என் மேகம் ???

Showing posts with label கவியரங்கம். Show all posts
Showing posts with label கவியரங்கம். Show all posts

Sunday, July 27, 2025

நினைவு நல்லது வேண்டும் (ஆண்டு விழா கவியரங்கம்)

 

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம்-ஆண்டு விழா கவியரங்கம்



நினைவு நல்லது வேண்டும் 

----------------------------------------------

தமிழ்த் தாய்க்கு 

முதல் வணக்கம் 

நற்றமிழ் போற்ற

கூடி இருக்கும் அவையோர்க்கு

தமிழ் வணக்கம் 


இன்று தமிழ் அன்னை எனக்களித்த தலைப்பு 

மகாகவியின் நல் வரிகள் ...

'நினைவு நல்லது வேண்டும் ' 


நினைவு என்று எதைச் சொல்வீர்?


கடந்த காலத்தின் தடங்களா?

இக்கணத்தின் மனதின் துடிப்பா?

இல்லை

நாளைய பொழுதின் கனவா?


நினைவென்பது

நனவின் முத்திரைகளா?

அல்லது 

கனவின் சித்திரங்களா?


பாரதி கூறும் நினைவோ...

கனவுகளை மெய்ப்படுத்தும்...(2)


நினைவை

 சிந்தையில் நிறுத்தினால் அன்றோ

கனவுகள் நனவாகும்


 நிகழ்வுகள் நலமாக...

உலகம் உய்ய...

நினைவு நல்லது வேண்டும்


உயிரின் படைப்பில்..

உடலுக்கு உருவம் உண்டு 

மனதிற்கு வடிவம் இல்லை...


மனதை...நாம்

வடிவமைக்க வேண்டும் ...

சுயமாக சிந்தித்து 


செதுக்க வேண்டும் ...

சிந்தையில் 

எண்ணங்கள் நிலைக்க செய்து


எனவே...

வாழ்வை நிர்ணயிக்கும்...

மனதிற்கு வடிவம் இல்லை 


மனம் ஒன்று இல்லை எனில்

மனிதன் என்று சொல்வோமா?

குணம் அது திரிந்து விட்டால்

மனிதம் மறைந்து போகாதோ? 


உண்பது நாழி உடுப்பவை இரண்டே 

என்பதே வாழ்க்கை என்றானால்

தமிழில் திளைத்து மனமுருக

சங்கமம் இங்கே நடந்திடுமா? 


மிருகங்களுக்கும் மனமுண்டு

அவற்றுக்கென குணமுண்டு

மனிதனின் குணமென எதைச் சொல்வீர்?

தங்கக் கோட்டையில் வாழ்ந்தாலும் 

கள்ளமும் கயமையும் நிறைந்திருந்தால்

உதடுகள் மட்டும் புகழ் பாடும்

உள்ளம் அதையே நகையாடும்


மனிதம் தழைக்க உலகம் சிறக்க

நினைவு நல்லது வேண்டும் crescendo - 2


அல்லவை சொல்ல தேவையில்லை 

தரணி அறிய தானாக வலம்வரும்

நல்லவை சொல்வது அரிதென்றாலும்

காரிருள் சூழ்ந்தாலும்

ஒற்றை தாரகையாக வழிகாட்டும்


இருள் படர்கிறது என

இருளோடு உறைவீரோ?

மின்னும் நட்சத்திரத்தின்

ஒளித்துகளாய் ஒளிர்வீரோ?

ஒளித்துகளாக நினைத்தால் அன்றோ

கதிராக இருள் விலக்க

வழி தோன்றும் 


வாழ்வும் மிளிரும் உலகும் ஒளிரும்

நினைவு நல்லது வேண்டும்


உடலின் திண்மை ஊன் வளர்க்கும்

மனதின் திண்மை உயிர் வளர்க்கும்

நன்மை பயக்கும் செயலால் தான்

திண்மை என்பதே மேன்மையுறும்

செயல்கள் நலமாய் அமைந்திட

நினைவும் நலமாய் வேண்டும் 

உணர்ந்தே வரம் வேண்டினான் மகாகவி 

நினைவு நல்லது வேண்டும்  என...


எண்ணியது ஈடேற்றும்

நினைவென்பது...

காலத்தின் முகவரி

மனதின் முகம்

உயிரின் நாதம்

உடலின் மறைபொருள் 

வாழ்வின் நிலை 

இன்று கனவின் பிம்பம் 

அதுவே

நாளை நனவின் உருவம்..


எனவே நாளை

நாமும் நலம்பெற

உலகில் யாவும் நலம்பெற

நினைவு நல்லது வேண்டும் 


வாழ்வது ஒருமுறை தான்

அதில்

பாரதி சொன்ன

வேடிக்கை மனிதராக வீழ்ந்திட வேண்டாம் 

வழி காட்டும் 

துருவ நட்சத்திரமாக வாழ்ந்திட வேண்டும்(2)

அதற்கு

நமக்கும் வரம் வேண்டும் 

நினைவு நல்லது வேண்டும்


மகாகவியின் வரிகளைப் பகிர நல் வாய்ப்பளித்ததற்கு நன்றி. வணக்கம்


Saturday, October 19, 2024

சுழல் (ழகரக் கவியரங்கம்)

 


மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் - ழகரக் கவியரங்க கவிதைகள்


சுழல் (ழகரக் கவியரங்கம்)

--------------------------------------------

உலகமே சுழலும்

சுழல் அங்கு தொடங்கும்

உலகம் சுழலாது போனால்

உறைபனிதானே மிஞ்சும்

உலகம் உய்யத் தேவை சுழலே

சுழல் பற்றி படைத்தளிக்க வந்தேனே!

 

வற்றா நதியாம் தமிழ்

எழில்மிகு மொழியில்

சொற் சுழலில் தேடி

கவிதை கொணர்ந்தேனே

 

நாவைச் சுழலச் செய்யும்

சிறப்பு ழகரமே...

 உன் உச்சரிப்பு சுழலில்

என் நா பிறழாது

சுழல் பற்றி

உரைத்திட

விழைகிறேன்

 

உலகமே சுழலும்

சுழல் இங்கு தொடங்கும்

 

சுழலும் பூமியில்

சுழலும் வாழ்க்கையில்

எத்தனை சுழல்கள்?

 

 பிறப்பு இறப்பு

இன்பம் துன்பம்

வெற்றி தோல்வி

நிழல் அழல்

புகழ் இகழ்

நன்மை தீமை

எழல் விழல்

இவற்றின் சுழலன்றோ

வாழ்க்கை...

 

நீரின்றி அமையாது உலகு

சுழலின்றி நிலையாது நீர்

நீர் காற்றின் சுழல் வேண்டும்

மழைக்கு...

பருவங்களின் சுழல் வேண்டும்

மண்ணுயிரின் உய்வுக்கு

 

உலகமே சுழலும்

சுழல் அங்கு தொடரும்

உலகமே சுழலும்

சுழல் அங்கு தொடரும்

 

எதிர் விசைகளின்

சந்திப்பில் உண்டாகும்

அலைபாய விடும் ...

சுழல்

 

விசைகள் தேவை இல்லை

வாழ்வில் உழலும்

சுழல்களுக்கு

 

சுழல் காற்றின் இலைகளாக

உணர்விழைகளின் சுழல்

மனித மனம்

 

இதயங்களின் இழுப்பில்

மனங்களைச் சிறையிடும்

காதல் எனும் சுழல்

 

மழலையின் மிழற்றலில்

மயங்க வைக்கும்

அன்பு எனும் சுழல்

 

கோப தாபங்களால்

மனிதன் விழுவது

மருளெனும் சுழல்

 

பொன் மண் புகழ்

என உள்ளிழுக்கும்

ஆசை எனும் சுழல்

 

நாவின்‌ சுழலில்

 வன்சொல் சுட்டால்

மனமாகும் ஆழ் சுழல்

 

உலகமே சுழலும்

சுழல் அங்கு மயக்கும்

உலகமே சுழலும்

சுழல் அங்கு மயக்கும்

 

முதலும் இன்றி

முடிவும் இன்றி

இயங்கும் சுழல்

 

பேரண்டத்தில் நிலைக்க

அண்டங்கள் சுழலும்

அண்டத்தில் நிலைக்க

கோள்கள் சுழலும்

 

கோள்கள் சுழல

ரவியும் சுழலும்

ரவி சுழல

உயிர்கள் சுழலும்

ரவியோடு

நிழலும் சுழலும்

 

அன்பு சூழ் உலகம்

தாய்மையால் சுழலும்

 

அன்பு சூழ் உலகம்

தாய்மையால் சுழலும்

 

குழவியின் உலகம்

தாயிடம் சுழலும்

 

காற்று சுழல

குழலும் இசைக்கும்

 

தழல் சுழல

கருவிகள் உருவாகும்

 

குப்பை சுழல

இயற்கை உரமாகும்

விழலும் பசுமையாகும்

 

சுழல் விளக்கு

சுழன்று வழிகாட்டும்

சுழல் திட்டம்

அதிக வாய்ப்புகள் தரும்

சுழல் கோப்பை

மீண்டும் நம்பிக்கை ஊட்டும்

 

இறைவனின்

சங்கு சக்கரமென்றாலும்

மனிதனின்

வண்டி சக்கரமென்றாலும்

சக்கரத்தின் சுழலன்றோ

உலகை இயக்கும்

 

உலகமே சுழலும்

சுழல் அங்கு இயக்கும்...

உலகமே சுழலும்

சுழல் அங்கு இயக்கும்...

 

ஈசனின் கழலடி சுழல

தாண்டவம் உதித்தது

 

பாற்கடலில் மேரு சுழல

அமிழ்தம் கிடைத்தது..

அமிழ்தம் மட்டுமா...

ஆலகாலமும் உருவானது

 

வாழ்வில் உழல்கிறோம்

நாளும் சுழல்கிறோம்

நன்றும் தீதும் நம்முடனே..

மனதை அகழ்ந்து

 மனஞ்சுழல் விலக்கினால்

வாழ்க்கை அமிழ்தமே

மனஞ்சுழல் விலக்கினால்

வாழ்க்கை அமிழ்தமே

 

ஓடும் நீரில்

சிக்கும்வரை

தெரிவதில்லை

சுழலின் இருப்பு

 

இயற்கையின்

சுழல் நீரோ ..

சுழல் காற்றோ..

மீள்வது கடினம்

 

தட்டாமாலை சுற்றில்

சுழலின்

ஒருதுளி உணர்கிறோம்

 சட்டென மீள்கிறோம்

நிலை கொள்கிறோம்

 

வாழ்வின் சுழல்கள்

மாயச் சுழல்கள்

மனம் வைத்தால்

தட்டாமாலை சுற்றென

மீண்டு வரலாம்

 

உலகமே சுழலும்

சுழல் நம்மை செதுக்கும்

உலகமே சுழலும்

சுழல் நம்மை செதுக்கும்

 

நல்லதை நினைப்போம்

அல்லதைத் தவிர்ப்போம்

எண்ணச் சுழல்தனை

வண்ண மயமாக்குவோம்..

நம்..

எண்ணச் சுழல்தனை

வண்ண மயமாக்குவோம்..