என் மேகம் ???

Wednesday, July 23, 2008

அமெரிக்க அனுபவம்

சமீபத்தில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இது எனது 2-வது பயணம் தான் என்றாலும், இம்முறை ஊரில் ஒரு பாதசாரியாக சுற்றியதில் கிடைத்த சில அனுபவங்கள் இனிமையாக இருந்தன. என் ஏக்கம் எல்லாம் நான் கண்ட சில நல்ல விஷயங்கள் எல்லாம், ஒரு காலத்தில் இங்கு இருந்தவை...இன்று காண்பதற்கு அரியதாக ஆனவை...

அங்கு பாதசாரிகளுக்கு தான் முதலுரிமை. சிக்னல் மாறினாலும் நிதானமாக செல்லலாம் என்று தெரிந்தும், குடுகுடுவென நான் ஓடியது... சென்னை அண்ணா சாலையின் "pedestrian crossing" நினைத்துக் கொண்டு தான். சிறு வயதில் என் தந்தை சாலையைக் கடக்கும் பொழுது, "மெதுவாக போ, இது zebra crossing pedestrians preference first" என்று சொன்னது ஒரு கனவு போல் நிழலாடியது. என்னால் இன்று என் குழந்தைகளுக்கு "பார்த்து வேகமா ஓடு" என்று தான் கூற முடியும்.

அடுத்து பஸ் பயணம். ஜன நெருக்கத்தால் காத்தாட நம்மால் பஸ்ஸில் இங்கு பயணம் செய்ய இயலாது என்பது நிதர்சனம். சென்னை மக்களை இப்படி காத்தாட பயணம் செய்ய விட வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. ஊனமுற்ற ஒருவர் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார். பஸ் நின்றது. டிரைவர் சறுக்கும் படிகட்டுகள் மூலம், அவர் ஏறி அவர் இருக்கையில் இருத்தி
திரும்பும் வரை அனைவரும் வெளியே காத்திருந்தனர். (அட... பாதிக்குமேல் நின்றவர் நம்மூர் மக்களே!!!). ஏனோ, சமீபத்து இரயில் பயணம் நெஞ்சில் உறுத்தியது. அது ஒரு இரண்டாம் வகுப்பு பயணிகள் பெட்டி... அவரோ நிறை மாத கர்ப்பிணி. அவருக்கு middle berth. Lower berth மக்கள் நடுத்தர வயதுடையோரே.. அவர் கணவர் டிடியிடம் lower berth கேட்டார். டிடி "யாரேனும் கொடுத்தால், இவர்கள் படுப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை" என்று பொறுப்பாக பதில் கூறிச் சென்று விட்டார். கேட்கப்பட்டவரும் கொடுப்பதாக இல்லை, வேடிக்கை பார்ப்போரும் கொடுப்பதாக இல்லை. எனக்கு RAC. நான் என் சகோதரனுடன் சென்றதால், அவரை கீழே படுக்கச் சொல்லி அவருக்கு berth தர முயன்றேன். இதன் பிறகே ஒருவர், மனமிறங்கி பெருந்தன்மையுடன் தனது lower berth கொடுக்க முன் வந்தார்.ஏதோ, இந்தளவாவது மனிதாபிமானம் உள்ளதே என்று எண்ணிக் கொண்டேன்.
என்றாலும் இச்சம்பவம் என் மனதில் ஓர் உறுத்தலாகவே உள்ளது...
எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்? ஓரு ஆங்கில நாவலின் முடிவு நினைவுக்கு வருகிறது. கடவுளால் தோற்கடிக்கப்பட்ட சாத்தான், ஒரு காட்டிற்கு வந்து சேரும். நவ உலகின் எந்த மாற்றமும் இல்லாத மக்கள் சாத்தானை அன்புடன் வரவேற்பார்கள். சாத்தான் சிரித்துக் கொண்டே கூறும் "Let me make you civilized..."