என் மேகம் ???

Thursday, December 18, 2008

வறியார்க்கொன்று ஈவதே..

முகம் இறுக, உள்ளே மனம் உருக நகர வேண்டிய கட்டாயங்கள் பல நேரம் வந்ததுண்டு. பெரும்பாலும், சிக்னலில் பச்சைக் குழந்தையுடனோ, பச்சிளம் பாலகர்களோ கையேந்தும் பொழுது தான் பெரும்பாலும் இந்நிலை. ஒன்றிரண்டு ரூபாய் கொடுப்பதால் ஒன்றும் குறையாது... ஆனால், இவர்கள் ஒரு கும்பலாகச் செயல்படுகிறார்கள், இதற்கென குழந்தைகள் கடத்தப் படுகிறார்கள் என கேள்விப்படும் பொழுது, சொல்ல முடிய வருத்தம் மனதைப் பிசைய, முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது.

சிறு வயதில் வீட்டிற்கு கையேந்தி வருவோர் பலர் உணவிற்கு ஏந்துவர். வீட்டில் இருக்கும் டிபனோ, குழம்போ கொடுத்தால் சந்தோஷமாக எடுத்துச் செல்வர். ஆனால் நாட்பட நாட்பட, காசுக்காக மட்டுமே கை நீட்டுகின்றனரே ஒழிய உணவு விரும்பப்படுவதில்லை. தீபாவளி பலகாரங்கள் விதிவிலக்கு. இப்பொழுதெல்லாம் மினிமம் ஒரு ரூபாயேனும் கொடுக்க வேண்டும். காலணா, எட்டணாக்கள் பத்து, இருபது பைசாக்கள் போல் காணாமல் போய் கொண்டிருக்கின்றன.

பல நேரங்களில் பலர், எதேனும் இல்லத்திற்கு என கையில் ஒரு ரசீது புத்தகத்துடன், கோயிலுக்கு என்று உண்டியலுடன், கல்யாணத்திற்கு எனத் தட்டுடன், படிப்பிற்கு என்று நோட்டுப் புத்தகத்துடன்...இவர்களது காரணங்கள் உண்மை என்றால் இயன்ற அளவு கொடுக்க மனம் இருந்தாலும், பல நேரங்களில் பொய்யாக இருப்பதால், தயக்கம்... உண்மை தானா அல்லது ஏமாற்றுத் தொழிலா? என்று கேள்வி.

இந்த கேள்விகளால், இப்பொழுது நான் கொடுப்பதென்னவோ, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மட்டும் தான். அவை பற்றியும் சில சமயம் தாறூமாறான செய்திகள். எதையாவது நம்பத்தானே வேண்டும், எனவே பதிவு செய்யப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நம்பிக் கொடுக்கிறேன். என்றாலும் , நம்பிக்கையின்மையால் எத்தனையோ உண்மையான உதவி தேவைப்படுவோருக்கு கிடைக்காமல் போகும் நிலை நிச்சயம் இருந்திருக்கலாம்.

ஆனால் யோசனை வரும் எப்படி ஒரு உலகத்தை நம் சந்ததியருக்கு விட்டுச் செல்லப் போகிறோம்?
நட்பாக மூன்றாமவர் சிரித்தால், எதற்காக என்ற கேள்விக்குறி...
உறவினரையும் நம்பாதே என்ற செய்திகளால் குழப்பம்...
எதை நம்புவது, யாரை நம்புவது என்ற ஒரு நம்பிக்கையற்ற உலகை...

என்ன செய்யலாம் இதை மாற்ற?

13 comments:

நட்புடன் ஜமால் said...

aajar

நட்புடன் ஜமால் said...

\\முகம் இறுக, உள்ளே மனம் உருக நகர வேண்டிய கட்டாயங்கள் பல நேரம் வந்ததுண்டு\\

ஆரம்பமே மனம் இருகலாயிடுச்சுங்க...

நட்புடன் ஜமால் said...

\\என்றாலும் , நம்பிக்கையின்மையால் எத்தனையோ உண்மையான உதவி தேவைப்படுவோருக்கு கிடைக்காமல் போகும் நிலை நிச்சயம் இருந்திருக்கலாம்.\\

நிதர்சனம்

நட்புடன் ஜமால் said...

\\ஆனால் யோசனை வரும் எப்படி ஒரு உலகத்தை நம் சந்ததியருக்கு விட்டுச் செல்லப் போகிறோம்?
நட்பாக மூன்றாமவர் சிரித்தால், எதற்காக என்ற கேள்விக்குறி...
உறவினரையும் நம்பாதே என்ற செய்திகளால் குழப்பம்...
எதை நம்புவது, யாரை நம்புவது என்ற ஒரு நம்பிக்கையற்ற உலகை...

என்ன செய்யலாம் இதை மாற்ற?\\

நல்ல சிந்தனை.

இதில் நானும் பங்கேற்கிறேன்.

எனக்கு வரும் யோசனைகலை பதிவிட்டு பகிர்ந்து கொள்கிறேன்.

ஆயில்யன் said...

//யோசனை வரும் எப்படி ஒரு உலகத்தை நம் சந்ததியருக்கு விட்டுச் செல்லப் போகிறோம்?
நட்பாக மூன்றாமவர் சிரித்தால், எதற்காக என்ற கேள்விக்குறி...//

உண்மைதான்!

நட்பாக சிரித்தால் என்ன விசயம் என்று நேரிடையாகவே கேக்கும் மனித மனங்களும் பெருகிவிட்டன! அப்படிப்பட்ட கேள்விக்களுக்கு பதில் சொல்வதை (என்னான்னு சொல்றது) விடுத்து கடந்து செல்லவே மனம் நினைக்கிறது!

சந்தனமுல்லை said...

நான் இப்படில்லாம் ஆராய்வது இல்லை, அமுதா! ஒன்னே ஒன்னுதன், மத்தின் பெயரால் வருபவர்களைத் தவிர கேட்பவர்களுக்கு
மனம் மாறுமுன் கொடுத்துடறது! ஏன்னா, I may not have another chance to meet them! அப்படியே ஏமாத்தினாலும்,
அவங்க சந்தோஷமா இருந்தா சரி! (போடற ஒரு ரூபாயால் ஒன்னும் பெரிசா செய்துடமுடியாதுதான்!) ஏன்னா, "இவர்களில் சிறியவர்களுக்கு
எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்"ன்னு படிச்சதும் நினைவில் வரும்! அதாவது, சிலசமயம் நம்மை செக் செய்வதற்கு
கடவுள்கள் கூட இப்படி வரலாம்! கேக்கறதுகு இடியாட்டிக்-கா இருக்கலாம்! ஆனா என் கருத்துக்கள் எனக்கு...கொடுக்காம இருந்தா
என் மனசாட்சி எனக்கு நிம்மதி கொடுக்காது! நீங்க போட்டிருக்கீங்க இல்லையா"முடிந்த நன்மைகள் செய்வோம்-"ன்ன்னு. அதே தான்..செஞ்சுட்டு போய்டது!
சிறுவர்களா இருந்தா பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வந்து கொடுத்துடுவேன்! சிக்னல் பிச்சைக்காரிகளையோ அந்தக் குழந்தைகளையோ
வெறுமே கடந்துவிட முடிவதில்லை என்னால்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//உணவு விரும்பப்படுவதில்லை//

அவர்கள் பிச்சைக்காரர்களே இல்லை.

அமுதா said...

நன்றி ஜமால்

நன்றி ஆயில்யன்

நன்றி சுரேஷ்

அமுதா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முல்லை.சிறுவரகள் உணவு பெறும்வரை ப்ரச்னை இல்லை. சிக்னலில் சில்லறைதான் கைவசம் இருக்கும். ஆனால், நாம் போடும் சில்லறைகளுக்கு தான் இவர்கள் கடத்தப்படுகிறார்கள் என்பதனால், எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருப்பது தான் என் ஆதங்கம். அதே போல், சில சமயங்களில் uஉதவி கேட்டு வருவோர்க்கு பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை என்று சிறுதொகை கொடுப்பேன், அக்காரணம் உண்மை எனில், பெரிதாகவே கொடுக்க விழையும் மனம். ஆனால் அது உண்மை என்று கூறும் நம்பகத்தன்மை இல்லை என்பதே என் வருத்தம். (5 ரூபாய் ஏமறலாம், 500 ரு. ஏமாற மனம் இல்லை).

தமிழ் அமுதன் said...

/// ஆனால், நாம் போடும் சில்லறைகளுக்கு தான் இவர்கள் கடத்தப்படுகிறார்கள் என்பதனால், எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருப்பது தான் என் ஆதங்கம்///

''வெரி குட்''
சிறுவர்களுக்கு பிச்சை போட மாட்டார்கள் என்ற நிலை
வந்தால்,குழந்தைகளை பிச்சை எடுக்கவைக்க கடத்த மாட்டார்கள்!

அருமையான விழிப்புணர்வு கருத்து!

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன செய்யலாம் இதை மாற்ற?

அதானே
என்ன செய்யலாம் என்ற இயலாமை கூட ஒருவிதத்தில் வறுமைதான்.

ராமலக்ஷ்மி said...

இப்படி இரக்கப் பட்டு இரக்கப் பட்டு இழந்திருக்கிறேன் நிறைய.
கொடுக்கையில் நிறைந்த மனம் ஏமாந்ததை அறிகையில் தடுமாறியதும் நிஜம். சரி, நாம நல்லதே நினைத்து செய்தோம் என தேறிவிடுவேன். ஆனாலும் நீங்கள் சொல்வது போல பெரிய தொகை என வருகையில் இப்போ சற்றே கவனமாய் இருக்க முயற்சிக்கிறேன். பதிவு செய்யப் பட்ட இரண்டு இல்லங்களுக்கு அடிக்கடி உதவுகிறேன்.

சிறுவர்கள் கையேந்த வைக்கப் படுவது தடுக்கப் பட வேண்டும் என்பதுதான் என் கருத்தும். ஆனாலும் நேரில் காணும் போது கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை.

சாணக்கியன் said...

அவசியமான விவாதம். இது குறித்த எனது பதிவு

http://vurathasindanai.blogspot.com/2006/03/blog-post_114257844577603570.html