என் மேகம் ???

Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Monday, March 21, 2011

ஊரும் உறவும்...

நிகழும் வரை எண்ணியதில்லை... நெடுநாட்கள் வாழ்ந்த ஊரும் அன்னியமாகும் என்று. கோவையில் வளர்ந்தாலும் பெற்றோர் இடம் மாறியவுடன் ஊர் அன்னியமானது. வாழ்க்கைப்பட்ட ஊரும் அப்படி ஆகி விடும் என்று எண்ணியதில்லை. என்றாலும் மாமா மறைந்த பின், அத்தை இங்கு வந்த பின் ஓரிரவு பயணம் என்ற ஊர் தூரமாகித்தான் போனது.

என்றாலும் அதை விடக்கூடாது என்பது போல், சொந்த ஊரில் விசேசம் என்றால் மதுரையில் தங்கி வீட்டில் சில மணித்துளிகளேனும் செலவழிப்பது வழக்கம். திருமணமாகி வந்த பொழுது. தெருவில் ஒவ்வொரு வீடும் பரிச்சயம். ஊருக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் அட்டண்டன்ஸ் கொடுப்பதற்கும், மறுநாள் சொல்லிக் கொண்டு கிளம்புவதற்குமே நேரம் சரியாக இருக்கும். ஒவ்வொரு வீட்டு ஸ்பெசாலிட்டியும் வந்துவிடும். வாய்த்துடுக்காகப் பேசினாலும் மறந்து அன்பு காட்டும் நட்பு வட்டம்.அந்த அன்பை மகிழ்ச்சி பகிரும் சுபதினங்களிலும் காணலாம், துக்கம் பகிர நேரும் துயரத்திலும் காணலாம்.

இப்பொழுது அனேகமாக அருகில் இருந்தவர் பலர் இடம்மாறிவிட்டனர். வாழ்க்கையே மாற்றம் நிறைந்தது தானே? என்றாலும் இருப்பவர்கள் காட்டும் அன்பு அலாதியானது. இதோ, குழந்தைகளை விளையாட விட்டு விட்டு, வேலைகள் முடித்து நிம்மதியாக வரலாம். அவர்களும் சுகமான விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பார்கள். இங்கு போல் அவர்களைத் தனியாக விட்டுச் செல்கிறோம் என்ற கவலை இல்லை. ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும், சிரமம் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் ஹோட்டல் சென்று உண்ண முயல்வோம். பெரும்பாலான நேரங்களில் அது தோல்வி தான்.வேண்டாம் என்றாலும் விருந்துபசரிப்பில் நனைந்து திரும்பும் பொழுது தோன்றும், “ஊரும் உறவும்” உள்ளவரை ஊர் அன்னியமாவது இல்லை.

Monday, April 19, 2010

குழந்தை மனமும் பெரிய மனமும்

அன்று குட்டிப்பெண் காலையிலேயே மூட் அவுட். பின்னே? அவளது பிரிய தலையணை உறை எங்களால் தூக்கி எறியப்பட்டது. டிவி பார்க்கும் பொழுது, உணவு உண்ணும் பொழுது, படுக்கும் பொழுது, விளையாட்டுக்கு இடையில் என்று அந்த தலையணை உறை அணிவிக்கப்பட்ட தலையணை அவளுடன் தான் உறைந்து இருக்கும்.

அது படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல... வீடு முழுதும் இழுக்கப்பட்டு அழுக்காகும்... திடீர் என நாங்கள் கவனித்து துவைத்து காயப்போட்டால், அது காய்ந்து வரும் வரை இவள் படுத்தும் பாடு ஒரு தனிக்கதை. எவ்வளவு துவைத்தாலும் அழுக்காகத் தெரிகிறது என்ற பின் தான் தூக்கி போட முடிவு செய்தோம். அவளுக்கு தெரியாமல் செய்வதாக செய்தாலும், அவளுக்கு தெரிந்துவிட்டது. அது தான் காலை நேரத் தலையாயப் பிரச்னை....

ம்... நான் கூட சிறு வயதில் அம்மா தூக்கிப் போட்ட எனது ஆரஞ்சு பாவாடை சட்டை நினைத்து நிறைய இரகளை பண்ணி இருக்கிறேன். அது இப்பொழுதும் என்னுள் ஒரு ஏக்கப் பெருமூச்சைக் கொண்டு வரும். இன்று நான் கவனித்துப் பார்த்தால்... இதே போல் தான் மோகிக்கு மெல்லிய துணி, நிவிக்கு மிக்கி மவுஸ் போர்வை, அபிக்கு நூல்கள் தொங்கும் துணி என்று ஏதேனும் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது.

வேறு விஷயங்கள் நுழைய நுழைய இந்த குழந்தைத்தனமான ஈர்ப்புகள் மறைகின்றனவா?.... இல்லை யோசித்துப் பார்த்தால்... தீங்கில்லா சில குழந்தைதனங்கள் என்று மறையும் என்றெண்ணியபடி கோபம், ஆசை, போட்டி, பொறாமை என்ற பெரியதனமான அழுக்குகளைச் சுமந்து திரிந்து கொண்டிருக்கிறோம்...

Wednesday, March 10, 2010

தேடல்

வாழ்க்கை என்பதே தேடல் நிறைந்தது தானே? எங்கே தேடல் தொடங்கியது என்று யோசித்துள்ளீர்களா? குழந்தைகளாக இருக்கும் பொழுது தேடுவது போல் எனக்கு தெரியவில்லை. அழகாக பூவொன்று மலர்வது போல், அவர்களது முன்னேற்றம் ஒவ்வொன்றாக நிகழ்கிறது. என்றாலும் வாழ்வின் தேடலின் அவசியம் கருதியா என்று தெரியவில்லை... நாம் தேடலை அறிமுகப்படுத்தி விடுகிறோம்.

"காணோம்... காணோம் முட்டாச்" என்று ஆரம்பித்து, "காக்கா ஓச்" என்று கூறி அழகாக ஒரு தேடலுக்கான ஆரம்பம் கொடுக்கிறோம். பின் அது கண்ணாமூச்சியாகவும், ஒளிந்து பிடித்து விளையாட்டாகவும் மாறுகிறது. சில சமயங்களில் நல்ல ட்ரெய்னிங் கொடுக்க புதையல் வேட்டையும் சொல்லித்தரப்படும்.

இந்த சுவாரசியங்களின் முடிவில் நிஜ தேடல்கள் தொடங்கும். படிப்பு, வேலை, பொருள், துணை என்று பட்டியல் நீண்டு கொண்டிருக்கும். இதெல்லாம் முடிந்த ஒரு கணத்தில் கொஞ்ச நாள் தேடலை மறந்து இருப்போம் என்று தூங்கி எழுந்த ஒரு நாளில் முதல் கேள்வியாக வந்தது கணவரின் "என் பர்ஸைப் பார்த்தியாம்மா?" என்ற கேள்வி. நித்தம் தவிர்க்க முடியாத தேடலாகப் போகிறது என்ற உண்மையின் முன்னுரையுடன் என் முன் அந்த கேள்வி சிரித்தது. சிலருக்கு இது மனைவி கை தவறி வைத்த கம்மலாகவோ, சாவியாகவோ இருக்கலாம்.

என்ன ஆச்சர்யம்? தொலைந்தது சாவியோ, பர்ஸோ... ப்ரிட்ஜ் முதற்கொண்டு வீட்டின் அங்குலம் விடாது தேட வேண்டும் என்று அறிந்து கொண்டேன். எண்ணூறு சதுர அடி வீட்டை எட்டு வருடமாக தேடல் நடந்தாலும் இன்னும் கைமறந்து வைக்கப்படும் பொருள் எங்கிருக்கும் என சட்டென்று அறிய இயல்வதில்லை. பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எப்பொழுது முடியும் தேடல்? படிப்பு , வேலை என்று பெரிய பெரிய தேடல்கள் தராத தத்துவங்களைச் சின்ன சின்ன விஷயங்கள் தந்து விடுவது கூட ஆச்சர்யம் தான்.

தேடல் என்று இந்த பதிவு என் மனதில் தோன்றிய நேரத்தையும் நான் சொல்ல வேண்டும். ஊரில் வீட்டைப் பூட்டிக் கிளம்பி இரயிலைப் பிடிக்க வேண்டிய ஒரு அவசர கணத்தில் வீட்டைப் பூட்ட பூட்டும் சாவியும் இல்லை என்று அறிந்தோம். அப்பொழுது தோன்றியது, "பூட்டிய பின் சாவி தொலைந்தால் கூட ஊருக்குப் போய் வந்து பின் பூட்டை உடைக்கலாம். ஆனால் பூட்டவே சாவி இல்லை என்றால் எப்படி கிளம்ப முடியும்?" என்ன ஒரு தத்துவம் என்று எண்ணிய வேளையில் தான் தேடல் தொடங்கியது.

Monday, October 26, 2009

வேலை வேலை வேலை...

வேலை வேலை வேலை...என்றுதான் சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. பத்திரிக்கை கூட படிக்க நேரம் கிடைக்காது வீடு, அலுவல் என்று ஓடும் வாழ்க்கை... ஓடுவது பெரிதல்ல.. வீடு அதிராமல் ஓட வேண்டும்... சோதனையாக வீட்டில் இருவருக்கும் ஒரே நேரத்தில் வேலைப்பளு. இரண்டு நாட்களுக்குள் குழந்தைகள் "சீக்கிரம் வாம்மா" என்று கூற ஆரம்பித்தனர். கவனித்துக்கொள்ள பாட்டியும் விளையாட சகோதரிகள் இருந்தாலும் அம்மா அப்பாவின் அருகாமையைத் தேடும் குழந்தைகள்...

தொழில் நுட்பத்தின் உதவியால் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை வரப்பிரசாதமாக இருந்தது. பிறர் உதவி தேவைப்படாத ஒரு நாளில் அடித்துப் பிடித்து ஆறரைக்கு வீட்டில் பெருமையுடன் நுழைந்தால் "இருட்டின பிறகு வராதே!!! வெளிச்சத்தில் வாம்மா" என்று கெஞ்சுவாள் சின்னப்பெண். மீண்டும் போராடி மறுநாள் ஐந்தரைக்கு நுழைந்தால் "நான் ஸ்கூலில் இருந்து வரும்பொழுது நீ இல்லை..." என்று இன்னும் எதிர்ப்பார்க்கும் குழந்தையின் ஏக்கத்தில் மனம் நெகிழ்ந்து போகும்.

என்றாலும் இந்த "வீட்டிலிருந்து வேலை" எனக்கு வசதி தான். அலுவலகத்தில் தாமதமாக உட்கார்ந்து "இன்னும் வீட்டிற்கு கிளம்பலையே!!" என்ற கவலை கிடையாது. அம்மா இருக்கும் மகிழ்ச்சியில் தம் வேலைகளிலும் விளையாட்டுக்களிலும் மூழ்கி விடுவர் குழந்தைகள். அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து ஒரு சின்ன முத்தத்தில் மகிழ்ந்து போகும் குழந்தைகளின் "இதெல்லாம் செய்யணும்னு உனக்கு எப்படிம்மா தெரியும்" என்று வேலை செய்பவளைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு மனம் சிரிக்கும். அமுதூட்டி படுக்கைக்கு அனுப்பும் வேளையில் "கதை சொல்லி தூங்க வைம்மா" என்பார்கள். "எனக்கு நிறைய வேலை இருக்குடா கண்ணா" என்றால், "ஒரே ஒரு கதை சொல்லிட்டு வந்து வேலை பண்ணும்மா" என்பார்கள்.

மனம் நான் அம்மாவிடம் அனுபவித்த சுகத்தை அசை போடும். கல்லூரி விட்டு வரும்பொழுது அம்மா இருந்து பரிமாற வேண்டும். இல்லை என்றால் உணவு உண்ணமாட்டேன் என்று அம்மா நான் வந்த பின் எனக்கு பரிமாறிவிட்டு வெளியே செல்வார்கள். அப்பொழுது அம்மாவிடம் பெறுவது எனது உரிமையாகத் தோன்றியது.

இன்று குழந்தைகள் தான் எவ்வளவு புரிந்து நடந்து கொள்கிறார்கள். விடுமுறையில் தான் என் நேரத்தைக் கேட்கிறார்கள். ""ஒரே ஒரு கதைம்மா..." என்று கொஞ்சல். மனதுள் மின்னஞ்சல் ஒன்றின் வரிகள் ஓடின "இளமையில் சக்தியும் நேரமும் இருக்கிறது, பணம் இல்லை... பின்பு சக்தியும் பணமும் இருக்கிறது நேரமில்லை... முதுமையில் நேரமும், பணமும் இருக்கிறது சக்தி இல்லை..."

"ஒண்ணு என்னடா ரெண்டு சொல்கிறேன்..." என்று கதை கூற ஆரம்பித்தேன். என் கற்பனை இறக்கை கட்டிக் கொண்டது. வேலை காத்திருக்கட்டும்.. இன்னும் கொஞ்சம் தூக்கம் தொலையலாம்... ஆனால் என் கண்மணிகளுடன் நேரம் தொலையலாமா? பல மணி நேரம் வேலைக்கு இருக்கும் நேரம், சில மணித்துளிகளிலேயே மகிழ்ந்துவிடும் குழந்தைகளுக்கு இல்லாமல் போகுமா? முதுமையில் புத்தகம் வாசிக்கும் சக்தியாவது இருக்க வேண்டும் என்று எண்ணியபடி கற்பனை உலகில் அவர்களுடன் சஞ்சரித்தேன். உதட்டில் புன்னகை தவழ உறங்கும் மொட்டுக்களை காணும் நிம்மதிக்கு உலகில் எதுவும் ஈடு கிடையாது.

Wednesday, August 12, 2009

கெட் மீ த ஃப்ளோரா பவர்




குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஏதேதோ விளையாட்டுக்கள்... பேச்சுக்கள்...சின்ன சின்ன சண்டைகள்... சுவாரசியமாக இருந்தது. தொலைக்காட்சியில் ஃப்ளோரா பென்சில் பற்றிய விளம்பரம் வந்தது. குட்டிப் பெண் கூறுகிறாள் :

"நானும் என் ஃபிரண்ட்ஸும், கெட் மீ த ஃப்ளோரா பவர்-னு சொன்னோம், ஆனால் பார்பி வரலை".
"எதுக்கு கூப்பிட்டீங்க"
"எழுதறது கஷ்டமா இருந்தது அதான்"
"ஓ... கிவ் மீ த ஃப்ளோரா பவர் சொன்னால் பார்பிஸ் வரமாட்டாங்களா?"
"அதெல்லாம் உண்மை கிடையாது அம்மா... பொய்"


ஒரு கணம் அவை உண்மையாக இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. மாயாஜாலக் கதைகள் இனிமையானவை. கற்பனை வளத்தைத் தூண்டிவிடுவதோடு ஒரு அழகான உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். அங்கு கெட்டவரைத் தேடி நல்லவர்கள் செல்வார்கள். நாமும் அந்த நல்லவருள் ஒருவராவோம். தேவதைகளுடன் விளையாடுவோம், அவர்கள் நமக்கு உதவுவார்கள் அல்லது நாம் அவர்களுக்கு உதவுவுவோம், நிலவில் கால் வைப்போம், மேகத்தில் மிதப்போம், நட்சத்திரங்களிடம் சக்தி தேடுவோம், தங்க நதிகளும், வெள்ளி ஓடைகளும் குறுக்கிடும், விலங்குகள் நட்புடன் உதவும், தாவரங்கள் பேசும் ... இன்னும் பல அதிசயங்கள் நம் முன் மலரும்.



இன்றும் விக்ரமாதித்யன் கதைகளும், மதன காமராஜன் கதைகளும், பஞ்ச தந்திர கதைகளும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. சிறுவர்மலர் தொடர் கதைகளும், தங்கப் புதையல் போன்ற படக்கதைகளும் நினைவிற்கு வந்து மனதில் ஒரு ஏக்கம் உருவாக்குகின்றன.

சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்தது ஹாரி பாட்டர் கதைகள். அந்த கதையின் கரு மிகவும் பிடித்தது. ஹாரி பாட்டர் "இருள் அரசன்" வால்டிமார்ட்டைக் அழிக்கப் பிறப்பான். இருவரும் கிட்டதட்ட ஒரே சக்தியை உடையவர்கள். ஹாரியை வால்டிமார்ட்டிடம் இருந்து ஒன்று தான் வேறுபடுத்தும். அது... அன்பு....




அதில் வரும் ஒரு உருவகம் "டெமெண்ட்டர்". "டெமெண்ட்டர்" நம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உறிஞ்சி நம்மைப் பைத்தியமாக்கும் வல்லமை உடையவை. நம்மைச் சுற்றி சில "டெமண்ட்டர்கள்" உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது. டெமெண்ட்டர்ஸை எதிர்க்கும் மாயம் "மகிழ்ச்சி, நம்பிக்கை, பாஸிடிவ் மனம்" போன்றவற்றை உருவாக்கும் மந்திரமே. அழகான கருத்து.

மற்றொரு உருவகம் "ரூம் ஆஃப் ரிக்கொயர்மெண்ட்ஸ்" - தேவைகளுக்கான அறை. மறைந்து நிற்கும் அவ்வறையின் வாயிலில் நாம் என்ன வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதுவாக அந்த அறை நமக்கு முன் திறக்கும். "நினைப்பது தான் நடக்கும்" என்ற கருத்தைப் போல.

இப்படி மாயா உலகில் சில நனவுலகமும் மிகைப்படுத்தப்பட்டு வரும். நூலகம் சென்றால் இப்பொழுது எனக்கு ஓரளவுக்கு நந்தினிக்கு ஆங்கிலப் புத்தகங்கள் தேர்வு செய்ய இயல்கின்றது. "Daisy Meadows" தேவதைகளும், "Secrets of Droon" மாய உலகும், "goosebumps" திகில் உலகமும் அவள்முன் மாயாஜாலங்கள் செய்கின்றன. இவை எனக்கு அறிமுகமில்லாத புத்தகங்கள். நந்தினிக்கான தேடலில் கிடைத்தவை. தமிழ் அவளுக்கு பிடிக்கும் என்றாலும், எழுத்துத் தமிழில் கதைகள் படிக்க சிறிது சிரமப்படுகிறாள். மெல்ல மெல்ல அவளே வாசிக்க விருப்பப்படுவாள் என்று நம்பிக்கை உள்ளது.

வாசிப்பு இப்பொழுது அவளது கற்பனை வளத்தைத் தூண்டுகின்றது. இப்பொழுது அவள் நிறைய மாயாஜாலக் கதைகள் எழுதுகிறாள். பிடித்த நீதிகள் கூறும் கதை எழுதுகிறாள். அவை எனக்கு மிகவும் பிடிக்கின்றன. அவற்றை அவள் ப்ளாக்கில் போடத் தான் எனக்கு நேரமில்லை.

ம்... நினைத்துப்பார்த்தால் கையில் அடங்கிய சின்னக் குழந்தை , கதை கேட்டு வளர்ந்த குட்டிப் பெண் இன்று தோள் வரை வளர்ந்து கதை சொல்வதே காலத்தின் மாயாஜாலமாகத் தான் தெரிகிறது.

"கெட் மீ த ஃப்ளோரா பவர்", இவ்வுலகில் எல்லா குழந்தைகளும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து பால்யத்தை அனுபவிக்க....

Tuesday, June 16, 2009

என்னத்த சொல்ல?

"அம்மா நீயும் அப்பாவும் எப்படி கல்யாணம் பண்ணிகிட்டீங்க" என்ற மகளின் கேள்வி சற்றே யோசிக்க வைத்தது. முன்பொரு முறை "எனக்கு எப்ப கல்யாணம் பண்ணுவீங்க" என்று கேட்ட பொழுது சிரித்தோம். ஏனெனில் அவள் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டது திருமண மேடையில் கிடைக்கும் பரிசுகளுக்காக. இப்பொழுது வந்த கேள்வி "ஐ லவ் யூ" என்று கூறும் ஒரு விளம்பரத்தின் விளைவாக. இதற்கு முன்பும் வேறொரு விளம்பரத்தின் முடிவில் இதே கேள்வி துளிர்த்தது. இரண்டு நிமிட விளம்பரம் ஏதோ கேள்விகளைத் தூண்டுகிறது என்றால் , ஏதேதோ அபத்த விளம்பரங்களும் மற்ற நிகழ்ச்சிகளும் என்ன எண்ணங்களை விதைக்கிறதோ என்ற எண்ணம் தோன்றியது.

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து அலுவலகத்திற்கு வந்தவரை தமிழ்ப்படத்திற்கு அழைத்துச் சென்றார்களாம். அவர் பார்த்து விட்டு "இது உங்கள் கலாச்சாரமா" என்று கேட்டாராம். "இல்லை" என்ற பதில் அவருக்கு என்ன புரிதலைத் தரும்? நிஜத்திற்கும் நிழலுக்கும் உள்ள முரண்களைக் குழந்தைகள் எவ்வளவு தூரம் புரிந்து கொள்வார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்படியே புரிந்து கொண்டாலும் அது வேறு சில நல்ல குணங்களை மாற்றி விடாதா?

உதாரணத்திற்கு நம்மூரில் இதெல்லாம் நடக்காது என்று சகித்துக் கொள்ளும் மனநிலை பல விஷயங்களில் உண்டு. நல்ல விஷயங்களைக் கூட முரணாக எடுத்துக் கொண்டு "நல்லவை" எல்லாம் நிழலில் நடக்கும் நிஜத்தில் அல்ல என்ற பிம்பம் உருவாகலாம். அழகை வைத்து மட்டுமே எடுக்கப்படும் விளம்பரங்கள் அவர்களுக்குள் அழகு மட்டுமே வாழ்க்கை போன்ற தவறான எண்ணங்களை ஊட்டலாம்.

ஏதும் செய்ய இயலாமல் , மனதுள் இது போல் தொடர்ந்து கொண்டே இருக்கும் கேள்விகள். ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் சிந்தித்து செயல்பட்டால் பல நல்ல விஷயங்கள் நடக்கும். ஆனால் ஊர் கூடி தேர் இழுப்பது எப்பொழுது? கல்லூரி முடிந்த பொழுது எங்கள் வகுப்பாச்சிரியர் எங்களிடம் சொன்னது , " உங்களிடம் நான் கூற விரும்புவது முடிந்தால் கன்ஸ்யூமரிசத்திற்கு அடிமை ஆகாதீர்கள். அதாவது ஒரு பொருள் வாங்கும் முன், அது நமக்கு தேவைதானா, அது இன்றி நம்மால் இருக்க முடியாதா என்று நன்கு யோசித்து பின் வாங்குங்கள்" என்றார். என்னால் அந்த அறிவுரையைப் பின் பற்ற முடியவில்லை. எல்லோரும் அப்படி இருந்தால் விளம்பரங்கள் பயன் அற்று போயிருக்குமோ? இப்படி சின்ன சின்ன விஷயங்களைக் கோட்டை விட்டு இன்று பொருள் சார்ந்த உலகில் நம் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமோ?

Friday, March 20, 2009

காதல் காதல் காதல்.... காதல் போயின்???

சுற்றுவட்டாரத்தில் காதல் , திருமணத்தில் முடிந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் காதல் மீது கவனம் கொள்ள வைத்த ஒரு தோழியின் காதலே!!!

நான் அவரை சந்தித்த பொழுது அவர் கல்லூரி முடித்து மூன்று ஆண்டுகள் இருக்கலாம். ஹாஸ்டலில் வெகு நேரம் தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பார். அவரது ஆண் நண்பரின் அழைப்பு என்று வதந்திகள் உலாவிக் கொண்டிருக்கும். அமைதியாக இருக்கும் அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு வந்த பொழுது நான் அவரது காதலை வியந்தேன். கல்லூரியில் முளைவிட்டு வளர்ந்த காதல் அது. அவர் அவரது காதலருக்காகக் காத்துக் கொண்டிருந்தார் என்றால் மிகை ஆகாது.

காதலருக்காக அசைவ உணவை விட்டிருந்தார். முன்னணி கல்லூரியில் தேர்வு பெற்று பல வேலை வாய்ப்புகளைக் காதலுக்காக நிராகரித்திருந்தார். திருமணத்திற்குப் பின் தான் தனது வேலை பற்றிய முடிவு என்று உறுதியோடு காத்திருந்தார். கிராமத்தில் இருந்து வந்ததால் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. கிட்டதட்ட அவரது காதலால் அவர் தந்தையின் உயிர் ஊசலாடும் நிலைக்குப் போயிருந்தது. என்றாலும் உறுதியாகப் போராடி வீட்டில் அனுமதி பெற்றார். அமெரிக்காவில் இருந்து வைர மோதிரத்தோடு வந்தார் காதலர். தன் வீட்டில் சம்மதம் பெறச் சென்றார். மீண்டும் அமெரிக்கா சென்றார். அதன் பிறகு அவரது இருப்பு இவருக்குத் தெரியவில்லை. மின்னஞசல்கள் கிணற்றில் இட்ட கல்லாயின. மேலும் இரண்டு வருடங்கள் காத்திருந்துவிட்டு எந்த தகவலும் இல்லாததால் வீட்டில் சொன்ன இடத்தில் கழுத்தை நீட்டினார். எனக்கு அவரது காதலின் மென்மையும், உறுதியும் தெரியுமாதலால், மிகவும் வருத்தமாக இருந்தது. காதல் என்றால் எனக்கு இது தான் ஒரு சின்ன ஏக்கத்தோடு நினைவுக்கு வரும்.

இன்று எனக்கு நினைவுக்கு வந்த காரணம் இன்னொரு காதல். அவன் தன் காதலைப் பற்றி எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான். இரு வருடங்களாகக் காதலிப்பதாகவும் தங்கள் வீட்டில் போராடுவதாகவும் கூறினான். விரைவில் கைகூட வாழ்த்தினேன். சமீபத்தில அவனுக்கு திருமணம் நிச்சயமானது. அவனது ஆட்டம் பாட்டத்துடன் வேறு ஒரு பெண்ணுடன். ஒரு சிலருக்கு காதல் விளையாட்டாக உள்ளது. இதுவும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

காதல் காதல் காதல்.... காதல் போயின்??? காதலர்களே!! காதலித்தால் உறுதியாக நின்று திருமணம் செய்து கொள்ளுங்கள். தோல்வியின் வலியை நினைத்துப் பார்க்கவே எனக்கு வலிக்கிறதே!!! அனுபவிப்பவருக்கு எப்படி இருக்கும்?

ஊக்கமது கைவிடேல்

இந்த நூறாவது பதிவை எழுதுகிறேன் என்றால் ஒவ்வொரு பின்னூட்டமும், நம்மையும் ஃபாலோ பண்றாங்கப்பா என்ற நம்பிக்கையும் தரும் ஊக்கம்தான். எனது நன்றிகள்.

"மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" என்றார் வள்ளுவர். உண்மை தான் உள்ளம் மட்டும் நைந்து போய் ஊக்கம் இழந்தால் நம் செயல்திறன் குறைந்து விடும். அதனால் தான் "ஊக்கம் உடைமை" பற்றி ஓர் அதிகாரமே திருவள்ளுவர் எழுதினார்; "ஊக்கமது கைவிடேல்" என்று ஒளவை கூறினார்.

"அவியல் இன்னிக்கு சூப்பர்", என்ற பாராட்டில் 25 வருடங்களுக்கும் மேல் சமைக்கும் அம்மாவின் முகத்தில் வெட்கம் கலந்த மகிழ்ச்சி. அது வீடு முழுதும் பரவுகிறது. இது அங்கீகாரம் தரும் ஊக்கம்

என் பெண் நீச்சல் கற்றுக்கொண்டாள். என்றாலும் பெரிய குளத்தில் நீச்சலடிக்க பயம். எத்தனையோ வார்த்தைகளும், க்ளாஸ்களும் அவளுக்கு நம்பிக்கை தரவில்லை. அவள் தோழி ஒரு நாள் வந்தாள். குளத்துள் காசை போட்டு நீச்சல் அடித்து எடுத்து வந்தாள். மூன்றாம் நாள் இவளும் அவ்விளையாட்டில் இருந்தாள். இது ஆரோக்கியமான போட்டி தந்த ஊக்கம்.

சைக்கிள் கற்றுக்கொண்டால் அவள் கொஞ்சம் independent ஆக இருப்பாள் என எவ்வளவோ முயற்சித்தோம். ம்ஹூம்.. அவளுக்கு அதை ஓட்ட பிடிக்கவில்லை. அவள் தோழி வந்து புத்தகம் வாங்கி செல்வதை மேற்கோள் காட்டியும் அவளுக்கு விருப்பமில்லை. ஒரு நாள் , "என்னால் இனிமேல் உன் டான்ஸ் க்ளாஸுக்கு வந்து விட முடியாது , அதனால் டான்ஸை நிறுத்தி விடுவோம்", என்றேன். இரண்டே நாள் தான் சைக்கிள் கற்றுக்கொண்டாள். எனக்கு புது சைக்கிள் வாங்கி கொடு நானே க்ளாஸ் போய்க்கொள்கிறேன் என்றாள். இது டான்ஸின் மீது இருந்த் ஆர்வம் தந்த ஊக்கம்.

சீக்கிரம் படிச்சு முடிச்சா டி.வி பார்க்கலாம் என்று வேகமாக படிப்பது ஆசை தரும் ஊக்கம்.
இந்த சனி ஞாயிறு வந்து வேலை முடிச்சிட்டால் இரண்டு நாள் லீவ் போட்டு பிள்ளைகளோடு இருக்கலாம் என்று வேலையில் வரும் உற்சாகம் பாசம் தந்த ஊக்கம்.

"இதுக்கெல்லாம் சோர்ந்து போனால் எப்படி? இன்னும் சாதிக்க நிறைய இருக்கு, உங்களால் கண்டிப்பா முடியும்" என்ற ஆறுதலான வார்த்தைகள் தோல்வியால் துவண்டவரை அடுத்த அடி எடுத்து வைக்க ஊக்கம் தரும்.

"உடம்புக்கு என்ன வந்துடுச்சுனு இப்படி இருக்கீங்க? நல்ல உணவா அளவா சாப்பிட்டு, உற்சாகமா இருந்தால் நோய் ஓடிடாது", என்ற ஆறுதலான வார்த்தைகள் நோயில் இருப்போர்க்கு தேறிவிடுவோம் என்ற தெம்பு தரும்.

இப்படி ஊக்கம் கொடுக்க பல காரணங்கள் இருக்கலாம். பல வேளைகளில் வலிகளும் வேதனைகளுமே பலருக்கு ஊக்கம் கொடுத்திருக்கும். நிராகரிப்பு, கோபம் என்ற வேண்டாத விஷயங்களை ஊக்கமாக எடுத்து உயர்ந்தோர் பலருண்டு. நாம் வலிகளைக் கொடுக்க வேண்டாம், மனம் நிறைந்து ஊக்கம் கொடுக்கலாமே!!


காசு பணம் வேண்டாம், ஊக்கம் தர மனம் போதுமே!!! மனம் நிறைந்து ஊக்கம் தரும் வார்த்தைகள் உங்களை அறியாமலே இன்னொருவருக்கு பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

Friday, February 13, 2009

உங்களுக்கு ஆண்குழந்தையா பெண்குழந்தையா?

"ஞாநி" அவர்கள் "நெருப்பு மலர்கள்" என்ற புத்தகத்தின் பின்னுரையில் குறிப்பிட்டிருப்பார், "இன்றைய தேவை பெண் குழந்தையை ஆண் போல் வளர்ப்பதல்ல. ஆண் குழந்தைகளை பெண் போல் வளர்ப்பதுதான்"

எங்கள் வீட்டில் ஒரே பெண் குழந்தைகள் மயம்.
யாரோ கூறினார்கள், "அம்மாடி... ஒரே பொம்பளைப் பிள்ளையா இல்ல இருக்கு?".
"அதான் வீடு கலகலனு இருக்கு. ஒரு விழானா இதுங்க எல்லாம் அழகா ட்ரெஸ் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கும்", பெண்கள் கூறினோம்.
உள்ளிருந்து ஒரு தந்தையின் குரல் "ஆனால் வேலை எல்லாம் நாங்க மட்டும் இல்லை இழுத்து போட்டு செய்யணும்?".
"ஏன் அதுதான் குறைனா, பொண்ணுங்களையும் வேலை எல்லாம் செய்யற மாதிரி வளருங்க", நாங்கள் கூறினோம்.

இவ்விடத்தில் எனக்கு ஞாநி அவர்களின் கருத்து நினைவிற்கு வந்தது. இரண்டுமே அவசியம் என்று தோன்றியது. கணவன் மனைவி என்ற உறவில் அடிக்கடி விரிசலுக்கு காரணம் ஈகோவாக இருக்கும். புரிதலுடன் பகிர்ந்து வாழும் உறவுகளின் இனிமையே நீடிக்கும். "நானும் சமம், நான் மட்டும் ஏன் செய்ய வேண்டும், நீ செய்.." என்ற அணுகுமுறை ஈகோவைக் கிளர்ந்தெழச் செய்து மோதலுக்கு வித்திடும். "வேலைல என்ன வித்யாசம். நானும் செய்யறேன். சேர்ந்து செய்வோம்" என்ற அணுகுமுறை அன்பைக் கிளர்ந்தெழச் செய்து காதலுக்கு வித்திடும். ஆண் வீட்டு வேலை செய்கிறான் என்றால் பெண் வெளி வேலை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். இது போன்ற நல்ல எண்ணம் வருமாறு வளர்ப்பு இப்பொழுது பெற்றோர் கையில் உள்ளது. அப்பொழுது தான் இது ஆண்/பெண் செய்யும் வேலை என்ற நிலை மாறி நாம் வாழ செய்யும் வேலைகளாக உருபெறும்.

"ஞாநி" அவர்களின் "நெருப்பு மலர்கள்" என்ற புத்தகத்தின் பின்னுரையில் இருந்து சில பகுதிகள்:

"...பெண் மீது ஆணுக்கு இருக்கும் இந்த சார்புகள் எல்லாம் உரிமையாகவும், அதிகாரமாகவும் இருக்கின்றன. மகனை தாய் பேணுவது எனப்து அவள் கடமை. அவனுக்கு அது உரிமை. கணவனை மனைவி பராமரிப்பது என்பது அவள் கடமை, அது அவனுக்கு உரிமை"

"...எந்த ஆணிடமும் பேட்டியின் இறுதியில் இப்படி, "வீட்டு வேலைகளையும் சேர்த்து எப்படி உங்களால் கவனிக்க முடிகிறது", என்று யாரும் கேட்பதில்லை. ஏனென்றால் அந்த ஆணின் பொறுப்பாக யாரும் பார்ப்பதே இல்லை. அதை பெண்ணின் உழைப்பாகவும் மதிப்பதில்லை". "உங்க மனைவி என்ன செய்றாங்க?" என்று கேட்டால் , வெளிவேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் மனைவியுடைய கணவர்கள் பெரும்பாலோர் சொல்லும் பதில், "சும்மா இருக்கா" என்பதுதான். "வீட்டைக் கவனிச்சுக்கறாங்க" என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்"

"வெளிவேலைக்குச் செல்லும் பெண் மீது சுமத்தபடும் இரட்டிப்பு சுமைகள் (மூன்றாம் சுமை குழந்தை பராமரிப்பு) இன்று இரண்டு விதமான் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வெளி வேலைகளுக்குச் செல்லும் படித்த, படிக்காத பெண்கள் எல்லாருமே கூடுதல் சுமைகளை சுமக்க வேண்டியவ்ர்களாகி விட்டார்கள். வீட்டையும் கவனித்துக் கொண்டு வெளிப்பொறுப்பையும் கவனிப்பது சாதனை என்று நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படி சுமக்க முடியாமல் திணறுபவர்களோ பெண்ணுக்கேற்ற இடம் வீடுதான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். பயோகெபிஸ்ட்ரி முதல் வெப் டிசைனிங் வரை என்ன படித்திருந்தாலும், அந்தத் திறமையைப் பயன்படுத்தி வெளிவேலைக்குச் செல்வதை விட வீட்டு நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு "நிம்மதி"யாக இருந்து விடலாம் என்ற மன நிலையை நோக்கி பெண்கள் துரத்தப்படுகிறார்கள்.


...இன்றைய சமூக சூழல் பெண்கள் பல உரிமைகளையும் வசதிகளையும் அடைந்துவிட்டது போன்ற வெளித்தோற்றத்டதைக் காட்டினாலும், அடிப்படைகள் மாறாமலே தான் இருக்கின்றன. ஒன்றுமே நடக்கவில்லை என்று இதற்கு அர்த்தமில்லை. நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த பல தளைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், விடுபட் வேண்டிய தளைகள் இன்னமும் ஏராளமாக இருக்கின்றன என்பது கசப்பானாலும் யதார்த்தம்.
இன்னமும் பெண்ணால் தயக்கமின்றி கவிதைகூட எழுத முடியவில்லை, விரும்பிய உடையை அணிய முடிவதில்லை, நினைக்கும் கருத்தைப் பேச முடிவதில்லை. எண்ணுவதெல்லாம் ஏப்பமாக வெளியிடும் உரிமை ஆணுக்கு இருக்கிறது. பெண்ணுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. இவையெல்லாம் அடிப்படையில் மாறாமல் இருக்கும் சமூக ஒடுக்குமுறையின் சின்னச் சின்ன வெளிப்பாடுகள் தான்.

...

குடும்பத்திலிருந்து தான் எல்ல மாற்றங்களும் தொடங்கப்பட வேண்டும். குழந்தை வளர்ப்பிலிருந்தே அது தொடங்கப்பட வேண்டும். "வாசலில் போடப்பட்டிருக்கும் பால் பையை எடுத்துப் போய் அம்மாவிடமும், செய்தித்தாளை அப்பாவிடமும் கொடுக்க குழந்தைக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள்" என்று கவிஞர் அ.வெண்ணிலா ஒரு கவிதையிலே கேட்பார். குடும்பம் தான் கற்றுக் கொடுத்தது. ...

பெண்ணுக்கு சம உரிமையை மறுக்கும் ஆண் எப்படி உருவாக்கப்பட்டான் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். ஏழெட்டு வயதில் பெண் குழந்தை அம்மாவுக்கு சிறு உதவிகள் செய்யத் தொடங்கும் வேளையில், அதே வயதில் ஆண் குழந்தை சுதந்திரமாக திரிய அனுமதிக்கப்படுகிறது. நான் (ஆண்) சாப்பிட உட்கார்ந்தால் ஒரு கை தட்டை எடுத்து வைக்கிறது, இன்னொரு கை தட்டிலேயே கை கழுவ நீர் ஊற்றுகிறது. சமயங்களில் சோற்றை குழம்புடன் பிசைந்தே வைத்து விடுகிறது. சாப்பிட்டு முடித்து எழும்போது ஒரு கை மறுபடியும் நீர் ஊற்றுகிறது, துகைக்கத் துண்டு நீட்டுகிறது. இத்தனை கைகளும் பெண்களுடையவை - என் அம்மா, பெரியம்மா , அக்கா.

இப்படி தனக்கு பணிவிடை செய்வதற்கே பெண்கள் உலகில் இருக்கிறார்கள் என்ற மன நிலையில் சுமார் 16 ஆண்டுகள் வளர்க்கப்படுகிற நான், 17வ்து வயதில் பெண்ணை சம மனுஷியாக எப்படி பார்ப்பேன்? ஆண்-பெண் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டால் , பெண்ணுக்கு அடைவதற்கு ஒரு பொன்னுலகமே காத்திருக்கலாம். ஆனால் ஆணாகிய எனக்கு ஏராளமான் சலுகைகள், வசதிகள் எலாம் இழக்கப்பட வேண்டியவையாக அல்லவா இருக்கின்றன. கற்கத் தொடங்கும் மழலையிலேய எனக்கு ஆண்-பெண் இருவரும் சம உரிமை உடைய மனிதர்கள் என்பதும் கற்பிக்கப்பட்டிருந்தால் இந்த சிக்கல் எனக்கும் இல்லையல்லவா?

எனவே, இன்றைய தேவை பெண் குழந்தையை ஆண் போல் வளர்ப்பதல்ல. ஆண் குழந்தைகளை பெண் போல் வளர்ப்பதுதான். சிஉ வயதிலிருந்தே அடுப்படியில் உதவிகள் செய்யவும், வளர வளர சமைக்கவௌம், பாத்திரம் தேய்க்கவும், வீடு பெருக்கவும், கழிப்பறை கழுவவும், கோலம் போடவும் கற்கிற, கற்பிக்கப்படுகிற சிறுவனே சக சிறுமிகளை சமமானவர்களாக நடத்தும் பார்வை பெறுவான்.
...

உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

Tuesday, February 3, 2009

ஏன் இப்படி?

திருவண்ணாமலை சென்றிருந்தேன். கோயிலைச் சுற்றி எந்த வீதியில் நின்றாலும் நடுத்தர வயதைத் தாண்டிய பெண்களோ அல்லது வயதானவர்களோ வந்து கையேந்தி நின்றனர். கையில் இருந்த சில்லறைகளைக் கொடுத்தாலும், ஏன் இப்படி என மனம் கலங்கியது.

கோயிலுள் தரிசன்ம் முடித்து வரும்பொழுது "அம்மா, உங்களால் முடிந்த அளவு வயதானவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள்" என்றவுடன் சட்டென ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்துவிட்டேன். சாப்பாடு கொடுங்கள் என்று நான் கூறும் பொழுதே எனக்கு புரிந்து விட்டது அது ஒரு நாடகம் என. சட்டென் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டேன். மனதில் இம்முறை எனக்கு கோபம் இல்லை, ஏன் இப்படி என வேதனை தான்.

கையேந்தி நிற்கவோ ஏமாற்றியோ இவர்கள் வாழ்க்கையை ஓட்டி எவ்வளவு சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் வாழ வழி இல்லையா? எனக் கேள்விகள். சென்னையில் வீட்டைப் பார்த்துக் கொள்ள நம்பிக்கையான ஆள் கிடைக்காது எவ்வளவோ வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆள் தேடுகிறார்கள். எனக்கு தெரிந்த பல இடங்களில் வருபவர்கள் எல்லாம் உணவு, உடை, உறைவிடம் , கணிசமான தொகை கொடுத்து, கனிவாக இருந்தாலும் யாரும் நிலைப்பதில்லை.

வேலை இன்றி சிலர், வேலைக்கு ஆள் கிடைக்காது சிலர் என்று ஏன் இந்த முரண். ஏன் இப்படி?

இதன் தொடர்ச்சியாக எழுந்த எண்ணங்கள்:
இப்பொழுது விலைவாசி இருக்கும் நிலையில், அதுவும் கிராமங்களில் வாழ்வை ஓட்ட பொருள் ஈட்ட என்ன வழி இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. சுய உதவி குழுக்கள் பற்றி பல செய்திகள் வந்தாலும் அது இன்னும் இது போன்ற மக்களை சென்றடையவில்லையா அல்லது இவர்கள் உழைக்க விருப்பப்படவில்லையா? எத்தனையோ உதவும் இல்லங்கள் இருந்தாலும் பலர் உதவினாலும் வறுமையை ஒழிக்க முடியவில்லையே? ஏன் இப்படி?

சில வருடங்களுக்கு (தற்போதைய நிலை எனக்கு தெரியாது) முன்பு சிவகாசியில் பிச்சைக்காரர்களைக் காண முடியாது, வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் சிரமம். இதற்கு காரணம் சுற்றி இருந்த தொழிற்சாலைகள். எனக்குத் தெரிந்து பல குடும்பங்கள் கட்டு ஒட்டியே வாழ்வில் உயர்ந்துள்ளார்கள். ஒரு குடும்பத்தில் ஆண்பிள்ளைகள் ஒழுங்காக வருமானம் ஈட்டி வராத நிலையில் பெண்கள் மட்டுமே கட்டு ஒட்டி, வீடு கட்டியதோடு அவர்கள் திருமணத்திற்கும் சேர்த்து வைத்தனர். பல கடைகளில் "வேலைக்கு ஆள் தேவை" என்று எப்பொழுதும் அறிவிப்பு இருக்கும். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் பொருள் ஈட்ட வ்ழி இருந்ததால் தான்.


மற்றொரு விஷயம் தலைமை பற்றியது.
என் தந்தை ரேஷன் ஆபீஸுக்கு சென்று ரேஷன் கார்டு வாங்கும் சூழ்நிலையில், அங்கு சென்று காலையிலேயே நிற்பார். அப்பொழுது தான் நண்பகலில் வேலை முடியும் வாய்ப்பு உள்ளது என்று. ஒரு முறை வேலைகள் சரியான நேரத்திற்குத் தொடங்கி விரைவாக நடந்தன. ஏன் இப்படி? என்று விசாரித்தால் வந்த பதில் "ஆபீஸர் கொஞ்சம் கெடுபிடி". ஆக, தலைமை சரியாக வழி நடத்தினால் தான் வேலை நடக்கும் என்பதற்கு இந்த சின்ன உதாரண்ம் போதும்.


நம் தலைவர்களை இது போன்று கையேந்தி மக்கள் நிற்கும் இடங்களுக்குத் தனியாகத் தலைவனாக அல்லாது ஒரு குடிமகனாக அனுப்ப வேண்டும். சுற்றி கையேந்தி மொய்க்கும் மக்களைக் கண்டு கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சி தோன்றாதா? ஏன் இப்படி?

Thursday, January 22, 2009

துரித உணவு தேவையா?

சில சமயங்களில் நிஜம் முகத்தில் அறையும் பொழுதுதான் விழித்துக் கொள்கிறோம். துரித உணவு கேடானது என்று தெரியும். என்றாலும் சில சமயங்களில் குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்று விதிமுறைகள் தளர்த்தப்படும். எனக்கு தெரிந்து பெரும்பாலோர் இப்படி தான்.

இது பற்றி பேரண்ட்ஸ் க்ளப்ல "புதுகை தென்றல்" ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருக்காங்க. இது என்னோட அனுபவம்.

அலுவலக நண்பர் ஒருவர் சொன்ன செய்தி தான் அதிர்ச்சி அளித்தது. அவரது உறவினர் 17 வயது பையனின் மரணம்... கேன்சர் எனும் அரக்கனால்... மருத்துவர் கூறும் காரணம் : "துரித உணவு". அலுவலகத் தோழியர் அனைவருமே அதிர்ந்து விட்டோம். மிகக் கடுமையாக துரித உணவுப் பழக்கத்தை குழந்தைகளிடம் நிறுத்த முடிவு செய்தோம், செய்து விட்டோம்.

இந்த செய்தி தந்த அதிர்ச்சியில் உணவு பழக்கங்களை மாற்ற எடுத்த முயற்சியில் எனக்குப் புரிந்தது, "கேட்பது போல் கூறினால் குழந்தைகள் புரிந்து சொல்வதைக் கேட்கிறார்கள்". நாம் அறிமுகப்படுத்தாவிட்டாலும் நண்பர்கள் வாயிலாக எளிதாக நூடுல்ஸ், குர்குரே, சிப்ஸ் என்று அறிமுகம் ஆனவர்கள். என்ன தான் கட்டுப்பாடு விதித்தாலும் செல்லம் கொடுக்கும் உறவுகளைத் தாஜா செய்து வாங்கி வரும் பொழுது கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டி வரும். ஒரு நாள் மின்னஞ்சலில் "குர்குரேயை உருக்கினால் ப்ளாஸ்டிக்" என்ற செய்தியைப் படித்து காட்டினேன். இது போல தான் எல்லா பாக்கெட் தின்பண்டங்களும் என்றேன். அன்று முதல் அவர்கள் அதைத் தொடுவது இல்லை. ஒரு நாள் அவசரத்துக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று ஒரு பாக்கெட் லேஸ் வாங்க "எங்களைச் சொல்லிட்டு நீ என்ன செய்ற" என்றார்கள். அப்படியே தூக்கிப் போட்டேன் குப்பையில்.. நினைவுறுத்தியதற்கு நன்றி கூறியபடி...


நூடுல்ஸ் பைத்தியத்தை வாரம் ஒரு நாள் என்ற கட்டுப்பாடுடனும், ஒரு ஜங்க் ஃபுட் என்றால் ஒரு குட் ஃபுட் என்று உளுந்து களியும் அதனுடன் அறிமுகப்படுத்தி இருந்தேன். இதில் எனக்கு பெருமை வேறு . இப்பொழுது கிடைத்த அதிர்ச்சியில் நீ உளுந்து களி சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை "நோ நூடுல்ஸ்" என்று கேன்சர் காரணமும் கூறிய பிறகு, சற்றே எதிர்ப்பு இருந்தாலும் இப்பொழுது அடங்கிவிட்டது. பர்கர் , ஃப்ரென்ச் ஃப்ரைஸ் எல்லாம் என்றோ ஒரு நாள் என்று அறிமுகப்படுத்தப்பட்டு, தீரா ஆசை ஆனவை... இதே காரணத்திற்கு இப்பொழுது மறுக்கப்பட்டு விட்டவை. உன் நண்பர்களிடமும் கெடுதல்களைக் கூறு என்றேன்.

சூப் பிடிக்கும் என்று இன்ஸ்டண்ட் சூப் வாங்கும் வழக்கம் இருந்தது. இப்போ... சூப்?? பர்கர்?? ஃப்ரென்ச் ஃப்ரைஸ்... வீட்ல நான் செய்யறேன் கண்ணுகளா என்று கூறிவிட்டேன். இருக்கவே இருக்கு சமையல் பதிவுகள்.

நீங்கள் இன்னும் விழிக்கவில்லையெனில் விழித்துக் கொள்ளுங்கள். நம் கையாலேயே ஸ்லோ பாய்சனிங் எடுக்க வேண்டுமா என்று ஒவ்வொரு முறையும் துரித உணவுகளைக் காணும்பொழுது கேட்டுக்கொள்ளுங்கள். தானாக துரித உணவு குறைந்துவிடும்.

Friday, January 16, 2009

சென்னை சங்கமம்

இந்த தடவை எங்க வீட்டுக்கு பக்கத்திலேயே சென்னை சங்கமம். அதனால் அப்பப்ப எட்டிப் பார்க்க முடிஞ்சுது. சில உறவுகளையும் நட்புகளையும் சந்தித்த பொழுது எல்லோருக்கும் அவர்கள் பகுதியில் நடக்கும் "சங்கமம்" எட்டிப் பார்க்கும் ஆர்வம் இருந்தது. ஆங்காங்கே கண்ணில் தென்பட்ட "சங்கமம்" இடங்களில் நல்ல கூட்டம் தெரிந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் பொங்கலையொட்டி படம் காண மாயாஜால் சென்றிருந்தோம். கரகாட்டம், மயிலாட்டம் என்று கிராமிய நிகழ்வுகளும் மாட்டு வண்டி, குதிரை வண்டி சவாரிகளும் இருந்தன. சவாரிகள் எல்லாம் யானை விலை குதிரை விலையாக இருந்தன. இவ்வளவு செலவு பண்ணிதான் கிராமத்தைக் குழந்தைகளுக்கு காட்ட முடிகிறது என்று தோன்றியது.

பத்து வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் , இலையுதிர்காலம், வசந்த காலம், கோடை காலம், குளிர்காலம் என்று பருவங்களை இயற்கை பறை சாற்றுவது காண அழகாக இருந்தது. அதை விட என்னைக் கவர்ந்தது, அந்தந்த காலத்திற்கேற்ப கொடிகளை பறக்கவிட்டதோடு ஊரே பருவங்களைக் கொண்டாடியது. அக்கொண்டாட்டங்களைப் பார்த்த பொழுது, இயந்திரத்தனமான சென்னை வாழ்க்கை நினைவுக்கு வந்தது. படிக்கும் காலங்களிலாவது கோடைத் திருவிழாவுக்கு ஊருக்கு ஓடுவோம். இப்பொழுது அதுவும் இல்லை.

இப்பொழுது சங்கமம் சற்றே எனது இரு ஏக்கங்களையும் தீர்த்தது. பொங்கல் வந்துடுச்சு, சங்கமம் நடக்குதாம் போய் பார்க்கலாம் என்று குழந்தைகளிடம் சொன்ன பொழுது, ஊரில் திருவிழாவுக்குத் தயாரான துடிப்பு இருந்தது. நாங்க எட்டிப் பார்த்த பொழுது ஒரு நாள் கரகாட்டம், ஒரு நாள் சங்கீதம் அப்புறம் மேஜிக் ஷோ நடந்துச்சு. எல்லோரும் கைதட்டி இரசிச்சாங்க, நாங்களும் இரசிச்சோம். இன்று காலை தான் ஸ்டேஜ் எல்லாம் கலைச்சு எடுத்துட்டுப் போனாங்க. சங்கமம் நம் கலாச்சாரத்தை நினைவுப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல முயற்சி.

Monday, January 5, 2009

கழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன?

நேற்று என் மகள் இடைவிடாது அவளைப் படிக்க வைக்குமாறு மிரட்டியதால், வேறு வழியின்றி பாடம் கற்றுக்கொடுக்க அமர்ந்தேன். ஆங்கில இலக்கணம் நாளை பரீட்சையாம். மேடம் ஒரு பேப்பர் கொடுத்தார்கள். நான் உண்மையிலேயே மிரண்டு விட்டேன். ஒரு பக்கம் முழுக்க விலங்குகளின் ஒலிகளைப் பற்றிய ஒரு டேபிள், இன்னொரு பக்கம் பொருட்களின் ஓசைகள் பற்றிய ஒரு டேபிள். hyenas laugh, owl hoots, spoon clinks, clothes swish என்று பல விஷயங்கள். கழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன என்று தோன்றியது. 10 வயது குழந்தைகள் இதை மனப்பாடம் செய்து போய் கேட்கப்படும் நாலு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நிச்சயமாக இதில் புரிந்து படிக்க ஒன்றுமில்லை, மனப்பாடம் தான் செய்ய வேண்டும். Cat mews, bees hum, bells jingle என்று சிலவற்றை வேண்டுமானால் புரிய வைக்கலாம். மீதி எல்லாம் memory power இருக்கும் குழந்தைகளால் மட்டுமே முடியும். மற்ற குழந்தைகள் என்ன செய்வார்கள்?

இது போல தான் states and capitals இருக்கும். என்றாலும் அது நம் நாட்டைப் புரிந்து கொள்ளும் ஒரு கோணத்தில் பரவாயில்லை என்று தோன்றியது. என்றாலும்... என்னத்த சொல்ல? ஆயிரம் குறை கூறினாலும் அதைத்தானே படிக்க வைத்து மதிப்பெண் பெற வேண்டி இருக்கிறது...

Thursday, December 18, 2008

வறியார்க்கொன்று ஈவதே..

முகம் இறுக, உள்ளே மனம் உருக நகர வேண்டிய கட்டாயங்கள் பல நேரம் வந்ததுண்டு. பெரும்பாலும், சிக்னலில் பச்சைக் குழந்தையுடனோ, பச்சிளம் பாலகர்களோ கையேந்தும் பொழுது தான் பெரும்பாலும் இந்நிலை. ஒன்றிரண்டு ரூபாய் கொடுப்பதால் ஒன்றும் குறையாது... ஆனால், இவர்கள் ஒரு கும்பலாகச் செயல்படுகிறார்கள், இதற்கென குழந்தைகள் கடத்தப் படுகிறார்கள் என கேள்விப்படும் பொழுது, சொல்ல முடிய வருத்தம் மனதைப் பிசைய, முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது.

சிறு வயதில் வீட்டிற்கு கையேந்தி வருவோர் பலர் உணவிற்கு ஏந்துவர். வீட்டில் இருக்கும் டிபனோ, குழம்போ கொடுத்தால் சந்தோஷமாக எடுத்துச் செல்வர். ஆனால் நாட்பட நாட்பட, காசுக்காக மட்டுமே கை நீட்டுகின்றனரே ஒழிய உணவு விரும்பப்படுவதில்லை. தீபாவளி பலகாரங்கள் விதிவிலக்கு. இப்பொழுதெல்லாம் மினிமம் ஒரு ரூபாயேனும் கொடுக்க வேண்டும். காலணா, எட்டணாக்கள் பத்து, இருபது பைசாக்கள் போல் காணாமல் போய் கொண்டிருக்கின்றன.

பல நேரங்களில் பலர், எதேனும் இல்லத்திற்கு என கையில் ஒரு ரசீது புத்தகத்துடன், கோயிலுக்கு என்று உண்டியலுடன், கல்யாணத்திற்கு எனத் தட்டுடன், படிப்பிற்கு என்று நோட்டுப் புத்தகத்துடன்...இவர்களது காரணங்கள் உண்மை என்றால் இயன்ற அளவு கொடுக்க மனம் இருந்தாலும், பல நேரங்களில் பொய்யாக இருப்பதால், தயக்கம்... உண்மை தானா அல்லது ஏமாற்றுத் தொழிலா? என்று கேள்வி.

இந்த கேள்விகளால், இப்பொழுது நான் கொடுப்பதென்னவோ, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மட்டும் தான். அவை பற்றியும் சில சமயம் தாறூமாறான செய்திகள். எதையாவது நம்பத்தானே வேண்டும், எனவே பதிவு செய்யப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நம்பிக் கொடுக்கிறேன். என்றாலும் , நம்பிக்கையின்மையால் எத்தனையோ உண்மையான உதவி தேவைப்படுவோருக்கு கிடைக்காமல் போகும் நிலை நிச்சயம் இருந்திருக்கலாம்.

ஆனால் யோசனை வரும் எப்படி ஒரு உலகத்தை நம் சந்ததியருக்கு விட்டுச் செல்லப் போகிறோம்?
நட்பாக மூன்றாமவர் சிரித்தால், எதற்காக என்ற கேள்விக்குறி...
உறவினரையும் நம்பாதே என்ற செய்திகளால் குழப்பம்...
எதை நம்புவது, யாரை நம்புவது என்ற ஒரு நம்பிக்கையற்ற உலகை...

என்ன செய்யலாம் இதை மாற்ற?

Friday, November 28, 2008

ஏன் கொடுத்தாய் ஆறறிவு?

இறைவா!
ஏன் கொடுத்தாய் ஆறறிவு?
இல்லாதிருந்தால்..
தற்காப்புக்காக மட்டுமே
தலைகள் விழுந்திருக்கும்.

இன்றோ....
இனமென்றும், மதமென்றும், மொழியென்றும்
மண்ணென்றும், பொன்னென்றும், போதையென்றும்,
மனமென்றும், மனச்சிதைவென்றும்...
நித்தம் ஒரு காரணமென்று
எண்ணற்ற காரணங்கள்
எண்ணற்ற தலைகள்..

ஆறறிவு என்பது
அன்பால் உலகை உய்விக்க
அமைதி பூமி உருவாக்க
என்று அனைவரும்
உணர்வது எப்பொழுது?
கூறிடுவாய் இறைவா!!

Tuesday, November 25, 2008

அது ஒரு மழைக்காலம்




மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க
முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க
தேடி வந்த மாப்பிள்ளைக்கு
எண்ணி வைங்க
தேடாத மாப்பிள்ளைக்கு
சூடு போடுங்க...


முறுக்கைக் கொறித்தபடி, பாடல் பாடி, கையில் கிடைத்த காகிதமெல்லாம் படகாக மாறிய மழைக்கால நினைவுகள் மனதை நனைக்கின்றது. இன்று, என்னருகே என் பெண்கள் "மழையே மழையே சீக்கிரம் போயிடு..." என்று டோராவைப் பாடுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு நாள் குடை கொண்டு போகாது வெளியே சென்றிருந்தோம். லேசாகத் தூறியது மழை.

"அம்மா, மழை பெய்யுது, வா காருக்குப் போகலாம்" என்றனர் குட்டீஸ்.
"ம்... கொஞ்சம் மழையில நனைஞ்சு தான் பாருங்களேன்" என்றேன் நான்.
"நீ தானேம்மா மழைல நனைஞ்சா சளி பிடிக்கும்னு சொல்லுவ?"
"ம்... அப்புறம் மழையை அனுபவிக்கத் தெரியாமல் போய்டும். அதனால லேசா தூறும் வரைக்கும் கொஞ்சம் நனைவோம்...நாங்கள்ளாம் என்ன பாடுவோம் தெரியுமா? "மழை வருது, மழை வருது...."

சுகமாக இருந்தது அந்த தூறல்.

Friday, November 21, 2008

தாய்மை என்றோர் உணர்வு...

அவள் அந்த குட்டிக் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். "அம்மாவும் குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த முற்றத்தில் பாம்பு புகுந்திருந்தது. தாயை எழுப்ப எல்லோரும் சத்தம் கொடுத்துப் பார்த்தார்கள். ம்ஹீம்... அவள் அசைவதாகத் தெரியவில்லை. நல்ல அசதி போல். சற்றுத் தொலைவில் இருந்து கம்பால் தொட்டுப் பார்த்தார்கள். அசைந்தாள் , ஆனால் எழவில்லை. ஒரு பெண், மல்லிகைப் பூவை எடுத்து அக்குழந்தையின் மேல் போட, சட்டென்று எழுந்து அந்த பெண் பூவைத் தட்டி விட்டாள்". "சினிமாத்தனமாக இருக்கு", முணுமுணுத்தவாறு, பத்திரிகையைத் தூக்கி எறிந்தாள்.


இரண்டு வருடங்களுக்குப் பின்...
யாரோ தொடும் உணர்ச்சியில் திடுக்கிட்டு விழித்தாள். ஜன்னலருகே கணவன் கோபத்துடன் நிற்பது தெரிந்தது. கையில் குச்சி, அவளை ஜன்னல் வழியாகத் தொட்டு எழுப்ப. "எத்தனை தடவை பெல் அடிக்கிறது. எழுந்து வந்து கதவைத் திற..." என்றான்.


இரண்டு வருடங்களுக்குப் பின்...
சட்டென்று விழிப்பு தட்டியது. கண்கள் உடனே தொட்டிலுக்குச் சென்றது. குழந்தை விழிப்பதற்கான ஆயத்தங்களுடன் நெளிய ஆரம்பித்திருந்தாள். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தொட்டிலை ஈரமாக்கிவிட்டு அழ ஆயத்தமானாள். மெல்ல எடுத்து மார்போடு அணைக்கையில் , அந்த குட்டிக் கதை நினைவுக்கு வந்தது. "உண்மை தான்", என்று நிறைவோடு மனம் முணுமுணுத்தது.

Tuesday, November 4, 2008

வயது தந்த பாடம்

பல பிள்ளைகளைப் போல் எங்களுக்கும் பெற்றோரை மகிழ்விக்க ஆசை தான். நட்சத்திர விடுதி, விமானப் பயணம், வெளிநாடு என எல்லாம் இன்று அனுபவிக்க அன்று பாடுபட்டு அவர்கள் படிக்க வைத்ததன் பலன் தானே?

சும்மா கூப்பிட்டால் வருவார்களா? பிறந்த நாள் கொண்டாட்டம், L.T.A என்று காரணம் சொல்லி, நட்சத்திர விடுதி, விமானப் பயணம் எல்லாம் அவர்களையும் பார்க்க வைத்தாயிற்று. அடுத்தது வெளிநாடு. திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் என்று ஒரு டூர் போகலாமா என்று யோசித்தோம். பிள்ளைகள் சற்று பெரிதானால் சுற்றுலா நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் தலை தூக்க, பிள்ளைகளின் வயதைக் கருதி திட்டத்தை சற்றுத் தள்ளிப் போட்டோம். எதிர்பாராத விதமாக, வீட்டில் ஓர் இழப்பு. பிள்ளைகளின் வயதைக் கருதியவர்கள், பெற்றோருக்கு வயதாகிறதே என்று யோசிக்க மறந்தோம். நாம் பொறுப்பான பெற்றோராக யோசிப்பது போல், பெற்றோரின் பொறுப்பான பிள்ளைகளாகவும் யோசித்திருக்க வேண்டும் என்று மனதை உறுத்துகிறது.

Wednesday, October 22, 2008

தித்திக்கட்டுமே தீபாவளி!!!!

என் கணவரது அலுவலகத்தில், தீபாவளி நெருங்கும் வேளையில், ஆதரவற்ற சில குழந்தைகளின் விருப்பங்களைக் கண்டறிந்து, நிறைவேற்ற விரும்புவர்கள் செய்யலாம் என்று ஒரு பட்டியல் கொடுத்திருந்தார்கள். அவர்கள் விருப்பப் பட்டிருந்ததெல்லாம் டிரஸ், வாட்ச், பொம்மை, பள்ளிப் பை, ஜியாமெட்ரி பாக்ஸ் போன்ற பொருட்களே. நல்லதொரு முயற்சியாகத் தெரிந்தது. பகிர்ந்து கொள்ளுவது சந்தோஷத்தை பன்மடங்காக்கும். எனவே இந்த தீபாவளியை நாமும் இன்னொருவரின் சின்ன மகிழ்ச்சிக்காக நம்மால் முடிந்த அளவில் செலவிட்டால், தித்திக்குமே தீபாவளி. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Thursday, August 14, 2008

இனிமை இனிமை ... கற்பது இனிமை

சில பள்ளிகளில் பிள்ளைகளின் திறன் வளர்க்க அவர்கள் பள்ளியில் கடைபிடிக்கப் படும் சில முறைகள் மிகவும் இனிமையாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளன..

உதாரணத்திற்கு, Spoken English-ல் திறம் பெற, அவர்கள் கூறுவது "உனக்கு பிடித்த பொம்மையை எடுது வந்து அது பற்றி பேசு". அவ்வளவு தான், குட்டீஸ் எல்லாம், இது தான் தங்கள் பொம்மையைத் தோழர்/தோழி-களுக்கு காட்டும் சந்தர்ப்பம் என்று, தங்களுக்குப் பிடித்த பொம்மையைப் பற்றி ஆங்கிலத்தில் ஆர்வத்துடன் பேசக் கற்றுக் கொள்கின்றனர். கொஞ்சம் பெரிய க்ளாஸ் என்றால் "இரண்டு கண், இரண்டு காது இருக்கிறது.." என்று மட்டுமே சொல்லக்கூடாது என்று அறிவுற்த்தப்படுவதால், சற்று கூடுதல் விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார்கள். சாதாரணமாக இதைப் பற்றி பேசு, அதைப் பற்றி பேசு என்று கூறுவதை விட, இம்முறை குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.

இதைப் போல் பொஙகலுக்கு, சின்ன சின்ன மாதிரிகள்... வீடு, மாடு, பொங்கல் பானை என்று செய்ததோடு, சந்தை போல் அமைத்து, குழந்தைகள் விருப்பப்பட்டதை வாங்க வளையல் கடை, பொட்டு கடை , சிறு விளையாட்டு சாமன்கள் கடை என்று அமைத்ததோடு, பொங்கலும் கரும்பும் சாப்பிட்டுள்ளனர். பட்டணத்தில் பொங்கல் கொண்டட்டத்தைப் பிள்ளைகளுக்கு இப்படி தானே காட்ட முடியும்?

இன்னொரு பள்ளியில், ஆசிரியர்கள் காய்கறி, விளையாட்டு சாமான், தின்பொருள் என்று சிறு, சிறு கடைகள் அமைக்கிறார்கள். குழ்ந்தைகளிடம் பில் தரப்படுகிறது. அவர்கள் தமக்கு விருப்பமானதை வாங்கிக் கொண்டு, அதன் விலையை அறிந்து பில்லில் எழுத வேண்டும். எல்லாம் வாங்கிய பின், பணம் செலுத்தும் இடத்தில், மொத்த பணத்தை செலுத்தி பாக்கியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வரவு செலவு கணக்கு வைப்பதற்கு யதார்த்தமான பாடம்.

இன்னொரு பள்ளியில், குழ்ந்தைகளிடம் ஒரு வீட்டின் முகவரி தரப் படுகிறது. அவர்கள் பள்ளி பேருந்தில் ஏறிக் கொண்டு, அம்முகவரி உள்ள இடத்தை வழியில் விசாரித்து, ஓட்டுநரிடம் எப்படி செல்ல வேண்டும் என்று வழிநடத்துகின்றனர். அவர்கள் செல்லும் வீடு, முடிவில் ஓர் ஆசிரியையின் வீடாக இருக்கும். அங்கு பழரசம் அருந்தி வெற்றிகரமாகத் தங்கள் வேலை முடிந்த திருப்தியுடன் பள்ளி செல்கின்றனர்.