என் மேகம் ???

Saturday, October 31, 2009

முத்துக்களும் கவிதைகளும்...

எல்லா முத்துக்களும்
முத்துமாலைக்கு செல்வதில்லை

பவழத்தோடு சேர்ந்து
பளபளத்துக் கொண்டிருக்கலாம்

வைரத்தோடு சேர்ந்து
நிறம் மங்கி தெரியலாம்

சரத்திலிருந்து அவிழ்ந்து
காணாமல் இருக்கலாம்

எடுக்கப்படாத முத்துக்கள்
கோர்க்கப்படாத முத்துக்கள்

என்று பார்வை மறுபாடுகள்
நம் கண்களுக்குத்தான்

எங்கே இருந்தாலும் முத்துக்கள்
முத்தான தனித்தன்மையுடன் தான் உள்ளன...

நிராகரிக்கப்பட்ட படாத
கவிதைகள் போலவே!!!!

Friday, October 30, 2009

சொல்லப்படாத கதை ஒன்று

சொல்லப்படாத கதை ஒன்று
விழித்தெழுந்து சொல்ல‌ப்ப‌ட‌
ப‌ய‌ண‌ம் கொண்ட‌து

உழைத்துக் கொண்டிருந்தோருக்கு
க‌தை சொல்ல‌வோ கேட்க‌வோ
நேர‌மில்லை

உறங்கிக் கொண்டிருந்தோருக்கு
கனவில்கூட கதைக்கு
இடமில்லை

தொலைக்காட்சியில் க‌ட்டுண்டோருக்கு
இந்த‌ க‌தை கேட்க‌
விருப்ப‌மில்லை


ப‌டித்துக் கொண்டிருந்த‌ குழ‌ந்தைக்கு
க‌தை கேட்க‌வோ சொல்ல‌வோ
அனும‌தியில்லை

ப‌ய‌ணித்துக் க‌ளைத்த‌ க‌தையை
அம்மா அழைத்து
குழ‌ந்தைக்கு சொன்னாள்

எங்கோ...
சொல்லப்படாத கதை ஒன்று
விழித்தெழுந்து சொல்ல‌ப்ப‌ட‌
ப‌ய‌ண‌ம் கொண்ட‌து

Monday, October 26, 2009

வேலை வேலை வேலை...

வேலை வேலை வேலை...என்றுதான் சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. பத்திரிக்கை கூட படிக்க நேரம் கிடைக்காது வீடு, அலுவல் என்று ஓடும் வாழ்க்கை... ஓடுவது பெரிதல்ல.. வீடு அதிராமல் ஓட வேண்டும்... சோதனையாக வீட்டில் இருவருக்கும் ஒரே நேரத்தில் வேலைப்பளு. இரண்டு நாட்களுக்குள் குழந்தைகள் "சீக்கிரம் வாம்மா" என்று கூற ஆரம்பித்தனர். கவனித்துக்கொள்ள பாட்டியும் விளையாட சகோதரிகள் இருந்தாலும் அம்மா அப்பாவின் அருகாமையைத் தேடும் குழந்தைகள்...

தொழில் நுட்பத்தின் உதவியால் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை வரப்பிரசாதமாக இருந்தது. பிறர் உதவி தேவைப்படாத ஒரு நாளில் அடித்துப் பிடித்து ஆறரைக்கு வீட்டில் பெருமையுடன் நுழைந்தால் "இருட்டின பிறகு வராதே!!! வெளிச்சத்தில் வாம்மா" என்று கெஞ்சுவாள் சின்னப்பெண். மீண்டும் போராடி மறுநாள் ஐந்தரைக்கு நுழைந்தால் "நான் ஸ்கூலில் இருந்து வரும்பொழுது நீ இல்லை..." என்று இன்னும் எதிர்ப்பார்க்கும் குழந்தையின் ஏக்கத்தில் மனம் நெகிழ்ந்து போகும்.

என்றாலும் இந்த "வீட்டிலிருந்து வேலை" எனக்கு வசதி தான். அலுவலகத்தில் தாமதமாக உட்கார்ந்து "இன்னும் வீட்டிற்கு கிளம்பலையே!!" என்ற கவலை கிடையாது. அம்மா இருக்கும் மகிழ்ச்சியில் தம் வேலைகளிலும் விளையாட்டுக்களிலும் மூழ்கி விடுவர் குழந்தைகள். அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து ஒரு சின்ன முத்தத்தில் மகிழ்ந்து போகும் குழந்தைகளின் "இதெல்லாம் செய்யணும்னு உனக்கு எப்படிம்மா தெரியும்" என்று வேலை செய்பவளைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு மனம் சிரிக்கும். அமுதூட்டி படுக்கைக்கு அனுப்பும் வேளையில் "கதை சொல்லி தூங்க வைம்மா" என்பார்கள். "எனக்கு நிறைய வேலை இருக்குடா கண்ணா" என்றால், "ஒரே ஒரு கதை சொல்லிட்டு வந்து வேலை பண்ணும்மா" என்பார்கள்.

மனம் நான் அம்மாவிடம் அனுபவித்த சுகத்தை அசை போடும். கல்லூரி விட்டு வரும்பொழுது அம்மா இருந்து பரிமாற வேண்டும். இல்லை என்றால் உணவு உண்ணமாட்டேன் என்று அம்மா நான் வந்த பின் எனக்கு பரிமாறிவிட்டு வெளியே செல்வார்கள். அப்பொழுது அம்மாவிடம் பெறுவது எனது உரிமையாகத் தோன்றியது.

இன்று குழந்தைகள் தான் எவ்வளவு புரிந்து நடந்து கொள்கிறார்கள். விடுமுறையில் தான் என் நேரத்தைக் கேட்கிறார்கள். ""ஒரே ஒரு கதைம்மா..." என்று கொஞ்சல். மனதுள் மின்னஞ்சல் ஒன்றின் வரிகள் ஓடின "இளமையில் சக்தியும் நேரமும் இருக்கிறது, பணம் இல்லை... பின்பு சக்தியும் பணமும் இருக்கிறது நேரமில்லை... முதுமையில் நேரமும், பணமும் இருக்கிறது சக்தி இல்லை..."

"ஒண்ணு என்னடா ரெண்டு சொல்கிறேன்..." என்று கதை கூற ஆரம்பித்தேன். என் கற்பனை இறக்கை கட்டிக் கொண்டது. வேலை காத்திருக்கட்டும்.. இன்னும் கொஞ்சம் தூக்கம் தொலையலாம்... ஆனால் என் கண்மணிகளுடன் நேரம் தொலையலாமா? பல மணி நேரம் வேலைக்கு இருக்கும் நேரம், சில மணித்துளிகளிலேயே மகிழ்ந்துவிடும் குழந்தைகளுக்கு இல்லாமல் போகுமா? முதுமையில் புத்தகம் வாசிக்கும் சக்தியாவது இருக்க வேண்டும் என்று எண்ணியபடி கற்பனை உலகில் அவர்களுடன் சஞ்சரித்தேன். உதட்டில் புன்னகை தவழ உறங்கும் மொட்டுக்களை காணும் நிம்மதிக்கு உலகில் எதுவும் ஈடு கிடையாது.

Sunday, October 11, 2009

கிடைத்த இடைவெளியில்....

வணக்கம். கொஞ்ச நாளாக வேலை அதிகம். பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. யார் ப‌திவும் படிக்க இயலவில்லை என்பது தான் மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த மாதம் முழுதும் அப்படி தான் என்று எண்ணுகிறேன். எனவே கிடைத்த இடைவெளியில்....உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

தோழியின் மகள் கூறியுள்ளாள், "பட்டாசு வாங்க மாட்டேன், வெடிக்க மாட்டேன்... சின்ன கைகளால் செய்யப்படுகிறது". சின்னவள் சொன்னாள் "அவங்க கை சின்னதா இருந்தால் நாம என்ன செய்ய? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி கை இருக்கும்."

Jokes apart...
வீட்டிற்கு வந்தால், நந்தினியும் "பட்டாசு வாங்க மாட்டேன், வெடிக்க மாட்டேன்" என்கிறாள் அதே காரணம் தான். இந்த விழிப்புணர்வைக் கொண்டு வந்ததற்காக நிச்சயம் பள்ளிகளைப் பாராட்ட வேண்டும்.