என் மேகம் ???

Wednesday, December 16, 2009

நண்டு வருது, நரி வருது...

குழந்தை பிறந்து வளரும் வரை ஒவ்வொரு வட்டாரத்திலும் சில பாடல்கள் உண்டு. கேட்க, பாட இனிமையான பாடல்கள் அவை. நான் கேட்ட சிலவற்றை இங்கு தொகுத்துள்ளேன். சில பாடல்கள் மருவி இருக்கலாம். தவறு இருந்தால் திருத்துங்கள். உங்களுக்குத் தெரிந்ததும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*********************
பெயர் வைக்கும்பொழுது முறத்தில் (சொளவு என்பது வழக்கு) சேலை, வேஷ்டி வைத்து, குழந்தையைக் கிடத்தி இலேசாகப் புடைப்பார்கள். அப்பொழுது பாடும் பாடல்

சொளவு நிறையத் தந்தவரே
உலகு நிறைய தா!!!
(இதை உழவு நிறைய என்றும் சொல்கிறார்கள். எது என்று எனக்குத் தெரியவில்லை)

************************
சின்னக் குழந்தையில் இருந்து அதன் இரு கைகளை நாடியில் குவித்து, பின்பு விரிக்கும் இவ்விளையாட்டிற்குப் பாடல்

சொட்டை , சொடக்கு
சோத்துப்பானை டொமக்கு...

ஒவ்வொரு சொல்லுக்கும் நாடியில் கையைக் குவித்து வைக்க வேண்டும். "டொமக்கு" என்று உரக்கக் கூறிக் கையை நாடியிலிருந்து எடுத்து விரிக்கும் பொழுது குழந்தை சிரிக்கும்.
************************

கைகளைப் பூவாகப் பாவித்து விரித்து, கையை ஆட்டிப் பாட, பின் நம்மோடு சேர்ந்து குழந்தையும் பூ போல் கையை விரித்து சிரிக்கும்

மாம்பூ மகிழம்பூ
மாமா கொடுத்த
மல்லிகைப்பூ

தாம்பூ தாழம்பூ
தாத்தா கொடுத்த
தாமரைப்பூ

***************************

பேச்சு சொல்லிக் கொடுக்கையில்

முதலில் அஃகு, அங்கு...

பின் அத்தை என்று சொல்லிக் கொடுக்க...இடது கையை விரித்து வலது கை ஆட்காடி விரலால் இடது கையின் நடுவில் குத்தி குத்தி...

அத்தத்த நெய்யூத்து
பிஞ்சு கத்தரிக்காயாம்
இன்னும் கொஞ்சம் ஊத்து

**********************

கொஞ்சம் வளர்ந்த பின், கையைப் பிடிக்க சொல்லும் பாட்டு:

மாக்கொழுக்கட்டை
மஞ்சள் கொழுக்கட்டை
மாமியார் பிடித்த
மண் கொழுக்கட்டை
பிள்ளையார் பிடித்த
பிடி கொழுக்கட்டை

இதில், நம் கைவிரல்களை மடக்கி ஒவ்வொரு வரிக்கும் குழந்தையின் கைகளில் வைக்க வேண்டும். கடைசி வரிக்கு நம் கையைப் பிடிக்கச் சொல்லிக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

***************************

மேலும் சில பாடல்கள்:
---------------------

பருப்பு கடை, பருப்பு கடை
இது சோறு, இது குழம்பு, இது கீரை, இது தயிர், இது பொரியல்
அம்மாக்கு கொஞ்சம், அப்பாக்கு கொஞ்சம்,
பாட்டிக்கு கொஞ்சம், தாத்தாக்கு கொஞ்சம்,
பாப்பாக்கு கொஞ்சம்

கழுவி கழுவி ஊத்து...
நண்டு வருது, நரி வருது...
நண்டு வருது, நரி வருது...
(கிச்சு கிச்சு மூட்டுதல்)


இந்த பாட்டுக்கு கற்பனை சேர்த்துட்டு சாய்ந்தாட வேண்டியதுதான்...
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
மணிவிளக்கே சாய்ந்தாடு
மாடப்புறாவே சாய்ந்தாடு


கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு

கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய் போடலாம் கைவீசு

எத்தனை அழகான பாடல்கள்? குழந்தைகளும் இரசிக்க நாமும் இரசிக்க வாழ்க்கையை சுவாரசியமாக்கும் அழகான பாடல்கள்.

11 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//குழந்தைகளும் இரசிக்க நாமும் இரசிக்க வாழ்க்கையை சுவாரசியமாக்கும் அழகான பாடல்கள்

//

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான பகிர்வு அமுதா

சாஞ்சாடம்மா சாஞ்சாடு சொல்லும்போது நாமும் ஆடுற மாதிரி ஒரு ஃபீல் வரும், அனுபவிச்சு இருக்கீங்களா ? :)

சந்தனமுல்லை said...

/சொளவு நிறையத் தந்தவரே
உலகு நிறைய தா!!!
(இதை உழவு நிறைய என்றும் சொல்கிறார்கள். எது என்று எனக்குத் தெரியவில்லை)/

இது இப்போதான் கேள்விபடறேன் அமுதா! இதுதான் அந்த ஆறரைக்கோடிக்கும் காரணமா?!! :-))

நல்ல இடுகை..

sathishsangkavi.blogspot.com said...

//மாம்பூ மகிழம்பூ
மாமா கொடுத்த
மல்லிகைப்பூ

தாம்பூ தாழம்பூ
தாத்தா கொடுத்த
தாமரைப்பூ//

//கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு

கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய் போடலாம் கைவீசு//

பழசெல்லாம் ஞாபகம் வந்துருச்சுங்க..........

சுந்தரா said...

சுவாரஸ்யமான பதிவு...

ஒரேயொரு பாடல் தவிர அத்தனையும் எனக்குப் புதுசுதான்.

பகிர்வுக்கு நன்றி அமுதா!

ராமலக்ஷ்மி said...

சின்ன வித்தியாசங்களுடன் இதில் பல பாடல்கள் பரிச்சயமே. அழகாய் சொல்லியிருக்கீங்க அமுதா.

பின்னோக்கி said...

எனக்கு கடைசி இரண்டு பாடல் மட்டுமே தெரிந்திருக்கிறது. உங்கள் ஊரை சேர்ந்த பாடல்களோ ?

Deepa said...

அழகான தொகுப்பு!
மாம்பூ மகிழம்பூ, கொழுக்கட்டை ஆகியவை புதிதாக அறிந்து கொண்டேன்.

உந்தி உந்திக் காசு, மம்முச்சூடம்மா மம்முச்சூடு என்று கூட இரண்டு சிறு பாடல்கள் உண்டு.

நட்புடன் ஜமால் said...

ஆஹா! இதை மீண்டும் ஞாபகமூட்டியதற்கு நன்றி.

ஹாஜருக்கு உபயோகிப்போம்.

-----------

சொளவு - எங்கூர்லையும் இந்த சொல் உண்டு

அ.மு.செய்யது said...

மீண்டும் குழந்தைப்பருவத்துக்கே இழுத்துச் சென்ற ரசனையான பதிவு அமுதா !!!

புன்னகையுடனே படித்து முடித்தேன் !!!

Good work !!!

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு