என் மேகம் ???

Friday, November 28, 2008

ஏன் கொடுத்தாய் ஆறறிவு?

இறைவா!
ஏன் கொடுத்தாய் ஆறறிவு?
இல்லாதிருந்தால்..
தற்காப்புக்காக மட்டுமே
தலைகள் விழுந்திருக்கும்.

இன்றோ....
இனமென்றும், மதமென்றும், மொழியென்றும்
மண்ணென்றும், பொன்னென்றும், போதையென்றும்,
மனமென்றும், மனச்சிதைவென்றும்...
நித்தம் ஒரு காரணமென்று
எண்ணற்ற காரணங்கள்
எண்ணற்ற தலைகள்..

ஆறறிவு என்பது
அன்பால் உலகை உய்விக்க
அமைதி பூமி உருவாக்க
என்று அனைவரும்
உணர்வது எப்பொழுது?
கூறிடுவாய் இறைவா!!

Thursday, November 27, 2008

பத்தோடு ஒன்று பதினொன்றுபத்தோடு ஒன்று பதினொன்று என
காதலில் கசிந்துருகி
ஊடலில் பிணங்கி
வருடங்கள் உருண்டோடின
இனிய நினைவுகள்
மனதை நனைக்கின்றன..நம் தோட்டத்தில்
முட்கள் அவ்வப்பொழுது
முளைத்து மறைந்தன
நாம் நட்ட பூச்செடிகள்
என்றும் பூத்துக் குலுங்குகின்றன

வளர்பிறையாக இரு நிலவுகள்
நம் வானத்தில்...அன்று ஒற்றைக் குடையுள்
இருவரும் நனைந்த மழை
இன்றும்
மனதை நனைக்கின்றது...

நிலவுகள் தம் வானத்தில்
நீந்தும் அவ்வேளையில்
காத்திருப்போம்
அம்மழைக் காலத்திற்கு...
(படங்கள் : இணையம்)

டிஸ்க்கி: இது எனது 50-வது பதிவு. இதைத் தொட ஊக்கமளித்த வலையுலக நண்பர்களுக்கு நன்றி.

Tuesday, November 25, 2008

அது ஒரு மழைக்காலம்
மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க
முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க
தேடி வந்த மாப்பிள்ளைக்கு
எண்ணி வைங்க
தேடாத மாப்பிள்ளைக்கு
சூடு போடுங்க...


முறுக்கைக் கொறித்தபடி, பாடல் பாடி, கையில் கிடைத்த காகிதமெல்லாம் படகாக மாறிய மழைக்கால நினைவுகள் மனதை நனைக்கின்றது. இன்று, என்னருகே என் பெண்கள் "மழையே மழையே சீக்கிரம் போயிடு..." என்று டோராவைப் பாடுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு நாள் குடை கொண்டு போகாது வெளியே சென்றிருந்தோம். லேசாகத் தூறியது மழை.

"அம்மா, மழை பெய்யுது, வா காருக்குப் போகலாம்" என்றனர் குட்டீஸ்.
"ம்... கொஞ்சம் மழையில நனைஞ்சு தான் பாருங்களேன்" என்றேன் நான்.
"நீ தானேம்மா மழைல நனைஞ்சா சளி பிடிக்கும்னு சொல்லுவ?"
"ம்... அப்புறம் மழையை அனுபவிக்கத் தெரியாமல் போய்டும். அதனால லேசா தூறும் வரைக்கும் கொஞ்சம் நனைவோம்...நாங்கள்ளாம் என்ன பாடுவோம் தெரியுமா? "மழை வருது, மழை வருது...."

சுகமாக இருந்தது அந்த தூறல்.

Friday, November 21, 2008

தாய்மை என்றோர் உணர்வு...

அவள் அந்த குட்டிக் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். "அம்மாவும் குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த முற்றத்தில் பாம்பு புகுந்திருந்தது. தாயை எழுப்ப எல்லோரும் சத்தம் கொடுத்துப் பார்த்தார்கள். ம்ஹீம்... அவள் அசைவதாகத் தெரியவில்லை. நல்ல அசதி போல். சற்றுத் தொலைவில் இருந்து கம்பால் தொட்டுப் பார்த்தார்கள். அசைந்தாள் , ஆனால் எழவில்லை. ஒரு பெண், மல்லிகைப் பூவை எடுத்து அக்குழந்தையின் மேல் போட, சட்டென்று எழுந்து அந்த பெண் பூவைத் தட்டி விட்டாள்". "சினிமாத்தனமாக இருக்கு", முணுமுணுத்தவாறு, பத்திரிகையைத் தூக்கி எறிந்தாள்.


இரண்டு வருடங்களுக்குப் பின்...
யாரோ தொடும் உணர்ச்சியில் திடுக்கிட்டு விழித்தாள். ஜன்னலருகே கணவன் கோபத்துடன் நிற்பது தெரிந்தது. கையில் குச்சி, அவளை ஜன்னல் வழியாகத் தொட்டு எழுப்ப. "எத்தனை தடவை பெல் அடிக்கிறது. எழுந்து வந்து கதவைத் திற..." என்றான்.


இரண்டு வருடங்களுக்குப் பின்...
சட்டென்று விழிப்பு தட்டியது. கண்கள் உடனே தொட்டிலுக்குச் சென்றது. குழந்தை விழிப்பதற்கான ஆயத்தங்களுடன் நெளிய ஆரம்பித்திருந்தாள். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தொட்டிலை ஈரமாக்கிவிட்டு அழ ஆயத்தமானாள். மெல்ல எடுத்து மார்போடு அணைக்கையில் , அந்த குட்டிக் கதை நினைவுக்கு வந்தது. "உண்மை தான்", என்று நிறைவோடு மனம் முணுமுணுத்தது.

Thursday, November 20, 2008

பூனைக்கு மணி கட்டுவது யாரோ?
என் பெண் வகுப்பில் ஒரு பெண் கொஞ்சம் தகராறு செய்வாள். அவளைப் பற்றி ஏதேனும் இவள் கூறிக் கொண்டிருப்பாள். பிரிவதும் சேர்வதும் தானே குழந்தைகள்? பொதுவாக இவள் மனதை மிகவும் பாதிக்காத விஷயம் நடக்கும் வரை நான் இவள் கூறுவதை கேட்பதோடு நிறுத்திக் கொள்வேன். அவள் ஏதேனும் நல்ல முறையில் கையாண்டிருந்தால், என் பாராட்டைத் தெரிவித்துக் கொள்வேன். அன்று என்னிடம், தனது ஆசிரியை ஒருவர் என்னை அழைத்து வருமாறு கூறியதாகக் கூறினாள். அந்த பெண் வராத ஒரு நாள் அவளைப் பற்றிய புகார்களை வகுப்பு மாணவர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே சில பெற்றோரிடம் பேச அந்த ஆசிரியை விருப்பப்பட்டார்.

நான் அவளிடம், முதலில் நான் அவள் காப்பாளரிடம் பேசி விட்டு பின் தேவை என்றால் , ஆசிரியையிடம் வருவதாகக் கூறினேன். பின், "பூனைக்கு மணி கட்ட விரும்பும் எலிகள்" போல நீங்கள் அந்த பெண் இல்லாத பொழுது பேசுகிறீகள். அவள் வந்தால் எல்லா புகாரும் மறைந்து விடும். இதற்கு நான் வேறு வர வேண்டுமா என்றேன்?

என் பெண் கூறிய பதில் அழகாக இருந்தது. அவள் டி.வியில் பார்த்தாளாம், இப்படி பூனைக்கு மணி கட்ட விரும்பும் எலிகள் சிதறி ஓடிவதை. பின்பு எலிகள் என்ன செய்யும்? பூனையிடம் சென்று "இந்தா உனக்கு ஓர் அழகான பரிசு" என்று மணியைக் கொடுக்குமாம். பூனையும் அதை விரும்பி அணிந்து கொள்ளுமாம். இது தான் புது முறையாம். எனவே, அவள் அப்பிரச்னையை அவளே பார்த்துக் கொள்வதாகக் கூறினாள். அவள் "நான் பார்த்துக் கொள்கிறென்" என்று கூறுவதைக் கேட்க இனிமையாக இருந்தது. ம்.. அவளது தனித்தன்மை வளர்வதை உணர முடிந்தது.

எனக்கு ஒரு நல்ல கதையும் தத்துவமும் கிடைத்தது.

Wednesday, November 19, 2008

இன்று என்பது பரிசு

ம்ம்... என் பெண் வளர்கிறாள் என்று பல விஷயங்களில் தெரிகிறது. அப்படி ஒண்ணு தான், நமக்கு கிடைக்கும் அறிவுரைகள். உண்மையில் இந்த வயதில் (10) இவ்வளவு யோசிக்கிறார்களே என்று ஆச்சரியமாக உள்ளது. அன்று, இரவு நேரங்கழித்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தோம். பல இடங்களில் கல்லூரி படிக்கும் வயது பெண்கள் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது.

நான்:
ம்.. நீ பெரியவள் ஆனால் எப்படி இருக்கப் போறியோ?
அவள் : அம்மா, நம்மகிட்ட மூணு இருக்கு, "நேற்று, இன்று நாளை". நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது, அதனால் அதை பத்தி யோசிக்க வேண்டாம். நேற்று என்பது முடிந்து விட்டது, அதனால் அதை பத்தி யோசிக்க வேண்டாம். இன்று தான் இப்ப நம்மகிட்ட இருக்கு , அதனால் அதைப்பத்தி மட்டும் யோசிக்கணும்

நான் : அப்ப நாளைக்கு என்ன லன்ச் தருவனு, ஏண்டி இன்னிக்கே கேக்கற?
அவள்: நாளைக்கு என்ன பண்றதுனு நிச்சயம் ப்ளான் பண்ணுவ, அதனால் கேட்கிறேன். இது ரொம்ப கிட்ட இருக்கு , அதனால் இதைப் பத்தி பேசலாம்.

ரொம்ப தெளிவாத் தான் இருக்காங்க. இவள் என்று இல்லை, என் தோழியின் பெண்ணும் ஏறக்குறைய இவள் வயது தான். அம்மா எதைப் பற்றியாவது கவலைப்பட்டால் "ஏம்மா இதுக்கெல்லாம் கவலைப்படற... இன்னிக்கு நடக்கறதை யோசி" என்று கூறுகிறாள்.

மறுநாள் என் பெண் வந்து இன்னொரு பொன்மொழியும் உதிர்த்து விட்டு போனாள் "நேற்று என்பது வரலாறு, நாளை என்பது புதிர், இன்று என்பது பரிசு... பரிசை அனுபவி" (Yesterday is a history, Tomorrow is a mystery, Today is Present ... Enjoy the present)

உண்மைதானே??

Friday, November 14, 2008

யா(ழ்)ங்கிலம்

குழந்தைகள் பேசுவது இனிமை. அவர்கள் தாய்மொழி பேசினாலே புரியாது, ஆனால் இனிக்கும். மழலை மாறாத என் மகள் ப்ரீ-கேஜியிலிருந்து எல்.கே.ஜி செல்லும் பொழுது கூறியது "நான் இங்கலீஷ் கத்துக்கப் போறேன்" என்பதே (சுட்டி டி.வி வழியாக அவங்க தமிழ் நல்லாவே கத்துகிட்டாங்க :-)). மேடம் இப்ப "டாக் இங்கலீஷ்" என்றால், ஒரு டேப்பை ஓட்டுவார்கள். ஒன்றும் புரியாது. ஆனால் "accent" மட்டும் இருக்கும். தமிழ் பேசுவது போல் இருக்காது. இதோ அவள் ஆங்கிலம் (அவளைப் பேச வைக்க நடு நடுவே எழும் குரலை மன்னிக்கவும்)


Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, November 13, 2008

இனிதாகத் தொடங்கட்டும் காலை...

குழந்தைகளைக் காலையில் எழுப்பி ஸ்கூலுக்கு கிளப்புவது ஒரு பெரிய வேலை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகத் தான் விடியும். குழந்தைகளைப் பொறுத்தும் உள்ளது. சின்னவள் காது பட "என் பொண்ணு தங்கம், அம்மா கேட்கறதுக்கு முன்னாடி பல் தேச்சுட்டு பால் எங்கேனு கேட்பாள்" என்றால் போதும், அடுத்த நிமிடம் சொன்னது நடக்கும். பெரியவளுக்கு இதெல்லாம் "ஜுஜுபி". எவ்ளோ பார்த்திருக்கிறோம் நாங்க என்று, கெஞ்சினால் மிஞ்சும் டைப்.

காலையில் எழும் பொழுதே காலை வேலைகளின் திட்டத்தை ஒத்திகை பார்க்கும் நான், குழந்தைகளை எழுப்பும் விதம் பற்றி ஆழ்ந்து யோசித்தது கிடையாது. நேரம் இருந்தால் கொஞ்சல், கெஞ்சல் இல்லாவிட்டால் மிரட்டல் என்று தான் ஓடும்.

சமீபத்தில் தோழி ஒருவர் "எனக்கு குழந்தைகள் காலையிலேயே சிரித்தபடி எழுவது தான் பிடிக்கும். எனவே முடிந்தவரை மிரட்டாது எழுப்ப பார்ப்பேன் என்றார்" என்றார். அட, நாம் ஏன் யோசிக்கவில்லை என்று தோன்றியது. ஒரே டெக்னிக்கிற்கு எல்லா நாளும் சிரித்து எழ வைக்க அவர்கள் என்ன சாவி கொடுத்த பொம்மைகளா? அதன் பிறகு ஆழ்ந்து கவனித்ததில் , பள்ளியில் ஏதேனும் சுவாரஸ்யமான பிக்னிக் செல்வது என்றால், புதிதாகக் பள்ளிக்கு ஏதேனும் கொண்டு செல்ல வேண்டி இருந்தால் அவர்களாகவே சுறுசுறுப்புடன் எழுந்து விடுகிறார்கள் என்பதை.

எனவே நமது வேலை அந்த மாதிரி ஏதேனும் செய்வது. சில சமயம் அம்மாவை ஆச்சர்யப்படுத்த என்று நான் வாக்கிங் சென்று வருவதற்குள் ரெடி ஆவார்கள். சின்ன சின்ன டெக்னிக் கூட வேலை செய்தது. சும்மா போய் தட்டி எழுப்பாது "கிச்சு கிச்சு" மூட்டுவேன். அவர்கள் எழும் வரை விட மாட்டேன். சிரித்து சிரித்து அவர்கள் எழும் பொழுது சுறுசுறுப்பும் சேர்ந்து இருக்கும். சில சமயம், ஒரு வாழ்த்து அட்டை பண்ணனும், சீக்கிரம் பாலைக் குடிச்சிட்டு பண்றியா என்றால் ஆவலாக ஓடி வருவார்கள்.

இப்பொழுது எல்லாம் முடிந்த வரை அவர்கள் சிரிப்புடன் எழ வைக்கவே முயற்சிக்கிறேன். என்ன கொஞ்சம் டெக்னிக் யோசிக்க வேண்டி உள்ளது, ஆனால் முயற்சி வெற்றி பெற்றால், எரிச்சல் இல்லாது சிரிப்புடன் எழும்பொழுது மனம் நிம்மதியாக உள்ளது; இனிதாகத் தொடங்குகிறது காலை...

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலான் ஆகப் பெறின்.


முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதைவிட மேலான பண்பாகும்

பரிசும் பாராட்டும்

கை நிறைய பரிசுகளுடன்
களித்து இருந்தாள் என் மகள்

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாயாக
அள்ளித் தந்தேன் பாராட்டுக்களும்
ஆசை முத்தங்களும்

பின்னாளில் ஒரு நாள்
எத்தனை உயரம் சென்றாலும்
எத்தனை திறன் இருந்தாலும்

என்றோ செய்த
உப்பில்லா சாம்பார் மட்டுமே
பேசப்படும் நேரத்தில்...

நிறைகள் எல்லாம் கடமையாகவும்
குறைகள் மட்டுமே கருத்தாகவும்
மாறும் நேரத்தில்...

மனதிற்கு இதம் தர வேண்டும்
சில கதகதப்பான நினைவுகளென
மேலும் மேலும்
அள்ளித் தந்தேன் பாராட்டுக்களும்
ஆசை முத்தங்களும்

காடு... ப்ராஜெக்ட் காடு...


குட்டிப் பெண் ஸ்கூலில் "விலங்குகள்" பற்றி ப்ராஜெக்ட்டாம். எனவே காடு செய்யச் சொன்னார்கள். அதாவது பெற்றோருக்கு ஹோம்வர்க். நம்ம செய்யறதை இப்பவாது பார்க்க ஆள் இருக்காங்கனு, நாங்களும் ரொம்ப உற்சாகமா ஒரு காட்டை உருவாக்கிட்டோம்.

நாங்கள் எல்லாம் உடனே கூட்டுக் குடும்பமாக உட்கார்ந்து காடு செய்தோம். மான் நந்தினி வரைந்து வண்ணம் தீட்டியது. மரங்களும் புதர்களும் அவளின் அப்பா/சித்தப்பாக்கள் வரைந்து தர , வண்ணம் தீட்டியவர்கள் நந்தினி & யாழினி. Deforestation என்று தெர்மாகோலை கொடுத்துடு என்று ஐடியா கொடுத்த குட்டீஸின் மாமாவுக்கும் நன்றி.

என்ன மிருகம் எல்லாம் இருக்குனு கண்டுபிடிங்க பார்க்கலாம்... எது எல்லாம் 3D என்று சொல்லுங்கள்...

Tuesday, November 11, 2008

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

வழக்கம்போல் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு வீட்டில் நடந்து கொண்டிருந்தது. சச்சரவில் சத்தம் காதைத் துளைக்க, பெரியவளை அடக்கிவிட்டு சின்னவளிடம் கேட்டேன்:

"அக்கா ரொம்ப வம்பு பண்றாள் இல்லை"
"ஆமாம்"
"பேசாமல் மதுரைக்கு அனுப்பவா?"
""ம். சரி"
"அங்கேயே இருந்து படிக்கட்டுமா?
"ம். அவள் நிக்கி அக்கா, டிலானி அக்காவோட விளையாடிட்டு இருக்கட்டும்"
"அப்ப அக்கா வேண்டாமா?"
இதுவரை டாண் டாணென்று பதில்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த கேள்விக்கு மட்டும் சற்று மெளனம், பின் "இல்லைமா எனக்கு அக்கா வேணும்".

"அக்காவை ஹாஸ்டல்ல சேர்க்கட்டுமா?"
"வேண்டாம்மா இங்கேயே இருக்கட்டும்".

இந்த அன்பு பூரிக்க வைக்கின்றது. பெரியவளும் அன்புக்கு குறைந்தவள் அல்ல. ஒரு நாள் சின்னவள் பெரிய கரண்டியை வைத்து பெரியவள் முதுகில் ஒரு அடி போட்டாள். எதற்கு? அவள் அக்கா என்று அழைத்து இவள் திரும்பவில்லை என்று. நாங்களே மிரண்டு விட்டோம். "நல்லா ஒரு அடி கொடு, அப்ப தான் அவளுக்கு வலினா என்னனு புரியும்" என்றதற்கு, பெரியவள் அந்த அழுகைக்கு நடுவிலும் இலேசாகத் தொட்டுவிட்டு
"அடிச்சுட்டேன்" என்றாள். பாசத்தின் வெளிப்பாட்டில் அவ்விடம் சிரிப்பை எதிரொலித்தது.

**********************

பாலருந்திக் கொண்டே டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்கள். நேரம் சென்றது பால் கோப்பையில் பால் குறைந்தாற் போல் இல்லை. இது பரிசு தரும் நேரம் என்று எண்ணிக்
கொண்டேன். "யார் முதல்ல பால் குடிக்கிறாங்களோ அவங்களுக்கு ரெண்டு சாக்லேட்" என்றேன். அறிவிப்பிற்கு எந்தவொரு மாற்றமும் இல்லை. "யார் முதல்ல பால் குடிக்கிறாங்களோ அவங்களுக்கு முத்தம்" என்றேன். மட மட என்று காலியானது கோப்பை, பரிசிற்கு போட்டி வேறு. இந்த பரிசை கொடுக்கவோ பெறவோ கசக்குமா?

"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு"


***************************
"அம்மா இன்னிக்கு நான் தான் உனக்கு சோறுட்டுவேன்", என்று எண்ணி நான்கு பருக்கை கையில் எடுத்து , அவர்களுக்கு செய்வது போல், கடுகு, கறிவேப்பிலை நீக்கி தரும்பொழுது புரிகிறது...

"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்"

***********************

Monday, November 10, 2008

என் கேள்விக்கு என்ன பதில்?

குழந்தைகள் என்றாலே "இதனால் என்ன ஆகும், என்ற விளம்பரம் போல்", ஓயாத அவர்களின் கேள்விகள் தான். கேள்வி கேட்பது ஈஸி, பதில் சொல்வது ... என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால், குழந்தைகள் வேறு எங்கு கேட்க முடியும் பெற்றோர், ஆசிரியரைத் தவிர. ஆசிரியரிடம் கூட சில எல்லைகள் உண்டு, பெற்றோரிடம் தேவைப்படாது (குழந்தையாக இருக்கும் வரையாவது...).

சிலரிடம் பேசும் பொழுது , குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூற இயலுவதில்லை என்று புரிகிறது. என்றாலும் குழந்தைகளிடம் நாம் கவனமாக பதில் உரைக்க வேண்டும். "இப்படி எல்லாம் கேள்வி கேட்காதே", என்றால், "எப்படி எல்லாம்" என்று எப்படி தெரியும் அவர்களுக்கு? இது, கேள்வி கேட்காதே என்று தான் அவர்களுக்குத் புரியும். சில முறைகள் "தெரியாது" என்று கூறினால், "இதுவும் தெரியாதோ", என்று கேள்விகள் அவர்களிடமிருந்து வராமலே போகக்கூடும்.

கேள்வி-பதில் தான், பல விஷயங்களைப் புரிந்து கொள்ள மிகுந்த உதவி செய்யும் என்பதை நாம் உணர வேண்டும். எனவே முடிந்த வரை குழந்தைகளின் வயதிற்கேற்ப பதில் கூற முயற்சிக்க வேண்டும். நீங்கள் அவர்களது கேள்விகளுக்கு மதிப்பு கொடுத்து பதில் சொல்ல முயற்சிப்பதே, அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும். மேலும், அவர்களுடனான நெருக்கமும் அதிகரிக்கும். அவர்கள் வளர வளர அவர்களது தனித்தன்மையும் வளர்கிறது என்று உணர்ந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

Friday, November 7, 2008

எலும்பு சூப்


புதுகைத் தென்றலின், தமிழ் சமையல் வலைப்பூ திரட்டி, வாரத்திட்டம் -6 பார்த்து, நம்மளும் ஒரு சூப் ரெசிபி போடலாம்னு பார்க்கிறேன். ரெசிபினு ஒண்ணு போடறது இதான் முதல் முறை. படம் எல்லாம் இல்லை, இந்த ஞாயிற்றுக்கிழமை செய்தால் ஃபோட்டோ புடிச்சு போடறேன்.
எங்கள் ஊரில், உடம்பை கொஞ்சம் தேற்ற வேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டால் போதும், தினம் ஒரு வகை என எலும்பு சூப், ஆட்டுக்கால் சூப், நாட்டுக்கோழி சூப் என்று போட்டுத் தள்ளி விடுவார்கள். சைவத்தை விட அசைவ சூப் ரொம்ப சிம்பிள் வேலை போல் எனக்கும் ஒரு ஃபீலிங். இங்கே கொடுத்து இருக்கும் ரெசிபியை ஆடு/கோழி வகையறா சூப்பிற்கு உபயோகிக்கலாம்.

தேவையானவை:


நெஞ்செலும்பு - கால் கிலோ
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்றவாறு

அரைக்க:
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
தக்காளி - 1
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி

அலங்கரிக்க
கொத்துமல்லி நறுக்கியது சிறிதளவு


செய்முறை:


முதலில் அரைக்கக் கொடுத்துள்ள சாமான்களை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நெஞ்செலும்பைச் சேர்த்து சற்று வதக்கிவிட்டு, 4 தம்ளர் தண்ணீரும், தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். குக்கரில் 4 விசில் வந்த பின்பு, தீயைக் குறைத்து 15 நிமிடம் வேக விடவும் (கோழி என்றால் 4 விசிலே போதும்). தேவை என்றால் சிறிது கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். நன்கு கலந்து, கொத்துமல்லி தூவி பறிமாறவும்.

Wednesday, November 5, 2008

சின்ன சின்ன கேள்விகள்???

"ஏம்மா எப்ப பார்த்தாலும் என்னையே சொல்ற?", பெரியவளின் கேள்வி. "நீ பெரியவள், அதனால் நீ தான் விட்டுக்கொடுக்க வேண்டும்", என்றவுடன் சின்னவளிடம் பெரியவளின் முணுமுணுப்பு , "இன்னும் கொஞ்ச நாளில் நீயும் பெரியவள் ஆவ, நீயும் அம்மாட்ட திட்டு வாங்குவ". (எவ்வளவு வளர்ந்தாலும் சின்னவள் சின்னவளாகத் தான் இருப்பாள் என நான் கூறியது அவளுக்குப் புரியவில்லை)

******************************

திடீரென்று ஒரு நாள் என் சுட்டிப் பெண் , "அம்மா எனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைப்பீங்க?" என்றாள். திரு திரு என்று விழித்து "ஏன்" என்றோம். "அப்ப தான் நிறைய கிப்ட் கிடைக்கும்" என்றாள். (ஓ... பரிசுகளின் உண்மை விலை தெரியும் வரை இப்படியே கவலை இன்றி இரு பெண்ணே...)

***********
"அப்பா, நான் பெரியவள் ஆகி என்ன செய்யப் போறேன்?"
"நல்லா படிச்சா எங்களை மாதிரி கம்ப்யூடர்-ல வேலை பண்ணலாம்".
(படிக்காட்டி நிறைய சாய்ஸ் என்று அவரும் கூறவில்லை... அவளும் கேட்கவில்லை...)
*********************************
ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து "பூவா தலையா" விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென்று அருகில் வந்து, "அம்மா, ஒரு ரூபாய்ல ஒண்ணும் பண்ண முடியாது தானே?" என்றாள். சாக்லேட் வாங்கலாம் என்பது தவிர என்ன பதில், ஏன் இந்த கேள்வி என்று யோசித்துக் கொண்டே, சட்டென்று நினைவு வர, "வெய்ட் பார்க்கலாம்" என்று பதில் கூறினேன். அவளுக்கு எடை பார்ப்பது பிடிக்கும். சற்று நேரம் தேடி ஒரு ரூபாய் நாணயத்தைக் கையில் கொடுத்த பொழுது புரிந்தது, "தொலைந்த நாணயம் தேட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியில் உதித்த கேள்வி" என்று.
****************************
மாமாவின் குட்டிப்பயலோடு விளையாடிக் கொண்டிருந்தாள். என்னடா செல்லம்... தம்பி உன்னையே பார்க்கிறான் பாரு என்றவுடன், வெட்கப் பார்வை. சற்று நேரம் கழித்து... "நான் ஆரஞ்ச் ட்ரெஸ் போட்டது தான் தம்பிக்கு ரொம்ப புடிச்சிருக்கு... அதனால் இனி நான் ஆரஞ்ச் ட்ரெஸ் தான் போடுவேன். ஏம்ப்பா, நான் பெரியவள் ஆனால் என்ன ட்ரெஸ் போட்டால் தம்பிக்கு பிடிக்கும்?" (குட்டீஸ் உலகத்தில இது எத்தனை பெரிய பிரச்னை? நீ எது போட்டாலும் பிடிக்கும்டா செல்லம்...)
*************************

Tuesday, November 4, 2008

வயது தந்த பாடம்

பல பிள்ளைகளைப் போல் எங்களுக்கும் பெற்றோரை மகிழ்விக்க ஆசை தான். நட்சத்திர விடுதி, விமானப் பயணம், வெளிநாடு என எல்லாம் இன்று அனுபவிக்க அன்று பாடுபட்டு அவர்கள் படிக்க வைத்ததன் பலன் தானே?

சும்மா கூப்பிட்டால் வருவார்களா? பிறந்த நாள் கொண்டாட்டம், L.T.A என்று காரணம் சொல்லி, நட்சத்திர விடுதி, விமானப் பயணம் எல்லாம் அவர்களையும் பார்க்க வைத்தாயிற்று. அடுத்தது வெளிநாடு. திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் என்று ஒரு டூர் போகலாமா என்று யோசித்தோம். பிள்ளைகள் சற்று பெரிதானால் சுற்றுலா நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் தலை தூக்க, பிள்ளைகளின் வயதைக் கருதி திட்டத்தை சற்றுத் தள்ளிப் போட்டோம். எதிர்பாராத விதமாக, வீட்டில் ஓர் இழப்பு. பிள்ளைகளின் வயதைக் கருதியவர்கள், பெற்றோருக்கு வயதாகிறதே என்று யோசிக்க மறந்தோம். நாம் பொறுப்பான பெற்றோராக யோசிப்பது போல், பெற்றோரின் பொறுப்பான பிள்ளைகளாகவும் யோசித்திருக்க வேண்டும் என்று மனதை உறுத்துகிறது.