என் மேகம் ???

Showing posts with label குழலினிது யாழினிது. Show all posts
Showing posts with label குழலினிது யாழினிது. Show all posts

Monday, November 21, 2011

தி குட் விட்ச்

உறவினர் வீட்டில் குழந்தையைக் காணச் சென்றிருந்தோம். குழந்தைக்குப் பெயர் வைப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். “ட, டு, டி” என்று தொடங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து மற்றொரு வீட்டிற்குச் சென்றோம். கோழிக் குஞ்சு இருந்தது. அதன் பெயர் கேட்டாள். “பெயர் வைக்கவில்லை... நீயே சொல்லு” என்றார்கள். "அம்மா கோழிக்குஞ்சுக்கு பெயர் வைக்கணும், “கோ”னு ஆரம்பிக்கிற பெயர் சொல்லு" என்றாள் :-)


----------------------------------------------------
குழந்தைகள் தினம்... வந்துவிட்டது மாறுவேடப் போட்டி...
”அம்மா, நான் princess இல்லைனா fairy”
“எல்லாரும் அதானே போடுவாங்க, ஏதாவது வித்யாசமா போடேன்...”
ம்ஹூம், எதற்கும் உடன்படவில்லை... அழகான டிரஸ் வேண்டும்... என்பது தான் விஷயம். சரி, பரிசு என்பது விட இஷ்டப்பட்டதஒ போடட்டும் என்றாலும் princess/fairy இல்லாமல் அவளுக்கு பிடிப்பது போல் என்று யோசித்தேன். witch வேஷம் போடுவோமா.... நீ நல்ல witch-ஆ இரு ; மேஜிக் பண்ணுவோம் என்றேன். மேஜிக் வேலை செய்தது. என் கணக்கு, ஒரு நாள் சமாளித்துவிட்டால் மறுநாள் கடைக்கு சென்று அவளுக்கு பிடித்தாற் போல் ஏதாவது ஒன்றை வாடகைக்கு எடுத்து மேடமை சமாளிக்கலாம் என்பது தான். ஆனால் மேடம், “யாழினி, தி குட் விட்ச்” என்று மிஸ்ஸிடம் பெயர் கொடுத்துவிட்டு வந்து, பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று என்னிடம் உத்தரவிட்டு விட்டார்கள்.

நான் எண்ணியது போலவே கடையில் “விட்சா? அப்படீனா?” என்று கேட்டார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். மேடமிடம் அவங்க பிறந்த நாளுக்கு வாங்கின டிரஸ் ஒண்ணு அழகா, ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கும். அதைப் போட முடிவு செஞ்சோம். விட்ச் பறக்க ஒரு விளக்குமாறு வாங்கினோம். சின்ன மந்திர கோல் கையில் கொடுத்தாச்சு. இப்ப பாக்கி, தலையில் தொப்பியும், மேஜிக்கும்.... சாக்லேட் & பூக்கள் வேண்டும் என்று requirements ரெடி... ப்ராஜெக்ட் என் கையில்...

விட்ச் தொப்பியாக உருமாற ஏற்றதாக வீட்டில் ஒரு தொப்பி இருந்தது. அதற்கு, டிரஸுக்கு மேட்சாக பிட் துணி வாங்கி தொப்பியில் ஒட்டி, கூரான வடிவில் உச்சியிலும் தைத்து ஒரு பூவும் (குட் விட்ச் இல்லையா?) வைத்து விட்டேன். தொப்பியில் நாலு சாக்லேட், இரண்டு ரோஜா போட்டு சார்ட் பேப்பரால் தைத்து விட்டேன். இனி “அப்ராகடப்ரா..” என்று சொல்லி கையைத் தொப்பியில் விட்டு நைசாக சார்ட்டைக் கிழித்தால் கையில் சாக்லேட் அண்ட் பூக்கள்... அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. “I am a witch, as you think me not bad witch. I use magic for good things..." என்று வசனம் பேசி மேஜிக் செய்யத் தயாராகிவிட்டாள்.


அம்மா, சாக்லேட் எல்லாம் கொடுத்தால் எனக்கு தான் ப்ரைஸ், என்று மேடம் விளக்குமாறுடன் பறக்க ஆரம்பித்தார்கள். எனக்கு சற்றே பயம். பரிசு கிடைக்காவிட்டால்... எதற்கு தான் போட்டி வைத்து சிறிசுகளை ஏமாறச் செய்ய வேண்டுமோ? “பாப்பா ப்ரைஸ் கிடைகாட்டா...” அவளைத் தோல்விக்கு தயார் செய்யும் நோக்கத்துடன் நான் கேட்க, அவளோ, “கிடைகாட்டா என்னம்மா? ஜாலியா பார்டிசிப்பேட் பண்ணேன்னு நினைச்சுக்குவேன்” என்றாள். அள்ளி அணைத்துக் கொண்டேன்.

மேடம் மூன்றாம் பரிசுடன் வந்தார்கள். மற்றவர்கள் போட்ட பல வேடங்கள் பற்றி சொன்ன பொழுது, சும்மா மாறுவேடப் போட்டி வைத்து எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்திருந்தால் பரிசு கிடைக்காது எந்த குழந்தையும் ஏமாறி இருக்காது என்று தோன்றியது.

ஆனால் விட்ச் கதை இங்க முடியல... மேடம் ஆண்டு விழா பாட்டுக்கு இருந்தாங்களாம். ஆனால் பாட்டு சரியா வரலைனு வேண்டாம்னுட்டாங்களாம். அப்ப இன்னொரு மிஸ், “நீ தான் விட்ச் வேஷம் போட்ட... என் நாடகத்தில நீ தான் விட்ச்...” அப்படீனு வாய்ப்பு கொடுத்துட்டாங்க... “பார்த்தியா ... பாட்டுல இல்லைங்கறதால தான் நீ இப்ப நாடக்த்தில...” அப்படீனு பெரியவங்க சின்னவங்களை தேத்தறது... அட அட!!!!

Wednesday, July 27, 2011

தமிழ் படும் பாடு

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தால் பல சுவாரசியங்கள் நிகழும். கணக்கில் கூட்டல் கழித்தல் சொல்லிவிடலாம், ஆனால் தமிழில் என்ன ல்,ர,ன என்று மட்டுமா... அ ஆ இ ஈ....சொல்லிக் கொடுப்பதற்குள்.... அம்மம்மா....

க்+உ என்ன...
”கு ”
வெரிகுட்...”மாடு” --- எதுல முடியுது....
“உ”
வாவ் சூப்பர். பத்து ---- எதுல முடியுது .... “எ”
அடடா.... பத்தூஉ ... சொல்லு...எப்படி...
ஊ....
ம் அப்படி தான்... எதுல முடியுது...”எ”
”எ” எழுது...
“அ”

அடுத்து “எ” எது “அ” எது என்ற பாடத்தில் நமக்கு “உ” மறந்து போனதோடு... ”அ” “எ” மாற்றிவிட்டார்களோ என்ற சந்தேகமும் வந்துவிடும்.

நாய் எழுது
“நாய்”
சூப்பர்... தாய் எழுது...
“த இ”
“இ... முதல்ல தானே வரும்”
“த ஈ”
“ஈ இங்க வராதுமா.... முதல்ல தான் வரும்...எழுது..”
“ஈத”
இங்க பாருடா... இந்த “ய்” தான் நடுவில், கடைசில வரும்... “இ” “ஈ’ எல்லாம் முதல்ல வரும்...ஓ.கே...எழுது
“தாய்”
அம்மாடி....”இரண்டு” எழுது
“யிரந்து”

தமிழ் பாடம் போதும்... தாய் எழுதினது போதாதா இந்த தாய்க்கு...

சின்னவங்க இந்த கூத்துனால்... பெரிய்வங்க வந்து தமிழ் சொல்லிக் கொடுப்பாங்க... அவங்ககிட்ட...

முதல்ல நான் சொல்றதை நீ படி... அப்புறம் சொல்லிக் கொடுக்கலாம்.
சரிம்மா...
இதை படி
“நதியின்...”
“நதினா என்ன?”
ரிவர்
ம்... படி
“பிலையன்று...”
பிலையில்லை... பிழை....
எனக்கு “ள” வராது...
அதென்ன வராது... கவனி.. நாக்கை இங்க வச்சா... ல, அப்புறம் ள...அப்புறம்...
போம்மா... நான் இங்கிலீஷே படிச்சுக்கிறேன்.
தப்பு... தாய்மொழி தெரியாமல் இருக்கலாமா...
எனக்கு தான் பேசத் தெரியுமே
இல்லைடா...(சாரி ரெண்டு பேருமே எஸ்கேப் ஆனதால்... அன்னிக்கு தமிழ் எஸ்கேப் ஆச்சு)

”அ” ”உ” “எ” இடம் மாற
”ல” “ள” “ழ” தடம் மாற
“ன” “ண” “ந” தடுமாற
மழலையிடம்
தமிழ் தவிக்கிறதா?
தமிழிடம்
மழலை தவிக்கிறதா?

Sunday, May 29, 2011

என்ன லாஜிக்கோ?

வழியெங்கும் அம்மா படத்தைப் பார்த்தவுடன் குட்டிப்பெண்ணிற்கு சந்தேகம், “பழைய சீப் மினிஸ்டர் என்ன செய்வாங்க?”. அவங்க வீட்ல் இருப்பாங்க என்று சொல்லிவிட்டு,” நீயும் அக்காவும் சண்டை போடற மாதிரி அவர் கட்டின ஆபீசுக்கு இவங்க வரமாட்டேனுட்டாங்க. கோடிக்கணக்குல பணம் வேஸ்ட்” என்றோம். ”அய்யோ இவ்ளோ பணம் வேஸ்ட் பண்ணிணால் அப்புறம் அவங்களால எதுவும் வாங்க முடியாது” என்றாள். அப்புறம் டாக்ஸ் பற்றி நாங்க அவளுக்கு சொல்லி ஒரு ஒரு மணி நேரம் கேள்வி பதில் தான். பிடிக்குதோ பிடிக்கலயோ புது ஆபீசுக்கு போய் வேலை பாக்க வேண்டியது தானே என்று முடித்தாள்.

**********************************************************************

பாப்பா ஸ்கூல்ல இங்கிலீஷ்ல் பேசுவீங்களா தமிழ்ல பேசுவீங்களா என்றோம். “டமில் நாட்” என்றாள்

***********************************************************************


காரில் பின்சீட்டில் தான் பயணம் செய்வாள் குட்டிப் பெண். ஏன் என்று கேட்டதில்லை. அவள் மாமாவுடன் தனியாக சென்றாள். முன்சீட்டில் உட்காரச் சொன்னதற்கு மறுத்து விட்டாள். ஆக்ஸிடண்ட் ஆனால் முன்சீட்டில் இருந்தால் கதவைத் திறக்க முடியாதாம். பின் சீட் என்றால் திறக்கலாமாம். என்ன லாஜிக்கோ? இப்ப ஆக்ஸிடண்ட் ஆனால் என்ன செய்ய என்று கேட்டதற்கு, போன் பண்ணி எங்கம்மாவை வரச் சொல்லி என்னை விட்டுடுங்க, நீங்க காரை சர்வீஸ் பண்ணிட்டு எடுத்துட்டு வாங்க என்றாளாம்.

************************************************************************

Tuesday, November 30, 2010

இன்னும் மேலே!!!

உங்கள் குழந்தை என்ன ஆகவேண்டும் என்ற கனவேதும் இன்றி, அவர்களைக் கனவு காண விட்டால் அந்த கனவைப்பற்றி கேட்கும் சுவாரஸ்யமே தனி. ”டீச்சர் , சயண்டிஸ்ட் ” எல்லாம் ஆக வேண்டாம் என்று சென்ற வருடம் சொன்ன பெண்ணிடம் இந்த வருடம் கேட்டேன்.

“என்ன ஆகலாம்னு முடிவு செஞ்சாச்சா நந்து?”

“இன்னும் இல்லைமா”

“டாக்டர்.. இஞ்சினியர் ... இதெல்லாம் வேண்டாமா?” (மெட்ரிக்கா சிபிஎஸ்ஈயா என்று எனக்கு இன்னும் கன்ப்யூஷன்... இந்த மாதிரி கனவு என்றால் மெட்ரிக்கில் தூக்கிப்போட்டு விடலாம் இல்லையா?)

“அய்யோ டாக்டர் இல்லைமா... எனக்கு இரத்தம்னாலே பயம்... அதுவுமில்லாம... someone's life is at risk"

"இஞ்சினியர்?"

"கவுன்சிலிங்க்கு நம்ம வீட்டுக்கு வந்த அக்கா சொன்னாங்கம்மா , நாம் எப்பவும் நம்ம அம்மா அப்பாவுக்கு மேலே போகணும். நான் எங்க அம்மா அப்பாவுக்கு மேலே வரணும்னு இஞ்சினியர் ஆக்றேன். நீ இன்னும் மேலே போகணும்னு...”

”அதனால?”

“நான் இன்னும் மேலே போகணும்னா பைலட் ஆகலாம்னு யோசிச்சேன்மா.... but. if I am a doctor someone's life is at risk. If I am a pilot my life is at risk. அதனால் இப்போதைக்கு ரைட்டர் இல்லைனா ஆர்கியாலஜிஸ்ட் ஆகலாம்னு இருக்கேன்...”

பார்ப்போம்... இன்னும் காலம் விரிந்து கிடக்கிறது அவளுக்கு, அவளுக்கானதைத் தேர்ந்தெடுக்க...

Wednesday, July 14, 2010

என்னத்த சொல்ல?

குட்டிப் பெண்ணுக்கு திடீரென 2012 பயம். “அம்மா காலண்டர்-ல தேதி தீர்ந்துட்டால் உலகம் அழிஞ்சுடும். நாமெல்லாம் செத்துடுவோம்” என்று ஒரே அழுகை. வேறு காலண்டர் வாங்கலாம். எங்க பாட்டி, பாட்டிக்கு பாட்டி எல்லாம் வாழ்ந்த உலகத்தில், நீ பாட்டியாகி வாழ்வாய் என்றெல்லாம் கூறி சமாதானம் செய்ய முயன்றேன். ம்ஹூம் ... திடீரென சற்றே யோசித்து, “செத்து போனால் மேலேயா போவோம்” என்றாள். “ஆமாம்” என்றேன். “அங்கே டி.வி இருக்குமா?” என்றாள். “ம்” என்றேன். ”அப்ப சரி ” என்று சென்றுவிட்டாள். ஹ்ம்ம்.... என்னத்த சொல்ல?


“அம்மா காலிஃப்ளவர் ஃப்ரை பண்ணிக் கொடும்மா... ரொம்ப நாள் ஆச்சு” என்றாள்.
“சரியா வர மாட்டேங்குது கொஞ்ச நாள் ஆகட்டும்” என்றேன்
“முயற்சி செய் அம்மா, உனக்கு நல்லா வரும்” என்றாள் (சுட்டி டி.வி டோரா எபக்ட்)
“அட சே!!! கடைக்கு காலிஃப்ளவர் சரியா வர மாட்டேங்குது , சமைக்க சரியா வர மாட்டேங்குதுனா சொன்னேன்” . ஹ்ம்ம்.... என்னத்த சொல்ல?

Monday, March 15, 2010

ஃபிஷ்பெக்கர்

பறவைகளின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
நான்: இது என்ன?
யாழ்: க்ரோ

இது என்ன?
வுட் பெக்கர்.

ஏன் வுட்பெக்கர்?
மரத்த கொத்தும்.

இது என்ன?
"..."

"மீன் கொத்திட்டு இருக்கு பாரு."
"ஃபிஷ் பெக்கர்"


**************************************************

நான்: இது என்ன?
யாழ்: நேஷனல் ஃப்ளேக்

இது என்ன?
நேஷனல் எம்ப்ளம்

இது என்ன?
நேஷனல் டைகர்


**************************************************

யாழ்: "அம்மா பசிக்குது."
நான்: "பழம் சாப்பிடறியா?"
"வாழைப்பழம் இருக்கா?"
"இருக்கு"
"அது வேண்டாம். ஆப்பிள் இருக்கா?"

"இருக்கு "
"அது வேண்டாம். கொய்யாப்பழம் இருக்கா?"

"இல்லை"
"கொய்யாப்பழம் தான் எனக்கு பிடிக்கும். அது தான் வேணும்"
???


*************************************

Thursday, January 28, 2010

இங்கிலீஷ் அமெரிக்கா

குட்டிப் பெண்ணுக்கு ஊருக்கு போவது முன்பெல்லாம் பிடிக்காது. இப்ப "மீ த ஃபர்ஸ்ட்". ஆனால் மேடம் அஞ்சு நாள் ஊருக்கு போகணும்னு கிளம்புவாங்க... அப்புறம் போன உடனே "வீட்டுக்கு போகலாம்னு" ஆரம்பிப்பாங்க... இப்ப அப்படி ஊருக்கு போகணும்னு சொன்னவங்க கிட்ட
"நீ ஊருக்கு போ...நான் அமெரிக்கா போறேன்..." என்றேன்.
"இங்கிலீஷ் அமெரிக்காவா தமிழ் அமெரிக்காவா?"
"ம்...இங்கிலீஷ் அமெரிக்கா"
"சரி போ"


*****************************

மேடம்க்கு லீவு... எனக்கு ஆபீஸ்... ஆனாலும் பெரியவங்களை தொந்தரவு படுத்தக் கூடாதே!! எப்பவும் போல் குளி, சாப்பிடு என்றேன்... கோபம் வந்துவிட்டது. "நீ மட்டும் உன் இஷ்டத்துக்கு இருப்ப. நான் என் இஷ்டத்துக்கு இருக்கக்கூடாதா?". ஒரு நிமிஷம் என்ன சொல்றதுனு புரியலை... அப்புறம் , "எல்லாமே நீயா செய்யறப்ப உன் இஷ்டத்துக்கு இரு" என்றேன்... நியாயமாகப் பட்டது போல்.. ஒத்துக்கொண்டாள்

*****************************

ஆபிளில் இருந்து சீக்கிரம் வந்து பீச்சுக்கு அவளுடன் சென்று கொண்டிருந்தேன். அங்கு காக்கை கூட்டம் இருந்தன. நம்ம குட்டீஸ்க்கு உடனே சந்தேகம் வருமே ... ஒரு புழுவைப் பார்த்தால் கூட அதோட அம்மா அப்பா எங்கே என்று கேட்டு ..எல்லாம் ஆபீஸ்ல இருந்து வர்ற வரை அது விளையாடும்னு சமாளித்தாலும் கேள்வி கேட்டு...
"இதெல்லாம் அம்மா காக்காவா அப்பா காக்காவா?"
"ரெண்டும் இருக்கு"
"எதெல்லாம் அம்மா காக்கா?"
"தெரியலை பார்க்கலாம்"
அப்பொழுது சில காக்கைகள் பறந்தன.
"அதெல்லாம் ஏன் சீக்கிரம் போகுது"
"ம்... அதெல்லாம் வீட்டுக்கு போகுது"
"ஓ!! அப்ப அதெல்லாம் அம்மா காக்காவா?"
"..."

***********************
ஃபைட்டர் ஃபிஷ் முட்டை போட்டிருந்தது. எனவே பெண் மீனைத் தனியாக போட்டோம்.
"மேல் ஃபிஷ் என்ன பண்ணும்?"
"மீன் குட்டியைப் பாதுகாக்கும்..."
ஏனோ அவளுக்கு சமாதானம் ஆகவில்லை.

மாலை அலுவலகத்திற்கு ஃபோன். "அம்மா... முட்டை எல்லாம் காணோம். இந்த மேல் பைட்டர் தின்னுடுச்சு போல... நாம தப்பு பண்ணிட்டோம். அடுத்த தடவை ஃபீமேல் ஃபைட்டரை தான் பாதுகாக்க விடணும்"

************************

Monday, August 17, 2009

ஒரு திங்கட்கிழமை காலை

ஸ்வைன் ப்ளுவிற்க்காக ஒரு வாரம் பள்ளி விடுமுறை. விடுமுறையை மிக இனிமையாகக் கொண்டாடினார்கள் குழந்தைகள். எல்லா அன்புச் சகோதரிகளும் என்று எங்கள் வீட்டில் ஐந்து குழந்தைகள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள். நடுவில் எங்கள் டார்ச்சரையும் நாங்கள் விடவில்லை... நேரத்திற்கு எழுப்பி எப்பொழுதும் போல் பல் தேய்த்தல், குளியல், காலை உணவைக் கொடுத்துவிட்டு "என்னவோ செய்ங்க" என்று ஆபீஸ் கிளம்பினோம். முத்தாய்ப்பாக சனிக்கிழமை நந்தினியின் பிறந்த நாள் கொண்டாட்டம். எல்லா குட்டீஸும் எஞ்சாய் தான்....

நேற்றுவரை ஆறு மணிக்கு எழுந்தவர்களுக்கு இன்று தான் தூக்கம் தூக்கமாக வருகிறது. பள்ளிக்கு பிறந்த நாள் உடை போட வேண்டும் என்ற நினைவூட்டியவுடன் துள்ளி எழுந்து நந்தினி எட்டு மணி வேனுக்கு ஏழரைக்குத் தயார். யாழினி "எனக்கு தூக்கமா வருது... ராத்திரி சரியாவே தூங்கலை" என்ற வழக்கமான பள்ளி செல்லும் நாளுக்கான மனதுடன் விழித்தாள்.

எனக்கு மனதுள் ஸ்வைன் ப்ளூ உறுத்திக் கொண்டிருந்தது. அதுவும் சின்னப் பெண் கவனமாக இருக்க வேண்டும் என்று கவலை.

"டாய்லெட் எல்லாம் போனால் கையை நல்லா கழுவணும். சரியா"
"இது நாங்க எப்பவும் செய்யறது தான் அம்மா..."
"சாப்பிடறதுக்கு முன்னாடி நல்லா கை கழுவணும். சரியா?"
மெலிதான புன்னகை. "எப்பவும் அப்படி தான் அம்மா..."
"தும்மினால் கர்ச்சீப்ல நல்லா மூக்கையும் வாயையும் மூடிக்கணும்..."
இப்பொழுது மெலிதான புன்னகையும் குறும்பான பார்வையும்...
"மத்தவங்க தும்மினாலும், மூக்கை மூடிடு"
இப்பொழுதும் மெலிதான புன்னகையும் குறும்பான பார்வையும்...
"உன் மூக்கை, தும்மினவங்க மூக்கை இல்லை" என்ற அவள் தந்தையின் குறும்பில் வாய் விட்டு சிரித்தாள்.

ம்... மெலிதான கவலை இருக்கின்றது. ஆனால் , பாதுகாப்பு முறைகளைச் சொல்லித் தருவதைத் தவிர என்ன செய்ய இயலும்? இன்று என்று வானமும் பொத்துக் கொண்டு கொட்டுகிறது!!!

இறைவா.... ஸ்வைன் ப்ளூ மேலும் பரவாமல் பார்த்துக்கொள்!!!!

Wednesday, July 1, 2009

என்னோட ராசி என்ன ராசி?

காலையில் வானொலியில் இராசி பலன் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனாலோ என்னவோ நந்தினி வந்து அவள் இராசி என்ன என்று கேட்டாள். எங்க வீட்டு இராசி பலன் காமெடி:

நந்தினி : நான் என்ன இராசி?
நான் : லியோ
நந்தினி : அப்படீனா?
நான் : சிங்கம்
நந்தினி: உர்.... நான் சிங்கம்.
நான்: தமிழ்ல வேற இராசி வரும். தராசுனு நினைக்கிறேன்
நந்தினி: தராசுனா என்ன மிருகம்?
நான்: ???

யாழினி: நான் என்ன இராசி?
நான்: ஏரிஸ் - ஆடு
யாழினி : ஓ!! (சற்று யோசித்து) அதான் அம்மா.. நான் பேசும்பொழுது எல்லாம் "மே மே" னு சத்தம் வருதுமா...
நான்: ??? (விவேக்கோட காக்கா பிரியாணி காமெடி நினைவுக்கு வந்தது)

இதில் சிங்கம் ஆட்டை வெல்லும் என்று வேறு ஒரு சண்டை. நான் சொன்னேன் "இது மலை ஆடு, சிங்கத்துக்கு ஈடு கொடுத்து சண்டை போடும் தெரியுமா?". வேற என்ன சொல்ல, இரண்டு பேரும் சமம் என்று சொல்லணும் இல்லையா?

Monday, June 22, 2009

குழந்தைகளும், ஒரு கவளம் சோறும் , கதைகளும்

"நானே சாப்பிடறேன் அம்மா", என்றபடி கையில் இருந்த தட்டை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாள் குட்டிப்பெண். என்ன செய்வது என்று ஒரு நொடி புரியாமல், அவர்களாகவே சாப்பிடும் பெண்களைப் பார்த்தேன். பெரியவள் ஒவ்வொரு கவளமாக சிந்தாது சாப்பிட்டாள். சின்னவள் எடுத்த கவளத்தில் பாதி கீழேயும் மீதி வாயுள்ளும் சென்றது. இந்த ஒரு கவளம் சோறு முன்பெல்லாம் உள்ளே செல்ல முன்பு என்னென்ன செய்ய வேண்டி இருக்கும்!!!

கோபமும், பொறுமையின்மையும் மட்டுமே என் குணமோ என்று அறிவு என்னைச் சுட்ட கணங்களில் , உள்ளிருந்த அன்பு, பொறுமை என்ற உணர்ச்சிகளுடன் என் கற்பனை வளங்களையும் ஊற்றெடுக்கச் செய்தவர்கள் இவர்கள் தானே?

ஒரு கவளம் சோறு உள்செல்ல, உணவைப் பங்கிட்டுக் கொண்ட காகமும், குருவியும், அணிலும், பூனையும், நாயும், (ஒற்றைக் காலிழந்த கருப்பு நாயும்) உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளைத் தேடிச் சென்றுவிட்டன. அளந்து தண்ணீர் செலவழிக்கும் வேளையிலும் உனக்கு உணவு உள் செல்ல நீ கைகளால் அளைந்து விளையாடிய நீர் முகந்த கோப்பையும், தெறித்த நீர்த்துளிகளின் நினைவு இப்பொழுதும் மனதைக் குளிர்விக்கின்றது.

எத்தனை கதைகள் உருவாயின? காகம், மயில், குயில் கிளி எல்லாம் சோற்றுருண்டையை முட்டையாகப் பாவித்து "என் முட்டை நீ சாப்பிடவில்லையா?" என்று என் நா வரள குரல் கொடுத்து கெஞ்சும். மீன் குஞ்சை எடுத்துச் சென்ற முதலையைத் தேடியும், முயல்குட்டியைக் கடத்திச் சென்ற டினோசரைத் தேடியும் நீங்கள் செய்த வீர சாகசங்கள் நினைவில் இருக்குமா? மீன் அம்மாவும் , முயல் அம்மாவும் வேறு அம்மாவிடம் போய் விட்டார்களோ?

உனக்கு சொன்ன கதையொன்றை நான் புத்தகமொன்றுக்கு அனுப்ப, எனக்கு கிடைத்த ஆறுதல் பரிசே மிகச் சிறந்த பரிசாக மின்னுகிறது. ஸ்கூலுக்கு செல்வதால் புத்திசாலியான யாழ் பாப்பா கதை தோழியால் இன்னொரு பள்ளியில் சொல்லி குழந்தைகள் இரசித்ததும் எனது மகிழ்ச்சியான தருணங்கள். நான் குரலெடுத்து பாடிய தாலாட்டில் நிம்மதியாக நீங்கள் தூங்கிய பொழுதுகள் தந்த நிம்மதி வேறெதற்கும் ஈடாகாது.

காணாமல் போன குழந்தையைத் தேடி வண்டிடம் வினவ, வண்டு நான் தோட்டத்தில் தான் திரிவேன், காற்றைக் கேள் என்று கூற, காற்றிடன் சொன்னவுடன் ஊரைச் சுற்றிய காற்று சற்று தொலைவில் குகையில் தூங்கும் குழந்தையைச் சொல்ல நீங்கள் அந்த குழந்தையை அம்மாவிடம் சேர்த்தது போன்ற கதைகள் பொக்கிஷமாக என் நினைவுகளுக்குள். இன்னும் உங்களுக்கு சமயம் பார்த்து சொல்ல தேவதைகளும், பட்டாம்பூச்சிகளும் , பூக்களும் , பறவைகளும் , விலங்குகளும் , பூஞ்சோலைகளும், நிலவும், தென்றல் காற்றும் என்னுள் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது எல்லாம் உங்கள் அறிவார்ந்த கேள்விகளுக்குப் பதிலை வலையில் தேடுகிறேன். இது வரை குழந்தைதனங்களை இரசித்த மனம், இனி, அறிவாற்றலையும் தனித்தன்மையும் இரசிக்க தயாராக வேண்டும். என் கற்பனையைத் தூண்டிய செல்வங்கள் இனி என் அறிவுக்கும் சவால் விடுவார்கள். பெருமிதம் கலந்த ஏக்கத்துடன் அவர்களைப் பார்க்கிறேன்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


"அம்மா நீயே ஊட்டி விடேன்", உடல் முழுதும் சோற்றுப் பருக்கைகள் அலங்கரிக்க குட்டிப்பெண் அழகாக சிரித்தாள். "கை கழுவிட்டு வா, ஊட்டி விடறேன்" என்றேன். "இப்ப ஊட்டறேன். இனிமேல் நீ வளர்ற, நீயாவே சாப்பிடணும் சரியா?" என்றபடி புதிய கதைகளைத் தேடியது என் மனம்.

Wednesday, May 27, 2009

ஒரு நாள் நானும்...

ஒவ்வொரு வயதிலும் பெரிதானால் என்னவாக ஆக வேண்டும் என்ற கேள்வி வரும். சிறுவயதில் முதலில் டீச்சர் டாக்டர் என்று தான் பிம்பங்கள் மனதில் ஈர்க்கும். அதன் பின் அது மாறி மாறி நினைத்தது (அ) நினைக்காதது என்று ஏதோ ஒன்றில் முடியும்.

நான் பெரியவள் ஆனால் என்ன ஆகணும் என்று எங்களிடம் கேள்வி எழுப்பிய யாழ்குட்டி , இப்பொழுது முடிவு செய்து விட்டாள்.. டாக்டர் ஆக. அவளும் அவள் தோழியும் டாக்டர் ஆகிறார்களாம். எனவே கிடைக்கும் புத்தகமெல்லாம் படிக்கிறார்கள், கிடைக்கும் இலையையும் பூவையும் மருந்தாக்க முயல்கிறார்கள். "டாக்டராகி என்ன செய்வ?" என்றேன், காசு வாங்காமல் ஊசி போடுவாளாம்.

ஒரு டி.வி ஷோவில் கூட நான் டீச்சர் ஆவேன் என்ற நந்துவுக்கு இப்பொழுது அது விருப்பமில்லை. "நான் பெரியவளாகி என்ன ஆக" என்று என்னிடம் கேட்டாள். "நீ வளர வளர உனது விருப்பங்கள் பொறுத்து , நீ ஆக நாங்கள் உதவுவோம்" என்றேன். சற்று யோசித்து விட்டு டீச்சர் , சயண்டிஸ்ட் இல்லாமல் ஏதோ ஒன்று என்றாள். ஏன் என்றேன். க்ளாஸ் லீடரா இருந்தே இந்த பசங்க தொல்லை தாங்கலை. இதில் டீச்சர் ஆனால் அவ்ளோதான், நான் மாட்டேன்பா என்றாள். சயண்டிஸ்ட் என்றால் என்ன கண்டுபிடிக்கணும்னு இரவு பகலாக யோசிக்கணுமாம். அதனால் வேண்டாமாம்.

இன்னும் இவர்கள் என்ன எல்லாம் ஆக ஆசைப்பட்டார்கள் என்று பதிவு செய்து அவர்கள் ஏதோ ஆகும் பொழுது கொடுத்தால் என்ன சொல்வார்கள்? (உனக்கு வேற வேலையே இல்லையா அம்மா என்று?)

Monday, April 20, 2009

சின்ன சின்ன தருணங்கள்

பெண்கள் இருவரும் வளர்கிறார்கள் என்று அவர்களது வார்த்தைஜாலம் சொல்கிறது. அவர்களது அலுப்பு, நம்பிக்கை, உற்சாகம் அனபை வெளிப்படுத்தும் விதம், சில சின்ன சின்ன புத்திசாலித்தனங்கள் என்று எல்லாமே பூரிக்க வைக்கின்றன.

சின்ன சின்ன புத்திசாலித்தனம்?
குட்டிப்பெண் விலங்குகளைக் கண்டுபிடித்து பொருத்தும் விளையாட்டு விளையாடினாள். பொருத்தியதும் தனியாக வைக்கச் சொன்னேன். முதலில் பொருத்தி பொருத்தி தனியாக அடுக்கியவள், பின்பு அந்த அடுக்கியதன் மீதே வைத்து பொருத்த ஆரம்ப்பித்தாள்.

சின்ன சின்ன குறும்புகள்?
என்னை மறைந்து வந்து அடிக்கிறாள். "யாருடா அடிச்சது" என்றால், "அம்மா நீயே அடிச்சுகிட்ட தெரியலையா?" என்கிறாள்.

சின்ன சின்ன அலுப்புகள்?
லொக் லொக் என்று இருமிக் கொண்டிருந்தாள் குட்டிப்பெண்
நான்: "கஷாயம் போட்டு தரவா?"
கு.பெ: வேண்டாம்
நான்:வெந்நீர் வச்சு தரவா?
கு.பெ:வேண்டாம்
நான்:விக்ஸ் போட்டு விடவா?
கு.பெ:பேசாமல் அந்த பாயாசத்தையே தா!!!

சின்ன சின்ன நம்பிக்கைகள்?
தலைவலித்தது. ஆனாலும் டி.வி சத்தம் குறையவில்லை.
நீங்கள் எல்லாம் என்னை பார்த்துக்கவே மாட்டீங்க என்றேன். உடனே குட்டிப் பெண் "நான் உன்னை பார்த்துக்குவேன் அம்மா" என்றாள். "சும்மா சொல்லாதே" என்றேன். "நம்பிக்கை வைம்மா. ஒரு முறை முயற்சி பண்ணி பாரேன். அப்புறம் சொல்லு" என்றாள். சுட்டி டி.வி அவளது நம்பிக்கையை நல்ல ரேட்டிங்கில் வைத்துள்ளது.

சின்ன சின்ன கலாய்ப்புகள்?
கைகால் எல்லாம் வலிக்குது, எனக்காக கொஞ்சம் எக்ஸர்சைஸ் பண்ணேன் என்றவுடன் குட்டிப்பெண் தீவிரமாக எக்ஸர்சைஸ் செய்தாள். அம்மா இது உனக்கு ஓவரா இல்லை என்று கலாய்க்கிறாள் பெரியவள்

நாங்க ஆபீஸ்ல ஒரு "வாக்கிங் க்ளப்" ஆரம்பிச்சிருக்கோம் என்றால், பெரியவள் "அம்மா, தப்பா சொல்ற.. உனக்கு டாக்கிங் க்ளப் தான் ஒத்து வரும்" என்கிறாள்.

குழந்தைகளிடையே காணும் அன்புத்தருணங்கள் மனதை நனைக்கின்றன

இப்பொழுது நந்து வளர வளர சீண்டல் வளர்கிறது; யாழ் வளர வளர அடம் அதிகமாகிறது. சித்திரை பிறக்க கண்ணாடி, காசு, பழம் எல்லாம் வைத்திருந்தேன். காலையில் கண்ணை மூடி அழைத்துச் சென்று காட்டுவதாகக் கூறினேன். அதன்படி நந்துவுக்கு செய்தேன். சற்று நேரத்தில் யாழ் விழிக்க, "யாழ் கண் திறக்காதே" என்று கூறி நந்து அவள் கண்ணை மூடி அழைத்துச் சென்றது அழகு. இந்த அன்பிற்காகவே வருடா வருடம் வைக்க வேண்டும் சித்திரை கனி.

இந்த அன்பு கொஞ்ச நேரம் தான். மீண்டும் சண்டை. இருவரையும் ஒரு அறையுள் அனுப்பிவிட்டு, சமாதானம் ஆகி இருவரும் சேர்ந்து வெளியே வந்தால் ஒழிய என்னுடன் பேச வேண்டாம் என்றேன். இரண்டு நிமிடம் கூட இல்லை இரண்டு பேரும் வெளியே வந்து "வெவ் வெவ் வெவ்.." என்று முகம் காட்டிவிட்டு கூடி விளையாடினார்கள். அழகு. மீண்டும் சண்டை என்பது வேறு விஷயம். சண்டையிடும் பொழுது விலக்கி வைக்காது சேர்த்து வைத்து சேர்ந்து வந்தால் தான் உண்டு என்ற முறையே அவர்களிடையே அன்பை வளர்ப்பதை உணர முடிகிறது.

Sunday, March 8, 2009

யாழினியும் மீனும்




யாழினிக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு அவளது பிடித்தம் ஆச்சரியமாக இருக்கும். எப்பொழுதிலிருந்து அவளுக்கு மீன் மீது ஈடுபாடு என்று யோசித்ததில்...

முதன்முதலில் ப்ளே ஸ்கூல் சென்றபொழுது அவள் வரைந்தது கூட மீன் தான். ஏதோ ஒரு வடிவம் போட்டு உள்ளே ஒரு புள்ளி வைத்து காட்டுவாள். இது என்னடா? "ஃபி...ஃபி.." என்பாள். ஃபிஷ் என்று புரிவதற்கு எங்களுக்கு கொஞ்ச நாள் ஆனது.

அதன் பிறகு ஒரு நாள் எதற்கோ பரிசாக வந்த அந்த விடிவிளக்கை அவள் அழுகை நிறுத்த ஏற்றினேன். அது வண்ண வண்ண மீன்கள் சுற்றும் மீன்தொட்டி தோற்றம் கொண்டது. அதைக் கண்டதும் அமைதியாகி அலுக்காது வேடிக்கை பார்க்கலானாள். அதன் பிறகு அவ்வப்பொழுது அதைப் போடச் சொல்லி அமைதியாக கன்னத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டிருப்பாள். அழகாக இருக்கும். எனவே மீன் வளர்ப்பது என்ற முடிவுக்கு வந்தோம்.

வீட்டிற்கு மீன் தொட்டியும் மீன்களும் வந்தன. தினம் அவற்றுக்கு உணவு போடுவது, மாதமொரு முறை சுத்தம் செய்வது என அவள் அப்பா சொல்லிக் கொடுத்தார். தினம் அவள் தான் மீன்களுக்கு உணவு இடுவாள். அவ்வப்பொழுது போய் வண்ண வண்ண மீன்களும் வாங்கி வருவார்கள்.

அதை அவள் "கோல்டு ஃபிஷ்", "ஏஞ்சல் ஃபிஷ்", "ஷார்க்", "கப்பி", " டாங்க் க்ளீனர்" , "டெலஸ்கோப்" ஃபிஷ் என வகைபடுத்துவதைக் காண எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நுங்கம்பாக்கத்தில் மீன் கண்காட்சிக்கு கூட்டிச் சென்ற பொழுதுதான் அவள் எவ்வளவு மீன்களைத் தெரிந்து வைத்திருக்கிறாள் என்று தெரிந்தது. பாதியில் எனக்கு அலுத்துப் போனது, அவளுக்கு அலுக்கவே இல்லை. அவள் மீன் ஆர்வத்திற்கு என்னால் முடிந்தது மீன்கள் படம்
போட்ட புத்தகம் ஒன்றை வாங்கிக் கொடுத்தது மட்டுமே!!!

இதற்கு நடுவே ஃபைட்டர் ஃபிஷ் எப்படி குட்டி போடும் என்று அவள் சித்தப்பா விளக்க, ஃபைட்டர் ஃபிஷ் ஜோடி தேடி அவள் தந்தையுடன் அலைச்சல்... மாப்பிள்ளை கிடைத்தார், பெண் கிடைக்கவில்லை. மதுரை போனால் கடைச்சனேந்தல் மீன் பண்ணைக்கு ஃபைட்டர் ஃபிஷ் பெண் தேடி ஒரு விசிட் இருக்கும். சென்னையில் அடையாறு, தி.நகர், வடபழநி என்று அலைவார்கள். 2 நாள் கழித்து வா என்றால் சரியாக 2 நாள் கழித்து போய் நிற்பார்கள். வீட்டில் அதிகாலையில் இருந்தே அங்கு போக நச்சரிப்பு தொடங்கிவிடும். அவள் அப்பாவும் அவளை வெளியே அழைத்து போய், "கடை பூட்டி இருக்கு சாயங்காலம் தான் திறப்பார்கள் ", என்பார். அவள் "இங்க பூட்டி இருக்கு, வடபழநில திறந்து இருக்கும்", என்பாள். ஒரு வழியாக மதுரையில் இருந்து ஒரு ஜோடி சின்ன ஃபைட்டர் மீன்கள் சென்னை வந்தன. அவை பெரிதாக வேண்டும். இன்று வரை அவற்றுக்கு நல்ல கவனிப்பு நடந்து கொண்டுள்ளது.

தொட்டி மீன்கள் மட்டும் அல்ல, உணவுக்கும் அவளுக்கு மீன் பிடிக்கும். பாசமலரின் முரண்கள் பலவிதம் கவிதை போல்....

கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு.



ஒரு நாள் ஒரு மீன் கதை அவளுக்கு சொன்னேன். கரடி டேல்ஸ் புக் லைப்ரரில இருந்து எடுத்துட்டு வந்திருந்தேன். அதை அவளுக்குப் படிச்சு காட்டினேன்.

Timsy, Bucki, Moti அப்படீனு மூணு மீன் இருக்கும். Timsy எப்பவும் எல்லா வேலையும் முன்னாடியே முடிச்சுடும், Bucki சொன்ன நேரத்துக்கு முடிக்கும், Moti லேட்டா தான் முடிக்கும். ஒரு நாள் Timsy வந்து மீன்வர்கள் வரப்போறாங்க நாம் இந்த இடத்தை விட்டு ஓடிடலாம்னு சொல்லும். ஆனால் Bucki & Moti, வரட்டும் பார்க்கலாம்னு சொல்லிட்டு வராது. மீனவர்களும் வருவாங்க, Bucki & Moti வலைல மாட்டிப்பாங்க. Bucki செத்த மாதிரி நடிக்கும். அதைத் தூக்கி தனியா போட்ட உடனே அது தண்ணில குதிச்சுடும். அப்ப Timsy மனசு கேட்காமல் வந்துடும். Timsy & Bucki , Moti கிட்ட இரகசியம் பேசி, ஒரு குதி குதிக்கும். தண்ணி தெறிச்சு மீனவன் கண்ல பட்டு வலையை நழுவ விடுவான், Moti வெளியே நழுவிடும். மூணு மீனும் பாறைக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கும். Bucki & Moti, இனிமேல் நாங்க புத்திசாலித்தனமா எல்லா வேலையும் முன்னாடியே செய்றோம்னு Timsy கிட்ட சொன்னாங்களாம்.

நீங்க மூணு மீன்ல எது Timsy, Bucki, Moti? என்று கேட்டேன். நான் Timsy , நான் Timsy அப்படீனு அக்கா தங்கைக்குள்ள சண்டை. இன்னிக்கு நீ ஸ்கூலுக்கு லேட்டா போன, அதனால் நீ "Moti", நீ அரக்க பரக்க ஓடி வேனைப் பிடிச்ச , அதனால் நீ "Bucki" அப்படீனு சொன்னேன். மறு நாள் காலங்காத்தால எழுந்து நான் Timsy அப்படீனு அடுப்படில நிற்கறாங்க. யார் சீக்கிரம் கிளம்பறாங்களோ அவங்க தான் Timsy-னு சொன்னேன். ரெண்டு பேரும் Timsy மீனா சீக்கிரம் கிளம்பிட்டாங்க.

இப்பவும் தொட்டில மீன்கள் நீந்திகிட்டு இருக்கு, மூணு மீன் கதையை நானும் சொல்றேன்... அவளும் இன்னும் மீன்களை அலுக்காமல் இரசிச்சுட்டு இருக்காள், அலுக்காமல் கதை கேட்கிறாள்...ஆனால், சாப்பிட்ட மீனு செரிச்ச மாதிரி மறுநாளே "Timsy" பேரோட கவர்ச்சி போயிடிச்சு.

Monday, February 23, 2009

எங்க வீட்டுக்கு டெய்ஸி வந்தாச்சு...

குட்டீஸை டிராயிங் கிளாஸ் அனுப்ப ஆரம்பிச்ச உட்னே வீட்டு சுவர் இப்படி ஆய்டுச்சு (யாழினியின் கைவண்ணம்).



ம்ஹும், இதுக்கு கலர் கலரா அடிச்சாலாவது நல்லா இருக்குமே, முடியுமானு நினைச்ச சமயம், முல்லையோட இந்த பதிவு நம்பிக்கை தந்துச்சு. வீட்ல போய் குட்டீஸ்ட்ட நாம் சுவருக்கு பெயிண்ட் அடிக்கலாம்னு சொன்னவுடனே அப்பாவோட போய் பெயிண்ட் வாங்கிட்டு வந்துட்டாங்க. டோராவை வீட்டுக்குக் கொண்டு வரலாம்னு திட்டமிட்டோம். சரினு முதல்ல ஒரு ட்ரையல் பார்த்தோம். மொட்டை மாடிக்கு போகிற வழில இருக்கிற சுவரைக் கொடுத்தேன். நந்தினி பூ வரைஞ்சு வண்ணம் தீட்டினாள். யாழினியும் தான். நந்தினிக்குப் பிடித்த பின்க் சட்டையும், நீல ஸ்கர்ட்டும் வண்ணம் தீட்டிக் கொண்டன...



அன்னிக்கு அவங்க சித்தப்பா வந்து ஆர்வமாகி அவளோட சேர்ந்து டோராவுக்கு பதிலா டெய்ஸியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. ரொம்ப நாளா தள்ளிப் போன வண்ணம் தீட்டல் நேற்று நிறைவு பெற்றது. இந்த முயற்சில ஒரு தடவை யாழ் நீலவண்ணத்தில் குளிச்சு டர்பண்டெய்ன் தேய்ச்சு குளிச்சாள். எனவே குட்டீஸ் வண்ணம் தீட்டறதை கொஞ்சம் கட்டுப்படுத்தி, ஆமைக்கு மட்டும் நந்தினி வண்ணம் தீட்டினாள். மீதி எல்லாம் அவள் அப்பா & சித்தப்பா வேலை. எப்படி இருக்கு? இனி அடுத்து இதை ரூமுக்குள்ள கூட்டிட்டு வரலாம்னு இருக்கோம்... எப்ப முடியுமோ தெரியல...






இதுக்கு நடுவில் பெரியவங்களை உற்சாகப்படுத்த குட்டீஸ் செஞ்ச ஒரு "ஷோ" எங்களை ஆச்சரியப்படுத்தியது. இதில் நடித்தவர்கள் யாழினி-4 வயது நிவேதா-3 வயது ... எழுத்தும் இயக்கமும் நந்தினி - 10 வயது.
நந்தினி சொல்கிறாள், யாழினி வ்ருகிறாள் ஓரிடத்தில் டினோசர் பொம்மைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
(இதோ வருகிறாள் சிண்ட்ரல்லா. அவள் ஒரு காட்டில் மாளிகைக்குள் செல்கிறாள். உடனே கதவுகள் மூடுகின்றன (நந்தினி கை தட்டி கதவுகள் மூடும் ஓசை ஏற்படுத்துகிறாள்). அங்கே மான்ஸ்டர்ஸ் இருக்கின்றன (பொம்மைகள்). உடனே "ஸ்னோவைட்" வந்து மான்ஸ்டர்ஸைக் கொல்கின்றாள் (நிவேதா வந்து பொம்மைகளை வெட்டிச் சாய்க்கிறாள்). அவர்கள் தோழிகள் ஆகிறார்கள். "நான் சிண்ட்ரல்லா, உன் பெயர் என்ன?". "நான் ஸ்னோவொயிட்.". "we are friends"
ஷோ முடிகிறது.

அவர்களாக செய்த இந்நாடகம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குழந்தைகளை engage பண்ண எனக்கு ஒரு வழியும் காட்டியது. இனி எங்கள் வீட்டில் அடிக்கடி குட்டி ஷோக்கள் நடக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

Thursday, February 19, 2009

என் வழி தனிவழி

"உன் பெயர் என்ன", இது நந்தினியின் 4 வயதில் பலராலும் அவளின் மழலைக்காகக் கேட்கப்படும் கேள்வி. "நந்தினி என்ற சுதந்திரா என்ற லஷ்மி தேவி என்ற ஏஞ்சல் என்ற..." என்று கிட்ட தட்ட ஒரு நிமிடத்துகு நீளும் பதிலில் "நந்தினி" தவிர ஒன்றும் புரியாது. இதில் ""நந்தினி என்ற சுதந்திரா" மட்டுமே நாங்கள் வைத்தது, மீதி அவள் பிடித்து வைத்துக்கொண்டது. இப்பொழுது யாழினியிடம் உனக்கு இன்னொரு பெயர் வைக்கலாம்னு பார்க்கிறேன் என்றால் "இல்லைமா, யாழினி மட்டும்தான் என் பெயர். வேற எதுவும் கிடையாது, அப்படியே கூப்பிடுங்க..." என்கிறாள்.

அவளிடம் வெளிப்படும் தன்னம்பிக்கையும், தனித்தன்மையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இன்று ஒரு பிறந்த நாள் விழாவுக்குச் செல்ல அவளுக்கு உடை தேர்ந்து எடுத்துக்கொண்டிருந்தேன்.
"அம்மா, நான் இதைத் தான் போட்டுக்குவேன்"
"இது கொஞ்சம் கிழிஞ்சிருக்குமா"
"தச்சு கொடு.."

நான் தைக்க முயற்சித்தேன். தையல் இயந்திரம் கொஞ்சம் மக்கர் செய்தது.

"குட்டிமா, தைக்க முடியலைடா, நீ அத்தைட்ட தைக்கச் சொல்லி வாங்கிக்கறியா?"
"இல்லம்மா, நீ தான் எனக்கு அம்மா, நீதான் தைக்கணும்"

இதற்கப்புறம் நான் தைத்துக் கொடுக்காமல் இருக்க முடியுமா? என்றாலும் எனக்கு அவ்வுடை சற்று விருப்பமில்லை, அவள் அத்தை சொன்னால் கேட்பாள் என்றெண்ணினேன். எனவே ,

"நான் இன்னொரு ட்ரெஸ்ஸும் வைக்கிறேன். அத்தை கிட்ட நீ கேளு, அவங்க சொல்றத போட்டுக்க.."
"இல்லம்மா, எந்த ட்ரெஸ் போடணும்னு நான் தான் சொல்வேன்"

அவளது தெளிவான பதிலில் நான் வாயடைத்துப் போனேன்.
*******************************************************

சரி... சின்னவங்களை மட்டும் சொன்னால் பெரியவங்க என்னை கேள்வி கேட்பாங்க. அதனால் அவங்களைப்பத்தி....

இரண்டு வருஷம் முன்னால அவங்க வகுப்பாசிரியர் சொன்னது என்னன்னா "hats off to you parents!!!. உங்கள் குழந்தையை நன்னடத்தையோடு வளர்த்துள்ளதற்கு எனது பாராட்டுக்கள்", என்று எங்களை மகிழ்வித்தார். இப்பொழுது அவர் மீண்டும் அவளுக்கு ஒரு பாடத்திற்கு ஆசிரியர். வகுப்பாசிரியர்களைச் சந்திக்கும் பொழுது அவரையும் காணச் சென்றிருந்தேன்.

"உங்களை நான் வரச் சொல்லலையே!!!"
"இவ தான் இழுத்துட்டு வந்தா மேடம்"
"ஓ... obedient, good mannered, helping nature, ..." என்று ஒரு பத்து வார்த்தைகள் கூறிவிட்டு "The good thing is these things have not got into her head", என்றார் (அவள் தலைக்குள்ள இதெல்லாம் ஏறி இன்னும் தலை கனமாகலையாம்). மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

"ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்"


நன்றி மகளே உன்னால் நாங்கள் பெருமை அடைகிறோம்
************************************************************

Wednesday, February 4, 2009

அறிவுஜீவமே!

எடக்கு மடக்காக ஏதாவது என் சுட்டிகள் செய்தால், "அறிவுஜீவியே!" என்போம். அது என் சுட்டிப் பெண்ணின் மொழியில் "அறிவுஜீவமே!" ஆனது. சுட்டிகளின் அறிவு ஜீவம் மற்றும் அறிவார்ந்த பேச்சுகள் சில...

*******************************
திரைப்படம் ஒன்றுக்கு சென்றிருந்தபொழுது, டிக்கட் கிடைக்கவில்லை.
சுட்டி: இனிமேல் இந்த தியேட்டருக்கே வரக்கூடாதும்மா
நான் : ஏண்டா செல்லம்?
சுட்டி : பாரும்மா, அப்பா டிக்கட் வாங்கறேன்னு சொல்றாங்க , ஆனால் டிக்கட் தரமாட்டாங்களாம். இனிமேல் இங்கே வரக்கூடாது

*******************************
சின்னவள் 3 வயதாகும் வரை அடிக்கடி கடி்த்து வைத்து விடுவாள். அவள் அக்கா தான் அதிகமாகக் கடிபடுவது. ஒரு நாள் தான் கண்ட கனவு என்று பெரியவள் கூறியது , கனவோ கற்பனையோ இன்றும் நாங்கள் நினைத்து மகிழும் சுவாரசியம் தான். "நாங்கள் எல்லாம் விளையாட்டிட்டு இருக்கோம்மா. அப்ப பெரிய டினோசர் வந்துச்சு. நாங்கள் எல்லாம் பயந்து ஓடலாம்னு பார்க்கறோம். திடீர்னு டினோசர் ஓடுது. என்னடானு பார்த்தால் யாழ் டினோசரைக் கடிச்சுட்டாள். அது ஐயோ சாமி காப்பாத்துனு ஓடிடிச்சு". அதானே கடிபட்டவளுக்கு தானே தெரியும் கடியோட வேதனை...
********************************



கைக்குள் அடங்கும் இரப்பர் பந்தொன்று வாங்கி இருந்தோம். "இதுக்கு ஸ்ட்ரெஸ் பால் அப்படீனும் பெயர். கோபம் வந்தால் இதைக் கசக்கினால் கோபம் குறையும் என்றேன்". "எனக்கு கோபம் வருது அதைக் கொடு" என்று வாங்கிக் கசக்கினாள். பின், "சிரிச்சா இதை வச்சிக்ககூடாதா", என்றாள். "இதை வச்சு ஷூ கூட பாலிஷ் போடலாம் போல இருக்கே " என்றாள். அவளது கற்பனையில் நாங்கள் சிரிக்க ஆரம்பிக்க "முதுகு சொறியலாம், தூசி தட்டலாம்..." என்று பறந்த கற்பனைக் குதிரையோடு என்னால் பறக்க முடியவில்லை.

******************************

ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே அவளுக்குத் தெரியும். விடுமுறை விண்ணப்பம் எழுதிக் கொண்டிருந்தேன். சின்னவள் "C" பிரிவு, பெரியவள் "B" பிரிவு. நான் அவள் L.K.G "C" என நிரப்பிக் கொண்டிருந்தேன். குட்டிப் பெண் வந்தாள்.

"எனக்கு தானே முதல்ல எழுதற?"
"இல்லை அக்காவுக்கு"
"இல்லை. நீ "C" போட்டிருக்க. அக்காக்குனா "B" போட்டிருப்ப..."

என்னால் அவள் அறிவுக்கூர்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை

******************************

திடீரென்று ஒரு நாள் "அம்மா , அரிசி ஊசியில் இருந்தா வந்துச்சு?", என்றாள். எப்படி இப்படி ஒரு கேள்வி என்று எனக்கு இன்று வரை புரியவில்லை. "அரிசி செடியில் வரும். அப்பா கிட்ட சொல்லி உனக்கு காட்டச் சொல்றேன்" என்றேன். ஊருக்குச் சென்ற பொழுது வயலைக் காட்டி அவள் அப்பா "இங்க தான் அரிசி வரும். முதல்ல நெல் வரும், அப்புறம் அதை அரிசி ஆக்குவாங்க" என்றார். உடனே அவள் "அப்பா, இது எனக்கு ஏற்கனவே தெரியும்", என்றாள். அப்பப்ப மேடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ஆவார்கள். மழலையில் இதில் மகிழும் மனம், சற்று விவரம் தெரிந்தால் "கற்றது கைமண் அளவு" எனப் புரிய வைக்க விழைவது ஏன்?

*******************************

Friday, January 9, 2009

கதை கேளு, கதை கேளு...

குழந்தைகளுக்குக் கதை கூறுவது சுவாரஸ்யமானது. சாதாரணமாக கதை கூறும் நான், ஒரு முறை தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் உணர்ச்சியுடனும் செய்கைகளுடனும் கதை கூறுவதைக் கண்டு, சில சமயங்களில் அம்மாதிரி முயற்சித்ததும் உண்டு.

சில சமயம் குழந்தைகள் கதை கூற சில நிபந்தனைகள் விதிப்பார்கள்:
- சில வேளைகளில் விலங்குகளைப் பற்றி கூறு என்பார்கள்
- சில வேளைகளில் விலங்குகள் வரக்கூடாது என்பார்கள்
- கெட்டவர்கள் நல்லவராக வேண்டும், யாரும் இறக்கக்கூடாது
- பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கதை கூறு

என்று பலப்பல...நிபந்தனைகள் விதிக்கப்படும் பொழுது கதைகள் நம் கற்பனையும் கலந்து மேலும் சுவாரசியமாகின்றன. இப்பதிவு என் குட்டிப்பெண்ணுக்கு கதை கூறலில் நிகழ்ந்த சில சுவாரசியங்கள் பற்றி.

******************************************
முன்பெல்லாம் குட்டிப்பெண்ணுக்கு கதை கூறினால், அவளும் அவள் தோழிகளும் கதையில் வருவர். இப்பொழுதெல்லாம்...

"ஒரு ஊர்ல் யாழ் குட்டி இருந்தாளாம்..."
"என்னைப் பத்தி சொல்லாதே..."
"சரி, கிரிப்பயல் இருந்தானாம் ..." (கிரி அவளது மாமாவின் கைக்குழந்தை)
"என்னைப் பத்தியும் , என் ஃபேமிலி பத்தியும் பேசாதே..."
"?????"

*******************************************************
மற்றொருநாள் ஒரு கதை கூறினேன். "ஒரு ஊர்ல ஒரு கம்பளிப்புழு இருந்த்தாம். அது ஒரு நாள் பட்டாம்பூச்சி ஆகறதுக்காக கூடு கட்டிச்சாம். கொஞ்ச நாள் கழிச்சு பட்டாம்பூச்சியா வெளியே வர்றதுக்காக, கூட்டைப் பிச்சுட்டு வெளியே வர ஆரம்பிச்சுதாம். ஒருத்தர் இதைப் பார்த்தாராம். பாவம், பட்டாம்பூச்சி கஷ்டப்படுதேனு , கூட்டைப் பிரித்து விட்டாராம். ஆனால் பட்டாம்பூச்சியால பறக்க முடியலையாம். ஏன் தெரியுமா? பட்டாம்பூச்சிக்குக் கூட்டைக் கஷ்டப்பட்டு பிரிச்சிட்டு வரும் பொழுது தான் பறக்கிற சக்தி கிடைக்கும். இப்ப ஈஸியா வெளியே வந்ததால அதால பறக்க முடியலையாம்."

"இதிலேர்ந்து என்ன தெரியுது? நம்ம வேலையை நாமே செஞ்சுக்கணும். இல்லைனா அப்புறம் கஷ்டமாயிடும். இனி அப்பாவைத் தூக்கச் சொல்லக்கூடாது. சரியா?"

"இனிமேல் எனக்கு கம்பளிப்புழு கதையே வேண்டாம் அம்மா"

"?????"

*********************************************************************
மற்றொரு நாள் மீண்டும் இதே கதையைக் கூறினேன்.

"இதில் இருந்து என்ன தெரியுது?"
"யாருக்கும் உதவி பண்ணக் கூடாது"
"இல்லடா. உதவி செய்யலாம், ஆனால் தேவைப்படறவங்களுக்கு தான் செய்யணும். உன்னால் நடக்க முடியும். அதனால் அப்பாவைத் தூக்கச் சொல்லக்கூடாது. சரியா?"
"எனக்கு ஒரு நாள் கால்ல அடிபட்டப்ப நானே நடந்து வந்தேன்"
"வெரி குட். அப்படி தான் இருக்கணும். இப்ப கதைல இருந்து என்ன தெரியுது?"
"பட்டாம்பூச்சிக்கு மட்டும் உதவி செய்யக்கூடாது"
"???????????"

எங்கோ படித்தேன், நாம் சொல்வதும் குழந்தைகள் கேட்பதும் ஒன்றாக இருக்காது என்று. பெரியவர்களுக்கு இடையே இம்மாதிரி நடப்பது உண்டு. நாம் சொல்வதை ஒழுங்காகப் புரிந்து கொண்டார்களா என்று சரிபார்த்துக் கொள்வது நல்லது தான்.
********************************************

Wednesday, January 7, 2009

திகட்டாத மழலை இன்பம்




என் குட்டிப் பெண் ஐந்து வயதை நெருங்குகிறாள் என்றாலும் மழலையின் சுவடுகள் இன்னும் விலகவில்லை. அவள் தோழி வீட்டில் அவளைப் பேசச் சொல்லி மழலை இன்பம் துய்க்கின்றனர். "குது" "குதிதை" எல்லாம் இப்பொழுது "குரு" "குதிரை" என்று ஒழுங்காக வருகிறது. என்றாலும் இன்னும் அவள் பெயர், அவளின் மழலையாலும் பெயரின் தன்மையாலும் அவள் கூறும் பொழுது புரிவதில்லை. இன்னும் "மஞ்சரி" "சஷ்மிதா" எல்லாம் "மஞ்சலி" "ஃப்ரஷ்னிதா" தான்.

இன்னும் சொற்பிரயோகங்களில் மழலை ததும்புகிறது. இன்னும் "நேற்று" என்பது "நாளைக்கு" தான், "முன்னாடி பின்னாடியாகவும்", "பின்னாடி முன்னாடியாகவும்" உள்ளது. "பள்ளம் உயரமாக" இருப்பதாகவும் "பிசைந்த சப்பாத்தி மாவு" "கசங்கிய மாவு" என்றும் உள்ளது.

என் தோழி கூறுவார் , "எனக்கு மட்டும் சக்தி இருந்தால் என் வாழ்க்கையை எனது குழந்தையின் மூன்று வயதில் உறையச் செய்து விடுவேன்" என்று . உண்மை தான். இன்னும் கொஞ்ச நாளில் இம்மழலைப் பேச்சு இருக்காது என்ற எண்ணமே, இன்னும் இன்னும் என்று ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கச் சொல்கிறது. அவள் வளர்வதைக் காணக்காண இன்பமுறும் மனம், இன்னும் சற்று நாளில் காணாமல் போய்விடும் மழலைப் பேச்சிற்குத் துடிக்கின்றது.

பி.கு: இதுல எத்தனை "இன்னும்" வந்ததுனு கண்டுபிடிங்க :-)

****************************************************************

உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.

"அம்மா உனக்கு நான் புது எக்ஸ்ர்சைஸ் சொல்லித் தரவா?" என்றாள் என் குட்டிப்பெண்
"சரி"
எப்பொழுதும் போல் கொஞ்சம் கஷ்டமான எக்ஸ்ர்சைஸ் செய்து, "ம், பண்ணு" என்றாள்.
"நீ பெரிய ஆளுடா. அம்மாவால செய்ய முடியாது"
"அம்மா, நீ தான் பெரிய ஆளு. நான் சின்ன பொண்ணு"
"இல்லைடா, நீ எக்ஸ்ர்சைஸ்-ல பெரிய ஆளு"
"ம்... நீ சமையல் செய்றதுல பெரிய ஆளு" (ஆஹா ஐஸ் மழை..)
சற்று பொறுத்து , "நீ எல்லாத்துலயும் பெரிய ஆளு, எக்ஸ்ர்சைஸ் தவிர..". (ஹச்...ஹச்...)

*****************************************************************

நான் கொஞ்சம் மூட் அவுட். உர்ரென்று இருந்தேன். சின்னப் பெண் வந்தாள். அம்மா எங்களை மாதிரி ஜாலியா இரேன். ஏன் கோபமா இருக்க? நோ ஆங்க்ரி.. ஸ்மைல்... வாயை சிரிப்பது போல் இழுத்துப் பிடித்து... நீ சிரிச்சிட்டே இருந்தால் தான் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு மூட் அவுட்டாக இருக்குமா என்ன? என் குழந்தையிடம் எனக்கு வேண்டியதுதான் என் குழந்தையாலும் என்னிடம் எதிர்பார்க்கப்படுகிறது

*****************************************************************
சினிமா போயிருந்தோம். தந்தையின் மடியில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தாள். இடைவேளையின் பொழுது ஏதேனும் உண்ண வாங்கிக் கொள்ளச் சொன்னேன். "அப்பா, எனக்கு ஒரு பாப்கார்ன். நான் வரலை... என் செல்ல அம்மாட்ட இருக்கேன்" என்று தியேட்டர் அதிர ஒரு அறிவிப்புடன் வந்துவிட்டாள். "என் செல்ல அம்மா" ட்யலாக் வேறு ஆக்ஷன் ரீப்ளேயாக 2 முறை தியேட்டர் அதிர ஓடியது. இப்பொழுதெல்லாம் இப்படித் தான் ஊர் கேட்க ஏதாவது சொல்லி, சில சமயம் சிரிக்க வைக்கிறாள், சில சமயம் நெளிய வைக்கிறாள்.
*****************************************************************

Friday, January 2, 2009

கொஞ்சி கொஞ்சிப் பேசும் பெண்ணே ...

மின்னலாக மின்னிய புன்னகைக்கு
"என் தங்கம்" என்ற கொஞ்சலில்
உருவானது ஓர் இடிச்சத்தம்
யார் வெள்ளி யார் தங்கம்...
யார் வைரம் யார் பிளாட்டினம்...
என்ற கேள்விகளில் தவித்தாலும்,

தித்திப்பான முத்தத்திற்குச் சொன்ன
"என் குலாப்ஜாமூன்" என்ற பாராட்டில்
துவங்கியது இனிய போராட்டம்
குலாப்ஜாமூனா இரசகுல்லாவா ...
இருவரில் யார் லட்டு என்று
தீர்ப்பிற்குத் திணறினாலும்...

அக்காவிற்குப் பிடித்த நிறமென
அவளுக்கு பலூனை ஒதுக்கி வைத்து
எனக்கு எந்நிறமும் சம்மதம் என
மீதியை எடுத்துக் கொண்ட பொழுது
பலூனின் மதிப்பு ஏறிப்போனது

அவளுக்கு கிட்காட் பிடிக்கும்
ஒன்று எடுத்துக் கொள்ளவா
என்று அவள் அக்கா எடுத்த மிட்டாயும்
என்றும் திகட்டாத இனிப்பானது

நீ வெனிலா நான் ஸ்ட்ராபெர்ரி
என்று உருகி வழிகிறது
மழலைகளின் பாசமும் உற்சாகமும்...
எனது அடுத்த கொஞ்சலின் ஆரம்பம் வரை...

Friday, December 19, 2008

ஒரு தாயின் பரவசம்




கிட்டதட்ட 4 வருடங்களுக்கு முன், சற்றே ஓய்வு கிடைத்திருந்த பொழுது, புத்துணர்வு பெற்ற மனம், வார்த்தைகளைக் கோர்த்து விளையாடியது. பொன்னால் பொறிக்கப்பட வேண்டும் என தாய்மை தந்த பரவசத்தை ஒரு நோட்டுப்புத்தகத்தில் பொன்னிற எழுத்து பதியும் பால்பாயிண்ட் பேனாவின் உதவியுடன் உருவானது "என் வானம்". "முதலில் என்னை கவனி" என்னும் விதமாக அடிக்கடி என் குழந்தைகளால் அது ஒளித்து வைக்கப்படும். இரண்டு வருடங்களுக்கு முன் என் தோழியரிடம் பகிர்கையில், முல்லையின் யோசனைப்படி பதிவுலகில் உருவானது "என் வானம்". "என் நட்சத்திரங்களை" மட்டுமே வலையேற்றப்பட்ட நேரத்தில் காணாமல் போனது, சமீபத்தில் கிடைத்தது. அதில் குழந்தையின் முதல் சில வளர்ச்சியைப் பற்றி எழுதிய தாய்மையின் பரவசத்தை, இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

"எனக்குப் பிடித்த சில நினைவுகளை பதித்துக் கொள்ள ஆசை. பசுமரத்தாணி போல் சில பதிந்தது என எண்ணினாலும். மணலில் பதித்த எழுத்துக்களாய் காலமெனும் அலைகள் கலைப்பதைத் தடுக்க முடியவில்லை. சில பொன்னான நினைவுகளைப் பொன்னெழுத்தில் பொறிக்க விழைந்தேன்.

நந்தினி, யாழினி என இருமலர்களின் நறுமணம்.
நந்தினி - இள ரோஜா நிறத்தில் நாவை நீட்டி கொட்ட கொட்ட விழித்துப் பார்த்த அழகு
யாழினி - வெள்ளை ரோஜாவாக கண்களை மூடித் தூங்கிய அழகு

இது பிறந்தவுடன் கண்ணில் கண்ட நீங்கா நினைவுப் பதிப்பு.

இந்த செல்லங்களின் சேட்டை எண்ணாற்றவை. பூவொன்று மலர்வது கண்முன்னே தெரியாமல் நிகழ்வது போல் தான் குழந்தையின் வளர்ச்சி. வாழ்க்கையை அழகுப்படுத்துவதே குழந்தைகள் தான். KIDS MAKE THE LIFE COLORFUL. அம்மா, அதன் பொக்கை வாய்ச் சிரிப்பும், மின்னும் கண்களும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. வள்ளுவரும், பாரதியும் எழுதியதை அனுபவித்தாலன்றி முழுதாக உணரமுடியாது. அந்த பிஞ்சு கைகள் மடங்கி இருப்பது அழகு என்றால், அக்கைகளுக்குள் என் விரல் உறங்குவது, பூ மெத்தையில் புரளும் சுகம். கண் மலர்ந்து சிரித்தாலும், கண் மூடி உறங்கினாலும், சிரிப்பின்றி பார்த்தாலும் ... ஒவ்வொரு அசைவிலும் உள்ளம் சிலிர்க்கின்றது.

குழந்தை பாலருந்தி, என் அருகாமையில், அணைப்பில் உலகத்தைப் பற்றிய கவலையின்றி மயங்குவதென்பது விவரிக்க இயலா இன்பமயமானது. வளர, வளர அதன் சேட்டைகள் சிலிர்ப்பானது. அந்த கைகளும், கால்களும் தூக்கத்தில் தான் ஓய்வெடுக்குமா? கைகளைச் சுழற்றுவதும், கைகளைப் பிசைவதும், கையால் காலைப் பற்றுவதும், பிஞ்சு காலால் என் மார்பில் உதைப்பதும், கொடுக்கும் பொருளைப் பற்றிக் கொண்டு அதைப் படுத்தும் பாடும்.. அப்பப்பா... அந்த கணத்தின் இனிமை விளக்க இயலாதது.

கடவுள் குழந்தையின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு விலங்காக உடைப்பாராம், கண், காது, கைகள் என ...அதன் பிறகே கண் தெரிவது, காது கேட்பது , ஒரு சாய்வது, குப்புற விழுவது என்று ஒவ்வொரு வளர்ச்சியுமாம், என் பெரியம்மா கூறுவார். பிறந்து சில நாள் கழித்து , தலையை இடதும் வலதுமாக உருட்டும் அழகென்ன.. வேகமென்ன .. பின் மெள்ள, மெள்ள குப்புற விழ எடுக்கும் முயற்சிகள்... ஒருசாய்ந்து படுத்து, கையை ஊன்றி, உடலைத் திருப்பி, பின் தலையை உருட்டி, தலையைத் தூக்கியவுடன் வெற்றிப் பெருமிதத்தில் சிரிக்கையில் இமயத்தைத் தொட்ட மகிழ்ச்சி ஒரு தாயிடம்.

அந்த தொட்டிலில் செய்யும் குறும்புகள்.. அழகாக சேலையை ஜன்னல் திரை போல் விலக்கி, எட்டிப் பார்த்து சிரிக்கும் அழகென்ன.. தடாலென தலையைத் தொங்க விட்டு "ஏய்" என்று அழைக்கும் அழகென்ன.. வலக்கையால் இடக்காலைத் தூக்கிப் பிடித்துத் தூங்க எங்கே கற்றாய் பெண்ணே? உன் அக்கா இப்படி இருக்கையில் கால் மேல் கால் போட்டுத் தூங்கும் அழகே தனி. நீ தொட்டிலுள் மீன் போல் கால்களை உதைத்து உதைத்து நீந்தும் தங்க மீன்."