என் மேகம் ???

Sunday, November 28, 2010

நீயா நானா ...

முல்லையின் அழைப்பின் பேரில் இந்த பதிவு. வெகு நாட்களாகிவிட்டது இந்த அழைப்பு வந்து... இது சில அனுபவங்களின் பகிர்வு என்று கொள்ளலாம்.

முல்லை கூறியது போல் “வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.” இது மிக உண்மை

இனி அவரைப் பதிவிட தூண்டிய கேள்வி: ”இன்ட்ர்வுயூவிலே ஒரே மாதிரி - ஈக்வல் டாலன்டோட ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருந்தா..”. எனக்கு முன் இந்த கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன். பாலைக் கொண்டு அது முடிவு செய்யப்பட மாட்டாது என்பது திண்ணம். ஆனால் இந்த கேள்வியின் தொடர்ச்சியாக ஓடிய சில சிந்தனைகள்... பெரும்பாலும், ஒரு ஆண் திறமைசாலி என்று சக ஆண் ஊழியர்களிடம் பெயர் பெற எடுக்கும் முயற்சிகளுக்கு ஒருபடி மேல் நின்றால் தான் பெண் திறமைசாலியாக அங்கீகரிக்கப்படுகிறாள் என்று பல வேளைகளில் நான் எண்ணிக் கொண்டதுண்டு; கேட்டதும் உண்டு. எந்த ஒரு இடத்திலுமே அலுவலகமோ/வீடோ பெண்ணுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு திரை இருந்து கொண்டே தான் இருக்கிறது... பல நேரங்களில் அவள் கிழித்துக் கொண்டு தன்னை வெளிப்படுத்துகிறாள்.

சமீபத்தில் ஆண் ஒருவர், குழந்தை பிறந்து கவனித்துக் கொள்வதால் தன் மனைவியின் கேரியர் வீணாகலாம் என்று வருந்தினார். குழந்தையைக் கவனித்துக்கொள்வதென்றால் யாரேனும் விட்டுக்கொடுக்க வேண்டும்... பெரும்பாலும் அது பெண்ணாக இருக்கிறாள். “பரவாயில்லை... மனைவிக்காக யோசிக்கிறார் இல்லை..” என்றாள் ஒரு பெண். ஆம் அவர் யோசித்தால் போதும் ... பெண் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். ஒருவர் ஒன்றும் செய்யாது பச்சாபப்படுவதையே பெருமையாக எண்ணும் அளவுக்கு தான் ஆண்கள் பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றனர்.

“மெடர்னிட்டி லீவ்” குறித்து நான் கேட்ட கமெண்ட் “வேலை செய்யாமல் ஜாலியா சம்பளம் வாங்குவீங்க...”. சற்றே மனம் வருந்தியது. என்ன சொல்ல? ஆணுக்கு இணையா எல்லா வேலையும் செய்வியா... எங்கே என்னை மாதிரி சட்டைபோடாமல் நட பார்க்கலாம் என்ற அபத்தமான கேள்வி போல் இருக்கின்றது. “எங்கே என்னை போல் பத்து மாசம் சுமந்து பெத்து போடு பார்க்கலாம்” என்று ஏன் யாரும் கேட்பதில்லை. குழந்தை பெண்ணால் தான் பெற முடியும் (”ஆண் பெற்றவன் ஆண் மகனே” என்று பாட்டு மட்டும் தான் எழுதிக் கொள்ள முடியும்)... சிலகாலம் பெண்ணால் மட்டுமே குழந்தையைப் பேண முடியும். மனிதர்கள்... பகுத்தறிவுடையவர்கள் என்று சொல்லிக் கொள்வதால்... “நீ என் சக மனுஷி... பிள்ளை பேற்றுக்காக நீ எதையும் இழக்க வேண்டாம் என்ற மனிதத்துவ குணம் தான் பிரசவகால விடுமுறை. அதை பொருள்மயமாகக் காணத் தொடங்கினால்... என்ன சொல்வது ?


வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு தான் எத்தனை பிரச்னைகள் இங்கு. என் தோழி ஒருவர் ஒருவர் கூறினார், “நம் வயதில் பல பெண்கள் வீட்டில் இருக்க முடிவு செய்கின்றனர்” என்று. சற்றே யோசித்தால் நாங்கள் கூட வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதிகள் தேவைப்படும்பொழுது கிடைப்பதால்தான் வேலையில் நீடிக்க முடிகிறது என்று தோன்றியது. சமீபத்தில் தோழி ஒருவர் குழந்தைகளைப் பேண வேலையை விட்ட பொழுது “நல்ல முடிவு” என்று ஏகப்பட்ட பாராடுதல்கள் ஆண்களிடம் இருந்து. பெரும்பாலானோர் இப்படி தான் உள்ளனர். மனைவி வீட்டில் இருந்து எல்லாம் கவனிக்க வேண்டும்... வேலை பார்க்கும் பெண்ணிடம் “உங்களுக்கென்னங்க இரண்டு சம்பளம்” என்று சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள். வீட்டில் இருப்பதோ வேலையில் இருப்பதோ விஷயம் அல்ல... சக மனுஷி என்ற எண்ணம் இருந்தால் போதும்.


இப்படி பேசினால், ஆண்கள், இப்ப என்ன நாங்க வீட்ல உட்கார்ந்துக்கணுமா என்று கேட்பார்கள். வீட்டில் இருப்பது யார் என்பது விஷயம் அல்ல, ஆண் பெண் பேதம் தேவையில்லை. வாழ்க்கை “நீயா நானா” என்றால் முட்டிக்கொண்டு தான் நிற்கும்... “நீயும் நானும்” என்றால் தான் இனிமையாக நகரும். ஒரு pressurised ப்ராஜக்ட் , இரவு பகல் வேலை செய்ய வேண்டும் என்னும் ஒரு நிலையில் பல பெண்கள் இல்லாமல் போவது “இயலாது” என்பதால் அல்ல... வீட்டில் அந்த அளவு சப்போர்ட் இருக்காது.... பெரும்பாலான வீடுகளில் ஆண் ஒரு வாரம் வேலையே கதி என்று கிடந்து வீட்டில் எதுவும் கவனிக்காவிட்டாலும் வாழ்க்கை ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் ... ஆனால் பெண் அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டால் நிலைமை தலைகீழ்...இருவரும் புரிதலுடன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால் “win--win ” situation... ஆனால் ஏனோ பெரும்பாலோருக்கு இது அமைவதில்லை.

நான் பார்த்தவரையில் பெரும்பாலும் பெண் பொறுத்துக் கொண்டு விட்டுக்கொடுத்து செல்வதால் தான் குடும்பம் என்ற அமைப்பு இன்னும் இருக்கின்றது. ஆண்கள் பொறுப்புகளைப் பகிராது சுமையாக்கினால், என்றும் இப்படியே செல்லாது... எனவே இணைந்து பகிர்ந்து புது உலகம் காணும் உள்ளம் ஆண் பெண் இருவருமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். திறமை பொறுத்து பார்த்தால் ஆண்/பெண் இருவருமே சரிசமம் தான். எனவே பெண்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் அவர்கள் திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள சில வசதிகள் செய்வதும் நலம். தற்காலங்களில் ஒரு குடும்பத்தின் “ப்ரட் வின்னர்ஸ்” ஆண்களாக மட்டும் இருப்பதில்லை... பெண்களும்தான்.

4 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் அமுதா. பிரசவகால விடுமுறை பற்றிய பகிர்வும் சரியே. //சக மனுஷி என்ற எண்ணம் இருந்தால் போதும்.//

மிக நல்ல பதிவு.

Chitra said...

நல்ல அலசல். நல்ல பதிவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பெரும்பாலான வீடுகளில் ஆண் ஒரு வாரம் வேலையே கதி என்று கிடந்து வீட்டில் எதுவும் கவனிக்காவிட்டாலும் வாழ்க்கை ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் ... ஆனால் பெண் அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டால் நிலைமை தலைகீழ்...//

இதுபோன்ற விசயங்கள் தான்.. கவலைக்குள்ளாக்குவது..
புரிதலோடான இணைகளாக
வின் வின் சிச்சுவேசன் எல்லா இடங்களிலும் இனி வரும்ங்காலங்களில் வரட்டும்....

எஸ்.கே said...

நல்ல அலசல்! அருமை!