என் மேகம் ???

Tuesday, January 22, 2019

வீடென்பது ...

வீடென்பது ...
கல்லும் மண்ணுமல்ல
உணர்வுகளின் பின்னல்
நினைவுகளின் குவியல்

பூச்சூடி புதுப்பெண்ணாக
கால்பதித்த தருணம்
புது உறவுகள் பூத்திட
விளக்கேற்றிய பொழுது

ஊடலும் காதலும்
உலாவிய நினைவுச் சிதறல்கள்
நட்பும் உறவும் அளவளாவிய
விழாக்கால  கொண்டாட்டங்கள்

வளைபூட்டி வழியனுப்பி
மழலையுடன் வரவேற்று
கிள்ளை இன்பத்தில்
திளைத்த தருணங்கள்

புது உறவுகளை வரவேற்று
பகிர்ந்து கொண்ட மணித்துளிகள்
இறப்பென்ற நிகழ்வோடு
உறைந்து போன கணங்கள்

வீட்டைச் செப்பனிட்டு
நினைவுகளை மீட்கிறோம்
கூடி மகிழ்ந்து
உணர்வுகள் பகிர்கிறோம்


வீடென்பது ...
கல்லும் மண்ணுமல்ல
உணர்வுகளின் பின்னல்
நினைவுகளின் குவியல்

Tuesday, December 11, 2018

கதம்பம்


என் வானம் கண்டு பல நாட்கள் ஆகிவிட்டது. இதோ ஒரு வருடம் முடியப்போகிறது நட்சத்திரங்கள் ஏதுமின்றி....  எனவே  இறைந்து கிடந்த பதிவுகள் ... கதம்பமாக ...

மிச்சங்கள்
==========-==

புல்வெளியின் பிரிவில்
பனித்துளியின் மிச்சங்கள்

கடற்கரையின் பிரிவில்
மணற்துகளின் மிச்சங்கள்

நட்பின் பிரிவில்
நினைவுகளின் மிச்சங்கள்

உறவின் பிரிவில்
வலியின் மிச்சங்கள்


தேடல் 
=======

கனவொன்றில் தொலைந்து...
நனவொன்றில் மீண்டேன்


கையில் வைத்துக்கொண்டே...
தேடிக் கொண்டிருந்தார்கள்

மழலை
=========

பூவொன்று மலர்ந்தது...
மழலைப் புன்னகை

பூவொன்று அரும்பானது...
மழலை தூக்கம்


Thursday, March 9, 2017

என் சொல்வேன்? - அதீதத்தில்அழகான உலகம்
அன்பான மனிதர்கள்
சில தீயவர்கள்
பார்த்து இரு பாப்பா
என்று சொல்ல ஆசை...

என் சொல்வேன்?

அக்கம் பக்கம் பழகாதே
அசுரர்கள் உண்டு என்றா?

தலை நிமிர்ந்து சென்றால்
ஆயுதத்தால் தாக்குவார்கள் என்றா?

எனக்கு புரியவில்லை.. எவ்வயதில்
உன் கையை நான் விடுவேன்?

பதின் வயதில் என் அம்மா
வயிற்றில் நெருப்புடன் நின்றாள்

அப்படி இல்லை நான் என
பெருமை பேச வந்தேன்

பெற்றவுடன் கட்டிக்கொள்ள
எரிமலை கொடுக்கிறது சமூகம்

என்றாலும் பெண்ணே...
என்றென்றும் போராட்டமே!!

தலை நிமிர்ந்து வாழ்வோம்
தலை குனிந்து ஒதுங்கோம்!!!

தேவை தனிமனித ஒழுக்கம் என்றே...
ஓங்கி குரல் கொடுப்போம்!!!


அதீதம்  #மகளிர் தின சிறப்புக் கவிதை. சுட்டி என் சொல்வேன்? - அதீதத்தில்