என் மேகம் ???

Saturday, December 24, 2011

அதீதத்தில் “மழை”

சென்னையில் மழை பொழிந்ததொரு பொழுதில் எழுதியது தான் இப்பொழுது அதீதம் டிசம்பர் 11, 2011 இதழில் வெளிவந்துள்ளது.

மழை
---------
குழந்தையின் கேள்விகளாக
ஓயாது பொழிகிறது

மண்வாசனை போல்
நினைவுகளைக் கிளறும்

அடித்து வரும் குப்பைகளாக
வலிகளையும் அள்ளிவரும்

துடைக்கப்பட்ட முற்றமாக
அமைதியும் தந்து செல்லும்

முத்தென்று ஆர்ப்பரிப்பாள்
விண்மகள்

மரகதமென்று பூத்திருப்பாள்
மண்மகள்

Monday, November 21, 2011

தி குட் விட்ச்

உறவினர் வீட்டில் குழந்தையைக் காணச் சென்றிருந்தோம். குழந்தைக்குப் பெயர் வைப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். “ட, டு, டி” என்று தொடங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து மற்றொரு வீட்டிற்குச் சென்றோம். கோழிக் குஞ்சு இருந்தது. அதன் பெயர் கேட்டாள். “பெயர் வைக்கவில்லை... நீயே சொல்லு” என்றார்கள். "அம்மா கோழிக்குஞ்சுக்கு பெயர் வைக்கணும், “கோ”னு ஆரம்பிக்கிற பெயர் சொல்லு" என்றாள் :-)


----------------------------------------------------
குழந்தைகள் தினம்... வந்துவிட்டது மாறுவேடப் போட்டி...
”அம்மா, நான் princess இல்லைனா fairy”
“எல்லாரும் அதானே போடுவாங்க, ஏதாவது வித்யாசமா போடேன்...”
ம்ஹூம், எதற்கும் உடன்படவில்லை... அழகான டிரஸ் வேண்டும்... என்பது தான் விஷயம். சரி, பரிசு என்பது விட இஷ்டப்பட்டதஒ போடட்டும் என்றாலும் princess/fairy இல்லாமல் அவளுக்கு பிடிப்பது போல் என்று யோசித்தேன். witch வேஷம் போடுவோமா.... நீ நல்ல witch-ஆ இரு ; மேஜிக் பண்ணுவோம் என்றேன். மேஜிக் வேலை செய்தது. என் கணக்கு, ஒரு நாள் சமாளித்துவிட்டால் மறுநாள் கடைக்கு சென்று அவளுக்கு பிடித்தாற் போல் ஏதாவது ஒன்றை வாடகைக்கு எடுத்து மேடமை சமாளிக்கலாம் என்பது தான். ஆனால் மேடம், “யாழினி, தி குட் விட்ச்” என்று மிஸ்ஸிடம் பெயர் கொடுத்துவிட்டு வந்து, பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று என்னிடம் உத்தரவிட்டு விட்டார்கள்.

நான் எண்ணியது போலவே கடையில் “விட்சா? அப்படீனா?” என்று கேட்டார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். மேடமிடம் அவங்க பிறந்த நாளுக்கு வாங்கின டிரஸ் ஒண்ணு அழகா, ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கும். அதைப் போட முடிவு செஞ்சோம். விட்ச் பறக்க ஒரு விளக்குமாறு வாங்கினோம். சின்ன மந்திர கோல் கையில் கொடுத்தாச்சு. இப்ப பாக்கி, தலையில் தொப்பியும், மேஜிக்கும்.... சாக்லேட் & பூக்கள் வேண்டும் என்று requirements ரெடி... ப்ராஜெக்ட் என் கையில்...

விட்ச் தொப்பியாக உருமாற ஏற்றதாக வீட்டில் ஒரு தொப்பி இருந்தது. அதற்கு, டிரஸுக்கு மேட்சாக பிட் துணி வாங்கி தொப்பியில் ஒட்டி, கூரான வடிவில் உச்சியிலும் தைத்து ஒரு பூவும் (குட் விட்ச் இல்லையா?) வைத்து விட்டேன். தொப்பியில் நாலு சாக்லேட், இரண்டு ரோஜா போட்டு சார்ட் பேப்பரால் தைத்து விட்டேன். இனி “அப்ராகடப்ரா..” என்று சொல்லி கையைத் தொப்பியில் விட்டு நைசாக சார்ட்டைக் கிழித்தால் கையில் சாக்லேட் அண்ட் பூக்கள்... அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. “I am a witch, as you think me not bad witch. I use magic for good things..." என்று வசனம் பேசி மேஜிக் செய்யத் தயாராகிவிட்டாள்.


அம்மா, சாக்லேட் எல்லாம் கொடுத்தால் எனக்கு தான் ப்ரைஸ், என்று மேடம் விளக்குமாறுடன் பறக்க ஆரம்பித்தார்கள். எனக்கு சற்றே பயம். பரிசு கிடைக்காவிட்டால்... எதற்கு தான் போட்டி வைத்து சிறிசுகளை ஏமாறச் செய்ய வேண்டுமோ? “பாப்பா ப்ரைஸ் கிடைகாட்டா...” அவளைத் தோல்விக்கு தயார் செய்யும் நோக்கத்துடன் நான் கேட்க, அவளோ, “கிடைகாட்டா என்னம்மா? ஜாலியா பார்டிசிப்பேட் பண்ணேன்னு நினைச்சுக்குவேன்” என்றாள். அள்ளி அணைத்துக் கொண்டேன்.

மேடம் மூன்றாம் பரிசுடன் வந்தார்கள். மற்றவர்கள் போட்ட பல வேடங்கள் பற்றி சொன்ன பொழுது, சும்மா மாறுவேடப் போட்டி வைத்து எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்திருந்தால் பரிசு கிடைக்காது எந்த குழந்தையும் ஏமாறி இருக்காது என்று தோன்றியது.

ஆனால் விட்ச் கதை இங்க முடியல... மேடம் ஆண்டு விழா பாட்டுக்கு இருந்தாங்களாம். ஆனால் பாட்டு சரியா வரலைனு வேண்டாம்னுட்டாங்களாம். அப்ப இன்னொரு மிஸ், “நீ தான் விட்ச் வேஷம் போட்ட... என் நாடகத்தில நீ தான் விட்ச்...” அப்படீனு வாய்ப்பு கொடுத்துட்டாங்க... “பார்த்தியா ... பாட்டுல இல்லைங்கறதால தான் நீ இப்ப நாடக்த்தில...” அப்படீனு பெரியவங்க சின்னவங்களை தேத்தறது... அட அட!!!!

Wednesday, November 16, 2011

அதீதத்தில் என் கவிதை

ஆக்ரமிப்பு
---------

குறுக்கு சாலை
கடக்கும் வாகனங்கள்
கடத்திச் செல்கின்றன
குழந்தைகளின்
தெருவிளையாட்டுக்களை...


இரவும் பகலும்
ஓயாமல் பேசும்
தொலைக்காட்சி பெட்டிகள்
பறித்துக் கொள்கின்றன
பாட்டியின் கதை நேரத்தை...

பலூன் சுடுதலும்
இராட்டினங்களும்
சுருக்கி விடுகின்றன
மழலைப் பாதங்களுடன்
அலைகளின் விளையாட்டை...


அதீதம் நவம்பர் 14 2011 இதழில் வெளிவந்துள்ளது இக்கவிதை.

என் கவிதை ஒன்று முதன்முறையாக மின்னிதழில் வெளியிடப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி.

Sunday, October 2, 2011

நிழற்பட பயணம்

அந்த சுவற்றில்
துவங்கியது
அவன் நிழற்பட பயணம்...

தவழ்ந்து சிரித்து
பெற்றோர் அணைத்து
தங்கை கைபிடித்து
தம்பி தோள் சேர்த்து
நட்புடன் கைகோர்த்து
மனைவியுடன் இணைந்து...

வாரிசின் புன்னகையுடன்
சற்றே நின்றது
அவன் நிழற்பட பயணம்
அந்த சுவற்றில்...

மீண்டும் குடியேற
தேவைப்பட்டது
அவன் நிழற்படத்துக்கு
மாலை ஒன்று...

Tuesday, September 20, 2011

வாசமான நினைவுகள்

போன மாசம் ஊருக்குப் போயிருந்தேன். உதிரிப்பூ வாங்கி 5 முழம் கட்டினவுடன் நினைவலைகளில் மூழ்கிட்டேன்.

சின்ன வயசில எங்க வீடோ சொந்தக்காரங்க வீடோ எங்க போனாலும் , உதிரிப்பூ வாங்கி பூக்கட்டுறது ஒரு தினப்படி வேலை. மூணு மணி போல பூக்காரங்க வருவாங்க. ”உதிரிப்பூ” நு கூவி தான் பூவே விப்பாங்க. பூவை வாங்கி , அதோட நாரும் வாங்கி , அந்த நாரைக் கொஞ்ச நேரம் தண்ணில ஊறப்போட்டு வைப்பாங்க. அனேகமா ஸ்கூல் முடிஞ்சு வர்ற நேரம் பாதி பூ கட்டி இருக்கும். வந்த உடனே பூவை ரெண்டாவோ மூணாவோ எடுத்து வைப்போம். அது தான் பூ கட்ட கத்துக்க ஆரம்ப பயிற்சி. அப்புறம் காய் பூ எல்லாம் கொடுத்து கால்ல நூல் பிடிச்சு பூ கட்ட சொல்லி கொடுப்பாங்க. நடுவில ஊசி வச்சு பூ கோர்க்கலாம். அதுதான் ரொம்ப ஈசி. இது ரெண்டு டெக்னிக்கிலுமே கட்டினால் , சரத்தை நடுவில வெட்ட முடியாது. அப்புறம் கொஞ்சமா பெரியவங்க மனசு இறங்கி பூ கட்ட சொல்லிக் கொடுப்பாங்க. பிச்சி, கனகாம்பரம் தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ். குட்டை காம்புங்கறதால் மல்லி தான் லாஸ்ட் சாய்ஸ். அதுவும் முதல்ல காய் பூவும் , வாடின பூவும் வச்சி தான் பழகச் செய்வாங்க... பூ கட்ட பெரும்பாலும் நார் தான்... அதுவும் நல்ல நாரா பூக்காரங்ககிட்ட பார்த்து வாங்கணும். நாரை ஊக்கு வச்சு மெல்லிசா பிரிக்கணும். சோத்து நார்னா முழுசா பிரிக்க வராது.. அப்படியே பிரிஞ்சாலும் கட்டும்போது வெட்டிட்டு போயிடும். ஓரொரு பூவா வச்சு கட்டி, அப்புறம் இரண்டு மூணுனு வச்சு கட்டி, அப்புறம் யார் நீளமா கட்டறாங்கனு போட்டி... எல்லாம் ஒரு ஜாலி தான். அப்புறம் இன்னும் டெக்க்னிக்ஸ்னு சரத்துக்கு நடுவுல நார்ல சங்கிலி பாட்டர்ன் வர்ற மாதிரி, மாலை மாதிரினு யார்ட்ட இருந்தாவது ஏதாவது கத்துக்குவோம். இப்பல்லாம் உதிரிப்பூ கொண்டு வர்ற மாதிரி தெரியலை...சரம்தான்... பூச்சரம் எல்லாம் நூல்ல தான்... அதுவும் சென்னைல வாங்கினால் தடி நூல்ல தள்ளி தள்ளி கட்டி இருக்கும், முழம் கணக்கு. மதுரை பக்கமெல்லாம் எண்ணிக்கை கணக்கு... 100 , 50னு ஆனால் நல்ல நெருக்கமா இருக்கும் . கோவை பக்கம் முழம் கணக்குனாலும் ஓரளவுக்கு பூ நெருக்கமா தான் இருக்கும்.

இன்னொரு வாசமான நினைவு மருதாணி. மருதாணியைப் பறிச்சு அம்மில அரைச்சு, கைக்கு நடுவில் பெரிய வட்டம், அப்புறம் சின்ன சின்ன வட்டம், அப்புறம் விரல்ல குப்பி குப்பியா வச்சுட்டு படுத்தால், காலைல படுக்கையெல்லாம் விழுந்து கிடக்கும். அந்த மருதாணி கை வாசமே தனி. யாருக்கு சிவப்பா பிடிச்சிருக்குனு போட்டி வேற. அப்புறம் கலர் மங்கி, விரல் நகத்தில மட்டும் குட்டி குட்டி ஆரஞ்சு நிலவா இருந்து அப்புறம் நகத்தை வெறிச்சுனு ஆக்கிட்டு மறைஞ்சு போயிடும். இந்த மருதாணி பறிக்க, யார் வீட்ல இலை இருக்குனு தேடுவோம். அதுவும் முள் இருக்கிற மருதாணிதான் நல்லா பிடிக்கும். மிக்ஸி இருந்தாலும் அம்மில அரைச்சா தான் அம்மாவுக்கு திருப்தி. அப்புறம் வடநாட்டு ஸ்டைல் க்ரேஸ் ஆரம்பிச்சுது. ப்யூட்டி பார்லர்க்கு போகணும் கை நிறைச்சு டிசைன் போட... எனக்கு என் கல்யாணத்துக்கு போடணும்னு ஆசை. 500 ரூபா இதுக்கா செலவழிக்கணும்னு ஆசை எல்லாம் தூக்கிப் போட்டுட்டேன். அப்புறம் ப்யூட்டி பார்லர் பெருக பெருக மெகந்தி போடற விலையும் குறைஞ்சிடுச்சு. இப்ப தி.நகர் போனால் 50 ரூபாய்க்கு கை நிறைய போடறான்...என்ன கொஞ்சம் கெமிக்கல் வாசம் வீசி அந்த மருதாணியோட வாசத்தை மனசுக்குள்ள கொண்டு வருது....

இன்னொரு அழகான நினைவு கோலம். அம்மாவுக்கு தினம் சாணி கரைச்சு, வாசல் தெளிச்சு கோலம் போடற பழக்கம் உண்டு. மார்கழி மாசம் வாசல் அடைக்க கோலம், பொங்கலுக்கு விடிய விடிய தெரு அடைக்க கோலம். கைல சின்ன சின்ன பார்டர் போடறது போய், கோல மாவு அடைச்சு குழலை உருட்டினால் பார்டர் வந்தது. விசேஷ நாள்னா மாக்கோலம். பச்சரிசி ஊற வச்சு, அரைச்சு, அதில துணி போட்டு, அழகா கோலம் போட்டு, செம்மண் கரை கட்டினால், கலர் கோலம் கூட கொஞ்சம் டல்லாயிடும். அப்புறம் மாக்கோலத்துக்கு பதிலா பெயிண்ட், ப்ளாஸ்டிக் அட்டைனு வந்துடுச்சி. கோலம் கத்துக்கவும் பூ கட்டற மாதிரி பல படி உண்டு. முதல்ல ரெண்டு புள்ளி கோலம், அப்புறம் மூணு புள்ளி கோலம், அப்புறம் அஞ்சு புள்ளி சாக்லேட் கோலம், ஆறு புள்ளி விளக்கு/பூ கோலம்... இங்கே நேர் புள்ளி , இடை புள்ளி ஆரம்பிக்கும் , அப்படியே கோட்டு கோலமெல்லாம் கத்துக்குவோம். நெளி கோலமும் இதே மாதிரி சின்னதில இருந்து தொடங்கும். மங்கையர் மலர்லயும், மங்கைல இருந்தும் அம்மா காப்பி பண்ண நீளமான குண்டு நோட்டு இன்னும் கண்ணுல நிக்குது. வீடு மாற மாற, அதுவும் காணாமல் போயிடுச்சு. நினைவில இருக்கிற நாலு கோலத்தை என்னிக்காவது நினைச்சா வாசல்ல போடுவேன் மாக்கோல வாசத்தை நினைச்சுகிட்டே...

Thursday, August 18, 2011

காலம்

வீதியெங்கும் பூத்திருக்கிறது
காலம்...

காலம் காலமாக இருக்கும்
கல்லும் மண்ணுமாக...

பல காலமாக இருக்கும்
நிழல் தரும் மரங்களாக...

சில காலமாக இருக்கும்
சிறிய பெரிய வீடுகளாக...

சமீபத்தில் தோன்றி
பூத்துக் குலுங்கும் செடிகளாக...

கணம் கணமாகக்
கடந்து செல்கிறேன்

உறையப் போகும்
கணம் நோக்கி...

Tuesday, August 2, 2011

இருக்குமா?

நினைவுகளின் வண்ணங்களைப்
பூசிச் சென்றது
வண்ணத்துப் பூச்சி ஒன்று

பால்யத்தின் சுவடுகளைப்
பாதுகாத்து இருக்குமா
புளியமரத்து நிழல்?

பதின்மத்தின் பதிவுகள்
பத்திரமாக இருக்குமா
பூந்தோட்டத்தில்?

இளமையின் துள்ளல்கள்
இன்றும் இருக்குமா
பச்சை புல்வெளியில்?

வாழ்வின் சாட்சியாக
வாழ்ந்திருக்குமா?
காலத்தின் மாற்றங்களில்
புதைந்து இருக்குமா?

Wednesday, July 27, 2011

தமிழ் படும் பாடு

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தால் பல சுவாரசியங்கள் நிகழும். கணக்கில் கூட்டல் கழித்தல் சொல்லிவிடலாம், ஆனால் தமிழில் என்ன ல்,ர,ன என்று மட்டுமா... அ ஆ இ ஈ....சொல்லிக் கொடுப்பதற்குள்.... அம்மம்மா....

க்+உ என்ன...
”கு ”
வெரிகுட்...”மாடு” --- எதுல முடியுது....
“உ”
வாவ் சூப்பர். பத்து ---- எதுல முடியுது .... “எ”
அடடா.... பத்தூஉ ... சொல்லு...எப்படி...
ஊ....
ம் அப்படி தான்... எதுல முடியுது...”எ”
”எ” எழுது...
“அ”

அடுத்து “எ” எது “அ” எது என்ற பாடத்தில் நமக்கு “உ” மறந்து போனதோடு... ”அ” “எ” மாற்றிவிட்டார்களோ என்ற சந்தேகமும் வந்துவிடும்.

நாய் எழுது
“நாய்”
சூப்பர்... தாய் எழுது...
“த இ”
“இ... முதல்ல தானே வரும்”
“த ஈ”
“ஈ இங்க வராதுமா.... முதல்ல தான் வரும்...எழுது..”
“ஈத”
இங்க பாருடா... இந்த “ய்” தான் நடுவில், கடைசில வரும்... “இ” “ஈ’ எல்லாம் முதல்ல வரும்...ஓ.கே...எழுது
“தாய்”
அம்மாடி....”இரண்டு” எழுது
“யிரந்து”

தமிழ் பாடம் போதும்... தாய் எழுதினது போதாதா இந்த தாய்க்கு...

சின்னவங்க இந்த கூத்துனால்... பெரிய்வங்க வந்து தமிழ் சொல்லிக் கொடுப்பாங்க... அவங்ககிட்ட...

முதல்ல நான் சொல்றதை நீ படி... அப்புறம் சொல்லிக் கொடுக்கலாம்.
சரிம்மா...
இதை படி
“நதியின்...”
“நதினா என்ன?”
ரிவர்
ம்... படி
“பிலையன்று...”
பிலையில்லை... பிழை....
எனக்கு “ள” வராது...
அதென்ன வராது... கவனி.. நாக்கை இங்க வச்சா... ல, அப்புறம் ள...அப்புறம்...
போம்மா... நான் இங்கிலீஷே படிச்சுக்கிறேன்.
தப்பு... தாய்மொழி தெரியாமல் இருக்கலாமா...
எனக்கு தான் பேசத் தெரியுமே
இல்லைடா...(சாரி ரெண்டு பேருமே எஸ்கேப் ஆனதால்... அன்னிக்கு தமிழ் எஸ்கேப் ஆச்சு)

”அ” ”உ” “எ” இடம் மாற
”ல” “ள” “ழ” தடம் மாற
“ன” “ண” “ந” தடுமாற
மழலையிடம்
தமிழ் தவிக்கிறதா?
தமிழிடம்
மழலை தவிக்கிறதா?

Wednesday, June 15, 2011

தொலையும் சில மணித்துளிகள்....

தோழியுடன் அளவளாவும்
வேளையில்
குடும்பப் பொறுப்பொன்று...

பிள்ளைக்கு அமுதூட்டும்
நேரத்தில்
அலுவலகப் பணியொன்று...

குடும்பத்துடன் இருக்கும்
நாளொன்றில்
எதிர்பாரா நிகழ்வொன்று...

சோம்பலை இரசிக்கும்
விடுமுறையில்
வீட்டுப் பொறுப்பொன்று...

தொலைந்து கொண்டே
இருக்கும்
சில மணித்துளிகள்...

தேடிக் கொண்டே
இருக்கிறேன்
தொலைந்து கொண்டே...

Tuesday, June 7, 2011

பலூன் வாழ்க்கை

காற்றால் நிரம்பிய
பலூன் ஒன்று
காற்றால் இழுக்கப்பட்டு
கைநழுவிச் செல்லும்

கண்கள் நிரம்பிட
தானே அடங்கும்வரை
அடம் தொடங்கும்
குழந்தையிடம்

காற்று காலமாக
பலூன் வாழ்க்கையாக
குழந்தை...
மனிதன் ஆனது

Sunday, May 29, 2011

என்ன லாஜிக்கோ?

வழியெங்கும் அம்மா படத்தைப் பார்த்தவுடன் குட்டிப்பெண்ணிற்கு சந்தேகம், “பழைய சீப் மினிஸ்டர் என்ன செய்வாங்க?”. அவங்க வீட்ல் இருப்பாங்க என்று சொல்லிவிட்டு,” நீயும் அக்காவும் சண்டை போடற மாதிரி அவர் கட்டின ஆபீசுக்கு இவங்க வரமாட்டேனுட்டாங்க. கோடிக்கணக்குல பணம் வேஸ்ட்” என்றோம். ”அய்யோ இவ்ளோ பணம் வேஸ்ட் பண்ணிணால் அப்புறம் அவங்களால எதுவும் வாங்க முடியாது” என்றாள். அப்புறம் டாக்ஸ் பற்றி நாங்க அவளுக்கு சொல்லி ஒரு ஒரு மணி நேரம் கேள்வி பதில் தான். பிடிக்குதோ பிடிக்கலயோ புது ஆபீசுக்கு போய் வேலை பாக்க வேண்டியது தானே என்று முடித்தாள்.

**********************************************************************

பாப்பா ஸ்கூல்ல இங்கிலீஷ்ல் பேசுவீங்களா தமிழ்ல பேசுவீங்களா என்றோம். “டமில் நாட்” என்றாள்

***********************************************************************


காரில் பின்சீட்டில் தான் பயணம் செய்வாள் குட்டிப் பெண். ஏன் என்று கேட்டதில்லை. அவள் மாமாவுடன் தனியாக சென்றாள். முன்சீட்டில் உட்காரச் சொன்னதற்கு மறுத்து விட்டாள். ஆக்ஸிடண்ட் ஆனால் முன்சீட்டில் இருந்தால் கதவைத் திறக்க முடியாதாம். பின் சீட் என்றால் திறக்கலாமாம். என்ன லாஜிக்கோ? இப்ப ஆக்ஸிடண்ட் ஆனால் என்ன செய்ய என்று கேட்டதற்கு, போன் பண்ணி எங்கம்மாவை வரச் சொல்லி என்னை விட்டுடுங்க, நீங்க காரை சர்வீஸ் பண்ணிட்டு எடுத்துட்டு வாங்க என்றாளாம்.

************************************************************************

Wednesday, May 18, 2011

ட்வீட்ஸ்

கதையை விட சுவாரஸ்யமானது குழந்தை கதை கேட்கும் அழகும் , கேள்விகளும்....

நிலவைப் பிடிக்கத் துடித்து ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் முடிவில் ஓய்வதென்னவோ மண்ணின் மடியில் தான்

நிழலை நிஜம் என்று எண்ணினால் மூன்றாம் பரிமாணம் இருப்பதே தெரியாது.

துறுதுறுவென சுற்றும் குழந்தையின் காலடியில் அலைகள் கூட ஓய்ந்து போகின்றன

காற்று கூட இல்லாத தனிமை கோடை காலத்து இரவுகளில் நிச்சயம் கிடைக்கும் #அக்னி நட்சத்திரம்

”லட்சம்” சாதாரணமானது, பின் ”கோடி” பின் , “லட்சம் கோடி” .. #ஆத்திகமோ நாத்திகமோ இந்த விஷயத்தில் நல்ல ஒற்றுமை....

”சார் தந்தி” என்ற முன்னெச்சரிக்கை, தொலைபேசியில் வரும் மரணச் செய்தியில் இருப்பதில்லை

புதிதாய் வரும் உறவுகள் மனதின் இளமையை உணரச் செய்கின்றன... பழைய உறவுகளின் பிரிவு முதுமை நோக்கிய் பயணத்தை உணரச் செய்கின்றன

காலம் செல்ல செல்ல அடையாளங்கள் தொலைந்து தான் போகின்றன.... புது அடையாளங்கள் கிடைக்கின்றன என்றும் சொல்லிக் கொள்ளலாம்

அறிவியலுடன் முட்டிக் கொண்டிருந்த குட்டிப்பெண்ணிடம் “நைட் ஏன் வருது?’ “மூன் வர்றதால...” #எல்லாமே இப்படி சிம்பிளாக இருந்தால் நன்றாக இருக்கும்

காலம் காலமாக ஓயாமல் ஆர்ப்பரிக்கும் இந்த கடல் அலைகள் என்ன தான் சொல்ல வருகின்றன?

நிலவின் ஒளியை மறைக்க முயலும் மேகமும் ஒளிர்கிறது நிலவின் ஒளியில்...

நிம்மதியான வாழ்க்கையை ஒரு நொடியில் தலைகீழாக மாற்றும் வலிமை இயற்கைக்கும் உண்டு மனிதர்க்கும் உண்டு

விரிந்தே கிடக்கிறது வானம் எல்லோருக்கும்... நினைத்தால் அருகிலும் இல்லையென்றால் தொலைவாகவும்... வாழ்வின் தத்துவம் போல்...

Thursday, April 7, 2011

தொலையாத அடையாளங்கள்

வீட்டில் நுழையும் பொழுதே யாருமின்றி ஃபேன் சுற்றிக்கொண்டிருந்தது. ஸ்விட்சைத் தொடும் பொழுதே “காத்தாடியை அமத்து” என்று பெரிப்பாவின் குரல் காற்றில் தவழ்ந்தாற்போல் இருந்தது.

பெரிம்மையின் பெயர் வைத்துதான் அவரை அழைப்போம்.. வயதில் மூத்தவர் என்பதால், அவரைப் பெயர் சொல்லி அழைக்க எவருமில்லை. போட்டோவில் பெயர் எழுதும் நாள் வரை அவர் பெயர் எனக்கு தெரியத்தான் இல்லை. வாழ்நாள் செல்ல செல்ல பல அடையாளங்கள் தொலைந்து தான் போகின்றன.... புது அடையாளங்கள் கிடைக்கின்றன என்றும் சொல்லிக் கொள்ளலாம். பெரிப்பாவின் அடையாளங்கள் அந்த வெள்ளை வெளேர் சட்டையும், வேட்டியும் என்று சொல்லலாமா? வேலைக்கு செல்லும் பொழுது குத்திக்கொள்ளும் அந்த தங்க நிற ப்ரூச்?

லீவ் என்றாலே பெரிம்மை வீடு தான். ஆட்டமும் பாட்டமுமாக... காலையில் எழுந்தவுடன் காரையில் இருந்து இறங்கி வர யோசிக்கதான் செய்வோம். காதைக் கொஞ்சம் தீட்டி அவர் கிளம்பும் ஓசைக்காகக் காத்திருப்போம். காலையில் எழுந்து “டொக் டொக்” என்று அவர் தண்ணீர் அடித்து, தொட்டி நிரப்பி, அவரது ஆடைகளைத் துவை துவை என்று துவைப்பதில் தான் அவரது காலைப்பொழுது. இந்த நேரத்தில் அந்த பக்கம் போனால் மாட்டினோம். “எலேய், தண்ணி அடி... என்ன டொக்கு டொக்குனு... சின்ன புள்ள தெம்பு வேணாமா... இத்தன நேரமா குளிப்ப...” என்று விடாத அதட்டல்கள். புத்திசாலியாகக் காரையில் வெயில் உறைத்தாலும் புரண்டு கிடப்போம். குளியலில் அதிகாலை முதல் இருப்பவர் இரண்டே நிமிடத்தில பழையதை உண்டுவிட்டு கிளம்பி விடுவார். அதன் பின் எங்கள் ராஜ்யம்.

மீண்டும் பெரியப்பாவின் ஆளுமை “காத்தாடியை அமத்து” என்று மதியம் கேட்கும். ஆளில்லாமல் காத்தாடி ஓடுவதைக் கண்டு அவர் அரட்டும் பொழுதே நாங்கள் கோடவுனுக்குள் எஸ்கேப். மதியம் சூடாக ஒரு சாப்பாடு சாப்பிட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டு கிளம்பினார் என்றால் நாங்கள் தூங்கிய பின் தான் வருவார். காத்தாடியின் சுற்றலுடன் கரண்ட் மீட்டரும் சுற்றும் என்பது அறியாத வய்து என்பதால் “காத்தாடியை அமத்து” தான் பெரிப்பாவை நாங்கள் கிண்டல் செய்வது. ஞாயிறு மட்டும் அவருக்கு லீவ். பிள்ளையார் கோயிலில் அவர் வாசம். பொங்கலுக்காக மட்டும் கோயிலை எட்டிப்பார்ப்போம். அன்று காத்தாடி குறைவாகத் தான் ஓடும்.

ஓடிவிட்டன வருடங்கள் காத்தாடி சுற்றும் வேகத்தை விட வேகமாக. ” “அம்மா , எவ்ளோ அழகா வரைஞ்சிருக்காங்க என்ன செய்வாங்க?”. “காலண்டர்ல போடுவாங்க... உங்க பெரிப்பா இப்படிதான் வரைவார்”. ”என்ன பெரிப்பா ஆர்ட்டிஸ்டா!!!”...

”காத்தாடியை அமத்து” என்றவர் “காத்தாடியைப் போடு” என்று அலுப்புகளோடு சாய்ந்து மறைந்தும் விட்டார். அவரது தொழிலுக்கான எந்த அடையாளங்களும் வீட்டில் பார்த்ததில்லை. இன்றும் ஒவ்வொரு முறை ஆளின்றி ஃபேனை நிறுத்தும் பொழுதும் தவறாது ஒலிக்கிறது “காத்தாடியை அமத்து” என்று...

Monday, April 4, 2011

சுமை

நத்தை கூட்டை
சுமப்பது போல்
எல்லோரும்
சுமந்து திரிந்தார்கள்

மூச்சு திணறியது
தொல்லைகள் ஏராளம்
தொலைத்தவை கணக்கில்லை
பயன்கள் ஏதுமில்லை

என்றாலும்...
விடாது சுமந்தனர்
குட்டையின் மட்டையாக
நானும் சுமந்தேன்....

ஓர் எல்லைக்கு மேல்
அது பாரமானது
இழப்பவை எல்லாம்
மூடம் என்றது மனம்

சுமப்பவர் எவருக்கும்
காணவும் நேரமில்லை
காலடியில் கிடக்கும்
அழகான தடங்களை....

மூச்சு முட்டியபொழுது
இறக்கி வைத்தேன்
புதுக் காற்று தழுவியது
புத்துணர்வு வந்தது

மனம் சிறகடித்தது
வெறுங்கூடென
தூக்கி எறிந்தேன்
தன்முனைப்பை...

சுமந்து கொள்வேன்
மீண்டும்
மன நிம்மதி
வேண்டாமெனில்...

Monday, March 21, 2011

ஊரும் உறவும்...

நிகழும் வரை எண்ணியதில்லை... நெடுநாட்கள் வாழ்ந்த ஊரும் அன்னியமாகும் என்று. கோவையில் வளர்ந்தாலும் பெற்றோர் இடம் மாறியவுடன் ஊர் அன்னியமானது. வாழ்க்கைப்பட்ட ஊரும் அப்படி ஆகி விடும் என்று எண்ணியதில்லை. என்றாலும் மாமா மறைந்த பின், அத்தை இங்கு வந்த பின் ஓரிரவு பயணம் என்ற ஊர் தூரமாகித்தான் போனது.

என்றாலும் அதை விடக்கூடாது என்பது போல், சொந்த ஊரில் விசேசம் என்றால் மதுரையில் தங்கி வீட்டில் சில மணித்துளிகளேனும் செலவழிப்பது வழக்கம். திருமணமாகி வந்த பொழுது. தெருவில் ஒவ்வொரு வீடும் பரிச்சயம். ஊருக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் அட்டண்டன்ஸ் கொடுப்பதற்கும், மறுநாள் சொல்லிக் கொண்டு கிளம்புவதற்குமே நேரம் சரியாக இருக்கும். ஒவ்வொரு வீட்டு ஸ்பெசாலிட்டியும் வந்துவிடும். வாய்த்துடுக்காகப் பேசினாலும் மறந்து அன்பு காட்டும் நட்பு வட்டம்.அந்த அன்பை மகிழ்ச்சி பகிரும் சுபதினங்களிலும் காணலாம், துக்கம் பகிர நேரும் துயரத்திலும் காணலாம்.

இப்பொழுது அனேகமாக அருகில் இருந்தவர் பலர் இடம்மாறிவிட்டனர். வாழ்க்கையே மாற்றம் நிறைந்தது தானே? என்றாலும் இருப்பவர்கள் காட்டும் அன்பு அலாதியானது. இதோ, குழந்தைகளை விளையாட விட்டு விட்டு, வேலைகள் முடித்து நிம்மதியாக வரலாம். அவர்களும் சுகமான விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பார்கள். இங்கு போல் அவர்களைத் தனியாக விட்டுச் செல்கிறோம் என்ற கவலை இல்லை. ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும், சிரமம் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் ஹோட்டல் சென்று உண்ண முயல்வோம். பெரும்பாலான நேரங்களில் அது தோல்வி தான்.வேண்டாம் என்றாலும் விருந்துபசரிப்பில் நனைந்து திரும்பும் பொழுது தோன்றும், “ஊரும் உறவும்” உள்ளவரை ஊர் அன்னியமாவது இல்லை.

Sunday, March 13, 2011

குட்டி ஆமைகளின் கடற்பிரவேசம்

சென்ற பதிவில் ”சுட்டீஸுடன் டர்டில் வாக்” ஆலிவ் ரிட்லீ ட்ர்ட்டில் முட்டை போட்டதா.... மார்ச்சில் இருந்து முட்டை பொரிக்கும் என்றார்கள். பெசண்ட் நக்ரில் இருந்து மெரினா செல்லும் வழியில் பீச் ஓரத்தில் உள்ளது "hatchery". hatchery என்றால்... வேலி போட்டு, மணலில் முட்டைகள் இயற்கையாகப் பொரிக்க வைத்துள்ளனர். வெளிவரும் நேரம் (பெரும்பாலும் மாலை...). கூடை போட்டு மூடி விடுகின்றனர். பின்னர் கூடையில் அவற்றை எடுத்து கடல் நோக்கி விடுகின்றனர். இந்த மாதம் தினம் மாலை 5:30க்கு மேல் சென்றால் பார்க்கலாம். பார்ப்போமா?

hatchery


பொரித்த ஆமைகளைக் கூடையில் அள்ளுகின்றனர்


கூடையிலே (கருவாடு இல்லை....) குட்டி ஆமை



கொஞ்சம் கிட்ட் பார்ப்போமா?


செல்லக்குட்டி...

கடற்பிரவேசம்

எவ்ளோ சின்னதா இருந்தாலும் தடங்கள் பதிக்காமலா?



ஒரு இரண்டு நிமிஷம் டைம் இருந்தால், இந்த குட்டி ஆமைகள் கடல் நோக்கி போனதை இந்த மூணு வீடியோ க்ளிப்ல பாருங்க... அதற்கு அப்புறம் ஆமை நடையையே நீங்க வேற மாதிரி தான் நினைப்பீங்க....


குட்டி ஆமைகளின் கடல் நோக்கி பயணம்




நான் தான் ஃபர்ஸ்ட்



ஹை..வீடு வந்துடுச்சு...



எப்படி இருக்கு? ஆயிரத்தில் ஒண்ணு தான் பிழைக்குமாம். இது இரண்டு ஆமை போட்ட முட்டைகளில் இருந்து வந்தவை. கடவுளே எல்லாம் பொழச்சு ரொம்ப நாள் வாழட்டும்!!! இதை ஒரு வேலையாகக் க்டமையுடன் செய்யும் தன்னார்வலர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்....

Friday, March 11, 2011

வானம்

வெட்டவெளியில் படுத்து வானத்து நட்சத்திரங்களை எண்ணும் கணங்கள் வாழ்வின் சில சுவாரசிய கணங்கள். சில்லென்ற காற்றுக்கு காலத்தைக் கடத்தும் சக்தி உண்டு. நிலவிருந்தால் வானத்தின் மீது கவனம் செல்வதில்லை; மேகத்திடை மறையும் நிலவைத் துரத்தியபடி மனமும் சென்றுவிடும். நட்சத்திரங்கள் மட்டுமே சிதறிக் கிடக்கும் வானம் இன்னும் அழகு. கரிய வானம் அழகாவதோடு, அந்த நீண்ட வெளியில் எண்ணங்கள் தடையின்றி பயணம் செய்யும்.

சிறு வயதில் நிலாச் சோறு உண்டு வானத்தை இரசித்ததுண்டு. ஊரில் காரையில் தான் தூக்கம். நட்சத்திரங்களில் உருவங்கள் தேடிக்கொண்டே உறங்கிப் போவோம். நட்சத்திர ஓளியில் விளையாடிய இரவுகளும் ஏராளம். பதின் வயதில் கோபம் வரும் பொழுதெல்லாம் தோட்டத்தில், சலவைக்கல்லில் உட்கார்ந்து கொண்டு வானம் பார்த்தால், மனம் இலேசாகிப் போகும். அதன் பின் வாழ்க்கை ஓடிய ஓட்டத்தில் நட்சத்திர இரவுகள் தொலைந்து போயின. நிலவுடன் ஒட்டியும் விலகியும் செல்லும் ஒற்றை நட்சத்திரம் மட்டும் அவ்வப்பொழுது கண்ணில் படும்.

வானத்தை நினைவுபடுத்தும் வேலையை குழந்தைகள் செய்கின்றனர். அம்புலி காட்டி ”நிலா நிலா ஓடி வா...” எனும் பொழுது நிலவும், “ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...” என்று நட்சத்திரங்களும் மீண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகின்றன. (ப்ளாக்கால் என்வானம் என் கணினியில் அடங்கியது... என்றாலும் வானம் தொலைவில் தான் நின்றது). மழலைகள் வளர்ந்து நிலவைத் தேடாது சாப்பிட ஆரம்பித்தவுடன் மீண்டும் வானம் தொலைவானது... பரபர வாழ்க்கையில்.

ஏதோ நினைவுகளுடன் விழி உயர்த்தி பார்த்தபொழுது மீண்டும் வானம் நெருக்கமானது. இந்த வானம் நோக்கிதான் எத்தனை கேள்விகள் பயணித்திருக்கும்... படிப்பு, வேலை, துணை, வீடு, வாகனம் , பிள்ளைகள் என்று எல்லா கனவுகளும் எத்தனை நட்சத்திர இரவுகளின் இருளில் பயணித்துள்ளன.... இன்று அந்த கேள்விகளுக்கு விடை இருக்கிறது. குழந்தைகள் பற்றிய அதே கேள்விகள் இப்பொழுது மீண்டும் பயணிக்கின்றன. அந்த இருள்வெளி நட்சத்திரங்களுடன் ஏதோ ஒருவிதத்தில் மனதை இலகுவாக்குகிறது.

விரிந்தே கிடக்கிறது வானம் எல்லோருக்கும்... நினைத்தால் அருகிலும் இல்லையென்றால் தொலைவாகவும்... வாழ்வின் தத்துவம் போல்...

Friday, February 25, 2011

ட்வீட்ஸ்

கடிதத்தைக் கிழித்து போடும் திருப்தி மெயிலை டெலீட் செய்வதில் இல்லை

பெளர்ணமி... பூரண நிலவு... நிலவொளி பூரணமாகவில்லை... தெருவெங்கும் மின்விளக்குகள்

நீலக்கடல்; நீல வானம்; செவ்வானம்; வெண்மேகம்; மீண்டும் பூமிக்கு தான் திரும்ப வேண்டும் கண்கள்...

வாழ்க்கையைக் காதலிக்கத் தொடங்கிவிட்டால் பாதி பிரச்னைகள் காணாமல் போய்விடும்

கேள்வி கேட்கும் குழந்தையின் சுட்டித்தனம்; அதற்கு சளைக்காது பதில் அளிப்பவரின் பொறுமை - இரண்டுமே சுவாரசியம் தான்

ஒன்றுமற்ற விஷயங்கள் பூதாகரம் ஆகும்பொழுது அதட்டி அரவணைக்கும் மனிதரின்றி கனத்து தான் போகின்றது வாழ்வின் பல கணங்கள்....

காலையில் கடற்கரையில் தான் நடைபயிற்சி என்றாலும் சூர்யோதயத்தை இரசிப்பது மிஸ்ஸிங்... வாழ்வின் ஓட்டத்தில் இப்படி மிஸ்ஸாவது நிறைய....

வெளிச்சம் பொறுத்து சுற்றுகிறது நிழல்... நீண்டோ, குறுகியோ... காலடியில் ஒட்டிக்கொண்டிருந்த வரை கவனித்ததில்லை...

பால்யத்திற்கு திரும்ப வாய்ப்பிருந்தால்... இதமான கனவு, ஆனால் படித்து , பரீட்சை எழுத வேண்டும் என நினைத்தால் அது டெரர் கனவு...

பிள்ளைங்க முன்னாடி பெத்தவங்க சண்டை போடக்கூடாதுனு சொன்னால், முதல்ல பிள்ளைங்க கூட பெத்தவங்க சண்டை போடக்கூடாதாம்#நான் வளர்கிறேனே அம்மா

Tuesday, February 22, 2011

உறுத்தல்

என்றோ பேருந்தில்
சில்லறை இன்றி
தவித்த வேளையில்
முகமறியா நட்பின்
ஒற்றை ரூபாய்
உறுத்திக் கொண்டேயிருக்கிறது
மனதின் ஓரத்தில்...

அறிந்தோ அறியாமலோ
கொட்டிவிட்ட சொற்கள்
தெரிந்தோ தெரியாமலோ
மறுத்த நியாயங்கள்
உணரும் வேளையில்
உறுத்திக் கொண்டேயிருக்கிறது
மனதின் ஓரத்தில்...

பலன் நோக்கி
செய்ததல்ல என்றாலும்
பழியாக மாறி
மனம் வதைக்கும் வேளையில்
செய்த உதவி
உறுத்திக் கொண்டேயிருக்கிறது
மனதின் ஓரத்தில்...

சின்ன சின்னதாய்
திருப்பாத நன்றிகளும்
சின்ன சின்னதாய்
செய்த தவறுகளும்
சின்ன சின்னதாய்
சந்தித்த துரோகங்களும்
உறுத்திக் கொண்டேயிருக்கிறது
மனதின் ஓரத்தில்...

Friday, February 11, 2011

”சுட்டிகளுடன் ஒரு டர்ட்டில் வாக்”

சென்ற பதிவில் டர்ட்டில் வாக் பற்றி எழுதி இருந்தேன். சென்ற வாரம் குட்டீஸ் போக வேண்டும் என்று சொன்னதால் கிளம்பினோம். அருண் அவர்களுக்கு அலை பேசினால், நிறைய கூட்டம் இரண்டு வாரம் கழித்து வந்தால் கூட்டம் கம்மியாக இருக்கும் என்றார். பொறுமையின் சிகரங்களான குட்டீஸ் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே நந்து, யாழ், அவர்கள் நண்பர்கள் சுபிக்‌ஷா, அஸ்வின் என்று பிள்ளை கூட்டமுடன் 11 மணிக்கு போனால்.... அங்கு ஒரு ஸ்கூலே நிற்கிறது.

முந்தின நாள் ஹிண்டுவில் வந்திருந்ததால் இருக்கலாம். எல்லா சுட்டீஸும் கையில் வாட்டர் பாட்டிலுடன் உற்சாகத்தோடு நள்ளிரவில் இருந்தது கண்டு சோம்பிக் கிடந்த நானும் சுறுசுறுபுற்றேன். வழக்கமாக சற்று நேரம் சென்று சென்றால் ஆமை பார்க்கும் வாய்ப்பு அதிகம். சற்று நேரம் ஆமைகள் பற்றி பேசுவார் அருண். முதலில் சுட்டீஸ் டைம். குழந்தைகள் கேள்வி கேட்ட அழகே தனி. அதற்கு பொறுமையாக பதில் சொன்ன அருணின் பொறுமை பாராட்டிற்குரியது. (யாழ் குட்டி தானாக யோசித்து, அக்காவிடம் ஆங்கிலத்தில் எப்படி கேட்பதென தெரிந்து, கைவலிக்கும் வரை கையைத் தூக்கி கேள்வி கேட்டது கொள்ளை அழகு) உண்மையில் குழந்தைகளின் கேள்வி கேட்கும் அழகில் இலயித்த எனக்கு, பதில்கள் மறந்துவிட்டது. நந்தினி நோட் பண்ணியதால் சிலவற்றுக்கு பதில் உண்டு. சளைக்காது கேள்வி கேட்ட சுட்டீஸின் கேள்விகள்:

1. olive ridley-க்கு ஏன் அந்த பெயர்? (olive-ஆலிவின் நிறம்... ரிட்லி... அது ஒரு புதிர் என்பதால்... )
2. எத்தனை வகையான ஆமைகள் (7 வகை Olive Ridley, Kemps Ridley, Hawks bill, Green trutle (இவர் சுத்த சைவம்), Flat back, Leather Back(இவர் ஜெல்லிடேரியன் அதாவது ஜெல்லி மீன் மட்டும் உணவு)
3. olive ridley எவ்வளவு பெரிசு? (இரண்டு அடி)
4. ஆமைகள் எவ்வளவு கிலோ? (olive ridley 40-50 கிலோ , லெதர் பேக் 500-1000 கிலோ)
5. டார்ட்டாய்ஸ் , டர்ட்டில் என்ன வித்யாசம் (சாரி, அவர் சொன்ன பதிலை நான் மறந்துட்டேன்)
6. ஆமை எப்படி குழி தோண்டும்? (பின்பக்க flippers)
7. ஆமை எப்படி நடக்கும்? (flippers இழுத்துகிட்டே நடக்கும்)
8. முட்டை போட எவ்ளோ நேரம் ஆகும்? (குழி தோண்டி முட்டை போட்டு, மூடிப் போக 1.5 மணி நேரம், குழி தோண்டவே 45 நிமிஷம் மேல ஆகும்)
9. முட்டை உடையாதா? (முட்டை போடும் பொழுது மென்மையா இருக்கறதால் உடையற சான்ஸ் கம்மி... கொஞ்ச நேரம் கழிச்சு தான் ஓடு கெட்டியாகும். ஆனாலும் போடும் பொழுதே உடையவும் சான்ஸ் உண்டு)
10. ஆமை அழுமா? (அழாது, ஆனால் எக்ஸ்ட்ரா உப்பை வெளியிடறது கண்ணீர் வழியா தான்)
11. குட்டி ஆமை என்ன சாப்பிடும்? (கடல் தாவரங்கள்)
12. ஆமைக்கு எப்படி கரை இருக்கிற பக்கம் தெரியும் (அதற்கு ஒரு திசையுணர்வு உண்டு. பிறந்த இடத்துக்கே வந்து முட்டை இடும் உணர்வு போல்)
13. ஆமைக்கு எதிரிகள் உண்டா? (குட்டி ஆமைக்கு பல எதிரிகள். அது வளர 15 வருஷம் ஆகும். 1000-ல் ஒண்ணு தான் பெரிசாகும். பெரிசான பிறகு ஒரே எதிரி தான்... கண்ணடியில் பாருங்க...)
14. ஆமை வேகமா நீந்துமா? (வேகமா நீந்தும், நடக்கிறது தான் மெதுவா இருக்கும்)
15. எத்தனை தடவை முட்டை போடும் (வருடத்திற்கு 3 தடவை )
16. ஆமைக்குஞ்சுகள் எப்படி மண்ணுக்குள்ளே இருந்து வெளியே வரும்? (நிறைய சேர்ந்து பொரிக்கும். ,மண்ணைத் தள்ளிட்டு மேலே வரும்)
17. ஒண்ணை ஒண்ணு இழுத்து கீழே போயிடாதா? மேலே வர முடியாதே? (அது இழுக்காது; எல்லாம் சேர்ந்து மண்ணைத் தள்ளிட்டு வெளியே வரும்)
18. குஞ்சு பொரிக்க எவ்ளோ நாள் ஆகும் ? (45 நாள் கழிச்சு பொரிக்க ஆரம்பிக்கும், 2 நாள்ல வெளியே வரும்)
19. எவ்ளோ முட்டை போடும் (100-130, அதுக்கு மேலேயும் போகலாம். லெதர் பேக்கு 500 கூட போடும்)
20. இங்கே olive ridley மட்டும் தான் வருமா? (ஆமாம்... மலேசியாவில லெதர் பேக் பார்க்கலாம்)
21. ஆமை மீன் வலையில் சிக்குமா?(ஆமாம், சிக்கி மூச்சு திணறி இறக்கவும் வாய்ப்புண்டு)
22. எவ்ளோ வருஷம் உயிரோட இருக்கும் (ரொம்ப வருஷம்... 100 வருஷம் கூட)

கேள்விகளுக்கு முடிவே இல்லை. 12 மணிக்கு உற்சாகமாக கேள்வி கேட்ட குழந்தைகள். 2 வாரத்திற்கு உற்சாகம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறியவரிடம், பெரியவர்கள் கேட்ட பலவற்றுள் 2 மட்டும் சொல்கிறேன்....

1. இந்த ஆமையைக் காப்பற்றுவதால் மனிதர்களுக்கு என்ன லாபம்? (இலாபம் என்று சொல்ல இயலாது. ஒரு ecological balance... லெதர் பேக் ஜெல்லி மீனை, சாப்பிடாவிட்டால் ஜெல்லி மீன் சாப்பிடும் மீன்கள் அழிந்துவிடும். அது என்ன செய்யும் என்பது போல்... என்றாலும் நாங்கள் செய்வது எங்கள் மனதிருப்திக்காக, நாங்கள் வாழ்வதில் ஒரு அர்த்தம் ஏற்படும் ஒரு மன நிறைவு)

2. மீனவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? உதவுவார்களா? (மீனவர்கள்... எங்களுடன் நட்பாக இருப்பார்கள்... உதவுவார்கள்... ஆனால் அவர்களும் பாதிக்கப்பட்டவர்கள் தான். பழைய முறை மீன்பிடிப்பு இப்பொழுது இல்லை. கடலில் மீன்கள் இல்லை. ட்ராலர்ஸ் வந்து எல்லாவற்றையும் அழிக்கிறது. மீனவர்கள் தங்கள் குழந்தைகளை மீனவர்கள் ஆக்க நினைப்பதில்லை... அவர்களும் பாதிக்கப்பட்டவர்களே!!!!)

ஒரு வழியா கிளம்பினோம் ஆமையைத் தேடி... வீடு வந்துடுச்சு... எல்ல குட்டீஸும் உற்சாகமா வர, எங்க குட்டீஸ் கால் வலி தூக்கம் என்று புலம்பல் ஆரம்பிக்க... வீட்டுக்கு போகலாம்னு நினைக்கறப்ப ஆமை முட்டைகள் கிடைச்சுது. 103 முட்டை 32 செ.மீ குழி, 3 முட்டை உடைஞ்சுடுச்சு. குட்டீஸுக்கு ஒரே சந்தோசம்; முட்டையைத் தொட்டு பார்த்து, குழிக்குள்ள கைவிட்டு, ஆமை வந்த தடத்தைப் பார்த்து... இரண்டாவது ஆட்டம் முடியற நேரத்தில் வீட்டுக்கு திரும்பினோம். மீதி குழந்தைகள் எப்படி போனாங்களோ!!! அந்த உற்சாகம் நிஜமாவே ஒரு அழகு தான்.

சில சமயம் எல்லா ஆமையும் ஒரே இடத்தில் முட்டை போடுமாம். “அரிபாடா” அப்படீனு சொல்லுவாங்க. இனி மார்ச் மாசம் இப்ப போடற முட்டை எல்லாம் பொரிக்குமாம். பெசண்ட் நகர்ல ஒரு hatchery இருக்காம், அடையார் ஆத்துக்கு இந்த பக்கம் ஒண்ணு, அந்த பக்கம் ஒண்ணாம். hatchery-னால் பீச்ல ஓரிடத்தில் இதே மாதிரி குழி தோண்டி முட்டையை வச்சு கொஞ்சம் கூலா இருக்க கூரை போடுவாங்களாம். முட்டை இருக்கிற சூடு பொறுத்து தான் ஆணோ பெண்ணோ உருவாகுமாம். இப்போலாம் கடற்கரையில் டெம்பரேச்சர் ஜாஸ்தியா இருக்கறதால்... ஒரே வகையா போக வாய்ப்பு அதிகமாம். hatchery-l ஆமை பொரிச்சு வந்தால் கடல்ல விடுவாங்களாம்.ஏதோ tag பண்ணினால் அதை கண்காணிக்கலாம் போல். மார்ச் மாசம் 5:30 மணிக்கு மேல போனால் பார்க்கலாமாம். போனால் போஸ்ட் போடறேன்.

Thursday, February 10, 2011

அன்புள்ள மாமாவுக்கு...

உருண்டோடி விட்டது மூன்றாண்டுகள்; மாமாவுடன் விவாதம் செய்தால் நேரம் ஓடுவது போல்....

”ஹாலில் இந்த சுவரை ஒரு ரெண்டு அடி இழுத்தால் தான் கொஞ்சம் நல்லா இருக்கும்”, மாமா சொன்ன பொழுது மனம் ஒப்பவில்லை தான். ஒரு அர்த்தமற்ற விவாதத்திற்குப் பின் அரைமனதுடன் ஒத்துக்கொண்டேன். ஆனால் இப்பொழுது அந்த ரெண்டடி இழுப்பின் அத்தியாவசியம் தெரியும். இப்படி வீட்டின் ஒவ்வொரு அடியிலும்....

தென்னங்கன்று நட இடமில்லை என்று நான் அம்மாவிடம் விவாதம் செய்து மறுத்து வர, ஆனால் மாமா தென்னங்கன்றை வாங்கி வந்து இடம் பார்த்து வைத்து.. இன்று வளர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படி தோட்டத்தின் ஒவ்வொரு அடியிலும்....

ஐயாப்பா டெய்லி நைட் வந்து எங்களை மட்டும் பார்த்துட்டு போவார் என்று இன்னும் சொல்லும் கிள்ளைகளின் மழலையிலும்...

ஒவ்வொருமுறை சுற்றுலா செல்லும் பொழுது, அப்பா இருந்தால் வந்திருப்பார் என்று கணவரும், மாமாவுக்கு இப்படி வர்றது பிடிக்கும், நிறைய விஷயம் சொல்லுவார் என்று நானும் சுற்றுலாவின் ஒவ்வொரு சுற்றிலும்...

என்று வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நினைவுகள் நிழலாக உடன் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.


இந்த வருடம் ரொம்பவே மிஸ் செய்கிறோம். முன்பெல்லாம் ஊருக்குப் போகக் காரணம் தேவையில்லை. அது ஒரு திட்டமிட்ட பயணம். இப்பொழுது... அத்தையும் இங்கிருப்பதால் காரணமின்றி செல்லத் தோன்றுவதில்லை.

எத்தனை விவாதம் அவருடன்!!! புத்தகம், சுற்றுலா, உறவுகள், பெண்ணுரிமை, பிள்ளை வளர்ப்பு, ஆத்திகம், நாத்திகம், சமையல், தோட்டம், நினைவுகள் என்று.... அப்பாவுடன் சண்டை போடும் உரிமையுடன் எத்தனை பேச்சுக்கள்/விவாதங்கள் எதற்காகவோ, யாருக்காகவோ எல்லாம்... குறைத்திருக்கலாமோ? இல்லை... மனதை அழுத்தினாலும் உரிமையுடன் மோதிய அழகான நினைவுகள்... ஒன்றுமற்ற விஷயங்கள் பூதாகரம் ஆகும்பொழுது அதட்டி அரவணைக்கும் மனிதரின்றி கனத்து தான் போகின்றது வாழ்வின் பல கணங்கள்....

Monday, February 7, 2011

முகங்கள்

எங்கெங்கும் கடந்து
செல்லும் முகங்கள்...

புன்னகை பூத்து
பார்ப்பவருக்கும் பரவிட

மனவலி கொண்டு
வேதனை ததும்பிட

எண்ணிய கிடைக்காது
ஏக்கம் உறைந்திட

ஏதோ ஒன்று
ஏமாற்றமாக ஒன்றிட

எரித்து விடும்
கோபம கொந்தளிக்க

ஏதோ எண்ணத்தில்
யோசனையில் ஆழ்ந்திட

உணர்வுகள் அற்று
வெற்றாய் வெறித்திட

கடக்கும் முகங்களுடன்
கடந்து செல்லும் எண்ணம்...

கவலை ஏதுமின்றி
கபடம் ஏதுமின்றி
பிள்ளைச் சிரிப்பை
சுமக்கும் முகமாக
எல்லாம் மாறினால்....

Wednesday, February 2, 2011

ட்வீட்ஸ்

இந்த ஒற்றை வரி ட்விட்டர் மிகவும் ஈர்த்தது. இதுவரை ட்வீட் செய்தவை...

வலைதளம் “என் வானம்” என்றால் ட்விட்டர் தளம் “என் மேகம்”? #மே I கம்

வீடு முழுதும் பூத்துக்குலுங்குகிறது # குழந்தையின் கைவண்ணம்

உன் கரம் பிடித்து செல்லும் பொழுது சாலைகள் முடிவதில்லை... மனதின் ஆசைகள் போலவே...

பட்டுபூச்சிகளின் வர்ணம் மேலும் மிளிர்கிறது ... குழந்தையின் இரசிப்பிலும் வர்ணிப்பிலும்

அழுதால் சாதி தெரிந்துவிடும் என்று அழவில்லை என்று படித்த அதே பத்திரிகையில் தான் “ராமானுஜர் cult" என்று பெருமையுடன் நினைவு நாடா சுழல்கிறது

ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னவாயினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் #http://www.smile.org.in/Sadhana_Main.aspx

முதலாளிகள் யுக்தி “பன்ச் தந்திரம்” என்றால் தொழிலாளிகள் யுக்தி “கைப்புள்ள”? # இவன் ரொம்ப நல்லவன்டா...

பிறந்த நாள் முடிந்தவுடன், அடுத்த பிறந்தநாளின் countdown-ஐ உளமார்ந்த மகிழ்ச்சியுடன் துவக்குபவர்கள் குழந்தைகள் தான் ; Happy Birthday Mohita

துள்ளிச் செல்லும் குழந்தைகளின் சிரிப்பு... அள்ளிக்கொண்டால் மனம் நிறையும்

”சத்தம் போடாதே” என்று சொன்னவுடன் அமைதியாகிவிடும் குழந்தையிடம் சொல்லத் தோன்றுகிறது “சொல் பேச்சு கேளாதே” என்று...

வாரநாள்னா ஆபீஸ்ல வேலை, வார இறுதினா வீட்ல வேலை

இந்த வாரமாவது ஏதாவது உருப்படியாக நடக்காதா என்ற நம்பிக்கையுடன் தான் விடிகிறது திங்கள் காலை... ஒவ்வொரு வாரமும்.

குழந்தையின் ஏக்கம் - எப்பொழுது வளர்வோம் என்று... பெரியவர்கள் ஏக்கம் - எதற்கு வளர்ந்தோம் என்று...

பள்ளி நாட்களில் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் பெற்றோர் ; விடுமுறை நாட்களில் சீக்கிரம் எழுந்து பெற்றோரை எழுப்பும் குழந்தை

எந்த நொடியிலும் நிற்கப்போகும் இந்த இதயம்தான் அதற்குமுன் எதற்கெல்லாம், எப்படியெல்லாம் துடிக்கிறது!!!

இன்பம் பகிர்ந்து கொள்ளும் நொடிகள் அழகு; துன்பம் பகிர்ந்து கொள்ளும் இதயம் அழகு

Tuesday, February 1, 2011

மரணம்

குறுஞ்செய்தி வந்தவுடன்
தொடர்பு எல்லைக்கப்பால்
மரணம்

---------------------------

பல நாள் கழித்து
பல நட்புகளின் சந்திப்பு
புன்னகை பரிமாற்றமில்லை
துக்க வீடு

----------------------------
மிகச் சில நேரமே ...
காத்திருப்பு
ஆறுதல்
மனவலி
பகிர்வு

நீங்கியவுடன்
காத்திருக்கும்
அவரவர் உலகம்
நிற்காமல்
சுழன்று கொண்டே!!!

----------------------------
உயிரற்ற உடல் சுற்றி
உற்றார் உறவினர்
உடல் சுமந்து சென்றபின்
இழப்பை சுமப்போருக்கு
இழப்பின் ஆழத்தில்
இழுக்கும் இரவொன்று
விழுங்கக் காத்திருக்கும்
தனிமையில்....

--------------------------

Wednesday, January 26, 2011

ஆமை நடை செல்ல ஆசையா?

இன்று காலை பீச்சில் நடந்து கொண்டிருக்கும் பொழுது கவனித்தோம், இரண்டு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்து கிடந்தன. "Olive Ridley Turtles" ஆகத்தான் இருக்க வேண்டும். வலையில் சிக்கி இருக்கலாம். இதுவரை இரண்டு முறை ”turtle walk" சென்றுள்ளோம். அந்த அனுபவமும், ஆலிவ்ரிட்லி கடலாமைகள் பற்றியுமே இப்பதிவு.

”பங்குனி ஆமை” என்றும் இவை அழைக்கப்படுகின்றன. இவை ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையுள்ள காலங்களில் முட்டையிட கரைக்கு வரும். ”ஆலிவ் பச்சை” நிறத்தில் இருப்பதால் “ஆலிவ் ரிட்லி” ஆமைகள் என்றழைக்கப்படுகின்றன. இவை கடலாமைகளிலேயே சிறியவை; இரண்டரை அடி நீளம் மற்றும் அகலம். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை முட்டையிடும். ஒவ்வொருமுறையும் சராசரியாக 100 முட்டைகள் இடும்.

இந்த கடலாமைகளின் முக்கியமான ஆபத்துகள்:
- trawlers எனப்படும் மீன்பிடி கப்பலகள்; கிடைப்பதை வலையில் இழுத்துவிடும்... ஆமையையும் சேர்த்து
- ஆமை முட்டைகளை உண்ண எடுத்துச் சென்றுவிடுவார்கள்
- முட்டைவிட்டு வெளிவரும் ஆமைக்குஞ்சுகள், வழக்கமாக நிலா, நட்சத்திர ஓளியில் கடல் நோக்கி செல்லும். ஆனால், இப்பொழுது கரையில் பளீரென இருக்கும் விளக்குகளை நோக்கி நகரும். 24 மணி நேரத்திற்குள் கடலுள் சென்றால் மட்டுமே அதனால் தாக்கு பிடிக்க முடியும்.. கரை நோக்கி வரும் ஆமைகள் சூரிய ஒளியால் dehydrate ஆகி இறக்கலாம், நாய் (அ) பூனைகளால் உண்ணப்படலாம்.
- இவற்றைக் கடந்து கடலுள் செல்லும் ஆமைக்குஞ்சுகளில் ஆயிரத்தில் ஒன்று மட்டுமே உயிர் பிழைக்கும்

(தகவல்கள் நன்றி : http://sstcn.org/)


ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்களில், இரவில் கடலோரம் நடந்து, ஆமைமுட்டைகளை எடுத்து பத்திரமாக hatchery-ல் வைத்து கடலில் விடுவர் “SSTCN” என்ற சேவை அமைப்பினர். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்களில் வெள்ளி சனிக்கிழமைகளில், நீலாங்கரை தொடங்கி பெசண்ட் நகர் வரை சுமார் 7 கி.மீ மக்களிடையே இதைப் பற்றிய விழிப்புணர்வுக்காக வெள்ளி, சனிக்கிழமைகளில் மக்களுடன் சேர்ந்து இப்பணி எவ்வித கட்டணமும் இன்றி நடக்கும்.

கிட்டதட்ட நள்ளிரவில் கும்பலாக பீச்சில் நடப்போம். மீனவர்களின் கட்டுமரங்களையோ, வலையையோ தொடாமல் செல்ல வேண்டும். முன்னால் SSTCN அமைப்பினர் சென்று ஆமை எதுவும் வருகிறதா (அ) இருக்கிறதா என்று கவனிப்பார்கள். ஆமை வருகிறது என்றால், எங்களைக் காத்திருக்கச் சொல்வர். ஆமை முட்டையிட ஆரம்பிக்கும் வரை காத்திருக்க வேண்டும். முட்டை இடும் முன் அது ஏதேனும் ஃபீல் செய்தால் மீண்டும் கடல் நோக்கி சென்றுவிடும். ஆனால் முட்டையிட ஆரம்பித்தால் என்ன நடந்தாலும் அசையாது. எனவே முட்டையிட ஆரம்பித்த உடன் நாம் சென்று பார்க்கலாம்.




சென்றமுறை அப்படிதான் ஆமையைக் கண்டோம். ப்ளாஷ் கூடாது என்று அவர்கள் எவ்வளவோ கூறியும், ஆமை முட்டை இடுவதை ப்ளாஷில் குளிப்பாட்டி விட்டனர் நம்மக்கள். பாவம் அந்த ஜீவன் என்ன திட்டு திட்டியதோ? அழகாக டென்னிஸ் பந்து சைஸில் இருந்தன முட்டைகள். சுமார் 100 முட்டை இட வேண்டிய ஆழத்திற்கு குழி தோண்டி இருந்தது. முட்டை குழியில் இருக்கும் தட்பவெட்பம் பொறுத்து ஆணாகவோ பெண்ணாகவோ உருவாகும். அந்த குழியின் நீளம், அகலம், தட்பவெட்பம் குறித்துக் கொண்டு SSTCN அமைப்பினர் அம்முட்டைகளை hatchery-க்கு எடுத்துச் செல்ல, சாலையில் காத்திருக்கும் அவர்கள வேனுக்கு கொடுத்து விடுவர். 45-60 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் கடலில் விட்டுவிடுவார்கள். 12 (அ) 13 வருடங்கள் கழித்து மீண்டும் பிறந்த கரைக்கே முட்டையிட வருமாம். கிட்டதட்ட ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கு வந்து முட்டையிடுகின்றன ஆமைகள். ஒரிஸாவிற்கும் நிறைய செல்லுமாம்.





ஆமை தோண்டும் குழி ஆழமாக இருந்தாலும் முட்டை உடையாது. ஏனெனில், முட்டை இடப்படும் பொழுது இரப்பர் பந்து மென்மையாக இருக்கும். முட்டை ஓடு சில விநாடிகள் கடந்தே கடினமாகும். ஆமை வந்து சென்ற தடமிருந்தால், முட்டை இட்டுள்ளதா எனத் தேடி அறிந்து, அம்முட்டைகளையும் பத்திரமாக hatchery-ல் சேர்த்து விடுவர்.

மேலும் விவரங்களுக்கு ”http://sstcn.org/” செல்லவும். சென்னையில் ஆமைநடை பற்றிய விவரங்களும் உண்டு.

மேலும் படங்களுக்கு இங்கே செல்லவும்
http://sstcn.org/gallery/

இயற்கையின் அதிசயங்களை சிறுவர்களுக்குப் புகட்ட ஒரு நல்ல வழி... என்ன கொஞ்சம் நடக்க வேண்டும் (ECR சாலையில் ஷேர் ஆட்டோ இருப்பதால், நடுவில் கூட ஒரு ஆமை கண்ட பின் பிரிந்து வந்துவிடலாம்; முழு 7 கிமீ நடக்க வேண்டாம்... ஆனால் அதற்குள் ஆமையோ முட்டையோ கண்ணில் பட வேண்டும்)

Friday, January 21, 2011

குறிப்புகள்

விலைவாசி உயர்வு... சோற்றுடன் ஒரு காய்/குழம்பு வைத்து சாப்பிடுவது கூட ஆடம்பரம் ஆகிவிட்டது. ஒவ்வொரு முறை விலைவாசி பற்றி எண்ணும் பொழுதும் மனதில் லஷ்மியும் கோமதியும் வந்து செல்வார்கள்.

குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு பெற்றோர் மெனக்கெடுவதை இப்பொழுது அவர்கள் வைக்கும் விதம் விதமான பெயர்களில் இருந்தே காணலாம். பெற்றோர் குழந்தைகளுக்கு அப்பழுக்கற்ற பெயர்களையே வைக்கிறார்கள்; குழந்தைக்கு பெயர் போலவே நல்ல எதிர்காலம் அமையாதோ என்ற ஏக்கமும் இருக்கும். எல்லா பெயர்களும் நல்ல பெயர்களே; மனிதர்கள் தான் பெயர்களை அழுக்காக்குவார்கள். சரி விடுங்கள்... எதற்கு சொன்னேன் என்றால் நமக்கு தான் லஷ்மி கடாட்சம் இல்லையே, பெண்ணுக்கேனும் இருக்கட்டும் என்று “லஷ்மி” என்ற பெயர் வைத்திருப்பார்களோ? ஆனால் லஷ்மிக்கு லஷ்மி கடாட்சம் படவில்லை.

லஷ்மிக்கு சிரித்த முகமெல்லாம் கிடையாது; என்றாலும் சிடுமூஞ்சி அல்ல. ஏதோ... அப்படி இப்படி கஷ்டப்பட்டு பள்ளி இறுதிவரை தேற்றினார்கள். அப்பாவும் போய் சேர்ந்துவிட, வேலைக்கு செல்லும் தேவை லஷ்மிக்கு இருந்தது. தட்டெழுத்தில் தேறி ஆயிரத்து சொச்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அம்மாவுக்கு உடல் நலம் அவ்வளவு சரி இல்லை. வாடகை, பால், காய், கரண்ட் என்று எல்லா செலவும் சமாளிக்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் அங்கே இங்கே தேடி அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு, இவர் ஹாஸ்டலில் சேர்ந்து விட்டார். மாதம் எண்ணூறு ரூபாயில் ஹாஸ்டல் செலவுகள் அடங்கிவிட, முதியோர் இல்லம், போக்குவரத்து செலவு என்று சரியாகப் போய்விடும். அம்மாவை அருகில் இருந்து கவனிக்க ஆசையிருந்தும் இயலாமல் சிரிப்பைத் தொலைத்த முகம்.

கோமதி... லஷ்மிக்கு நேர் எதிர். கோமதிக்கு நாற்பதை ஒட்டி இருக்கும் வயது. முகத்தில் பவுடரும், லிப்ஸ்டிக்கும் , ஓங்கி ஒலிக்கும் குரலும், “ஹா..ஹா” என்ற சிரிப்பும், முதலில் பகட்டான ஆள் என்றுதான் தோன்றும். முகப்பூச்சுக்கும் பின்னால் இருக்கும் பற்பல பிரச்னைகள். பெரிய பிரச்னைகள் உள்ளவர்கள் முகத்தில் புன்னகையை அணிந்து கொள்வதும், சின்ன சின்ன பிரச்னைகள் உள்ளவர்கள் கப்பல் கவிழ்ந்த முகத்துடன் வளைய வருவதும் வாழ்க்கையின் சுவாரசியங்கள் தானே?

கோமதி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவரது இளமையில் வேற்று சாதியில் ஒருவரை மணம்புரிந்து வீட்டை விட்டு வெளியேறியவர். ஆணொன்றும் பெண்ணொன்றும் தந்த பின் கடமை முடிந்ததாய் கணவன் கைகழுவிவிட்டு ஓடிப்போனான். தோள் கொடுக்க யாருமின்றி தவித்தார். கிடைத்த வேலை, வயிற்றுக்கும் வாய்க்குமே சரியாக இல்லை. இதில் பிள்ளைகளை எங்கே படிக்க வைக்க... அவர் தேடியது, குழந்தைகள் காப்பகம். மகனும் மகளும் காப்பகத்தில் வளர, இவர் ஹாஸ்டலில் காலம் தள்ளினார். மனம் நிறைய பாசம் இருந்தும், கையில் பசை இல்லாததால் பிள்ளைகளை உடன் வைத்துக்கொள்ள இயலவில்லை. மகளுக்கு தாய் தன்னை அனாதையாக்கிவிட்டதாகக் கோபம். மகன், புரிந்து கொண்டான். எப்படியோ அவனுக்கும் வேலை கிடைத்தது. சீக்கிரமே வீடு பிடித்து பிள்ளைகளுடன் செல்லப் போவதைச் சொல்லிக்கொண்டிருந்தார். மகளின் கோபம் தீரவில்லை என்றார். காலம் நிச்சயம் அவளுக்கு அந்த தாயின் வேதனையைப் புரிய வைக்கும்.

இவையெல்லாம் கிட்டதட்ட 15 வருடத்திற்கு முந்தைய கதை. காலம் ஓடினாலும், மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைகள் கூடுகிறதே ஒழிய எதுவும் மறைவதாகத் தெரியவில்லை. விலைவாசி உயர்வு அன்றாட வாழ்க்கையை மட்டும் போராட்டம் ஆக்குவதில்லை, சிலரின் வாழ்க்கையைப் போர்க்களம் ஆக்குகிறது. என்று விடியும் இது போன்ற மக்களுக்கு? என்றாலும்... போராட்டமான வாழ்க்கையைத் தளராது போராடிக்கொண்டே செலுத்தும் கோமதி, லஷ்மியின் முயற்சியைப் பாராட்ட வேண்டும்


துன்பமும் வேதனையும் என உலகம்
ஆனாலும்….
பூக்கள் மலரும்
- ஐஸா

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு

Thursday, January 20, 2011

என்னைப் பெற்ற மகளே!!!

பிறந்த நாள் வரும்
அவளுக்கு முன்னும்
எனக்கு அதன் பின்னும்

என்னைவிட சின்னவள் நீ
கன்னம் குழிய
சிரிக்கிறாள் மகள்

அன்பு பொழிந்து
அணைத்துக் கொள்ளும்
கோபம் மறந்து
கட்டிக் கொள்ளும்

கள்ளமற்ற உன்
குழந்தை மனம் முன்
சிறுத்து நிற்கும்
என் மனம்

நீ பிறந்த பின்தான்
மீண்டும் பிறந்தேன்
வாழவும் கற்கிறேன்
நான் சின்னவள்தான்...

என்னைப் பெற்ற மகளே!!!

Monday, January 17, 2011

மாயை

மனிதனின் வாழ்க்கை
இறைவனின் ஒருகணம்
மாயை பேசும்
கதைகள் புரிவதில்லை

சிறியவர்களின் சச்சரவுகள்
சில நொடிகளே நீடிக்க
பெரியவர்களின் சச்சரவுகள்
வருடங்கள் ஓடியும் தீராதது

சில நேரங்களில்
மாயை போல் தான்
மருள்விக்கிறது...

Wednesday, January 12, 2011

குறிப்புகள்

எம்.எஸ் அப்படி தான் அவரை அழைப்போம். நடுத்தரம் தாண்டிய வயது. பொதுவாக அவரது உலகமே தனி. எப்பொழுதும் ரேடியோவும் கையுமாக சில சமயங்களில் அதனுடன் பாடிக்கொண்டு.... யாருடனாவது பேசிப் பார்ப்பது சற்று அபூர்வம்.

பழகப் பழகத்தானே வாழ்க்கை தெரியும். அவர் நல்ல அழகு கூட. இனிமையான குரல். ரேடியோ சத்தமோ இனிமையான பாட்டு சத்தமோ கேட்டால் அது நிச்சயமாக எம்.எஸ் தான். ஆனால் குழந்தை செல்வம் இல்லை என்று விலக்கி வைத்து விட்டாராம் கணவர்.

கையில் வேலை இருந்தது. பிறகென்ன? ஹாஸ்டல் வாசம். குருவி போல் காசு சேர்த்து சொந்த ஊரில் வீடு கட்டிக் கொண்டார். “எனக்கென்னங்க... ரிடையர் ஆனால் சொந்த வீட்டுக்குப் போய்டுவேன்; அக்கா பசங்க பார்த்துக்குவாங்க... சும்மாவா இருக்கப் போறேன்...என்னால் முடிஞ்சதை நானும் செய்வேன்”, நம்பிக்கையுடன் பேசும் பொழுது பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.

இவர் மட்டுமா? தன்னம்பிக்கை என்றால் வித்யா தான். பார்த்தால் ஒரு குறையும் தெரியாது. என்ன ரொம்ப நேரமா பேசாமல் சிரிச்சிகிட்டே இருக்காங்களேனு பார்த்தால் தான் புரியும்... அவர் உதட்டசைவில் நம்முடைய பேச்சை கேட்கிறார் என. நன்கு படித்து நல்லதோர் வேலையில் இருக்கும் அவருக்கு, ரோஜாப்பூக்கள் போல் இரு குழந்தைகள். ஆனால் அவரது குறையைக் காரணம் காட்டி விலக்கி வைத்திருந்தார். எத்தனை குமுறல்களோ அந்த இதயத்தில்... என்றாலும் எப்பொழுதும் சிரித்த முகம் தான். நிச்சயம் புன்னகையின் ஒரு பகுதி பொருளாதார சுதந்திரம் தந்த தன்னம்பிக்கை தான்.

இன்றும் பலர், கல்யாணம் செய்து குடித்தனம் பண்ணும் பெண்ணுக்கு எதற்கு வேலை என்று கேட்கிறார்கள்? ஆனால், இப்படி கணவனால் கைவிடப்படுபவர்களும் , வாழ்வின் சிக்கல்களில் சிக்கிக் கொள்பவ்ர்களுக்கும் பொருளாதார சுதந்திரம் மட்டுமே தன்னம்பிக்கையும், நல்லதோர் வழியைக் காட்டும். எத்தனையோ வீட்டில் ஆணுக்குப்பின் பெண்ணால் தான் வீடு நிற்கும் என்ற நிலையில் முதலில் இருந்து முயற்சித்து கால் ஊன்றுவதற்குள் ஒரு போராட்டமே தேவைப்படும். ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அடிப்படை உரிமை.

நாகரீகம் உண்டாக்கத்தக்க நிச்சயமான வழி பெண்ணின் செல்வாக்குதான்
- மெர்ஸன்
பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு
- லெனின்

Monday, January 10, 2011

பொன்மொழிகள்

சமீபத்தில் என் கவனத்திற்கு வந்து பிடித்த பொன்மொழிகள் சில...

Don't let the littleness in others bring out the littleness in you.
மற்றவரின் சிறுமைத்தனம் உங்களுக்குள் இருக்கும் சிறுமைத்தனத்தை வெளிக்கொணர அனுமதிக்காதீர்கள்

Giving up doesn't always mean you are weak; sometimes it means that you are
strong enough to let go
விட்டுக்கொடுத்தல் பலவீனத்தின் அறிகுறி அல்ல; சிலவேளைகளில் விட்டுக்கொடுத்தல் உங்கள் வலிமையைக் குறிக்கும்

It takes years to build up trust, and only seconds to destroy it
நம்பிக்கையை உருவாக்க பல வருடங்கள் ஆகலாம்; ஆனால் சில நொடிகளில் அதைத் தகர்த்துவிடலாம்

Trust is like a vase.. once it's broken, though you can fix it the vase will never be same again.
நம்பிக்கை என்பது ஜாடி போன்றது; உடைந்த பின் ஒட்டி வைக்கலாம் ; ஆனால் முன்பு போல் இருக்காது

Don't let anybody walk through your mind with dirty feet
யாரையும் உங்கள் மனதுள் அழுக்குடன் வர அனுமதிக்காதீர்கள்

Thursday, January 6, 2011

ஊரில் வீடு

சொல்லிக்கொண்டு தான் கிளம்புவோம்
கலகலக்கும் பேச்சுக்கிடையே
இன்னும் தங்கல் நீளாதா என
உறவுகள் கையசைக்க
அடுத்த பயணம் எப்பொழுதென
கேள்விகளுக்கு பதிலாக
விடுமுறை தினங்களையும்
பயண ஆயத்தங்களையும்
தேடிக் குறிக்கும் மனம்....

சொல்லிக்கொள்ளாமல் கிளம்பும்
வேளையும் வந்து சென்றது
காலத்தின் கட்டாயம்
நினைவுகளால் நிரப்பப்பட்டு
மெளனத்தால் பூட்டப்பட்டு
தனிமையில் விடப்பட்டது வீடு...
உறவாடி சென்ற இடம்
இன்று மாறியது
இளைப்பாறிச் செல்ல...

சொல்லிக்கொள்ள யாருமின்றி
நினைவுகளைத் தூண்டிவிட்டு
கிரீச்சிடும் கதவாக
ஒலிக்கும் வீட்டின் குரல்
அடுத்த பயணம் எப்பொழுதென...
மீண்டும் வரும் காரணம்
என்னவாக இருக்குமென
தேடலுடன் பூட்டப்படுகிறது
ஊரில் வீடு....

Sunday, January 2, 2011

கூர்க்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கிருஸ்துமஸ் & புத்தாண்டை ஒட்டி ”ஆணியே பிடுங்க வேண்டாம்” என்று ஆபீசில் ஒரு வாரம் லீவு. எனவே “கூர்க்” பயணம். இந்த முறை சாத்தூரில் இருந்து மைசூர் எக்ஸ்ப்ரஸில் பயணம். சில நாட்களுக்கு முன் தான் ட்ரெயின்கள் கரெக்டான நேரத்திற்கு சென்றுவிடுவது குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அதனாலோ என்னவோ 10 மணிக்கு மைசூர் செல்ல வேண்டியது 2 மணிக்கு எங்களை மைசூரில் இறக்கி விட்டது. அங்கிருந்து டவேராவில் கூர்க்கை நோக்கித் தொடங்கியது பயணம். குளிர் எல்லாம் இல்லை. வழி முழுக்க விதவிதமான பயிர்களைக் காண முடிந்தது. முதலில் குவியலாக அவரை, இஞ்சி பார்த்தோம். பின்னர் யூக்கலிப்டஸ், வாழை, பாக்கு. காபி & மிளகு என்று மாறி மாறிக் காண முடிந்தது. ஆங்காங்கே காய்ந்த மூங்கில்கள் வளைந்து காணப்பட்டன. யானை வளைத்ததாம். 25-30 வருடங்கள் ஆனால் மூங்கிலில் அரிசி வந்து காய்ந்து விடும் என்றார் டிரைவ்ர்.


தேயிலை மலர்

மிளகு

காபி பழங்கள்


பாக்கு


தேயிலை தோட்டம்

முடிவாக தேயிலைத் தோட்டம். அங்கு தான் எங்கள் தங்குவதற்கான இடம் இருந்தது.
மிக அழகான வியூ. காற்றாடி இன்றி படுத்தாலும் நடு இரவில் கொஞ்சம் வியர்ப்பது போல் இருந்தது. அதிகாலை இலேசான குளிர் இருந்தது. சைக்கிள் ஓட்டாமலே எங்களை கீழே இழுத்துச் சென்றது. எவ்வளவு மிதித்தாலும் மேலேறுவது மிகக் கஷ்டமாக இருந்தது.

இயற்கையின் வலைதளம்



முதல் நாள் “இர்ப்பு அருவி” சென்றோம். சில்லென்று அருவி கொட்டியது. ”மலபார் பீக்காக்” என்ற பட்டாம் பூச்சி இங்கு காணப்படுகிறது. சோவென்று கொட்டும் அருவிமுன் தொட்டு தொட்டு விளையாடிய பட்டுப்பூச்சிகள் கொள்ளை அழகு.

இர்ப்பு அருவி


மலபார் பீக்காக்



அதன் பின் நாங்கள் சென்றது நாகர்ஹோல் சரணாலயம். போகும் வழியில் மான்கள் காண முடிந்தது. 2:30 முதல் சபாரி தொடங்குகிறது. மாலை 5 மணி வரை மணிக்கொருமுறை இருக்குமாம். 30 பேர் செல்லக்கூடிய வேனில் கேமிராவுடன் ஏறினோம். மான்கள் நிறைய கூட்டமாகக் காண முடிந்தது. எல்லோரும் புலிக்காக ஆவலாக இருக்க, எங்கள் கண்ணில் பட்டவை மான்கள், மிலா, காட்டெருமை, காட்டுப்பன்றி மற்றும் யானை ஒன்று.

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க









நான் யாருனு தெரியுதா?



நாங்க தனியாவும் வருவோம்ல...



கூர்கைச் சுற்றி இருக்கும் சுற்றுலா தலங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கின்றன. எனவே, சரணாலயத்துடன் அன்று சுற்றல் முடிந்தது. மறு நாள் மட்டுமே இருந்தது. எனவே, தலைக்காவிரியை விட்டுவிட்டு (கிட்டதட்ட 200 கி.மீ என்றார்கள்) , “துபாரே” யானைகள் முகாம் சென்றோம். வழியில் காபித்தோட்டங்களை யானையிடம் இருந்து காக்க மின்வேலிகள் அமைத்திருப்பதைக் காண முடிந்தது. முகாம் 9:30க்கு தொடங்கி 12:00க்கு முடிந்து விடுமாம். யானைகள் குளிப்பது உண்பது எல்லாம் காணலாம். நாங்கள்: சென்றபொழுது 12:30. எனவே யானைகள் இல்லை; காவிரியில் “ராப்டிங்” என்று படகு பயணம் மட்டுமே செல்ல முடிந்தது. வெள்ள நேரங்களில் “வைட் வாட்டர் ராப்டிங்” இருக்குமாம். ஏழு கி,மீ வரை, காவிரியின் வெள்ளத்தில் ஜிவ்வென்று படகு பயணம் செய்யலாம். ஜீப்பில் தான் திரும்ப வேண்டுமாம்.


அடுத்து மைசூர் நோக்கி பயணம். வழியில் கூர்க் மக்கள் வெள்ளாடையுடன் செல்வதைக் கண்டோம். துக்கம் நேர்ந்தால் அவர்கள் உடுத்துவது வெள்ளுடையாம். மைசூர் செல்லும் வழியில் அடுத்து சென்றது திபத்தியன் மொனாஸ்ட்ரி என்ற புத்தர் கோயில். இது தான் முதல் முறையாக ஒரு புத்த கோவிலைக் காண்கிறேன். பிரும்மாண்டமாக சிலைகள். அழகான சூழ்நிலை. சுவரின் ஓவியங்களும் அழகு. சில ஓவியங்கள் காளியை நினைவுறுத்தின.

புத்த விகாரம்










மகளுக்கு தான் படித்ததை நேரில் கண்ட திருப்தி. காவேரி எக்ஸ்பிரசைப் பிடித்து புத்தாண்டை வரவேற்க சென்னை வந்தடைந்தோம்.