என் மேகம் ???

Thursday, August 28, 2008

குழந்தைகளும் , கதைகளும் கற்பனைகளும்....

"இப்பல்லாம் பிள்ளைகளுக்கு நீ கதை சொல்லி சோறூட்டுவது இல்லை", என்பது என் கணவரின் புகார். உண்மை தான், "காக்கா வந்து பாப்பாட்ட, அக்கா அக்கா நான் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட மாட்டியானு கா கா னு
கத்துச்சாம்" என்று தொண்டை வரள பறவைகள் போலவும் மிருகங்கள் போலவும் கத்தி கதை சொல்லி சாப்பிட வைத்த நாட்கள் உண்டு. இப்பொழுதெல்லாம், நிறைய வேலைகள் இருப்பதால், "முழுங்கு ...பத்து சொல்றதுக்குள்ள முழுங்கு..." என்று கூறி ஊட்டுவது வழக்கமாகி விட்டது.



இரவு தூங்க கதை சொல்லும் வழக்கம் கூட, கதையின் சுவாரசியத்தில், பிள்ளைகள் தூங்காது விழித்து இன்னொரு கதை சொல்லு என்று கூறுவதால், நின்று விட்டது. என்றாலும், சமீபத்தில் வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் கதை சொல்லும் வழக்கம் தொடங்கியது. அது குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி விடுவதைக் காண இனிமையாக உள்ளது.


இப்படித் தன் நேற்று நான் என் நான்கு வயது பெண்ணிடம் ஒரு கதை கூறி விட்டு, நீ ஒரு கதை சொல்லு என்றேன். எப்பொழுதும் வேகுவட்டி (விறகுவெட்டி) கதையும், காக்கா கதையும் கூறுபவள், நான் சொன்ன கதையையே மாற்றிக் கூறியது இரசிக்கத்தக்கதாக இருந்தது. மேலும், என் பெரிய பெண் சினன வயதில் கதை கேட்கும் பொழுது போடும் கண்டிஷன் போலவே, ஒரு கருத்து அவள் கூறிய கதையில் இருந்ததாகத் தோன்றியது. அவள் போட்ட கண்டிஷன் "கதையில் யாரும் செத்துப் போகக் கூடாது... கெட்டவங்க எல்லாம் நல்லவங்களாக வேண்டும்.."


நான் கூறிய கதை:

ஒரு தோட்டக்காரர் இருந்தாராம். அழகான தோட்டம் வச்சிருந்தாராம். அவருக்கு ஊருக்குப் போக வேண்டி இருந்ததாம். செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தனுமே, யார் கிட்ட சொல்லலாம்னு யோசிச்சாராம். தோட்டத்தில் இருந்த
குரங்குகளைக் கூப்பிட்டு, நான் ஊருக்குப் போகணும் , செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தி பாத்துக்குவிங்களானு கேட்டாராம். அதுங்களும் சரினு சொல்லிச்சாம். அவர் போனப்புறம், அதுங்கள்ளாம், "சின்ன வேர் இருக்கிற செடிக்கு கொஞ்ச தண்ணியும், பெரிய வேர் இருக்கிற செடிக்கு நிறைய தண்ணியும் ஊத்தணும்" அப்படீனு சொல்லிட்டு, ஒவ்வொரு செடியா பிடிங்கி பார்த்து நட்டு வச்சு தண்ணி ஊத்துச்சாம். பிடிங்கி வச்சதால் செடியெல்லாம் செத்துப் போய்டுச்சாம். ஒரு வேலையை கொடுக்கும் போது, யோசிச்சு செய்றவங்ககிட்ட கொடுக்கணும்.


அவள் கூறிய கதை:

ஒரு தோட்டக்காரர் இருந்தாராம். அழகான முயல் வளர்த்தாராம். அவருக்கு ஊருக்கு போக வேண்டி இருந்ததாம்.முயலுக்கெல்லாம் சாப்பாடு போடனுமேன்னு யோசிச்சாராம்.தோட்டத்தில் இருந்த குரங்கை கூப்பிட்டு, நான் ஊருக்குப் போகணும் , முயலைப் பார்த்துக்குவியானு கேட்டாராம். குரங்கு சரினு சொல்லிச்சாம். "முயல் என்ன சாப்பிடும்னு கேட்டுச்சாம்". (ஆகா, என்ன ஒரு முன்யோசனை) "கேரட் சாப்பிடும்". அப்புறம் குரங்கு முயல் கையை கடிச்சிடிச்சாம். (ஏண்டி கடிச்சுது?) ம்ம்.. முயல் குரங்குக்கு தெரியாம கைல மருதாணி போட்டுச்சாம், அதனால் கடிச்சுது (என்ன ஒரு கற்பனை). முயல் வந்து தோட்டக்காரர் கிட்ட குரங்கு என் கையை கடிச்சுதுனு சொல்லிச்சாம். உடனே தோட்டக்காரர் குரங்கை மரமா மாத்திட்டாராம் (இது Fairy Tales பாதிப்போ?). அப்புறம் முயலைக் கூட்டிட்டு ஊருக்குப் போய்ட்டாராம். (உன் பொறுப்பை நீ தான் ஏற்க வேண்டும் என்கிறாளோ?)

நான்கு வயது பெண் முற்றிலும் வேறாக யோசிக்கிறாள் என்பது இனிமையாக இருந்தது. கற்பனையைத் தூண்டும், இந்த கதை கூறும் வழக்கத்தை விடக் கூடாது என்று எண்ணிக் கொண்டேன்.

Monday, August 25, 2008

குழலினிது யாழினிது ...

என் குட்டிப் பெண்ணைப் பேச வைத்து மழலையில் திளைத்துக் கொண்டிருந்தோம்.
"குட்டிம்மா உருளைக்கிழங்கு சொல்லு"
"உருங்கை கிலங்கு"
"கர்சீப் சொல்லுங்க.."
"கப்பீச்சு"
"யாருக்கு கோயில்ல கொண்டை கடலை மாலை போடுவீங்க?"
"குதுவுக்கு" (குருவுக்கு...)
அவள் கூறுவதை சிரித்து ரசித்துக் கொண்டிருந்தோம். (அம்மா அவளை குதிரை சொல்லச் சொல்லும்மா (குதிதை என்பாள்) என்று என் பெரிய பெண் என் காதில் ஓத...)
"குதிரை சொல்லுடா கண்ணா..."
"ஹார்ஸ்..". இப்பொழுது அவள் சிரித்தாள்.

எங்கு கற்றாய் இந்த சாமர்த்தியத்தை?

***********************************************************************************
சமைக்க போரடித்தது என்று, என் இரண்டு சுட்டிகளையும் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவர்களுக்கு ஓட்டலுக்கு வர விருப்பமில்லை. நான் ஏதேதோ சொல்லி சமாளித்து அழைத்துச் சென்றிருந்தேன். எல்லாம் சாப்பிட்டு பழரசம் அருந்திக் கொண்டிருந்த பொழுது என் சின்ன வாண்டு "அம்மா , நீ ரொம்ப அழகா ஜுஸ் குடிக்கிற..." என்றது. திடீரென்று என்ன கரிசனம் என்று பார்த்தேன். "அதே மாதிரி நீ ரொம்ப அழகா சமைப்ப... அதனால இனிமேல் நீ வீட்லயே சமைச்சுடு...ஓட்டலுக்கு வர வேண்டாம்.."

எங்கு கற்றாய் இந்த வாய்ஜாலத்தை...

************************************************************************************

நானும் என் சுட்டி பெண்ணும் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தோம். திடீரென்று அவள் "அய்யோ அம்மா அவர் போறார்மா... சைக்கிள்ல போறார்மா... " என்று உற்சாகமாக, யாருடி என்று நானும் தேடினேன். "அவர் தான்மா... தாடி வச்சிருப்பாரே... அகர முதல எழுதினாரே..."

************************************************************************************
அலுவலகத்திற்கு வந்திருந்தாள். அவளைக் கண்டு எல்லோரும் என் இடத்திற்கு வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் பொறுத்திருந்து பின் கேட்டாள், "ஏம்மா ஆபீஸ்ல பேசிட்டு தான் இருப்பீங்களா? வேலை பார்க்க மாட்டீங்களா?"அடுத்த நிமிடம் எல்லோரும் அவரவர் இடத்தில்...

************************************************************************************
என் மேலாளர் என்னிடம் சில விளக்கங்கள் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்ர் சென்ற பின்.."அம்மா நீ மேனேஜரா அவங்க மேனேஜரா?""ஏன்டா செல்லம் அவங்க தான் மேனேஜர்""இல்ல, அவங்க மேனேஜர்னா, எல்லாம் தெரியணும் இல்ல? ஏன் உன்கிட்ட கேக்கறாங்க?
*************************************************************************************

Thursday, August 14, 2008

இனிமை இனிமை ... கற்பது இனிமை

சில பள்ளிகளில் பிள்ளைகளின் திறன் வளர்க்க அவர்கள் பள்ளியில் கடைபிடிக்கப் படும் சில முறைகள் மிகவும் இனிமையாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளன..

உதாரணத்திற்கு, Spoken English-ல் திறம் பெற, அவர்கள் கூறுவது "உனக்கு பிடித்த பொம்மையை எடுது வந்து அது பற்றி பேசு". அவ்வளவு தான், குட்டீஸ் எல்லாம், இது தான் தங்கள் பொம்மையைத் தோழர்/தோழி-களுக்கு காட்டும் சந்தர்ப்பம் என்று, தங்களுக்குப் பிடித்த பொம்மையைப் பற்றி ஆங்கிலத்தில் ஆர்வத்துடன் பேசக் கற்றுக் கொள்கின்றனர். கொஞ்சம் பெரிய க்ளாஸ் என்றால் "இரண்டு கண், இரண்டு காது இருக்கிறது.." என்று மட்டுமே சொல்லக்கூடாது என்று அறிவுற்த்தப்படுவதால், சற்று கூடுதல் விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார்கள். சாதாரணமாக இதைப் பற்றி பேசு, அதைப் பற்றி பேசு என்று கூறுவதை விட, இம்முறை குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.

இதைப் போல் பொஙகலுக்கு, சின்ன சின்ன மாதிரிகள்... வீடு, மாடு, பொங்கல் பானை என்று செய்ததோடு, சந்தை போல் அமைத்து, குழந்தைகள் விருப்பப்பட்டதை வாங்க வளையல் கடை, பொட்டு கடை , சிறு விளையாட்டு சாமன்கள் கடை என்று அமைத்ததோடு, பொங்கலும் கரும்பும் சாப்பிட்டுள்ளனர். பட்டணத்தில் பொங்கல் கொண்டட்டத்தைப் பிள்ளைகளுக்கு இப்படி தானே காட்ட முடியும்?

இன்னொரு பள்ளியில், ஆசிரியர்கள் காய்கறி, விளையாட்டு சாமான், தின்பொருள் என்று சிறு, சிறு கடைகள் அமைக்கிறார்கள். குழ்ந்தைகளிடம் பில் தரப்படுகிறது. அவர்கள் தமக்கு விருப்பமானதை வாங்கிக் கொண்டு, அதன் விலையை அறிந்து பில்லில் எழுத வேண்டும். எல்லாம் வாங்கிய பின், பணம் செலுத்தும் இடத்தில், மொத்த பணத்தை செலுத்தி பாக்கியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வரவு செலவு கணக்கு வைப்பதற்கு யதார்த்தமான பாடம்.

இன்னொரு பள்ளியில், குழ்ந்தைகளிடம் ஒரு வீட்டின் முகவரி தரப் படுகிறது. அவர்கள் பள்ளி பேருந்தில் ஏறிக் கொண்டு, அம்முகவரி உள்ள இடத்தை வழியில் விசாரித்து, ஓட்டுநரிடம் எப்படி செல்ல வேண்டும் என்று வழிநடத்துகின்றனர். அவர்கள் செல்லும் வீடு, முடிவில் ஓர் ஆசிரியையின் வீடாக இருக்கும். அங்கு பழரசம் அருந்தி வெற்றிகரமாகத் தங்கள் வேலை முடிந்த திருப்தியுடன் பள்ளி செல்கின்றனர்.

Tuesday, August 12, 2008

என்ன பெயர் வைக்கலாம்...

இது என் சின்ன பெண்ணிற்கு பெயர் சூட்டிய பொழுது நடந்த விஷயம். எனக்கு மூன்றே மூன்று கண்டிஷன்:
1. என் பெண் நந்தினி என்ற பெயருடன் இயைந்து ஒலிப்பதாக இருக்க வேண்டும்
2. தூய தமிழ் பெயராக இருக்க வேண்டும்
3. பெயர் கொஞ்சம் மாடர்னாக இருக்க வேண்டும்.

வலையிலும் அகராதியிலும் தேடி "யாழினி" என்று பெயர் சூட்டினோம். இன்று, அப்பெயரைச் சொல்லும் பொழுது எல்லோரும் "இனிமையாக" உள்ளது என்று கூறிக் கொண்டே அதை பற்றிக் கூறும் விமர்சனங்கள்:
1. அட்டவணையில் கடைசியாக வரும் (தூங்கி விடக் கூடாது...)
2. கடைசியாக கேள்வி கேட்கப்படும் (கொஞ்ச நேரம் தூங்கலாம்...)
3. மெடிக்கல் சீட் மிஸ் ஆகி விடப் போகிறது (அப்பாடா ... இப்ப எலலாம் டை பிரேக்கர் பிறந்த தேதி தானாம்...இது "Not Applicable" )
4. வெளிநாட்டிற்குச் சென்றால் உச்சரிப்பது சிரமமாக இருக்கும் (லோக்கலில் மட்டும் எனன "யாளினி" தான் கேட்கிறது...)

நல்ல வேளை... இந்த கருத்தெல்லாம் நான் கேட்கும் முன்னே பெயர் சூட்டிவிட்டேன்.இன்னொருவர் தன் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க கூறிய காரணம் முழுமையாக கூப்பிட வேண்டும் என்று பூஜா என்று வைத்ததாகக் கூறினார். யாரும் சுருக்காமல் கூப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை...