என் மேகம் ???

Friday, January 9, 2009

கதை கேளு, கதை கேளு...

குழந்தைகளுக்குக் கதை கூறுவது சுவாரஸ்யமானது. சாதாரணமாக கதை கூறும் நான், ஒரு முறை தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் உணர்ச்சியுடனும் செய்கைகளுடனும் கதை கூறுவதைக் கண்டு, சில சமயங்களில் அம்மாதிரி முயற்சித்ததும் உண்டு.

சில சமயம் குழந்தைகள் கதை கூற சில நிபந்தனைகள் விதிப்பார்கள்:
- சில வேளைகளில் விலங்குகளைப் பற்றி கூறு என்பார்கள்
- சில வேளைகளில் விலங்குகள் வரக்கூடாது என்பார்கள்
- கெட்டவர்கள் நல்லவராக வேண்டும், யாரும் இறக்கக்கூடாது
- பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கதை கூறு

என்று பலப்பல...நிபந்தனைகள் விதிக்கப்படும் பொழுது கதைகள் நம் கற்பனையும் கலந்து மேலும் சுவாரசியமாகின்றன. இப்பதிவு என் குட்டிப்பெண்ணுக்கு கதை கூறலில் நிகழ்ந்த சில சுவாரசியங்கள் பற்றி.

******************************************
முன்பெல்லாம் குட்டிப்பெண்ணுக்கு கதை கூறினால், அவளும் அவள் தோழிகளும் கதையில் வருவர். இப்பொழுதெல்லாம்...

"ஒரு ஊர்ல் யாழ் குட்டி இருந்தாளாம்..."
"என்னைப் பத்தி சொல்லாதே..."
"சரி, கிரிப்பயல் இருந்தானாம் ..." (கிரி அவளது மாமாவின் கைக்குழந்தை)
"என்னைப் பத்தியும் , என் ஃபேமிலி பத்தியும் பேசாதே..."
"?????"

*******************************************************
மற்றொருநாள் ஒரு கதை கூறினேன். "ஒரு ஊர்ல ஒரு கம்பளிப்புழு இருந்த்தாம். அது ஒரு நாள் பட்டாம்பூச்சி ஆகறதுக்காக கூடு கட்டிச்சாம். கொஞ்ச நாள் கழிச்சு பட்டாம்பூச்சியா வெளியே வர்றதுக்காக, கூட்டைப் பிச்சுட்டு வெளியே வர ஆரம்பிச்சுதாம். ஒருத்தர் இதைப் பார்த்தாராம். பாவம், பட்டாம்பூச்சி கஷ்டப்படுதேனு , கூட்டைப் பிரித்து விட்டாராம். ஆனால் பட்டாம்பூச்சியால பறக்க முடியலையாம். ஏன் தெரியுமா? பட்டாம்பூச்சிக்குக் கூட்டைக் கஷ்டப்பட்டு பிரிச்சிட்டு வரும் பொழுது தான் பறக்கிற சக்தி கிடைக்கும். இப்ப ஈஸியா வெளியே வந்ததால அதால பறக்க முடியலையாம்."

"இதிலேர்ந்து என்ன தெரியுது? நம்ம வேலையை நாமே செஞ்சுக்கணும். இல்லைனா அப்புறம் கஷ்டமாயிடும். இனி அப்பாவைத் தூக்கச் சொல்லக்கூடாது. சரியா?"

"இனிமேல் எனக்கு கம்பளிப்புழு கதையே வேண்டாம் அம்மா"

"?????"

*********************************************************************
மற்றொரு நாள் மீண்டும் இதே கதையைக் கூறினேன்.

"இதில் இருந்து என்ன தெரியுது?"
"யாருக்கும் உதவி பண்ணக் கூடாது"
"இல்லடா. உதவி செய்யலாம், ஆனால் தேவைப்படறவங்களுக்கு தான் செய்யணும். உன்னால் நடக்க முடியும். அதனால் அப்பாவைத் தூக்கச் சொல்லக்கூடாது. சரியா?"
"எனக்கு ஒரு நாள் கால்ல அடிபட்டப்ப நானே நடந்து வந்தேன்"
"வெரி குட். அப்படி தான் இருக்கணும். இப்ப கதைல இருந்து என்ன தெரியுது?"
"பட்டாம்பூச்சிக்கு மட்டும் உதவி செய்யக்கூடாது"
"???????????"

எங்கோ படித்தேன், நாம் சொல்வதும் குழந்தைகள் கேட்பதும் ஒன்றாக இருக்காது என்று. பெரியவர்களுக்கு இடையே இம்மாதிரி நடப்பது உண்டு. நாம் சொல்வதை ஒழுங்காகப் புரிந்து கொண்டார்களா என்று சரிபார்த்துக் கொள்வது நல்லது தான்.
********************************************

12 comments:

பாபு said...

நான் என் பையனுக்கு ஒரு கதை சொல்லிவிட்டு, அடுத்த கதைக்கு போய் விடுவேன்
இதிலிருந்து என்ன தெரியுது ?அப்படின்ற கேள்விய இன்ன வரையிலும் கேட்கல
இனிமே கேட்கிறேன்.
பதிவு நல்ல சுவாரஸ்யமா இருந்தது

pudugaithendral said...

ஒழுங்காகப் புரிந்து கொண்டார்களா என்று சரிபார்த்துக் கொள்வது நல்லது தான். //

ஆமாம். சரியா சொல்லியிருக்கீங்க.
(நீங்க சொல்ற கதைகளும் அழகா இருக்கு)

அ.மு.செய்யது said...

குழந்தைகளுக்கு கதை சொல்வதும் ஒரு சுவாரஸ்யம் தான்.சரியாகச் சொன்னீர்கள்.
ஆனால் இன்றைய இயந்திர உலகில் பெற்றோர்களுக்கு குழந்தைகளை மடியில் கிடத்தி கதை சொல்ல எங்கே நேரம் இருக்கிறது...கதை சொன்ன பாட்டிகள் முதியோர் இல்லத்தில்...

போகோ..சுட்டி டிவி..அனிமேக்ஸ்கள் தான் இப்பொழுது குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றன..

அ.மு.செய்யது said...

// நாம் சொல்வதை ஒழுங்காகப் புரிந்து கொண்டார்களா என்று சரிபார்த்துக் கொள்வது நல்லது தான்.//

நல்ல அறிவுரை...

அமிர்தவர்ஷினி அம்மா said...

கதை மொத்தத்திற்கும் சேர்த்து ஒர் lol

கதையின் கடைசியில் இருந்த மெசேஜ் ஓக்கே, எனக்கு சொன்னா மாதிரி இருந்த்து.

aadhirai said...

solgiravarin vasathikku velippaduthuthalum, ketkiravar vasithikku purinthu kolthalum mozhiyin kooru. athaiye thirumba solla sollumpothu, avarukku thevaiyana innoru konathil sollavum padalaam. ithu kuzhanthaikal visayathil nadappathu manathukku inimai tharugirathu. vathanthigal roobaththil sellumpothu nammai thuyaril aazhthugirathu. ithu, manithargalin samayal.

eppadi tamilla comment ezhuthurathunnu yaaraachum sollunga pls.

நட்புடன் ஜமால் said...

\\"பட்டாம்பூச்சிக்கு மட்டும் உதவி செய்யக்கூடாது"\\

lol

தாரணி பிரியா said...

முன்பெல்லாம் எங்க வீட்டு செல்லம்ஸ்க்கு கதை சொல்வதற்கு முன்னால் நான் எக்ஸாம் பிரிப்பேரசன் மாதிரி ஏகத்துக்கும் தயார் செய்துதான் கதை சொல்வேன். ஆனாலும் சற்றும் நான் யோசிக்காத கோணத்தில் கேள்வி கேட்டு அசரடிப்பார்கள்.

இப்பது எல்லாம் யோசிப்பது இல்லை. அவர்கள் எப்படி யோசிக்கிறார்கள் என்று பார்த்து அதுக்கு தகுந்த மாதிரி பதில் சொல்ல ஆரம்பிச்சாச்சு

ரிதன்யா said...

”ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா” இப்படின்னு ஆரம்பிச்சாலே என் பொண்ணு “போப்பா உனக்கு சொந்த கதய தவிற வேற தெரியாதா” அப்படின்னு குட்டு விழும்.
அப்புறம் அவங்களே கத சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் என்ன கொர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர்ர் தான்.
வேற யாரு நாந்தேன்

தமிழ். சரவணன் said...

அருமையாண முயற்சி

Dhiyana said...

//பட்டாம்பூச்சிக்கு மட்டும் உதவி செய்யக்கூடாது//

:-)

ராமலக்ஷ்மி said...

சில நேரங்களில் குழந்தைகளின் புரிதல் சிரிப்பைத் தந்தாலும் சிந்திக்க வைக்கிறது. உங்கள் சிந்தனை:

//பெரியவர்களுக்கு இடையே இம்மாதிரி நடப்பது உண்டு. நாம் சொல்வதை ஒழுங்காகப் புரிந்து கொண்டார்களா என்று சரிபார்த்துக் கொள்வது நல்லது தான்.//

சிறப்பு.