என் மேகம் ???

Tuesday, January 6, 2009

ஒரு திண்ணையின் கதை

அந்த திண்ணையின் வயது இருபது இருக்கலாம்
இருபது என்பது மனிதர்க்கு தான் இளமை
சற்றே வளைந்து வழவழ என்று
வீட்டிற்கு அழகுதரும் கர்வத்துடன்
நான்கு படிகளுக்குக் காவல் இருக்கும்

எனக்கு அறிமுகம் அதன் பத்து வயதில்...

கையில் விளக்கோடும்
இடுப்பில் குடத்தோடும்
மணப்பெண்ணாக வந்த பொழுது
அழகுற வரவேற்றது...

கைநிறைய வளையல்களோடும்
மடிநிறைய சுமையோடும்
விடைபெற்ற பொழுது
வாழ்த்தி வழியனுப்பியது...

மடிச்சுமை கைச்சுமையாக
மழலைச் சிரிப்பொலிக்க
மீண்டும் வந்தபொழுது
மகிழ்ச்சியாகக் காத்திருந்தது

பேரம் பேசி பொருள் வாங்கும்பொழுது
பல மனிதர்களைக் கண்டுள்ளது
காற்று வாங்கி கதைக்கும் பொழுது
பல இரகசியங்களைக் கேட்டுள்ளது

நன்மைக்கும் தீமைக்கும் பேசா சாட்சியாகக்
காலம் காலமாக அலுக்காது இருந்தது
என்றாலும்...
பேரக்குழந்தைகளின் மண்குதிரையாகவும்
பொம்மை காரின் சறுக்குமரமாகவும் மாறி
மழலைகளை மகிழ்வூட்டிய பொழுதுதான்
அது கம்பீரம் கொண்டது

வீட்டின் எல்லா விசேஷங்களுக்கும்
மெளன சாட்சியாக நிமிர்ந்து நின்றது
குறுகிப்போனது என்னவோ அதை
ஆசையாகக் கட்டியவர்
சுமந்து வரப்பட்ட வேளைதான்

அன்று...
அவர் இறுதி யாத்திரைக்கு
மெளன சாட்சியாகக் கலங்கி நின்றது

இன்று...
புயலடித்து ஓய்ந்த ஒரு மழைக்காலத்தில்
நினைவுகளை மட்டுமே பதித்துவிட்டு
தன் முகத்தைப் புதைத்துக் கொண்டது
மேலும் களையிழந்த வீட்டின்
புத்தம் புதுப்படிகளுக்குள்...

12 comments:

அ.மு.செய்யது said...

//குறுகிப்போனது என்னவோ அதை
ஆசையாகக் கட்டியவர்
சுமந்து வரப்பட்ட வேளைதான்//

இங்க தான் திண்ணையில் ஒரு டிவிஸ்ட்...

நல்லா இருந்துச்சுங்க !!!

தமிழ் said...

திண்ணையின் கதைக்கு
பின்னால் தான் எத்தனை
உண்மைகள் ஒளிந்துக் கிடக்கின்றன.

நல்ல இருக்கிறது

ராமலக்ஷ்மி said...

ஹும். ஒவ்வொரு திண்ணைகளும்தான் எத்தனை எத்தனை சந்தோஷ தருணங்களுக்கும் சுமையான தருணங்களுக்கும் சாட்சிகளாக இருந்துள்ளன. எனது திண்ணையில் முடியும் போது சற்று இளைப்பாறுங்கள். அதை இவ்வருட தமிழ்மண விருதுக்காக ‘கலாச்சாரம்’ என்ற பிரிவின் கீழ் பரிந்துரையும் செய்துள்ளேன்.

இப்போது உங்களது இந்தத் திண்ணையை இங்கே மறக்காமல் பதிந்திடுங்கள். பின்னூட்டத்தில் சுட்டியைக் கொடுத்தால் பாலபாரதி இங்கே இணைத்திடுவார்.

Sumi Raj said...

திண்ணை மிது எனக்கும் ஆசை வந்து விட்டது...

ஆயில்யன் said...

//இன்று...
புயலடித்து ஓய்ந்த ஒரு மழைக்காலத்தில்
நினைவுகளை மட்டுமே பதித்துவிட்டு
தன் முகத்தைப் புதைத்துக் கொண்டது
மேலும் களையிழந்த வீட்டின்
புத்தம் புதுப்படிகளுக்குள்... //

:(

திண்ணை எப்பொழுதுமே சோகத்தையும் சந்தோஷத்தையும் ஒருங்கே தன்னகத்தே அடக்கிவைத்துக்கொண்டுதான் இருக்கிறது!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆரம்பத்தில் அசத்திட்டு
கடைசியில் கலங்கடிச்சிட்டீங்களே

மனசு பாரமாய் இருக்கிறது...

Dhiyana said...

//தன் முகத்தைப் புதைத்துக் கொண்டது
மேலும் களையிழந்த வீட்டின்
புத்தம் புதுப்படிகளுக்குள்... //

எங்க கிராமத்தில இருக்கிற மாற்றம் செய்யப்பட்ட எங்க வீட்டைப் பார்த்தவுடன், எனக்கும் கஷ்டமா இருந்தது.

தமிழ் அமுதன் said...

சும்மா சொல்ல கூடாது! உங்க கவிதைகளும்,
அதில் இடப்படுகின்ற விசயங்களும் எதோ ஒரு
புதிய உணர்வை உண்டாக்குகின்றன!

இந்த ''திண்ணை'' உங்க கவிதைகளில்
சிறந்தவைகளில் ஒன்று !

நெறைய! நெறைய!! நெறைய!!!

எழுதி எங்களுக்கு கொடுங்கள்.
நன்றி!!

butterfly Surya said...

போன வருடம் சாலையை அகலபடுத்த கிராமத்து வீட்டில் திண்ணையே காலியான போது ரொம்பவும் குலைந்து போனேன்.

இந்த கவிதையை அந்த திண்ணைக்கு காணிக்கையாக்குகிறேன்.

நெகிழ்ச்சியுடன்

சூர்யா

மேவி... said...

"மடிச்சுமை கைச்சுமையாக "
சூப்பர்க .... பத்து மசத இரண்டு வார்த்தைல சொல்லிடிங்க....

"மழலைகளை மகிழ்வூட்டிய பொழுதுதான்
அது கம்பீரம் கொண்டது"
திருக்குறள் சாயல் இருக்கு .....
"மேலும் களையிழந்த வீட்டின்
புத்தம் புதுப்படிகளுக்குள்..."
ஆமா. .....
நல்ல பதிவு .

கணினி தேசம் said...

திண்ணை..உங்கள் வாழ்வின் சுவடுகளை ஏந்தி நிற்பதை..அழகுற பதிவு செய்திருக்கின்றீர்கள்.

நன்றி.

Anonymous said...

நம் குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டது திண்ணை....

யதார்த்த நிலையை ரொம்ப இயல்பாய் சொல்லி இருக்கீங்க..வரிகள் அனைத்தும் உண்மை பேச முடிவில் எங்களுக்கும் நண்பனாகி விட்டது திண்ணை..