என் மேகம் ???

Thursday, April 7, 2011

தொலையாத அடையாளங்கள்

வீட்டில் நுழையும் பொழுதே யாருமின்றி ஃபேன் சுற்றிக்கொண்டிருந்தது. ஸ்விட்சைத் தொடும் பொழுதே “காத்தாடியை அமத்து” என்று பெரிப்பாவின் குரல் காற்றில் தவழ்ந்தாற்போல் இருந்தது.

பெரிம்மையின் பெயர் வைத்துதான் அவரை அழைப்போம்.. வயதில் மூத்தவர் என்பதால், அவரைப் பெயர் சொல்லி அழைக்க எவருமில்லை. போட்டோவில் பெயர் எழுதும் நாள் வரை அவர் பெயர் எனக்கு தெரியத்தான் இல்லை. வாழ்நாள் செல்ல செல்ல பல அடையாளங்கள் தொலைந்து தான் போகின்றன.... புது அடையாளங்கள் கிடைக்கின்றன என்றும் சொல்லிக் கொள்ளலாம். பெரிப்பாவின் அடையாளங்கள் அந்த வெள்ளை வெளேர் சட்டையும், வேட்டியும் என்று சொல்லலாமா? வேலைக்கு செல்லும் பொழுது குத்திக்கொள்ளும் அந்த தங்க நிற ப்ரூச்?

லீவ் என்றாலே பெரிம்மை வீடு தான். ஆட்டமும் பாட்டமுமாக... காலையில் எழுந்தவுடன் காரையில் இருந்து இறங்கி வர யோசிக்கதான் செய்வோம். காதைக் கொஞ்சம் தீட்டி அவர் கிளம்பும் ஓசைக்காகக் காத்திருப்போம். காலையில் எழுந்து “டொக் டொக்” என்று அவர் தண்ணீர் அடித்து, தொட்டி நிரப்பி, அவரது ஆடைகளைத் துவை துவை என்று துவைப்பதில் தான் அவரது காலைப்பொழுது. இந்த நேரத்தில் அந்த பக்கம் போனால் மாட்டினோம். “எலேய், தண்ணி அடி... என்ன டொக்கு டொக்குனு... சின்ன புள்ள தெம்பு வேணாமா... இத்தன நேரமா குளிப்ப...” என்று விடாத அதட்டல்கள். புத்திசாலியாகக் காரையில் வெயில் உறைத்தாலும் புரண்டு கிடப்போம். குளியலில் அதிகாலை முதல் இருப்பவர் இரண்டே நிமிடத்தில பழையதை உண்டுவிட்டு கிளம்பி விடுவார். அதன் பின் எங்கள் ராஜ்யம்.

மீண்டும் பெரியப்பாவின் ஆளுமை “காத்தாடியை அமத்து” என்று மதியம் கேட்கும். ஆளில்லாமல் காத்தாடி ஓடுவதைக் கண்டு அவர் அரட்டும் பொழுதே நாங்கள் கோடவுனுக்குள் எஸ்கேப். மதியம் சூடாக ஒரு சாப்பாடு சாப்பிட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டு கிளம்பினார் என்றால் நாங்கள் தூங்கிய பின் தான் வருவார். காத்தாடியின் சுற்றலுடன் கரண்ட் மீட்டரும் சுற்றும் என்பது அறியாத வய்து என்பதால் “காத்தாடியை அமத்து” தான் பெரிப்பாவை நாங்கள் கிண்டல் செய்வது. ஞாயிறு மட்டும் அவருக்கு லீவ். பிள்ளையார் கோயிலில் அவர் வாசம். பொங்கலுக்காக மட்டும் கோயிலை எட்டிப்பார்ப்போம். அன்று காத்தாடி குறைவாகத் தான் ஓடும்.

ஓடிவிட்டன வருடங்கள் காத்தாடி சுற்றும் வேகத்தை விட வேகமாக. ” “அம்மா , எவ்ளோ அழகா வரைஞ்சிருக்காங்க என்ன செய்வாங்க?”. “காலண்டர்ல போடுவாங்க... உங்க பெரிப்பா இப்படிதான் வரைவார்”. ”என்ன பெரிப்பா ஆர்ட்டிஸ்டா!!!”...

”காத்தாடியை அமத்து” என்றவர் “காத்தாடியைப் போடு” என்று அலுப்புகளோடு சாய்ந்து மறைந்தும் விட்டார். அவரது தொழிலுக்கான எந்த அடையாளங்களும் வீட்டில் பார்த்ததில்லை. இன்றும் ஒவ்வொரு முறை ஆளின்றி ஃபேனை நிறுத்தும் பொழுதும் தவறாது ஒலிக்கிறது “காத்தாடியை அமத்து” என்று...

5 comments:

Chitra said...

இன்றும் ஒவ்வொரு முறை ஆளின்றி ஃபேனை நிறுத்தும் பொழுதும் தவறாது ஒலிக்கிறது “காத்தாடியை அமத்து” என்று..


...... touching!

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு அமுதா. பெரியம்மாவின் அன்பான அதட்டலும், பெரியப்பாவின் குரலும் எங்களுக்கும் கேட்பது போன்றதொரு பிரமை.

தொலையாத அடையாளங்கள் இப்படி நிறைய உண்டு.

middleclassmadhavi said...

முத்திரை பதித்த பெரியவர்கள்... நல்ல பதிவு!

ஹுஸைனம்மா said...

//ஓடிவிட்டன வருடங்கள் காத்தாடி சுற்றும் வேகத்தை விட வேகமாக.//

ம்.. அப்படித்தான் நாட்கள் ஓடுகின்றன, காயத்துக்கு மருந்தாக..

Unknown said...

Amutha you are great thank u for our father's ninaivugal thank u thank u ....