என் மேகம் ???

Thursday, December 21, 2006

என் நட்சத்திரங்கள்

என் நிலவுகளின் ஒளியில் துளிர்த்த நட்சத்திரங்கள்...

பூக்களின் அழகை இரசித்தேன்
மென்மையை ஸ்பரிசித்தேன்
வாசத்தை சுவாசித்தேன்
மலர்ச்சியை அதிசயித்தேன்
இவற்றை மிஞ்சியது இல்லை என்றெண்ணினேன்
நீ என் மடியில் பூக்கும் வரை...

கடவுளுக்கு நான் படைத்த மலர்களை
பூமாலையாக்கி எனக்கே தந்தார்...
நீ பிறந்தாய்...

விண்ணில் உலவும் நிலவை
எட்டிப் பிடிக்க னினைத்தேன்
என் வாழ்வின் நிலவாக
நீ வ்ந்தாய்,,,

பூக்களின் வாசத்தில் மயங்கிய காலம் கடந்து விட்டது
உன் உச்சி முகர்ந்து முத்தமிடுவது தான் நிஜம்...

உலகில் ஏழு அதிசயங்களாம்...
ஒரு குழந்தையின் செயல்களை விடவா?

அதிகாலை பனித்துளி போல்
தூய்மையாக நீ துளிர்த்த பின் தான்
ஆதவனைக் கண்ட மலரின் மலர்ச்சி என்னிடம்...

தோட்டத்தில் வேடிக்கை காட்ட
பூவைப் போல் உனை சுமந்து
ஒரு இளமாலைப் பொழுதில்
புல்வெளியில் கால் பதித்தேன்
ரோஜா மலரை நீ தொட்டாய்
கையின் மென்மையை உணர்ந்த ரோஜா
வெட்கி தோற்று உதிர்ந்து கொண்டது
செவ்வந்தியைக் கண்டு நீ சிரித்தாய்
செங்கதிரோன் வெட்கி மறையத் தலைப்பட்டான்
குயிலும் கிளியும் பாட மறந்து
உன் மழலையில் திளைத்தன
தென்றல் நிற்கவே இல்லை
உனைத் தொட்டு தொட்டு சிலிர்த்தது
நிலவென்று எண்ணி உனை மேகம் கவர்ந்திடுமன
உள்ளே செல்லத் திரும்பினேன்
அனைத்து உயிர்களும் கேட்டன
பூந்தோட்டத்தை ஏன் சுமந்து செல்கிறாய் என...

பூக்கள் மென்மை என்றிருந்தேன்
உனைத் தொடும் வரை...
இசை இனிமை என்றிருந்தேன்
உன் மழலை கேட்கும் வ்ரை...
நடனத்தை இரசித்துக் கொண்டிருந்தேன்
உன் அசைவுகளைக் காணும் வரை...

Thursday, December 14, 2006

பாட்டி சொன்ன கதைகள்

எங்கள் மாம்மையிடம் (அம்மாவின் அம்மா) கதை கேட்பது ஒரு இனிய அனுபவம். மாம்மை ஒரு கத சொல்லுங்க என்றால், "நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா, வாழ்ந்த கத சொல்லவா, தாழ்ந்த கத சொல்லவா" என்று மரப்பாச்சி பொம்மை சொன்னதாக கூறி ஆரம்பிக்கும் அழகே தனி.

பாட்டி சொன்ன கதை - 1
ஒரு ஊர்ல பொன்னேங்கரதாசி-னு ஒருத்தி இருந்தாளாம். அவ ரொம்ப அழகா இருப்பாளாம், ஆனா ரொம்ப திமிர் பிடிச்சவளாம். அவ ஆட்டத்த பார்க்க ஊர் பெரிய மனுசங்க எல்லாம் பொன்னா கொட்டி கொடுப்பாகளாம். ஒரு நாளு, அவ கடத்தெருவுல போயிட்டு இருக்கறப்ப, குடியானவன் ஒருத்தன் நான் என் கெனால, பொன்னேங்கரதாசிய கண்டேன்னானாம். அவ்வளவு தான், இவ அவன புடிச்சிகிட்டு, என்ன காண எல்லாரும் பொன்னா கொடுக்கறாக, நீ என்னை சும்மா கெனால காணறியானு சொல்லி, இப்பவே எனக்கு நூறு பொன் கொடுன்னு கேக்கறா. எல்லாரும் தெகச்சுப் போய் பார்க்கறாக. அவ கேக்கறது அநியாயம்னு தெரியுது, ஆனா கேள்வி கேக்க ஆளில்ல. அந்த குடியானவன் கொஞ்சம், வெவரமான ஆளு. சரி வா கிளிட்ட நியாயத்தைக் கேப்போம்-னு போறான்.
அந்த ஊர்ல செட்டியார் கடைல ஒரு புத்திசாலி கிளி இருந்தது. ஊர்ல இருக்கறவங்க வழக்க எல்லாம் அதான் அழகா தீர்த்து வைக்கும். அது கிட்ட போய் இவனும் பிரச்னையை சொன்னான். அந்த கிளியும் ரெண்டு பக்கத்து பேச்சையும் கேட்டுச்சு. பொன்னேங்கரதாசி சொல்றது சரி தான். அவளை கெனால கண்டதுக்கு பொன்ன கொடுக்கணும்னு சொல்லுச்சி. பொன்னேங்கரதாசிக்கோ ஒரே சந்தோசம். குடியானவன் தெகச்சுப் போய்ட்டான். அவன் எங்கேனு போவான். அவ்ளோ பொன் இருந்தா அவன் ஏன் இப்படி கஷ்டப்படறான். சரி, இனி கடவுள் விட்ட வழின்னு நெனச்சான். கிளி சொல்லிச்சி, "குடியானவன்ட்ட நூறு பொன்ன வாங்கி அந்த கண்ணாடி முன்னாடி வைங்க, பொன்னேங்கரதாசி அந்த கண்ணாடில இருக்கற பொன்ன எடுத்துக்கட்டும். கெனால கண்ட காட்சிக்கு கண்ணாடில தெரியற பணம் தான் சரி" அப்படின்னுச்சு. எல்லாரும் அந்த கிளி சொன்ன தீர்ப்பு தான் சரின்னு சொன்னங்க.
பொன்னேங்கரதாசிக்கு இப்ப ஒரே கோவம். அந்த கிளிய பாத்து, நான் உன்ன குழம்பு வச்சு சாப்பிடறேனா இல்லயானு பாரு அப்படின்னு சவால் விட்டாளாம். அந்த கிளியும் , நான் உன்ன கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏத்தி ஊர்கோலம் வர வைக்கறேன் பாருன்னுச்சாம். பொன்னேங்கரதாசி அப்படி இப்படி மிரட்டி நெறய காசு கொடுத்து செட்டியார்ட்ட இருந்து கிளிய வாங்கிட்டாளாம். அத கொண்டு வந்து வேலக்காரிட்ட கொடுத்து ருசியா சமைக்க சொல்லிட்டு போய்ட்டாளாம். கிளி, "ஐயோ என் நிலம இப்படி யிடுச்சேன்னு" சொல்லி, தலய தொங்க போட்டுட்டு தொப்புனு மூச்ச அடக்கிட்டு விழுந்திடுச்சாம். வேலக்காரி அது செத்துப்போயிடுச்சினு, ஒரு ஓரமா வச்சிட்டு, அருவாமனைய எடுக்க உள்ள போனாளாம். கிளி பறந்து போய் சிவன் கோயிலுக்குள்ள போயிடுச்சாம்.
அருவாமனைய எடுத்திட்டு வேலக்காரி வந்தா கிளிய காணோம். இத சொன்னா அவ என்ன கொன்னுடுவாளேனு, வேலக்காரி ஒரு கோழிக்குஞ்ச புடிச்சு கொழம்பா வச்சிட்டா. பொன்னேங்கரதாசியும் கிளினு நெனச்சிட்டு, "வெடுக், வெடுக்-னு ஆடற தலய சாப்பிடறேன், பள பள-னு மின்னுற உடம்ப சாப்பிடறேன்னு", ருசிச்சு சாப்பிட்டு தூங்கிட்டா.
மறுநாளு செஞ்ச பாவமெல்லாம் போக்க, சிவன் கோயிலுக்கு போனா. "ஐயா சிவனே, எப்ப எனக்கு உன்ன காட்டப் போற", அப்படின்னு வேண்டினா. அப்ப கர்ப்பகிரகத்தில இருந்து, பொன்னேங்கரதாசி-னு ஒரு குரல் கேட்டுச்சாம். யாரு கூப்பிடறதுனு அவ தெகச்சி போய் பாக்கறா. கர்ப்பகிரகத்தில மறஞ்சு இருந்து கிளி சொல்லுது, "நான் தான் சிவன் பேசறேன். உன் பக்திய நீ காமிச்சா உனக்கு என்ன காட்டறேன்". அவ சொல்லுறா, "சாமி எதுனாலும் சொல்லுங்க நான் செய்யறேன்". "உன்கிட்ட இருக்கற சொத்தெல்லாத்தையும் ஊர்ல ஏழ பாழகளுக்கு கொடுத்துட்டு, மொட்டை அடிச்சு, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏறி ஊர்கோலமா இங்க வா, நான் ஊருக்கு முன்னாடி வந்து உன்ன ஏத்துக்கறேன்", அப்படினு கிளி சொல்லுது. உடனே பொன்னேங்கரதாசி வீட்டுக்கு போய், குளிச்சு, சொத்தெல்லாம் ஏழைங்களுக்கு கொடுத்துட்டு, மொட்டை அடிச்சி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏறி ஊர்கோலமா வந்து, சிவனே என்ன ஏத்துக்கப்பான்னாளாம். கிளியும் வெளிய வந்து, நான் சொன்னத செஞ்சிட்டேன்னுச்சாம். எல்லாரும், இந்த திமிர் பிடிச்சவளுக்கு இது தேவை தான்னாங்களாம். பொன்னேங்கரதாசி அவமானம் தாங்காம ஊர விட்டே ஓடிட்டாளாம்.

கோணங்கள்

கோணம் - 1
"வாண்ணா", இராகினி மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். "அண்ணி வரலையா?" கேள்விக்குறியுடன் நோக்கினாள்.
"இல்லம்மா, ஒரு க்ளையண்ட்ட பார்க்க இந்த பக்கம் பார்க்க வர வேண்டி இருந்தது. அப்படியே உன்னை பார்க்கலாம்னு வந்தேன்", என்றான் இராகவன்."வாண்டு எங்கே", கண்களால் அரவிந்த்தை துளாவினான். "அரவிந்த்தை தானே கேட்கற, அவன் அத்தையோட கோவிலுக்கு போயிருக்கிறான். ஒரு நிமிடம் அவனும் அவங்களை விட்டு இருக்க மாட்டான், அவங்களும் நான் ஆ·பீஸிலிருந்து வந்துட்டேன்னு என்கிட்ட உடனே விட மாட்டாங்க", என்றாள். அவள் மாமியாரைப் பெருமையாக கூறுவது போல் இருந்தாலும், குழந்தை தன்னிடம் வெகு நேரம் இருப்பதில்லை என்ற ஏக்கம் தெரிந்தது. வார விடுமுறையில் பிறந்த வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம், "இப்ப தான் என் பிள்ளையுடன் இருக்க முடிகிறது", என்று கூறுவது இதனால் தானோ? சற்று நேரம் பேசிவிட்டுக் கிளம்பினான்.
இரவு...
வித்யா பிந்துவைத் தூங்க வைத்து விட்டு அவனருகே வந்து அமர்ந்தாள். "என்னம்மா, வாலு இன்னிக்கு ரொம்ப படுத்திடுச்சோ?", புன்னகையுடன் வினவினான். "ம்ம்... ஆ·பீஸிலிருந்து வந்திருக்கேன்னு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விட்டால் நல்லா இருக்கும். உள்ளே நுழைஞ்ச உடனே என் கையில் ஒப்படைச்சுட்டு போயிடறாங்க...", பெருமூச்சுடன் கூறியனாள் வித்யா.
தங்கையின் ஏக்கத்தையும், மனைவியின் பெருமூச்சையும் நினைத்து இராகவன் மெல்லப் புன்னகைத்தான்.

கோணம் - 2
'ப்ரியா, கொஞ்சம் பால் குடிம்மா", வசந்தியின் குரலுக்கு செவிசாய்க்காது ப்ரியா ஓடி மறைந்தாள். "ம்ம்... உடம்பை கவனிக்க இந்த பொண்ணுகளுக்கு யாராவது சொல்ல மாட்டாங்களா? டயட், கியட்னு உடம்பை கெடுத்துக்கறாங்க...", புலம்பியபடி வசந்தி சென்றாள். இது பல நாட்களாக நடக்கும் விஷயம்.
சில நாட்கள் கழித்து...
"அம்மா பால்...", என்று கேட்டு குடித்த பெண்ணை அதிசயமாக பார்த்தாள் வசந்தி. "என்னடி ஆச்சரியம்... உன் டயட் எல்லாம் என்ன ஆச்சு?" என்றாள் ஆச்சரியமாக. "அதுவா, நான் டயட் இருந்து யாருக்கும் உதவற மாதிரி தெரியலை, அதான் உடம்பை கொஞ்சம் தேத்திக்கலாம்னு பார்த்தேன். புரியலையா? நேத்து காலேஜ்-ல இரத்த தானத்துக்கு ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. ஊருக்கு உதவலாமேன்னு போனால், அண்டர் வெய்ட்-னு அனுப்பிட்டாங்க. இந்த மாதிரி நல்ல விசயத்துக்கு உதவாத மாதிரி என்ன கண்ட்ரோல்-னு சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்".

Wednesday, December 6, 2006

சுட்டிப் பெண்களுடன் ஒரு விமானப் பயணம்




அவசரமாக மதுரை போக வேண்டிய அவசியம். திரும்பி வர டிரெய்ன் டிக்கட் கிடைக்கவில்லை. விமானத்தில் வர முடிவு செய்தோம். குழந்தைகள் விமானப் பயணத்தை எஞ்சாய் செய்வார்கள் என்ற எண்ணம் எங்கள் முடிவை உறுதியாக்கியது. எனது இரண்டு சுட்டிப் பெண்களுடன் (ஒன்று 7 வயது ஒன்று 2 வயது) ஒரு இனிய மாலைப் பொழுதில் எங்கள் பயணம் துவங்கியது.
என் சின்ன பெண் கைகுழந்தையாக இருந்த பொழுது, ஒரு முறை விமாத்தில் சென்று, காதில் பஞ்சு வைப்பதில் குழப்பம் ஏற்பட்டு, ஊரில் காது வலி வந்ததும், அதற்கு ஊசி போட போக, கத்தி போய் வாள் வந்த கதையாக, தொடையில் சீழ் பிடித்து , அறுத்து தழும்பான அனுபவம் இருந்தது. எனவே ஒரு சின்ன பஞ்சு கட்டு வாங்கி சென்றோம்.
செக்கின் முடிந்து விமானம் வர காத்திருந்தோம். கொஞ்ச நேரம் மற்ற விமானங்க்ளை நாங்கள் ஆவலுடன் காட்டினோம்.முதலில் ஆர்வமாக பார்த்தாற் போல் இருந்தது, அப்புறம் கவனம் பஞ்சின் மேல் திரும்பியது. முதலில் என் பெரிய பெண், கொஞ்சம் பஞ்சு வாங்கி காதில் வைத்தாள். சின்னது சமர்த்தாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால், பெரியவள் காதில் பஞ்சு இல்லை. ஆழ்ந்து ஆராய்ந்ததில், பஞ்சு காதுள் போயிருப்பதை அறிந்து என் கணவர் இலாவகமாக அதை எடுத்தார். அவரது engg. திறமை அங்கு தான் வெளிப்பட்டது. என் பெண்ணுக்கு ஒரே சந்தோஷம், அவள் காது அழுக்கெல்லாம் போய்விட்டதாம்.
என் சின்னப் பெண், அவளிடம் சமர்த்தாக இருக்க சொல்லிவிட்டு, பெரியதாக வைக்க அறிவுரை வழங்கியது. பின் செய்முறை விளக்கமாக, கை நிறைய பஞ்சு எடுத்துக் கொண்டு பந்து போல் காதில் வைக்க முயற்சித்து , தோற்று, மொத்தமாக பஞ்சை கீழே போட்டது. அளவாக பஞ்சு மீந்த நேரத்தில், கடவுள் அருளால், விமானத்தில் ஏற அழைத்தார்கள்.
ஆரம்பித்ததடா ஒரு ஸீட் பெல்ட் சண்டை... நான் ஸீட் பெல்டை எடுக்க, எனக்கு என்று சிறியது கூற, சரியென்று, அவளையும் சேர்த்து கட்டினேன். Air hostess வந்து, அழகு ஆங்கிலத்தில், தயவு செய்து ஸீட் பெல்டில், உங்களை மட்டும் கட்டிக் கொள்ளுங்கள், குழந்தையை கையில் வைத்துக்கொள்ளுங்க்ள் என்றார். அடுத்த நிமிடம் "வீல் என்று ஒரு அலறல்". அது என் அருமை வாண்டு தான். Air hostess ஓகே சொல்லி அகலும் வரை அந்த சத்தம் ஓய்வதாக இல்லை. ஒரு வழியாக செட்டில் ஆகி, இரண்டு பேர் காதிலும் பஞ்சு வைத்து, அக்கடா என்று அமர்ந்தோம். விமானம் takeoff செய்யும் நேரம் பார்த்தால், சின்னவள் காதில் பஞ்சை காணோம். பழைய அனுபவத்தை நினைத்து, பதறினால், அது நிதானமாக, "பஞ்சு இல்லேனா என்ன ஆகும்?" என்று சிரிக்க, நாங்களும் சிரித்தோம்... வேறு வழி?
அடுத்து, வீட்டில் என்றுமே பசிக்காத என் கண்ணின் மணிகளுக்கு, அங்கு தான் அகோர பசி எடுத்தது. Air hostess கொண்டு வந்த ஸ்நாக்ஸ் எல்லாம் வேண் டும் என்று ஒரே அடம். ஸீட் பெல்ட் போட அலறிய என் சின்ன குட்டி, இப்போது, எடு என்று அலறியதோடு அல்லாமல், வாக்கிங் போக தலைப்பட்டது. என் பெரியது, ஜன்னலை திற என்று ஒர் ஆர்ப்பாட்டம். திறப்பதற்கு இல்லை என்றால், ஜன்னல் எதற்கு என்ற கேள்வியின் சுட்டித்தனத்தை மெச்ச முடிந்ததே ஒழிய பதில் கூற இயலவில்லை. வேடிக்கை பார்க்க என்று கூறி, நான் ஒரு ஜோக்கராக விரும்பவில்லை. விமானப்பயணத்தில் குதூகலிப்போம் என்ற எண்ணம் போய், எப்போதடா தரை இறங்குவோம் என்று காத்திருந்தோம்.
விமானத்தில் இருந்து டெர்மின்ஸ¤க்கு ஒரு சொகுசு பேருந்து அழைத்துச் சென்றது. அங்கு என் குழந்தைகளிடம் நான் கண்ட குதூகலம் தான் நான்
விமானப்பயணத்தில் எதிர்பார்த்தது. அங்கு இருந்த விமானங்கள் அவர்கள் கருத்தைக் கவரவே இல்லை. பல நேரங்களில், நாம் குழந்தைகளைப் புரிந்து கொள்வது இப்படி தான் தவறாகிறது. எவ்வளவு விலை உயர்ந்த பொம்மை வாங்கினாலும் அவர்களுக்கு, செப்பு சாமான் தான் அலுக்காத விளையாட்டு. என்றாலும் வீட்டில் மற்ற விளையாட்டு சாமான்க்ள் தான் இறைந்து கிடக்கிறது. விமானம் என்பது ஏறி பறப்பதை விட "ஏய் ஏரோப்ளேன்" என்று ஓடுவது தான் மகிழ்ச்சி என்பது புரிய சில ஆயிரங்கள் செலவழிக்க வேண்டி இருந்தது.

Wednesday, November 29, 2006

என் சூரியன்

காற்றில் எழுதினால் கரைந்து விடும் என்று
நீரில் எழுதினால் அழிந்து விடும் என்று
மண்ணில் எழுதினால் ம்றைந்து விடும் என்று
விண்ணில் எழுதினால் விழுந்து விடும் என்று
நெருப்பில் எழுதினால் எரிந்து விடும் என்று
ஏட்டில் எழுதினால் அழிந்து விடும் என்று
உன்னை மனதில் எழுதி வைத்தேன்...

என் நிலவுகள்

கடவுளுக்கு நான் படைத்த மலர்களை
பூமாலையாக்கி எனக்கே தந்தார்...
நீ பிறந்தாய்.