என் மேகம் ???

Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Tuesday, January 20, 2009

காலத்தினால் செய்த நன்றி

குறிப்பு: "குறள் கதை எழுதணும்னு ஆசை. கொஞ்சம் முயற்சி பண்ணினேன். நல்லா இல்லைனா ரொம்ப திட்டாதீங்க... "


"சாமுவேல் வந்திருக்காரு", மனைவியின் எரிச்சலான குரல் கேட்டு நிமிர்ந்தான் முருகன். மனைவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவன், அவளைச் சற்றே கெஞ்சலுடன் பார்க்க, அவள் சின்ன பெண் கயல் பிய்த்து போட்டிருந்த பொம்மையைக் காட்டி "இது கூட நூறு ருபாய்க்கு வாங்கினது தான்", என்றாள் அலட்சியமாக. "சரி நான் வரேன்", ரோட்டில் சாமுவேல் நின்று கொண்டிருப்பான் என்று எண்ணியவாறு கிளம்பினான்.

ஞாயிறு...

"அப்பா, எங்க தமிழ் மிஸ் திருக்குறள் பற்றி பேசச் சொல்லி இருக்காங்க" என்றாள் பெரியவள் சுடர்.
"ஓ... மனப்பாடமா சொல்லணுமா?"
"இல்லைப்பா, ஒரு குறளுக்கு எடுத்துக்காட்டா ஏதாவது சின்ன நிகழ்ச்சி சொல்லணுமாம். ஏதாவ்து சுவாரசியமா சொல்லுங்கப்பா. "
"அப்பா உனக்கு ஒரு விஷயம் சொல்றேன், என்ன குறள் சரியா வரும்னு நீயே சொல்லு, சரியா?"
"சரிப்பா"
"இப்ப இவ்ளோ பெரிய வீடு, காருனு இருக்கேன்னா அதுக்கு ஒரு நூறு ரூபா தான் காரணம் தெரியுமா? பல வருஷங்களுக்கு முன்னாடி அப்பாவுக்கு கடை எல்லாம் கிடையாது. கைல துணியை எடுத்துட்டு வீடு வீடா போகணும். அப்ப தான் ஒரு சின்ன கடையை நடத்த வாய்ப்பு வந்தது. எப்படியோ பணம் புரட்டிட்டேன், ஆனால் நூறு ரூபாய் பத்தலை. அது இருந்தால் தான் கடை கைக்கு வரும்னு நிலைமை. அதைக் கடனா கேட்க எனக்கு அப்போ யாருமில்லை, ஒரு ஃபிரண்டைத் தவிர. ஆனால் அவரும் என்னை மாதிரி தான், அதனால் கேட்க முடியலை. ஆனால் என் ஃபிரண்ட் எனக்கு அவரோட பொருளை அடமானமா வச்சு நூறு ரூபாய் கொடுத்தாரு. அதுக்கப்புறம் தான் எனக்கு ஒரு திருப்பம் வந்துச்சு. அங்க பாரு கயல் பிச்சு போட்ட பொம்மை. அது மதிப்பு கூட நூறு ரூபாய் தான். அதுவும் இதுவும் ஒண்ணாகுமா?", கடைசி வரியில் விரக்தி தெரிந்தது பேச்சில்.

"ஆகாதுப்பா " என்ற சுடரை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.
"எங்க மிஸ் சொல்லி இருக்காங்கப்பா , ஒரு ரூபாய்ல இட்லியும் வாங்கலாம், சாக்லேட்டும் வாங்கலாம். ஆனால் பசிக்கு இட்லி வாங்கறப்ப தான் இந்த ரூபாயோட மதிப்பு தங்கம் மாதிரி, ஆசைக்கு சாக்லேட் வாங்கறப்ப இந்த ரூபாயோட மதிப்பு தகரம் மாதிரி. ஏன்னா,
"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"


முருகன், அன்புடன் மகளை அணைத்துக் கொண்டான்.
"என்னங்க சாமுவேல் வந்திருக்கிறாரு. ஹால்ல உட்காரச் சொன்னேன். பலகாரம் எடுத்துட்டு வரேன் , சாப்பிட்டு கிளம்புங்க", என்ற மனைவியின் குரலில் மாற்றம் தெரிந்தது. "சில சமயம் சொல்றவங்க சொன்னால் தான் மண்டைக்குள்ள ஏறுது", என்றாள் அவள் புன்னகையுடன்.

Thursday, September 6, 2007

ஸ்கூலுக்கு போகலாமா?

காலை என்றாலே எனக்கும் ப்ரீ-கேஜி செல்லும் என் வாண்டுக்கும் ரணகளம் தான். ஸ்கூலுக்கு செல்லும் கவலை அவளுக்கு, ஸ்கூலுக்கு அனுப்பும் கவலை எனக்கு. இன்று காலை சுப்ரபாதமே, ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று
தான் ஆரம்பித்தது. மெல்ல கதை சொல்லிக்கொண்டே உணவு ஊட்ட ஆரம்பித்தேன். அவள் விரும்பும் வண்ணம் கதையை ஆரம்பித்தேன். மனதுள் ஸ்கூலுக்கு செல்லும் ஆர்வத்தை எப்படி கதையுள் செலுத்துவது என்று யோசித்தவாரே,
கதை சென்றது. என் வாண்டுக்கு என்னைப் பற்றித் தெரியுமாதலால், ஒவ்வொரு வரிக்கும் "ஸ்கூலுக்கு போக மாட்டேன் " என்று தாளம் போட்டது. மெல்ல, கதையுள் ஸ்கூலுக்கு செல்லும் ஆர்வத்தைக் கிளப்பும் விதமாக
முடித்தேன். எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை, அவள் ஸ்கூலுக்கு ஆவலுடன் செல்வாள் என்று. ஆனால், "இதோ கிளம்பிட்டேன்" என்று என் வாண்டு கிளம்பியது. என் கற்பனை கதை எனக்கும், பிடித்தது. எனவே, இங்கு
பகிர்ந்து கொள்கிறேன்...
ஒரு காட்டில் ஒரு யானை இருந்ததாம். அது ஒரு நாள், வாக்கிங் போச்சாம். ஒரு முயல் பார்த்ததாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை
சொல்லுச்சாம். "நானும் வரேன்", அப்படீனு முயல், யானை மேல ஏறிக்கிச்சாம். முயல் யானை மேல வர்றதை பார்த்து, குரங்கு வந்துச்சாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை சொல்லுச்சாம். நானும் வரேன்", அப்படீனு குரங்கு, யானை வால்ல தொஙகிட்டு வால்தனம் பண்ணிட்டு
வர ஆரம்பிச்ச்தாம்.
குரங்கு, பண்ற சேட்டையை, அணில் பார்த்துச்சாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை சொல்லுச்சாம். நானும் வரேன்", அப்படீனு
அணில், யானை துதிக்கையில் ஏறி விளையாடுச்சாம்.
அப்படியே காட்டில் மயில், குயில், மான் எல்லாம் சேர்ந்து, இயற்கையை இரசிச்சிட்டே போனாங்களாம். திடீர்னு, "உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...." அப்படீனு சத்தம். பார்த்தால், சிங்கம் நின்னுச்சாம். "எல்லாரும் எங்க் போறீங்க", அப்படீனு
உறுமுச்சாம். "நாங்க வாக்கிங் போறோம்", அப்படீனு எல்லாம் சேர்ந்து கத்துச்சாம். "யானை மேல ஏறிகிட்டு என்ன வாக்கிங்... எல்லாம் இறங்குங்க, நானும் வரேன்.." அப்படீனு சிஙகம் சொல்லிச்சாம். எல்லாம் கீழே இறங்கி,
ஜாலியா குளத்த்து கிட்ட வந்தாங்களாம். குட்டி முயலுக்கு ஒரே தாகம். ஓடிப் போய் தண்ணில வாய் வச்சுதாம். உள்ள இருந்து ஒரு முதலை வந்துச்சாம்.
"எல்லாரும் எங்க் போறீங்க" அப்படீனு மிரட்டுச்சாம். "நாங்க வாக்கிங் போறோம்", அப்படீனு எல்லாம் சேர்ந்து கத்துச்சாம். உடனே முதலை அழ ஆரம்பிச்ச்தாம். பெரிய மீன் ஒண்ணு வந்துச்சாம். அதுவும் எல்லாரும் வாக்கிங்
போறாங்கன்ன உடனே அழுதுதாம். எல்லாரும் "ஏன் அழறீங்க" அப்படீனு கேட்டாங்களாம். மீனும் முதலையும், எங்களுக்கும் வாக்கிங் வர ஆசையா இருக்கு, ஆனா நாங்க தண்ணிய விட்டு எப்படி வர்றது" அப்படீனு அழுதுதாம்.
எல்லா மிருகமும் அழ ஆரம்பிச்ச்தாம்.
அப்ப யாழ் பாப்பா வந்தாளாம். "எல்லாரும் ஏன் அழறீங்க" அப்படீனு கேட்டாளாம். சிங்கம் சொல்லுச்சாம். யாழ் பாப்பா சிரிச்சாளாம், "இதுக்கா அழறீங்க? நான் ஒரு ஐடியா கொடுக்கட்டுமா?", அப்படீனு கேட்டாளாம். எல்லாரும்
"என்ன என்னனு" கேட்டாங்களாம். யாழ் குட்டி சொன்னாளாம், "எல்லாரும் ஜாலியா தண்ணில குதிச்சு நீந்துவோம்". எல்லோருக்கும் சந்தோஷமாம். ஜம்முனு தண்ணில குதிச்சு விளையாடினாஙகளாம்.
யாழ் பாப்பாக்கு எப்படி இது தோணிச்சாம். யாழ் பாப்பா புத்திசாலி. யாழ் பாப்பா ஏன் புத்திசாலி? சிங்கம் ஸ்கூலுக்கு போகுதா? இல்ல... யானை ஸ்கூலுக்கு போகுதா? இல்ல? மீன் ஸ்கூலுக்கு போகுதா? இல்ல... யாழ் பாப்பா
ஸ்கூலுக்கு போறாளா? ஆமாம். அதான் புத்திசாலியா இருக்கா..
இந்த கதை கேட்டு தான் என் குட்டி பாப்பா ஸ்கூலுக்கு குடு குடுனு ரெடி ஆகி போனாள். நானும் நிம்மதியா இந்த கதையை எழுதினேன்.

Thursday, December 14, 2006

பாட்டி சொன்ன கதைகள்

எங்கள் மாம்மையிடம் (அம்மாவின் அம்மா) கதை கேட்பது ஒரு இனிய அனுபவம். மாம்மை ஒரு கத சொல்லுங்க என்றால், "நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா, வாழ்ந்த கத சொல்லவா, தாழ்ந்த கத சொல்லவா" என்று மரப்பாச்சி பொம்மை சொன்னதாக கூறி ஆரம்பிக்கும் அழகே தனி.

பாட்டி சொன்ன கதை - 1
ஒரு ஊர்ல பொன்னேங்கரதாசி-னு ஒருத்தி இருந்தாளாம். அவ ரொம்ப அழகா இருப்பாளாம், ஆனா ரொம்ப திமிர் பிடிச்சவளாம். அவ ஆட்டத்த பார்க்க ஊர் பெரிய மனுசங்க எல்லாம் பொன்னா கொட்டி கொடுப்பாகளாம். ஒரு நாளு, அவ கடத்தெருவுல போயிட்டு இருக்கறப்ப, குடியானவன் ஒருத்தன் நான் என் கெனால, பொன்னேங்கரதாசிய கண்டேன்னானாம். அவ்வளவு தான், இவ அவன புடிச்சிகிட்டு, என்ன காண எல்லாரும் பொன்னா கொடுக்கறாக, நீ என்னை சும்மா கெனால காணறியானு சொல்லி, இப்பவே எனக்கு நூறு பொன் கொடுன்னு கேக்கறா. எல்லாரும் தெகச்சுப் போய் பார்க்கறாக. அவ கேக்கறது அநியாயம்னு தெரியுது, ஆனா கேள்வி கேக்க ஆளில்ல. அந்த குடியானவன் கொஞ்சம், வெவரமான ஆளு. சரி வா கிளிட்ட நியாயத்தைக் கேப்போம்-னு போறான்.
அந்த ஊர்ல செட்டியார் கடைல ஒரு புத்திசாலி கிளி இருந்தது. ஊர்ல இருக்கறவங்க வழக்க எல்லாம் அதான் அழகா தீர்த்து வைக்கும். அது கிட்ட போய் இவனும் பிரச்னையை சொன்னான். அந்த கிளியும் ரெண்டு பக்கத்து பேச்சையும் கேட்டுச்சு. பொன்னேங்கரதாசி சொல்றது சரி தான். அவளை கெனால கண்டதுக்கு பொன்ன கொடுக்கணும்னு சொல்லுச்சி. பொன்னேங்கரதாசிக்கோ ஒரே சந்தோசம். குடியானவன் தெகச்சுப் போய்ட்டான். அவன் எங்கேனு போவான். அவ்ளோ பொன் இருந்தா அவன் ஏன் இப்படி கஷ்டப்படறான். சரி, இனி கடவுள் விட்ட வழின்னு நெனச்சான். கிளி சொல்லிச்சி, "குடியானவன்ட்ட நூறு பொன்ன வாங்கி அந்த கண்ணாடி முன்னாடி வைங்க, பொன்னேங்கரதாசி அந்த கண்ணாடில இருக்கற பொன்ன எடுத்துக்கட்டும். கெனால கண்ட காட்சிக்கு கண்ணாடில தெரியற பணம் தான் சரி" அப்படின்னுச்சு. எல்லாரும் அந்த கிளி சொன்ன தீர்ப்பு தான் சரின்னு சொன்னங்க.
பொன்னேங்கரதாசிக்கு இப்ப ஒரே கோவம். அந்த கிளிய பாத்து, நான் உன்ன குழம்பு வச்சு சாப்பிடறேனா இல்லயானு பாரு அப்படின்னு சவால் விட்டாளாம். அந்த கிளியும் , நான் உன்ன கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏத்தி ஊர்கோலம் வர வைக்கறேன் பாருன்னுச்சாம். பொன்னேங்கரதாசி அப்படி இப்படி மிரட்டி நெறய காசு கொடுத்து செட்டியார்ட்ட இருந்து கிளிய வாங்கிட்டாளாம். அத கொண்டு வந்து வேலக்காரிட்ட கொடுத்து ருசியா சமைக்க சொல்லிட்டு போய்ட்டாளாம். கிளி, "ஐயோ என் நிலம இப்படி யிடுச்சேன்னு" சொல்லி, தலய தொங்க போட்டுட்டு தொப்புனு மூச்ச அடக்கிட்டு விழுந்திடுச்சாம். வேலக்காரி அது செத்துப்போயிடுச்சினு, ஒரு ஓரமா வச்சிட்டு, அருவாமனைய எடுக்க உள்ள போனாளாம். கிளி பறந்து போய் சிவன் கோயிலுக்குள்ள போயிடுச்சாம்.
அருவாமனைய எடுத்திட்டு வேலக்காரி வந்தா கிளிய காணோம். இத சொன்னா அவ என்ன கொன்னுடுவாளேனு, வேலக்காரி ஒரு கோழிக்குஞ்ச புடிச்சு கொழம்பா வச்சிட்டா. பொன்னேங்கரதாசியும் கிளினு நெனச்சிட்டு, "வெடுக், வெடுக்-னு ஆடற தலய சாப்பிடறேன், பள பள-னு மின்னுற உடம்ப சாப்பிடறேன்னு", ருசிச்சு சாப்பிட்டு தூங்கிட்டா.
மறுநாளு செஞ்ச பாவமெல்லாம் போக்க, சிவன் கோயிலுக்கு போனா. "ஐயா சிவனே, எப்ப எனக்கு உன்ன காட்டப் போற", அப்படின்னு வேண்டினா. அப்ப கர்ப்பகிரகத்தில இருந்து, பொன்னேங்கரதாசி-னு ஒரு குரல் கேட்டுச்சாம். யாரு கூப்பிடறதுனு அவ தெகச்சி போய் பாக்கறா. கர்ப்பகிரகத்தில மறஞ்சு இருந்து கிளி சொல்லுது, "நான் தான் சிவன் பேசறேன். உன் பக்திய நீ காமிச்சா உனக்கு என்ன காட்டறேன்". அவ சொல்லுறா, "சாமி எதுனாலும் சொல்லுங்க நான் செய்யறேன்". "உன்கிட்ட இருக்கற சொத்தெல்லாத்தையும் ஊர்ல ஏழ பாழகளுக்கு கொடுத்துட்டு, மொட்டை அடிச்சு, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏறி ஊர்கோலமா இங்க வா, நான் ஊருக்கு முன்னாடி வந்து உன்ன ஏத்துக்கறேன்", அப்படினு கிளி சொல்லுது. உடனே பொன்னேங்கரதாசி வீட்டுக்கு போய், குளிச்சு, சொத்தெல்லாம் ஏழைங்களுக்கு கொடுத்துட்டு, மொட்டை அடிச்சி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏறி ஊர்கோலமா வந்து, சிவனே என்ன ஏத்துக்கப்பான்னாளாம். கிளியும் வெளிய வந்து, நான் சொன்னத செஞ்சிட்டேன்னுச்சாம். எல்லாரும், இந்த திமிர் பிடிச்சவளுக்கு இது தேவை தான்னாங்களாம். பொன்னேங்கரதாசி அவமானம் தாங்காம ஊர விட்டே ஓடிட்டாளாம்.

கோணங்கள்

கோணம் - 1
"வாண்ணா", இராகினி மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். "அண்ணி வரலையா?" கேள்விக்குறியுடன் நோக்கினாள்.
"இல்லம்மா, ஒரு க்ளையண்ட்ட பார்க்க இந்த பக்கம் பார்க்க வர வேண்டி இருந்தது. அப்படியே உன்னை பார்க்கலாம்னு வந்தேன்", என்றான் இராகவன்."வாண்டு எங்கே", கண்களால் அரவிந்த்தை துளாவினான். "அரவிந்த்தை தானே கேட்கற, அவன் அத்தையோட கோவிலுக்கு போயிருக்கிறான். ஒரு நிமிடம் அவனும் அவங்களை விட்டு இருக்க மாட்டான், அவங்களும் நான் ஆ·பீஸிலிருந்து வந்துட்டேன்னு என்கிட்ட உடனே விட மாட்டாங்க", என்றாள். அவள் மாமியாரைப் பெருமையாக கூறுவது போல் இருந்தாலும், குழந்தை தன்னிடம் வெகு நேரம் இருப்பதில்லை என்ற ஏக்கம் தெரிந்தது. வார விடுமுறையில் பிறந்த வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம், "இப்ப தான் என் பிள்ளையுடன் இருக்க முடிகிறது", என்று கூறுவது இதனால் தானோ? சற்று நேரம் பேசிவிட்டுக் கிளம்பினான்.
இரவு...
வித்யா பிந்துவைத் தூங்க வைத்து விட்டு அவனருகே வந்து அமர்ந்தாள். "என்னம்மா, வாலு இன்னிக்கு ரொம்ப படுத்திடுச்சோ?", புன்னகையுடன் வினவினான். "ம்ம்... ஆ·பீஸிலிருந்து வந்திருக்கேன்னு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விட்டால் நல்லா இருக்கும். உள்ளே நுழைஞ்ச உடனே என் கையில் ஒப்படைச்சுட்டு போயிடறாங்க...", பெருமூச்சுடன் கூறியனாள் வித்யா.
தங்கையின் ஏக்கத்தையும், மனைவியின் பெருமூச்சையும் நினைத்து இராகவன் மெல்லப் புன்னகைத்தான்.

கோணம் - 2
'ப்ரியா, கொஞ்சம் பால் குடிம்மா", வசந்தியின் குரலுக்கு செவிசாய்க்காது ப்ரியா ஓடி மறைந்தாள். "ம்ம்... உடம்பை கவனிக்க இந்த பொண்ணுகளுக்கு யாராவது சொல்ல மாட்டாங்களா? டயட், கியட்னு உடம்பை கெடுத்துக்கறாங்க...", புலம்பியபடி வசந்தி சென்றாள். இது பல நாட்களாக நடக்கும் விஷயம்.
சில நாட்கள் கழித்து...
"அம்மா பால்...", என்று கேட்டு குடித்த பெண்ணை அதிசயமாக பார்த்தாள் வசந்தி. "என்னடி ஆச்சரியம்... உன் டயட் எல்லாம் என்ன ஆச்சு?" என்றாள் ஆச்சரியமாக. "அதுவா, நான் டயட் இருந்து யாருக்கும் உதவற மாதிரி தெரியலை, அதான் உடம்பை கொஞ்சம் தேத்திக்கலாம்னு பார்த்தேன். புரியலையா? நேத்து காலேஜ்-ல இரத்த தானத்துக்கு ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. ஊருக்கு உதவலாமேன்னு போனால், அண்டர் வெய்ட்-னு அனுப்பிட்டாங்க. இந்த மாதிரி நல்ல விசயத்துக்கு உதவாத மாதிரி என்ன கண்ட்ரோல்-னு சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்".