என் மேகம் ???

Friday, March 19, 2010

கனவு



ஐஸ்க்ரீம் மணலும்
சாக்லேட் மரங்களும்
பழரச ஆறும்
பரந்து விரிந்த தீவில்
பசியாறி ஆடிப்பாடிய
ஒரு குழந்தையின் கனவில்
பெரியவர்களைக் காணவில்லை



தங்க மணலும்
பணம் காய்க்கும் மரமும்
வெள்ளி ஓடையும்
காசு மழை பொழியும்
கனவொன்றில் அவர்கள்
பசி தாகத்தோடு
தொலைந்து கொண்டிருந்தார்கள்...

Monday, March 15, 2010

ஃபிஷ்பெக்கர்

பறவைகளின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
நான்: இது என்ன?
யாழ்: க்ரோ

இது என்ன?
வுட் பெக்கர்.

ஏன் வுட்பெக்கர்?
மரத்த கொத்தும்.

இது என்ன?
"..."

"மீன் கொத்திட்டு இருக்கு பாரு."
"ஃபிஷ் பெக்கர்"


**************************************************

நான்: இது என்ன?
யாழ்: நேஷனல் ஃப்ளேக்

இது என்ன?
நேஷனல் எம்ப்ளம்

இது என்ன?
நேஷனல் டைகர்


**************************************************

யாழ்: "அம்மா பசிக்குது."
நான்: "பழம் சாப்பிடறியா?"
"வாழைப்பழம் இருக்கா?"
"இருக்கு"
"அது வேண்டாம். ஆப்பிள் இருக்கா?"

"இருக்கு "
"அது வேண்டாம். கொய்யாப்பழம் இருக்கா?"

"இல்லை"
"கொய்யாப்பழம் தான் எனக்கு பிடிக்கும். அது தான் வேணும்"
???


*************************************

Wednesday, March 10, 2010

தேடல்

வாழ்க்கை என்பதே தேடல் நிறைந்தது தானே? எங்கே தேடல் தொடங்கியது என்று யோசித்துள்ளீர்களா? குழந்தைகளாக இருக்கும் பொழுது தேடுவது போல் எனக்கு தெரியவில்லை. அழகாக பூவொன்று மலர்வது போல், அவர்களது முன்னேற்றம் ஒவ்வொன்றாக நிகழ்கிறது. என்றாலும் வாழ்வின் தேடலின் அவசியம் கருதியா என்று தெரியவில்லை... நாம் தேடலை அறிமுகப்படுத்தி விடுகிறோம்.

"காணோம்... காணோம் முட்டாச்" என்று ஆரம்பித்து, "காக்கா ஓச்" என்று கூறி அழகாக ஒரு தேடலுக்கான ஆரம்பம் கொடுக்கிறோம். பின் அது கண்ணாமூச்சியாகவும், ஒளிந்து பிடித்து விளையாட்டாகவும் மாறுகிறது. சில சமயங்களில் நல்ல ட்ரெய்னிங் கொடுக்க புதையல் வேட்டையும் சொல்லித்தரப்படும்.

இந்த சுவாரசியங்களின் முடிவில் நிஜ தேடல்கள் தொடங்கும். படிப்பு, வேலை, பொருள், துணை என்று பட்டியல் நீண்டு கொண்டிருக்கும். இதெல்லாம் முடிந்த ஒரு கணத்தில் கொஞ்ச நாள் தேடலை மறந்து இருப்போம் என்று தூங்கி எழுந்த ஒரு நாளில் முதல் கேள்வியாக வந்தது கணவரின் "என் பர்ஸைப் பார்த்தியாம்மா?" என்ற கேள்வி. நித்தம் தவிர்க்க முடியாத தேடலாகப் போகிறது என்ற உண்மையின் முன்னுரையுடன் என் முன் அந்த கேள்வி சிரித்தது. சிலருக்கு இது மனைவி கை தவறி வைத்த கம்மலாகவோ, சாவியாகவோ இருக்கலாம்.

என்ன ஆச்சர்யம்? தொலைந்தது சாவியோ, பர்ஸோ... ப்ரிட்ஜ் முதற்கொண்டு வீட்டின் அங்குலம் விடாது தேட வேண்டும் என்று அறிந்து கொண்டேன். எண்ணூறு சதுர அடி வீட்டை எட்டு வருடமாக தேடல் நடந்தாலும் இன்னும் கைமறந்து வைக்கப்படும் பொருள் எங்கிருக்கும் என சட்டென்று அறிய இயல்வதில்லை. பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எப்பொழுது முடியும் தேடல்? படிப்பு , வேலை என்று பெரிய பெரிய தேடல்கள் தராத தத்துவங்களைச் சின்ன சின்ன விஷயங்கள் தந்து விடுவது கூட ஆச்சர்யம் தான்.

தேடல் என்று இந்த பதிவு என் மனதில் தோன்றிய நேரத்தையும் நான் சொல்ல வேண்டும். ஊரில் வீட்டைப் பூட்டிக் கிளம்பி இரயிலைப் பிடிக்க வேண்டிய ஒரு அவசர கணத்தில் வீட்டைப் பூட்ட பூட்டும் சாவியும் இல்லை என்று அறிந்தோம். அப்பொழுது தோன்றியது, "பூட்டிய பின் சாவி தொலைந்தால் கூட ஊருக்குப் போய் வந்து பின் பூட்டை உடைக்கலாம். ஆனால் பூட்டவே சாவி இல்லை என்றால் எப்படி கிளம்ப முடியும்?" என்ன ஒரு தத்துவம் என்று எண்ணிய வேளையில் தான் தேடல் தொடங்கியது.

Wednesday, March 3, 2010

தீயினால் சுட்ட புண்

அவள் முழுப்பெயர் என்ன என்று யோசிக்கிறேன். நினைவில் வரவில்லை. வித்யாசமான பெயர்... பெயரைச் சுருக்கித்தான் அழைப்போம்... சரி விடுங்கள் பெயரைச் சொல்லி என்ன செய்ய? அவள் எனக்கு தூரத்து உறவு.. எப்படி என்றால்...சரி விடுங்கள் உறவைச் சொல்லி என்ன செய்ய?

விடுமுறைக்கு செல்லும் பொழுது விளையாடி உள்ளோம். கிணற்றில் எட்டி பார்த்து திட்டு வாங்கி உள்ளோம்; தேங்காய் பூ பறித்து சொப்பில் சமைத்துள்ளோம்; அவள் மாமா ஊரிலிருந்து கொண்டுவரும் முந்திரி கொட்டைகளை அனலில் இட்டு உடைத்து சாப்பிட்டுள்ளோம், பால் நிலா பொழியும் இரவுகளில் கதைகள் பேசி சிரித்துள்ளோம்.

ஏதோ ஒரு நாளில் கிணற்றை மறைத்த சுவரில் சாய்ந்து, கூரையில் தனித்து நிற்கும் மரப்பல்லிகளைப் பார்த்தவாறு, பெரியவர்கள் சண்டையில் சிறியவர்கள் பேசாது இருந்துள்ளோம்; என்றாலும் சில நேரங்களில் குப்பை கொட்ட வெளியே செல்லும் பொழுது சந்தித்தால் இரகசியமாகப் புன்னகைத்துள்ளோம்.

அவளுக்கு நல்ல சிரித்த முகம். அவள் கையெழுத்து அழகு ஆனால் படிப்பில் சுமார் என்பதெல்லாம் எனக்கு அப்பொழுது தெரியாது; விளையாட நட்பு பூக்கும் மனம் இருந்தால் போதுமே!!! நன்றாக படிப்பாளாம், ஆனால் மெதுவாக எழுதுவதால் மதிப்பெண் கம்மியாம்.

அது பதின்மம் தொட்ட பருவம் என்று எண்ணுகிறேன். ஒற்றை ரோஜாவை அழகாக கூந்தலில் பக்கவாட்டில் செருகி இருந்தாள். தோட்டத்தில் பூத்த ரோஜாவாக இருக்குமோ? தெரியவில்லை? அதற்கும் அவள் படிப்புக்கும் என்ன சம்மந்தம்? அன்று அவளுக்கு பரீட்சை பேப்பர் கொடுத்தார்கள். "ஸ்டைலா பூவை யாரை மயக்க வச்சுட்டு வர? மார்க் வாங்காதவளுக்கெல்லாம் பூ தேவையா?" என்ற சொற்கள் தீயின் வெம்மையைக் கூட மறக்கச் செய்துவிட்டது. மறுநாள் காலை அடுப்பெரிக்க வைத்த மண்ணெண்ணெய் பூவை எரித்துவிட்டது.

பூவாக மலர்ந்த முகத்தை கருகியதாக இன்னும் எண்ண இயலவில்லை. அந்த ஆசிரியை என்ன ஆனார் என்பதெல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் கனமான மனதுடன் இந்த நிகழ்வை எண்ணும் பொழுது, சமூகத்தின் சில அழுகிய முகங்களையும் காணும் மனத்திண்மையைக் குழந்தைகளுக்கு அளிக்கும் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு என்று தோன்றுகிறது.