என் மேகம் ???

Showing posts with label நினைவலைகள். Show all posts
Showing posts with label நினைவலைகள். Show all posts

Tuesday, June 15, 2021

அப்பாவும் நானும்

காலம் முழுவதும் போற்றும் நினைவுகளைத் தந்துவிட்டு, இன்றோடு அப்பா மறைந்து 30 நாட்கள் ஆகிவிட்டது.   

அன்பு மட்டும் அல்ல கண்டிப்பும் நிறைந்தவர் அப்பா. படிப்பில் கண்டிப்பு மற்றவற்றில் சுதந்திரம்.  தன் காலத்து அப்பாக்கள்  போல் அல்லாது எனக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் புரியவே எனக்கு நிறைய நாள் தேவைப்பட்டது. பக்கத்து வீட்டில் அப்பாக்கள் வரும் நேரம் உள்ளே ஓடும் குழந்தைகளும் அம்மாக்களும் இருக்க, எப்பொழுதோ வந்து விட்ட அப்பா நம்மை அழைக்க கூட இல்லை என்பதன் சுதந்திரம் வீட்டை விட்டு வெளியேறி வெளியுலகம் காணும்பொழுது புரிந்தது.

நேரம் தவறாமை நேர்மை இதெல்லாம் அப்பாவிடமிருந்து கற்றவை. அப்பாவின் அன்பு கடுமையுடன் கூடியது. எந்த அளவு கோபம் வருமோ அதே அளவு அன்பும் உண்டு. 11ம் வகுப்பிலும் சைக்கிளில் வைத்து அழைத்து சென்றது ஒன்று. பள்ளி செல்ல  பேருந்தில் ஏற்றிவிட்டு பின்னால் சைக்கிளில் வந்து பள்ளியை அடைந்து விட்டேனா என பார்க்க வருவது என்பதெல்லாம் அப்பாவால் மட்டுமே முடியும். உடல் நலமில்லை என்றால் அம்மாவிடம்  இது எண்ணை அதிகம்  , அது சரியில்லை என்ற கோபத்தின் பின்னுள்ள அன்பு பிள்ளைகள் வரும் பொழுதுதான் புரிகிறது. 


என்ஜினீயரிங் படிக்கும் எண்ணமெல்லாம்  இல்லை. பயாலஜி தான் பிடிக்கும் என்றாலும், கிடைத்த வாய்ப்பை  நீ விடக்கூடாது, பின்னால் வருத்தப்படக்கூடாது என்று சொன்னதோடு அல்லாமல் எந்த கோர்ஸ் டாப், என்று பார்த்து விட்டு வந்து...கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் சிறந்தது...ஏசியில் வேலை பார்க்கலாம் என்று பார்த்து பார்த்து சேர்த்தது அப்பா தான். பெண் பிள்ளைக்கு எதற்கு என்ஜினீயரிங் என்ற சிலரின் குரல்களை எல்லாம் செவி மடுக்காமல் கல்லூரியில் சேர்த்த பொழுது தெரியவில்லை...அவர் வரையில் அவர் செய்தது எனக்கு எத்தனை பெரிய மைல்கல் என்று. 


கல்லூரியில் இருந்து வர ஆறு மணிக்கு மேல் ஆனால் அந்த பெரிய அரசு  குடியிருப்பின் இரண்டு கேட்டிலும் மாறி மாறி காத்திருப்பார் எந்த பக்கமும் நான் வரலாமென... நடுவில் வீட்டிற்கு சென்று ஒருமுறை தான் விட்டு விட்டோமோ என ஒரு பார்வை வேறு. அந்த செயலுக்கு பின்னால் இருக்கும் பொறுமை அப்பொழுது  புரியவில்லை. 


கூட்டுப்புழுவாக இருந்த என்னை , தைரியமாக வேலை கிடைத்ததும் சென்னையில் விடுதியில் சேர்த்து இன்று இங்கு இருக்க , அவர் பார்த்து பார்த்து செய்தவை ஏராளம். தினம் தனியே விடுதிக்கு சென்றாலும் அவர் வந்தால் விடுதி வரை வந்து உள்ளனுப்பிவிட்டு 7கி.மீ. நடந்து ஊருக்கு பஸ் பிடிக்க செல்வார்.  பிள்ளைகளின் படிப்பு , வேலை,  விடுதி , திருமணம் எல்லாவற்றிலும் அவர் எடுத்த சிரத்தையும் அன்பும் எங்களின் வரம்.  


நடையும் மிதிவண்டியும் அவருக்கு பிரியமானவை. வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுதும் சரி, ஒய்வு பெற்ற பின்பும் சரி... வெகு நாட்களுக்கு அவை தான் அவரது ஊர் சுற்றலுக்கு துணை, மெல்ல மெல்ல அவரிடமிருந்து ஒவ்வொன்றாக பறிக்கப்படும்வரை. 



அப்பாவுக்கும் நல்ல  நினைவு சக்தியும் கூட... பிள்ளைகளுடன் வீட்டிற்கு சென்று கிளம்பினால்.. தேடி தேடி..யோசித்து யோசித்து நாங்கள்  விட்டு வரும் அத்தனை பொருட்களும் எடுத்து கொடுப்பார். தன்  63 வயதில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கை அடிபடும்வரை சிரசாசனம் செய்வார். சைக்கிளில் தான் சென்னை உலா... கிட்டதட்ட பத்து கி.மீ  தொலைவில் இருக்கும் இடங்களுக்கு கூட சைக்கிளில்  சென்று வருவார். கை குணமானவுடன் சைக்கிளை ஓரம் கட்டினோம். அப்புறம் பஸ்  அல்லது நடை தான். 

எந்த பொருள் வீட்டிற்கு வாங்க வேண்டும் என்றாலும் எத்தனை முறை வேண்டும் என்றாலும் செல்வார்.  கிட்டதட்ட  15 கி .மீ தள்ளி வசிக்கும் எனக்கும் பிள்ளைகளுக்கும் ஏதேனும் அம்மா செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால்  (எவ்வளவு சின்ன அளவாக இருந்தாலும் ..) பஸ் ஏறி வந்து கொடுத்துவிட்டு சென்று விடுவார் . ஒரு நாள் தி.நகரில் விழுந்து கால் முறிந்த பிறகு கூட குணமாகி மீண்டும் பஸ்  + நடை தொடர்ந்தது. 


பெற்றோருக்கு என்றும் பிள்ளைகள் தான் என்பது போல் பேத்திகளுக்கு தின்பண்டங்களுடன் எனக்கு பிடித்த கேக் வேறு வாங்கி வருவார்...அப்பா எனக்கு வயசு ஆகிவிட்டது ...வாயை கட்டணும் என்று சொன்னாலும்...மீண்டும் அந்த கேக் வரும். 


எப்படி எலும்பு முறிந்தது என்று தெரியவில்லை...ஆனால் சுளுக்கு என்று ஒரு வாரம் சிரமப்படடார்... எலும்பு முறிவு என்று அறிந்த பொழுது இன்பக்ஷன் ஆகி இருந்தது. ஆப்பரேஷன் முடிந்து நன்கு நலம் பெற்றார் போல தான் இருந்தது. சுறுசுறுப்பானவர் வெறித்து பார்த்ததும்...ஞாபக சக்தி உடையவரின் ஞாபகம் குறைந்த பொழுதும் ...அறியவில்லை இனி அப்பாவை வேறு  மாதிரி பார்க்க போகிறோம் என்று. அல்செமீர் என்ற அந்த நோய் அப்பாவை மாற்ற ஆரம்பித்தது. 

என்றாலும்  அந்த சிரிப்பு , பாசம், சில வேளைகளில் கிண்டல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எட்டி பார்க்கும். சில நேரம் யாரோ போல் அமர்ந்து இருப்பார். ஒரு காலத்தில் பிடித்த அந்த நடை கூட அவருக்கு அலுப்பானது. தினம்  சிரசானமும் பிராணாயாமம் செய்து ஓடி ஓடி உழைத்தவரா  என்று தோன்றும். 

அப்பாவுக்கு அல்செமீர் முன் வரை எல்லாம் தானே பார்த்து கொள்வார். அம்மா அவரை பற்றி கவலை படாது எங்கும் செல்லலாம். 

முடிவில் ... கோவிட் 2வைத்து அலை கோர தாண்டவம் ஆடிய பொழுது ...அப்பாவின் வயது மற்றும் உடல்நிலை காரணமாக மருத்துவமனை கிடைக்காது அலைந்து ஏதோ ஒன்றில் சேர்த்து ... நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்  என்பது போல் ஆகிவிட்டது...கொடூரமான நிலை...கொஞ்ச நாட்கள் அவரை நாங்கள் பார்த்துக் கொண்டது போதும் என்று எண்ணி விட்டார் போல... அவரது 76ம் பிறந்த நாள் அன்று வீட்டை விட்டு மருத்துவமனை  அனுப்பினோம்... ஒரு வாரம் கழித்து ...அம்மாவின் 69ம் பிறந்த நாளுக்கு வீடு திரும்பவில்லை... எப்பொழுதும் மனைவி பிள்ளைகளை பார்த்துக் கொண்டவரை , மனைவி பிள்ளைகளால் விடை கொடுக்க இயலவில்லை... 

இறையே என்றீரோ ...
அம்மா என்றீரோ ...
அப்பா  என்றீரோ ...
அன்பே என்றீரோ...
மகனே என்றீரோ...
மகளே என்றீரோ...
மக்களே என்றீரோ...

மண்ணோடு உறைந்தீரோ
காற்றோடு கலந்தீரோ
நெருப்போடு ஒளிர்ந்தீரோ
நீரோடு கரைந்தீரோ
விண்ணோக்கி விரைந்தீரோ..


மயில் இறகாக 
மனம் வருடும் 
மகிழ்ந்து இருந்த 
மறவா தருணங்கள் 


நீர்க்குமிழி வாழ்க்கை
பட்டென்று வெடித்தாலும்
நீங்கா நினைவுகளால்
நிலைத்து நிற்கும்

ஒருவரின் வாழ்வின்  ஒரு  பகுதியை இப்பக்கத்தில் கொண்டு வரலாம் என்ற அறியாமையில் சிரிக்கிறேன். அப்பாவின் ஒரு துளி அன்பை இங்கு நிரப்பி சற்றே  ஆறுதல் கொள்கிறேன். 





Tuesday, September 20, 2011

வாசமான நினைவுகள்

போன மாசம் ஊருக்குப் போயிருந்தேன். உதிரிப்பூ வாங்கி 5 முழம் கட்டினவுடன் நினைவலைகளில் மூழ்கிட்டேன்.

சின்ன வயசில எங்க வீடோ சொந்தக்காரங்க வீடோ எங்க போனாலும் , உதிரிப்பூ வாங்கி பூக்கட்டுறது ஒரு தினப்படி வேலை. மூணு மணி போல பூக்காரங்க வருவாங்க. ”உதிரிப்பூ” நு கூவி தான் பூவே விப்பாங்க. பூவை வாங்கி , அதோட நாரும் வாங்கி , அந்த நாரைக் கொஞ்ச நேரம் தண்ணில ஊறப்போட்டு வைப்பாங்க. அனேகமா ஸ்கூல் முடிஞ்சு வர்ற நேரம் பாதி பூ கட்டி இருக்கும். வந்த உடனே பூவை ரெண்டாவோ மூணாவோ எடுத்து வைப்போம். அது தான் பூ கட்ட கத்துக்க ஆரம்ப பயிற்சி. அப்புறம் காய் பூ எல்லாம் கொடுத்து கால்ல நூல் பிடிச்சு பூ கட்ட சொல்லி கொடுப்பாங்க. நடுவில ஊசி வச்சு பூ கோர்க்கலாம். அதுதான் ரொம்ப ஈசி. இது ரெண்டு டெக்னிக்கிலுமே கட்டினால் , சரத்தை நடுவில வெட்ட முடியாது. அப்புறம் கொஞ்சமா பெரியவங்க மனசு இறங்கி பூ கட்ட சொல்லிக் கொடுப்பாங்க. பிச்சி, கனகாம்பரம் தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ். குட்டை காம்புங்கறதால் மல்லி தான் லாஸ்ட் சாய்ஸ். அதுவும் முதல்ல காய் பூவும் , வாடின பூவும் வச்சி தான் பழகச் செய்வாங்க... பூ கட்ட பெரும்பாலும் நார் தான்... அதுவும் நல்ல நாரா பூக்காரங்ககிட்ட பார்த்து வாங்கணும். நாரை ஊக்கு வச்சு மெல்லிசா பிரிக்கணும். சோத்து நார்னா முழுசா பிரிக்க வராது.. அப்படியே பிரிஞ்சாலும் கட்டும்போது வெட்டிட்டு போயிடும். ஓரொரு பூவா வச்சு கட்டி, அப்புறம் இரண்டு மூணுனு வச்சு கட்டி, அப்புறம் யார் நீளமா கட்டறாங்கனு போட்டி... எல்லாம் ஒரு ஜாலி தான். அப்புறம் இன்னும் டெக்க்னிக்ஸ்னு சரத்துக்கு நடுவுல நார்ல சங்கிலி பாட்டர்ன் வர்ற மாதிரி, மாலை மாதிரினு யார்ட்ட இருந்தாவது ஏதாவது கத்துக்குவோம். இப்பல்லாம் உதிரிப்பூ கொண்டு வர்ற மாதிரி தெரியலை...சரம்தான்... பூச்சரம் எல்லாம் நூல்ல தான்... அதுவும் சென்னைல வாங்கினால் தடி நூல்ல தள்ளி தள்ளி கட்டி இருக்கும், முழம் கணக்கு. மதுரை பக்கமெல்லாம் எண்ணிக்கை கணக்கு... 100 , 50னு ஆனால் நல்ல நெருக்கமா இருக்கும் . கோவை பக்கம் முழம் கணக்குனாலும் ஓரளவுக்கு பூ நெருக்கமா தான் இருக்கும்.

இன்னொரு வாசமான நினைவு மருதாணி. மருதாணியைப் பறிச்சு அம்மில அரைச்சு, கைக்கு நடுவில் பெரிய வட்டம், அப்புறம் சின்ன சின்ன வட்டம், அப்புறம் விரல்ல குப்பி குப்பியா வச்சுட்டு படுத்தால், காலைல படுக்கையெல்லாம் விழுந்து கிடக்கும். அந்த மருதாணி கை வாசமே தனி. யாருக்கு சிவப்பா பிடிச்சிருக்குனு போட்டி வேற. அப்புறம் கலர் மங்கி, விரல் நகத்தில மட்டும் குட்டி குட்டி ஆரஞ்சு நிலவா இருந்து அப்புறம் நகத்தை வெறிச்சுனு ஆக்கிட்டு மறைஞ்சு போயிடும். இந்த மருதாணி பறிக்க, யார் வீட்ல இலை இருக்குனு தேடுவோம். அதுவும் முள் இருக்கிற மருதாணிதான் நல்லா பிடிக்கும். மிக்ஸி இருந்தாலும் அம்மில அரைச்சா தான் அம்மாவுக்கு திருப்தி. அப்புறம் வடநாட்டு ஸ்டைல் க்ரேஸ் ஆரம்பிச்சுது. ப்யூட்டி பார்லர்க்கு போகணும் கை நிறைச்சு டிசைன் போட... எனக்கு என் கல்யாணத்துக்கு போடணும்னு ஆசை. 500 ரூபா இதுக்கா செலவழிக்கணும்னு ஆசை எல்லாம் தூக்கிப் போட்டுட்டேன். அப்புறம் ப்யூட்டி பார்லர் பெருக பெருக மெகந்தி போடற விலையும் குறைஞ்சிடுச்சு. இப்ப தி.நகர் போனால் 50 ரூபாய்க்கு கை நிறைய போடறான்...என்ன கொஞ்சம் கெமிக்கல் வாசம் வீசி அந்த மருதாணியோட வாசத்தை மனசுக்குள்ள கொண்டு வருது....

இன்னொரு அழகான நினைவு கோலம். அம்மாவுக்கு தினம் சாணி கரைச்சு, வாசல் தெளிச்சு கோலம் போடற பழக்கம் உண்டு. மார்கழி மாசம் வாசல் அடைக்க கோலம், பொங்கலுக்கு விடிய விடிய தெரு அடைக்க கோலம். கைல சின்ன சின்ன பார்டர் போடறது போய், கோல மாவு அடைச்சு குழலை உருட்டினால் பார்டர் வந்தது. விசேஷ நாள்னா மாக்கோலம். பச்சரிசி ஊற வச்சு, அரைச்சு, அதில துணி போட்டு, அழகா கோலம் போட்டு, செம்மண் கரை கட்டினால், கலர் கோலம் கூட கொஞ்சம் டல்லாயிடும். அப்புறம் மாக்கோலத்துக்கு பதிலா பெயிண்ட், ப்ளாஸ்டிக் அட்டைனு வந்துடுச்சி. கோலம் கத்துக்கவும் பூ கட்டற மாதிரி பல படி உண்டு. முதல்ல ரெண்டு புள்ளி கோலம், அப்புறம் மூணு புள்ளி கோலம், அப்புறம் அஞ்சு புள்ளி சாக்லேட் கோலம், ஆறு புள்ளி விளக்கு/பூ கோலம்... இங்கே நேர் புள்ளி , இடை புள்ளி ஆரம்பிக்கும் , அப்படியே கோட்டு கோலமெல்லாம் கத்துக்குவோம். நெளி கோலமும் இதே மாதிரி சின்னதில இருந்து தொடங்கும். மங்கையர் மலர்லயும், மங்கைல இருந்தும் அம்மா காப்பி பண்ண நீளமான குண்டு நோட்டு இன்னும் கண்ணுல நிக்குது. வீடு மாற மாற, அதுவும் காணாமல் போயிடுச்சு. நினைவில இருக்கிற நாலு கோலத்தை என்னிக்காவது நினைச்சா வாசல்ல போடுவேன் மாக்கோல வாசத்தை நினைச்சுகிட்டே...

Thursday, April 7, 2011

தொலையாத அடையாளங்கள்

வீட்டில் நுழையும் பொழுதே யாருமின்றி ஃபேன் சுற்றிக்கொண்டிருந்தது. ஸ்விட்சைத் தொடும் பொழுதே “காத்தாடியை அமத்து” என்று பெரிப்பாவின் குரல் காற்றில் தவழ்ந்தாற்போல் இருந்தது.

பெரிம்மையின் பெயர் வைத்துதான் அவரை அழைப்போம்.. வயதில் மூத்தவர் என்பதால், அவரைப் பெயர் சொல்லி அழைக்க எவருமில்லை. போட்டோவில் பெயர் எழுதும் நாள் வரை அவர் பெயர் எனக்கு தெரியத்தான் இல்லை. வாழ்நாள் செல்ல செல்ல பல அடையாளங்கள் தொலைந்து தான் போகின்றன.... புது அடையாளங்கள் கிடைக்கின்றன என்றும் சொல்லிக் கொள்ளலாம். பெரிப்பாவின் அடையாளங்கள் அந்த வெள்ளை வெளேர் சட்டையும், வேட்டியும் என்று சொல்லலாமா? வேலைக்கு செல்லும் பொழுது குத்திக்கொள்ளும் அந்த தங்க நிற ப்ரூச்?

லீவ் என்றாலே பெரிம்மை வீடு தான். ஆட்டமும் பாட்டமுமாக... காலையில் எழுந்தவுடன் காரையில் இருந்து இறங்கி வர யோசிக்கதான் செய்வோம். காதைக் கொஞ்சம் தீட்டி அவர் கிளம்பும் ஓசைக்காகக் காத்திருப்போம். காலையில் எழுந்து “டொக் டொக்” என்று அவர் தண்ணீர் அடித்து, தொட்டி நிரப்பி, அவரது ஆடைகளைத் துவை துவை என்று துவைப்பதில் தான் அவரது காலைப்பொழுது. இந்த நேரத்தில் அந்த பக்கம் போனால் மாட்டினோம். “எலேய், தண்ணி அடி... என்ன டொக்கு டொக்குனு... சின்ன புள்ள தெம்பு வேணாமா... இத்தன நேரமா குளிப்ப...” என்று விடாத அதட்டல்கள். புத்திசாலியாகக் காரையில் வெயில் உறைத்தாலும் புரண்டு கிடப்போம். குளியலில் அதிகாலை முதல் இருப்பவர் இரண்டே நிமிடத்தில பழையதை உண்டுவிட்டு கிளம்பி விடுவார். அதன் பின் எங்கள் ராஜ்யம்.

மீண்டும் பெரியப்பாவின் ஆளுமை “காத்தாடியை அமத்து” என்று மதியம் கேட்கும். ஆளில்லாமல் காத்தாடி ஓடுவதைக் கண்டு அவர் அரட்டும் பொழுதே நாங்கள் கோடவுனுக்குள் எஸ்கேப். மதியம் சூடாக ஒரு சாப்பாடு சாப்பிட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டு கிளம்பினார் என்றால் நாங்கள் தூங்கிய பின் தான் வருவார். காத்தாடியின் சுற்றலுடன் கரண்ட் மீட்டரும் சுற்றும் என்பது அறியாத வய்து என்பதால் “காத்தாடியை அமத்து” தான் பெரிப்பாவை நாங்கள் கிண்டல் செய்வது. ஞாயிறு மட்டும் அவருக்கு லீவ். பிள்ளையார் கோயிலில் அவர் வாசம். பொங்கலுக்காக மட்டும் கோயிலை எட்டிப்பார்ப்போம். அன்று காத்தாடி குறைவாகத் தான் ஓடும்.

ஓடிவிட்டன வருடங்கள் காத்தாடி சுற்றும் வேகத்தை விட வேகமாக. ” “அம்மா , எவ்ளோ அழகா வரைஞ்சிருக்காங்க என்ன செய்வாங்க?”. “காலண்டர்ல போடுவாங்க... உங்க பெரிப்பா இப்படிதான் வரைவார்”. ”என்ன பெரிப்பா ஆர்ட்டிஸ்டா!!!”...

”காத்தாடியை அமத்து” என்றவர் “காத்தாடியைப் போடு” என்று அலுப்புகளோடு சாய்ந்து மறைந்தும் விட்டார். அவரது தொழிலுக்கான எந்த அடையாளங்களும் வீட்டில் பார்த்ததில்லை. இன்றும் ஒவ்வொரு முறை ஆளின்றி ஃபேனை நிறுத்தும் பொழுதும் தவறாது ஒலிக்கிறது “காத்தாடியை அமத்து” என்று...

Friday, March 11, 2011

வானம்

வெட்டவெளியில் படுத்து வானத்து நட்சத்திரங்களை எண்ணும் கணங்கள் வாழ்வின் சில சுவாரசிய கணங்கள். சில்லென்ற காற்றுக்கு காலத்தைக் கடத்தும் சக்தி உண்டு. நிலவிருந்தால் வானத்தின் மீது கவனம் செல்வதில்லை; மேகத்திடை மறையும் நிலவைத் துரத்தியபடி மனமும் சென்றுவிடும். நட்சத்திரங்கள் மட்டுமே சிதறிக் கிடக்கும் வானம் இன்னும் அழகு. கரிய வானம் அழகாவதோடு, அந்த நீண்ட வெளியில் எண்ணங்கள் தடையின்றி பயணம் செய்யும்.

சிறு வயதில் நிலாச் சோறு உண்டு வானத்தை இரசித்ததுண்டு. ஊரில் காரையில் தான் தூக்கம். நட்சத்திரங்களில் உருவங்கள் தேடிக்கொண்டே உறங்கிப் போவோம். நட்சத்திர ஓளியில் விளையாடிய இரவுகளும் ஏராளம். பதின் வயதில் கோபம் வரும் பொழுதெல்லாம் தோட்டத்தில், சலவைக்கல்லில் உட்கார்ந்து கொண்டு வானம் பார்த்தால், மனம் இலேசாகிப் போகும். அதன் பின் வாழ்க்கை ஓடிய ஓட்டத்தில் நட்சத்திர இரவுகள் தொலைந்து போயின. நிலவுடன் ஒட்டியும் விலகியும் செல்லும் ஒற்றை நட்சத்திரம் மட்டும் அவ்வப்பொழுது கண்ணில் படும்.

வானத்தை நினைவுபடுத்தும் வேலையை குழந்தைகள் செய்கின்றனர். அம்புலி காட்டி ”நிலா நிலா ஓடி வா...” எனும் பொழுது நிலவும், “ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...” என்று நட்சத்திரங்களும் மீண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகின்றன. (ப்ளாக்கால் என்வானம் என் கணினியில் அடங்கியது... என்றாலும் வானம் தொலைவில் தான் நின்றது). மழலைகள் வளர்ந்து நிலவைத் தேடாது சாப்பிட ஆரம்பித்தவுடன் மீண்டும் வானம் தொலைவானது... பரபர வாழ்க்கையில்.

ஏதோ நினைவுகளுடன் விழி உயர்த்தி பார்த்தபொழுது மீண்டும் வானம் நெருக்கமானது. இந்த வானம் நோக்கிதான் எத்தனை கேள்விகள் பயணித்திருக்கும்... படிப்பு, வேலை, துணை, வீடு, வாகனம் , பிள்ளைகள் என்று எல்லா கனவுகளும் எத்தனை நட்சத்திர இரவுகளின் இருளில் பயணித்துள்ளன.... இன்று அந்த கேள்விகளுக்கு விடை இருக்கிறது. குழந்தைகள் பற்றிய அதே கேள்விகள் இப்பொழுது மீண்டும் பயணிக்கின்றன. அந்த இருள்வெளி நட்சத்திரங்களுடன் ஏதோ ஒருவிதத்தில் மனதை இலகுவாக்குகிறது.

விரிந்தே கிடக்கிறது வானம் எல்லோருக்கும்... நினைத்தால் அருகிலும் இல்லையென்றால் தொலைவாகவும்... வாழ்வின் தத்துவம் போல்...

Monday, July 19, 2010

நாங்க நாய் வளத்த கதை...

"உங்க ஆத்தா கிளி வளத்தா...மாடு வளத்தா... கோழி வளத்தா...முயல் வளத்தா... ஏன் பாம்பு கூட வளத்தா (அம்மாவும் பாம்புகளும் என்று தனிப்பதிவு போடுமளவு அம்மாவுக்கும் பாம்புக்குமான தொடர்பு விசேஷமானது).... நாய் தான் வளர்க்கலை.." என்ற வசனத்துடன் தான் அம்மாவின் நாய் வளர்ப்பு துவங்கியது. எங்களை வளர்த்து திருப்தி அடையாமல் குவாட்டர்ஸில் வீடு மாறி சற்றே பெரிய வீடு வந்ததும், அம்மாவின் நாய் ஆசை தீவிரமானது. கொழுக் மொழுக் என்று சுற்றித்திரிந்த தெரு நாய்க்குட்டி ஒன்றை வீட்டிற்கு அழைத்து வந்தோம்.

மணி என்று அதற்கு பெயரிட்டோம். எங்களைப் பொறுத்தவரை நாய் என்றால் "மணி (அ) சீஸர்" என்ற பெயரிலோ ... நிறத்தைப் பொறுத்து "ப்ரளனி, வைட்டி, பிளாக்கி" என்ற பெயரிலோ அழைக்கப்பட வேண்டும். எங்கள் நாய்க்கு கறுப்பு , வெள்ளை என்று இரு நிறமும் இருந்ததால் நிறப்பெயரின் குழப்பம் தவிர்க்க மணி என்று அழைக்கப்பட்டது. மிக்க நன்றி உணர்வுடைய நாய்... காலையில் ஊர் சுற்றினால் மாலை வீடு வந்து சேர்ந்து விடும். இரண்டு நாட்கள் காணவில்லை என்று தேடினால்.... விஷம் சாப்பிட்டு இறந்து கிடந்தது.

சில நாட்கள் சும்மா இருந்த அம்மாவால் வெள்ளை வெளேரென்று "கஷ்க் மொஷ்க்" என்று தாய் மடி விட்டு பிரிந்து சில நாளே ஆன அந்த நாய்க்குட்டியின் மீது கண் வைக்காமல் இருக்க இயலவில்லை. வந்து ஒரு வாரம் கூட இல்லை... வெராந்தாவில் சுற்றிக் கொண்டிருந்த குட்டியை ஒரு ரவுடி நாய்க்கூட்டம் அள்ளிச் சென்று குதறிச் சென்று விட்டது. பைரவருக்கு ஒரு பூஜை போட்டு அம்மா நாய் வளர்க்கும் ஆசைக்கு மூட்டை கட்டினார்கள்.

விடாது கருப்பு என்பது போல் ... இப்பொழுது நாய் ஆசை என் தம்பிக்கு பிடித்தது. எங்கள் குடும்ப நண்பர் கே.சி மாமா என்று இருந்தார். அவர் வீட்டில் ஏராளமான நாய்கள். நல்ல அல்சேஷன் குட்டி ஒன்றை எங்களுக்கு அன்பளிப்பாக அளித்தார். உயர்சாதி நாயென்று அதற்கு "சீஸர்" பெயர் சூட்டப்பட்டது. அப்பொழுது நான் "வைட்டி" என்று அழகான முயல் வளர்த்து வந்தேன். நண்பனின் எதிரி, எனக்கும் எதிரி என்று சீஸ்ர் எனது எதிரி ஆனான். ஆனால், முதன் முதலில் சீசரும் வைட்டியும் சந்தித்தபொழுது இருவருமே தலை தெறிக்க வந்த பாதையில் ஓடினார்கள். மழை இரவு ஒன்றில் வைட்டி குட்டி ஈன்றிருந்த வேளையில் சீசரும் வராந்தாவில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குள் பிரச்சனை இல்லை.

ஒரு மதிய வேளையில் குழாயில் இருந்து கொட்டும் நீரைப் பார்த்து சீஸர் வெறித்தனமாகக் குரைத்த பொழுது அந்த சந்தேகம் எழுந்தது. அன்றே மிருக வைத்தியர் அழைக்கப்பட்டு அதன் நோய் உறுதி செய்யப்பட்டது. வைத்தியர் ஊசி எடுத்து வரச் சென்ற இடைவெளியில் தப்பித்து சென்றாலும், வளர்த்த தன் எசமானனுக்கு கட்டுப்பட்டு வந்தது அந்த நன்றி உள்ள ஜீவன். எதிரி என்றாலும் மனம் கரைந்தது. சீஸரைப் புதைத்து கல்லொன்று நினைவாக வைத்தோம். பைரவருக்கு மீண்டும் ஒரு பூசை; நாய் ஆசை முற்றிலும் ஒழிந்தது. தெருவில் போகும் நாய்க்கு மீந்த சோறு மட்டும் போடுவோம்.

என்றாலும்... கடைசியாக நிகழ்ந்த நிகழ்வும் சொல்லத்தான் வேண்டும். நந்தினி பிறந்திருந்த நேரம்... தாய்ப்பால் அருந்திவிட்டு தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தது அந்த அழகான வெள்ளைக்குட்டி. "இந்த நாய் வளர்ப்போம்; பால் வைப்போம்" என்று சிரட்டை எடுத்தார் என் கணவர். எல்லா கதையும் சொல்லி, "தயவு செய்து நாய் வளர்ப்பு வேண்டாம். பால் வைக்க வேண்டாம்" என்று நானும் என் அம்மாவும் கெஞ்சினாலும் ," இதெல்லாம் ஒரு காரணமா" என்று அதற்கு பாலூட்டி மகிழ்ந்தார். மறுநாள் பால் கிண்ணத்துடன் நாங்கள் குட்டியைத் தேடினோம்.... நம்புங்கள் .... எங்கள் வீட்டைச் சுற்றி மூங்கில் மரங்கள் உண்டு. அவற்றிடையே கழுத்தை நுழைத்து மூச்சு திணறி உயிர் இழந்திருந்தது அந்த அப்பாவி ஜீவன். ஒரு கணம் எனக்கு அது கழுத்தை நுழைத்து தற்கொலை செய்தாற் போல் இருந்தது... மணியின் மரணம் கூட தற்கொலையோ என்று எண்ணத்தூண்டியது இந்நிகழ்வு.


இந்த கதை எல்லாம் சொல்லி நாய் வளர்க்கக்கூடாது என்றால் "அட போம்மா.... நாங்க நல்லா நாய் வளர்ப்போம் ; வாங்கி கொடு" என்கிறார்கள் குட்டீஸ். பட்... எனக்கு அவங்களை வளர்க்கவே டைம் பத்தலை... இதில் நாய் வேறயா... எனவே மீன், லவ் பேர்ட்ஸ் என்று சமாளித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு நாய் படற பாட்டைக் கேட்டிருந்தால் நீங்களும் சொல்லுங்க. ..

Tuesday, April 27, 2010

நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா?

கதை சொல்லிகள் பற்றிய பதிவுகள் படிக்கும் பொழுதே மனதை நிறைத்து நின்றனர் அம்மாவும் மாம்மையும். குழந்தை பருவத்தில் இருந்து வாழ்க்கை முழுக்க அலுக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் கதைகளை... கதை சொல்லிகளிடமிருந்து.

மாம்மை .... கதை என்றவுடன் இவர் நினைவு தான் மனதை நிறைக்கின்றது. மாம்மை ஒரு கத சொல்லுங்க என்றால், "நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா, வாழ்ந்த கத சொல்லவா, தாழ்ந்த கத சொல்லவா" என்று மரப்பாச்சி பொம்மை சொன்னதாக கூறி ஆரம்பிக்கும் அழகே தனி. ஏதேதோ கதைகள் கூறுவார்... "பொன்னேங்கர தாசி கதை" , செவ்வாய்க்கிழமை விரதக் கதை , இலச்சுமி கதை , அவ்வை கதை, விக்ரமாதித்யன் கதை, இராமன் கதை, பாண்டவர் கதை, என்று பல கதைகள் அடக்கம். அவர் கூறும் பாம்பு கதைகள் சுவாரசியமானவை... சுடுகாடு வரை வந்து எட்டிப்பார்க்கும் கொம்பேறி மூர்க்கன், கண்ணைக் கொத்தும் பச்சை பாம்பு, பழி வாங்கக் காத்திருந்து திருமணத்தன்று பூவிலிருந்து தீண்டிய பூநாகம் என்று சுவாரசியங்கள் நிறைந்தவை. அது போக அவ்வப்பொழுது "கொழுக்கட்டையை" "அத்திரி பாச்சா" என்று சொல்லி மனைவியின் உடம்பை "கொழுக்கட்டை" போல் வீங்க வைத்த முட்டாள் மாப்பிள்ளை, மாவுக்கு ஆசைப்பட்டு ஆட்டுரலில் தலை விட்ட மாப்பிள்ளை என்ற நாடோடிக் கதைகளும்... சில கதைகளே என்றாலும் எல்லா கதைகளும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது... இன்றும் நினைத்தால் இனிக்கும் கதைகள். குழந்தைகளுக்கு நன்கு கதை சொல்வதாக நினைத்துக்கொள்ளும் எனக்கு, யோசித்துப்பார்த்தால் அவரது திறமையில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை என்றே தோன்றுகிறது.

ஐயம்மை... இவர்களும் கதை சொல்வார்கள்... திகிலூட்டும் பேய்க்கதைகள். சுள்ளி பொறுக்க சென்ற பொழுது நடுக்காட்டில் அழைத்த முனியும், கன்னிப்பெண்ணைப் பிடித்தாட்டிய பேயும், யாருக்கு உடல் நலமில்லை என்றாலும் "எல்லாம் அவளால் தான்" என்று இறந்து போன யாரோ ஒருவரையும் பற்றியும் கூறி திகிலூட்டுவார். திகிலாக இருந்தாலும் கதை கேட்டுவிட்டு பின்னர் பயந்து கொண்டிருப்போம். இப்பொழுது சிரிப்பாக இருப்பது அப்பொழுது திகில் தான்.

அம்மா... எனக்கு அம்மா சொன்ன கதைகள் நினைவில் இல்லை. ஆனால் அம்மா என் குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்டுவது கண்டு தான் நான் கதை சொல்லக் கற்றுக் கொண்டேன். நாய், பூனை காக்கா என்று எதையாவது வைத்து அவர் கதை கூறும் சுவாரசியத்தில் குழந்தைகள் இரண்டு வாய் அதிகம் உண்ணுவர். டி.வி.யில் ஒருமுறை கதைசொல்லி ஒருவர் குழந்தைகளுக்கான கதை ஒன்றை அபிநயத்தோடு கூறிய பொழுது கதை சொல்வது என்பது ஒரு தனி கலை என்று தோன்றியது. இப்பொழுது என் இரு பெண்களும் அழகாகக் கற்பனை கலந்து கூறும் கதைகள் இனிமை... இனிமை... இனிமை...

அம்புலி மாமா, பாலமித்ரா, கோகுலம் , சிறுவர் மலர் மற்றும் படக்கதைகள் தந்த சுவாரசியங்கள் தனி ரகம். இன்றும் தேவதைக்கதைகளும், நாடோடிக் கதைகளும் மனதை மயக்குகின்றன. கற்பனைகளும் கனவுகளும் நிறைந்த அந்த மாயா உலகிற்கு இட்டுச் செல்லும் கலை கதைசொல்லிகளுக்கு மட்டுமே கைவரும். "நிலவில் இருக்கும் முயலும்", "கடலுள் உப்பை இன்னும் சிந்தும் கருவியும்" என்று இன்னும் பாட்டி சொன்ன கதைகள் கூறும் பொழுது கதை சொன்ன முன்னோரும் கதையோடு நம்முடன் வாழ்கின்றனர்.

Friday, April 23, 2010

பானகம்

சமீபத்தில் "தோசா காலிங்" சென்றிருந்தேன். மெனுவில் "பானகம்" இருந்தது. விளக்கத்தில் "பனம்பழமும் கருப்பட்டியும் கலந்த பானம்" என்று குறிப்பு இருந்தது. குடித்துப் பார்த்தேன்... கருப்பட்டியின் சுவையுடன் சற்றே வித்யாசமாக இருந்தது.


சிறு வயதில் வீட்டில் விழா என்றாலும் சரி ஊர்த்திருவிழா என்றாலும் சரி... அண்டா நிறைய பானகம் கரைக்கப்பட்டு தம்ளர் தம்ளராக காலியாகும். இந்த பானகம் வெல்லம், புளி/எலுமிச்சை சாறு மற்றும் ஏலப்பொடி சேர்த்து செய்யப்பட்டது. இன்றும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் ருசி தனி.

அதன் பிறகு நன்னாரி சர்பத் அந்த இடத்தைப் பிடித்தது. மஞ்சள் நிறத்தை விட சிவப்பு நிறம் தான் பிடிக்கும். அதைக் குடித்து வாய் சிவப்பதை இரசிக்கலாமே!!! எலுமிச்சை, சர்பத், தண்ணீர் ஐஸ்பார் என்று ஒரு பெரிய குண்டா நிறைய கரைத்தால்... குடித்துக்கொண்டே இருப்போம் கோடை வெயிலுக்கு. ”கண் மார்க்” சர்பத் என்று தேடி வாங்குவோம். நாக்கில் சிவப்பு நிறம் ஒட்டுவது போல் இன்றும் மனதோடு இருக்கும் ருசி அது. இன்றும் ஊருக்கு சென்றால் சர்பத் கடை தேடித்தான் கால்கள் ஓடும். தண்ணீருடன் ஒரு ருசி, சோடாவுடன் ஒரு ருசி என்று இன்றும் என்னுடைய all time favorite சர்பத் தான்.

அதன் பிறகு ரஸ்னா சீசன். பவுடராக ஒரு பாக்கட், சிரப்பாக ஒரு பாக்கட் என்று சற்றே வித்யாசமாக சுவையுடன் வரும் அதைக் கலப்பதே ஒரு தனி கலை. அந்த பவுடரையும் சர்க்கரையும் கரைத்து சிரப்பை சேர்த்து, துணியில் வடிகட்டி கான்ஸண்ட்ரேட் தனி கவனத்துடன் தயாராகும். அப்புறம் தண்ணீர் சேர்த்து, கடையில் இருந்து ஐஸ்பார்களை வாங்கி வந்து ரஸ்னா ரெடியானால் "ஐ லவ் யூ ரஸ்னா" என்று அந்த குட்டிப்பெண்ணை எண்ணியபடி நாமும் ருசிக்கலாம். இன்றும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் ருசி தனி.

சமீப நாட்களாக இந்த வேலை எல்லாம் கிடையாது... மிராண்டா, பான்டா, கோக் , பெப்ஸி என்று பெரிய பாட்டில்கள் வாங்கப்பட்டு தொண்டையை நனைக்கின்றன. இதன் ருசியும் தனிதான்... ஏனோ எனக்கு நாவில் ஒட்டாத ருசி...

Wednesday, March 3, 2010

தீயினால் சுட்ட புண்

அவள் முழுப்பெயர் என்ன என்று யோசிக்கிறேன். நினைவில் வரவில்லை. வித்யாசமான பெயர்... பெயரைச் சுருக்கித்தான் அழைப்போம்... சரி விடுங்கள் பெயரைச் சொல்லி என்ன செய்ய? அவள் எனக்கு தூரத்து உறவு.. எப்படி என்றால்...சரி விடுங்கள் உறவைச் சொல்லி என்ன செய்ய?

விடுமுறைக்கு செல்லும் பொழுது விளையாடி உள்ளோம். கிணற்றில் எட்டி பார்த்து திட்டு வாங்கி உள்ளோம்; தேங்காய் பூ பறித்து சொப்பில் சமைத்துள்ளோம்; அவள் மாமா ஊரிலிருந்து கொண்டுவரும் முந்திரி கொட்டைகளை அனலில் இட்டு உடைத்து சாப்பிட்டுள்ளோம், பால் நிலா பொழியும் இரவுகளில் கதைகள் பேசி சிரித்துள்ளோம்.

ஏதோ ஒரு நாளில் கிணற்றை மறைத்த சுவரில் சாய்ந்து, கூரையில் தனித்து நிற்கும் மரப்பல்லிகளைப் பார்த்தவாறு, பெரியவர்கள் சண்டையில் சிறியவர்கள் பேசாது இருந்துள்ளோம்; என்றாலும் சில நேரங்களில் குப்பை கொட்ட வெளியே செல்லும் பொழுது சந்தித்தால் இரகசியமாகப் புன்னகைத்துள்ளோம்.

அவளுக்கு நல்ல சிரித்த முகம். அவள் கையெழுத்து அழகு ஆனால் படிப்பில் சுமார் என்பதெல்லாம் எனக்கு அப்பொழுது தெரியாது; விளையாட நட்பு பூக்கும் மனம் இருந்தால் போதுமே!!! நன்றாக படிப்பாளாம், ஆனால் மெதுவாக எழுதுவதால் மதிப்பெண் கம்மியாம்.

அது பதின்மம் தொட்ட பருவம் என்று எண்ணுகிறேன். ஒற்றை ரோஜாவை அழகாக கூந்தலில் பக்கவாட்டில் செருகி இருந்தாள். தோட்டத்தில் பூத்த ரோஜாவாக இருக்குமோ? தெரியவில்லை? அதற்கும் அவள் படிப்புக்கும் என்ன சம்மந்தம்? அன்று அவளுக்கு பரீட்சை பேப்பர் கொடுத்தார்கள். "ஸ்டைலா பூவை யாரை மயக்க வச்சுட்டு வர? மார்க் வாங்காதவளுக்கெல்லாம் பூ தேவையா?" என்ற சொற்கள் தீயின் வெம்மையைக் கூட மறக்கச் செய்துவிட்டது. மறுநாள் காலை அடுப்பெரிக்க வைத்த மண்ணெண்ணெய் பூவை எரித்துவிட்டது.

பூவாக மலர்ந்த முகத்தை கருகியதாக இன்னும் எண்ண இயலவில்லை. அந்த ஆசிரியை என்ன ஆனார் என்பதெல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் கனமான மனதுடன் இந்த நிகழ்வை எண்ணும் பொழுது, சமூகத்தின் சில அழுகிய முகங்களையும் காணும் மனத்திண்மையைக் குழந்தைகளுக்கு அளிக்கும் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு என்று தோன்றுகிறது.

Tuesday, January 26, 2010

காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...

பெட் வேண்டும் என்று வீட்டில் குழந்தைகள் ஒரே கெஞ்சல். மீன் உண்டு. அடுத்த படியாக பராமரிக்க எளிது என்று லவ் பேர்ட்ஸ் வாங்கினோம். வரும் பொழுதே சின்னப் பெண்ணிடமிருந்து கேள்வி, "அது ரெண்டும் லவ் பண்ணுதா அம்மா?". அவ்வப்பொழுது இப்படி ஏதேனும் ஒரு கேள்வி வந்து கொண்டேதான் இருக்கும் விளம்பரம் கண்டாலோ, படம் பார்த்தாலோ... "நீங்க ரெண்டு பேரும் எப்ப ஃபர்ஸ்ட் பார்த்தீங்க? என்ன பேசினீங்க?". வியப்பாகத் தான் உள்ளது கேள்விகள். சிரித்துக் கொண்டே பதில்கள் சொல்ல கற்றுக்கொண்டோம். மனம் கொசுவர்த்தி சுற்றியது...

அன்று பள்ளியில் இருந்து வந்த பொழுது அடுப்படியில் புதிதாக பெண் ஒருவர் இருந்தார். புன்னகைத்தவரை யோசனையுடன் பார்த்தபடி அம்மாவை நோக்கினேன். தீவிரமாக சமையல் செய்து கொண்டிருந்தார் அம்மா; என்னைப் பார்க்க விரும்பவில்லை. எப்பொழுது ஊருக்கு வந்தாலும் சிரிப்போடு கும்மாளம் அடிக்கும் அண்ணன் , ஹாலில் சற்று சீரியசாக சிரிக்க முயன்றார். சற்று நேரத்தில் புரிந்துவிட்டது... இருவரும் ஊரை விட்டு ஓடி வந்திருந்தார்கள் என்று. எப்படி லவ் பண்ணி இருப்பார்கள் என்ற கேள்வி மனதைப் பிறாண்டியது. டி.வி நிகழ்ச்சிகள் கூட சென்சார் செய்யப்பட்ட காலகட்டம், "லவ்" என்று சொல்வதே தவறாக இருந்தது... "ஹீரோவும் ஹீரோயினும் இது பண்ணுவாங்க" "வில்லன் அந்த பொண்ணை இது பண்ணிடுவான்" என்ற "இது" அதன் இடம் பொறுத்து பொருள் கொள்ளப்பட்டது. மனதைப் பிறாண்டிய கேள்வியைக் கேட்க இயலாமலே அவர்கள் ஊருக்கு போய்விட்டார்கள்.

ஊரில் திருவிழாவுக்கு வந்த எல்லா உறவினர்களும் கூடியிருந்தோம். குழந்தையைத் தொட்டிலில் கிடத்திவிட்டு, அடுப்படியில் வேலை உள்ளதா என எட்டிப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்த அண்ணியிடம் இரகசியமாக, "அண்ணி, அண்ணனை எப்ப நீங்க முதல்ல பார்த்தீங்க?" என்றோம். அண்ணியின் முகம் பூவாக மலர "நான் காலேஜுக்கு போக பஸ் ஸ்டாண்ட்ல நிப்பேன். உங்க அண்ணனும் அங்க வருவாக... .". அண்ணி சொல்ல ஆரம்பித்த வேளையில், "அதுக தான் கூறு இல்லாமல் கேக்குதுனா நீயும் இப்படி கூறுகெட்டதனமா சொல்லிட்டு இருப்பியா?" என்ற அம்மாவின் கத்தலில் எங்கள் அவை கலைந்தது. "எப்படி லவ் வந்து இருக்கும்" என்ற கேள்வி பதில் இல்லாமலே எல்லோர் மனதிலும் தங்கி விட்டது.

”அண்ணி உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க” என்று அம்மா முன்பாக அண்ணியிடம் கேட்க எனக்கு தைரியம் வந்தது எனது திருமணத்திற்குப் பின் தான்.

இப்பொழுது எதையும் உனக்கு தேவையற்றது என்ற பதிலாலோ, பதில் சொல்லாமலோ மழுப்ப முடியாது. அவர்களுக்குப் ஏற்ற பதில் சொல்ல கற்றுக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. காலத்தின் தேவைக்கேற்ப எல்லா விஷயங்களும் மாறிக்கொண்டே தான் உள்ளன

Wednesday, December 23, 2009

மறக்க முடியுமா?

வாட்சும் மோதிரமும்


கொசுறு (ம்... வாட்ச் ஸ்ட்ராப் என்ன அழகு?)



மறக்கப்பட்ட அழியா நினைவுகள்

Wednesday, December 16, 2009

நண்டு வருது, நரி வருது...

குழந்தை பிறந்து வளரும் வரை ஒவ்வொரு வட்டாரத்திலும் சில பாடல்கள் உண்டு. கேட்க, பாட இனிமையான பாடல்கள் அவை. நான் கேட்ட சிலவற்றை இங்கு தொகுத்துள்ளேன். சில பாடல்கள் மருவி இருக்கலாம். தவறு இருந்தால் திருத்துங்கள். உங்களுக்குத் தெரிந்ததும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*********************
பெயர் வைக்கும்பொழுது முறத்தில் (சொளவு என்பது வழக்கு) சேலை, வேஷ்டி வைத்து, குழந்தையைக் கிடத்தி இலேசாகப் புடைப்பார்கள். அப்பொழுது பாடும் பாடல்

சொளவு நிறையத் தந்தவரே
உலகு நிறைய தா!!!
(இதை உழவு நிறைய என்றும் சொல்கிறார்கள். எது என்று எனக்குத் தெரியவில்லை)

************************
சின்னக் குழந்தையில் இருந்து அதன் இரு கைகளை நாடியில் குவித்து, பின்பு விரிக்கும் இவ்விளையாட்டிற்குப் பாடல்

சொட்டை , சொடக்கு
சோத்துப்பானை டொமக்கு...

ஒவ்வொரு சொல்லுக்கும் நாடியில் கையைக் குவித்து வைக்க வேண்டும். "டொமக்கு" என்று உரக்கக் கூறிக் கையை நாடியிலிருந்து எடுத்து விரிக்கும் பொழுது குழந்தை சிரிக்கும்.
************************

கைகளைப் பூவாகப் பாவித்து விரித்து, கையை ஆட்டிப் பாட, பின் நம்மோடு சேர்ந்து குழந்தையும் பூ போல் கையை விரித்து சிரிக்கும்

மாம்பூ மகிழம்பூ
மாமா கொடுத்த
மல்லிகைப்பூ

தாம்பூ தாழம்பூ
தாத்தா கொடுத்த
தாமரைப்பூ

***************************

பேச்சு சொல்லிக் கொடுக்கையில்

முதலில் அஃகு, அங்கு...

பின் அத்தை என்று சொல்லிக் கொடுக்க...இடது கையை விரித்து வலது கை ஆட்காடி விரலால் இடது கையின் நடுவில் குத்தி குத்தி...

அத்தத்த நெய்யூத்து
பிஞ்சு கத்தரிக்காயாம்
இன்னும் கொஞ்சம் ஊத்து

**********************

கொஞ்சம் வளர்ந்த பின், கையைப் பிடிக்க சொல்லும் பாட்டு:

மாக்கொழுக்கட்டை
மஞ்சள் கொழுக்கட்டை
மாமியார் பிடித்த
மண் கொழுக்கட்டை
பிள்ளையார் பிடித்த
பிடி கொழுக்கட்டை

இதில், நம் கைவிரல்களை மடக்கி ஒவ்வொரு வரிக்கும் குழந்தையின் கைகளில் வைக்க வேண்டும். கடைசி வரிக்கு நம் கையைப் பிடிக்கச் சொல்லிக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

***************************

மேலும் சில பாடல்கள்:
---------------------

பருப்பு கடை, பருப்பு கடை
இது சோறு, இது குழம்பு, இது கீரை, இது தயிர், இது பொரியல்
அம்மாக்கு கொஞ்சம், அப்பாக்கு கொஞ்சம்,
பாட்டிக்கு கொஞ்சம், தாத்தாக்கு கொஞ்சம்,
பாப்பாக்கு கொஞ்சம்

கழுவி கழுவி ஊத்து...
நண்டு வருது, நரி வருது...
நண்டு வருது, நரி வருது...
(கிச்சு கிச்சு மூட்டுதல்)


இந்த பாட்டுக்கு கற்பனை சேர்த்துட்டு சாய்ந்தாட வேண்டியதுதான்...
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
மணிவிளக்கே சாய்ந்தாடு
மாடப்புறாவே சாய்ந்தாடு


கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு

கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய் போடலாம் கைவீசு

எத்தனை அழகான பாடல்கள்? குழந்தைகளும் இரசிக்க நாமும் இரசிக்க வாழ்க்கையை சுவாரசியமாக்கும் அழகான பாடல்கள்.

Monday, November 23, 2009

வண்ணத்துப்பூச்சி எங்கே போச்சு?



பரபரத்துக் கொண்டிருந்த போக்குவரத்து நிறைந்த சாலையை மின்னலாக அழகுபடுத்தி படபடத்து மறைந்தது வண்ணத்துப்பூச்சி ஜோடி ஒன்று. அந்த அழகை எவரும் இரசித்ததாகத் தெரியவில்லை. பட்டாம்பூச்சி பறப்பதால் வசந்த காலமோ என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. வெயிலும் மழையும் தவிர காலத்தை கணிக்க வேறொன்றுமில்லாத அலுப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் மீண்டும் மேம்பாலமருகே பட்டாம்பூச்சிகள் ஒன்றை ஒன்று துரத்தி மறைந்தன. எங்கே சென்றிருக்கும் என்ற எண்ணத்துடன் வண்ணத்துப்பூச்சி நினைவுகளைத் துரத்தியது மனம்.

வண்ணத்துப்பூச்சி மட்டும் தானா? பொன்வண்டு, மின்மினி பூச்சி என்று எத்தனை பூச்சிகள் மனதைக் கவர்ந்தன. தீப்பெட்டிக்குள் குடி வைக்கப்பட்டு இலைகளால் வளர்க்கப்படும் பொன்வண்டு, பின் கருணையால் விடுவிக்கப்படும். மின்மினி பூச்சிகளைக் காண்பதற்காகவே முற்றத்து விளக்குகள் அணைக்கப்படும். மிகவும் பாவப்பட்ட ஜீவன் இந்த பட்டாம்பூச்சி தான்.

வசந்தத்தின் வருகையை பூமெத்தை விரித்து தாவரங்கள் வரவேற்க, மெலிதான சில்லென்று காற்று கட்டியம் கூற வண்ணத்துப்பூச்சிகளின் நடனம் துவங்கும். பெரிதாக கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் இராஜா வர, ஆழ்ந்த பழுப்பு வண்ணத்தில் கருப்பு கோடுகள் அலங்கரிக்க இராணி வர, சின்ன சின்ன மஞ்சள் நிறத்து சேடியர் பூக்களை முத்தமிட, இன்னும் பல வண்ணங்களில் ஏனையோர் நடனமிட வசந்தம் புன்சிரிப்போடு நுழையும். பூக்களை முத்தமிட்டு செல்லும் அந்த பட்பட் பட்டாம்பூச்சிக்கு எப்படி தான் என் கைகளின் வாசனை தெரியுமோ? சட்டென்று மறைந்து மாயாவியாக மீண்டும் நான் விலகிய பின் வந்தமரும்.

குட்டிப்பையன்களின் கை சும்மா இருக்காது. வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணங்கள் அவர்கள் கைகளில் ஒட்ட, பிளாஸ்டிக் பைகளில் படபடக்கும் நிறமிழந்தாலும் நிறம் மாறா வண்ணத்துப்பூச்சிகள். “உன்னை அடைத்தால் எப்படி இருக்கும்” என்ற சண்டைகளுடன் அவற்றுக்கான விடுதலை போராட்டங்கள் ஆரம்பிக்கும். பட பட என்று சிறைக்குள் போராடி ஓய்ந்து விழும் சமயம் தான் பையன்களின் மனம் கரையும், சிறை திறக்கும். சற்றே தளர்ந்து நகர்ந்து, பின் சுதந்திரக்காற்றின் ஸ்பரிசத்தில் துள்ளி எழுந்து மீண்டும் படபடத்து பறந்து மறையும் வானவில் வண்ணங்கள். பட்டாம்பூச்சியின் வளர்ச்சியைப் பாடத்தில் மட்டுமே கவனித்திருந்தேன் சில வருடங்கள் முன் வரை...

அலுவலகம் முடிந்து வரும் வேளையில், நந்தினி ஓடிவந்தாள் "அம்மா, பட்டாம்பூச்சி முட்டை போட்டிருக்கும்மா வந்து பாரேன்... ஐயாப்பா காட்டினாங்க". எனக்கு அது பட்டாம்பூச்சி முட்டை என்று தோன்றவில்லை. அவள் திருப்திக்காக எட்டிப்பார்த்தேன். "அம்மா முட்டை பொரிச்சு புழு வந்துடுச்சு... இலையெல்லாம் ஓட்டை ஓட்டையா இருக்கு பாரேன்". கம்பளி புழு என்றால் எட்டடி ஓடும் நான் அவளுக்காக மீண்டும் எட்டிப்பார்த்தேன். "அம்மா கூடு கட்டி உள்ள போயிடுச்சு...". மெல்ல ஆர்வம் எட்டிப் பார்க்க தினம் எட்டிப் பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து வந்து இருள் கவியும் வரை, தாத்தாவும் பேத்தியும் அந்த செவ்வரளிச் செடியருகில் கழிக்கும் நேரங்கள் கவிதை போன்று இனிமையானவை. "அம்மா பட்டாம்பூச்சி பறந்து போச்சு..." கண்களில் அதிசயத்துடன் மகள், பேத்திக்கு இயற்கையைப் போதித்த திருப்தியில் மாமா.

மெல்ல எட்டிப் பார்த்தேன்... பட்டாம்பூச்சியின் சாட்சியாக காலியான கூடு. எங்கே பறந்து போச்சு? மீண்டும் வீடு தேடி வருமா என தெரியவில்லை. எத்தனை பேருக்கு அமையும் பிறந்ததில் இருந்து இறுதி வரை அதே இடத்தில் வாழ்க்கை? உயிர் கூட்டைப் பிரியும் வரை... எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழ்ந்து எங்கே முடியப் போகிறதோ??? செவ்வரளி தழைத்தவுடன் மீண்டும் வந்தது வண்ணத்துப்பூச்சியின் முட்டைகளும் தாத்தா பேத்தியின் கவிதையான நேரங்களும். இப்பொழுது செவ்வரளிச் செடியும் இல்லை, மாமாவும் இல்லை... நினைவுகள் மட்டும் நெஞ்சில் பசுமையாக வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களாக... நினைவு இருக்கிறதா என் செல்ல மகளே ஐயாப்பாவுடனான அந்த இனிய பொழுதுகள்?

Tuesday, September 29, 2009

ஊஞ்சலாடும் நினைவுகள்

சமீபத்தில் ஊருக்கு சென்று வீடுகள் நிறைந்த ஒரு இடத்தைக் கடக்கும் பொழுது அம்மா சொன்னார் "இங்க தான் நாங்க சோத்தைக்கட்டிட்டு வந்து ஊஞ்சல் விளையாடுவோம். அப்ப இது காடா கிடக்கும். இப்ப பாரு", என்று. ஊஞ்சல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விஷயம். இன்றைக்கும் பூங்காக்களில் "குழந்தைகளுக்காக" என்று போட்டிருந்தாலும் விளையாடும் பெரியவர்களைக் காணலாம். சட்டென்று மனம் ஊஞ்சல் நினைவுகளைத் தேடியது;

கோவையில் வனச்சரகக் குடியிருப்பு தான் நான் வளர்ந்த இடம். வீட்டருகில் நிறைய புளிய மரங்கள் நாங்கள் விளையாட நிழலை விரித்துக் காத்திருக்கும். சிறுவர்களின் விளையாட்டுத் திடல் அது தான். அதன் மரக்கிளைகளில் தொங்கி ஊஞ்சல் ஆடிய பொழுதுகள் இன்றும் பசுமையாக... அந்த நிழலின் குளுமையாக....அதன் பின் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வராண்டா வந்தது. நல்ல தாம்புக் கயிறும், சின்னதாக ஊஞ்சல் பலகையும் வாங்கி அப்பா ஊஞ்சல் போட்டுத் தந்தார்.எனக்கும் என் தம்பிக்கும் இடையில் ஊஞ்சல் யாருக்கு என்று அடிக்கடி யுத்தம் நடக்கும். சில சமயம் ஊஞ்சலில் தட்டாமாலை சுற்றி, தாம்புக்கயிறில் முடியும் சுற்றி, கத்திரிக்கோல் உதவியின்றி நான் எழுந்தது இல்லை. என்றாலும் ஊஞ்சலும் தட்டாமாலையும் அடிக்கடி நடக்கும்.

பின் வீடு மாறியதால் சற்றே நீளமான வராண்டா... தாம்புக்கயிறு இரும்புச் சங்கிலி ஆனது... "ஜிவ்வென்று" மேலே வரை ஊஞ்சலாடி இறங்குவதே பறப்பது போல் இருக்கும். சில சமயம் நிலைப்படி தட்டி கொஞ்சம் கீழே இறக்கிவிடும். அதில் தான் நந்தினியும் சிரித்துக் கொண்டே ஊஞ்சல் ஆடுவாள். இப்பொழுது அவள் சிரிக்கும் பொழுதெல்லாம் நினைக்கும் சம்பவமாக ஊஞ்சல் ஆனது. ஆடிக்கொண்டிருந்தவளை நோக்கி அவள் தந்தை கை நீட்ட, சட்டென்று கையை விட்டவளைப் பிடிக்க இயலவில்லை. வாய் முழுதும் இரத்தம். டாக்டரிடம் போய், மருந்து போட்டு ஒரு மணி நேரத்தில் எல்லாம் சரியானது. சில மாதங்கள் கழித்து தான் பார்த்தோம், பல்லில் கறை போல்... ஏதோ வளர்ச்சி தடைபட்டுவிட்டது போலும்...வேர்கள் நன்கு வளர்ந்தபின், பதின்ம வயதில் தான் அதற்கு வைத்தியம் பார்க்கலாமாம்... ம்ஹ்ம்... ஊஞ்சல் ஆசை...


எனக்கு சினிமாவில் வருவது போல் பெரிய ஊஞ்சல் ஹாலில் போட்டு படிக்க, படுக்க வேண்டும் என்று ஆசை. வீடு கட்டும்பொழுது மாமாவிடம் சொல்ல, அவரே மரம் பார்த்து வாங்கி ஒரு ஆள் படுக்கும் அளவு ஊஞ்சல் பலகை செய்து வாங்கினார். வீட்டுக்கூரையிலும் கொக்கி எல்லாம் வைத்தாயிற்று... ஆனால் வீட்டுள் ஊஞ்சலுக்கு இடம் கொடுத்தால் வேறு எதற்கும் இடம் தான் இல்லை. எனவே ஊஞ்சல் வீட்டு முகப்பிற்கு வந்தது. ஆசை தீர உட்கார்ந்து, படுத்து , படித்து.... அதன் பின் கார் வந்து அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

இப்பொழுது ஊஞ்சல் பலகை ஓய்வெடுக்கிறது. அதன் இரும்பு சங்கிலி தொட்டில் கட்டவும் பிரம்பு கூடை ஊஞ்சல் தொங்கவும் உதவுகிறது. அந்த பிரம்பு ஊஞ்சலில் தான் மாமா அமர்ந்து யாழினியைத் தோளில் சாய்த்து உறங்க வைப்பார். இப்பொழுது அந்த ஊஞ்சல் சும்மா காற்றில ஆடிக்கொண்டு இருக்கிறது. வீட்டிற்கு யாரேனும் வந்து அதில் அமர்ந்தால் தான் அதற்கு சண்டை துவங்கும். வாழ்க்கையே ஊஞ்சல் தான்!!!! நாம் உட்கார்ந்து இருக்கிறோம்... யாரோ ஆட்டிக் கொண்டு இருக்கிறார்கள்... சுகமாகவும் இருக்கும் சுமையாகவும் இருக்கும்... நிறுத்தவும் தோன்றும்... ஆடிக்கொண்டே இருக்கவும் தோன்றும்....நிற்கும் வரை இந்த ஆட்டம்தான்...

Friday, May 29, 2009

கடிதங்களில் தவறியவை...

"சிறகு இல்லாமல் பறவை ஒன்று
தேசம் எங்கும் திரியும்
பிடிபட்டால் திறந்து விடும். அது என்ன? "

"ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?"


கிட்டதட்ட பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நான் ஒட்டி அத்தை மாமாவால் பிரிக்கப்பட்டு இருந்த கடிதம் , சமீபத்தில் மீண்டும் நான் பிரித்து படிக்க கிடைத்தது. கடிதத்தின் வாசனையும் எழுத்துக்களும் அப்படியே இருப்பதாகத் தோன்றியது. காலத்தைக் கடக்கச் செய்யும் கருவியாக அந்த கடிதம் தெரிந்தது.

சிறு வயதில், நாங்கள் கோவையில் இருப்போம். பெற்றோரின் உறவினரெல்லாம் சிவகாசியில். என் அண்ணன் (பெரியம்மாவின் மகன்) ஒருவர் சிவகாசியில் இருந்து வாரம் ஒரு கடிதம் போடுவார். நாங்கள் குவார்ட்டர்ஸில் இருந்தோம். அப்பாவின் அலுவலகத்திற்கு தான் கடிதம் வரும். தினம் அப்பா வரும்பொழுது கடிதத்திற்காக நானும் அம்மாவும் ஓடிப்போய் அவரை வரவேற்போம். ஊரில் நடக்கும் எல்லா விசயங்களும் அந்த கார்டில் இருக்கும். அந்த அண்ணனுக்கு மணமானவுடன் அடுத்த அண்ணன் கடிதம் எழுதும் வேலையை எடுத்துக் கொண்டார். அவருக்கு மணமானவுடன் அடுத்த அண்ணன். அதன் பிறகு தொலைபேசி வந்துவிட்டது.

அப்பொழுது இன்லாண்ட் லெட்டர் வசதியானவர்கள் எழுதுவதற்காகவோ மிக முக்கிய விசயம் எழுதுவதற்காகவோ இருக்கும். வெளிநாட்டு தபால்கள் தனியாகத் தெரிந்து பெறுநரை ஆச்சரியமாகப் பார்க்கச் செய்யும். தபால்களில் இருக்கும் தபால்தலைகளுக்காகக் குழந்தைகள் இடையே சண்டைகள் நடக்கும்; அதைக் கொடு நான் இதைத் தரேன் என்று பண்ட மாற்றங்கள் நடக்கும்.

தொலைபேசி வந்தாலும், சில நாட்கள் பொங்கல்/தீபாவளி/பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்பட்டன. பொங்கல்/தீபாவளி வரும்பொழுதே கடையில் சென்று கட்டு கட்டாக வாழ்த்து அட்டைகள் வாங்கி வந்து, யாருக்கெல்லாம் அனுப்ப வேண்டும் என்று பட்டியலிட்டு, எது யாருக்கு என்று நீண்ட ஆலோசனைகளுக்குப் பின் வாழ்த்து அட்டைகள் அஞ்சலில் சேர்க்கப்படும். அலைபேசிகள் வந்த பின் இந்த பரிமாற்றமும் குறுஞ்செய்தியாகி விட்டது.

மீண்டும் கடிதங்களைக் காணும்பொழுது அதன் தகவல் பரிமாற்றத்தின் வலிமை புரிகிறது. தொலைபேசியில் ஐந்து நிமிடம் பேசுவதை கடிதத்தில் எழுத எவ்வளவு நேரம் எடுப்போம்? யோசித்து யோசித்து எழுதுவதே ஒரு அழகு. நான் வீட்டை விட்டு விலகி இருந்த நேரங்களில் எல்லாம், தொலைபேசி பேச்சுக்கள் அந்த நிமிட சுகம் மட்டுமே தரும். கடிதத்தை எத்தனை முறை படித்தாலும் அம்மா அருகே இருப்பது போன்ற உணர்வு தரும். விடுதியில் கடிதம் இல்லாமல் வெற்றாக இருக்கும் கடிதப்பெட்டி கொடுக்கும் வெறுமை கொடியது. உறவுகளுக்கு அன்போடு எழுதும் கடிதங்கள் எழுதுவோருக்கும் படிப்போருக்கும் எத்தனை பக்கங்கள் இருந்தாலும் அலுப்பைத் தருவது இல்லை, புத்துணர்ச்சியைத் தரும் ஏதோ ஒன்று அந்த கடிதத்துடனே வந்திருக்கும்.

ஒரு முறை சித்தப்பாவிற்கு எழுதிய கடிதத்திற்கு பதில் வரவில்லை. ஏன் என்று விசாரித்தால் இனிஷியல் போடாது அவர் பெயரை முகவரியில் எழுதியதை மரியாதை குறைவாக அவர் கருதி இருந்ததே காரணம் என்று தெரிந்தது. இப்படி தான் எனக்கு இனிஷியலுக்கு பலர் கொடுக்கும் முக்கியத்துவம் தெரிந்தது.

என் கடிதங்கள் "அன்புள்ள" என்று தொடங்கி "நலம். நலமறிய ஆவல்" என்று தொடர்ந்து "இப்படிக்கு அமுதா" என்றே முடிந்துள்ளன. ஒவ்வொரு கடிதத்திலும் வீட்டில் உள்ள அனைவரும் நலம் விசாரிக்கப்பட்டு அவர்களை வீட்டிற்கு வரச் சொல்லும் அழைப்பும் சேர்க்கப்பட்டு இருக்கும். அது பாவனையாகத் தெரிந்ததில்லை. நேரில் சொல்ல முடியாத பல விசயங்கள் கடிதங்களில் அழகான வடிவம் பெறும். மனதை மிக அழகாகத் திறந்து காட்டும் திறவுகோலாக கடிதங்கள் இருந்தன.

இன்று என் குழந்தைகள் பள்ளியில், விடுப்புக்கு கூட விண்ணப்பம் நிரப்பித்தர வேண்டி உள்ளதே அன்றி கடிதம் இல்லை. என்றாலும் அவர்களுக்கு கடிதம் எழுதுதல் பற்றி பாடம் உண்டு. உனக்கு பிடித்த யாருக்கேனும் கடிதம் எழுது பாப்பா என்றேன். ஊரில் இருக்கும் அவள் தங்கையை நலம் விசாரித்து, எப்படி எல்லாம் அவளுடன் இங்கு நேரம் செலவழிக்க விருப்பபடுகிறாள் என்று எழுதினாள். அன்பை வெளிப்படுத்திய மிக அழகான கடிதம் அது. இன்று கடிதங்கள் எழுதாமல் பல அழகான விசயங்களைத் தவறவிடுகிறோம்.

Wednesday, December 10, 2008

காகம் கடிகாரம் கத்தி

"காக்காக்கு சோறு வச்சிட்டு வா. நம்ம முன்னோர்கள் எல்லாம் வருவாங்களாம்", என்று அம்மா சொன்ன பொழுது வேடிக்கையாக இருந்தது. சரி காக்காக்கு இப்படியாவது உணவு கிடைக்குதே என்று வைப்பேன். ஆனால் இழப்புகளின் துயரம் உணர்ந்து, என்ன தான் நடக்கிறது என்ற கேள்விகள் எழும் பொழுது, இதையும் செய்வோம் என்று ஒரு பழக்கம் வந்துவிட்டது. சில நேரங்களில் உணவு வைத்துவிட்டு , இது தாத்தா, அது பாட்டி, அது மாமா என்று எண்ணும்பொழுது தோன்றும் , "இந்த பழக்கத்தினால தான் தினம் அவங்களை நினைக்கிறோம். இல்லைனா காலில் சக்கரத்தை கட்டி ஓடிட்டு நினைவு நாள் அன்னிக்கு மட்டும் நினைப்போம்".

அப்பா ஒரு சுவர்க் கடிகாரம் வச்சிருப்பார். பெண்டுலம் வச்ச கடிகாரம். இன்னி வரைக்கும் அதுக்கு சாவி கொடுத்து ஓட வச்சிட்டிருக்கார். அது மணி அடிக்கும் பொழுதெல்லாம் "மாம்ப்பா (அம்மாவின் அப்பா) மணி அடிக்கிறார்", என்பார். போட்டோவில் மட்டுமே பார்த்த மாம்ப்பா மிகவும் நெருங்கினாற் போல் தோன்றும்.

அம்மாகிட்ட ஒரு கத்தி இருக்கும். இப்ப அதுக்கு கால் நூற்றாண்டுக்கு மேல ஆச்சு. காய் நறுக்கும் பொழுது எல்லாம் "உங்க ஐயாப்பா (அப்பாவின் அப்பா) கொடுத்த கத்தி, எப்படி வச்சிருக்கேன் பார்", என்பார்கள். சமீபத்தில் தான் அது ரொம்ப கூர்மையாகி விட்டது. எனவே ஒரு ஓரமாக இன்னும் இருக்கிறது. முகம் பார்க்காத ஐயாப்பாவை நினைவுறுத்தும் கத்தி.


ஒரு பேனாவை எடுத்து எழுதிக் கொண்டிருந்தேன். "அம்மா இது ஐயாப்பா கொடுத்த பேனா" என்றாள் என் மகள். அவள் முகத்தில் ஏக்கம். அடிக்கடி பேனா தொலைக்கும் நான், அதை பத்திரமாக எடுத்து வைத்தேன், சமீபத்தில் எங்களைத் துயரத்தில் ஆழ்த்திச் சென்று விட்ட என் மாமனாரின் நினைவாக அவரது செல்ல பேத்திக்கு.

Tuesday, December 9, 2008

விடுகதை

என் குட்டிப் பொண்ணுங்களுக்கு விடுகதை ரொம்ப பிடிக்குது. சின்ன வயசில அடிக்கடி கூறிய விடுகதைகளைச் சொல்ல, திரும்ப திரும்ப கூறினாலும் அலுக்காமல் இரசிக்கிறார்கள். சில நினைவில் நின்ற விடுகதைகள் இங்கே. வேறு இந்த மாதிரி எளிய விடுகதைகள் இருந்தால் சொல்லுங்கள், என் பெண்களுக்குச் சொல்ல உதவும்.

1. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை (என் குட்டிப் பெண்ணின் டாப் 1 இது)

2. அம்மா சேலையை மடிக்க முடியாது, அப்பா காசை எண்ண முடியாது.

3. வெள்ளிக் கிண்ணத்தில் தங்க காசு

4. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.

5. வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது.

6. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.

7. மழையில் பூக்கும் பூ

8. ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான்.

9. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம்

10. வெள்ளிக் கிணத்துல தண்ணி


விடைகள்
தென்னை மரம், வானம் - நட்சத்திரம், முட்டை, ஆட்டுக்கல், கண், கொசு, குடை, செருப்பு, வாய், தேங்காய்

Friday, December 5, 2008

பாட்டியின் நினைவுகள்


இன்று குழந்தைகளுக்கு சலிக்காமல் கதை கூறுகிறேன் என்றால் அது என் மாம்மையின் இன்ஸ்பிரேஷன் தான். அவர்கள் கூறியது என்னவோ நாலு கதைகள் தான் என்றாலும் திரும்பத் திரும்ப கேட்டாலும் திகட்டா இன்பம் உடைய கதைகள். "மாம்மை கதை சொல்லுங்க" என்றவுடன் "பிறந்த கதை சொல்லவா , வளர்ந்த கதை சொல்லவா" என்று ஆரம்பித்து சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமென்றாலும் கதை கூறுவார்கள்.

கடைசி வரை மண் அடுப்பில் மண் பாத்திரத்தில் அவர்கள் செய்யும் கத்தரிக்காய் புளிக்குழம்பின் ருசி இன்னும் நினைவு இருக்கிறது. காலையில் மொச்சை பயறு அவித்து வரும் பாட்டியிடம் எங்களுக்குத் தவறாது வாங்கி கொடுப்பார்கள். பின் எல்லோருக்கும் காலணா கொடுத்து, கடையில் ஏதாவது வாங்கிக் கொள்ளச் சொல்வார்கள். அவர்கள் முறுக்கு இடிக்க வைத்திருக்கும் (என்ன பெயர் அதற்கு... வெற்றிலை இடிப்பார்களே...), அவருக்குப் பின் பொருட்கள் யாருக்கு என சண்டை போடுவோம். ஆடி மாதம் ஆனால் , ஆடி விரதம் அனுஷ்டித்து, சிவகாசியில் இருந்து பஸ் பிடித்து கோவை வந்து விரத கொழுக்கட்டையைத் தரத் தவறியதே இல்லை.

சமீபத்தில் மாம்மையின் வீடு இருந்த பக்கம் , கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பின் சென்றிருந்தேன். முன்னர் ஊரில் பன்றிகளும் கழுதைகளும் நிறைய காணலாம். கட்டு ஒட்டுவதும், தீக்குச்சி அடுக்குவதும் வீதிக்கு வீதி இருக்கும். இப்பொழுது அவ்வளவாகக் கண்ணில் படவில்லை.மாம்மை வீட்டுத் திண்ணை அப்படியே இருந்தது. பல பக்கத்து வீடுகள் முன்பிருந்த அதே தோற்றத்துடன் இருந்தன. உள்ளே மாறி இருக்கலாம். சில சின்ன வீடுகள் நன்றாகக் கட்டப்பட்டிருந்தன. அங்கே கடவில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். இன்றும் அப்படியே மரத்தடியில் சின்ன மண்டபத்தில் இருந்தார். அதே போல் பிள்ளையார் மேலிருந்து விபூதி எடுத்து வைக்கும் பொழுது, சிறு பிள்ளைகளாக அந்த கடவுக்குள் நுழைந்து பிள்ளையாரை அடிக்கடி தொழுத நினைவுகள் இனிமையாக இருந்தன. சின்ன சின்ன விஷயங்கள் கூட மலரும் நினைவுகளாக மனதை மயக்குகின்றன.