என் மேகம் ???

Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Tuesday, October 1, 2024

வடிவுடை வனிதை அவள்

 உறவுகளுடன் அவளது

அன்புவலை போல்

சொற்களால் அவளைப் 

பின்ன முயல்கிறேன் 


நட்புகளுடன் ஆர்ப்பரிக்கும் 

கொண்டாட்டத்தை

கவிதையாகக் கொண்டாடப் 

பார்க்கிறேன்


குடும்பத்தை அரவணைக்கும் 

அவளின் அன்பு ஊற்றை

எழுத்துருவாக

மாற்ற‌த் தவிக்கிறேன்


எதிலும் சிகரம் தொடும்

அவள் சாதனைகளை

சில வரிகளில்

தொடுக்கப் பார்க்கிறேன் 


அவள் விரலிடை

நழுவும் பொருட்களாக

வார்த்தைகளில் 

அவளைப்

பிடிக்க முயல்கிறேன்


மறதியில் குழறும்

வார்த்தைகளென

சொற்களைத் தேடி

தடுமாறுகிறேன்


எல்லோருக்கும் பிடிப்பவளை

வாழ்க்கையை ரசிப்பவளை

அன்பால் அணைப்பவளை

சிறகடித்துப் பறப்பவளை

மொழியால் சிறை பிடிக்க

முடியவில்லை 



அன்பு மகள்

ஆருயர் மனைவி 

இனிய உறவினள்

ஈடில்லா தாய்

உறவாடும் மருமகள் 

ஊக்கம் தரும் நட்பு

எண்ணிலடங்கா உழைப்பு என..

ஏற்றமிகு வாழ்வின் 

ஐம்பதைத் தாண்டிய

ஒவ்வொரு கணமும் 

ஓராயிரம் இன்பத்துடன்

ஔவையின் மொழி போல்


...


நீண்ட நீண்ட காலம் 

சிறப்பாக வாழ

மனமார்ந்த வாழ்த்துகள்

Thursday, February 15, 2024

பொன்விழா

 மொட்டவிழ்ந்த மலரின்

புத்துணர்ச்சியுடன்

இளஞ்சூரியனில் மின்னும்

மலர் போன்ற புன்னகை 


காற்றில் சிலிர்த்து

மழையில் மிளிரும் 

கொடி போன்றது

அவள் இரசிப்பு


அதிகாலை நேரத்துப்

பனித்துளி போல் 

தூய்மை பொங்கிடும் 

அவள்‌‌ அன்பு 


சிறு குழந்தையின்

தீரா ஆர்வம்

அவள் தேடலில்



நிலவின் தண்மை

இரவியின் ஒளிர்வு

சேர்ந்தது அவளது

மெ(மே)ன்மை மனது


அமைதியாக செல்லும்

நீரோடையில் ஒருதுளி 

அவளைச் சொல்லும்

இந்த கவிதை 


அவள் பெயரின்

பொருள் தேடினேன் 

கனவு கற்பனை என்றது

கனவு நனவாகக்

காண்பது வரமன்றோ

கல்பனா...


உன் பொன்விழா 

ஆண்டுப் பரிசாக

சொற்களைத் தேடித்

தொடுத்து விட்டேன் தோழி

Monday, April 5, 2010

குட்டி தேவதைக்குப் பிறந்த நாள்

இன்று எங்கள் குட்டி தேவதை யாழினிக்குப் பிறந்த நாள். சாக்லேட்டுகளுடன் பிறந்தநாளைக் கொண்டாட ஸ்கூலுக்கு சமர்த்தாகக் கிளம்பிச் சென்றுவிட்டாள் தேவதை. அவளது ஒவ்வொரு வளர்ச்சியும் மனதுள் வியப்புக் குறிகளை நிரப்பிக்கொண்டே தான் இருக்கிறது.



இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்குட்டிக்கு



தித்திக்கும் தேவதையின் பிறந்தநாளின் கூடுதல் மகிழ்ச்சி, இந்த வார தேவதையில் “வலையோடு விளையாடு” பகுதியில் இந்த வலைத்தளம் பற்றிய தொகுப்பில் யாழின் இனிய லூட்டிகள் இடம் பெற்றிருப்பது.

Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்




அதற்குள் ஒரு வருடமா என்று வேகமாக ஓடிவிட்டன நாட்கள்... குழந்தைகள் செய்யும் மாயம் தான் காலச்சக்கரத்தை மிக வேகமாக சுழற்றுகிறது. இரட்டை குதிரை சவாரி உற்றார் உதவியால் நன்கு செய்ய முடிந்தது. வாசிப்பில் பல நல்ல நூல்களைப் படிக்க முடிந்தது. நல்ல எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ள உதவும் பதிவுலகிற்கு நன்றிகள். தற்பொழுது “டாலர் தேசம்” படித்துக்கொண்டிருக்கிறேன். மனதை ஈர்க்கும் நடையுடன் லேசான நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கும் அமெரிக்க சரித்திரம், புத்தகத்தை கீழே வைக்க விடமாட்டேன் என்கிறது. இந்த வருடம் புத்தாண்டை புத்தகக்கண்காட்சியில் தொடங்கலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு இனியதொரு ஆண்டாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

Saturday, August 15, 2009

எங்கள் இளவரசிக்குப் பிறந்தநாள்

இளம் ரோஜாவின் நிறத்தோடு, கண்விரிய நாவை நீட்டி மலர்ந்த கண்களுடன் பார்த்த குழந்தையை அரை மயக்கத்தில் கண்ட நினைவு இன்னும் பசுமையாக....வண்ணமயமான உலகில் நான் நுழைவதை உணர்த்தினாள் அந்த இளவரசி. சட்டென்று அவள் என் உலகமானாள்...இன்று விரிந்து கொண்டிருக்கிறது அவள் உலகம்... பரிவு காட்டும் தாயாக, கொஞ்சி விளையாடும் குழவியாக, ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கச் செய்யும் பொறுப்பான மகளாக, நற்குணங்களின் வெளிப்பாட்டில் போதிக்கும் ஆசானாக... பெண்ணே!!! என்ன தவம் செய்தேனோ உனை நான் ஈன்றிடவே!!!!

எங்கள் இளவரசி...
சின்ன சின்ன பூ பாதம் பதித்து
பூவுலகில் பதித்த நாள்

அவள்...
கண்மலர்ந்து எங்களை
முகம் மலர வைத்த நாள்

அவள்...
அழுகையின் ஒலியிலே எங்கள்
சிரிப்பொலி கேட்ட நாள்

வாழ்வின் அர்த்தங்களை
உணரத் தொடங்கிய நாள்
மீண்டும்...
அழகாக மலர்கிறது
உறவுகளின் , நட்புகளின்
வாழ்த்துக்களின் வாசத்துடன்...

எப்பொழுதும் போல் மாமாவின் நினைவும் சேர்ந்து கொள்கின்றது. உடல் நலக் குறைவால் ஒரு முறை தவிர, இவளின் அனைத்து பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் அவர் இருந்தார். சென்ற ஆண்டில் இருந்து இல்லாமல் போனது மனதைக் கனக்கச் செய்கின்றது.

சென்ற ஞாயிறு ப்ராத்மிக் பரீட்சைக்கு கிளம்பியவளிடம் "சாமியை வேண்டிக்கொள்" என்றவுடன் "ஷோகேஸ்" முன்பு நின்றாள். "சாமி ரூமுக்கு போ" என்று சொல்ல வந்தவள் சட்டென்று உணர்ந்தேன் அவள் மாமாவின் படத்தின் முன் நிற்பதை. அன்றே, செம்பருத்திப் பூவை ஆசையுடன் கொடுத்த குட்டிப் பெண்ணிடம் "சாமிக்கு வை" என்ற பொழுது அவளும் ஷோகேஸில் மாமா படத்தில் பூ வைத்த பொழுது மனம் நெகிழ்ந்தது. இவர்களை அன்பும் ஆசையுமாக மார் மீதும், தோள் மீதும் சீராட்டி வளர்த்தவர் இறையாக நின்று அவளை வாழ்த்துவார் என்ற நம்பிக்கையுடன் நந்தினி என்றழைக்கப்படும் எங்கள் இளவரசிக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.

Sunday, April 5, 2009

குட்டி நிலவுக்குப் பிறந்தநாள்

பால் போன்றதொரு முழுநிலவு தினத்தில்
ஒரு நிலவில் ஒளிர்ந்த வானம்
இன்னொரு முழு நிலவாக
உன் வரவில் மேலும் ஒளிர்ந்தது...

டாம் ஒன்று தனியாக
என்ன செய்வதென்று திணறிய பொழுது
ஜெர்ரியாக நீ வர
வீடு மேலும் கலகலத்தது...

பொம்மையுடன் விளையாடி
களைத்த குட்டிப் பெண்ணுக்கு
குட்டித் தங்கையாக நீ வர
குடும்பம் முழுமை பெற்றது...

கண்ணே மணியே...
மாணிக்கமே மரகதமே...
என்று தொடங்கி
ஐஸ்க்ரீமே, ரசகுல்லாவே
என்று தொடர்ந்து
முடிவே இல்லை உனை
கொஞ்சும் வார்த்தைகளுக்கு...

எங்கள்...
குட்டி தேவதைக்கு
குட்டி நிலவுக்கு
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு
மலர்ந்து சிரிக்கும் வாடாமலருக்கு..
(யாழினிக்கு)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!

Sunday, March 8, 2009

மகளிர் தின வாழ்த்துகள்

பெண்ணின் பெருமையைப்
பலரும் பாடிட
மகுடம் சூடிய மகளிரை
மகிழ்ந்து வாழ்த்திடும் மனம்

பெண் என்பதாலேயே
மண்புழுவாகத் துடிப்பவரும்
இருக்கின்றார்...
அவர்களுக்கும் துடிக்கிறது மனம்


என்னருமை சமூகமே!!!
தூக்கி வைக்கவும் வேண்டாம்
தூக்கி எறியவும் வேண்டாம்
சகமனிதராக அன்பு பாராட்டினால்
சுகமாக வாழ்ந்திடலாம்

மகளிர் தின வாழ்த்துகள்

Tuesday, January 13, 2009

பொங்கல் வாழ்த்து




தகதக என மின்னிக்கொண்டு
தைமகள் வந்து விட்டாள்

தமிழ்ப் புத்தாண்டா
தைபொங்கல் தானா
என்ற கவலையின்றி ...

தொலைக்காட்சி தரும்
நிகழ்ச்சிகளை சற்றே மறந்து ...

கரும்பு உண்டு
பொங்கல் சாப்பிடுவோம்
குடும்பத்துடன் கொண்டாடுவோம்

என்றும்
பொங்கட்டும் மகிழ்ச்சி என
பொங்கட்டும் பொங்கல்
உழைத்தோர் உயரவே...

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்



(படம்: இணையம்)

விடிந்து விடும்
என்ற நம்பிக்கையில் தான்
விழிகள் திறக்கிறோம்

வாழ்வோம்
என்ற நம்பிக்கையில் தான்
வாழ்ந்து பார்க்கிறோம்

புதுமை தரும்
என்ற நம்பிக்கையில் தான்
புத்தாண்டு என்கிறோம்

நல் புதுமைகள் தந்திட
எங்கும் அமைதி தவழ்ந்திட
மேன்மேலும் உலகம் செழித்திட
மானுடம் என்றும் தழைத்திட
பூத்திடுவாய் புத்தாண்டே!!!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Wednesday, October 8, 2008

புதுவரவுக்கொரு பூச்செண்டு

பூத்துக் குலுங்குகிறது அக்டோபர்
பூமகனே உன் வரவால்...

வளர்பிறையில் வந்தவனே
வளமோடு வாழ்ந்திடுவாய்!!

அத்தை என அழைக்க
அருமையாய் வந்தவனே...

புரட்டாசியில் பிறந்தவனே
புகழோடு வாழ்ந்திடுவாய்!!!

மென்னகை புரிபவனே
மேன்மையோடு இருந்திடுவாய்!!!

அத்தை அடிக்க மாட்டேன்
அரளிப் பூச்செண்டாலே

அன்பாகத் தந்திடுவேன்
அழகான பூச்செண்டு...

பூமகனை ஈன்றெடுத்த பூவைக்கும்
பூரித்து நிற்கும் புதுத்தந்தைக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

(அக்டோபர் 1-ல் இவ்வுலகில் அடியெடுத்து வைத்த குட்டிப்பயலுக்கு அத்தையின் வாழ்த்து)