என் மேகம் ???

Tuesday, September 30, 2008

டாம் அண்ட் ஜெர்ரி

"அம்மா, அக்கா என் மிக்கி மவுஸ் பில்லோவைத் தொடறா"
"அம்மா , எனக்கு தான் முதல்ல சாப்பிட..."
"அம்மா , அக்காவைத் தள்ளி உட்காரச் சொல்லு, என்னைத் தொடறாள்..."

காலை என்றாலே "வீய்ய்ய்..." என்ற அலறலுடன் குட்டிப் பெண்ணின் அட்டகாசம் தாங்காது. தலைக்கு குளிச்சு, துவட்டாமல், ஊரைச் சுத்தி பீச்ல தண்ணில நனைஞ்சா என்ன ஆகும்னு நந்தினி ஆராய்ச்சி செஞ்சு காய்ச்சல் வரும்னு கண்டு பிடிச்சாள்.

இப்போ குட்டிப் பெண் என்ன செஞ்சா?

"அக்கா, இந்தா என் பில்லோ, நல்லா படுத்துக்கோ"
"அம்மா, அக்காவுக்குப் பசிக்குதாம் , உடனே சாப்பிட கொடு... அம்மா இப்பவே கொடு, அக்காவுக்கு ரொம்ப பசிக்குதாம்..நான் தான் அக்காவுக்கு ஊட்டி விடுவேன்..."
"அக்கா, நான் உன் பக்கத்திலேயே உட்கார்ந்து சாப்பிடறேன்..."
"அம்மா , அக்காவுக்கு புறா சத்தம் கேட்டால் கூட பயமா இருக்காம், நான் அவ பக்கத்திலேயே படுத்துக்கறேன்..."

அக்காவுக்கு காய்ச்சல் சரியான உடனே, "அம்மா, அக்கா என் மிக்கி மவுஸ் பில்லோவைத் தொடறா" ....

மாறிவிட்டதடி என்னுலகம்

கடலோரம் என்றாலே
ஆர்ப்பரிக்கும் அலைகளும்
தீப்பிழம்பாய் சூரியனும்
சிலு சிலுவென்ற காற்றும்
தடம் பதியும் மணலும்
மனம் கொள்ளை கொள்ளும்...

இன்று மனதில் நிற்பதெல்லாம்
அலைகளின் வரவில்
ஆர்ப்பரிக்கும் மழலைகள் ...
செங்கதிரோன் செவ்வொளியில்
பூரிக்கும் உன் கன்னங்கள் ..
சில்லென்ற காற்று
சிலுப்பி விடும் உன் குழல்கள்..

மாறிவிட்டதடி என்னுலகம்...

அலைகள் கலைக்கும் மணலில்
எழுத்து எதற்கு என்றவள் தான்
உன் சிரிப்பிற்காக, அழிய அழிய ...
எழுதிக் கொண்டேயிருக்கிறேன்

மணல் வீட்டை கலைத்தவரிடம்
கோபம் கொண்டவள் தான்
நீ கலைப்பதற்கென்றே
கோட்டைகள் கட்டுகிறேன்
உன்னுடன் சேர்ந்து நானும்
கலைத்துச் சிரிக்கிறேன்...

குப்பையாகும் வீடென்று
பொறுக்காத சிப்பிகளெல்லாம்
இன்று நம் கையில்
நம் வீட்டை அழகுப்படுத்த...

என் அருமை பெண்ணே
உன்மயமானதால்
மாறிவிட்டதடி என்னுலகம்...

Monday, September 29, 2008

தேடலில் கிடைத்தவை...


கதை கேட்டு பூரிக்கும்
உன் முகத்திற்காகத்
தேடிச் சென்றேன்,
புத்தகங்களிலும், நினைவுகளிலும்...

புத்தகத் தேடலில் கிடைத்தவை
தேவதைகளும், பூதங்களும்
ஆயிரத்தோர் இரவுகளும்
இன்னும் பலவும்
இன்றும் தேவைப்படும்
அழகான நீதிகளும்...

நினைவுகளின் தேடலில் கிடைத்தவை
பாட்டி சொன்ன கதைகளும்
தூண்டப்பட்ட என் கற்பனைகளும்...

Sunday, September 28, 2008

கற்றது கைமண் அளவு...

என் பெண்ணிற்குச் சிறு கதைகள் படிக்கும் பழக்கம் அவளுக்கு கதைகள் பாடப் புத்தகத்தில் வரும் பொழுதே ஏற்படுத்தினோம். கதை புத்தகங்கள் பல வாங்கிக் கொடுத்து, படிக்க ஆரம்பித்தாள். நாட்கள் செல்ல செல்ல, ஒரு பக்க கதைகள் அவளுக்கு சலித்துப் போவது போல் தெரிந்தது. எனவே நூலகத்தில் அவள் வயதிற்கு (9) உரிய சற்று பெரிய கதைகளாக , புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்து கொடுத்தேன். ஒரு பக்கத்திற்கு மேல் படிக்கவில்லை என்றதும், அவளுக்குப் பிடிக்கவில்லை என்று எண்ணினேன். பின் ஒரு நாள், அவளுடன் கதை படிக்க நானும் அமர்ந்தேன். அப்பொழுது தான் புரிந்தது, நாவல் போல் தொடர்ச்சியாகப் படிப்பது புதிதாக இருப்பதால், தடுமாறுகிறாள் என்று. ஓரிரண்டு அத்தியாங்கள் அவளுடன் சேர்ந்து நானும் படித்தேன். அதன் பிறகு அவள் புரிந்து சுவாரஸ்யத்துடன் படிக்கலானாள். இப்பொழுதெல்லாம், அவளே அவள் விருப்பத்திற்கு ஏற்ப புத்தகங்கள் தேர்ந்தெடுத்து வாசிக்கிறாள். அவளுக்கென வாசிப்பில் பிடித்தவை, பிடிக்காதவை என ஒரு தனித்தன்மை உருவாகுவதைக் காண வியப்பாக உள்ளது.

சிறு சிறு விஷயம் என்று நாம் குழந்தைகளிடம் பல விஷயங்களைக் கவனிப்பதில்லை. சற்றே கவனம் எடுத்துக் கொண்டால் , எப்பொழுது விரல் பிடிக்க வேண்டும், எப்பொழுது விட வேண்டும் என்று உணர்ந்து, அவர்களுக்கு நாம் சரியான நேரத்தில் வழிகாட்டலாம்.

Wednesday, September 24, 2008

நல்லா ஊதித் தள்ளுங்க...

கடந்த வாரம் ஊருக்குச் செல்ல வேண்டி இருந்தது. ஏ.சி கோச் தான் டிக்கட் கிடைத்தது. குளு குளு என்று போவது பெரிய விஷயம் கிடையாது. நாம் போகும் பொழுது தான், யாராவது புகைஞர் வந்து ஊதித் தள்ளுவார். ஏ.சி பஸ்ஸிலோ, கோச்சிலோ இதை சகித்துக் கொள்வது போன்ற கொடுமையை சொல்ல முடியாது. சும்மா ஊதினாலே மூச்சு திணறும், ஏ.சி கோச்-ல மூச்சு நின்னுடுமோனு இருக்கும். இந்த தடவையும் அதே ப்ரச்னை தான். யார் எவர் என்று தெரியாமல் எதுவும் சொல்ல முடியாத கையாலாகாத்தனத்துடன் தான் இருக்க வேண்டி உள்ளது. எனக்கு "wheezing" உள்ளதால், சற்று சிரமமாக இருந்தது. ஒரு சிறு பிள்ளைகக்கோ, அல்லது வயதானவருக்கோ அலர்ஜி என்றால் எத்தனை சிரமம்?

இவங்க கையில் ஒரு ஸ்ப்ரே கொடுத்து, பக்கத்தில இருக்கிறவங்க மேல் ஸ்ப்ரே பண்ணுங்க, நல்லா மூச்சு திணறட்டும் என்று கூறினால் செய்வார்களா? (நிச்சயம் 50% செய்ய மாட்டார்கள் என்று தோன்றுகிறது). புகைப்பதும் கிட்ட தட்ட அதைத் தான் செய்கிறது என்பதை ஏன் இவர்கள் உணர்வதில்லை?

அவர்கள் புகைக்கும் பொழுது அருகில் ஒரு கைக்குழந்தையோ, கருவில் ஒரு குழந்தையோ இருக்கலாம், அவர்களும் இந்த நச்சுப் புகையை நுகரலாம் என்பது இவர்களுக்கு தெரியுமா?

அருகில் இலேசான ஆஸ்துமாவில் துன்புறுபவர்கள், இந்த புகையால் மேலும் அவதிப்படுவார்கள் என்று அறிய மாட்டார்களா?

இன்று. மாரடைப்பு என்பது வெகு சகஜமாகி விட்டது. இப்பொழுது புகைக்கா விட்டாலும் முன்பு புகை பிடித்திருந்தால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. இன்று பல விஷயங்களில் விழிப்புணர்வூட்ட ஊடகங்கள் உள்ளன. என்றாலும் இதெல்லாம் தெரிந்தே புகைக்கிறார்கள்.

தன்னைப் பற்றி நினைக்க வேண்டாம் என்றால், இருந்தால், "passive smoking" என்று மற்றவர்கள் திணறடிக்கப்படுகிறார்கள், இல்லை என்றால் அவரை நம்பி இருப்பவர்கள் தான் துன்பப்படுவார்கள்.

இதெல்லாம் சிகரட்டை வாயில் வைக்கும் பொழுது யோசித்தால் நிச்சயம் இப்பழக்கம் குறைந்து நின்று விடும் என்று தோன்றுகிறது.

எதை பற்றியும் கவலை இல்லை, என் இஷ்டம் என்றால் "நல்லா ஊதித் தள்ளுங்க..."

Friday, September 19, 2008

என் பெண் வளர்கிறாள்...

மெதுவாகச் சுற்றிய என் உலகம்
வேகம் கொண்டது, உன் வரவால்

நேற்று போல் உள்ளது
நீ என் கைகளுக்குள்
கவலையின்றித் துயின்றது...

இன்று
என் தோளை எட்டிப் பிடித்து
என்னை அணைத்து சிரிக்கிறாய்...

என் கண்ணீர் மட்டும் துடைத்தவள்
கண்ணீருக்குக் காரணம் தேடுகிறாய்

கதைகள் கேட்டு மகிழ்ந்தவள்
கதை கூறி மகிழ்விக்கிறாய்

தாலாட்டுகளில் கண் மலர்ந்தவள்
உன் மடியில் என்னைத் தாலாட்டுகிறாய்

என்ன செய்யலாம் என்று கேட்டவள்
இப்படி செய்யலாமா என்று கேட்கிறாய்


உன் ஒவ்வொரு வளர்ச்சியிலும்
நான் முகம் மலர்கிறேன்
உன் முக மலர்ச்சியில்
நான் புத்துயிர் பெறுகிறேன்.

Wednesday, September 17, 2008

குடும்ப விஷயம்???

இந்த குட்டீஸ் சுட்டி டி.வி. பார்த்து பண்ற காமெடி ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. அதுங்க ப்ரெண்ட்ஸ் வீட்ல கேட்டால் "சேம் ப்ள்ட்..." என்று சிரிக்கிறார்கள்.

நாலு வயசுல நான் குடும்பத்த பத்தி பேசினேனானு தெரியல. ஆனா என் பொண்ணு பேசறா. அவ ப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருந்தா. அவளுக்கு டிபன் ரெடி பண்ணிட்டிருந்தாங்க.

"ஆண்ட்டி, என்ன டிபன் தரப் போறீங்க?"
"தோசை"
"மொறு மொறுனு சுடுங்க, அப்ப தான் என் அக்காக்கு பிடிக்கும்"
"சரிம்மா"
"எனக்கும் மொறு மொறுனு சுடுங்க, ஏன்னா நாங்கள்ளாம் ஒரே குடும்பம்"
"!!!!!"

அவங்க வீட்டு காமெடி... சின்னவ எதையோ கீழ போட்டு உடைச்சிட்டா. பெரியவ வெளில யார் கிட்டயோ இத சொன்னாளாம். வீட்ல வந்து சின்னவ சொல்றா "அம்மா, நான் கீழ போட்டு உடைச்சத எல்லாம் இவ வெளிய போய் சொல்றா. அப்படி சொல்லலாமா ? இதெல்லாம் நம்ம குடும்ப விஷயம் இல்லையா?"

சுட்டி டி.வி. effect என்று குடும்பமாக் சிரித்து வைத்தோம்.

Tuesday, September 16, 2008

கற்றுக்கொடுங்கள், கற்றுக்கொள்ளுங்கள்

குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க நிறைய இருப்பது போல், அவர்களிடம் கற்றுக்கொள்ளவும் நிறைய உள்ளது.

மன்னித்தல்
-----------------
எத்தனை கோபங்கள் காட்டினாலும், ஒரு சின்ன கொஞ்சலில் அனைத்தையும் மறந்து விடுவது...

விட்டுக் கொடுத்தல்
------------------------------
என் பெண்ணிடம் ஸ்கூலில் நடந்தது பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் "டாக்டர்" விளையாட்டு விளையாடினார்களாம். இரண்டு பேருக்கு நடுவே "யார் டாக்டர்" என்று எப்பொழுதும் சண்டையாம். "நீ என்ன" என்றேன். "நான் நர்ஸ்" என்றாள். "நீ ஏன் டாக்டர் இல்லை" என்றேன். "எல்லாரும் டாக்டர் ஆனால், யார் தான் நர்ஸாக இருப்பதாம்", என்றாள். நியாயமான பேச்சு என்று தோன்றியது.

நம்பிக்கை
---------------
பள்ளியில் போட்டி ஒன்று முடித்து வந்திருந்தாள். "என்ன பரிசு கிடையாதா?", என்றேன். "நீ தானம்மா சொல்லி இருக்க, ப்ரைஸ் வாங்குவது முக்கியம் இல்லை, பங்கெடுப்பது தான் முக்கியம்", என்றாள். அவள் ஆணித்தரமாக கூறியது, நான் கூறும் விஷயங்கள் அவள் மனதில் பசுமரத்தாணி போல் பதிகின்றன என்பதை பறை சாற்றின.

செய்யக்கூடாதது
--------------------------
மற்றொரு நாள், கீதை போட்டியில் கல்ந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு கீதை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாள். கேட்ட டேப்பை வாங்கிக் கொடுத்தேன். கற்றுக் கொள்ள சிரமமாக உள்ளது, கற்றுக் கொடு என்றாள். என்னால் சமஸ்கிருத உச்சரிப்பைக் கற்று சொல்லித் தர முடியாது என்றேன். பின் அவள் ஆர்வத்துக்காக ஒத்துக் கொண்டேன். அலுவலக மற்றும் வீட்டு வேலைகளுடன் இதையும் இழுத்துச் செய்ததால் ஒரு நாள் விளையாட்டாக, "இவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லிக் கொடுக்கிறேன், ஒழுங்கா பரிசு வாங்கிட்டு வரணும்", என்றேன். ஒரு நாள், தலைவலியுடன் வீட்டிற்கு வந்தாள், பரிசு கிடைக்கவில்லை என்றாள். நன்றாக சொன்னாய் அல்லவா , அது போதும் என்று கூறினேன். பின் ஒரு நாள் அவள் ஆசிரியையைக் காணச் சென்ற பொழுது, "தோல்வியை இயல்பாக எடுத்துக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள், அன்று முழுவதும் தலைவலி என்று அழுது கொண்டிருந்தாள்", என்றார். எனக்கு அதிர்ச்சி, அன்று அவள் ஆணித்தரமாகப் பேசிய மொழிகளை நான் எத்தனை முறை என் தோழியரிடம் கூறி
பெருமையுற்றேன். அவளுடன் பேசிய பின்பு தான் புரிந்தது, நான் அன்று விளையாட்டாகக் கூறிய மொழிகள் அவள் மீது இத்தனை அழுத்ததைக் கொடுக்கும் என்று நான் உணரவில்லை. நாம் விளையாடுகிறோமா அல்லது உண்மை கூறுகிறோமா என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணக்கூடாது. நாம் தான் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

இது போன்ற மற்றொரு விஷயம், சொன்னதை செய்தல். எப்பொழுதும் வாக்குறுதி கொடுத்து மறந்து விடாதீர்கள். நாம் அவர்கள் அசைவுகளை கவனிக்கிறோமோ இல்லையோ, அவர்கள் நமது ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறார்கள். சின்னதாக சாக்லேட் வாங்கி கொடுக்கிறேன் என்று, சொன்னால் கூட கடைபிடிக்க முயலுங்கள். முடியாவிட்டால், காரணம் கூறி மன்னிப்பு கேட்பது தவறல்ல. அப்பொழுது தான் அவர்களுக்கும் சொன்னதை செய்யும் பழக்கம் ஏற்படும்.

இவ்விஷயத்தில் ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. தாய் நண்டு தன் சேய்க்கு நடை பயில கற்றுக் கொடுக்கிறது. பக்கவாட்டில் நடக்கும் பழக்கம் உள்ள அது, தன் குட்டி நேராக நடக்க ஆசைப்படும். எனவே நேராக நடக்க கூறும். ஆனால் குட்டி நண்டால் நடக்க முடியாது. கோபமுற்ற தாய் நண்டு, குட்டியைத் திட்டும். அப்பொழுது குட்டி நண்டு கூறும், "நீ ஒரு முறை நடந்து காட்டு அம்மா, அப்புறம் நான் நடக்கிறேன்", என்று.

மிக உண்மை. நாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

Friday, September 12, 2008

அம்மா என்னை கவனி...

குழந்தைகள், நம் கவனம் முழுவதும் தங்கள் மீதிருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விதம் அழகானது..

*****************

அவளுக்கு ஆறு இதழ் பூ வரைந்து வண்ணமடிக்க கொடுத்து விட்டு , ஒரு பக்கம் படித்து விடலாம் என்று புத்தகத்தைக் கையில் எடுத்தேன். ஒரு வரி படிப்பதற்குள், "அம்மா நீ ஒரு கலர் அடிப்ப்பியாம் , நான் ஒரு கலர் அடிப்பேனாம்", என்று குரல். சரி என்று, ஒரு வண்ணம் தீட்டி, "ம்... நீ அடி" என்றேன். "நீ ரொம்ப அழகா அடிக்கிறமா... நீ அடி, நான் பார்க்கிறேன்" என்றாள். "நீ நல்ல மேனேஜரா வருவ" என்று வாழ்த்தி வண்ணமடித்தேன். புத்தகம் படிக்காமல் அவளை கவனிக்க இந்த வழிமுறை.


**********************************

"அம்மா, நான் சாக்லேட் சாப்பிடட்டுமா?"
"ம்"
"சொல்லும்மா நான் சாக்லேட் சாப்பிடட்டுமா"
"ம்"
"வாயைத் திறந்து பேசும்மா.நான் சாக்லேட் சாப்பிடட்டுமா?"
"சரி"

(எதுக்கும் ஒரு மெயில் தட்டிடுங்க (அத்தாட்சிக்கு).. என்று ஆபீஸில் கூறுவது போல் எனக்கு இந்த உரையாடல் தோன்றும்)

**********************************

புத்தகமும் செய்தித்தாளும் கிடந்தது. ஆவலுடன் புத்தகத்தை எடுத்தேன். "அம்மா எனக்கு அந்த புக்-ல் ஒரு முக்கியமான விஷயம் படிக்கணும்". (அவள் படிப்பது எல்.கே.ஜி). செய்தித்தாளைக் கொடுத்தேன். "நான் பேப்பர் படிக்க மாட்டேன்னு உனக்குத் தெரியாதா", என்று என் புத்தகம் பறிக்கப்பட்டது (எனக்கு பேப்பர் படிப்பதில் ஆர்வமில்லை என்று அவளுக்குத் தெரியும்).

*********************************
கொஞ்சம் செய்தித்தாளில் படம் காட்டி ஆர்வம் உண்டாக்கினால் , செய்தித்தாள் படிக்கும் பொழுது பறிக்கும் பழக்கத்தைத் தடுக்கலாம் என்று என் கணவர், அவளை அருகில் இருத்தி, படம் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார். "அப்பா, கண்ணை மூடிக்கங்க, நான் ஒரு சர்ப்ப்ரைஸ் காட்டறேன்" என்றாள். அவரும் செய்தார். செய்தித்தாள், பழையவை சேகரிக்கப்படும் இடத்திற்கு மாறியது தான் அவள் கூறிய "சர்ப்ப்ரைஸ்"

*********************************

வீட்டில் இருந்தால் எனனை கவனி என்பது தான் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் செய்தி.

Thursday, September 11, 2008

ஸ்கூலுக்கு போகமாட்டேன்...

இன்று குட்டிப் பெண்ணுக்கு உருளைக்கிழங்கை சார்ட் பண்ண சொல்லி இருந்தார்கள். சார்ட் செய்த பின் என் கணவர் அவளுக்கு உருளைக்கிழங்கைப் பற்றி நாலு வரி சொல்லிக் கொடுத்தார். அனாவசியத்துக்கு கார்போஹைட்ரேட்சை இழுத்தார். அவள் வாயில் நுழையவில்லை, ஏதோ கூறினாள். அவள் அக்கா சிரித்தாள். கொஞ்ச நேரம் கழித்து , எனக்கு வயிறு வலிக்குது" என்று குட்டிப் பெண் படுத்து விட்டாள். மெல்ல அவளிடம் சென்றேன். "என் செல்லமே, நீ போய் உருளைக்கிழங்கு சார்ட்டை கழுத்தில மாட்டி நின்னா போதும். மிஸ் ஒண்ணும் பேச வேண்டாம்னு சொல்லிட்டாங்க. வயறு வலிக்குதுனா படுத்து ரெஸ்ட் எடு, சரியாகிடும்". கொஞ்ச நேரம் கழித்து, சார்ட்டுடன் மேடம் ஸ்கூலுக்கு ரெடி.

முன்பொரு முறை அவள் அக்காவுக்கும் இதே சிண்ட்ரோம் தான். அடிக்கடி வயிறு வலிக்கிறது என்றாள். மெல்ல விசாரித்த பொழுது தான் தெரிந்தது, அவள் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு ப்ராக்டீஸ் செய்ய, வேறோர் இடத்திற்குச் செல்கிறாள். ஏனோ, புது ஆசிரியர்கள், புது மாணவர்களைக் கண்டதும் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்துள்ளது. அதனால் தான் வயிற்று வலி. ஆண்டு விழா நிகழ்ச்சியிலிருந்து அவளை விலக்கச் சொல்லி ஆசிரியரிடம் கூறிய பின்பு வயிற்று வலி வரவில்லை. அடுத்த வருடம் அவளே விரும்பி ஆண்டு விழாவில் பங்கெடுத்தாள்.

எனவே குழந்தைகள் ஏதேனும் காரணம் கூறி பள்ளிக்குச் செல்ல அடிக்கடி மக்கர் செய்தால், என்ன காரணம் என்று பார்க்க முயலுங்கள். என்றும் அவர்கள் "இதனால் நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்" என்று கூற மாட்டார்கள். நாம் தான் கவனமாக் அவ்ர்களின் அசைவுகளை கவனிக்க வேண்டும்.

Wednesday, September 10, 2008

பட்டறிவு

பிடிக்காத எழுத்துக்கள்
பிடிக்கத் தொடங்கியது
புரியும் வயது வந்தபின்...

வெள்ளித்திரை காதல்கள்
மனதைத் தொட்டது
திருமணத்திற்குப் பின்...

மனதை உருக்கிய சில நிகழ்வுகள்
மனதை உலுக்கியது
தாய்மைக்குப் பின்...

பத்து வயதில் படித்த புராணங்கள்
இப்பொழுது சொல்வது
வேறு பல செய்திகள்


பட படத் தான் புரிகிறது
வாழ்க்கையின்
வெவ்வேறு பரிமாணங்கள்

Tuesday, September 9, 2008

பூரிப்பூவீட்டின் முன் அழகாக பூத்திருந்தது அந்த பூ. "இக்ஸோரா" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இப்பூவை "இட்லி பூ" என்போம். என் பெரியம்மா என் குட்டிப் பெண்ணிடம் "இட்லி பூ" பூத்திருக்கு பார் என்றார். அவள் "பூரி பூ" எங்கே என்றாள்? அதற்கு அவர் , கண்ணாடி பார், உன் முகத்தில் உள்ளது "பூரிப்பு" என்றார். நல்ல டைமிங் என்று இரசித்தோம்.

Monday, September 8, 2008

இழப்பு

மரணத்தின் நிழல்
வாசலில் விழும்வரை
அதைப் பற்றிய
யோசனைகள் குறைவுதான்....

நேசித்தவரின் இழப்பில
உருவான வெற்றிடத்தில் தான்
மரணத்திற்குப் பின்?...
போன்ற கேள்விகள் தோன்றுகின்றன

காலதேவனின் வருகையில்
வேதனையுடன் கூடிய
கூக்குரல்தான் அதிகம்...

காலம் செல்ல செல்ல
அந்த வெற்றிடம்தான்
மூச்சை அடைத்து
வலியை ஏற்படுத்துகிறது...

அதே காலம் செல்ல செல்ல
வெற்றிடம் பழகிப் போய்
வலிகள் வடுக்களாகின்றன...

மரணத்தின் மன்றத்தில்
குற்றவாளியாக இருப்பதை விட
சாட்சியாக இருப்பது தான்
திகிலுறச் செய்கிறது...

Tuesday, September 2, 2008

குழலினிது யாழினிது ...

யாழினி 1,2,3 எழுதிக் கொண்டிருந்தாள். 1,2,3,4,6,7,8,9,10.
நான்: 5 எங்கே?
அவள்: நான் எடுக்கலைமா...
****************************

திருப்பதியில் ஒரு திருமணத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. எனவே என் குட்டிப் பெண்ணிடம் அனுமதி வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று பேச்சு கொடுத்தேன். ஸ்கூல்ல இப்ப தான் days, months எல்லாம் சொல்லிக் கொடுத்து உள்ளார்கள்.

குட்டிம்மா அம்மா ஒரு கல்யாணத்துக்கு திருப்பதி போகணும், ஒரு நாள்ள வந்துடுவேன். நீ சமத்தா மாம்மை (தாய் வழி பாட்டி) கூட இருப்பியா?

இல்லம்மா நீ என் கூட தான் இருக்கணும்.
சரி
"டேஸ்" ஆனாலும் நீ என் கூட தான் இருக்கணும்.
சரி
"டேஸ்" முடிந்து "மந்த்ஸ்" ஆனாலும் நீ என் கூட தான் இருக்கணும்.
சரி
"மந்த்ஸ்" முடிந்து என் "பர்த் டே" வந்தாலும் நீ என் கூட தான் இருக்கணும்.
சரி
என் ஒவ்வொரு பர்த் டேக்கும் நீ என் கூட தான் இருக்கணும்.
சரி

அப்புறம் ஒரு திருப்பதி டாலருக்கும், மோதிரத்துக்கும் அனுமதி வாங்கிச் சென்று வந்தேன்.
****************************
அவள் அத்தையிடம் டி.வி போடச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தாள். டி.வி. போட்டால் அவள் தூங்க மாட்டாள் என்று , "என்னால் டி.வி போட முடியாது" என்று அத்தை கூறினாள். எங்க குட்டி மேடத்தின் பதில்... "எதையும் முடியாதுனு சொல்லக்கூடாது அத்தை. முதல்ல முயற்சி செய்யணும். முயற்சி செஞ்சா தான் சாதிக்க முடியும்" (இது எல்லாம் சுட்டி டிவி effect. அது குழந்தைகள் தமிழ் வார்த்தைகள் பேச நிறையவே உதவுகிறது. என் மகள் அடிக்கடி கூறும் இவ்வாக்கியங்கள் இனிமையானவை...
ஏதாவது உதவி வேணுமா அம்மா?
கண்டிப்பா செய்றேன்
நிச்சயமா செய்றென்
முயற்சி செய் அம்மா)
*******************************