என் மேகம் ???

Tuesday, April 20, 2010

அம்மாவின் பொய்கள்

அசோகமித்திரனின் "ஒற்றன்" நாவல் படித்தேன். அயோவா நகரில் உலகின் பல பகுதியில் இருந்து வந்து தங்கி கருத்துக்கள் பரிமாறிய எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை புனைகதையுருவில் இலேசான நகைச்சுவை இழையோட எழுதி உள்ளார். சுவாரசியமாக உள்ளது.

திடீரென ஒரு சந்திப்பில் கூடி இருக்கும் எழுத்தாளர்கள் அவரவர் மொழியில் பாட்டுப்பாட அழைக்கப்படுகிறார்கள். எல்லோரும் பாடுகிறார்கள்.

"என் அறையைப் பகிர்ந்த எழுத்தாளனிடம் நான் ஒரு இரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். "உனக்குத் தெரியுமா? நான் பாட்டேதும் பாடவில்லை, எங்கள் தமிழ் மொழியின் முப்பது எழுத்துக்களைத்தான் நான் ராகம் போட்டு பாடினேன்"

அவன் வியப்படைவதாகத் தெரியவில்லை. "அப்படியா? நானல்லவா அப்படி சமாளித்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். நானும் எங்கள் மொழி எழுத்துக்களைத்தான் பாட்டாகப் பாடினேன்"


"அம்மாவின் பொய்கள் " என்ற அத்தியாயத்தில் வந்த ஞானக்கூத்தன் கவிதை மிகவும் பிடித்தது.

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறத் தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
அத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சென்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

–ஞானக்கூத்தன்


9 comments:

அம்பிகா said...

அழகான கவிதை.
நல்ல பகிர்வு.

தமிழ் said...

அருமையான கவிதை

பகிர்வுக்கு நன்றிங்க‌

தமிழ் said...

"உத்தமர்களின்
உயிர்
உண்மையே
உணவன்று"

எத்தனை அருமையான வரிகள்

வாழ்ந்துக் காட்டிய காந்தியின்
வாழ்க்கை ஆயிரம் பாடங்களை நமக்கு கற்றுத் தருகின்றது.


"உண்மை உரைப்பது கடினம்
பொய் சொல்வது எளிது"

என்று எண்ணத்தை உடையவர்களும் உண்டு.
அது பெரிய தவறு.

பொய் புனைந்தவன், தன் சொன்னவற்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் மாட்டிக்கொள்ள வேண்டும்.

இது எவ்வளவு பெரிய துன்பம்.
உண்மை உரைப்பவனுக்கு ஒன்றுமில்லை

இதை உணராமல் பொய் புனைவதை ஒரு கலையாக கருதி
வளர்த்து வருகின்றோம்.

பொய் ஏன் தோன்றுகின்றது?
எது காரணம்?
தேவைதானா?
என்றாவது ஒரு நாள் எண்ணிப்பார்த்தோமா?"பொய்ச்சொல் கேளா வாய்மொழிமன்னன்"
என்று தயரதனைக் கம்பன் பாராட்டுகின்றான்.

தயரதன் பொய்யைக் கேட்டதுமில்லை,
உரைத்துமில்லை என்று கூறுகின்றான்.
இது எப்படி இயலும்?

ஒருவன் கையூட்டு வாங்காமல் வாழ்ந்துவிடலாம்,
கொடுக்காமல் இந்த நாட்டில் வாழ இயலுமா?

பிறர் புனையும் பொய்யைக் கேட்காமல் எப்படி இருக்க இயலும்?
சொன்ன பிறகுதானே அது உண்மையா பொய்யா என்று புரியும்!

பல ஆண்டுகள் கம்பனின் கருத்துக்கு பொருள் விளங்கவில்லை.
ஒரு நாள் கல்லூரி வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதுதான் புரிந்தது.

ஒரு மாணவன் வகுப்பிற்குத் தாமதமாக வந்தான்.
"ஏனப்பா தாமதம்" என்று கேட்டேன்.

"மிதிவண்டி பழுதாகிவிட்டது" என்றான்.

"சரி,உள்ளே வா" என்றேன்,
அவன் உள்ளே நுழைந்தவுடன் வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் சிரித்தார்கள்.

"ஏனப்பா சிரிக்கிறீர்கள்?" என்றேன்.

"அவனிடம் மிதிவண்டியே இல்லை" என்று கூறக் கேட்டதும்
அவனிடம் கோபத்துடன், "ஏன் பொய் சொன்னாய்" என்று கேட்டேன்.

அவன் இயம்பிய பதில்தான் என் இதயத்தில் இருந்த
சந்தேகத்தைச் சரி செய்தது.

"நான் உண்மையைச் சொன்னால் என்னைத் திட்டுவீர்கள்,
அதனால்தான் பொய் சொன்னேன்" என்று கூறினான்.

நாம் உண்மையை மதிக்காத போது
பொய் பிறக்கின்றது.

இது எவ்வளவு பெரிய வாழ்வியல் உண்மை!

தயரதன் உண்மையை மதித்தான்.
எனவே அவனிடம் யாரும் பொய் புனைய வேண்டியதில்லை.
புனைவதற்கு தேவையுமில்லை.

சூட்சும்மாக மாபெரும் சமுதாயச் சிந்தனையை நமக்குள் விதைத்துவிடும்
கம்பனின் கவித்துவத்திற்கு ஈடு இணையேயில்லை.

அதுமட்டுமல்ல,ஒன்றை மதிக்காத போது,
அதற்கு எதிரான ஒன்று தோன்றிவிடுகிறது என்பதுதானே இயற்கை.

நன்றாக நினைத்துப் பாருங்கள்.
முதன்முதலில் பொம்மையை உடைத்துவிட்ட குழந்தை,
அம்மாவிடம் ஓடிவந்து,"அம்மா,பொம்மை உடைந்துவிட்டேன்"
என்றுதான் சொல்லும்.

"சனியனே பொம்மையை உடைத்துமில்லாமல்
உடைத்தேன் என்று சொல்கின்றாய்" என்று திட்டி,நான்கு
அடியும் அடிப்பாள் தாய்.

அன்றைக்கு முடிவு செய்கிறது அந்தக் குழந்தை.
"இனிமேல் உண்மையை உரைக்கக் கூடாது" என்று.

அன்பை மதிக்காத அகிலத்தில்
பகையை பெருகின்றது.

உரிமையை மதிக்காத உலகத்தில்
உயிர் இழப்புகள் உண்டாகின்றது.

நேர்மை மதிக்காத ஞாலத்தில்
தவறுகள் தோன்றுகின்றது.

பெண்மை மதிக்காத இல்லத்தில்
இருள் உண்டாகின்றது

என்வே உண்மைக்கு உயிர் கொடுப்போம்.
உலகத்தை உணர்வு உள்ளதாக ஆக்குவோம்.

ராமலக்ஷ்மி said...

//நானும் எங்கள் மொழி எழுத்துக்களைத்தான் பாட்டாகப் பாடினேன்//

ரசித்தேன்:)!

//தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?//

அதானே:)? குழந்தைகளாய் இருக்கையில் இவ்வகைப் பொய்கள்தானே அவர்களை வழிநடத்துகிறது. வளர்ந்ததும்..?

//பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?//

:)!

அருமையான பகிர்வு அமுதா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்? //

முகத்திலறையும் வரிகள்.

யோசித்துக்கொண்டே இருக்கிறேன், நான் அமித்துவிடம் இன்று என்ன பொய் சொன்னேன், எதற்காக சொன்னேன் என்று :)))

பகிர்வுக்கு மிக்க நன்றி அமுதா.

"உழவன்" "Uzhavan" said...

கவிதை அருமை 

நட்புடன் ஜமால் said...

குழந்தைகளிட(மு)ம் விளையாட்டுக்கூட பொய் சொல்லாதீர்கள் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நல்ல பகிர்வுங்க.

மொழி மேல் உள்ள பற்றுதல் அழகாக இருக்கின்றது.

பின்னோக்கி said...

அருமை