என் மேகம் ???

Wednesday, July 29, 2009

மண்வாசனை

மழைத்துளிகள்
மண்ணைக் கிளறின

மண்வாசனை
மனதைக் கிளறியது

காகிதக் கப்பல்
சுழன்று சுழன்று
மூழ்கிய காட்சி
நெஞ்சுள் சுழன்றது

தாரணிப் பாப்பாவின்
தொலைந்த கம்மல்
மழையோடு ஒதுங்கியது
மனதுள் வந்தது

மொறுமொறு முறுக்கும்
சூடான வடையும்
அம்மாவின் கைமணத்துடன்
வாசம் வீசியது

இப்பொழுதும்
அதே மழைதான்...
படகுகள் மிதந்து செல்கின்றன

வாசலில்...
மழை ஒதுக்கிய குப்பைகள்

கடையின் வாசத்துடன்
முறுக்கும் வடையும்...

மண்வாசனை ...
மறைந்து போனது

Sunday, July 26, 2009

நன்றி

கடந்த சில பதிவுகளை கிடைத்த நேரத்தில் அடித்து வைத்தேன். நன்றி சொல்வதை நிதானமாக எழுத வேண்டும் என்று எண்ணினேன். எனவே இந்த தாமதம். ஆனால், கடவுளுக்கு அவசரமாக நன்றி சொல்லும் நேரம் ஒன்று வந்த பொழுது, சொல்லாமல் வைத்துள்ள நன்றிகளை உடனே சொல்லத் தோன்றியது.

மீண்டும் மீண்டும் என்றாலும் எவர் மனதையும் மலரச் செய்வது அங்கீகாரம். இம்முறை மூன்று பேரிடம் இருந்து கிடைத்துள்ள வெவ்வேறு அங்கீகாரத்திற்கு நன்றிகள். எனக்கு விருது கொடுத்து ஆச்சர்யம் அளித்துள்ளார் ஜீவன்.

நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தும் கிருஷ்ணப்பிரபு, சற்றும் எதிர்பாரா நேரத்தில் எனது "சுட்டி உலகம்" வலைப்பதிவிற்கு அதே விருதை அளித்துள்ளார்.

சுவாரசியங்கள் கொட்டிக் கிடக்கும் புதுகைத்தென்றல் "நட்புக்கு மரியாதை" கொடுத்துள்ளார்.

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவர்கள் அனைவருமே எனக்கு வலைப்பூ வழி அறிமுகம் ஆனவர்களே என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. சமீபத்தில் வாரமலரில் கதை ஒன்று படித்தேன். உதவிக்கு பிரதிபலனாக தேவைப்படுவோருக்கு உதவுமாறு ஒருவர் கூற, அந்த உதவி சங்கிலியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த விருது கொடுக்கும் மகிழ்ச்சியும் அப்படியே!!! கொடுத்தவர்களுக்கு எனது நன்றிகள்.
சுவாரசியப் பதிவர் விருது 6 பேருக்குக் கொடுக்கவேண்டுமாம்.
இதோ...

புதுகைத்தென்றல் - பல வகை சுவாரசியங்கள் கொட்டிக் கிடக்கும் இவர் பதிவில்
பூந்தளிர் - தீஷுவின் வளர்ச்சியும் குழந்தைகளுக்கு சுவாரசியமாக கற்றுக்கொடுக்க உதவும் முறைகளும் கொட்டிக் கிடக்கும் இவர் பதிவில்
நினைவின் விளிம்பில் - கவிநயா அவர்களின் எளிமையான இயல்பான எழுத்துக்கள் என்னை எப்பொழுதும் ஈர்க்கும்.
தமிழ் - தமிழின் சுவையை சுவாரசியமாக இவ்வலைத்தளத்தில் பதிவு செய்வார்
அரும்புகள் - சுட்டிகளுக்கான ஒரு சுவாரசியமான வலைதளம்
சிதறல்கள் தீபாவின் எழுத்துக்கள் எனக்கு மிகப் பிடிக்கும். மிகத் தெளிவாக அழகாக இருக்கும் இவரது பதிவுகள்இனி "நட்புக்கு மரியாதை"

சந்தனமுல்லை - பதிவர் என்பதற்கு முன்பிருந்தே எனது தோழி
இராமலஷ்மி மேடம் - மின்னஞ்சல் வழியே மட்டுமே தொடர்புண்டு. அன்புடன் அவர் எனக்கு பல விதங்களில் ஊக்கம் அளித்துள்ளார்.
ஜீவன் - ஒவ்வொரு விருதும் இவரிடம் இருந்து பெறுவதில் எனக்கு மிக மகிழ்ச்சி.
அமிர்தவர்ஷினி அம்மா - வலை வழியாக மட்டுமே அறிந்து இப்பொழுது நன்கு அறிமுகமான நல்ல தோழி
அ.மு செய்யது - இவரது பின்னுட்டங்கள் நேரில் கூறுவது போல் இருக்கும். பின்னூட்டங்கள் வழி மட்டுமே அறிமுகம்.
நட்புடன் ஜமால் - யாருக்கு தான் இவர் நண்பர் இல்லை?
ஆதவா - சகோதரி என்று அழைத்து இவர் தனது விமர்சனங்களுடன் இவர் இடும் பின்னூட்டம் வழி மட்டுமே அறிமுகம். இந்தவார வலைச்சர ஆசிரியராக இருப்பதில் மகிழ்ச்சி.

ஆயில்யன் - அவ்வப்பொழுது வந்து கும்மி அடித்து கலகலப்பாக்குவதுடன் அடிக்கடி ப்ளாக்கர் பிரச்னைகளுக்கு எப்பொழுதும் ஆன்லைனில் இருந்து உதவுவார்.

"பூந்தளிர்" தியானாவும், "சிதறல்கள்" தீபாவும் வலை வழி அறிமுகமான நல்ல தோழிகள்

புதுகைத் தென்றலின் பதிவிலிருந்து :

"ரங்கா இந்த விருதை ஏற்படுத்த காரணமாக கூறியிருக்கும் காரணங்கள் மிக்க அருமை:

முதல் காரணம்: என்னால் இந்த பதிவுலகத்திற்கு எதாவது நல்லது செய்ய முடியுமா என்கிற ஏக்கம்.

இரண்டாவது காரணம்: நீங்கள் நான் எல்லாருமே இனி இந்த விருதை பார்க்கும்போது ஒரு நட்புணர்வும்,நம்பிக்கையும் வருமே
அதற்காக தான்.

மூன்றாவது காரணம் : பதிவுலத்தில் நிலவும் நம்பகமற்ற தன்மையை விலக்கவே இந்த விருது.

இந்த காரணங்களை முன்னிட்டே இந்த விருது உருவாக்கப்பட்டது.


இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :

1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.

2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.

3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.

4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.
அப்படின்னு ரங்கா சொல்லியிருக்காரு.

நீங்களும் உங்கள் நண்பருக்கு விருது கொடுத்து பெருமைப்படுத்துங்கள்"

Wednesday, July 22, 2009

சூரிய கிரகணமும் நம்மூரும் அல்ப சந்தோஷமும்....

என்ன தான் லைவா தொலைக்காட்சியில் காட்டினாலும், நாமே பார்த்தால் தான் ஒரு திருப்தி இல்லையா? இது அபூர்வமான நிகழ்வு, பத்து ரூபாய்க்கு கண்ணாடி காந்தி சாலையிலும், திருவான்மியூர் அருகில் திருவள்ளுவர் நகரிலும் கிடைக்கும் என்று செய்தித்தாளில் பார்த்தோம். விடுமுறையில் செய்தால் தான் முடியும் என்று ஞாயிறன்றே பிர்லா கோளரங்கம் சென்று விசாரிக்க "கண்ணாடி எல்லாம் எல்லை. புதன் கிழமை வாங்க, பார்க்க ஏற்பாடு ஆகி இருக்கும்" என்றார்கள். திருவள்ளுவர் நகரையும், பீச்சையும் சுற்றி சுற்றி வந்தோம், விசாரித்தும் பார்த்தோம் ... ம்ஹூம்... நம்ம ஊர்ல ஒரு விஷயம் தேடினால் கிடைக்குமா?

அலுவலகத்திலேயும் ஒருத்தரை ஒருத்தர் விசாரிச்சாச்சு... ம்ஹூம்... கண்ணாடி எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. நேற்றும் திருவள்ளுவர் நகரையும், பீச்சையும் சுற்றி சுற்றி வந்தோம்...விசாரித்தும் பார்த்தோம் ... ம்ஹூம்...சரி காலைல பார்க்கலாம்னு விட்டாச்சு.

தொலைக்காட்சி என்றால் குட்டீஸ் அதையும் ஒரு ஆவணப்படம் போல பார்க்காமல் போய்விடுவார்கள், கண்ணாடி வழியாகக் காட்டினால் பார்ப்பார்கள், மறக்க மாட்டார்கள் என்று ஒரு நப்பாசை தான். காலையில் எழுந்து மீண்டும் கடற்கரைக்கு ஓடினோம். குட்டீஸ் எல்லாம் வர மறுத்துவிட்டார்கள். சூரியனைப் பார்க்கக் கூடாதாம். திருவள்ளுவர் நகரையும், பீச்சையும் சுற்றி சுற்றி வந்தோம். ஆங்காங்கு மக்கள் இருந்தார்கள், ஏற்பாடுகள் எதுவும் கண்ணில் படவில்லை. வேறு வழி? பிர்லா கோளரங்கம் சென்றோம்.


ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. நிறைய பேர் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள். வரிசை வேகமாக நகருகிறது. ஆவல்... ஆவல்.... சிலர் கையில் கண்ணாடியுடன் வருகிறார்கள். ம்... நாமும் வாங்கி வீட்டில் குழந்தைகளைப் பார்க்கச் செய்யலாம் என்ற ஆசையுடன் நக்ர்ந்தால்... கண்ணாடி தீர்ந்து விட்டதாம்... தொலைநோக்கி வழியாகக் காண ஏற்பாடெல்லாம் இல்லை. வரிசையாக நின்று பாருங்கள் என்று மைக்கில் அறிவித்துக்கொண்டிருந்தவரிடம் கண்ணாடி கேட்டால் யாரிடமாவது வாங்கிப் பாருங்கள் என்றார். அவர் கையில் இருப்பதை மறக்காமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

ஓரிருவரிடம் கண்ணாடி கடன் வாங்கி கிரகணம் பார்த்தோம். மகிழ்ச்சியாக இருந்தது. அழகாக சூரியனை கரும் நிழல் ஒன்று மெல்ல மெல்ல கவ்விக் கொண்டிருந்தது. குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் என்ற ஆசை யாரிடமாவது கண்ணாடியைப் பறித்துக் கொள்ளும் ஆவலை உண்டு பண்ணியதால் போதுமென்று வெளியேறினோம். "ப்ரஸ்" என்று போட்ட காரில் ஒருவர் கண்ணாடியுடன் இருந்தார். கடன் வாங்கினோம்; மீண்டும் பார்த்தோம்... எடுத்து ஓடிவிடலாம் என்ற எண்ணத்தை அடக்கி "குட்டீஸ்க்கு காட்டணும் எடுத்துக்கொள்ளவா?" என்று வினவ.... அம்மாடி அவர் சரி என்று விட்டார். நன்றி நவின்று விட்டு... ஓடினோம்...ஓடினோம்... பைக் இருக்கும் இடத்திற்கு ஓடி, மீண்டும் மீண்டும் கண்ணாடி தந்தவரை வாழ்த்தி... வீடு வந்தோம். எங்கள் கண்மணிகளுக்கு கண்ணாடி வழியாக கிரகணம் காட்டினோம். கரும் நிழல் ஒன்று மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருந்தது. சூரியன் அழகாகத் தெரிந்தது. இனிய காலையை அழகாக்க உதவிய அந்த மனிதருக்கு மீண்டும் நன்றி சொன்னோம். குழந்தைகள் மிக மகிழ்ந்தார்கள். அதில் எங்களுக்கும் ஒரு அல்ப சந்தோஷம்.

இது போன்றதொரு நிகழ்வுக்கு கண்ணாடிகளை ஒரு வாரம் முன்பிருந்தே கோளரங்கத்தில் விற்று இருக்கலாம் (அ) எந்த இடங்களில் கிடைக்கும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கலாம். கடைசி நிமிடத்தில் கண்ணாடி கிடைக்காது எத்தனை குழந்தைகள் வருத்தம் அடைந்திருப்பர்? கோளரங்கத்தில் இருந்த கூட்டம் மிக சொற்பமே!!!! அதற்கே கண்ணாடிகள் இல்லை என்றால்....

Monday, July 20, 2009

நாளையும் மற்றொரு நாளே

எங்கோ மணி அடிப்பது போல் தோன்றியது. அது அவளுக்கானது என்று புரிய சில விநாடிகள் ஆனது. இன்னும் கொஞ்சம் தூங்குவோமா என்ற எண்ணத்தை ஒதுக்கி விட்டு எழுந்த பொழுது மணி காலை 5:05. இலேசாகத் தொண்டையில் கசப்புணர்வும் ஓங்களிப்பும் வயிற்றில் சிசு "நானிருக்கிறேன் அம்மா" என்றது. மெல்ல எழுந்து குளியலறைக்குள் சென்றாள். குளியல் முடிந்து வரும் பொழுது மணி 5:30 என்றது. இனி, நூல் பிடித்தாற்போல் சரியாக வேலையை முடிக்காவிட்டால் பஸ் போய்விடும். கணவன் எந்த வித சலனமும் இன்றி உறங்கிக் கொண்டிருந்தான்.

மெல்ல கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தாள். மாமனாரும், மாமியாரும் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வாசற்கதவைத் திறந்து, கேட்டில் மில்க் பாக்ஸில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து வந்து சமையலறைக்குள் நுழைந்தாள். பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை சின்ன தீயில் எரிய விட்டாள். அம்மா வாங்கித் தந்த பால் குக்கர் பரணில் இருக்கிறது. "அது என்ன உய்ய்-னு சத்தம் கொடுத்துட்டு... பக்கத்தில் இருந்து பாத்துக்கறதை விட பொம்பளைக்கு என்ன வேலை", என்பது மாமியாரின் கொள்கை. அவள் வீட்டில் அம்மா பாலை குக்கரில் வைத்துவிட்டு மற்ற வேலைகளைக் கவனிப்பாள். சத்தம் வரும்பொழுது அம்மா/அப்பா/அவள் அடுப்பை அணைத்துவிட்டு காபி போடுவார்கள். வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின் , ஊருக்கு சென்ற ஒரு நாள் , கண்ணயர்ந்தவளை பால் குக்கர் விசில் எழுப்பியதில் இருந்து இவள் செல்லும் பொழுதெல்லாம் அம்மா பால் குக்கர் வைப்பதில்லை; அடுப்பருகில் நின்று பாலைக் காய்ச்சுவாள். மெல்ல கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

வாசல் பெருக்கி, தெளித்து சின்னதாகக் கோலமிட்டாள். இது அவளாக விரும்பி ஏற்றுக் கொண்ட வேலை. புள்ளி வைத்தோ வைக்காமலோ, அழகான ஒரு கோலமிட்டு முடிக்கும் பொழுது அம்மாவுடன் இருக்கும் ஒரு அமைதி வரும். விடுதியில் இருந்த பொழுது கூட அந்த சின்ன கோயிலின் முன் அவள் தினமும் கோலமிடுவாள்.

சற்றே தலை சுற்றுவது போல் இருந்தது. கதவைப் பிடித்து நிதானித்து விட்டு உள்ளே வந்தாள். பாலில் ஆடை விழுந்திருந்தது. குக்கரில் பருப்பை வேகப் போட்டுவிட்டு, பாலை கொதிக்க விட்டு இறக்கி வைத்தாள். பாலை கோப்பையில் ஊற்றியவாறு என்ன காய் வைக்கலாம் என்று யோசித்தாள். நேற்று அம்மா வந்து சமைத்து கொடுத்த உணவின் ருசியும் மணமும் நினைவுக்கு வந்தது. கேரட்டை ப்ரிட்ஜில் இருந்து எடுத்து உணவு மேசையில் வைத்துவிட்டு, அவளும் அமர்ந்து பாலருந்தினாள். மெல்ல ஒரு ஆயாசம் ஏற்பட்டது. ஞாயிறன்று அவள் வீட்டில் அப்பா சமைப்பார். அம்மாவுக்கு அதுவே மற்ற நாட்களில் ஆயாசம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மற்ற நாட்களும் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்.

இன்று ரொம்ப யோசிக்கிறேன் என்று எண்ணியவாறு சமையல் அறைக்குள் நுழைந்தாள். பருப்பு , இரசம், கேரட் பொரியல், இட்லி, வெங்காய சட்னி என்ற ஓட்டத்துடன் நடுவில் மாமியார், மாமனாருக்கு காபி கொடுத்துவிட்டு , உணவை கட்டிவிட்டு, நிமிர்ந்த பொழுது மணி 6:50. மட மட என உடை மாற்றிவிட்டு, அப்பொழுது தான் எழுந்த கணவனுக்கு காபியை வைத்துவிட்டு வெளியேறினாள். வந்து இரண்டு நிமிடத்தில் பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளை 8:30 மணிக்கு அலுவலகத்தில் ரம்யா எழுப்பி விட்டாள். இந்த 1.30 மணி நேரமாவது ஓய்வாகிறதே, எத்தனை பேருக்கு இது கிடைக்கும் என்ற எண்ணத்துடன் அவள் வேலையிடத்தை நோக்கி நடந்தாள்.

இப்பொழுது அவளுக்கான வேலைகளை இன்னும் சிரத்தையுடன் இருக்க வேண்டும். அவள் கருவுற்றிருப்பதை அறிந்தவுடன் அவளது லீட் சொன்னது, "நல்ல விஷயம். ஆனால் இதனால் அடிக்கடி விடுப்பு எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்", என்பது தான். "நீ மெடர்னிட்டி லீவ் எடுத்தாலே ரேட்டிங் உதைக்கும். ஒரு சைக்கிள் நம்ம ப்ரமோஷன் கோவிந்தா தான். இப்பவே கொஞ்சம் ஓவரா தான் உன்னை மானிட்டர் பண்ணுவாங்க..." என்றனர் தோழியர். வேலைப் பளுவில் உணவுவேளை வந்துவிட்டது.


"மீனா டீ டைம்ல எங்க வீட்டுக்கா போன? "
"ம். குட்டிப்பயன் மோஷன் போய்விட்டான். போன் வந்தது. அதான் போய்ட்டு வந்தேன்"
'அடப்பாவி. ஏன் வீட்ல இருக்கிறவங்க செய்ய மாட்டாங்களாமா?"
"வேலைக்கும் ஆள் போடக் கூடாதாம். இதுக்கும் நான் தான் ஓடணுமாம்."
"நீ ஒரு நாள் போகாமல் இரு. எல்லாம் சரியா தான் இருக்கும்"
"மீட்டிங் இருக்குனு சொல்லிட்டு ஒரு நாள் 2 மணி நேரம் கழிச்சி போனேன். அப்படியே தான் இருந்தான்",
என்றவளின் கண்களில் நீர்.
இத்தனைக்கும் இது காதல் திருமணம். பெற்றோர் காதலை ஒத்துக்கொண்டதால், இனி அவர்கள் சொல்படி மட்டுமே கேட்பதாக உறுதி எடுத்துக் கொண்ட கணவன் எதிலும் தலை இடுவதில்லை. ஆயிரங்கள் சம்பாதித்தாலும் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள முடியாது; மாதாமாதம் சம்பளம் அவர்களிடம் போய் , கணக்கு சொல்லி தான் காசு பெற்றுக்கொள்ள முடியும். குழந்தைக்கு அழகாக ஒரு சட்டை கூட அவளால் எடுக்க முடியாது.

"எல்லா காசும் அவங்களுக்கு தான் கொடுக்கற. பேசாமல் வேலைக்கு போக முடியாதுனு சொல்லிடு"
"ஒரு 8 மணி நேரமாவது நான் நிம்மதியா இருக்கலாம்னு பார்க்கிறேன்",
வருத்தம் நிறைந்த சிரிப்புடன் மீனா கூறினாள்.

தான் கூட இப்படித் தான் இப்பொழுதெல்லாம் நினைப்பதாகத் தோன்றியது. ஏன் இதில் இருந்து வெளி வர முடிவதில்லை. முடியாது என்றால் என்ன ஆகும்? கங்காவிற்கு நடந்தது போல் ஆகுமா? அம்மா, அப்பா அழைக்கப்படுவார்கள். பஞ்சாயத்து நடக்கும். இசைவாக இல்லாவிட்டால் அவளை அழைத்துச் செல்லலாம் என்பார்கள். அவர்கள் வீட்டில் தானே இருக்கிறாள்? அவளால் அவள் பெற்றோர் சலனப்படுவதைக் காண முடியாது. அவளைக் கண்டு இருவரும் மருகிவிட மாட்டார்களா?


"நீ ஆபீஸ் பக்கத்தில் வீடு பார்க்கணும்", என்ற ஜெனியைப் பார்த்து புன்னகைத்தாள். ஜெனிபர் அவள் திருமணத்தின் பொழுதே தெளிவாகப் பேசி அலுவலகம் அருகிலேயே வீடு பார்த்து இருக்கிறாள். "பெண்களுக்கு இருக்கும் சுமைகளுக்கு வீடு அருகில் இருப்பது நலம்", என்பது அவள் எண்ணம். அவள் சொல்வதின் நியாயங்களைப் புரிந்து கொள்ளும் கணவன். என் கணவர் வீட்டு விஷயங்களில் தலையிடுவதே இல்லை என்று கூறாமல் மழுப்பலாக சிரித்தாள்.

"வீட்டு வேலைக்காவது ஆள் இருக்கா?", ஜெனி
"வீடு பெருக்குவதற்கு மட்டும் வேலைக்கு ஆள் இருக்கு", என்றாள். "பாத்திரம் கழுவறது எல்லாம் ஒரு வேலையா. வேலைக்காரங்க அதெல்லாம் ஒழுங்கா செய்ய மாட்டாங்க. வீட்டுக்குள்ள வேலைக்கு ஆள் வச்சிருக்கிறதே பெரிசு", அவள் மாமியாரின் கொள்கை.

"உனக்கு இப்படி. எங்க வீட்டு பக்கத்தில ஒரு ஆண்ட்டி எங்கம்மாட்ட அழறாங்க. மருமகள் எல்லா வேலையும் அவங்கள பார்க்கச் சொல்றாளாம். இருபத்திஐயாயிரம் வீட்டு வாடகை கொடுக்கறவங்க ஆயிரம் ரூபாய் கொடுத்து வேலைக்கு ஆள் வச்சிக்க மாட்டாங்களாம். மொத்ததில பொண்ணா பிறந்தா ஒண்ணு மருமகளா கஷ்டப்படணும் இல்ல மாமியாரா கஷ்டப்படணும் போல", என்றாள் ஜெனிபர்.

"வீணா பத்தி கேள்விப்பட்டியா?" என்றாள் ரம்யா. வீணாவிற்கு அவளைவிட குறைவாக சம்பாதிக்கும் பையன் தான் பார்த்தார்கள். திருமணத்திற்குப் பின் தாழ்வு மனப்பான்மை வந்தால் என்று அவள் யோசித்த பொழுது, ராஜி தான் கூறினாள், "அது பத்தி அவர்கிட்ட பேசிட்டு நீ முடிவு எடு. அது மாதிரி நான் யோசிச்சிருந்தால் எனக்கு ஒரு அழகான குடும்பம் மிஸ் ஆகி இருக்கும்", என்றாள். ராஜி வீட்டில் அவள் கணவர், மாமனார், மாமியார் எல்லோரும் அன்பைப் பொழிபவர்கள். எல்லோரும் எல்லா வேலைகளும் பகிர்ந்து செய்யும் ஓர் அழகான குடும்பம். எல்லோருக்கும் அப்படி அமைவது இல்லையே!!!

"நாலு வருஷம் ஆகிடுச்சு. இப்ப என்னனு தெரியல, வீணா வேலையை விடாட்டி, பிரிச்சிடலாம்னு அவங்க மாமியார் சொல்றாங்களாம். அவரும் சரிங்கறாராம். கையில குழந்தையை வச்சிகிட்டு எப்படி யோசிக்கறாங்கனு புரியலை. என்ன பண்றதுனு கேட்டாள். என்ன சொல்ல முடியும்? சினிமால வர்ற மாதிரி விட்டுடுனு சொல்றது சுலபமா இல்லை. அவள் தான் அவள் வாழ்க்கையை வாழணும்".

படித்து வேலையில் இருப்பதால் மட்டும் பெண்ணுக்குப் பிரச்னைகள் குறைந்து விடுகிறதா? இரட்டைச் சவாரியில் தனித்து போராட வேண்டி உள்ளது. அவள் தீராத பிரச்னையால் தனிமைப் படுத்தப்பட்டால் படிப்பும் வேலையும் நிச்சயம் உதவும். அன்றாடப் பிரச்னைகள் என்றால் ஒட்டவும் முடியாது உதறவும் முடியாது தவிக்க வேண்டும். சமைக்க முடியாது என்று ஒரு நாளேனும் உரிமைக் குரல் தன்னால் எழுப்ப முடியுமா என்று தெரியவில்லை.

சற்று நேரம் மெளனமாக உணவு முடிந்தது. வீணாவின் பிரச்னையின் தாக்கத்தில் எல்லோரும் அமைதியாக இருந்தனர். வீணா என்ன செய்வாள் என்ற எண்ணம் வேலைப்பளுவிலும் நான்கைந்து முறை வந்த மசக்கை வாந்தியிலும் அமிழ்ந்து போனது. வீட்டிற்கு கிளம்பும் நேரம் வந்த பொழுது மனமும் உடலும் சோர்வாக இருந்தது.மீண்டும் பேருந்தில் ஏறி வீடு போக எட்டு மணி ஆகும். இவள் வருகைக்காக வீடு காத்திருக்கும். இரவு உணவுக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாக வேண்டும். பின் பாத்திரங்கள் கழுவி, அடுப்படி ஒதுக்க வேண்டும். ஐந்து மணிக்கு அலாரம் வைத்து படுக்கும் பொழுது கடிகார முள் பதினொன்றை நெருங்கி விடும். இப்பொழுது வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் சேர்த்து அவளே கவனித்துக் கொள்ள வேண்டும்.

நாளை பிள்ளை வந்த பின்னும் எதுவும் மாறாதோ என்று தோன்றியது. வேலைக்கு செல்லாது இருந்தாலாவது அம்மா வீட்டிற்கு சில நாட்கள் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஞாயிறு என்றால் அம்மா வருவாள் என்ற மாற்றம் தவிர "நாளையும் மற்றொரு நாளே" என்று தோன்றியது. அடுத்த சில மணித்துளிகளாவது சற்று நிம்மதியுடன் இருப்போம் என்று பஸ் இருக்கையில் அமர்ந்து கண் அயர்ந்தாள்.


பி.கு: இது உண்மை சம்பவங்களின் தொகுப்பே!!!

Thursday, July 16, 2009

பனி உலகமும் மீன் உலகமும்

யாழினிக்குப் பனி இருக்கும் இடம் செல்ல வேண்டும் என்று ஆசை. ஸ்விட்சலாந்துக்கெல்லாம் அழைத்துச் செல்ல முடியாது என்று சென்னை "அபிராமி மால்" பனியுலகம் சென்றோம் (2 வாரம் ஆகிவிட்டது. லேட்டான பதிவு கல்லிருந்தால் ... என்ற பழமொழி போல, இணைய இணைப்பு இருந்தால் நேரம் இல்லை, நேரம் கிடைத்தால் இணைய இணைப்பு இல்லை...). நீங்கள் மால் உள்ளே நுழையக் கட்டணம் கிடையாது. திரையரங்குகளுக்கு சென்று சினிமா பார்க்கலாம் (டிக்கட் வாங்கிட்டுதான்) அல்லது "பனியுலகம்", "மீன் உலகம்", "கிஸ்ஸிங் கார்ஸ்", "குட்டீஸ் உலகம்" எல்லாம் டிக்கட் வாங்கி செல்லலாம். எல்லா உலகுக்கும் சேர்த்து 250ரூ கோம்போ பாக்கேஜ் உண்டு. இல்லையெனில் முறையே 150, 20, 40, 50 என்று நுழைவுக்கட்டணம். இது போக "விண்டோ ஷாப்பிங்" பண்ண கடைகள் உண்டு. கார் பார்க்கிங் தான் பிரச்னை. நாங்கள் சனி காலை சென்றதால் கொஞ்சம் தப்பித்தோம். உணவுக்கு ஃபுட் கோர்ட்டும் உள்ளது.

முதலில் 150ரூ கொடுத்து பனியுலகம் சென்றோம். ஜெர்கின், காலணி, கையுறை, பாஸ்போர்ட் எல்லாம் கொடுக்கிறார்கள். இந்த பாஸ்போர்ட்டில் அடுத்த முறை நம்மை வரவழைக்க சில தள்ளுபடிகள் உண்டு. உள்ளே ஒரு பெரிய பனி சறுக்கு இருந்தது. பனிபொம்மைகள் செய்து பார்த்தோம், பின் பனியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொண்டோம். சில்லென்று பனி விளையாட்டு அருமையாக இருந்தது. கொஞ்சம் குளிராக இருந்தால் "இக்ளூ"வுக்குள் சென்றோம். சின்ன "ஸ்லெட்ஜ்" இருந்தது. குட்டீஸை வைத்து அதில் இழுக்க அவர்களுக்கு ஜாலிதான். மொத்த 20 நிமிடத்தில் கடைசி ஓரிரு நிமிடம் இடி, மின்னல் காற்று வந்து சிலிர்க்க வைத்தது."ஸ்விட்சர்லாந்து மாதிரியே இருக்கும்மா" என்று குட்டீஸ் கூறி (ஏதோ ஸ்விட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தாற்போல்...) லூட்டி அடித்தார்கள். அந்த பனிமழையை விட அவர்களது மகிழ்ச்சி சில்லென்று மனதுள் இறங்கியது.

அடுத்து மீன் உலகம். பனி உலகம் சென்றதால் 15ரூ நுழைவுக் கட்டணம். சின்ன அளவுதான் என்றாலும் அங்கிருந்த பெண் கொடுத்த விளக்கங்கள் அருமை. மெல்ல மெல்ல நட்சத்திர மீன் ஊர்ந்தது.
ஃப்ளவர் ஹார்ன், கையைக் காட்டிய இடமெல்லாம் வந்தது. கெள ஃபிஷ் மாடு போன்ற கொம்புடன் இருந்தது.நீமோ ஸீ அனிமோனுடன் இழைந்து விளையாடிக் கொண்டிருந்தது. உயிருடன் மீனை "ஸீ அனிமோனுக்கு" உணவாக இட, அது அப்படியே குவிந்து அதன் இரத்தத்தை உரிஞ்சி விட்டது. நீமோ மிஞ்சிய உடம்பை உண்டது.
நீமோவுக்கு செதில்கள் இல்லாத்தால் ஸீ அனிமோன் ஒன்றும் செய்யாதாம்.அப்புறம் இறால்களுக்கு உணவிட்டார். அட!!! எட்டுக்கால் பூச்சி ஓடுவது போல் இருந்தது. பத்து இறால் சேர்ந்தால், நீந்திக் கொண்டிருக்கும் மீனை வேட்டை ஆடிவிடுமாம்.

"பிரான்ஹா" மீனின் பல்லைப் பிடுங்கி மீன்தொட்டியில் போட்டிருந்தார்கள். பல்லிருந்தால் தொட்டியை உடைத்து விடுமாம். பத்து மீன்கள் சேர்ந்தால் ஒரு ஆளையே கொன்றுவிடுமாம். அம்மாடியோவ்!!! சின்னதா இருக்கே என்ற சலிப்புடன் நுழைந்த்வர்கள் மீன் பற்றி தகவல்கள் தெரிந்த பிரமிப்புடன் வெளியே வந்தோம்.அப்புறம் "கிஸ்ஸிங் கார்ஸ்", "குட்டீஸ் உலகம்". குட்டீஸ் உலகம் ஏழு வயதுக்குட்பட்டவர்களுக்குரிய விளையாட்டுக்களுடன் இருந்தது. நந்தினிக்கு வாங்கிய டிக்கட் வேஸ்ட். "கிஸ்ஸிங் கார்ஸ்" வழக்கமான கார் மோதல் தான்.


ஓரிடத்தில் மெகந்தி, டாட்டூ, போர்ட்ரெய்ட் எல்லாம் இருந்தது. அறுபது ரூபாய் கொடுத்து ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்தோம். "நாமே இதை பெயிண்ட் பண்ணலாம்" என்று நான் வாய் விட, மறுநாள் ஒரு மணிநேரப் பொழுது யாழினிக்கும் நந்தினிக்கும் என் கையில் அந்த வாக்கை சரி பார்க்க உதவியது :-)யாழின் கைவண்ணம்நந்துவின் கைவண்ணம்

Wednesday, July 1, 2009

என்னோட ராசி என்ன ராசி?

காலையில் வானொலியில் இராசி பலன் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனாலோ என்னவோ நந்தினி வந்து அவள் இராசி என்ன என்று கேட்டாள். எங்க வீட்டு இராசி பலன் காமெடி:

நந்தினி : நான் என்ன இராசி?
நான் : லியோ
நந்தினி : அப்படீனா?
நான் : சிங்கம்
நந்தினி: உர்.... நான் சிங்கம்.
நான்: தமிழ்ல வேற இராசி வரும். தராசுனு நினைக்கிறேன்
நந்தினி: தராசுனா என்ன மிருகம்?
நான்: ???

யாழினி: நான் என்ன இராசி?
நான்: ஏரிஸ் - ஆடு
யாழினி : ஓ!! (சற்று யோசித்து) அதான் அம்மா.. நான் பேசும்பொழுது எல்லாம் "மே மே" னு சத்தம் வருதுமா...
நான்: ??? (விவேக்கோட காக்கா பிரியாணி காமெடி நினைவுக்கு வந்தது)

இதில் சிங்கம் ஆட்டை வெல்லும் என்று வேறு ஒரு சண்டை. நான் சொன்னேன் "இது மலை ஆடு, சிங்கத்துக்கு ஈடு கொடுத்து சண்டை போடும் தெரியுமா?". வேற என்ன சொல்ல, இரண்டு பேரும் சமம் என்று சொல்லணும் இல்லையா?