என் மேகம் ???

Sunday, February 28, 2010

மீன் பிடிக்க போவோமா?மீன் பிடித்து இருக்கிறீர்களா? சிறுவயதில் ஆற்றிலும் அருவியிலும் குளிக்கும் பொழுது, "ஒன் டூ த்ரீ" என்று சொல்லி துண்டை விரித்து மீன் பிடித்துள்ளோம். அது அடுத்த நொடி துள்ளி குதித்து மாயமாகும். இது தான் எனது மீன் பிடி அனுபவம். கோயிலுக்கு போவோமா என்றால் குட்டீஸ் எல்லாம் கிளம்புவதாக இல்லை. மீன் பிடிக்க போவோமா என்று தூண்டில் போட்ட உடன் எல்லாரும் ரெடி. இப்பொழுது தூண்டில் வேண்டுமே? தொடங்கின முயற்சிகள்.

தூண்டில் பண்ண என்ன எல்லாம் வேண்டும்? எனக்கு தெரியவில்லை. ஆனால் நந்துவின் சித்தப்பா சித்திக்கு தெரிந்திருந்தது. "ஆப்பரேஷன் ஃபிஷ் கேட்ச் தொடங்கியது". மண்புழுவுக்கு மண்ணைக் கிளறினால், சின்ன பூச்சிகள் தான் சிரித்தன. எனவே மைதாமாவில் கேசரி பவுடர் போட்டு பிசைந்தோம். மைதா மாவு மெதுவாக நீரில் கரையுமாம், எனவே வேறெந்த மாவை விட மைதா தேர்வு பெற்றது. மீன் பிடிக்க கொக்கியும் தூண்டில் பண்ண நரம்பும் ஃபேன்ஸி ஷாப்பில் கிடைத்தது.

தூண்டிலை நீரில் மிதக்க வைக்கவும், மீன் மாட்டினால் அறிந்து கொள்ளவும் ஒரு மிதவை தேவைப்பட்டது. சென்ற முறை கோயிலில் பொறுக்கிய மயிலறகு உதவியது. இறகுகளை விலக்கிவிட்டு, அந்த இறகு காம்பை மிதவை ஆக்கினோம்.
பெரிய குச்சியின் நுனியில் நரம்பைக் கட்டி விட்டு, பின் இறகு காம்பை நன்கு சுற்றி, சற்று இடைவெளி நரம்பை விட்டு, நுனியில் கொக்கி மாட்டினால் தூண்டில் ரெடி. மைதா மாவை சின்னதாக எடுத்து புழு போல் கொக்கியில் மாட்டினால் "ஒன் டூ த்ரீ" சொல்லி மீனைப் பிடிக்க வேண்டியது தான்.
தூண்டிலைப் போட்டுக் காத்திருக்க வேண்டும். உணவு நீரின் அடியில் செல்ல மிதவை நீரில் மிதக்க, மீன் மாவை உண்ணத் தலைப்பட்டால், இறகுக்காம்பு அசையும்; ஒரு சுண்டு சுண்டி தூண்டிலை எடுத்தால் மீன் மாட்டி இருக்கும்.சொல்வது எளிதாக இருக்கிறது, ஆனால் மீன் என்னவோ நந்துவின் சித்தி போடும் தூண்டிலுக்கு தான் சிக்கியது.ஆறு மீன்களைப் பிடித்து, இரசித்து மீண்டும் நீரிலேயே விட்டு விட்டோம். தூண்டில் பண்ண நந்துவின் சித்தப்பா போட்ட டீல் அது. டீல் இஸ் எ டீல் இல்லையா? எனவே மீன்கள் துள்ளி மறைந்தன.
சுவாரசியமான பொழுதை முடித்து பரபர உலகிற்கு மீண்டும் வந்தோம்... தூண்டிலில் சிக்கிய மீன்களாக....

8 comments:

ராமலக்ஷ்மி said...

மீன் பிடித்த அனுபவத்தைப் படங்களுடன் தந்திருப்பது சுவாரஸ்யம். நன்றி அமுதா.

//பரபர உலகிற்கு மீண்டும் வந்தோம்... தூண்டிலில் சிக்கிய மீன்களாக....//

ஹிஹி.. வேற வழி?

Jerry Eshananda said...

உங்கள் தூண்டிலில் சிக்கி விட்டேன்.....

ஆயில்யன் said...

குட்டி வயசுல ப்ரெண்ட்ஸ் கூட போய் வேடிக்கை பார்த்துட்டு வந்த ஞாபகம் ரோலிங்க ஆகுது!

பசங்களை அழைச்சுட்டு போய் அற்புதமான அனுபவத்தை சொல்லி கொடுத்து எஞ்ஜாய் பண்ணிட்டு வந்திருக்கீங்க சூப்பரூ :)

thiyaa said...

நல்லாருக்கு

நட்புடன் ஜமால் said...

எங்கள் வீட்டிற்கு மிக அருகில் (உயிரோடு) காவேரி.

அங்கு நிறைய மீன் பிடி சம்பவம்

குளிக்கும் போதே கைலியில் பிடிப்பது

தண்ணீர் நிலை குறைந்திருக்கையில் கையால் கூட பிடிப்பது இப்படி பற்பல அந்த நாட்களுக்கு சென்று வந்துவிட்டேன் -

நன்று நன்றி.

அம்பிகா said...

அருமையா இருக்குங்க.
//பரபர உலகிற்கு மீண்டும் வந்தோம்... தூண்டிலில் சிக்கிய மீன்களாக....//
final touch.

Dhiyana said...

அருமை அமுதா.. படங்களும் நன்றாக இருந்தன.. எந்த இடம்?

அமுதா said...

மீன்பிடியை பார்க்க வந்தோருக்கு நன்றி :-)

/*தீஷு said...
அருமை அமுதா.. படங்களும் நன்றாக இருந்தன.. எந்த இடம்?*/
சென்னை தான். OMR-ல் ஒரு நீர்நிலைல யாரோ மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் ஒரு இடத்தில் மீன் பிடித்தோம்