என் மேகம் ???

Sunday, February 24, 2008

கண்ணீர் அஞ்சலி


பெயர் : வ. பாலசுப்பிரமணியன்
தோற்றம்: 06.03.1945 மறைவு: 10.02.2008
இவர் எனது மாமனார். சொந்த மாமாவைப் போல் அன்பும் அரவணைப்பும் அளித்தவர். சமையல் , குழந்தை பராமரிப்பு உட்பட வீட்டு வேலை என்றாலும், எத்தகைய வெளி வேலை என்றாலும் ஈடுபாட்டுடன் ஈகோ இன்றி செய்யும் ஓர் அற்புதமான மனிதர்...எங்கள் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் ஒரு வழிகாட்டியாக இருந்தவர்...வாழ்வில் எதையும் எளிதாக எடுத்துக் கொண்ட ஓர் உன்னதமான மனிதர்...நெஞ்சு வலியையும் எளிதாக எடுத்துக் கொண்டதால், திடீரென இவரை இழந்து தவிக்கிறோம்...எந்த ஒரு இறப்பிலும் திகிலுறும் நான், இந்த மறைவில் அவர் ஒரு காவல் தெய்வமாக இருப்பார் என்று உறுதியாக நம்பும் அளவு, நற்செயல்களையே புரிந்து கண்டுள்ளேன்...அந்த ஜோதி மறைந்து விட்டதில் ஒளியின்றி தவிக்கும் எங்களின் கண்ணீர் அஞ்சலி...


படிக்கப்பட்ட புத்தகத்தின்

மடிக்கப்பட்ட அடையாளங்களுடன்

படித்தவருக்கு முடிவு சொல்ல

மெளனமாகக் காத்திருக்கின்றன...

பிரிக்கப்பட்ட பலகாரப் பொட்டலம்

பிரித்தவர் உண்டு முடிக்க

மேசையில் திறந்து கிடக்கின்றது...

தோட்டத்துச் செடிகள் எல்லாம்

வாட்டத்துடன் காத்திருக்கின்றன

தண்ணீர் விட மறந்து விட்டாரென...

யார் சொல்வது இவற்றிடம்?

கொடிய கனவென விழித்திட மாட்டோமா

என்று ஏங்கும் நெஞ்சமும்...

புகைப்படத்தில் அவர் புன்னகையுடன்

தோற்று வாடிய பூமாலையும்...

சாமிகிட்ட போய்ட்டாங்க, வர மாட்டாங்க...

என்ற பேத்திகளின் மழலையும்

உணர்த்தும் நிரந்தர பிரிவை...

மழலையரின் விளையாட்டில்

புன்னகையுடன் பூரித்த முகம்

கண்ணில் நிற்கிறது...

வாழ்க்கை என்பது பிரச்னை நிறைந்தது

சமாளித்து நிற்பது பெருமை

அழுது கலங்குவது மடமை

என்று கூறிய மொழி

நெஞ்சில் நிற்கிறது...

பூண்டு குழம்பு என்றாலும்

கோயில் வேலை என்றாலும்

ஊருக்கு ஒன்று என்றாலும்

ஓடி உழைக்கும் வேகமும், ஈடுபாடும், நேர்த்தியும்

எல்லோருக்கும் ஊக்கம் அளிப்பவை

மருத்துவமனை அறிவிப்பு பலகை

ஓர் உண்மையை அறிவிக்கிறது

மறையும் முன் உன் முத்திரையை பதி..

அருகே பொருத்தமாக தங்கள் பெயர்

மனம் கூறுகிறது, முத்திரை அல்ல...

தாங்கள் பதித்தது அழுத்தமான பாதை...

யமன் உயிரைப் பிரித்து இருக்கலாம்

உள்ளத்தின் நினைவுகளை அல்ல

புகைபடத்தில் தெரியும் உயிரோட்டத்தை அல்ல

இறையாக எங்களுடன் வாழ்வீர் என்ற நம்பிக்கையை அல்ல

என்றாலும் மனம் அரற்றுகிறது...

தோளிலும் மாரிலும் சுமந்த கிள்ளைகள்

பாசத்தைக் கொட்டி வளர்த்த மழலைகள்

அக்குருத்துகள் வளர்ந்த பின்

உள்ளத்தில் சுமக்குமா இப்பேரன்பினை என்று...