என் மேகம் ???

Monday, November 30, 2009

தீபாவளி நினைவுகள் - தொடர் பதிவு

உழவன் இந்த தொடருக்கு அழைச்சு ரொம்ப நாளாச்சு. கார்த்திகை தீபமேற்றி வேட்டு போடறதுக்கு முன்னாடி பதிவைப் போட்டுடலாம்னு.... வழக்கம் போல் தாமதத்திற்கு மன்னிக்கவும்...

1) உங்களைப் பற்றி சிறுகுறிப்பு?
சிறுகுறிப்பா? வள வளனு பேசுபவளிடம் சிறுகுறிப்பு கேட்டால் எப்படி?

2) தீபாவளி என்ற உடன் உங்கள் நினைவுக்கு வரும் (மறக்க முடியாத) சம்பவம்?
ஆட்டம் பாமை சிரட்டைக்குள் வைத்து வெடித்து சிதறிய சில்லில் வீங்கிப்போன அம்மாவின் முகம்.

3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்?

சென்னை

4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடப்படும் தீபாவளி பற்றி ஒரு சில வரிகள்?
ஊரில் எல்லோரும் சேர்ந்து என்ன பலகாரம் என்று கலந்தாலோசித்து, வாழ்த்துக்கள் பரிமாறி, வாசல் நிறைத்து கோலமிட்டு கோலம் அலங்கோலமாக பட்டாசு வெடித்து என்று எல்லாவற்றையும் மறந்து ... ஓ தீபாவளி... சரி புத்தாடை .. பட்டாசு என்று கடமையாக மாறிவிட்டாற் போல் ஓர் உணர்வு...

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்களா?
தி.நகரில் கூட்டமில்லாமல் SKC இருந்தது. ஒரு மாலை சென்று எல்லோருக்கும் எடுத்துவிட்டோம்.

6) உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?
முறுக்கு, பால்கோவா.

7) உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்? (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)

தொலைபேசி , மின்னஞ்சல், குறுஞ்செய்தி

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்து விடுவீர்களா?

இரண்டும் செய்வோம்.

9) இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒரு சில வரிகள்? தொண்டு நிறூவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம்?

எங்கள் வீட்டில் எந்த ஒரு நல்ல நாளுமே அருகில் இருக்கும் தொண்டு நிறுவனத்திற்கு உணவு ஸ்பான்சர் செய்வது வழக்கம். இந்த முறை தீபாவளி ஓட்டி CRYக்கு வழங்கினோம்

10) நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்?
தீபாவளி நினைவுகளைப் பொங்கலுக்கு போடற அளவுக்கு நான் லேட், அதனால் ”ஸ்டாப் த ம்யூஜிக்”

Monday, November 23, 2009

வண்ணத்துப்பூச்சி எங்கே போச்சு?



பரபரத்துக் கொண்டிருந்த போக்குவரத்து நிறைந்த சாலையை மின்னலாக அழகுபடுத்தி படபடத்து மறைந்தது வண்ணத்துப்பூச்சி ஜோடி ஒன்று. அந்த அழகை எவரும் இரசித்ததாகத் தெரியவில்லை. பட்டாம்பூச்சி பறப்பதால் வசந்த காலமோ என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. வெயிலும் மழையும் தவிர காலத்தை கணிக்க வேறொன்றுமில்லாத அலுப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் மீண்டும் மேம்பாலமருகே பட்டாம்பூச்சிகள் ஒன்றை ஒன்று துரத்தி மறைந்தன. எங்கே சென்றிருக்கும் என்ற எண்ணத்துடன் வண்ணத்துப்பூச்சி நினைவுகளைத் துரத்தியது மனம்.

வண்ணத்துப்பூச்சி மட்டும் தானா? பொன்வண்டு, மின்மினி பூச்சி என்று எத்தனை பூச்சிகள் மனதைக் கவர்ந்தன. தீப்பெட்டிக்குள் குடி வைக்கப்பட்டு இலைகளால் வளர்க்கப்படும் பொன்வண்டு, பின் கருணையால் விடுவிக்கப்படும். மின்மினி பூச்சிகளைக் காண்பதற்காகவே முற்றத்து விளக்குகள் அணைக்கப்படும். மிகவும் பாவப்பட்ட ஜீவன் இந்த பட்டாம்பூச்சி தான்.

வசந்தத்தின் வருகையை பூமெத்தை விரித்து தாவரங்கள் வரவேற்க, மெலிதான சில்லென்று காற்று கட்டியம் கூற வண்ணத்துப்பூச்சிகளின் நடனம் துவங்கும். பெரிதாக கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் இராஜா வர, ஆழ்ந்த பழுப்பு வண்ணத்தில் கருப்பு கோடுகள் அலங்கரிக்க இராணி வர, சின்ன சின்ன மஞ்சள் நிறத்து சேடியர் பூக்களை முத்தமிட, இன்னும் பல வண்ணங்களில் ஏனையோர் நடனமிட வசந்தம் புன்சிரிப்போடு நுழையும். பூக்களை முத்தமிட்டு செல்லும் அந்த பட்பட் பட்டாம்பூச்சிக்கு எப்படி தான் என் கைகளின் வாசனை தெரியுமோ? சட்டென்று மறைந்து மாயாவியாக மீண்டும் நான் விலகிய பின் வந்தமரும்.

குட்டிப்பையன்களின் கை சும்மா இருக்காது. வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணங்கள் அவர்கள் கைகளில் ஒட்ட, பிளாஸ்டிக் பைகளில் படபடக்கும் நிறமிழந்தாலும் நிறம் மாறா வண்ணத்துப்பூச்சிகள். “உன்னை அடைத்தால் எப்படி இருக்கும்” என்ற சண்டைகளுடன் அவற்றுக்கான விடுதலை போராட்டங்கள் ஆரம்பிக்கும். பட பட என்று சிறைக்குள் போராடி ஓய்ந்து விழும் சமயம் தான் பையன்களின் மனம் கரையும், சிறை திறக்கும். சற்றே தளர்ந்து நகர்ந்து, பின் சுதந்திரக்காற்றின் ஸ்பரிசத்தில் துள்ளி எழுந்து மீண்டும் படபடத்து பறந்து மறையும் வானவில் வண்ணங்கள். பட்டாம்பூச்சியின் வளர்ச்சியைப் பாடத்தில் மட்டுமே கவனித்திருந்தேன் சில வருடங்கள் முன் வரை...

அலுவலகம் முடிந்து வரும் வேளையில், நந்தினி ஓடிவந்தாள் "அம்மா, பட்டாம்பூச்சி முட்டை போட்டிருக்கும்மா வந்து பாரேன்... ஐயாப்பா காட்டினாங்க". எனக்கு அது பட்டாம்பூச்சி முட்டை என்று தோன்றவில்லை. அவள் திருப்திக்காக எட்டிப்பார்த்தேன். "அம்மா முட்டை பொரிச்சு புழு வந்துடுச்சு... இலையெல்லாம் ஓட்டை ஓட்டையா இருக்கு பாரேன்". கம்பளி புழு என்றால் எட்டடி ஓடும் நான் அவளுக்காக மீண்டும் எட்டிப்பார்த்தேன். "அம்மா கூடு கட்டி உள்ள போயிடுச்சு...". மெல்ல ஆர்வம் எட்டிப் பார்க்க தினம் எட்டிப் பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து வந்து இருள் கவியும் வரை, தாத்தாவும் பேத்தியும் அந்த செவ்வரளிச் செடியருகில் கழிக்கும் நேரங்கள் கவிதை போன்று இனிமையானவை. "அம்மா பட்டாம்பூச்சி பறந்து போச்சு..." கண்களில் அதிசயத்துடன் மகள், பேத்திக்கு இயற்கையைப் போதித்த திருப்தியில் மாமா.

மெல்ல எட்டிப் பார்த்தேன்... பட்டாம்பூச்சியின் சாட்சியாக காலியான கூடு. எங்கே பறந்து போச்சு? மீண்டும் வீடு தேடி வருமா என தெரியவில்லை. எத்தனை பேருக்கு அமையும் பிறந்ததில் இருந்து இறுதி வரை அதே இடத்தில் வாழ்க்கை? உயிர் கூட்டைப் பிரியும் வரை... எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழ்ந்து எங்கே முடியப் போகிறதோ??? செவ்வரளி தழைத்தவுடன் மீண்டும் வந்தது வண்ணத்துப்பூச்சியின் முட்டைகளும் தாத்தா பேத்தியின் கவிதையான நேரங்களும். இப்பொழுது செவ்வரளிச் செடியும் இல்லை, மாமாவும் இல்லை... நினைவுகள் மட்டும் நெஞ்சில் பசுமையாக வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களாக... நினைவு இருக்கிறதா என் செல்ல மகளே ஐயாப்பாவுடனான அந்த இனிய பொழுதுகள்?

Sunday, November 22, 2009

பதில் வராத கடிதங்கள்

காகிதமோ மின்வடிவோ
மனதைச் சுமந்து வருபவை...
அன்பு, கோபம், வலி
என்று ஏதோ ஒன்றைத்
தாங்கி வருபவை...

கடிதங்கள்!!!

முகவரி தொலைத்த கடிதங்கள்
இடம் மாறி மறைந்தோ
எழுதப்படாமல்...
நினைவுகளில் மட்டும் நிறைந்தோ...
முகம் இழந்து கரைந்திருக்கலாம்

முகவரி தொலைத்ததோ
நம் முகம் தொலைத்ததோ...
பதில் வராத கடிதங்களால்...
மனதில் உறுத்திக் கொண்டிருக்கும்
நிராகரிப்பின் வலி

Thursday, November 12, 2009

திண்ணை தொலைத்த வீடுகள்

திண்ணை என்பது..
உறவும் நட்பும்
அளவளாவும் பூந்தோட்டம்
களைத்த வழிப்போக்கரும்
சற்றே இளைப்பாறலாம்
ஓய்வாக அமர்ந்து
பராக்கும் பார்க்கலாம்

பரபரக்கும் வாழ்க்கையில்
உட்கார நேரமில்லை
உறவாட பொழுதில்லை
முகமறியா மனிதர்
புன்னகைத்தாலும் ஐயம்...
அறிந்த மனிதரையே
வீட்டுள் அழைக்க பயம்...
அறியா மனிதருக்கு
திண்ணையில் இருக்குமா இடம்?

மனிதம் மறையும் உலகில்
மனதைத் தொலைத்தனர் மனிதர்கள்
திண்ணை தொலைத்தன வீடுகள்

Wednesday, November 11, 2009

குழந்தைகள் கையில் பலூன்

சின்ன சின்ன கைகளில்
பச்சை நிற பலூனுடன்
பட்டாம் பூச்சியாக
படபடத்துக் கொண்டிருந்த
மழலையின் கண்களில்
வசந்த காலம்

சிவப்பு நிற பலூனுடன்
பட்டாம் பூச்சியாக
படபடத்துக் கொண்டிருந்த
மழலையின் கண்களில்
மழைக் காலம்...
பச்சை நிற பலூன் கேட்டு

பலூனின் நிறத்தில்
ஒன்றுமில்லை என
சிவப்பின் மகத்துவத்தை
சொல்லலானாள் தாய்

குழந்தைகள் கையில் பலூன்
பெரியவர்கள் கையில்...
கனவுகளும் வாழ்வின் தருணங்களும்!!!

Thursday, November 5, 2009

விருப்பு வெறுப்புகள் - தொடர் பதிவு

பின்னோக்கியின் அன்பான அழைப்பிற்காக இந்த பதிவு...

1. அரசியல்வா(வியா)திகள்
பிடித்தவர் : பெருந்தலைவர் காமராஜர்
பிடிக்காதவர்: இப்ப இருக்கிற அரசியல்வியாதிகளைப் பிடிக்கும்னு எத்தனை பேரைச் சொல்லமுடியும்? ஆனால் பிடிக்காதுனு எல்லாரையும் கைகாட்டலாம்.

2.இயக்குனர்
பிடித்தவர் : பாசில்
பிடிக்காதவர் : எஸ்.ஜே.சூர்யா


3. நடிகர்
பிடித்தவர் : சூர்யா
பிடிக்காதவர்: சிம்பு

4. நடிகை
பிடித்தவர் : பாவனா
பிடிக்காதவர் : ஸ்ரேயா

5. எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ்.ரா, அனுராதா ரமணன்
பிடிக்காதவர்: புஷ்பா தங்கதுரை, சாருநிவேதிதா

6. பாடகர்
பிடித்தவர் : எஸ்.பி.பி
பிடிக்காதவர்: அப்படி யாரும் இல்லை

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர் : தேவா

---
இந்த தொடர் விளையாட்டுக்கு இவங்களை அழைக்கிறேன்:
1. கோபி
2. ஊர்சுற்றி


இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்