என் மேகம் ???
Monday, June 29, 2009
காரணங்கள் தேவையில்லை
மகிழ்ந்து சிரிக்க
மனம் காரணங்கள்
தேடி அலையும்...
ஏக்கம் கொள்ளவும்
கோபம் கொள்ளவும்
உடன் கிடைக்கின்றன
மனதிற்குக் காரணங்கள்!!!
யோசித்ததில்லை நான்
ஏன் இந்த முரண் என்று...
கொய்த மலரை எனக்களித்து
காரணங்கள் ஏதுமின்றி
கட்டி அணைத்து மகிழ்ந்தாள்
செல்ல மகள்
மதிய உணவு எளிதாக
தயிர் சாதம் வைத்தனுப்ப
மகிழ்ந்து முத்தமிட்டாள்
எனதருமை மகள்
சின்ன சின்ன விஷயங்களில்
சிரித்திருக்க கற்றேன்
மனம் மகிழ்ந்திருக்க
இனி...
காரணங்கள் தேவையில்லை!!!
Tuesday, June 23, 2009
"வேதபுரத்து வியாபாரிகள்"
நாவல் தொடங்குவதே இந்த குறிப்புடன் தான்:
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்பே, கையில் கால்ஷீட்டுடன் தோன்றிய கதாநாயகிகளும் ... வேதபுரம் (பழைய கல்வெட்டிலிருந்து... நடுவில் எழுத்துக்கள் சிதிலமடைந்துள்ளன. காலம் - ஜெ.மு 20007)"
*************************************************************************************
வேதபுரத்து புராணக் கதை ஒன்று:
"பக்கத்து நாட்டு பகைவர்கள், எங்கள் ஆற்றைத் திருடிக்கொண்டு போய் மலையருகே ஒளித்து வைத்து விட்டார்கள். போர் தொடுக்க வேண்டும் என்று கொதித்தெழுந்தது எங்கள் மறவர் கூட்டம். ஆனால் எங்கள் தலைவர், நிதானத்தை இழக்காமல், 8640 விநாடிகள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். எங்கள் மக்கள் கூட்டம் கண்ணீர்விட்டு அரற்றியது. அவர்கள் கண்களினின்றும் பெருக்கோடிய நீரே இன்று இந்நாட்டில் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது"
*************************************************************************************
"வேதபுரச் சமூக நலத்திட்டங்களில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது போலீஸாரால் காவல் நிலையங்களில் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் புதுவாழ்வு தர ஒரு சீரமைப்புத் திட்டம்..."
*************************************************************************************
"வேதபுரத்து வீதி ஓரங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு குப்பைத் தொட்டிகள். ஒன்று, ஏழை எளியவர்க்கு; மற்றொன்று விலங்குகளுக்கு. எச்சில் இலைகளுக்காக முந்தைய ஆட்சிகளில் மனிதனுக்கும் நாய்க்கும் நிகழ்ந்த போராட்டம் இனி இல்லை..."
*************************************************************************************
"சொல்லுடையராதல் வேறு; செயலுடையராதல் வேறு.. 'அருங்குரல்' - வேதபுரத்து நீதி நூல்"
*************************************************************************************
"பகுத்தறிவிலிருந்து விடுதலை பெற்று, நம்பிக்கையின்மையை விரும்பிப் புறக்கணித்தால்தான், மனித வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும் - வேதபுரத்து தலைவர் கட்டுரைகள்"
*************************************************************************************
"வேதபுரத்தில் தான் தலைவர்களின் பாதங்களைத் தொட்டுக் கும்பிடுதல் என்ற மரபு ஏற்பட்டிருக்க முடியும்; மேல்நாடுகளின் இம்மரபு தோன்றி இருக்க இயலாது. காரணம், அந்நாடுகள் குளிர்ப் பிரதேசங்கள், காலில் எப்பொழுதும் பூட்ஸ் போட்டிருப்பார்கள்; பாதங்களின் நேரடி தரிசனம் கிடப்பது சாத்தியமில்லை"
*************************************************************************************
"ஏராளமான அமைச்சர்களுடைய மந்திரி சபையில், அமைச்சர்களுடைய பெயரைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் அவர்களை எண் வரிசையில் குறிப்பிடுவது நன்று. பெயர் மாறினாலும் எண் மாறாது"
*************************************************************************************
"'லஞ்சம்' என்ற சொல் வேதபுரத்து மொழி அகராதியிலே கிடையாது. ஏனெனில், 'இம்மொழியில் 'ல'கரத்தை முதலெழுத்தாகக் கொண்டு எந்த சொல்லையும் படைக்க இயலாது. அப்படிப் படைத்தால் அது இலக்கண வழு...'"
*************************************************************************************
வேதபுரத்தில் தான் உலகிலேயே வேறெங்கும் இல்லாமல், முதல் முறையாகப் பறவை எச்சத்தை ஆய்வதற்கான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டது. இது வேதபுரத்து மகத்தான சாதனை"
[என்ன சாதனை என்று யோசிக்காதீர்கள், இந்த ஆராய்ச்சிக்கூடத்தின் பணி தலைவ்ர் சிலை மீது எச்சமிடும் பறவையைப் பிடிக்கச் சொல்வர். பிடித்த பறவை தான் எச்சமிட்டதா என்று இங்கு சரி பார்ப்பர். இல்லையென்றால் பறவையைப் பிடித்தவர் சிறைப்பறவை ஆவார்]
*************************************************************************************
"நாற்பதினாயிரம் நூற்றாண்டுகளாக எவ்விதமான மாறுதலுமில்லாமல் அப்படியே இருந்து வருவதுதான் வேதபுரத்து நாகரிகத்தின் சிறப்பு!"
*************************************************************************************
"`இந்திரபிரஸ்தம்` என்ற சொல்லினுடைய வேர் 'இந்திரா'வா 'இந்திரனா' என்பது ஆய்வுக்குரியது. சந்ததி ஆட்சியை நினைவில் கொண்டால் 'இந்திரா' என்பதே பொருத்தமாகப் படுகிறது..."
*************************************************************************************
இந்திர பிரஸ்தத்து தலைவர் கட்சியோட வேதபுரத் தலைவர் இப்படி அறிமுகமாவார்:
"இந்திர பிரஸ்தத்து தலைவர் கட்சியோட, இங்குள்ள 23 தலைவர்களிலே முக்கியமான ஒத்தரு. மொத்த கட்சி ஆளுகளும் 23 தான்"
*************************************************************************************
"இந்திரபிரஸ்த நாட்டுத் தலைவருக்கு பதின்மூன்று மொழிகளில் மவுனம் சாதிக்கத் தெரியும்; எட்டு மொழிகளில் புன்னகை பூக்கத் தெரியும்"
*************************************************************************************
சரி... வேதபுரம் , இந்திரபிரஸ்தம் எல்லாம் எந்த ஊருனு உங்களுக்கு தெரியும் தானே?
Monday, June 22, 2009
குழந்தைகளும், ஒரு கவளம் சோறும் , கதைகளும்
கோபமும், பொறுமையின்மையும் மட்டுமே என் குணமோ என்று அறிவு என்னைச் சுட்ட கணங்களில் , உள்ளிருந்த அன்பு, பொறுமை என்ற உணர்ச்சிகளுடன் என் கற்பனை வளங்களையும் ஊற்றெடுக்கச் செய்தவர்கள் இவர்கள் தானே?
ஒரு கவளம் சோறு உள்செல்ல, உணவைப் பங்கிட்டுக் கொண்ட காகமும், குருவியும், அணிலும், பூனையும், நாயும், (ஒற்றைக் காலிழந்த கருப்பு நாயும்) உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளைத் தேடிச் சென்றுவிட்டன. அளந்து தண்ணீர் செலவழிக்கும் வேளையிலும் உனக்கு உணவு உள் செல்ல நீ கைகளால் அளைந்து விளையாடிய நீர் முகந்த கோப்பையும், தெறித்த நீர்த்துளிகளின் நினைவு இப்பொழுதும் மனதைக் குளிர்விக்கின்றது.
எத்தனை கதைகள் உருவாயின? காகம், மயில், குயில் கிளி எல்லாம் சோற்றுருண்டையை முட்டையாகப் பாவித்து "என் முட்டை நீ சாப்பிடவில்லையா?" என்று என் நா வரள குரல் கொடுத்து கெஞ்சும். மீன் குஞ்சை எடுத்துச் சென்ற முதலையைத் தேடியும், முயல்குட்டியைக் கடத்திச் சென்ற டினோசரைத் தேடியும் நீங்கள் செய்த வீர சாகசங்கள் நினைவில் இருக்குமா? மீன் அம்மாவும் , முயல் அம்மாவும் வேறு அம்மாவிடம் போய் விட்டார்களோ?
உனக்கு சொன்ன கதையொன்றை நான் புத்தகமொன்றுக்கு அனுப்ப, எனக்கு கிடைத்த ஆறுதல் பரிசே மிகச் சிறந்த பரிசாக மின்னுகிறது. ஸ்கூலுக்கு செல்வதால் புத்திசாலியான யாழ் பாப்பா கதை தோழியால் இன்னொரு பள்ளியில் சொல்லி குழந்தைகள் இரசித்ததும் எனது மகிழ்ச்சியான தருணங்கள். நான் குரலெடுத்து பாடிய தாலாட்டில் நிம்மதியாக நீங்கள் தூங்கிய பொழுதுகள் தந்த நிம்மதி வேறெதற்கும் ஈடாகாது.
காணாமல் போன குழந்தையைத் தேடி வண்டிடம் வினவ, வண்டு நான் தோட்டத்தில் தான் திரிவேன், காற்றைக் கேள் என்று கூற, காற்றிடன் சொன்னவுடன் ஊரைச் சுற்றிய காற்று சற்று தொலைவில் குகையில் தூங்கும் குழந்தையைச் சொல்ல நீங்கள் அந்த குழந்தையை அம்மாவிடம் சேர்த்தது போன்ற கதைகள் பொக்கிஷமாக என் நினைவுகளுக்குள். இன்னும் உங்களுக்கு சமயம் பார்த்து சொல்ல தேவதைகளும், பட்டாம்பூச்சிகளும் , பூக்களும் , பறவைகளும் , விலங்குகளும் , பூஞ்சோலைகளும், நிலவும், தென்றல் காற்றும் என்னுள் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது எல்லாம் உங்கள் அறிவார்ந்த கேள்விகளுக்குப் பதிலை வலையில் தேடுகிறேன். இது வரை குழந்தைதனங்களை இரசித்த மனம், இனி, அறிவாற்றலையும் தனித்தன்மையும் இரசிக்க தயாராக வேண்டும். என் கற்பனையைத் தூண்டிய செல்வங்கள் இனி என் அறிவுக்கும் சவால் விடுவார்கள். பெருமிதம் கலந்த ஏக்கத்துடன் அவர்களைப் பார்க்கிறேன்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
"அம்மா நீயே ஊட்டி விடேன்", உடல் முழுதும் சோற்றுப் பருக்கைகள் அலங்கரிக்க குட்டிப்பெண் அழகாக சிரித்தாள். "கை கழுவிட்டு வா, ஊட்டி விடறேன்" என்றேன். "இப்ப ஊட்டறேன். இனிமேல் நீ வளர்ற, நீயாவே சாப்பிடணும் சரியா?" என்றபடி புதிய கதைகளைத் தேடியது என் மனம்.
Wednesday, June 17, 2009
இயற்கைக்கு என்ன விலை?
- உலகம் தோன்றிய பொழுது சுற்றுசூழலில் ஆக்ஸிஜன் கிடையாது
- கிட்டதட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சுற்றுசூழலில் 0.01% ஆக்ஸிஜன் இருந்தது. 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் 0.1% ஆக உயர்ந்தது.
- மனிதன் உயிர் வாழ சுற்றுசூழலில் 7% ஆக்ஸிஜன் என்பது குறைந்தபட்ச தேவை. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 17-18% ஆக்ஸிஜன் தேவை
- ஒரு காலத்தில் 36-38% வரை ஆக்ஸிஜன் இருந்துள்ளது. இந்த உயர்ச்சிக்கு காரணம் தாவரங்கள். தற்பொழுது சுற்றுசூழலில் 20-21% ஆக்ஸிஜன் உள்ளது. அதாவது நாம் கிட்டதட்ட 50% சதவீதம் ஆக்ஸிஜனை அழித்துள்ளோம். சில நகரங்களில் சில தொழிற்சாலை இடங்களில் இது 9% சதவீதமாகக் கூட உள்ளது
- சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு மணி நேரத்துக்கு 53லிட்டர் ஆக்ஸிஜன் சுவாசிப்பின் மூலம் தேவைப்படுகிறது. சராசரியாக ஓர் இலையால் 5மில்லி ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும்
- நன்கு விளைந்த இரண்டு மரங்களால் நான்கு உறுப்பினர் கொண்ட குடும்பத்திற்கு ஓராண்டுக்கு தேவையான ஆக்ஸிஜன் கொடுக்க முடியும்
- 26000 மைல் ஓடும் கார் கக்கும் கார்பனை ஒரு மரத்தால் ஒரு வருடத்தில் உறிஞ்சிக்கொள்ள முடியும்
(மேற் கூறிய தகவல்கள் : இணையம்)
நீர், உணவு, காற்று நமது அத்தியாவசிய தேவைகள்; இயற்கை நமக்கு அள்ளிக் கொடுக்கும் விலைமதிக்க முடியாத செல்வங்கள். இப்பொழுது பார்த்தால் நாம் ஒவ்வொன்றுக்கும் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நீர்
நகரங்களில் ஏற்கனவே குடிநீர் என்றால் மினரல் வாட்டர் என்றாகிவிட்டது. வீட்டிற்கொரு மினரல் வாட்டர் கேனோ, அல்லது மினரல் வாட்டராக்கும் சாதனமோ இருக்கின்றது. அதாவது இயற்கையாக சுத்தமான குடிதண்ணீர் காசு கொடுத்தாலும் கிடைக்குமா என்று தெரியவில்லை.
உணவு
இயற்கை உரத்துடன் மட்டுமே வரும் விளைச்சல்களை "ஆர்கானிக்" என்று விற்கிறார்கள். இதன் விலை சாதாரண விளைபொருட்களை விட மூன்று மடங்கு. ஆக நல்ல இயற்கை உணவு வேண்டுமென்றால் நிறைய காசு கொடுக்க வேண்டும்
காற்று
காற்றை நாம் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் கேட்ட செய்தி நல்ல "ஆக்ஸிஜன்" சுவாசிக்க வேண்டுமெனில் ஆக்ஸிஜன் பார்லர் உண்டு. நீங்கள் கொடுக்கும் காசைப் பொறுத்து சில மணி நேரம் ஆக்ஸிஜனை விரும்பும் மணத்துடன் சுவாசிக்கலாம். அப்படி எனில் நல்ல சுவாசிப்பும் இப்பொழுது காசுக்கு கிடைக்கிறது.
நம் முன்னோர்கள் நமக்கு உணவு பயிரிட நிலமும், பயன் தரும் நல்ல மரங்களும், நல்ல நீர்நிலைகளும் விட்டுச் சென்றார்கள். நாம் எல்லாவற்றையும் அழித்து ஃப்ளாட்டாக்கி காசாக்கி விட்டு, காசு கொடுத்து இயற்கையைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
ஒரு மரமாவது நட்டு பேணுங்கள். மரம் நட இடமில்லை எனில் சிறு செடிகளாவது தொட்டியில் வளருங்கள். கொஞ்சமேனும் நல்ல காற்றை சுவாசிக்க முயல்வோம்.
Tuesday, June 16, 2009
என்னத்த சொல்ல?
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து அலுவலகத்திற்கு வந்தவரை தமிழ்ப்படத்திற்கு அழைத்துச் சென்றார்களாம். அவர் பார்த்து விட்டு "இது உங்கள் கலாச்சாரமா" என்று கேட்டாராம். "இல்லை" என்ற பதில் அவருக்கு என்ன புரிதலைத் தரும்? நிஜத்திற்கும் நிழலுக்கும் உள்ள முரண்களைக் குழந்தைகள் எவ்வளவு தூரம் புரிந்து கொள்வார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்படியே புரிந்து கொண்டாலும் அது வேறு சில நல்ல குணங்களை மாற்றி விடாதா?
உதாரணத்திற்கு நம்மூரில் இதெல்லாம் நடக்காது என்று சகித்துக் கொள்ளும் மனநிலை பல விஷயங்களில் உண்டு. நல்ல விஷயங்களைக் கூட முரணாக எடுத்துக் கொண்டு "நல்லவை" எல்லாம் நிழலில் நடக்கும் நிஜத்தில் அல்ல என்ற பிம்பம் உருவாகலாம். அழகை வைத்து மட்டுமே எடுக்கப்படும் விளம்பரங்கள் அவர்களுக்குள் அழகு மட்டுமே வாழ்க்கை போன்ற தவறான எண்ணங்களை ஊட்டலாம்.
ஏதும் செய்ய இயலாமல் , மனதுள் இது போல் தொடர்ந்து கொண்டே இருக்கும் கேள்விகள். ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் சிந்தித்து செயல்பட்டால் பல நல்ல விஷயங்கள் நடக்கும். ஆனால் ஊர் கூடி தேர் இழுப்பது எப்பொழுது? கல்லூரி முடிந்த பொழுது எங்கள் வகுப்பாச்சிரியர் எங்களிடம் சொன்னது , " உங்களிடம் நான் கூற விரும்புவது முடிந்தால் கன்ஸ்யூமரிசத்திற்கு அடிமை ஆகாதீர்கள். அதாவது ஒரு பொருள் வாங்கும் முன், அது நமக்கு தேவைதானா, அது இன்றி நம்மால் இருக்க முடியாதா என்று நன்கு யோசித்து பின் வாங்குங்கள்" என்றார். என்னால் அந்த அறிவுரையைப் பின் பற்ற முடியவில்லை. எல்லோரும் அப்படி இருந்தால் விளம்பரங்கள் பயன் அற்று போயிருக்குமோ? இப்படி சின்ன சின்ன விஷயங்களைக் கோட்டை விட்டு இன்று பொருள் சார்ந்த உலகில் நம் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமோ?
Monday, June 15, 2009
அலுக்காத கணங்கள்
எனது அதே பதில்களும்
என் மகளுக்கு அலுப்பதில்லை..
அம்மாவின் முந்தானை வாசமும்
அப்பாவின் கைபிடித்த நடையும்
அக்காவிடம் சின்ன சின்ன சீண்டல்களும்
என் மகளுக்கு அலுப்பதில்லை..
அன்றாட பயணத்தில்
விரைந்தோடும் வாகனங்களும்
பசுமை தொலைத்த சாலைகளும்
சச்சரவு மிகுந்த தெருக்களும்
எனக்கு அலுத்துப் போனபொழுது
நாய்குட்டியும் மானும் முயலும்
விமானமும் மரங்களும் மீனும
விண்ணில் அவள் தேடிய பொழுது
அவளது புதுப்புது தேடல்கள்
எனக்கு அலுக்கவில்லை
என்னைப்பற்றி - சில பதில்கள்
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
வீட்டில் வைத்ததால்! எனது முழு பெயர் அமுதவல்லி. கடவுள் பெயரென்று வைத்தார்களாம். என் பெயர் பிடிக்கும், அமுதவள்ளி என்று எழுதப்படாதவரை. ஏனோ நிறைய பேர் அப்படி தான் எழுதுவார்கள்
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சென்றவாரம் கொடைக்கானல் சென்றிருந்த பொழுது என் கணவர் "அப்பா இருந்திருந்தால்..." என்று கூறியபொழுது மனம் அழுதது
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும்!
4. பிடித்த மதிய உணவு என்ன?
நல்ல பொன்னி அரிசி சோற்றில் கொஞ்சம் சாம்பார், கொஞ்சம் இரசம் கலந்து அம்மா வைக்கும் பட்டாணி பொரியலுடன் உள்ளே தள்ளினால்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
வெயில் காலத்தில் தயிர் சாதத்துடன் கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய்...
5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கண்டிப்பாக...
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி.... அப்படியே தடதடனு மூச்சு முட்ட தண்ணி மேல விழ கண்ணை மூடிட்டு நின்னால்....
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பழகும் விதம்
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் : தன்னம்பிக்கை
பிடிக்காத விஷயம் : கோபம், உணர்ச்சிவயப்படுதல்
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த விஷயம் : அன்பு, பொறுமை
பிடிக்காத விஷயம் : பொறுமை... பொறுமை...பொறுமை...
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
சென்ற வருடம் மறைந்துவிட்ட மாமா ... வந்துவிட மாட்டாரா என்று ஏங்குகிறது மனம்
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கருப்பு வெள்ளை சுடிதார்
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கணினி திரை... கேட்டுக் கொண்டிருப்பது ... ஒரு பாதி எழுதும்பொழுது இரவின் நிசப்தம், மறு பாதிக்கு "டக் டக்" என்று அலுவலகத்தில் பக்கத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் ஒலிகள்
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
தங்க நிறம் (அப்படியாவது ஜொலிப்போமே!!!). பேனா என்றால் தான் இந்த நிறம். நிறமாக மாறுவது என்றால் பன்னீர் ரோஜாவின் நிறம்.
14. பிடித்த மணம்?
குழந்தைகளுக்கு வசம்பு கட்டி, சீர்ப்பொடி போடுவார்கள். குழந்தையின் பால்மணத்துடன் கலந்த அந்த மணம், கற்பூரத்தின் மணம், மண்வாசனை
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் ரொம்ப லேட்டா எழுதறேன். நிறைய பேர் எழுதிட்டாங்க. அதனால் நான் யாரை அழைப்பது என்றே யோசிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
"கண்ணாடி" ஜீவன் - ரொம்ப யதார்த்தமா எழுதுவார். அவரது எல்லா பதிவுகளுமே பிடிக்கும்.
"நான் புகை பழக்கத்தை நிறுத்தியது ஏன்? எப்படி? என்று உண்மையாக அவர் பதிவிட்டிருப்பார்
"மிளகாய்ச் செடி" என்று "(அந்த பதினோரு வயசு சிறுவனின் மன வேதனையை உங்களால உணர முடியுதா? )" என்று உணர்ச்சியோடு எழுதி இருப்பார்
"சுகமாய் ஒரு பிரசவம்" மிக அருமை
"பூந்தளிர்" தீஷு - குழந்தைகளுக்காக அம்மாக்கள் எவ்வளவு நேரம் செலவிடறாங்க , எப்படி எல்லாம் யோசிக்கறாங்கனு இவங்க பதிவுகள் ஒரு உதாரணம். இவங்க பதிவுகள்ல இட்லி பாத்திரம், பருப்பு வகைகள், சடை மாட்டி என்று வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அவங்க குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதைப் பார்த்தால் எனக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யும்.
17. பிடித்த விளையாட்டு?
கல்லாட்டம், தாயம், பல்லாங்குழி, இறகுபந்து.
18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம்.
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
கவலை மறந்து சிரிக்க வைக்கும் படங்கள்
20. கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க...
21. பிடித்த பருவ காலம் எது?
இதமான வெயில், சில்லென்று தென்றல் வீசும் காலம் (இதெல்லாம் சென்னையில் வருவது அபூர்வம். அதனால் என்ன சொல்லிக்க வேண்டியது தான்)
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
நீல. பத்மநாபனின் "உறவுகள்"
இந்திரா பார்த்தசாரதியின் "வேதபுரத்து வியாபாரிகள்"
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
குட்டீஸ் வைத்து நல்ல படம் ஏதாவது என் கணினிக்குள் நுழைந்தால்...
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : குழந்தையின் சிரிப்பு
பிடிக்காத சத்தம் : உராயும் சத்தங்கள்
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அலுவல் விஷயமாக அமெரிக்கா
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கைவேலைகள் எனக்கு பிடிக்கும்... முடியும் பொழுதெல்லாம் கற்றுக்கொள்வேன்
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
வாக்கு கொடுத்துவிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இன்றி மீறுவது, நல்லவர் போல பழகிவிட்டு மற்றவரிடம் நம்மை விமர்சிப்பது.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இயற்கை கொஞ்சும் அமைதியான இடங்கள் - சீசன் முடியும் வேளையில் (அப்ப தான் கூட்டம் இருக்காது) ஊட்டி, கொடைக்கானல், மூணார், குற்றாலம்...
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இன்னும் கொஞ்சம் தைரியமாக...
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
சென்னை சாலைகளில் வாகனம் ஓட்டுதல் (எனக்கு ரொம்ப பயம்... எனவே இன்று வரை இது நிறைவேறவில்லை)
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை வாழ்வதற்கே!!! நாம் வாழ்வதற்கு மட்டும் அல்ல, பிறர் வாழ்வதற்கும்.