என் மேகம் ???

Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்



(படம்: இணையம்)

விடிந்து விடும்
என்ற நம்பிக்கையில் தான்
விழிகள் திறக்கிறோம்

வாழ்வோம்
என்ற நம்பிக்கையில் தான்
வாழ்ந்து பார்க்கிறோம்

புதுமை தரும்
என்ற நம்பிக்கையில் தான்
புத்தாண்டு என்கிறோம்

நல் புதுமைகள் தந்திட
எங்கும் அமைதி தவழ்ந்திட
மேன்மேலும் உலகம் செழித்திட
மானுடம் என்றும் தழைத்திட
பூத்திடுவாய் புத்தாண்டே!!!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, December 29, 2008

பறவைகள் பலவிதம்...



கிருஸ்துமஸ் அன்னிக்கு புலிகாட் போகலாம்னு ப்ளான். ஆனால் சில மக்கள் அங்கே குடும்பத்தோடு போக வேண்டாம்னு அறிவுரை வழங்கியதால் (அப்படியா? எனி கமெண்ட்ஸ்?), வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைச் சரணடைந்தோம்.

அங்கே மதிய சாப்பாடு கிடைக்காது என்று புளிச்சோறும், தயிர்ச்சோறும் எடுத்துக்கொண்டோம். காரில் ஒரு மழலைப்பட்டாளத்தோடு காலை பத்து மணிக்குப் பயணம் தொடங்கியது. பரனூர் வரை சாதாரண காட்சிகள் தான். ஆனால் பரனூரில் இருந்து சில தொலைவு வரை இயற்கை காட்சி மிக மிக அழகாக இருந்தது. நம் சென்னை அருகிலா இது என்று ஆச்சரியப்படுத்தியது. வேடந்தாங்கலுக்குப் பிரியும் ஒரு கிளைச் சாலையை இம்முறை ஒழுங்காகப் பார்த்ததால் ஊரைச் சுற்றாமல் நேராக வேடந்தாங்கலுக்குப் போகும்பொழுது மணி 12.30.

பனங்கிழங்கு அவித்து விற்றுக் கொண்டிருந்தார்கள். நெல்லிக்காயும் , கொய்யாவும் பச்சை பனங்கிழங்கும் கிடைத்தன. 20 ரூபாய்க்கு பைனாகுலர் வாடகைக்குக் கொடுத்தார்கள். 20ருபாய்க்கு வாங்கும் பைனாகுலரை விட கொஞ்சம் பரவாயில்லை. நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே சென்றோம்.



மிக அழகான அமைதியான இடம். ஆரவாரமில்லாத கூட்டம். தண்ணீர் ஏரியில் தளும்பிக் கொண்டிருக்க, சற்று தொலைவில் பறவைகள் சுதந்திரமாகப் பறந்தும், அமர்ந்தும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தன. நாங்கள் கரையில் நடந்தவாறு இயற்கையைப் பருகிக் கொண்டிருந்தோம். நாரை, கொக்கு, அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, நீர்க்காகம், வாத்து என்று பலப்பல பறவைகள். சென்ற முறை பல பறவைக் குஞ்சுகளைக் காண முடிந்தது. இம்முறை ஒரே ஒரு பறவை தன் குஞ்சுகளுக்கு உணவு தருவதை மட்டுமே காண முடிந்தது. மீதியெல்லாம் வளர்ந்து விட்டன போலும்.

கரை நெடுக வெயிலின் கடுமை தெரிய விடாத நிழல் தரும் மரங்கள். ஆங்காங்கே நின்று காண வாட்ச் டவர், மற்றும் நின்று காண வசதியாக "platform" இருந்தது. வழி முழுமையும் ஓய்வெடுக்க பெஞ்சுகள், தாகம் தீர்க்க குடிநீர் குழாய், கழிவறை வசதி என்று எல்லாம் இருந்தன. முன்பெல்லாம் குரங்குகள் நிறைய இருக்கும், இம்முறை அவ்வளவாகத் தட்டுப்படவில்லை.

கட்டி வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, மேலும் சிறிது நேரம் பறவைகளை இரசித்தோம். குழந்தைகள் எல்லாம் நடைபாதையில் ஓடி விளையாடினர். நேரம் சென்றதே தெரியவில்லை. நான்கு மணிக்குப் பின்பு இன்னும் பல பறவைகள் வர ஆரம்பித்தன. ஐந்து மணிவரை இரசித்துவிட்டுக் கிளம்பினோம். வேடந்தாங்கலை விசிட் அடிக்க சரியான நேரம் நவம்பர் முதல் சனவரி வரை என தமிழ்நாடு சுற்றுலா வலைதளம் கூறுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

இந்த பதிவில் நான் சொல்லும் விஷயம் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். என்றாலும், சிலருக்குப் புதிதாகத் தெரிந்து ஒரு சிறு எண்ணம் தோன்றலாம் என்றே இப்பதிவு.

கிருஸ்துமஸுக்காக அலுவலகத்தில் வசூலித்த சிறு நன்கொடை தொகையை ஓர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுக்கச் சென்றிருந்தோம். அவர்கள் தாய் தந்தை அற்றவர் என்று மட்டுமல்லாது, பெற்றோர், உற்றோர் இருந்தும் இல்லாதவர்கள். கிட்டதட்ட 50 பேர் கொண்ட அவ்வில்லத்திற்கு ஒரு நாள் உணவுக்கான தொகை 1500 ருபாய்கள். எனக்கு ஒரு 365 பேர் ஒரு நாள் உணவுச் செலவை ஏற்றுக் கொள்ளக் கிடைத்தால், இக்குழந்தைகளுக்கான ஒரு வருட சாப்பாட்டு பிரச்னை தீர்ந்து விடும் என்று அவ்வில்லத் தலைவி ஒரு brochure கொடுத்தார்கள். இது போக துணிமணி, படிப்பு என்று அவர்கள் செலவுகளைக் கவனிக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த இன்னோர் ஆதரவற்றோர் இல்லத்திலும், ஒரு குழந்தையைப் பேண ஒரு வருடத்திற்கு அவர்களுக்குத் தேவைப்படும் தொகை 5000 (அ) 6000 என்று இருக்கும். அதாவது 500 ரூபாய் கொடுத்தால், ஒரு குழந்தைக்கு ஒரு மாதச் செலவு கிடைத்துவிடும். உங்கள் அருகில் இருக்கும் இது போன்ற ஆதரவற்றோர் இல்லம் இருந்தால், வருடத்தில் ஒரு நாளாவது இது போன்ற உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். இந்த ஊக்கம் மேலும் இது போன்ற குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்வு தர உறுதுணையாக இருக்கும்.

Wednesday, December 24, 2008

வெற்று எண்ணங்கள்

தேடித் தேடிக்
கொடுத்த புத்தகம்.
அவர்
படித்துக் கொண்டிருக்கும் பொழுது
கதை பிடித்திருக்கிறதா என்று
தொண்டை வரை வந்தது கேள்வி...
கதையை முடிக்கட்டும்
என்று காத்திருந்தது
இன்னும் சிக்கிக் கொண்டிருக்கிறது...
கதை முடிந்து விட்டது

***************

வெற்றிடம்...
அறிவியல் விளக்கம்
காற்றில்லாத இடம்
எப்படி இருக்கும்?
மூச்சு திணறுமா?
புரியவில்லை...
அந்த வெற்றுத்திண்ணையைக்
காணும் வரை

**************


நெஞ்சு நிறைந்த பயங்களுடன்
ஒரு தாயின் அறிவுரை...
பயப்படக் கூடாது
தைரியமா இருக்கணும்

***********

Friday, December 19, 2008

ஒரு தாயின் பரவசம்




கிட்டதட்ட 4 வருடங்களுக்கு முன், சற்றே ஓய்வு கிடைத்திருந்த பொழுது, புத்துணர்வு பெற்ற மனம், வார்த்தைகளைக் கோர்த்து விளையாடியது. பொன்னால் பொறிக்கப்பட வேண்டும் என தாய்மை தந்த பரவசத்தை ஒரு நோட்டுப்புத்தகத்தில் பொன்னிற எழுத்து பதியும் பால்பாயிண்ட் பேனாவின் உதவியுடன் உருவானது "என் வானம்". "முதலில் என்னை கவனி" என்னும் விதமாக அடிக்கடி என் குழந்தைகளால் அது ஒளித்து வைக்கப்படும். இரண்டு வருடங்களுக்கு முன் என் தோழியரிடம் பகிர்கையில், முல்லையின் யோசனைப்படி பதிவுலகில் உருவானது "என் வானம்". "என் நட்சத்திரங்களை" மட்டுமே வலையேற்றப்பட்ட நேரத்தில் காணாமல் போனது, சமீபத்தில் கிடைத்தது. அதில் குழந்தையின் முதல் சில வளர்ச்சியைப் பற்றி எழுதிய தாய்மையின் பரவசத்தை, இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

"எனக்குப் பிடித்த சில நினைவுகளை பதித்துக் கொள்ள ஆசை. பசுமரத்தாணி போல் சில பதிந்தது என எண்ணினாலும். மணலில் பதித்த எழுத்துக்களாய் காலமெனும் அலைகள் கலைப்பதைத் தடுக்க முடியவில்லை. சில பொன்னான நினைவுகளைப் பொன்னெழுத்தில் பொறிக்க விழைந்தேன்.

நந்தினி, யாழினி என இருமலர்களின் நறுமணம்.
நந்தினி - இள ரோஜா நிறத்தில் நாவை நீட்டி கொட்ட கொட்ட விழித்துப் பார்த்த அழகு
யாழினி - வெள்ளை ரோஜாவாக கண்களை மூடித் தூங்கிய அழகு

இது பிறந்தவுடன் கண்ணில் கண்ட நீங்கா நினைவுப் பதிப்பு.

இந்த செல்லங்களின் சேட்டை எண்ணாற்றவை. பூவொன்று மலர்வது கண்முன்னே தெரியாமல் நிகழ்வது போல் தான் குழந்தையின் வளர்ச்சி. வாழ்க்கையை அழகுப்படுத்துவதே குழந்தைகள் தான். KIDS MAKE THE LIFE COLORFUL. அம்மா, அதன் பொக்கை வாய்ச் சிரிப்பும், மின்னும் கண்களும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. வள்ளுவரும், பாரதியும் எழுதியதை அனுபவித்தாலன்றி முழுதாக உணரமுடியாது. அந்த பிஞ்சு கைகள் மடங்கி இருப்பது அழகு என்றால், அக்கைகளுக்குள் என் விரல் உறங்குவது, பூ மெத்தையில் புரளும் சுகம். கண் மலர்ந்து சிரித்தாலும், கண் மூடி உறங்கினாலும், சிரிப்பின்றி பார்த்தாலும் ... ஒவ்வொரு அசைவிலும் உள்ளம் சிலிர்க்கின்றது.

குழந்தை பாலருந்தி, என் அருகாமையில், அணைப்பில் உலகத்தைப் பற்றிய கவலையின்றி மயங்குவதென்பது விவரிக்க இயலா இன்பமயமானது. வளர, வளர அதன் சேட்டைகள் சிலிர்ப்பானது. அந்த கைகளும், கால்களும் தூக்கத்தில் தான் ஓய்வெடுக்குமா? கைகளைச் சுழற்றுவதும், கைகளைப் பிசைவதும், கையால் காலைப் பற்றுவதும், பிஞ்சு காலால் என் மார்பில் உதைப்பதும், கொடுக்கும் பொருளைப் பற்றிக் கொண்டு அதைப் படுத்தும் பாடும்.. அப்பப்பா... அந்த கணத்தின் இனிமை விளக்க இயலாதது.

கடவுள் குழந்தையின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு விலங்காக உடைப்பாராம், கண், காது, கைகள் என ...அதன் பிறகே கண் தெரிவது, காது கேட்பது , ஒரு சாய்வது, குப்புற விழுவது என்று ஒவ்வொரு வளர்ச்சியுமாம், என் பெரியம்மா கூறுவார். பிறந்து சில நாள் கழித்து , தலையை இடதும் வலதுமாக உருட்டும் அழகென்ன.. வேகமென்ன .. பின் மெள்ள, மெள்ள குப்புற விழ எடுக்கும் முயற்சிகள்... ஒருசாய்ந்து படுத்து, கையை ஊன்றி, உடலைத் திருப்பி, பின் தலையை உருட்டி, தலையைத் தூக்கியவுடன் வெற்றிப் பெருமிதத்தில் சிரிக்கையில் இமயத்தைத் தொட்ட மகிழ்ச்சி ஒரு தாயிடம்.

அந்த தொட்டிலில் செய்யும் குறும்புகள்.. அழகாக சேலையை ஜன்னல் திரை போல் விலக்கி, எட்டிப் பார்த்து சிரிக்கும் அழகென்ன.. தடாலென தலையைத் தொங்க விட்டு "ஏய்" என்று அழைக்கும் அழகென்ன.. வலக்கையால் இடக்காலைத் தூக்கிப் பிடித்துத் தூங்க எங்கே கற்றாய் பெண்ணே? உன் அக்கா இப்படி இருக்கையில் கால் மேல் கால் போட்டுத் தூங்கும் அழகே தனி. நீ தொட்டிலுள் மீன் போல் கால்களை உதைத்து உதைத்து நீந்தும் தங்க மீன்."

Thursday, December 18, 2008

வறியார்க்கொன்று ஈவதே..

முகம் இறுக, உள்ளே மனம் உருக நகர வேண்டிய கட்டாயங்கள் பல நேரம் வந்ததுண்டு. பெரும்பாலும், சிக்னலில் பச்சைக் குழந்தையுடனோ, பச்சிளம் பாலகர்களோ கையேந்தும் பொழுது தான் பெரும்பாலும் இந்நிலை. ஒன்றிரண்டு ரூபாய் கொடுப்பதால் ஒன்றும் குறையாது... ஆனால், இவர்கள் ஒரு கும்பலாகச் செயல்படுகிறார்கள், இதற்கென குழந்தைகள் கடத்தப் படுகிறார்கள் என கேள்விப்படும் பொழுது, சொல்ல முடிய வருத்தம் மனதைப் பிசைய, முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது.

சிறு வயதில் வீட்டிற்கு கையேந்தி வருவோர் பலர் உணவிற்கு ஏந்துவர். வீட்டில் இருக்கும் டிபனோ, குழம்போ கொடுத்தால் சந்தோஷமாக எடுத்துச் செல்வர். ஆனால் நாட்பட நாட்பட, காசுக்காக மட்டுமே கை நீட்டுகின்றனரே ஒழிய உணவு விரும்பப்படுவதில்லை. தீபாவளி பலகாரங்கள் விதிவிலக்கு. இப்பொழுதெல்லாம் மினிமம் ஒரு ரூபாயேனும் கொடுக்க வேண்டும். காலணா, எட்டணாக்கள் பத்து, இருபது பைசாக்கள் போல் காணாமல் போய் கொண்டிருக்கின்றன.

பல நேரங்களில் பலர், எதேனும் இல்லத்திற்கு என கையில் ஒரு ரசீது புத்தகத்துடன், கோயிலுக்கு என்று உண்டியலுடன், கல்யாணத்திற்கு எனத் தட்டுடன், படிப்பிற்கு என்று நோட்டுப் புத்தகத்துடன்...இவர்களது காரணங்கள் உண்மை என்றால் இயன்ற அளவு கொடுக்க மனம் இருந்தாலும், பல நேரங்களில் பொய்யாக இருப்பதால், தயக்கம்... உண்மை தானா அல்லது ஏமாற்றுத் தொழிலா? என்று கேள்வி.

இந்த கேள்விகளால், இப்பொழுது நான் கொடுப்பதென்னவோ, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மட்டும் தான். அவை பற்றியும் சில சமயம் தாறூமாறான செய்திகள். எதையாவது நம்பத்தானே வேண்டும், எனவே பதிவு செய்யப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நம்பிக் கொடுக்கிறேன். என்றாலும் , நம்பிக்கையின்மையால் எத்தனையோ உண்மையான உதவி தேவைப்படுவோருக்கு கிடைக்காமல் போகும் நிலை நிச்சயம் இருந்திருக்கலாம்.

ஆனால் யோசனை வரும் எப்படி ஒரு உலகத்தை நம் சந்ததியருக்கு விட்டுச் செல்லப் போகிறோம்?
நட்பாக மூன்றாமவர் சிரித்தால், எதற்காக என்ற கேள்விக்குறி...
உறவினரையும் நம்பாதே என்ற செய்திகளால் குழப்பம்...
எதை நம்புவது, யாரை நம்புவது என்ற ஒரு நம்பிக்கையற்ற உலகை...

என்ன செய்யலாம் இதை மாற்ற?

Tuesday, December 16, 2008

அழகான வேஷதாரியே...



பூக்களுக்கு மேக்கப் போடணுமா, அதன் அழகை ரசிக்க? குழந்தைகளுக்கு வேஷம் போடணுமா அவர்களை ரசிக்க? என்றாலும், இந்த சுட்டீஸ் வேஷம் போட்டாலும் போடாவிட்டாலும் அழகு தான்.



நந்தினி ப்ரீ-கேஜி போகும்பொழுது , நல்லா குறள் சொல்லுவானு, திருவள்ளுவர் வேஷம் போட கூட்டிட்டு போனால், சேலை கட்டி அம்மனாகணும்னு அடம். அம்மனுக்கு ஒரே கிராக்கி, கிடைக்கலை. அப்புறம் அவங்க கிருஷ்ணரா தான் வருவேன்னுட்டாங்க. இப்படி அவங்க இஷ்டத்துக்கு போட்டால் தானே அவங்க சிரிப்பாங்க... அழ வைக்கவா வேஷம் போடறோம்?


கொஞ்ச நாள் முன்னாடி தான் யாழினிக்கு "முட்டைகோஸ்" வேஷம் போடச் சொன்னாங்க. இந்த மேடம், கிருஷ்ண ஜெயந்திக்கு அழகா கிருஷ்ணர் வேஷம் போட்டால், ஒரு ஃபோட்டோ எடுக்கறதுக்குள்ள, எல்லாத்தையும் கலைச்சுட்டு சிரிப்பாங்க. இவங்களை எப்படி முட்டைகோஸ் ஆக்கறதுங்கற கவலையை, எங்கே ட்ரெஸ் கிடைக்குங்கற கவலை மறக்க வச்சது. திருவான்மியூர்ல இருந்து மைலாப்பூர், ஐஸ் ஹவுஸுனு சுத்தி, வடபழநில பிடிச்சேன். (பேசாமல் அடையார்ல ஒரு கடை ஆரம்பிச்சரலாமானு யோசிக்கிறேன்...)



வேஷம் போடற நாள் வந்துச்சு. அம்மாடி, அழகழகா பட்டாம் பூச்சியா, குட்டீஸ்... பூ, வண்டு, தேவதை, முயல், மயில், காய்கறி, பழம் ... எல்லாம் அவங்க தான். இந்த அம்மா 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை டாய்லட் போற ஆளு , என்ன செய்வாங்களோனு, கடைசி நிமிஷம் தான் டிரஸ்சை போட்டு விட்டோம். இங்கே ,எங்களுக்கு ஒரே டென்ஷன் டிரஸ் குத்துமோ, வேர்க்குமோ, டாய்லட் போக வேண்டி இருக்குமோ, தாகமா இருக்குமோ, பசிக்குமோ அப்படி இப்படினு நல்லா பண்ணணுனங்கிற கவலை தவிர எல்லா கவலையும். பாருங்க, கிட்டதட்ட முக்கால் மணி நேரம் காத்திருந்து மேடையில பண்ணிட்டு ஓடிவராங்க. அவங்களுக்கு ஒரே சந்தோஷம். அடுத்த நிமிஷம் ட்ரெஸ் கழட்டியாச்சு.

அப்பாடானு இருந்தது. இப்பல்லாம் ஏதாவது நிகழ்ச்சிக்கு தேர்வு பண்ணிணாலும் சந்தோஷமா இருக்கு, தேர்வு பண்ணாட்டியும் சந்தோஷமா இருக்கு (அலைச்சலும் டென்ஷனும் மிச்சம்). வர வெள்ளிக் கிழமை மேடம் ஸ்கூல்ல ஏரோப்ளேன் ஓட்டணுமாம் ;-).

உங்க பிள்ளைங்களுக்கு வேஷம் போட உடை வாங்க சென்னையில் சில கடைகள் இங்கே...

Monday, December 15, 2008

வண்ண வண்ண பொம்மைதான்...




குட்டிப் பெண்ணுக்கு இப்பொழுது விவரம் தெரிவதால், பல விஷயங்களை நான் காரணத்தோடு மறுக்கிறேன். பொம்மை (பார்பி ரொம்ப காஸ்ட்லி, வேண்டாம்), டி.வி (முதலில் ஸ்கூலுக்கு ரெடியான பின் என்பது இப்பொழுது ஸ்கூல் விட்டு வந்த பின்) என்று விதிமுறைகள் போட்டாச்சு. முதலில் பயங்கர எதிர்ப்பு (முன்பெல்லாம் அழுகையை நிறுத்த முடியாது) கிளம்பினாலும், நான் அசைந்து கொடுக்காததால், மேடம் பின்பற்றுகிறார்கள். நான் இல்லாத பொழுதும், அவள் டி.விக்கான விதிமுறைகளைப் பின்பற்றுவது நல்ல விஷயம்.

கையில் ஒரு "கிஃட் வவுச்சர்" கிடைத்தது என்று ஒரு பொம்மைக் கடையுள் நுழைந்தோம். உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவர்கள் பார்பி பொம்மைகளை விரும்பினார்கள். உண்மையில் எதை எடுப்பது எதை விடுவது என்று தோன்றும் அழகழகான பொம்மைகள். பெரியவள் திணறினாள். அது/இது என்று ரொம்ப குழம்பி, ஒரு வழியாக ஒன்றை எடுத்தாள். நான் அவளிடம், "இந்த பார்பி பொம்மை வைத்து எவ்வளவு நேரம் விளையாடுவாய்? அவளும் அது தான் எடுக்கப் போகிறாள். நீ கொடுக்கும் அந்த காசுக்கு அந்த மென்பொம்மைகள் எடுத்தால் பெரிதாகவும் இருக்கும், ரொம்ப நாள் விளையாடலாம்", என்றேன். அவள் கொஞ்சம் யோசித்து, சரி என்று ஒரு பிங்க் டெடி எடுத்து மிக சந்தோஷமானாள்.

சின்னவள் செய்தது தான் ஹைலட். மேடம் பார்பி பொம்மைகளை ஒரே ஒரு பார்வை பார்த்தார்கள், டக்கென்று முடிவு செய்தார்கள். மற்றொன்று இன்னும் அழகாகத் தோன்ற, அதைக் காட்டினேன். "இல்ல, அது காஸ்ட்லி" என்றாள். (எல்லாம் ஒரே விலை தான்). வேறு எந்த பொம்மைக்கும் அவள் தாவவில்லை. எடுத்த முடிவு எடுத்தது தான் என்பது போல், "ம் , கிளம்பலாம்" என்றாள். அவள் கசின்களுக்குத் தேர்வு செய்யும் பொழுதெல்லாம், இம்மியும் சலனப்படாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது.

Thursday, December 11, 2008

மெளனம்


நீ சிரித்திருந்த போழுது...


மெளனம் சங்கீதமானது

சொல்லாத மொழிகள்
மயிலிறகாக வருடின

காரணங்கள் எதுவும்
நமக்குள் தேவைப்படவில்லை

மெளனம்...
இனிய மொழி ஆனது

ஆனால்...
நீ முறைத்திருந்தபொழுது...



மெளனத்தின் ஓசை
செவியில் அறைகிறது

பேசாத வார்த்தைகள்
மனதைக் குத்துகின்றன

கூறாத காரணங்கள்
நன்றாகப் புரிகிறது

மெளனத்தின் கனத்தை
இனி சுமக்க முடியாது

இந்த இரும்புத்திரையை
இனிய மொழியாக்குவோம்

வளரும் பெண் இவள்...

ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு சொல்ல புது காரணம் வேணுமா என்ன? வயிறு வலிக்குது, வேன் கூட்டமா இருக்கு, பரத் அடிக்கிறான், மஞ்சரி என் பக்கத்தில் உட்காரலை, மோனிஷா என் கண்ணைக் குத்தறாள், தூக்கம் வருது, டயர்டா இருக்கு, தலை வலிக்குது ... மேலும் , மேலும்....

அப்படி இப்படினு பேசிப் பார்த்தால் தான் நிஜ காரணம் வரும்.ஒரு காரணம், மேடம் வந்தவுடன் என் பெற்றோர் சற்று தொலைவில் உள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். எனவே மேடம் மிஸ் பண்ணியது அந்நேரத்தில் சுட்டி டி.வி.யில் வரும் டோரா. அதனால் ஸ்கூல் போக விருப்பமில்லை. "சரி , டோரா சி.டி வாங்கி தரேன் ஆசை தீர பாரு", என்றவுடன் ப்ராப்ளம் தீர்ந்தது. (இந்த டோரா அதன் பிறகு 2 முறை வரும், ஆனால் மேடமுக்கு ஒண்ணு விடாமல் பார்க்கணும்.. சலிக்கவே சலிக்காதா??)

இன்னிக்கு பரத் அடிக்கிறான் தான் காரணம். நிஜ காரணம் போலும்...
"சரி மிஸ்ட்ட சொல்றேன்", என்றேன்.
"இல்லை , வேன்ல அடிக்கிறான்" , என்றாள்
"சரி ஆயாம்மாட்ட சொல்றேன்", என்றேன்

என்ன நினைத்தாலோ தெரியவில்லை, ஸ்கூலில் நுழையும் பொழுது, "நீ சொல்ல வேண்டாம், நானே சொல்லிக்கிறேன்", என்றாள். ஆச்சரியமாக இருந்தது. தன் நண்பர்கள் பற்றி பெற்றோர் ஆசிரியரிடம் கூறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி தோன்றுகிறது?. ஆனால் நினைத்துக் கொண்டேன் "ம்.. என் குட்டிப் பெண் வளர ஆரம்பித்து விட்டாள்."

"ம்.. அழாமல் ஸ்கூலுக்கு போகணும், சரியா?"
"நான் அழாமல் ஸ்கூலுக்குப் போறேன். நீ அழாமல் ஆபீஸுக்கு போ."

ஸோ ஸ்வீட் செல்லக்கட்டி

Wednesday, December 10, 2008

காகம் கடிகாரம் கத்தி

"காக்காக்கு சோறு வச்சிட்டு வா. நம்ம முன்னோர்கள் எல்லாம் வருவாங்களாம்", என்று அம்மா சொன்ன பொழுது வேடிக்கையாக இருந்தது. சரி காக்காக்கு இப்படியாவது உணவு கிடைக்குதே என்று வைப்பேன். ஆனால் இழப்புகளின் துயரம் உணர்ந்து, என்ன தான் நடக்கிறது என்ற கேள்விகள் எழும் பொழுது, இதையும் செய்வோம் என்று ஒரு பழக்கம் வந்துவிட்டது. சில நேரங்களில் உணவு வைத்துவிட்டு , இது தாத்தா, அது பாட்டி, அது மாமா என்று எண்ணும்பொழுது தோன்றும் , "இந்த பழக்கத்தினால தான் தினம் அவங்களை நினைக்கிறோம். இல்லைனா காலில் சக்கரத்தை கட்டி ஓடிட்டு நினைவு நாள் அன்னிக்கு மட்டும் நினைப்போம்".

அப்பா ஒரு சுவர்க் கடிகாரம் வச்சிருப்பார். பெண்டுலம் வச்ச கடிகாரம். இன்னி வரைக்கும் அதுக்கு சாவி கொடுத்து ஓட வச்சிட்டிருக்கார். அது மணி அடிக்கும் பொழுதெல்லாம் "மாம்ப்பா (அம்மாவின் அப்பா) மணி அடிக்கிறார்", என்பார். போட்டோவில் மட்டுமே பார்த்த மாம்ப்பா மிகவும் நெருங்கினாற் போல் தோன்றும்.

அம்மாகிட்ட ஒரு கத்தி இருக்கும். இப்ப அதுக்கு கால் நூற்றாண்டுக்கு மேல ஆச்சு. காய் நறுக்கும் பொழுது எல்லாம் "உங்க ஐயாப்பா (அப்பாவின் அப்பா) கொடுத்த கத்தி, எப்படி வச்சிருக்கேன் பார்", என்பார்கள். சமீபத்தில் தான் அது ரொம்ப கூர்மையாகி விட்டது. எனவே ஒரு ஓரமாக இன்னும் இருக்கிறது. முகம் பார்க்காத ஐயாப்பாவை நினைவுறுத்தும் கத்தி.


ஒரு பேனாவை எடுத்து எழுதிக் கொண்டிருந்தேன். "அம்மா இது ஐயாப்பா கொடுத்த பேனா" என்றாள் என் மகள். அவள் முகத்தில் ஏக்கம். அடிக்கடி பேனா தொலைக்கும் நான், அதை பத்திரமாக எடுத்து வைத்தேன், சமீபத்தில் எங்களைத் துயரத்தில் ஆழ்த்திச் சென்று விட்ட என் மாமனாரின் நினைவாக அவரது செல்ல பேத்திக்கு.

Tuesday, December 9, 2008

விடுகதை

என் குட்டிப் பொண்ணுங்களுக்கு விடுகதை ரொம்ப பிடிக்குது. சின்ன வயசில அடிக்கடி கூறிய விடுகதைகளைச் சொல்ல, திரும்ப திரும்ப கூறினாலும் அலுக்காமல் இரசிக்கிறார்கள். சில நினைவில் நின்ற விடுகதைகள் இங்கே. வேறு இந்த மாதிரி எளிய விடுகதைகள் இருந்தால் சொல்லுங்கள், என் பெண்களுக்குச் சொல்ல உதவும்.

1. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை (என் குட்டிப் பெண்ணின் டாப் 1 இது)

2. அம்மா சேலையை மடிக்க முடியாது, அப்பா காசை எண்ண முடியாது.

3. வெள்ளிக் கிண்ணத்தில் தங்க காசு

4. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.

5. வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது.

6. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.

7. மழையில் பூக்கும் பூ

8. ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான்.

9. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம்

10. வெள்ளிக் கிணத்துல தண்ணி


விடைகள்
தென்னை மரம், வானம் - நட்சத்திரம், முட்டை, ஆட்டுக்கல், கண், கொசு, குடை, செருப்பு, வாய், தேங்காய்

Monday, December 8, 2008

குழலினிது யாழினிது

குட்டிப் பெண்ணுக்கு ஒரு வாரம் கழிச்சு ஸ்கூல். எல்லாம் நிஷா புயலின் உபயம். மேடமுக்கு பள்ளி செல்ல மனமில்லை. நான் வீட்டில் இருப்பேன் என்ற உறுதி மொழி வாங்கி பள்ளிக்குச் சென்று வந்தாள். எனக்கு நெட் சதி செய்ததால் வேலை செய்வது சிரமமாக இருந்தது. அவளிடம் அனுமதி பெற்று அலுவலகம் செல்லலாம் என்றிருந்தேன்

"குட்டிம்மா, நான் ஆபீஸ் போய்ட்டு சாயங்காலம் வந்துடறேன்."
"முடியாது, எனக்கு நீ வேணும்"
"சரி. நான் வீட்ல இருந்தால் டி.வி. பார்க்கக்கூடாது"
"முடியாது, எனக்கு நீ வேணும்"
சற்று பொறுத்து... "சரி நீ போ. நான் சமத்தா இருக்கேன்"

இது போன்று தான் முன்பொருமுறை மேடம் டிரஸ்ஸிங் டேபிளை உருட்டிக் கொண்டிருந்தாள். "பாப்பா, எல்லாத்தையும் இறைக்காதே..", என்றேன். உடனே என் கைப்பையை எடுத்து கொடுத்து, "ம். நீ ஆபீஸ் போ" என்றாள்.

----------

பெரியவளை சாப்பிட சொல்லி தொண்டை வறண்டு விட்டது. மணி "1:50".
"இங்க பாரு முள், 11க்கு வர்றதுக்குள்ளே சாப்பிடணும்"
"சின்ன முள்ளு தானே, சாப்பிட்டுடுவேன்"

---------
அவளது சித்தப்பா குழந்தையைப் பாட்டு பாடி, கதை கூறி தூங்க வைத்தேன். இவளுக்கும் சேர்த்து தான்.
அவள் தூங்கிய பின் "இனிமேல் நீ எனக்கு பாட்டு பாடாதே, கதை சொல்லாதே , எல்லாம் அவளுக்கே செய்"
"என்ன செல்லம், உன் தங்கச்சி தானே"
"ஆனால் நீ எனக்கு மட்டும் தான் அம்மா, என்னை மட்டும் தான் கொஞ்சணும்"
"அப்ப கிரியைக் கொஞ்சக் கூடாதா?" (கிரி 2 மாதம் முன் பிறந்த என் மருமகன்)
"அவன் சின்ன பையன் அவனை மட்டும் கொஞ்சு. மத்தவங்க எல்லாம் வளர்ந்தாச்சு, அதனால் என்னை மட்டும் கொஞ்சு"
-------------

Friday, December 5, 2008

பாட்டியின் நினைவுகள்


இன்று குழந்தைகளுக்கு சலிக்காமல் கதை கூறுகிறேன் என்றால் அது என் மாம்மையின் இன்ஸ்பிரேஷன் தான். அவர்கள் கூறியது என்னவோ நாலு கதைகள் தான் என்றாலும் திரும்பத் திரும்ப கேட்டாலும் திகட்டா இன்பம் உடைய கதைகள். "மாம்மை கதை சொல்லுங்க" என்றவுடன் "பிறந்த கதை சொல்லவா , வளர்ந்த கதை சொல்லவா" என்று ஆரம்பித்து சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமென்றாலும் கதை கூறுவார்கள்.

கடைசி வரை மண் அடுப்பில் மண் பாத்திரத்தில் அவர்கள் செய்யும் கத்தரிக்காய் புளிக்குழம்பின் ருசி இன்னும் நினைவு இருக்கிறது. காலையில் மொச்சை பயறு அவித்து வரும் பாட்டியிடம் எங்களுக்குத் தவறாது வாங்கி கொடுப்பார்கள். பின் எல்லோருக்கும் காலணா கொடுத்து, கடையில் ஏதாவது வாங்கிக் கொள்ளச் சொல்வார்கள். அவர்கள் முறுக்கு இடிக்க வைத்திருக்கும் (என்ன பெயர் அதற்கு... வெற்றிலை இடிப்பார்களே...), அவருக்குப் பின் பொருட்கள் யாருக்கு என சண்டை போடுவோம். ஆடி மாதம் ஆனால் , ஆடி விரதம் அனுஷ்டித்து, சிவகாசியில் இருந்து பஸ் பிடித்து கோவை வந்து விரத கொழுக்கட்டையைத் தரத் தவறியதே இல்லை.

சமீபத்தில் மாம்மையின் வீடு இருந்த பக்கம் , கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பின் சென்றிருந்தேன். முன்னர் ஊரில் பன்றிகளும் கழுதைகளும் நிறைய காணலாம். கட்டு ஒட்டுவதும், தீக்குச்சி அடுக்குவதும் வீதிக்கு வீதி இருக்கும். இப்பொழுது அவ்வளவாகக் கண்ணில் படவில்லை.மாம்மை வீட்டுத் திண்ணை அப்படியே இருந்தது. பல பக்கத்து வீடுகள் முன்பிருந்த அதே தோற்றத்துடன் இருந்தன. உள்ளே மாறி இருக்கலாம். சில சின்ன வீடுகள் நன்றாகக் கட்டப்பட்டிருந்தன. அங்கே கடவில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். இன்றும் அப்படியே மரத்தடியில் சின்ன மண்டபத்தில் இருந்தார். அதே போல் பிள்ளையார் மேலிருந்து விபூதி எடுத்து வைக்கும் பொழுது, சிறு பிள்ளைகளாக அந்த கடவுக்குள் நுழைந்து பிள்ளையாரை அடிக்கடி தொழுத நினைவுகள் இனிமையாக இருந்தன. சின்ன சின்ன விஷயங்கள் கூட மலரும் நினைவுகளாக மனதை மயக்குகின்றன.

Tuesday, December 2, 2008

நீயின்றி....




காதைக் கிழிக்கும் அமைதியுடன்
காலை மலர்ந்தது...

முத்தமில்லா கணங்கள்
சத்தமின்றி ஊர்ந்தன...

இறைக்கப் படாத பொருட்கள்
கிழிக்கப் படாத காகிதங்கள்
சிந்தப் படாத வண்ணங்கள்
என
களையிழந்து உள்ளது வீடு

விடுமுறை முடியும் முன்
விரைந்து வா மகளே!!

நீ வந்து உயிரூட்ட
காத்துக்கிடக்கிறது உன் வீடு.

ஆராரோ ஆரிராரோ...

குழந்தை வளர்ப்பில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று... தாலாட்டு. நம் பாட்டையும் கேட்க ஆள் இருக்கிறது என்ற சந்தோஷத்துடன் பாடல் வரும்... அதைக் கேட்டுத் துயிலும் உயிரைக் கண்டு மனம் நெகிழும். உண்மையில் "இது தூங்கும் நேரம்", என்று ஒரு பழக்கம் கொண்டு வர மிகவும் உதவியாக இருந்தது.

என் தாய் "பூஞ்சிட்டு கன்னங்கள்..." என்று பாட ஆரம்பித்ததில் நான் மிகவும் கவரப்பட்டு, அதன் பிறகு பல பாடல்கள் பாடித் தாலாட்டியுள்ளேன்.

"ஆராரோ ஆரிராரோ...
என் கண்ணே ஆரடிச்சா..."

என்று என்றோ தமிழ் பாடத்தில் படித்த தாலாட்டு பாடல் முதற்கொண்டு ...

"மானே கண்ணுறங்கு...மயிலே கண்ணுறங்கு" என்ற பாடல்களில் என் கற்பனைக்கேற்ப பல கொஞ்சல்களைச் சேர்த்து...

"ஆயர் பாடி மாளிகையில்..." என்று தாலேலோ பாடி

முடிவில் தஞ்சமடைந்தது என்னவோ தமிழ் சினிமாவில் தான். "பூஞ்சிட்டு கன்னங்கள்..." (இன்றும் என் பெண்களின் நேயர் விருப்பம் இதுதான்), "பச்ச மலை பூவு..", "தென்னையில் தொட்டில் கட்டி..." , "தேனே தென்பாண்டி மீனே...", "தென்பாண்டி சீமையிலே..." என்று பல பாடல்கள் இதில் அடக்கம்.

வருடங்கள் கடந்து விட்டாலும், என் மனதை விட்டகலாது மனதை நெகிழ/மகிழ வைத்த தாலாட்டு நிகழ்வுகள்:

நெகிழ்ச்சி
நந்தினி காது வலியில் துடித்துக் கொண்டிருந்த பொழுது "ஆயர்பாடி மாளிகையில்" இரவு வெகுநேரம் பாடினேன். நிறுத்தினால் வலியில் துடிப்பதால் பல முறை பாட வேண்டி இருந்தது. மருந்து கொடுத்தும் காது மிகவும் வலித்ததால் "சாமிட்ட வேண்டிக்கோ, சரியாகிடும் என்றேன்". சற்று நேரம் கழித்து "வேண்டிட்டேனே...ஏன் சரியாகலை" என்ற கேள்விக்கு விடை கூற இயலாது தாலாட்டைத் தொடர்ந்தேன்.

மகிழ்ச்சி

தூங்காது தொல்லை கொடுத்த குட்டிப் பெண்ணைத் தாலாட்டிப் படுக்க வைக்க முடியவில்லை என்று, காரில் ஏற்றி (ஊர் சுற்றினால் காற்றுக்கு சில சமயம் நன்கு தூக்கம் வரும்), கொஞ்ச நேரம் வேடிக்கை காட்டிவிட்டு, "நீ சும்மா அம்மா மேல சாஞ்சுக்கோ", என்று கூறி மெல்லத் தாலாட்ட ஆரம்பித்தேன். சட்டென்று அவள் எழுந்து, என் வாயை மூடினாள். "நான் தூங்க மாட்டேன்" என்று கூறினாள். அந்த செய்கை சிரிக்க வைத்தது. என்றாலும் சமயம் பார்த்து தாலாட்டித் தூங்க வைத்தேன்.

இப்பொழுதும் வாய்ப்பு கிடைத்தால் தாலாட்டு பாடாமல் இருப்பதில்லை. வெகுநாட்களுக்குப் பின்பு, சகோதரன் குழந்தையைத் தாலாட்டு பாடித் தூங்க வைத்த பொழுது, மிகவும் நிறைவாக இருந்தது.

தாலாட்டு பற்றி விக்கிபீடியாவில் இங்கு காணலாம்.
சில தாலாட்டுப் பாடல்களை இங்கு காணலாம்.