என் மேகம் ???

Showing posts with label எண்ணங்கள் பெண். Show all posts
Showing posts with label எண்ணங்கள் பெண். Show all posts

Thursday, April 9, 2009

பெண் என்றால்...

அலுவலகத் தோழிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவர்களைக் காணச் செல்ல பேசிக் கொண்டிருந்த பொழுது, ஒரு பெண் "ஹ்ம்.. ஆண்குழந்தை தானே!!" என்று அலுத்துக்கொண்டார். மற்றொருவர் "ஆ.. ஆண்குழந்தையா?" என்று அதிர்ச்சி அடைந்தார்.

எனக்கு இந்த ரியாஷன்ஸைப் பார்த்தால் ஊர்ப்பக்கம் இவை பெண்குழந்தைக்கு வந்திருக்கும் என்று தோன்றியது.

மாலை கணவருடன் பேசிக்கொண்டிருந்தேன். இம்முறை அவரது பிறந்த நாளுக்கு பெண்கள் இருவரும் பிறந்த நாள் வாழ்த்து எழுதி ஒரு வெண்பலகையைக் கொடுத்து இருந்தார்கள். அதைப் பார்த்த அவரது அலுவலக நண்பர், "உங்களுக்குப் பெண் குழந்தையா?" என்று கேட்டாராம். இவர், "ஆமாம் , எப்படி சொன்னீங்க?" என்றதற்கு "எனக்கு ஒரு பையன் இருக்கிறான் , பரிசெல்லாம் கொடுக்க மாட்டான் ", என்றாராம்.

சமீப காலங்களில் நிறைய பேர் பெண் குழந்தை வேண்டும் என்று விரும்புவதைக் காண முடிகிறது. பெண் என்றால் செலவு/சிரமம் என்ற எண்ணங்களை விட அன்பு/பாசம் என்ற எண்ணங்கள் ஊடுருவுவதைக் காண முடிகிறது.

எனக்கு பெண் சிசு கொலை பற்றியும் சமீபத்தில் அதைப் பற்றி நான் வாசித்து பதைத்த இராஜம் கிருஷ்ணன் மற்றும் வாஸந்தியின் நாவல்கள் (தலைப்பு மறந்துவிட்டது) நினைவுக்கு வந்தன.

மாற்றங்கள் எப்பொழுதும் உடனே வருவதில்லை. சின்ன சின்ன மாற்றங்கள் ஒரு நாள் நல்ல மாறுதலை ஏற்படுத்தி இருக்கும். இப்பொழுது நகர்ப்புறங்களில் பெண் குழந்தையைப் பற்றி உருவாகும் மாற்றம் விரைவில் கிராமப்புறங்களிலும் ஏற்படட்டும்.