என் மேகம் ???

Friday, December 5, 2008

பாட்டியின் நினைவுகள்


இன்று குழந்தைகளுக்கு சலிக்காமல் கதை கூறுகிறேன் என்றால் அது என் மாம்மையின் இன்ஸ்பிரேஷன் தான். அவர்கள் கூறியது என்னவோ நாலு கதைகள் தான் என்றாலும் திரும்பத் திரும்ப கேட்டாலும் திகட்டா இன்பம் உடைய கதைகள். "மாம்மை கதை சொல்லுங்க" என்றவுடன் "பிறந்த கதை சொல்லவா , வளர்ந்த கதை சொல்லவா" என்று ஆரம்பித்து சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமென்றாலும் கதை கூறுவார்கள்.

கடைசி வரை மண் அடுப்பில் மண் பாத்திரத்தில் அவர்கள் செய்யும் கத்தரிக்காய் புளிக்குழம்பின் ருசி இன்னும் நினைவு இருக்கிறது. காலையில் மொச்சை பயறு அவித்து வரும் பாட்டியிடம் எங்களுக்குத் தவறாது வாங்கி கொடுப்பார்கள். பின் எல்லோருக்கும் காலணா கொடுத்து, கடையில் ஏதாவது வாங்கிக் கொள்ளச் சொல்வார்கள். அவர்கள் முறுக்கு இடிக்க வைத்திருக்கும் (என்ன பெயர் அதற்கு... வெற்றிலை இடிப்பார்களே...), அவருக்குப் பின் பொருட்கள் யாருக்கு என சண்டை போடுவோம். ஆடி மாதம் ஆனால் , ஆடி விரதம் அனுஷ்டித்து, சிவகாசியில் இருந்து பஸ் பிடித்து கோவை வந்து விரத கொழுக்கட்டையைத் தரத் தவறியதே இல்லை.

சமீபத்தில் மாம்மையின் வீடு இருந்த பக்கம் , கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பின் சென்றிருந்தேன். முன்னர் ஊரில் பன்றிகளும் கழுதைகளும் நிறைய காணலாம். கட்டு ஒட்டுவதும், தீக்குச்சி அடுக்குவதும் வீதிக்கு வீதி இருக்கும். இப்பொழுது அவ்வளவாகக் கண்ணில் படவில்லை.மாம்மை வீட்டுத் திண்ணை அப்படியே இருந்தது. பல பக்கத்து வீடுகள் முன்பிருந்த அதே தோற்றத்துடன் இருந்தன. உள்ளே மாறி இருக்கலாம். சில சின்ன வீடுகள் நன்றாகக் கட்டப்பட்டிருந்தன. அங்கே கடவில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். இன்றும் அப்படியே மரத்தடியில் சின்ன மண்டபத்தில் இருந்தார். அதே போல் பிள்ளையார் மேலிருந்து விபூதி எடுத்து வைக்கும் பொழுது, சிறு பிள்ளைகளாக அந்த கடவுக்குள் நுழைந்து பிள்ளையாரை அடிக்கடி தொழுத நினைவுகள் இனிமையாக இருந்தன. சின்ன சின்ன விஷயங்கள் கூட மலரும் நினைவுகளாக மனதை மயக்குகின்றன.

13 comments:

நட்புடன் ஜமால் said...

நாந்தாங்கோ 1st

மிச்சம் படிச்சிட்டு வந்து ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

சின்ன சின்ன விஷயங்கள் கூட மலரும் நினைவுகளாக மனதை மயக்குகின்றன.

உண்மைதான்.
அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

நட்புடன் ஜமால் said...

\\கடைசி வரை மண் அடுப்பில் மண் பாத்திரத்தில் அவர்கள் செய்யும் கத்தரிக்காய் புளிக்குழம்பின் ருசி இன்னும் நினைவு இருக்கிறது\\


மண் பாத்திர சமையலே ஒரு சுவை தாங்க

இந்த காலத்து தங்கமணிகளுக்கு எங்க புரியுது. ஹும் ...

சந்தனமுல்லை said...

:-)

@ ஜமால்

//மண் பாத்திர சமையலே ஒரு சுவை தாங்க

இந்த காலத்து தங்கமணிகளுக்கு எங்க புரியுது. ஹும் ...//

அதானே..ரங்கமணிகள் செஞ்சுக் கொடுத்தாத் தானே தெரியும்!!

அமுதா said...

@முல்லை /*அதானே..ரங்கமணிகள் செஞ்சுக் கொடுத்தாத் தானே தெரியும்!!*/

அதானே....

தமிழ் அமுதன் said...

மண்பாண்ட சமையல் நல்லாத்தான் இருக்கும்

இப்போகூட வீட்டுல மீன் குழம்புன்னா

மண்சட்டி தான்!

அப்புறம் அந்த வெற்றிலை இடிக்கும் கருவி!!

வெற்றிலை ஏன் இடிக்கணும் பாக்குதான் இடிப்பாங்க!

சென்ஷி said...

அழகான நினைவுகள்..!

//அமுதா said...
@முல்லை /*அதானே..ரங்கமணிகள் செஞ்சுக் கொடுத்தாத் தானே தெரியும்!!*/

அதானே....
//

இதத்தான் அப்பவே பெரியவங்க சொல்லியிருக்காங்க..

சொந்த செலவில் சூனியமுன்னு :))

ஆயில்யன் said...

//அமுதா said...
@முல்லை /*அதானே..ரங்கமணிகள் செஞ்சுக் கொடுத்தாத் தானே தெரியும்!!*/

அதானே....

//

தங்கச்சி பாஸுங்களெல்லாம் ஒரே மாதிரி டெரராத்தான் திங்க் பண்றாங்க பாவம் அந்த அப்பாவிகள் :))))

ராமலக்ஷ்மி said...

//என் மாம்மையின் இன்ஸ்பிரேஷன் தான்.//

உண்மை அமுதா. அவர்கள் நமக்குப் பல விஷயங்களில் இன்ஸ்பிரேஷனாக இருந்திருப்பார்கள். இரு வருடங்களுக்கு முன் தனது 88 வயதில் காலமான் என் (அம்மாவின் அம்மா) ஆச்சியிடம் நான் கற்றுக் கொண்டவை ஏராளம்.

Anonymous said...

good, will be useful when u become paatti yourself.
Your grand children will be lucky.

தேவன் மாயம் said...

கடைசி வரை மண் அடுப்பில் மண் பாத்திரத்தில் அவர்கள் செய்யும் கத்தரிக்காய் புளிக்குழம்பின் ருசி இன்னும் நினைவு இருக்கிறது. அருமை நண்பரே!!!!!!பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள்!!!
தேவா.

சந்தனமுல்லை said...

பாட்டிகள்-ன்னாலே சுவாரசியம் தானே!

ரிதன்யா said...

அவர்கள் முறுக்கு இடிக்க வைத்திருக்கும் (என்ன பெயர் அதற்கு... வெற்றிலை இடிப்பார்களே...)

ஒள்ளு (அ) ஒல்லு என்பது ஞாபகம்