காலம் முழுவதும் போற்றும் நினைவுகளைத் தந்துவிட்டு, இன்றோடு அப்பா மறைந்து 30 நாட்கள் ஆகிவிட்டது.
அன்பு மட்டும் அல்ல கண்டிப்பும் நிறைந்தவர் அப்பா. படிப்பில் கண்டிப்பு மற்றவற்றில் சுதந்திரம். தன் காலத்து அப்பாக்கள் போல் அல்லாது எனக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் புரியவே எனக்கு நிறைய நாள் தேவைப்பட்டது. பக்கத்து வீட்டில் அப்பாக்கள் வரும் நேரம் உள்ளே ஓடும் குழந்தைகளும் அம்மாக்களும் இருக்க, எப்பொழுதோ வந்து விட்ட அப்பா நம்மை அழைக்க கூட இல்லை என்பதன் சுதந்திரம் வீட்டை விட்டு வெளியேறி வெளியுலகம் காணும்பொழுது புரிந்தது.
நேரம் தவறாமை நேர்மை இதெல்லாம் அப்பாவிடமிருந்து கற்றவை. அப்பாவின் அன்பு கடுமையுடன் கூடியது. எந்த அளவு கோபம் வருமோ அதே அளவு அன்பும் உண்டு. 11ம் வகுப்பிலும் சைக்கிளில் வைத்து அழைத்து சென்றது ஒன்று. பள்ளி செல்ல பேருந்தில் ஏற்றிவிட்டு பின்னால் சைக்கிளில் வந்து பள்ளியை அடைந்து விட்டேனா என பார்க்க வருவது என்பதெல்லாம் அப்பாவால் மட்டுமே முடியும். உடல் நலமில்லை என்றால் அம்மாவிடம் இது எண்ணை அதிகம் , அது சரியில்லை என்ற கோபத்தின் பின்னுள்ள அன்பு பிள்ளைகள் வரும் பொழுதுதான் புரிகிறது.
என்ஜினீயரிங் படிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. பயாலஜி தான் பிடிக்கும் என்றாலும், கிடைத்த வாய்ப்பை நீ விடக்கூடாது, பின்னால் வருத்தப்படக்கூடாது என்று சொன்னதோடு அல்லாமல் எந்த கோர்ஸ் டாப், என்று பார்த்து விட்டு வந்து...கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் சிறந்தது...ஏசியில் வேலை பார்க்கலாம் என்று பார்த்து பார்த்து சேர்த்தது அப்பா தான். பெண் பிள்ளைக்கு எதற்கு என்ஜினீயரிங் என்ற சிலரின் குரல்களை எல்லாம் செவி மடுக்காமல் கல்லூரியில் சேர்த்த பொழுது தெரியவில்லை...அவர் வரையில் அவர் செய்தது எனக்கு எத்தனை பெரிய மைல்கல் என்று.
கல்லூரியில் இருந்து வர ஆறு மணிக்கு மேல் ஆனால் அந்த பெரிய அரசு குடியிருப்பின் இரண்டு கேட்டிலும் மாறி மாறி காத்திருப்பார் எந்த பக்கமும் நான் வரலாமென... நடுவில் வீட்டிற்கு சென்று ஒருமுறை தான் விட்டு விட்டோமோ என ஒரு பார்வை வேறு. அந்த செயலுக்கு பின்னால் இருக்கும் பொறுமை அப்பொழுது புரியவில்லை.
கூட்டுப்புழுவாக இருந்த என்னை , தைரியமாக வேலை கிடைத்ததும் சென்னையில் விடுதியில் சேர்த்து இன்று இங்கு இருக்க , அவர் பார்த்து பார்த்து செய்தவை ஏராளம். தினம் தனியே விடுதிக்கு சென்றாலும் அவர் வந்தால் விடுதி வரை வந்து உள்ளனுப்பிவிட்டு 7கி.மீ. நடந்து ஊருக்கு பஸ் பிடிக்க செல்வார். பிள்ளைகளின் படிப்பு , வேலை, விடுதி , திருமணம் எல்லாவற்றிலும் அவர் எடுத்த சிரத்தையும் அன்பும் எங்களின் வரம்.
நடையும் மிதிவண்டியும் அவருக்கு பிரியமானவை. வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுதும் சரி, ஒய்வு பெற்ற பின்பும் சரி... வெகு நாட்களுக்கு அவை தான் அவரது ஊர் சுற்றலுக்கு துணை, மெல்ல மெல்ல அவரிடமிருந்து ஒவ்வொன்றாக பறிக்கப்படும்வரை.