என் மேகம் ???

Thursday, August 27, 2009

இப்பொழுதெல்லாம்...

எப்பொழுது தொலைந்துபோனது
அந்த குழந்தைத் தனம்?
இளமை துள்ளலுடன்
நுழைந்த பொழுதோ?

எப்பொழுது தொலைந்துபோனது
அந்த இளமை துள்ளல்?
பொறுப்புகளின் சுமை
கூடிப் போனபொழுதோ?

என்றாலும் ...
இப்பொழுதெல்லாம்...

சொப்புகளில் உன்னுடன்
சமைக்கும்பொழுது
குழந்தைத்தனம் என்னுள் இருக்கிறது

என்னைப் பிடி என்று
நீ ஓடும்பொழுது
எனக்குள் இளமை துள்ளுகிறது

நன்றி மகளே!!!
குழந்தைத்தனமும் இளமையும்
தொலையவில்லை...
மறைந்துள்ளது என்று
எனக்கு காட்டிக் கொடுத்ததற்கு....

(ஒரு மொக்கைக்கும் தேடலுக்கும் வித்திட்ட முல்லைக்கு நன்றி :-))

Wednesday, August 26, 2009

And,Now...

முட்டையிடாத ஒரு நாட்டுக்கோழி ஒன்று, என்னிடம் இருந்தது. பள்ளிவிட்டு வந்ததும் அது குப்பை கிளறும் அழகை வேடிக்கை பார்ப்பேன்.

வெகுசுவாரசியமாக இருந்தது, வாழ்க்கை!

எப்படியோ தொலைந்துபோனது அந்த கோழி ஒருநாளில்...
அதனுடன் நான் சப்புக் கொட்டிக்கொண்டிருந்த நாட்டுக்கோழி பிரியாணியும்!

(டெடிக்கேட்டட் டு ஆச்சி)

Tuesday, August 25, 2009

திருநாள்

அன்பு மகளே!!!
சில வருடங்களாக
ஒவ்வொரு வருடமும்...

கிருஷ்ண ஜெயந்தி
வந்து கொண்டிருந்தது
உன் பாதம் பட்டபின் தான்
குழலோசை கேட்டது

விநாயகர் சதுர்த்தியில்
கொழுக்கட்டைகள் வெந்தன
நீ கேட்ட பொழுதுதான்
அவை பூரணமாயின

தீபாவளி வாணங்களுடன்
வெடித்துக் கொண்டிருந்தது
நீ புன்னகைத்த பொழுதுதான்
வாணங்களின் வண்ணங்கள்
எனக்குத் தெரிந்தன

நினைவுகளின் ஏக்கத்துடன்
வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருந்தது

என் பால்யத்தை நினைவுறுத்த..
அம்மா அப்பா அன்பை
மீண்டும் காணச் செய்ய...
என்று உன்னால் தான் இதோ!!!
வாழ்க்கையை வாழ்கிறேன்
ஒவ்வொரு நாளும் திருநாளாக...
கைகொட்டி சிரிக்கும் குழந்தையின் மனநிறைவோடு...

Tuesday, August 18, 2009

அப்பாவின் நிழற்படம்

அவன் கையில் இருந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தான். இனி அப்பாவைப் படத்தில் மட்டும் தான் காண முடியும் என்ற எண்ணம் மனதைக் கலக்கியது. ஊரில் வேலை பார்த்தபொழுதும் சரி, ஊரை விட்டு வந்த பொழுதும் சரி அவனுக்கு அவர் அமைதியாக உறுதுணையாக இருந்தார். நடுவில் வேலையை விட்டு ஏதோ படித்தபொழுதும் கேள்வி கேட்காது செலவுக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு நாள் ஏதோ துர்க்கனவு என்று அவனைக் காண பஸ்ஸில் வந்து விடியற்காலையில் நின்றது நினைவிற்கு வந்தது. "எனக்கு ஏன் அப்படி ஒன்றும் தோன்றவில்லை" என்ற கேள்வி உதித்தது. இது ஒரு துர்க்கனவாக மறைந்திடாதா என்ற ஏக்கம் சூழ்ந்தது. அம்மாவை நினைத்து மனதில் பாரம் ஏறியது.

படத்தில் அப்பாவின் முத்திரைச் சிரிப்பு பதிந்திருந்தது. "ராஜா" என்று அப்பா அழைப்பது போல் இருந்தது. நடராஜன் என்ற அவனை எல்லோரும் நட்டு, நட்ராஜ் , ராஜ் , ராஜா என்றும் அழைப்பார்கள். என்றாலும், அப்பா அழைக்கும் "ராஜா" எத்தனை தனித்தன்மையுடையது என்று இப்பொழுது தோன்றியது. அப்பாவின் அருகில் நிற்க வேண்டும் போல் இருந்தது.

"கவி, இந்த போட்டோவை பெரிசா பண்ணி ஹால்ல மாட்டப் போறேன்", என்றான். அவள் சரி என்பது போல் தலையை ஆட்டினாள். உடனே நெகடிவ்வை எடுத்துக் கொண்டு கிளம்பினான். குடும்பத்துடன் பல படங்கள் இருந்தாலும், பெரிது படுத்தும் அளவுக்கு எதுவும் தேறவில்லை. எதற்காகவோ எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் படம் மட்டும் தான் கொஞ்சம் பெரிது படுத்தும் அளவுக்கு இருந்தது.

கடையில் அவன் எதிர்பார்த்த அளவு பெரிது பண்ண ரிசொல்யூஷன் இல்லை என்றார்கள். அவர்கள் சொன்ன அளவிற்கு அடுத்த பெரிய அளவு சொன்னான். தேவைப்பட்டால் கிராபிக்ஸில் சில தொடுதல்கள் பண்ணுவதாகக் கூறினார்கள்.

மறு நாள் படத்தை வாங்கிப் பார்த்தபொழுது நன்றாக இருப்பது போல் தோன்றியது. ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது "ரிசொல்யூஷனுக்காக" சில இடங்களில் டச்சப் செய்திருந்தது தெரிந்தது. மீசை முழுமைபெற்று அப்பா சற்று இளமையாகத் தெரிந்தார்... அவனுக்கு வேறு யாரையோ பார்ப்பது போல் இருந்தது. "இல்லை கவி...அப்பாவைப் பார்க்கிற மாதிரி இல்ல... அந்த படத்தில் அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. நான் போய் மாத்திட்டு வந்திடறேன்", என்று கிளம்பிச் சென்றான்.

சற்று நேரம் கழித்து திரும்பி வந்தவனிடம், "என்ன மாத்த சொல்லிட்டீங்களா?" என்றாள். "ம்... அவர்கிட்ட சொன்னேன்; அந்த படம் அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. இது அப்படி இல்லை. அதே மாதிரி எந்த அளவுல நல்லா இருக்குமோ, அந்த அளவுக்கு பெரிசுப்படுத்த சொன்னேன். அவர் புரியுது தம்பினு சொல்லி நாளைக்கு வரச் சொன்னார்" என்ற பொழுது அவன் கண்கள் கலங்கி இருந்தன.

Monday, August 17, 2009

ஒரு திங்கட்கிழமை காலை

ஸ்வைன் ப்ளுவிற்க்காக ஒரு வாரம் பள்ளி விடுமுறை. விடுமுறையை மிக இனிமையாகக் கொண்டாடினார்கள் குழந்தைகள். எல்லா அன்புச் சகோதரிகளும் என்று எங்கள் வீட்டில் ஐந்து குழந்தைகள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள். நடுவில் எங்கள் டார்ச்சரையும் நாங்கள் விடவில்லை... நேரத்திற்கு எழுப்பி எப்பொழுதும் போல் பல் தேய்த்தல், குளியல், காலை உணவைக் கொடுத்துவிட்டு "என்னவோ செய்ங்க" என்று ஆபீஸ் கிளம்பினோம். முத்தாய்ப்பாக சனிக்கிழமை நந்தினியின் பிறந்த நாள் கொண்டாட்டம். எல்லா குட்டீஸும் எஞ்சாய் தான்....

நேற்றுவரை ஆறு மணிக்கு எழுந்தவர்களுக்கு இன்று தான் தூக்கம் தூக்கமாக வருகிறது. பள்ளிக்கு பிறந்த நாள் உடை போட வேண்டும் என்ற நினைவூட்டியவுடன் துள்ளி எழுந்து நந்தினி எட்டு மணி வேனுக்கு ஏழரைக்குத் தயார். யாழினி "எனக்கு தூக்கமா வருது... ராத்திரி சரியாவே தூங்கலை" என்ற வழக்கமான பள்ளி செல்லும் நாளுக்கான மனதுடன் விழித்தாள்.

எனக்கு மனதுள் ஸ்வைன் ப்ளூ உறுத்திக் கொண்டிருந்தது. அதுவும் சின்னப் பெண் கவனமாக இருக்க வேண்டும் என்று கவலை.

"டாய்லெட் எல்லாம் போனால் கையை நல்லா கழுவணும். சரியா"
"இது நாங்க எப்பவும் செய்யறது தான் அம்மா..."
"சாப்பிடறதுக்கு முன்னாடி நல்லா கை கழுவணும். சரியா?"
மெலிதான புன்னகை. "எப்பவும் அப்படி தான் அம்மா..."
"தும்மினால் கர்ச்சீப்ல நல்லா மூக்கையும் வாயையும் மூடிக்கணும்..."
இப்பொழுது மெலிதான புன்னகையும் குறும்பான பார்வையும்...
"மத்தவங்க தும்மினாலும், மூக்கை மூடிடு"
இப்பொழுதும் மெலிதான புன்னகையும் குறும்பான பார்வையும்...
"உன் மூக்கை, தும்மினவங்க மூக்கை இல்லை" என்ற அவள் தந்தையின் குறும்பில் வாய் விட்டு சிரித்தாள்.

ம்... மெலிதான கவலை இருக்கின்றது. ஆனால் , பாதுகாப்பு முறைகளைச் சொல்லித் தருவதைத் தவிர என்ன செய்ய இயலும்? இன்று என்று வானமும் பொத்துக் கொண்டு கொட்டுகிறது!!!

இறைவா.... ஸ்வைன் ப்ளூ மேலும் பரவாமல் பார்த்துக்கொள்!!!!

Saturday, August 15, 2009

எங்கள் இளவரசிக்குப் பிறந்தநாள்

இளம் ரோஜாவின் நிறத்தோடு, கண்விரிய நாவை நீட்டி மலர்ந்த கண்களுடன் பார்த்த குழந்தையை அரை மயக்கத்தில் கண்ட நினைவு இன்னும் பசுமையாக....வண்ணமயமான உலகில் நான் நுழைவதை உணர்த்தினாள் அந்த இளவரசி. சட்டென்று அவள் என் உலகமானாள்...இன்று விரிந்து கொண்டிருக்கிறது அவள் உலகம்... பரிவு காட்டும் தாயாக, கொஞ்சி விளையாடும் குழவியாக, ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கச் செய்யும் பொறுப்பான மகளாக, நற்குணங்களின் வெளிப்பாட்டில் போதிக்கும் ஆசானாக... பெண்ணே!!! என்ன தவம் செய்தேனோ உனை நான் ஈன்றிடவே!!!!

எங்கள் இளவரசி...
சின்ன சின்ன பூ பாதம் பதித்து
பூவுலகில் பதித்த நாள்

அவள்...
கண்மலர்ந்து எங்களை
முகம் மலர வைத்த நாள்

அவள்...
அழுகையின் ஒலியிலே எங்கள்
சிரிப்பொலி கேட்ட நாள்

வாழ்வின் அர்த்தங்களை
உணரத் தொடங்கிய நாள்
மீண்டும்...
அழகாக மலர்கிறது
உறவுகளின் , நட்புகளின்
வாழ்த்துக்களின் வாசத்துடன்...

எப்பொழுதும் போல் மாமாவின் நினைவும் சேர்ந்து கொள்கின்றது. உடல் நலக் குறைவால் ஒரு முறை தவிர, இவளின் அனைத்து பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் அவர் இருந்தார். சென்ற ஆண்டில் இருந்து இல்லாமல் போனது மனதைக் கனக்கச் செய்கின்றது.

சென்ற ஞாயிறு ப்ராத்மிக் பரீட்சைக்கு கிளம்பியவளிடம் "சாமியை வேண்டிக்கொள்" என்றவுடன் "ஷோகேஸ்" முன்பு நின்றாள். "சாமி ரூமுக்கு போ" என்று சொல்ல வந்தவள் சட்டென்று உணர்ந்தேன் அவள் மாமாவின் படத்தின் முன் நிற்பதை. அன்றே, செம்பருத்திப் பூவை ஆசையுடன் கொடுத்த குட்டிப் பெண்ணிடம் "சாமிக்கு வை" என்ற பொழுது அவளும் ஷோகேஸில் மாமா படத்தில் பூ வைத்த பொழுது மனம் நெகிழ்ந்தது. இவர்களை அன்பும் ஆசையுமாக மார் மீதும், தோள் மீதும் சீராட்டி வளர்த்தவர் இறையாக நின்று அவளை வாழ்த்துவார் என்ற நம்பிக்கையுடன் நந்தினி என்றழைக்கப்படும் எங்கள் இளவரசிக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.

Wednesday, August 12, 2009

கெட் மீ த ஃப்ளோரா பவர்
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஏதேதோ விளையாட்டுக்கள்... பேச்சுக்கள்...சின்ன சின்ன சண்டைகள்... சுவாரசியமாக இருந்தது. தொலைக்காட்சியில் ஃப்ளோரா பென்சில் பற்றிய விளம்பரம் வந்தது. குட்டிப் பெண் கூறுகிறாள் :

"நானும் என் ஃபிரண்ட்ஸும், கெட் மீ த ஃப்ளோரா பவர்-னு சொன்னோம், ஆனால் பார்பி வரலை".
"எதுக்கு கூப்பிட்டீங்க"
"எழுதறது கஷ்டமா இருந்தது அதான்"
"ஓ... கிவ் மீ த ஃப்ளோரா பவர் சொன்னால் பார்பிஸ் வரமாட்டாங்களா?"
"அதெல்லாம் உண்மை கிடையாது அம்மா... பொய்"


ஒரு கணம் அவை உண்மையாக இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. மாயாஜாலக் கதைகள் இனிமையானவை. கற்பனை வளத்தைத் தூண்டிவிடுவதோடு ஒரு அழகான உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். அங்கு கெட்டவரைத் தேடி நல்லவர்கள் செல்வார்கள். நாமும் அந்த நல்லவருள் ஒருவராவோம். தேவதைகளுடன் விளையாடுவோம், அவர்கள் நமக்கு உதவுவார்கள் அல்லது நாம் அவர்களுக்கு உதவுவுவோம், நிலவில் கால் வைப்போம், மேகத்தில் மிதப்போம், நட்சத்திரங்களிடம் சக்தி தேடுவோம், தங்க நதிகளும், வெள்ளி ஓடைகளும் குறுக்கிடும், விலங்குகள் நட்புடன் உதவும், தாவரங்கள் பேசும் ... இன்னும் பல அதிசயங்கள் நம் முன் மலரும்.இன்றும் விக்ரமாதித்யன் கதைகளும், மதன காமராஜன் கதைகளும், பஞ்ச தந்திர கதைகளும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. சிறுவர்மலர் தொடர் கதைகளும், தங்கப் புதையல் போன்ற படக்கதைகளும் நினைவிற்கு வந்து மனதில் ஒரு ஏக்கம் உருவாக்குகின்றன.

சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்தது ஹாரி பாட்டர் கதைகள். அந்த கதையின் கரு மிகவும் பிடித்தது. ஹாரி பாட்டர் "இருள் அரசன்" வால்டிமார்ட்டைக் அழிக்கப் பிறப்பான். இருவரும் கிட்டதட்ட ஒரே சக்தியை உடையவர்கள். ஹாரியை வால்டிமார்ட்டிடம் இருந்து ஒன்று தான் வேறுபடுத்தும். அது... அன்பு....
அதில் வரும் ஒரு உருவகம் "டெமெண்ட்டர்". "டெமெண்ட்டர்" நம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உறிஞ்சி நம்மைப் பைத்தியமாக்கும் வல்லமை உடையவை. நம்மைச் சுற்றி சில "டெமண்ட்டர்கள்" உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது. டெமெண்ட்டர்ஸை எதிர்க்கும் மாயம் "மகிழ்ச்சி, நம்பிக்கை, பாஸிடிவ் மனம்" போன்றவற்றை உருவாக்கும் மந்திரமே. அழகான கருத்து.

மற்றொரு உருவகம் "ரூம் ஆஃப் ரிக்கொயர்மெண்ட்ஸ்" - தேவைகளுக்கான அறை. மறைந்து நிற்கும் அவ்வறையின் வாயிலில் நாம் என்ன வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதுவாக அந்த அறை நமக்கு முன் திறக்கும். "நினைப்பது தான் நடக்கும்" என்ற கருத்தைப் போல.

இப்படி மாயா உலகில் சில நனவுலகமும் மிகைப்படுத்தப்பட்டு வரும். நூலகம் சென்றால் இப்பொழுது எனக்கு ஓரளவுக்கு நந்தினிக்கு ஆங்கிலப் புத்தகங்கள் தேர்வு செய்ய இயல்கின்றது. "Daisy Meadows" தேவதைகளும், "Secrets of Droon" மாய உலகும், "goosebumps" திகில் உலகமும் அவள்முன் மாயாஜாலங்கள் செய்கின்றன. இவை எனக்கு அறிமுகமில்லாத புத்தகங்கள். நந்தினிக்கான தேடலில் கிடைத்தவை. தமிழ் அவளுக்கு பிடிக்கும் என்றாலும், எழுத்துத் தமிழில் கதைகள் படிக்க சிறிது சிரமப்படுகிறாள். மெல்ல மெல்ல அவளே வாசிக்க விருப்பப்படுவாள் என்று நம்பிக்கை உள்ளது.

வாசிப்பு இப்பொழுது அவளது கற்பனை வளத்தைத் தூண்டுகின்றது. இப்பொழுது அவள் நிறைய மாயாஜாலக் கதைகள் எழுதுகிறாள். பிடித்த நீதிகள் கூறும் கதை எழுதுகிறாள். அவை எனக்கு மிகவும் பிடிக்கின்றன. அவற்றை அவள் ப்ளாக்கில் போடத் தான் எனக்கு நேரமில்லை.

ம்... நினைத்துப்பார்த்தால் கையில் அடங்கிய சின்னக் குழந்தை , கதை கேட்டு வளர்ந்த குட்டிப் பெண் இன்று தோள் வரை வளர்ந்து கதை சொல்வதே காலத்தின் மாயாஜாலமாகத் தான் தெரிகிறது.

"கெட் மீ த ஃப்ளோரா பவர்", இவ்வுலகில் எல்லா குழந்தைகளும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து பால்யத்தை அனுபவிக்க....

Tuesday, August 4, 2009

இறைவனுக்கு நன்றி

கண்ணாடி நொறுங்கி முகமிழந்து நின்ற காரைச் சலனமின்றி பார்த்தேன். எனக்கே என் குணம் வியப்பாக இருந்தது. முதன்முதலில் கார் எங்கள் வீட்டுக்கு வந்தது நினைவில் நிழலாடியது. காரை என் கணவர் வீட்டு வாசலில் நிறுத்த முயன்ற பொழுது சுவரில் பட்டு சிறு கீறல் விழுந்தது. அதற்கு நான் செய்த ஆர்ப்பாட்டத்தில் சில நாட்களுக்கு என் தம்பி காரைத் தொடவே இல்லை. என் தோழி, "காரும் ஒரு பொருள். பழசாகும் , சேதமாகும் என்பதைப் புரிந்து கொள்", என்று கூறிய பொழுது அதுதான் நிதர்சனம் என்று உணர்ந்தேன். அதன் பிறகு காருக்கு ஏற்பட்ட காயங்கள் என்னை பாதிப்பதில்லை.

கார் வாங்குவது என்பது என் கனவிலும் இருந்தது கிடையாது. அது ஒரு ஆடம்பரச் சின்னமாகவே வெகு நாட்களுக்கு என்னுள் இருந்தது. இரு குழந்தைகள், வீட்டுப் பெரியவர்கள் என்று வெளியே செல்லும் தேவை ஏற்பட்ட பொழுது, கார் அவசியமானது. குழந்தைகளை கவனிதுக்கொள்ள பெரியவர்கள் வீட்டில் இருக்கமுடியாத சூழலில், கிட்டதட்ட எனது இரு வருட வாழ்க்கை காரைச் சார்ந்தே இருந்து வந்தது. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பெற்றோர் வீட்டிற்கு வர அல்லது, பெற்றோர் வீட்டில் பள்ளி முடிந்து குழந்தைகளை விட என்று அதன் ஓயாத அலைச்சலில் தான் குழந்தைகள் பற்றிய கவலை இன்றி என்னால் அலுவலகத்தில் வேலை பார்க்க முடிந்தது. காருக்கும், ஒழுங்காக வேலைக்கு வந்த ஓட்டுநருக்கும் நன்றிகள்.

பல அடிகள் பட்டிருந்தாலும் எப்பொழுதும், காருக்கு தான் சேதம்... இந்த கடைசி நிமிடம் வரை. சென்ற வாரம் ஓர் இரவு, என் உறவினர், போக்குவரத்து நிறைந்த சாலையில், இரு சக்கர வாகனம் வழுக்கிவிட, கீழே விழுந்து மயக்கமானார். அவரை மருத்துவமனையில் சேர்த்து நாங்கள் செல்லும்வரை காத்திருந்த முன்பின் அறியா மனிதருக்கு நன்றிகள். இறைவன் அருளால் சிறுகாயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது.

மறுநாள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு காரில் செல்லும் வழியில், ஓட்டுநர் முன்னால் சென்ற லாரியின் "சடன் பிரேக்கிற்கு" ஈடு கொடுக்க முடியாது லாரியின் அடியில் காரை விட்டார். கார் அடியை வாங்கிக்கொண்டு , இறைவன் அருளால் உள்ளிருப்போரைக் காயமின்றிக் காப்பாற்றியது. ஓட்டுநர் சற்றே மெதுவாகச் சென்றிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த காரைப் பிரியும் நேரம் வந்துவிட்டது. அதன் புகைப்படம் ஒன்றும் இல்லை என்றும் தோன்றியது. ஒவ்வொரு நிகழ்வோடும் மறைந்த மாமாவின் நினைவுகள் வந்துவிடுகின்றது. அவர்தான் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துக்களும் அதிக பிரச்னைகளின்றி காத்தது போல் ஓர் உணர்வு. எத்தனையோ "இப்படி செய்திருந்தால்" இருந்தாலும், பிரச்னைகளைத் தாங்கும் வலிமை தந்த இறைவனுக்கு நன்றிகள்.