என் மேகம் ???

Saturday, January 31, 2009

காலியான வீடு

அந்த வீடு
காலியாக இருந்தது
இருந்தும் இல்லாமல்...

நல்லதொரு நாளில்
அவர்கள் வந்தார்கள்

வீடு மகிழ்ச்சியில் நிறைந்தது
குழந்தையின் சிரிப்பில்
தினம் பூபாளம் கேட்டது
புன்னகையின் வாசம்
பக்கத்திலும் பரவியது

நல்லதொரு நாளில்
மனமார்ந்த வாழ்த்துக்களுடன்
அவர்கள் சொந்த வீடு
குடி பெயர்ந்தார்கள்

இந்த வீட்டில
மழலையின் சுவடுகள்
இன்னும் இருக்கிறது..
வீட்டை...
வெறுமையால் நிறைத்துவிட்டு
காலி செய்துவிட்டார்கள்

Thursday, January 29, 2009

நேற்று...இன்று...நாளை...


நேற்று...
உன் விரல் பிடித்து
உன் வகுப்பறை வரை வந்து
உன்னை முத்தமிட்டு
உன் வாசத்தோடு
நான் நகர்ந்த பொழுது
மகிழ்ச்சியில் பொங்கியது மனம்

இன்று...
என் விரல் விட்டு
என்னை முத்தமிட்டு
உன் வகுப்பறை நோக்கி
என் வாசத்தோடு
நீ நகரும்பொழுது
கொஞ்சம் ஏக்கம்...
கொஞ்சம் பெருமிதம் என
விம்மியது மனம்

நாளை...
உன் கனவுகளின் வாசத்தோடு
புத்தம் புதிய சிறகுகளோடு
உன் வானத்தில் சிறகடிக்கும்
நாளைக் காணத் தயாராகு
என்று மெல்லச் சொல்கிறது மனம்...

Tuesday, January 27, 2009

தந்தை பாசம்



உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!

என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என...

உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
வார்த்தையில் வடிக்காது
மெளனமாக இரசிக்கிறேன்...

உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்...

நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...

உன் கண்ணீருக்கெல்லாம்
கண்ணீர் சொல்ல முடியா
வலியில் நான் துடிக்கின்றேன்...

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...

சொல்லத் தேவையில்லை
காலம் முழுதும் உன்னை
மனதில் சுமப்பேன் என்பதை...

Friday, January 23, 2009

வயதும் மரணமும்..

மரணம் என்பது...
வண்ணத்துப் பூச்சி
பிடிக்கும் வயதில்
சாமிகிட்ட போய்ட்டாங்க
சற்றே..
விவரம் தெரியும்பொழுது
வருத்தமான நிகழ்வு

மரணத்தின் தாக்கம்
புரியும் வயதில்
இளமை மரணம்
மிக வருத்தம் அளிக்கும்
முதுமை மரணம்
வயதாகிவிட்ட காரணம்
என மனம் வருந்தும்

வாழ்வில் மேலும்
பரிமாணங்களைக் காணும் வயதில்
இளமை மரணம்
மனதைப் பிசையும்
இழந்த குடும்பததை நினைத்து...
முதுமை மரணம்
இளமையாகத் தெரியும்
மனது கனக்கும்...
பெற்றோரின் முதுமையால்

Thursday, January 22, 2009

துரித உணவு தேவையா?

சில சமயங்களில் நிஜம் முகத்தில் அறையும் பொழுதுதான் விழித்துக் கொள்கிறோம். துரித உணவு கேடானது என்று தெரியும். என்றாலும் சில சமயங்களில் குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்று விதிமுறைகள் தளர்த்தப்படும். எனக்கு தெரிந்து பெரும்பாலோர் இப்படி தான்.

இது பற்றி பேரண்ட்ஸ் க்ளப்ல "புதுகை தென்றல்" ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருக்காங்க. இது என்னோட அனுபவம்.

அலுவலக நண்பர் ஒருவர் சொன்ன செய்தி தான் அதிர்ச்சி அளித்தது. அவரது உறவினர் 17 வயது பையனின் மரணம்... கேன்சர் எனும் அரக்கனால்... மருத்துவர் கூறும் காரணம் : "துரித உணவு". அலுவலகத் தோழியர் அனைவருமே அதிர்ந்து விட்டோம். மிகக் கடுமையாக துரித உணவுப் பழக்கத்தை குழந்தைகளிடம் நிறுத்த முடிவு செய்தோம், செய்து விட்டோம்.

இந்த செய்தி தந்த அதிர்ச்சியில் உணவு பழக்கங்களை மாற்ற எடுத்த முயற்சியில் எனக்குப் புரிந்தது, "கேட்பது போல் கூறினால் குழந்தைகள் புரிந்து சொல்வதைக் கேட்கிறார்கள்". நாம் அறிமுகப்படுத்தாவிட்டாலும் நண்பர்கள் வாயிலாக எளிதாக நூடுல்ஸ், குர்குரே, சிப்ஸ் என்று அறிமுகம் ஆனவர்கள். என்ன தான் கட்டுப்பாடு விதித்தாலும் செல்லம் கொடுக்கும் உறவுகளைத் தாஜா செய்து வாங்கி வரும் பொழுது கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டி வரும். ஒரு நாள் மின்னஞ்சலில் "குர்குரேயை உருக்கினால் ப்ளாஸ்டிக்" என்ற செய்தியைப் படித்து காட்டினேன். இது போல தான் எல்லா பாக்கெட் தின்பண்டங்களும் என்றேன். அன்று முதல் அவர்கள் அதைத் தொடுவது இல்லை. ஒரு நாள் அவசரத்துக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று ஒரு பாக்கெட் லேஸ் வாங்க "எங்களைச் சொல்லிட்டு நீ என்ன செய்ற" என்றார்கள். அப்படியே தூக்கிப் போட்டேன் குப்பையில்.. நினைவுறுத்தியதற்கு நன்றி கூறியபடி...


நூடுல்ஸ் பைத்தியத்தை வாரம் ஒரு நாள் என்ற கட்டுப்பாடுடனும், ஒரு ஜங்க் ஃபுட் என்றால் ஒரு குட் ஃபுட் என்று உளுந்து களியும் அதனுடன் அறிமுகப்படுத்தி இருந்தேன். இதில் எனக்கு பெருமை வேறு . இப்பொழுது கிடைத்த அதிர்ச்சியில் நீ உளுந்து களி சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை "நோ நூடுல்ஸ்" என்று கேன்சர் காரணமும் கூறிய பிறகு, சற்றே எதிர்ப்பு இருந்தாலும் இப்பொழுது அடங்கிவிட்டது. பர்கர் , ஃப்ரென்ச் ஃப்ரைஸ் எல்லாம் என்றோ ஒரு நாள் என்று அறிமுகப்படுத்தப்பட்டு, தீரா ஆசை ஆனவை... இதே காரணத்திற்கு இப்பொழுது மறுக்கப்பட்டு விட்டவை. உன் நண்பர்களிடமும் கெடுதல்களைக் கூறு என்றேன்.

சூப் பிடிக்கும் என்று இன்ஸ்டண்ட் சூப் வாங்கும் வழக்கம் இருந்தது. இப்போ... சூப்?? பர்கர்?? ஃப்ரென்ச் ஃப்ரைஸ்... வீட்ல நான் செய்யறேன் கண்ணுகளா என்று கூறிவிட்டேன். இருக்கவே இருக்கு சமையல் பதிவுகள்.

நீங்கள் இன்னும் விழிக்கவில்லையெனில் விழித்துக் கொள்ளுங்கள். நம் கையாலேயே ஸ்லோ பாய்சனிங் எடுக்க வேண்டுமா என்று ஒவ்வொரு முறையும் துரித உணவுகளைக் காணும்பொழுது கேட்டுக்கொள்ளுங்கள். தானாக துரித உணவு குறைந்துவிடும்.

Wednesday, January 21, 2009

மழலை இன்பம்

உன் சிரிப்பினில்
நான் சிலிர்க்கிறேன்



உன் கைகொட்டலில்
நான் கரைகிறேன்




உன் மழலையில
நான் மயங்குகிறேன்




உன் கோபத்தில
நான் கலங்குகிறேன்




உன் பசியில்
நான் பரிதவிக்கிறேன்



உன் அழுகையில்
நான் உருகுகிறேன்




உன் விளையாட்டில்
நான் திளைக்கிறேன்



உன் தூக்கத்தை
நான் இரசிக்கிறேன்



உன் ஒவ்வொரு அசைவிலும்
நான் என்னை இழக்கிறேன்



(படங்கள் : இணையம்)

Tuesday, January 20, 2009

காலத்தினால் செய்த நன்றி

குறிப்பு: "குறள் கதை எழுதணும்னு ஆசை. கொஞ்சம் முயற்சி பண்ணினேன். நல்லா இல்லைனா ரொம்ப திட்டாதீங்க... "


"சாமுவேல் வந்திருக்காரு", மனைவியின் எரிச்சலான குரல் கேட்டு நிமிர்ந்தான் முருகன். மனைவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவன், அவளைச் சற்றே கெஞ்சலுடன் பார்க்க, அவள் சின்ன பெண் கயல் பிய்த்து போட்டிருந்த பொம்மையைக் காட்டி "இது கூட நூறு ருபாய்க்கு வாங்கினது தான்", என்றாள் அலட்சியமாக. "சரி நான் வரேன்", ரோட்டில் சாமுவேல் நின்று கொண்டிருப்பான் என்று எண்ணியவாறு கிளம்பினான்.

ஞாயிறு...

"அப்பா, எங்க தமிழ் மிஸ் திருக்குறள் பற்றி பேசச் சொல்லி இருக்காங்க" என்றாள் பெரியவள் சுடர்.
"ஓ... மனப்பாடமா சொல்லணுமா?"
"இல்லைப்பா, ஒரு குறளுக்கு எடுத்துக்காட்டா ஏதாவது சின்ன நிகழ்ச்சி சொல்லணுமாம். ஏதாவ்து சுவாரசியமா சொல்லுங்கப்பா. "
"அப்பா உனக்கு ஒரு விஷயம் சொல்றேன், என்ன குறள் சரியா வரும்னு நீயே சொல்லு, சரியா?"
"சரிப்பா"
"இப்ப இவ்ளோ பெரிய வீடு, காருனு இருக்கேன்னா அதுக்கு ஒரு நூறு ரூபா தான் காரணம் தெரியுமா? பல வருஷங்களுக்கு முன்னாடி அப்பாவுக்கு கடை எல்லாம் கிடையாது. கைல துணியை எடுத்துட்டு வீடு வீடா போகணும். அப்ப தான் ஒரு சின்ன கடையை நடத்த வாய்ப்பு வந்தது. எப்படியோ பணம் புரட்டிட்டேன், ஆனால் நூறு ரூபாய் பத்தலை. அது இருந்தால் தான் கடை கைக்கு வரும்னு நிலைமை. அதைக் கடனா கேட்க எனக்கு அப்போ யாருமில்லை, ஒரு ஃபிரண்டைத் தவிர. ஆனால் அவரும் என்னை மாதிரி தான், அதனால் கேட்க முடியலை. ஆனால் என் ஃபிரண்ட் எனக்கு அவரோட பொருளை அடமானமா வச்சு நூறு ரூபாய் கொடுத்தாரு. அதுக்கப்புறம் தான் எனக்கு ஒரு திருப்பம் வந்துச்சு. அங்க பாரு கயல் பிச்சு போட்ட பொம்மை. அது மதிப்பு கூட நூறு ரூபாய் தான். அதுவும் இதுவும் ஒண்ணாகுமா?", கடைசி வரியில் விரக்தி தெரிந்தது பேச்சில்.

"ஆகாதுப்பா " என்ற சுடரை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.
"எங்க மிஸ் சொல்லி இருக்காங்கப்பா , ஒரு ரூபாய்ல இட்லியும் வாங்கலாம், சாக்லேட்டும் வாங்கலாம். ஆனால் பசிக்கு இட்லி வாங்கறப்ப தான் இந்த ரூபாயோட மதிப்பு தங்கம் மாதிரி, ஆசைக்கு சாக்லேட் வாங்கறப்ப இந்த ரூபாயோட மதிப்பு தகரம் மாதிரி. ஏன்னா,
"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"


முருகன், அன்புடன் மகளை அணைத்துக் கொண்டான்.
"என்னங்க சாமுவேல் வந்திருக்கிறாரு. ஹால்ல உட்காரச் சொன்னேன். பலகாரம் எடுத்துட்டு வரேன் , சாப்பிட்டு கிளம்புங்க", என்ற மனைவியின் குரலில் மாற்றம் தெரிந்தது. "சில சமயம் சொல்றவங்க சொன்னால் தான் மண்டைக்குள்ள ஏறுது", என்றாள் அவள் புன்னகையுடன்.

சின்ன சின்ன ஆசை

பேரனுக்கு பனை ஓலை கிலுகிலுப்பை வைத்து விளையாட்டு காட்ட சின்னதாக ஆசைப்பட்டார் என் தாயார். மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகில் கிடைக்கும் என்று சென்றேன். புது மண்டபம் நெடுக பாத்திரக் கடைகளும், துணி கடைகளும், வளையல் கடைகளும் கண்ணைக் கவர்ந்தன. பனை ஓலைப் பொருட்கள் கோயிலுள் மட்டுமே கிடைத்தன. பனை ஓலையில் செய்த பெட்டிகள், கூடைகள், கிலுகிலுப்பை, பூக்கூடை மற்றும் சிறு வயதில் விளையாடிய கலீடாஸ்கோப், கோலாட்டக் கோல்கள், சொப்பு சாமான்கள், நடை வண்டி, தாயம், பல்லாங்குழி என்று நினைவலைகளைத் தூண்டின அங்கிருந்த பல பொருட்கள்.

நான் சின்ன சின்ன ஆசையுடன் வாங்கிய பொருட்கள்:



கலகல என நீ சிரிக்க
கலகலப்பாகும் வீடு என
கலகல என்று ஒலிக்கும்
பனை ஓலையில் செய்த
கிலுகிலுப்பை வாங்கி வந்தேன்
என் ஆசை மருமகனே!!!





நவ நாகரீகம் கோலோச்சும்
சிங்காரப் பட்டணத்தில்
இரட்டைப் பின்னல் ஆட
பட்டுப் பாவாடை சுற்ற
சின்ன கொலுசு ஒலிக்க
மல்லிச் சரம் சூடி
கோலாட்டம் நடக்குமா?





உள்ளே செல்லும் பொழுது இரும்பு தாயம் பத்து ரூபாய் என்றார்கள். பித்தளையில் கிடைத்தால் வாங்கலாம் என்று விசாரித்தோம். எழுபது ரூபாய் என்றார்கள். பொருளின் மதிப்பு சரியா என்று தெரியாததால் மீண்டும் இரும்புக்கு வந்தால் இருபது என்றார்கள். பிறகு அவர்களே, இப்பொழுது விசாரித்தவர்கள் தான் என்று கூறி பத்து ரூபாய்க்கே கொடுத்தார்கள்.

வாழ்க்கை கூட
தாய விளையாட்டு தான்

விதியும் இருக்கும்
மதியும் வேண்டும்

விதிப்படி சென்றால்
ஆட்டம் நம்மை இழுக்கும்

மதிப்படி சென்றால்
நாம் ஆட்டத்தை இழுக்கலாம்

Monday, January 19, 2009

முகமா முகமூடியா?

முகமா முகமூடியா?




நேற்று வரை
நான் பார்த்த
உன் முகம்
இன்று ஏன்
மாறிவிட்டது?

இது தான்
உன் முகமா
அல்லது முகமூடியா?

நான் காண்பது
உன் முகமா முகமூடியா
என்ற தேடலில்
என் முகத்தைத்
தொலைத்துவிட்டேன்

தொலைந்தது
என் முகமா முகமூடியா?


கவிதை



ஒரே கருத்தானாலும்
ஆயிரம் பேர் கூறினாலும்
ஆயிரம் முறை கூறினாலும்
வெவ்வேறு சொல்லாக்கத்தால்
ஒவ்வொரு முறையும்
தனித்தன்மையுடன் பூக்கிறது...

Friday, January 16, 2009

சென்னை சங்கமம்

இந்த தடவை எங்க வீட்டுக்கு பக்கத்திலேயே சென்னை சங்கமம். அதனால் அப்பப்ப எட்டிப் பார்க்க முடிஞ்சுது. சில உறவுகளையும் நட்புகளையும் சந்தித்த பொழுது எல்லோருக்கும் அவர்கள் பகுதியில் நடக்கும் "சங்கமம்" எட்டிப் பார்க்கும் ஆர்வம் இருந்தது. ஆங்காங்கே கண்ணில் தென்பட்ட "சங்கமம்" இடங்களில் நல்ல கூட்டம் தெரிந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் பொங்கலையொட்டி படம் காண மாயாஜால் சென்றிருந்தோம். கரகாட்டம், மயிலாட்டம் என்று கிராமிய நிகழ்வுகளும் மாட்டு வண்டி, குதிரை வண்டி சவாரிகளும் இருந்தன. சவாரிகள் எல்லாம் யானை விலை குதிரை விலையாக இருந்தன. இவ்வளவு செலவு பண்ணிதான் கிராமத்தைக் குழந்தைகளுக்கு காட்ட முடிகிறது என்று தோன்றியது.

பத்து வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் , இலையுதிர்காலம், வசந்த காலம், கோடை காலம், குளிர்காலம் என்று பருவங்களை இயற்கை பறை சாற்றுவது காண அழகாக இருந்தது. அதை விட என்னைக் கவர்ந்தது, அந்தந்த காலத்திற்கேற்ப கொடிகளை பறக்கவிட்டதோடு ஊரே பருவங்களைக் கொண்டாடியது. அக்கொண்டாட்டங்களைப் பார்த்த பொழுது, இயந்திரத்தனமான சென்னை வாழ்க்கை நினைவுக்கு வந்தது. படிக்கும் காலங்களிலாவது கோடைத் திருவிழாவுக்கு ஊருக்கு ஓடுவோம். இப்பொழுது அதுவும் இல்லை.

இப்பொழுது சங்கமம் சற்றே எனது இரு ஏக்கங்களையும் தீர்த்தது. பொங்கல் வந்துடுச்சு, சங்கமம் நடக்குதாம் போய் பார்க்கலாம் என்று குழந்தைகளிடம் சொன்ன பொழுது, ஊரில் திருவிழாவுக்குத் தயாரான துடிப்பு இருந்தது. நாங்க எட்டிப் பார்த்த பொழுது ஒரு நாள் கரகாட்டம், ஒரு நாள் சங்கீதம் அப்புறம் மேஜிக் ஷோ நடந்துச்சு. எல்லோரும் கைதட்டி இரசிச்சாங்க, நாங்களும் இரசிச்சோம். இன்று காலை தான் ஸ்டேஜ் எல்லாம் கலைச்சு எடுத்துட்டுப் போனாங்க. சங்கமம் நம் கலாச்சாரத்தை நினைவுப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல முயற்சி.

Tuesday, January 13, 2009

பொங்கல் வாழ்த்து




தகதக என மின்னிக்கொண்டு
தைமகள் வந்து விட்டாள்

தமிழ்ப் புத்தாண்டா
தைபொங்கல் தானா
என்ற கவலையின்றி ...

தொலைக்காட்சி தரும்
நிகழ்ச்சிகளை சற்றே மறந்து ...

கரும்பு உண்டு
பொங்கல் சாப்பிடுவோம்
குடும்பத்துடன் கொண்டாடுவோம்

என்றும்
பொங்கட்டும் மகிழ்ச்சி என
பொங்கட்டும் பொங்கல்
உழைத்தோர் உயரவே...

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

Friday, January 9, 2009

கதை கேளு, கதை கேளு...

குழந்தைகளுக்குக் கதை கூறுவது சுவாரஸ்யமானது. சாதாரணமாக கதை கூறும் நான், ஒரு முறை தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் உணர்ச்சியுடனும் செய்கைகளுடனும் கதை கூறுவதைக் கண்டு, சில சமயங்களில் அம்மாதிரி முயற்சித்ததும் உண்டு.

சில சமயம் குழந்தைகள் கதை கூற சில நிபந்தனைகள் விதிப்பார்கள்:
- சில வேளைகளில் விலங்குகளைப் பற்றி கூறு என்பார்கள்
- சில வேளைகளில் விலங்குகள் வரக்கூடாது என்பார்கள்
- கெட்டவர்கள் நல்லவராக வேண்டும், யாரும் இறக்கக்கூடாது
- பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கதை கூறு

என்று பலப்பல...நிபந்தனைகள் விதிக்கப்படும் பொழுது கதைகள் நம் கற்பனையும் கலந்து மேலும் சுவாரசியமாகின்றன. இப்பதிவு என் குட்டிப்பெண்ணுக்கு கதை கூறலில் நிகழ்ந்த சில சுவாரசியங்கள் பற்றி.

******************************************
முன்பெல்லாம் குட்டிப்பெண்ணுக்கு கதை கூறினால், அவளும் அவள் தோழிகளும் கதையில் வருவர். இப்பொழுதெல்லாம்...

"ஒரு ஊர்ல் யாழ் குட்டி இருந்தாளாம்..."
"என்னைப் பத்தி சொல்லாதே..."
"சரி, கிரிப்பயல் இருந்தானாம் ..." (கிரி அவளது மாமாவின் கைக்குழந்தை)
"என்னைப் பத்தியும் , என் ஃபேமிலி பத்தியும் பேசாதே..."
"?????"

*******************************************************
மற்றொருநாள் ஒரு கதை கூறினேன். "ஒரு ஊர்ல ஒரு கம்பளிப்புழு இருந்த்தாம். அது ஒரு நாள் பட்டாம்பூச்சி ஆகறதுக்காக கூடு கட்டிச்சாம். கொஞ்ச நாள் கழிச்சு பட்டாம்பூச்சியா வெளியே வர்றதுக்காக, கூட்டைப் பிச்சுட்டு வெளியே வர ஆரம்பிச்சுதாம். ஒருத்தர் இதைப் பார்த்தாராம். பாவம், பட்டாம்பூச்சி கஷ்டப்படுதேனு , கூட்டைப் பிரித்து விட்டாராம். ஆனால் பட்டாம்பூச்சியால பறக்க முடியலையாம். ஏன் தெரியுமா? பட்டாம்பூச்சிக்குக் கூட்டைக் கஷ்டப்பட்டு பிரிச்சிட்டு வரும் பொழுது தான் பறக்கிற சக்தி கிடைக்கும். இப்ப ஈஸியா வெளியே வந்ததால அதால பறக்க முடியலையாம்."

"இதிலேர்ந்து என்ன தெரியுது? நம்ம வேலையை நாமே செஞ்சுக்கணும். இல்லைனா அப்புறம் கஷ்டமாயிடும். இனி அப்பாவைத் தூக்கச் சொல்லக்கூடாது. சரியா?"

"இனிமேல் எனக்கு கம்பளிப்புழு கதையே வேண்டாம் அம்மா"

"?????"

*********************************************************************
மற்றொரு நாள் மீண்டும் இதே கதையைக் கூறினேன்.

"இதில் இருந்து என்ன தெரியுது?"
"யாருக்கும் உதவி பண்ணக் கூடாது"
"இல்லடா. உதவி செய்யலாம், ஆனால் தேவைப்படறவங்களுக்கு தான் செய்யணும். உன்னால் நடக்க முடியும். அதனால் அப்பாவைத் தூக்கச் சொல்லக்கூடாது. சரியா?"
"எனக்கு ஒரு நாள் கால்ல அடிபட்டப்ப நானே நடந்து வந்தேன்"
"வெரி குட். அப்படி தான் இருக்கணும். இப்ப கதைல இருந்து என்ன தெரியுது?"
"பட்டாம்பூச்சிக்கு மட்டும் உதவி செய்யக்கூடாது"
"???????????"

எங்கோ படித்தேன், நாம் சொல்வதும் குழந்தைகள் கேட்பதும் ஒன்றாக இருக்காது என்று. பெரியவர்களுக்கு இடையே இம்மாதிரி நடப்பது உண்டு. நாம் சொல்வதை ஒழுங்காகப் புரிந்து கொண்டார்களா என்று சரிபார்த்துக் கொள்வது நல்லது தான்.
********************************************

Thursday, January 8, 2009

பட்டாம்பூச்சி விருது

இரண்டு வருடமாயிற்று இவ்வலைப்பதிவைத் தொடங்கி என்றாலும் சமீப காலமாகத் தான் நான் விடாது எழுதுகிறேன். பல நாட்களாக என் எழுத்துக்களை ஊக்குவிக்கும் அமிர்தவர்ஷினி அம்மா, மேலும் என்னை ஊக்குவிக்க பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கிறார்கள். தினம் கையில் ஸ்டார் வாங்கினேன், ஐஸ்க்ரீம் வாங்கினேன் அப்படினு என் குட்டிகள் சொல்லிட்டு, நீ வாங்கி இருக்கியா? எங்க காட்டு என்ற கேள்விகளுக்கு இப்ப நான் "பட்டர்ஃபிளை" வாங்கி இருக்கேன் என்று பறை சாற்ற வழி செய்த அமித்து அம்மாவுக்கு நன்றிகள் பல. என்னை இப்பதிவுலகுக்கு அறிமுகப்படுத்திய சந்தனமுல்லைக்கு கோடானு கோடி நன்றிகள்.

இப்பொழுது பட்டாம்பூச்சி செல்ல நான் விழையும் வலைப்பூ நண்பர்கள்:



ஏழு பேருக்குதான் ஒரிஜனலா கொடுக்கணுமாம், ஆனாலும் மூன்று கூட நல்ல எண் தான் என்று சொல்லிவிட்டார்களாம். கொடுக்க நினைத்த சிலர் ஏற்கனவே வாங்கி விட்டார்கள், சிலர் கையால் விருது வாங்கலாம் கொடுக்க முடியாது, அந்த அளவு எழுத்துக்களில் மிளிர்பவர்கள். எனவே மூன்றே நல்ல எண்ணாக நினைத்து, நான் விருதைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் மூவர்:

திகழ்மிளிர் - இவருடைய ஒவ்வொரு வலைப்பதிவும் வண்ணங்கள் நிறைந்தவை, கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சியானவை. கவிதைகள் அருமையானவை. இவரது "தமிழ்" பதிவில் தமிழின் இனிமையைக் காணலாம். சொல் அகராதியும், படித்ததில் பிடித்தவையும் இனிமை இனிமை.

வண்ணத்துப்பூச்சியார் - இவரது பதிவில் சினிமா உலகங்கள் பற்றிய பார்வைகளைப் பதிக்கிறார். குழந்தைகளுக்கான திரைப்படங்களைப் படங்களுடன் விமர்சிப்பது அழகு

பூந்தளிர் தீஷு - தன் மகள் தீஷுவின் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இவ்வலைப்பக்கத்தில் குழந்தைகளுக்கான பல activities நான் கற்றுக் கொண்டேன். என் குழந்தைகளின் டி.வி நேரத்தைக் குறைக்கும் வண்ணம் இருந்தன சில விளையாட்டுகள், சில சமயங்களில் வயதிற்கேற்ற சின்ன சின்ன மாற்றங்களுடன்.


இந்த பதிவில் எனக்கு ஊக்கமளிக்கும் ஒவ்வொரு Followers-க்கும் , பின்னூட்டமளித்து ஊக்கமளிக்கும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடங்கி வைத்த புதுகை தென்றல் முதல் தொடரும் ஜீவன், ஆயில்யன் , அமிர்தவர்ஷினி அம்மா, RAMYA, உயிர் நீ நிகழ் , நட்புடன் ஜமால், சுமி, தேவன்மயம், SUBRA, ஹரிணி அம்மா, அ.மு.செய்யது, வழிப்போக்கன், கணினி தேசம், அகநாழிகை, Vanakkam Chennai, அபுஅஃப்ஸர் வரை அனைவருக்கும் நன்றி.

சில நாட்களுக்கு முன் வெளியான "என் பெண் வளர்கிறாள்" கவிதையில் "வேணும்.. வேணாம்..!" என்று ஒருவர் மிகவும் ஊக்கமளித்து "நிறைய எழுதுங்க" என்று பின்னூட்டமிட்டிருந்தார். சரியாக அதே வேளையில் தான் அனானி ஒருவர் "என்ன எழுதுகிறாய்?" என்ற சாயலில் ஒன்றிரண்டு பின்னூட்டமிட்டு என்னை யோசிக்க வைத்திருந்தார். எனவே இந்த "நிறைய எழுதுங்க" பின்னூட்டம் கூட ஒரு கலாய்த்தலோ என்று எண்ணி அந்த பின்னூட்டத்தை வெளியிட மிகவும் யோசித்துப் பின் "நன்றி" என்ற ஒற்றைச்சொல்லுடன் பின்னூட்டத்தை வெளியிட்டேன். அப்பொழுது இராமலஷ்மி மேடம் அதே போல் ஒரு பின்னூட்டமிட்ட பின் , மேலும் உற்சாகம் கொண்டேன். பின் தைரியமாக "வேணும்.. வேணாம்..!" வலைப்பதிவுக்குச் சென்று பார்த்த பொழுது எனது படைப்புகளும் அங்கு பகிரப்பட்டுள்ளதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னுள் உற்சாகமூட்டிய அவருக்கும், ராமலஷ்மி மேடமுக்கும் எனது நன்றிகள் பல. அதன் பின்பு பலர் பின்னூட்டம் இட்டதில், இன்று ஒரு விருதும் வாங்கி மனம் பூரிக்கிறது. என் வலைப்பதிவுக்கு வருகை தரும்/தந்த பின்னூட்டம் இட்ட/இடாத அனைவருக்கும் எனது நன்றிகள்.

ஓகே... விழா & நன்றியுரை முடிந்துவிட்டது. ந்ன்றி , வணக்கம்.

Wednesday, January 7, 2009

திகட்டாத மழலை இன்பம்




என் குட்டிப் பெண் ஐந்து வயதை நெருங்குகிறாள் என்றாலும் மழலையின் சுவடுகள் இன்னும் விலகவில்லை. அவள் தோழி வீட்டில் அவளைப் பேசச் சொல்லி மழலை இன்பம் துய்க்கின்றனர். "குது" "குதிதை" எல்லாம் இப்பொழுது "குரு" "குதிரை" என்று ஒழுங்காக வருகிறது. என்றாலும் இன்னும் அவள் பெயர், அவளின் மழலையாலும் பெயரின் தன்மையாலும் அவள் கூறும் பொழுது புரிவதில்லை. இன்னும் "மஞ்சரி" "சஷ்மிதா" எல்லாம் "மஞ்சலி" "ஃப்ரஷ்னிதா" தான்.

இன்னும் சொற்பிரயோகங்களில் மழலை ததும்புகிறது. இன்னும் "நேற்று" என்பது "நாளைக்கு" தான், "முன்னாடி பின்னாடியாகவும்", "பின்னாடி முன்னாடியாகவும்" உள்ளது. "பள்ளம் உயரமாக" இருப்பதாகவும் "பிசைந்த சப்பாத்தி மாவு" "கசங்கிய மாவு" என்றும் உள்ளது.

என் தோழி கூறுவார் , "எனக்கு மட்டும் சக்தி இருந்தால் என் வாழ்க்கையை எனது குழந்தையின் மூன்று வயதில் உறையச் செய்து விடுவேன்" என்று . உண்மை தான். இன்னும் கொஞ்ச நாளில் இம்மழலைப் பேச்சு இருக்காது என்ற எண்ணமே, இன்னும் இன்னும் என்று ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கச் சொல்கிறது. அவள் வளர்வதைக் காணக்காண இன்பமுறும் மனம், இன்னும் சற்று நாளில் காணாமல் போய்விடும் மழலைப் பேச்சிற்குத் துடிக்கின்றது.

பி.கு: இதுல எத்தனை "இன்னும்" வந்ததுனு கண்டுபிடிங்க :-)

****************************************************************

உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.

"அம்மா உனக்கு நான் புது எக்ஸ்ர்சைஸ் சொல்லித் தரவா?" என்றாள் என் குட்டிப்பெண்
"சரி"
எப்பொழுதும் போல் கொஞ்சம் கஷ்டமான எக்ஸ்ர்சைஸ் செய்து, "ம், பண்ணு" என்றாள்.
"நீ பெரிய ஆளுடா. அம்மாவால செய்ய முடியாது"
"அம்மா, நீ தான் பெரிய ஆளு. நான் சின்ன பொண்ணு"
"இல்லைடா, நீ எக்ஸ்ர்சைஸ்-ல பெரிய ஆளு"
"ம்... நீ சமையல் செய்றதுல பெரிய ஆளு" (ஆஹா ஐஸ் மழை..)
சற்று பொறுத்து , "நீ எல்லாத்துலயும் பெரிய ஆளு, எக்ஸ்ர்சைஸ் தவிர..". (ஹச்...ஹச்...)

*****************************************************************

நான் கொஞ்சம் மூட் அவுட். உர்ரென்று இருந்தேன். சின்னப் பெண் வந்தாள். அம்மா எங்களை மாதிரி ஜாலியா இரேன். ஏன் கோபமா இருக்க? நோ ஆங்க்ரி.. ஸ்மைல்... வாயை சிரிப்பது போல் இழுத்துப் பிடித்து... நீ சிரிச்சிட்டே இருந்தால் தான் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு மூட் அவுட்டாக இருக்குமா என்ன? என் குழந்தையிடம் எனக்கு வேண்டியதுதான் என் குழந்தையாலும் என்னிடம் எதிர்பார்க்கப்படுகிறது

*****************************************************************
சினிமா போயிருந்தோம். தந்தையின் மடியில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தாள். இடைவேளையின் பொழுது ஏதேனும் உண்ண வாங்கிக் கொள்ளச் சொன்னேன். "அப்பா, எனக்கு ஒரு பாப்கார்ன். நான் வரலை... என் செல்ல அம்மாட்ட இருக்கேன்" என்று தியேட்டர் அதிர ஒரு அறிவிப்புடன் வந்துவிட்டாள். "என் செல்ல அம்மா" ட்யலாக் வேறு ஆக்ஷன் ரீப்ளேயாக 2 முறை தியேட்டர் அதிர ஓடியது. இப்பொழுதெல்லாம் இப்படித் தான் ஊர் கேட்க ஏதாவது சொல்லி, சில சமயம் சிரிக்க வைக்கிறாள், சில சமயம் நெளிய வைக்கிறாள்.
*****************************************************************

Tuesday, January 6, 2009

ஒரு திண்ணையின் கதை

அந்த திண்ணையின் வயது இருபது இருக்கலாம்
இருபது என்பது மனிதர்க்கு தான் இளமை
சற்றே வளைந்து வழவழ என்று
வீட்டிற்கு அழகுதரும் கர்வத்துடன்
நான்கு படிகளுக்குக் காவல் இருக்கும்

எனக்கு அறிமுகம் அதன் பத்து வயதில்...

கையில் விளக்கோடும்
இடுப்பில் குடத்தோடும்
மணப்பெண்ணாக வந்த பொழுது
அழகுற வரவேற்றது...

கைநிறைய வளையல்களோடும்
மடிநிறைய சுமையோடும்
விடைபெற்ற பொழுது
வாழ்த்தி வழியனுப்பியது...

மடிச்சுமை கைச்சுமையாக
மழலைச் சிரிப்பொலிக்க
மீண்டும் வந்தபொழுது
மகிழ்ச்சியாகக் காத்திருந்தது

பேரம் பேசி பொருள் வாங்கும்பொழுது
பல மனிதர்களைக் கண்டுள்ளது
காற்று வாங்கி கதைக்கும் பொழுது
பல இரகசியங்களைக் கேட்டுள்ளது

நன்மைக்கும் தீமைக்கும் பேசா சாட்சியாகக்
காலம் காலமாக அலுக்காது இருந்தது
என்றாலும்...
பேரக்குழந்தைகளின் மண்குதிரையாகவும்
பொம்மை காரின் சறுக்குமரமாகவும் மாறி
மழலைகளை மகிழ்வூட்டிய பொழுதுதான்
அது கம்பீரம் கொண்டது

வீட்டின் எல்லா விசேஷங்களுக்கும்
மெளன சாட்சியாக நிமிர்ந்து நின்றது
குறுகிப்போனது என்னவோ அதை
ஆசையாகக் கட்டியவர்
சுமந்து வரப்பட்ட வேளைதான்

அன்று...
அவர் இறுதி யாத்திரைக்கு
மெளன சாட்சியாகக் கலங்கி நின்றது

இன்று...
புயலடித்து ஓய்ந்த ஒரு மழைக்காலத்தில்
நினைவுகளை மட்டுமே பதித்துவிட்டு
தன் முகத்தைப் புதைத்துக் கொண்டது
மேலும் களையிழந்த வீட்டின்
புத்தம் புதுப்படிகளுக்குள்...

Monday, January 5, 2009

கழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன?

நேற்று என் மகள் இடைவிடாது அவளைப் படிக்க வைக்குமாறு மிரட்டியதால், வேறு வழியின்றி பாடம் கற்றுக்கொடுக்க அமர்ந்தேன். ஆங்கில இலக்கணம் நாளை பரீட்சையாம். மேடம் ஒரு பேப்பர் கொடுத்தார்கள். நான் உண்மையிலேயே மிரண்டு விட்டேன். ஒரு பக்கம் முழுக்க விலங்குகளின் ஒலிகளைப் பற்றிய ஒரு டேபிள், இன்னொரு பக்கம் பொருட்களின் ஓசைகள் பற்றிய ஒரு டேபிள். hyenas laugh, owl hoots, spoon clinks, clothes swish என்று பல விஷயங்கள். கழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன என்று தோன்றியது. 10 வயது குழந்தைகள் இதை மனப்பாடம் செய்து போய் கேட்கப்படும் நாலு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நிச்சயமாக இதில் புரிந்து படிக்க ஒன்றுமில்லை, மனப்பாடம் தான் செய்ய வேண்டும். Cat mews, bees hum, bells jingle என்று சிலவற்றை வேண்டுமானால் புரிய வைக்கலாம். மீதி எல்லாம் memory power இருக்கும் குழந்தைகளால் மட்டுமே முடியும். மற்ற குழந்தைகள் என்ன செய்வார்கள்?

இது போல தான் states and capitals இருக்கும். என்றாலும் அது நம் நாட்டைப் புரிந்து கொள்ளும் ஒரு கோணத்தில் பரவாயில்லை என்று தோன்றியது. என்றாலும்... என்னத்த சொல்ல? ஆயிரம் குறை கூறினாலும் அதைத்தானே படிக்க வைத்து மதிப்பெண் பெற வேண்டி இருக்கிறது...

Friday, January 2, 2009

கொஞ்சி கொஞ்சிப் பேசும் பெண்ணே ...

மின்னலாக மின்னிய புன்னகைக்கு
"என் தங்கம்" என்ற கொஞ்சலில்
உருவானது ஓர் இடிச்சத்தம்
யார் வெள்ளி யார் தங்கம்...
யார் வைரம் யார் பிளாட்டினம்...
என்ற கேள்விகளில் தவித்தாலும்,

தித்திப்பான முத்தத்திற்குச் சொன்ன
"என் குலாப்ஜாமூன்" என்ற பாராட்டில்
துவங்கியது இனிய போராட்டம்
குலாப்ஜாமூனா இரசகுல்லாவா ...
இருவரில் யார் லட்டு என்று
தீர்ப்பிற்குத் திணறினாலும்...

அக்காவிற்குப் பிடித்த நிறமென
அவளுக்கு பலூனை ஒதுக்கி வைத்து
எனக்கு எந்நிறமும் சம்மதம் என
மீதியை எடுத்துக் கொண்ட பொழுது
பலூனின் மதிப்பு ஏறிப்போனது

அவளுக்கு கிட்காட் பிடிக்கும்
ஒன்று எடுத்துக் கொள்ளவா
என்று அவள் அக்கா எடுத்த மிட்டாயும்
என்றும் திகட்டாத இனிப்பானது

நீ வெனிலா நான் ஸ்ட்ராபெர்ரி
என்று உருகி வழிகிறது
மழலைகளின் பாசமும் உற்சாகமும்...
எனது அடுத்த கொஞ்சலின் ஆரம்பம் வரை...