பத்து வயதில் ஒன்று, இருபது வயதில் ஒன்று என்பாய். நம் ஹாஸ்டலில் தன் கூந்தலை நேசித்த ஹேமாவை நினைவில் உள்ளதா? ஞாயிறு முழுதும் இடுப்பு வரை நீண்ட கூந்தலை சிடுக்கெடுக்கும் பொழுது கூட உதிராமல் இருக்க பாடுபடுவதை வியந்த நாம், திருமணமான ஒரு மாதத்தில் "என் கணவருக்கு பாப் தான் பிடிக்கும்" என்று ஒட்ட வெட்டிய பொழுது வியந்தோம். திருமணத்திற்குப் பின் முன்பின் தெரியாத வீடு என் வீடாகிப் போனபொழுது ஹேமா வியப்பாக இல்லை.

திருமணத்திற்கு முன் பெற்றோராலும் உடன்பிறந்தோராலும் நேசம் நம் மீது காட்டப்பட்டது. திருமணத்திற்குப் பின் நாம் அதை இன்னும் பலருக்குக் கொடுக்கிறோம். சிறகை விரித்து வானைச் சுற்ற ஆசைபட்ட நான் எங்கே... என்னைச் சுற்றி வட்டம் போட்டு சுற்றிக் கொண்டிருக்கும் நான் எங்கே... வருத்தம் இல்லை ஆனால் ஏக்கம் உண்டு... குழந்தைகளின் சிரிப்பில் அந்த ஏக்கமும் காணாமல் போய் விடுகிறது.

உன் பெண் எப்படி இருக்கிறாள்? உன்னைப் போல் கல கல என்று இருப்பாளா அல்லது உன்னவரைப் போல் அமைதியானவளா? என்ன பேசினாலும் முடிவில் குழந்தைகளிடம் தான் எண்ணம் விழுகிறது. வாழ்வின் மையமே இப்பொழுது வீடு என்னும் அன்புச் சிறைதான்.

வேலை விட்டு உன் கணவருடன் சேர நீ கிளம்பிய பொழுது , "மீண்டும் சந்திப்போமா" என்று புகைவண்டி நிலையத்தில் கண்ணீர் விட்ட மனநிலையில் தான் இன்றும் உன்னைத் தேடுகிறேன். மடல் எழுதிவிட்டேன், அனுப்ப முகவரி தான் இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றேனும் நாம் சந்திப்போம் என்று. அப்பொழுது திருமதி X, குழந்தைகளுக்கான தாய் அல்லது பேரக்குழந்தைகளின் பாட்டி என்ற அடையாளங்கள் இருந்தாலும் நாம் மீனு, கவிதாவுமாகவே உணர்வோம் இல்லையா?.

அன்புடன்,
மீனு

இந்த அருமையான தொடருக்கு அழைத்த "அமிர்தவர்ஷினி அம்மாவுக்கு" எனது நன்றிகள்.

இந்த தொடரைத் தொடர நான் அழைப்பது "சிறுமுயற்சி" முத்துலெட்சுமி-கயல்விழி"

மழலை சிரிப்பு

பொக்கை வாய்ப் புன்னகையில்
பொக்கே களை இழந்தது
உன் புன்னகை நிலவோ
அலை போல் பொங்குது மனம்
உன் புன்னகையின் மலர்ச்சியில்
வாடித் தெரிந்தன மலர்கள்
ஆதவனைத் தேடும் சூரியகாந்தி
இப்பொழுது உன்னைத் தேடுகிறது
உன் புன்னகையில் தான்
எனக்கு உலகம் ஒளிர்கிறது

உன் புன்னகையின் வாசம்
எவர் மனதினையும் மயக்கும்

எங்கு தேடியும் கிடைக்கவில்லை
உன் புன்னகை தந்த நிம்மதி