என் மேகம் ???

Wednesday, December 10, 2008

காகம் கடிகாரம் கத்தி

"காக்காக்கு சோறு வச்சிட்டு வா. நம்ம முன்னோர்கள் எல்லாம் வருவாங்களாம்", என்று அம்மா சொன்ன பொழுது வேடிக்கையாக இருந்தது. சரி காக்காக்கு இப்படியாவது உணவு கிடைக்குதே என்று வைப்பேன். ஆனால் இழப்புகளின் துயரம் உணர்ந்து, என்ன தான் நடக்கிறது என்ற கேள்விகள் எழும் பொழுது, இதையும் செய்வோம் என்று ஒரு பழக்கம் வந்துவிட்டது. சில நேரங்களில் உணவு வைத்துவிட்டு , இது தாத்தா, அது பாட்டி, அது மாமா என்று எண்ணும்பொழுது தோன்றும் , "இந்த பழக்கத்தினால தான் தினம் அவங்களை நினைக்கிறோம். இல்லைனா காலில் சக்கரத்தை கட்டி ஓடிட்டு நினைவு நாள் அன்னிக்கு மட்டும் நினைப்போம்".

அப்பா ஒரு சுவர்க் கடிகாரம் வச்சிருப்பார். பெண்டுலம் வச்ச கடிகாரம். இன்னி வரைக்கும் அதுக்கு சாவி கொடுத்து ஓட வச்சிட்டிருக்கார். அது மணி அடிக்கும் பொழுதெல்லாம் "மாம்ப்பா (அம்மாவின் அப்பா) மணி அடிக்கிறார்", என்பார். போட்டோவில் மட்டுமே பார்த்த மாம்ப்பா மிகவும் நெருங்கினாற் போல் தோன்றும்.

அம்மாகிட்ட ஒரு கத்தி இருக்கும். இப்ப அதுக்கு கால் நூற்றாண்டுக்கு மேல ஆச்சு. காய் நறுக்கும் பொழுது எல்லாம் "உங்க ஐயாப்பா (அப்பாவின் அப்பா) கொடுத்த கத்தி, எப்படி வச்சிருக்கேன் பார்", என்பார்கள். சமீபத்தில் தான் அது ரொம்ப கூர்மையாகி விட்டது. எனவே ஒரு ஓரமாக இன்னும் இருக்கிறது. முகம் பார்க்காத ஐயாப்பாவை நினைவுறுத்தும் கத்தி.


ஒரு பேனாவை எடுத்து எழுதிக் கொண்டிருந்தேன். "அம்மா இது ஐயாப்பா கொடுத்த பேனா" என்றாள் என் மகள். அவள் முகத்தில் ஏக்கம். அடிக்கடி பேனா தொலைக்கும் நான், அதை பத்திரமாக எடுத்து வைத்தேன், சமீபத்தில் எங்களைத் துயரத்தில் ஆழ்த்திச் சென்று விட்ட என் மாமனாரின் நினைவாக அவரது செல்ல பேத்திக்கு.

9 comments:

ஆயில்யன் said...

//இந்த பழக்கத்தினால தான் தினம் அவங்களை நினைக்கிறோம்//

நினைவுகளை சுமக்க வைக்கும் இது போன்ற சின்ன சின்ன செயல்கள்!

பரிசுப்பொருட்கள் என்றளவில் முக்கிய விசேஷங்களில் வீட்டார் கொடுக்கும் பொருட்கள் பிரிவிலும்,தனிமையிலும் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விசயங்கள்!

pudugaithendral said...

அருமையான நினைவுகூறல்கள்.

அனைவருக்குள்ளும் கொசுவத்தி சுத்த விட்டிருக்கும்.

பாராட்டுக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆழ்ந்த அனுதாபங்கள் உங்களின் மாமனாரின் மறைவுக்கு

உங்கள் நினைவு கூறல் பதிவும் அருமை.

விஷயமோ, பொருளோ அது சின்னதாக இருந்தாலும் அது உருவாக்குகிற எண்ணங்கள் ஆழமானவை. மறைவுக்குப் பின்னர் நினைவுகளே ஒரு பொக்கிஷம் தான்.

Muthu said...

நன்றி நிதிலன் என்ற பெயர் தந்ததற்கு.முதல் கட்ட தேர்வில் பாசாயிருக்கு :)

Dhiyana said...

//இந்த பழக்கத்தினால தான் தினம் அவங்களை நினைக்கிறோம். இல்லைனா காலில் சக்கரத்தை கட்டி ஓடிட்டு நினைவு நாள் அன்னிக்கு மட்டும் நினைப்போம்//

உண்மை அமுதா.

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு!

தமிழ் அமுதன் said...

நம் முன்னோர்கள் பயன் படுத்திய
பொருள்களை நாம் பயன் படுத்தும்
போது அவர்கள் நம்முடன் இருப்பதுபோல
ஒரு உணர்வு !!!

குடுகுடுப்பை said...

நல்லாருக்குங்க நினைவுப்பதிவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா சொன்னீங்கப்பா... பொருள்களின் மதிப்பு அவர்களின் பாசத்தினால் அதிகப்படுகிறது..