என் மேகம் ???

Saturday, August 25, 2012

மழை

மழை நினைவுகள்
------------------------------

ஓயாத கதைகளாக
பெய்கிறது மழை

ஒவ்வொருவருக்கும்
ஏதோ ஒன்றாக

மண்தொடும் மழையோடு 
கிளரும் நினைவுகள்

மண்வாசனை போல்
சுகமாக

அடித்து வரும் குப்பை போல்
வலிகளாக

சாரல் போல்
இதமாக

சூறாவளி போல்
கொடுமையாக

மழை வெறித்தவுடன்
வெறித்து போயினமழைப் பேச்சு
---------------------

சில்லென்ற காற்றோடு
கண்மூடி
மனதோடு பேசுகிறேன்

காகிதக் கப்பல்
பயணங்களை
மழலையோடு  பேசுகிறேன்

மழைக்கால
நினைவுகளை
உறவோடு பேசுகிறேன்

மழைப் பேச்சோடு
விழித்து வருகின்றன
உறங்கிக் கிடந்த  பேச்சுக்களும்


மழை இரவு
------------------------------

இலை நுனியில்
நட்சத்திரங்கள்

சாலை ஓரத்தில்
நிலவுகள்

மேகங்களோடு
மனிதர்கள்


 

Tuesday, June 26, 2012

நினைவுகள் பூட்டிய வீடுபூட்டிய வீடு
கண்ணில் பட்டதும்
உருகத் தொடங்கிடும்
நினைவுகள்

எத்தனை முறை
பூட்டித் திறந்தாலும்
சுற்றிக் கொண்டே இருக்கும்
நினைவுகள்

எத்தனை முறை
பெருக்கித் துடைத்தாலும்
புதுவெள்ளமாக பொங்கும்
நினைவுகள்

ஒவ்வொரு கணமும்
உறைந்து போகின்றன
காலத்தின் துகளாய்
என்றென்றும் பூமியில்


பூட்டப்படும் பொழுதெல்லாம்
மனதோரத்தில்
உறைந்து நிற்கின்றன
நினைவுத் துகள்கள்

Sunday, April 8, 2012

ஜுராங் பேர்ட் பார்க் (சிங்கப்பூர் பயணம் - நாள் 5)
முந்தைய பாகத்திற்கு "இங்கே

ஷாப்பிங்க்கு முந்தைய கடைசி ஊர் சுற்றல் ஜுராங் பேர்ட் பார்க். ஜூ போலவே மெட்ரோ மற்றும் பஸ் பிடித்து போக வேண்டும். கிட்டதட்ட 30 நிமிடம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி இருந்தது. சிங்கப்பூரில் எனது அதிக காத்திருப்பு இதுவே. பட்டர்பிளை பார்க், ஜூ எல்லாம் பார்த்துவிட்டதால், பறவைகள் பார்க்க கொஞ்சம் உற்சாகம் குறைந்துவிட்டது குட்டீஸ்க்கு. அவர்களை ஈர்த்து வந்தது “பேர்ட்ஸ் ஆப் ப்ளே” என்ற விளையாட்டு திடல் தான்... நீர் விளையாட்டு...

பார்க்கில் நுழைந்தவுடன் “பாராரயில்” டிக்கட் எடுத்துவிட்டோம். ட்ராமும் உண்டு...ஜூவில் ட்ராமில் போய்விட்டதால் இங்கு பாராரயில். முதலில் “லோரி லாஃப்ட்” நிறுத்தம். பறவைகளுக்கு உணவு அளித்தோம். சில பறவைகள் கிண்ணத்தைப் பிடித்து இழுக்கின்றன. சில, தைரியமாக நம் மேல் ஏறி காது, தலை எல்லாம் கொத்துகின்றன. பாரா ரயிலில் இருந்தே பறவைகளைப் பார்த்து நீர் விளையாட்டுக்கு வந்தோம். பிள்ளைகள் நீரில் விளையாட அருகே பறவைகள் பார்த்தோம். 3:30க்கு “பென்குவின் ஃபீடிங்”, 4:00 மணிக்கு “ஹாக் ஷோ” பார்க்க ப்ளான். ஆனால் மழை வந்ததால், “பென்குவின் ஃபீடிங்” மட்டும் பார்த்தோம்.மறுநாள் ஷாப்பிங்குடன் சிங்கப்பூர் பயணம் இனிதே முடிந்தது.

Wednesday, April 4, 2012

சிங்கப்பூர் ஜூ + நைட் சஃபாரி (சிங்கப்பூர் பயணம் - நாள் 4)

முந்தைய பாகத்திற்கு "இங்கே

இரண்டு நாளா காலைல அவசர அவசரமா கிளம்பி 10 மணிக்குள்ளே செண்டோசாவில் இருக்க ஓடினோம். அடுத்த இரண்டு நாள் கொஞ்சம் மெதுவா தான்னு முடிவு பண்ணிட்டோம். ஜூவைப் பகலிலும், இரவிலும் பார்க்க முடிவு பண்ணினதால், மெதுவா கிளம்பறது இன்னும் நியாயமாப் பட்டது. சிங்கப்பூர்ல மெட்ரோ த்டங்களை அழகா இணைச்சிருக்காங்க. வரைபடமும் தெளிவா இருக்கு. எங்கே இரண்டு தடம் இணையுதுனு பார்த்து , கரெக்டா அந்த ஸ்டேஷன்ல இறங்கிட்டா, இன்னொரு தடம் மெட்ரோ ஏறுவது எளிதா இருக்கு. உதாரணத்துக்கு நாங்க ஜூ போக ”ஆங் மோ கியோ” ஸ்டேஷன் "NS" வழிதடம். நாங்க இருக்கிற ஃபேரர் பார்க், "NE" வழிதடம். “NS", "NE" வழிதடம் இணையறது “டோபி காட்” என வரைபடம் பார்த்தாலே தெரியும். அதனால ”ஆங் மோ கியோ”க்கு டிக்கட் எடுத்துட்டு, "NE" வழிதடத்தில் டோபி காட்ல இறங்கி அங்கே “NS" வழிதடம் மாறி ”ஆங் மோ கியோ” இறங்கி பஸ் பிடிச்சு ஜூ போகலாம்.


ஜூவில் நாங்க வாங்கினது ”பார்க் ஹாப்பர் 3-in-1"
ஒரு மேப் கொடுத்துடறாங்க. அதில் விலங்குகளின் உணவு வேளைகளும், ஷோ வேளைகளும் இருக்கும். நாம ப்ளான் பண்ணி பார்க்கணும். நாங்க “அனிமல் ஷோ” ”ஸ்ப்லாஷ்” மட்டும் ப்ளான் பண்ணினோம். முதல்ல போட் ரைட் போனோம். அப்புறம் வித விதமான் விலங்குகள். நம்ம ஊர்ல பார்க்க முடியற யானை எல்லாம் விட்டுட்டோம். ட்ராம் டிக்கட் எடுத்துட்டு, அப்பப்ப ட்ராம்ல ஏறி ஷோ டைமுக்கு கரக்டா ஆஜ்ர் ஆகிட்டோம்.

அனிமல் ஷோ வளையத்தில் தாவும் நாய், மறைத்த வாட்சை கண்டுபிடிக்கும் நாய், ஓடி செல்லும் பூனை எலி என சின்ன குழந்தைகளுக்கானது


ஸ்ப்லாஷ் ஷோ சீலின் சாகசம். முன்னால் உட்கார்ந்தால் சுழன்று சுழன்று நம் மீது தண்ணீர் இறைக்கும்.
பென்குயினைக் கண்டதுடன் பகலில் ஜூவின் பயணம் முடிவுற்றது. இனி “நைட் சபாரி” 7:30 மணிக்கு. அங்கே சற்று கொறித்துவிட்டு நைட் சபாரி நோக்கி சென்றோம்.

நைட் சபாரி செல்லும் வழியில் தீ விளையாட்டு நடக்கும்

நைச் சபாரியில் ட்ராமில் ஏறி விலங்குகளை இரவின் ஒளியில் காட்டுவார்கள். வித்யாசமான அனுபவம். நடந்து செல்ல நான்கு தடங்கள் உண்டு. "leopard trai", "fishing cat trail" "Forest giants trail" "naracoorte cave". ட்ராமில் லெபர்ட் ட்ரைய்லில் இறங்கலாம். இறங்கினோம். காட்டுக்குள் செல்வது போல் இருந்தது. நல்ல இருள். ஒளி இருந்தாலும், கொஞ்சம் திக் திக் தான்... குட்டீஸ் ரொம்பவே பயந்து விட்டார்கள். கூண்டுக்குள் இருக்கும் சிறுத்தை தான் என்று அறியும் வரை அவர்களுக்கு திக் திக் திக் தான். வவ்வால் இருக்குமிடம் செல்லும்பொழுது உறைந்து போனார்கள். கடைகளும் உண்டு... ஒரு கடையில் ஜூஸ் குடித்தபின் தெளிந்து, ஒண்ணும் வெளியே இல்லை என்று தைரியமாக எல்லா தடங்களுக்கும் ரெடியானார்கள். ரிலாக்ஸ்டாக ட்ராமில் ஏறி, பின் எல்லா தடமும் சென்று நைட் சபாரி ஜாலியாகச் சென்றது.


7:30, 8:30 என்று அனிமல் ஷோ உண்டு. சனி/ஞாயிறு 9:30க்கும் உண்டு. எனவே நைட் சஃபாரி முடிந்து அனிமல் ஷோ போனோம். அவ்வப்பொழுது கழுதைப்புலிகள் வேலியிடப்பட்ட மேடைக்குப் பின் உண்வு எடுத்து சென்றன. மலைப்பாம்பை பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எடுத்தனர். இளம் பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு மாயமானார்கள். நீர் நாய்கள் அழகாக ப்ளாஸ்டிக், பேப்பர் , பாட்டில் என இனம் பிரித்து அதனதன் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைச் சேர்த்தன.

இவை முடிந்து ஊர் திரும்ப பேருந்துகளும், மெட்ரோக்களும் நள்ளிரவு வரை இயங்குகின்றன. கடைசி பேருந்து/மெட்ரோவின் நேரத்தைக் குறித்துக் கொள்வது நலம்.

Tuesday, April 3, 2012

செண்டோசா தீவு(சிங்கப்பூர் பயணம் - நாள் 3)

முந்தைய பாகத்திற்கு “இங்கே

நேற்று சென்ற “யுனிவர்சல் ஸ்டூடியோசும்” செண்டோசா தீவில் தான் இருக்கு. அது போக இந்த செண்டோசாவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சம் உள்ளது. நிதானமாகப் பார்க்க 2 நாள் கூட தேவைப்படலாம்.

செண்டோசா தீவை மூன்றாகப் பிரித்துள்ளனர்.
1. இம்பியா லுக்கவுட் (Imbiah lookout)
2. சிலோஸா பாயிண்ட் (Silosa point)
3. பீச் (beach)

நாம் சென்டோசா போய்ட்டா, இந்த மூணு இடத்துக்கும் பஸ் சுத்திட்டு இருக்கும். வேணுங்கற இடத்துக்கு ஏறி இறங்கலாம். நேத்து மாதிரியே , ஹார்பர் ப்ரண்ட் போனோம். செண்டோசா எக்ஸ்ப்ரஸ் டிக்கட்டுக்கு பதிலா ”செண்டோசா ப்ளே பாஸ்” வாங்கினோம். மூணு விதமான பாஸ் இருக்கு ”டே ப்ளே பாஸ்” , ”நூன் ப்ளே பாஸ்” , ”த்ரில் ப்ளே பாஸ்”. “டே ப்ளே பாஸ்” 9 மணி-7 மணி வரைக்கும் பயன்படுத்தி அதில் இருக்கிற 15 இடங்களுக்கு போகலாம். இதில் “அண்டர் வாட்டர் வேர்ல்டு” சேர்த்தி இல்லை. கேபிள் கார் உண்டு. அதனால் தீவுக்கு எக்ஸ்பிரசைப் பிடிக்காமல், கேபிள் கார்ல போனோம். கேபிள் கார் போற வழில பாஸை, டிக்கட்டா மாத்தணும். இது தெளிவா இல்லாததால் நாங்க உட்பட நிறைய பேர், கேபிள் கார் ஏற வந்து பிறகு, திரும்ப கீழே போய் டிக்கட் மாத்தினோம்.

1. கேபிள் கார்
கேபிள் கார்ல போனால் 10 நிமிஷத்தில் இம்பியா லுக்கவுட் வந்துடும். மேலே இருந்து வியூ நல்லா இருக்கும்.

2. அண்டர் வாட்டர் வேர்ல்ட்
இது ப்ளே பாஸுக்கு உட்பட்டது அல்ல. 11 மணிக்கு டால்ஃபின் ஷோ இருந்ததால், முதல்ல அண்டர் வாட்டர் வேர்ல்ட் முடிச்சரலாம்னு ப்ளான். பஸ்ஸைப் பிடிச்சு சிலோசா பாயிண்ட் போனோம். ஸ்டிங் ரே தொட்டு பார்த்தோம். அப்புறம் மீன் துண்டு வாங்கி, சாப்பிடக் கொடுத்தோம். அப்புறம் டால்பின் ஷோ. இரண்டு சீல், இரண்டு டால்பின் பால் வச்சு ஷோ நல்லா இருந்தது.
ஷோ முடிஞ்சு சுத்தி பார்க்க நிறையவே மீன்கள் இருக்கு. டிராவலேட்டரில் நின்னுட்டே ஒரு ரவுண்ட் நம் தலைக்கு மேலே மீன்கள் பார்க்கலாம்.3. சினி பிளாஸ்ட்
ஃபோர்ட் சிலோசா பத்தி கவலைபடாமல், மீண்டும் பஸ் பிடிச்சு இம்பியா லுக்கவுட் வந்தோம். சினி பிளாஸ்ட் எங்களை வரவேற்றது. இங்கே 3 விதமான 3D ஷோ இருக்கு. எல்லா இடத்திலேயும் “நோ அப்லிகேஷன்ஸ்” என்று சொல்லி போட்டோ எடுக்கிறாங்க. இங்கேனு இல்லை... சிங்கப்பூர் பூராவுமே இப்படி தான்..

i) 4D மேஜிக்ஸ்
4D-ல பைரேட்ஸ். யுனிவர்சல் ஸ்டூடியோஸ்ல ஷ்ரெக் 4D பார்த்தால் இது தேவையில்லை தான்.

ii) எக்ஸ்ட்ரீம் லாக் ரைட்
அமேசான் காட்டீல் வெட்டப்படும் மரத்துண்டாக நம் பயணத்தை 3D-ல் பார்க்கலாம். ட்ரான்ஸ்பார்மர்ஸ் மாதிரி ரொம்ப சூப்பரா இல்லாட்டியும், நல்லா இருந்தது.

iii)டெஸ்பரடோஸ்
இது ஷூட்டிங். நம்ம சீட்ல இருந்து திரையைப் பார்த்து கையில் இருக்கிற துப்பாக்கியால் ஷூட் பண்ணனும். பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

4. பட்டர்ஃபிளை பார்க்
அடுத்து போனது பட்டர்ஃபிளை பார்க். இங்கே பல விதமான பூச்சிகள் உண்டு, சில பறவைகளும் உண்டு.5. நேச்சர் வாக்
சின்ன சின்ன பறவைகள் பூச்சிகள் இவை இருக்கானு நாம் பார்த்துட்டே போற மாதிரி ”நேச்சர் வாக்”னு ஒரு தடம் வச்சிருக்காங்க. ஒரே சில்வண்டு சத்தம்... நிஜமா ஏதாவது எஃபக்டானு தெரியலை. ஒரு தேன்சிட்டு கண்ல தட்டுபட்டுச்சு.

6. ஸ்கை ரைடு/லூஜ்
லூஜ்-னு ஒரு சின்ன மூணு சக்கர வண்டி. காலை நீட்டி உட்கார்ந்தால், புவியீர்ப்பு சக்தியில அது நக்ர, நாம் கைப்பிடியை வச்சு கண்ட்ரோல் பண்ணலாம். அதுல அப்படியே கீழே போய்ட்டு, ஸ்கை ரைடு வழியா மேலே வந்தோம்.


இந்த லூஜை அப்படியே ஸ்கை ரைடோட மாட்டி விட்டுடறாங்க... இந்தப் பக்கம் திரும்பி வர.

7. டைகர் ஸ்கை டவர்
இதுல சிங்கப்பூரின் நமக்கு 360 டிகிரி வியூ பார்க்கலாம். ஒரு சுழலும் கேபினில் உட்கார, அது மெல்ல மெல்ல மேலே சுழன்றுட்டு போய், கீழே வந்து விடும். இந்த கையேடு ஒண்ணுல, படிச்ச விஷயம் 1869-ல் சிங்கப்பூர்ல 72 பேர் என்பது அப்போதைய 75% மக்கள் தொகை.8. மெர்லயன்
அடுத்து போனது மெர்லயன்... சிங்கப்பூரின் சின்னம். சிங்கத்தின் தலையும், மீனின் உடம்பும் சேர்ந்தது. இதன் வாயிலும், தலையிலும் என்று இரண்டு வியூ பாயிண்ட்ஸ் உண்டு. உள்ளே போனால் முதலில் சிங்கப்பூரின் கதை சொல்லும் சின்ன படம். (சிங்கபுரம் தான் சிங்கப்பூர்). மெர்லயன் அதிர்ஷ்டம் தரும் என்று சொல்லி ஒரு காயின் கொடுத்தார்கள். அதை சிங்கத்தின் வாயில் போட்டால் டோக்கன் கிடைக்கிறது. அதற்கு ஒரு கீ செயின் பரிசாக கிடைக்கிறது. மெர்லயன் கொடுக்கும் அதிர்ஷ்டப் பரிசு.


9. ஃப்ளையிங் ட்ரபீஸ்
இம்பியா லுக்கவுட்டில் எங்களுக்குப் பிடித்தவை முடிந்தன. செண்டோசா எக்ஸ்பிரசைப் பிடித்து பீச் ஸ்டேஷனில் இறங்கினோம். அங்கிருந்து “ஃப்ளையிங் ட்ரபீஸ்” போக ப்ளான். இந்த பீச் பாயிண்ட்ல ட்ராம் சுத்துது. நடுவில் 4 (அ) 5 இடம் இருக்கு. குட்டீஸ் ஃப்ளையிங் ட்ரபீஸ்க்கு ஆவலா இருந்ததால், ட்ராமில் அங்கே போனோம். ஆனால் அதைப் பார்த்த உடனே அதுங்க இஷ்டம் காணாமல் போய்டிச்சு. என் வீட்டுக்காரர் தான் அந்தரத்தில் தலைகீழா தொங்கி வலையில் குதிச்சார். நாங்க கை தட்டி ஆரவாரம் செய்யறதோட நிறுத்திகிட்டோம்.


10. செக்வே ரைடு
இது சும்மா இரண்டு சக்கர வண்டி , கைப்பிடியைத் திருப்பறதில் கண்ட்ரோல் பண்ணலாம். தசாவதாரம் படத்துல கமல் முதல்ல லேப்ல வர்ற மாதிரி இருக்கும். இதுல அப்படியே ஒரு ரவுண்ட்... தேவைனா ஒரு கைடும் வர்றாங்க.. நான் தடுமாறினப்ப உதவினாங்க...


இன்னும், ஆசியாவின் தென் கிழக்கு முனையெல்லாம் பார்க்க இருந்தாலும், குட்டீஸ் ஏற்கனவே அலுத்துப் போயிருந்ததால் போகலை.

அடுத்து “சாங்ஸ் ஆஃப் த் ஸீ” போகலாம்னு ப்ளான். ஆனால் டிக்கட் கிடைக்கலை. அது என்னதுனு தெரிஞ்சுக்க ஒரே ஆவல். பார்க்க முடியலை. “க்ரேன்” டான்ஸ் இருக்கும்னு வாட்டர் ப்ரண்ட் ஸ்டேஷன் போக முடிவு செஞ்சோம். அது 9 மணிக்கு. வந்தது வந்தோம், என்ன தான் அதுனு பார்க்க ஆசை. திரும்ப செண்டோசா எக்ஸ்பிரசில் “வாட்டர் ப்ரண்ட்” ஸ்டேஷன் போகும்பொழுது, லேசா “சாங்ஸ் ஆஃப் த் ஸீ” தெரிஞ்சது. கடலில் லேசர் ஷோ. மீன் மாதிரி, ஆக்டோபஸ் மாதிரி கலர் கலரா அழகா தெரிஞ்சது. நின்னு பார்க்க விட மாட்டேனுட்டாங்க.

9 மணி க்ரேன் ஷோக்கு 8 மணிக்கே போய்ட்டோம். 9 மணில இருந்து ஒரு 10 நிமிஷம் தான் ஷோ. ஆனால் ரொம்ப அழகா இருந்தது க்ரேன்களின் நடனம். ஒளியும் நீரும் சேர்ந்து க்ரேன்கள் மிக அழகாகக் காதல் நடனம் ஆடின. “சாங்ஸ் ஆஃப் த் ஸீ” பார்க்காத வருத்தம் தீர்ந்தது.


இத்தோட செண்டோசா எக்ஸ்ப்ரஸ் , அப்புறம் மெட்ரோவில் ஃபேரர் பார்க் ஸ்டேஷன் வந்து மூன்றாம் நாள் கலர்ஃபுல்லா முடிஞ்சது.

Friday, March 30, 2012

யுனிவர்சல் ஸ்டூடியோஸ் (சிங்கப்பூர் பயணம் - நாள் 2)

முந்தைய பாகத்திற்கு “இங்கே

இரண்டாவது நாள் நாங்கள் திட்டமிட்டது ”யுனிவர்சல் ஸ்டூடியோஸ்” என்ற மெகா தீம் பார்க். நட்புகள் சொன்ன டிப், முன்பதிவு செய்வது நலம். ஏனெனில் அங்கு ஒரு நாளைக்கு இவ்வளவு பேர் என்ற கணக்கு உண்டு. வலை சொன்ன தகவல் முடிந்தவரை வாரநாட்களில் சென்று வாரயிறுதியைத் தவிர்க்கவும் என்பது. வலையில் இருந்த தகவல்களினால் சில குழப்பங்களும் வந்தது. பிடிமானமில்லாத் செருப்பு போடலாமா, லக்கேஜ் வேண்டுமா எனபதெல்லாம் தான். இந்த் குழப்பத்தில் அம்மாவுக்கு என் பொண்ணு செருப்பை போட்டு பாடுபடுத்திட்டேன் (பிடிமானம் இருக்கிற செருப்புக்காக). அதுக்கு அவசியமே இல்லாமல் வசதிகள் இருந்தன.

யுனிவர்சல் ஸ்டூடியோஸ் பொதுவாக 10 - 7 திறந்திருக்கும். வெள்ளி என்றால் ஹாலிவுட் என்ற ஒரு பகுதி மட்டும் இரவு 10 வரை இருக்கும். எங்களுக்கு ஹாலிவுட் அவ்வளவு ஈர்ப்பாக இல்லாததால் வியாழனுக்கு வலையில் முன்பதிவு செய்து சென்றோம். மெட்ரோ இரயிலில் “ஹார்பர் ப்ரண்ட்” என்ற ஸ்டேஷன் சென்று செண்டோசா எக்ஸ்ப்ரஸ் பிடிக்க வேண்டும்... பிடித்தோம்....

யுனிவர்சல் ஸ்டூடியோஸில் மொத்தம் 7 பகுதிகள்:
1. ஹாலிவுட் (Hollywood)
2. ம்டகஸ்கார் (Madagascar)
3. ஃபார் ஃபார் அவே (Far Far Away)
4. தி லாஸ்ட் வேர்ல்ட் (The lost world)
5. தி ஏண்டியண்ட் இஜிப்ட் (The Ancient Egypt)
6. சை-ஃபை சிட்டி (Sci-fi city)
7. நியூ யார்க் சிட்டி (NewYork City)

மேப் பார்த்ததில் ஹாலிவுட்டில் தொப்பி கடை ஒன்று தவிர எங்களை எதுவும் ஈர்க்கவில்லை. எனவே, ஹாலிவுட் & நியூ யார்க் சிட்டி எங்கள் லிஸ்டில் கடைசிக்குப் போனது. மீதியில் எல்லாம் ரைட்ஸ் உண்டு. 7 பகுதியா தெரிஞ்சாலும், எல்லாம் ரொம்ப தூரம் இல்லை. பக்கம் பக்கமா தான் இருக்கு. மேலும் “தி லாஸ்ட் வேர்ல்ட்” கிட்ட வாட்டர் வேர்ல்ட் உண்டு. இங்கே 12.30 மற்றும் 4.30 மணி போல தான் ஷோ உண்டு. இது நல்லா இருக்கும்னாங்க. அதனால் 12 மணி கிட்ட “தி லாஸ்ட் வேர்ல்ட்” போயிடணும்ங்கறதும் ப்ளான்.

எங்க முதல் விசிட் “மடகஸ்கார்”. இது இந்த படத்தோட தீம்ல இருக்கிற பகுதி. நான் இந்த படம் பார்க்கலை. ரெண்டு ரைட் உண்டு. ரெண்டுமே குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஆனால் பெரியவங்களும் போகலாம்.

i) Madagascar: A Crate Adventure
இது தண்ணில படகுல போவோம். போகும் வழில இந்த மடகஸ்கர் பட நடிகர்களோட ஒரு அனுபவம். வழியில் இந்த மிருகங்களின் பிரும்மாண்டமான உருவங்களும், அவற்றின் அசைவுகளும், திடீரெனெ மேலே விழுவது போல் வரும் பெட்டியும் அருமையாக அமைத்துள்ளனர்.

ii) King Julien’s Beach Party-Go-Round
இது நம்ம பிள்ளைங்க பீச்ல போகிற குதிரை பொம்மை சவாரி தான்.

2. ஃபார் ஃபார் அவே
இது ஷ்ரெக் படம் வச்சு தீம்.

i) Shrek 4-D Adventure
நீங்க அபிராமி மெகா மால்ல 4D சினிமா பாத்திருக்கீங்களா? கிட்டதட்ட அதே மாதிரி கொஞ்சம் பிரமாண்டாமா ஷ்ரெக்.


ii) Magic Potion Spin
இதுல தெரியாமல் ஏறிட்டோம். ரொம்ப சின்ன பசங்களுக்கானது. நம்ம ஊர் திருவிழாவில் சுத்துமே சின்னதா ஒரு சக்கர ராட்டினம்... அதே!!! அதனால் ஒண்ணும் சொல்றதுக்கில்ல...

iii) Enchanted Airways
ஒரு சின்ன ரோலர் கோஸ்டர். கொஞ்சம் கூட பயமில்லாமல் போகலாம் (ரோலர் கோஸ்டர்னு நினைச்சு ஏறினால் ஏமாத்தம் தான்...3. தி லாஸ்ட் வேர்ல்ட்
ஜுராஸிக் பார்க்கை தீமா வச்சு இந்த பகுதி இருக்கும்.

i) Jurassic Park Rapids adventure
இந்த ரைடை நாங்க மிஸ் பண்ணிட்டோம். இதுக்கு போனப்ப 50 நிமிஷம் காத்திருக்கணும்னும், நனைஞ்சுடுவோம்னும் சொன்னாங்க. அப்புறம் வரலாம்னு 4 மணிக்கு வரும்பொழுது, மழை பெய்யற மாதிரி இருக்குனு, ரைட் எல்லாம் நிறுத்திட்டாங்க. ரைடைப் பார்க்கவே அழகா இருந்தது... பாருங்க “ஹட்ரோ எலெச்ட்ரிக் ப்ளாண்ட்” எல்லாம்....


ii) Canopy Flyer
இது அந்தரத்தில் பறந்து, தீம் பார்க்கை மேலே இருந்து ஒரு பார்வை பார்க்கலாம். செருப்பு பிடிமானம் இல்லாமல் இருந்தால் கழட்டி வைக்க சொல்லிடறாங்க. ரைடு முடிஞ்சு மாட்டிக்கலாம்.
iii) Dino-Soarin'
இது சும்மா சின்னப் பிள்ளைகள் ரைட் தான். நம்ம வி.ஜி.பில இருக்கும். டினோசர் மாதிரி இருக்கிறதுல ஏறி, பட்டனை அழுத்தி நாமளே மேலே கீழேனு போக வைக்கலாம்.


iv) Amber Rock Climb™
இது பாறை மாதிரி இருக்கிறது மேலே ஏறி, டினோசரோட தடயங்களைப் பார்க்கலாம். இதுக்கு தனி கட்டணம். நாங்க போகலை.

v) WaterWorld™
இது ஒரு ஷோ. நம்ம வி.ஜி.பில கோடை விடுமுறைக்கு அப்பப்ப இந்த மாதிரி நடக்கும். சும்மா ரெண்டு க்ரூப்புக்கு நடுவில் சண்டை. நம்ம மேல தண்ணி வாரி இறைப்பாங்க. குண்டெலாம் எரிஞ்சு, நெருப்பு கண் முன்னால் வரும். பாருங்க கடைசில ப்ளேன் கூட வந்தது4. தி ஏன்சியண்ட் இஜிப்ட்
”மம்மி” தான் இந்த பகுதியோட தீம்

i) Revenge of the Mummy
சூப்பர் ரைடுங்க இது. ரைடுக்கு போற வழியே மங்கின வெளிச்சத்தில பிரமிடு மாதிரி செம பில்டப் இருக்கும். கையில ஒரு பர்ஸ் கூட வச்சிக்கக்கூடாது. பக்கத்தில லாக்கர் இருக்கு. முதல் அரை மணி நேரம் இலவசம். அப்புறம் ஒவ்வொரு மணிக்கும் 2$. நீங்களே கோட் கொடுத்து மூடி திறக்கலாம். வார நாள் என்பதால், கூட்டம் இல்லை. லாக்கர் இலவசமாகவே முடிஞ்சிருச்சு. இருட்டில் மம்மீஸோட என்கவுண்டர் செம த்ரில்லிங். அதுவும் ஓரிடத்தில் அப்படியே சுவரில் இடிச்சு நிற்க, சுவர் உடைஞ்சு அப்படியே வண்டு வரும் ... அப்புறம் வண்டி ரிவர்ஸ்ல போகும்... எல்லாம் நல்லா இருந்தது.

ii) Treasure Hunters
இது ஏதோ குழந்தைகள் ஜீப்ல போய் புதையல் கண்டுபிடிக்கவாம். வலைல, நேரம் அதிகம் இல்லைனா இதுக்கு போக வேண்டாம்னு சொல்லி இருந்தாங்க.. அதனால் போகலை

5. சை-ஃபை சிட்டி (Sci-fi city)
சயன்ஸ் ஃபிக்‌ஷன் தான் தீம்

i) TRANSFORMERS The Ride: The Ultimate 3D Battle
மம்மிய விட சூப்பர் ரைட் இது. 3D க்ளாஸ் போட்டு ஒரு கார்ல அனுப்பறாங்க. நல்ல/கெட்ட ட்ரான்ஸ்பர்மர்ஸ்க்கு நடுவில நாம் இருக்கோம். நிஜமாவே நாம அந்த சண்டையில் ஒரு அங்கமா இருக்கோம். பத்தி எரியும் பொழுது அப்படியே கார் தகிக்குது.

ii) Battlestar Galactica: HUMAN vs. CYLONTM
ரெண்டு ரோலர் கோஸ்டர். இதுக்கும் லாக்கர்ர் தேவை. ஹ்யூமன் நம்ம வீகா லேண்ட்ல இருக்க்கிற மாதிரி கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும் தலை கீழா எல்லாம் தொங்காது. சைலான், ரெண்டு மூணு தடவை தலைகீழாவும் போகும். விருப்பமிருந்தால் ரெண்டும் போகலாம்... நாங்க ரெண்டும் போனோம்.

iii) Accelerator
இது நம்ம ஊர் கப் & சாஸர் ரைடு மாதிரி இருந்தது. ரெண்டு ரோலர் கோஸ்டருக்கு அப்புறம் ஒரு ரிலாக்சேஷன் மாதிரி இருந்தது.

6. நியூ யார்க் சிட்டி
இங்கே நியூ யார்க் சிட்டி மாதிரி சில செட்டிங்க்ஸ் இருந்தது.

Lights, Camera. Action!™ Hosted by Steven Spielberg
இந்த ஷோவும் நல்லா இருந்தது. ஒரு சின்ன அரங்கம். அமைதியான நியூயார்க் நகரம், கேட்டகரி 5 ஹர்ரிகேனால் தாக்கப்படுவதை மிக அழகாக லைவாக காட்டுவார்கள்.

7. ஹாலிவுட்

இங்கே விதம் விதமா தொப்பி இருந்த கடை நல்லா இருந்தது. அது போக ஹாலிவுட் கேரக்டர்ஸ் சுத்திட்டு இருந்தாங்க. ஒரு “ராக் ம்யூசிக்” இருந்தது. வந்தது வந்தோம் அதையும் பார்க்கலாம்னு கடைசியா அதுக்கும் போனோம். ஹாலிவுட் பேய்கள் ஒரு ராக் ஷோ பண்ணினார்கள். நல்லா தான் இருந்தது.எல்லா பகுதியிலேயும் சாப்பாடு, கடை , ஸ்ட்ரீட் ஷோ உண்டு. நாங்க நேத்து எடுத்த சபதத்தை மறந்து, சாப்பாடு கொண்டு போகாமல் போய் ரொம்ப கஷ்டம். நிறைய சைனீஸ் ஸ்டைல் நாங்க லன்ச் டைம் இருந்த ஜுராஸிக்கில். கொண்டு போன பிஸ்கட்டில் சமாளிச்சோம். வெள்ளிக்கிழமை ஹாலிவுட் மட்டும் 10 வரை இருக்குமாம். ஏதோ பட்டாசு போடுவாங்க போல்...

நாங்க 7 மணிக்கே முடிச்சு, செண்டோசா எக்ஸ்பிரசைப் பிடிச்சு, கொஞ்ச நேரம் விவோசிட்டியில் உலாத்திட்டு, மெட்ரோ ஏறி ஹோட்டல் வந்து இரண்டாவது நாளை வெற்றிகரமா முடிச்சோம்.

Thursday, March 29, 2012

சிங்கப்பூர் ஃப்ளையர்+டக் டூர் (சிங்கப்பூர் பயணம் - நாள் 1)

முந்தைய பாகத்திற்கு ”இங்கே

இந்தியாவில் இரவு 12:45 விமானம். போய் சேரும் பொழுது கிட்டதட்ட சிங்கப்பூர் மணி 7:30. செக் அவுட் பண்ணி ஹோட்டலுக்கு டாக்ஸி பிடித்து செல்ல 9:00 மணி. முதல் நாள் என்பதால் சற்று சாகவாசமாக இருக்கலாம் என்று திட்டம். எனவே திட்டமிட்டிருந்தது சிங்கப்பூர் ஃப்ளையர்+டக் டூர் + ரிவர் க்ரூஸ். ஆனால் டக் டூரே தண்ணீரில் என்பதால் ரிவர் க்ரூஸைக் கட் செய்து விட்டோம். முதலில் சையத் அல்வி தெரு தெருவில் போகாததால, சாப்பாட்டுக்கு கொஞ்சம் தடுமாறிட்டு அப்புறம், காரைக்குடியைப் பிடிச்சு காலை உணவு முடிஞ்சது. அடுத்து பஸ் ஸ்டாப்பை தேடி சிங்கப்பூர் ப்ளையர் போற பஸ்ஸை பிடிச்சோம். வழியில் சிங்கப்பூரின் அழகை இரசிச்சுட்டே போனோம்.

இந்த சிங்கப்பூர் ஃப்ளையர் டிக்கட்டை வலையிலேயே நான் பதிவு செஞ்சுட்டேன். இந்த ”சுட்டியில் ” சிங்கப்பூர் ஃப்ளைட்-->சிங்கப்பூர் சிட்டி ஃப்ளையர் பாஸ் தேர்ந்தெடுத்தால், சிங்கப்பூர் ஃப்ளையர் + டக் டூர் போகலாம்.

பஸ் ஸ்டாப்பில் இருந்து ப்ளையர் போற வழியில் சிட்டி வியூ நல்லா இருக்கு. இது கேசினோ. அங்கே டூரிஸம் தான் வருமானம். இந்த கேசினோவுக்கு வெளிநாட்டுப் பயணிகளுக்கு நுழைவு இலவசம், சிங்கப்பூர்காரங்கனா 100$.சிங்கப்பூர் ப்ளையர் பார்க்க ஜயண்ட் வீல் மாதிரி இருக்கு. ஏ.சி செய்யப்பட்ட கேபின் கேபினா இருக்கு. ஒரு சுற்று வர 30 நிமிஷம் ஆகுது. ரொம்ப மெதுவா சுத்தறதே தெரியாமல் சுத்துது. இதுல போனால் சிங்கப்பூரை ஒரு சுத்து பாத்துடலாம். நல்ல வேளை 30 நிமிஷம் தான்... இல்லேனா கொஞ்சம் போரடிச்சிருக்கும். இந்த டிக்கட்டுக்கு ஒரு ”சிங்கப்பூர் ப்ளையர்” மாடல் கீ செயின், பர்ஸ்ல வச்சிகிற மாதிரி நம்ம போட்டோ, குட்டீஸ் டிக்கட்டுக்கு ஒரு சின்ன செட், அப்புறம் ஒரு டிக்கட்டுக்கு 5$ சாப்பாட்டு டோக்கன் கொடுக்கறாங்க. 5$ சாப்பாடு கிடைக்குமே, மதிய சாப்பாட்டுக்கு ஆச்சுனு புட் ட்ரைய்லுக்கு போனால், பிள்ளைங்க போன வேகத்தில வெளியே வந்துட்டு, “நோ எண்ட்ரி” சொல்றாங்க. அது சைனீஸ் ஸ்டைல் உணவு. அவங்களுக்கு வாடை பிடிக்கலை. நான் வெஜ்ஜா இருந்தாலுமே அந்த வாசனை பிடிக்கலை. அப்புறம் அதுல ஒரு கடையைக் கண்டு பிடிச்சு, 5 பேர் 25 டாலருக்கு தண்ணி பாட்டிலும் கூல் ட்ரிங்க்சும் வாங்கி குவிச்சோம். எப்படியும் இது தேவை தானே? நாளையில் இருந்து சாப்பாடு பேக் செய்யணும்னு சொல்லிகிட்டோம். சப்வே இருந்ததால் கொஞ்சம் சாப்பிட முடிஞ்சது.

இந்த சிங்கப்பூர் ஃப்ளையர் இருக்கிற காம்ப்ளக்ஸ்ல. “ஃபிஷ் ஸ்பா” இருந்தது. சிங்கப்பூர்ல அங்கங்க இந்த “ஃபிஷ் ஸ்பா” இருக்கும். டாக்டர் ஃபிஷ் (garra rufa) என்று ஒரு வகை மீன் வந்து நம்ம காலை மசாஜ் செஞ்சு நமக்கு புத்துணர்ச்சி கொடுக்குமாம். நம்ம ஊர் குளத்தில காலை வைக்கலாம்னு கமெண்ட் அடிச்சாலும், பிள்ளைகள் விருப்பம் தான் ஜெயிச்சுது. காலைக் கழுவி, ஏதோ ஸ்ப்ரே பண்ணி, டாங்க்ல காலை விட்டால், மீனெல்லாம் கொசகொசனு காலை சுத்தி உரச ஆரம்பிக்குது. தண்ணில கால் மணி நேரம் காலை விட்டால், மீனில்லாட்டியும் கால் சுத்தமாவும், நமக்கு புத்துணர்ச்சியாவும் தான் இருக்கும்னு தோணுச்சு...டக் டூர் என்பது நிலத்திலேயும், தண்ணிலயும் போகும் வண்டியில் பயணம். சிஙப்பூர் ப்ளையரில் ஆரம்பிச்சு, அங்கேயே முடியும். 30 நிமிஷம் நிலத்திலேயும், 30 நிமிஷம் தண்ணிலயும் போகுது. ஒரு கைடு, சிங்கப்பூ பத்தி சொல்லிட்டே வர்றார். சிங்கப்பூரின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு டாக்ஸியில் போனால் அதிகபட்சம் 30 நிமிஷம் தானாம். நிலத்தில் போய்கிட்டு இருந்த வண்டி, டபக்னு தண்ணில குதிச்சது. முன்னாடி இருக்கிறவங்க நனைவாங்கனு சொன்னாங்க... ஆனால் நனையலை.. அப்படியே தண்ணில ஒரு சுத்து... மெர்லயன் வாயில் இருந்து தண்ணி வர்றது கிட்ட வரை போய்ட்டு வந்தோம்.


திரும்ப பஸ்ல லிட்டில் இண்டியாவில் இறங்கினோம். அங்கே இருந்து ஹோட்டலுக்கு போக கொஞ்சம் தூரம்னும், மெட்ரோ இரயிலில் ஒரு ஸ்டாப்னும் சொன்னாங்க. மெட்ரோவில் போன பொழுது தான் புரிஞ்சது, அது எவ்வளவு ஈசியா இருக்குனு... இனி ரயிலில் தான் பயணம்னு முடிவு பண்ணிட்டோம். பயணம் முடிஞ்சு டிக்கட்டைத் திருப்பி கொடுத்துட்டால் 1$ திரும்ப கொடுக்குது டிக்கட் மெஷின். முஸ்தபாவில் சின்ன ரவுண்ட்-அப், சாப்பாட்டுக்கு சையத் அல்வி தெருவில் ஆனந்த பவன் என்று முதல் நாள் நலமாக முடிந்தது.