என் மேகம் ???

Tuesday, April 14, 2009

சென்னை டூ குருவாயூர் (3)

சென்னை டூ குருவாயூர் (1)

சென்னை டூ குருவாயூர் (2)

மாலை கொச்சினிலிருந்து வேன் பிடித்து குருவாயூருக்கு வந்து சேர்ந்தோம். இரவு 9:30க்கு மேல கடையெல்லாம் திறந்து இருக்காதுங்கறதால உடனடியா சாப்பாட்டை முடிச்சிட்டு தரிசனம் பத்தி யோசிச்சோம். பத்து வருஷம் முன்னாடி நான் நந்தினிக்கு சோறுட்டப் போன பொழுது அவ்வளவு கூட்டம் இருந்ததில்லை. நிதானமா சோறூட்டி தரிசனம் முடிச்சு மழம்புலா எல்லாம் போனோம். அப்ப நான் இருந்தது கோவையில். நாலு வருஷம் முன்னாடி யாழினிக்கு சோறுட்டப் போன பொழுது , நல்ல கூட்டம், அதனால் சோறூட்டிட்டு வெளியில் இருந்தே குருவாயூரப்பனை வணங்கி வந்து விட்டோம்.

இப்பவும் அப்படி தான் கூட்டம் இருக்கும்னு சொன்னாங்க. 7 - 8:30 மற்றும் 11 - 12:30 மணிக்கு எல்லாம் பூஜை நடக்கும் பொழுது வரிசை நகராது. எனவே அதைப் பொறுத்து தரிசனம் ப்ளான் பண்ணனும் என்றார்கள். மேலும் 1:00 முதல் 4:00 மணி வரை நடை சாற்றி விடுவார்களாம். காலையில் 3:00 மணிக்கு நிர்மால்ய தரிசனம் (இறைவன் முந்திய தின அலங்காரத்தோடு இருப்பார். தேவர்கள் இரவில் வந்து பூஜித்து சென்றிருப்பர் என்பதால், அவர்கள் பூஜித்தவுடன் அவரை தரிசிப்பது மிக நன்று என்பது நம்பிக்கை). அதற்கு செல்ல என் அம்மா, என் தம்பி மனைவியின் பெற்றோர் மட்டும் தயாராகினர். விழித்தால் நானும் வருகிறேன் என்று கூறினேன். மற்றவர்கள் மறுநாள் சோறூட்டுவதைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம் என்று எண்ணிணோம். இரண்டு கைப்பிள்ளைகளுடன் 8:30க்குள் கோயில் செல்ல தயாராவதென முடிவு செய்தோம்.

காலை 2 மணிக்கு எல்லாம் எழுந்து கோயில் வாசலுக்கு 2:30 மணிக்குச் சென்ற பின் தான் கவனித்தேன் நான் கண்ணாடி அணியவில்லை, சுடிதார் அணிந்திருந்தேன். சரி குருவாயூரப்பன் நிஜக் கண்களில் தரிசிக்க சொல்கிறார் என்று சென்றாலும் , "பாண்ட், சட்டை, சுடிதார் அணிந்தவர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று நோட்டீஸ். அப்படியே மிரண்டு விசாரித்தால் சுடிதாருக்கு விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது என்றார்கள். என்றாலும் கொஞ்சம் பதற்றத்துடன் நான் வரிசையில் சுடிதார்களைத் தேடி ஒன்றிரண்டு கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஆண்கள் வேட்டி அணிந்து சட்டை அணியாது செல்ல வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார் அல்லது பாவாடை சட்டை அணிந்திருக்க வேண்டும்.

இந்த அதிகாலை தரிசனத்துக்கு மட்டும் 2 வரிசை, பெண்கள் மட்டும் என்று ஒரு வரிசை , கலந்து நின்று ஒரு வரிசை. இந்த பெண்கள் வரிசை வேகமாக நகரும் என்று சொல்லப்பட்டதால் நான், என் தாயார், அத்தை அந்த வரிசையிலும் மாமா இன்னொரு வரிசையிலும் நின்றோம். எங்கள் வரிசை கட கட என வரிசை நகர்ந்து 3:30 தரிசனம் கிடைத்த பொழுது அலங்காரம் கலைத்து அபிஷேகம் ஆரம்பித்து இருந்தது. ஒரு நொடி தான் அந்த இருளில் எனது கண்ணாடி இல்லாத கண்களுக்கு சுமாராக தென்பட்ட கடவுளை தரிசித்து வெளியேறினேன்.

குருவும் வாயுவும் சேர்ந்து விஷ்ணுவுக்கு எடுத்த கோயிலாதலால், குருவாயூரப்பன் என்ற பெயர். குருவாயூர் சென்றவர்கள் மம்மியூர் சிவனையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பிரகாரத்தின் ஓரிடத்தில் அங்கிருந்தே சிவனை வழிபடலாம் என்று இருந்தது. அங்கிருந்து சிவனை வணங்கினோம்.

சந்நிதிக்கு வெளியே எல்லாவற்றுக்கும் பெரிய வரிசை... பிரசசாத டிக்கட் வாங்க, பிரசாதம் வாங்க என்று... பிரசாத டிக்கட்டும், அன்ன பிரசன்ன டிக்கட்டும் வாங்கி வெளியே வந்தால், மாமா இன்னும் வரிசையில் நிற்கிறார். நாங்கள் ரூமுக்கு திரும்பினோம். மாமா திரும்பி வரும் பொழுது மணி 5:15. 5:30க்கு என் கணவர் தரிசனம் காண போய் 8:30க்கு திரும்பினார்.

சாமி தரிசனத்திற்கு தான் பெரிய வரிசை. கோயிலுக்குள் நுழைந்து பிரசாதம் வாங்க, துலாபரம் கொடுக்க, சோறூட்ட வரிசை சிறிதாகத்தான் இருந்தது. அந்த வரிசையில் சென்று இரு குழந்தைகளுக்கு (தம்பி மகன் ஒன்று, தம்பி மனைவியின் அண்ணன் மகன் ஒன்று) சோறூட்டினோம். உள்ளே கேமரா கொண்டு செல்ல முடியாது. ஆனால் அங்கேயே டிஜிடல் கேமராவில் எடுத்து முகவரி கொடுத்தால் அனுப்பி வைக்கிறார்கள். குழந்தைகளுக்கு கோயிலுக்கு வரும் வழியில் சிறிய பட்டு துண்டு வாங்கியிருந்தோம். அதை உடுத்தி, தந்தை மடியில் வைத்து இலையில் பரிமாறப்பட்ட இனிப்பு, அப்பளம், பழம், சோறு என எல்லாவற்றிலும் ஒரு துளி வைக்க, சுவைத்து உண்டனர் கிள்ளைகள். பின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அம்மாக்கள் மட்டும் அன்னப்ரசன்னத்திற்கான டிக்கெட்டில் தரிசனம் முடித்து வந்தனர். அவர்களுக்கு 15 நிமிடத்தில் தரிசனம் முடிந்தது. மற்றவரெல்லாம் சந்நிதி முன் வணங்கி தலைகளுக்கு நடுவே தெரிந்த இறைவனை கொஞ்சம் தரிசித்துவிட்டு வந்தோம். ஏகாதிசியிலும் பெளர்ணமியிலும் அன்னபிரசன்னம் இருக்காதாம்.

கடையில் புகுந்து கேரளா ஸ்டைலில் சந்தன கலரில் குட்டீஸ்க்கு உடை வாங்கினோம். அடுத்து செண்றது "புன்னத்தூர் கோட்டா" எனப்படும் யானைகளின் சரணாலயம்(?). கோயில் அருகே இருந்து இங்கு செல்ல ஆட்டோவில் 35 ரூ. ஆங்காங்கே யானைகளைக் கட்டி வைத்திருந்தார்கள். பல யானைகளுக்கு வால் நுனி மொன்னையாகவோ முடியின்றியோ இருந்தது. யானை முடி வாங்குவது சட்டப்படி குற்றம் என்று அறிவிப்பு இருந்தது. யானைகள் வெயிலுக்கு குளிர்ச்சியாக களிமண்ணை வாரிப் போட்டுக்கொண்டு தண்ணியையும் ஊற்றிக் கொண்டிருந்தன. அங்கிருந்த ஒருவர் கிட்டதட்ட 64 யானைகள் இருப்பதாகக் கூறினார். ஒரு யானை கூன் போட்டு மிகத் தள்ளாட்டமாகத் தெரிந்தது. அதற்கு 70 வயது என்றார். 11 மாதக் குட்டி தான் சிறிய யானை என்றார். அப்படியே சைக்கிள் கேப்பில் யானை முடி வேண்டுமா என்றார். வாலின்றி களையிழந்த யானையைப் பார்த்தபடி நகர்ந்தோம். சில யானைகள் ஆடிக் கொண்டே இருந்தன. சில யானைகள் காதருகே கம்பு வத்திருந்தார்கள். அது அசையாமல் நின்றது. கம்பு இருந்தால் ஆள் இருப்பதாக எண்ணிக் கொள்ளுமாம். மேலும் ஒரு யானைக்கு இரு பாகன்கள் இருப்பராம். யானை தன் பாகனுக்கு மட்டுமே அடிபணியுமாம். அந்த யானைகள் (அவ்வள்வு பெரிய உருவம்) கட்டி இருப்பதைக் காணச் சற்று வருத்தமாகவே இருந்தது. ஆனால் குழந்தைகள் யானைகளின் சேட்டைகளை இரசித்தார்கள்.

வாலில்லாமல் ஒரு யானை

ஆடிக் கொண்டே ஒரு யானை


கம்பில் அடங்கிய ஒரு யானை


சோம்பல் முறிக்கும் ஒரு யானை

களிமண் குளியலில் ஒரு யானை



சில யானைகளின் புகைப்படங்கள்

பிறகு வேன் பிடித்து திருச்சூர் சென்று சென்னை எக்ஸ்பிரஸில் சென்னை திரும்பி பயணத்தை முடித்துக் கொண்டோம்.

19 comments:

ராமலக்ஷ்மி said...

படங்களுக்கும் பகிர்ந்து கொண்ட பயண அனுபவங்களுக்கும் நன்றி அமுதா.

சோம்பல் முறிக்கும் ஆனை எனக்கு ரொம்பப் பிடித்தது:)! அற்புதமான போஸ்.

"துளசி மேடம், எங்கிருந்தாலும் உடனே என் வானத்துக்கு வரவும்:)"

அமுதா said...

நன்றி ராமலஷ்மி மேடம்

அமுதா said...

/*சோம்பல் முறிக்கும் ஆனை எனக்கு ரொம்பப் பிடித்தது:)! அற்புதமான போஸ்.*/
ம்.. சுட்டியான போஸ் அது...

Rithu`s Dad said...

இதைப்படித்ததும் எனது பழயை குருவாயுர் பயணங்கள் நினைவுக்கு வருகின்றன..
அப்பொழுது எனது வேலை குருவாயுரில் ஒரு ஹோட்டல் ப்ரொஜெக்ட் ல்..(ஸ்ரீ நிதி டவர்ஸ் என்று நினைக்கிறேன்!!) அது அமைந்த்திருப்பதும் கோவில் இருக்கும் அதே தெருவில் தான்.. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மீட்டிங் இருக்கும்.. அந்த நாட்களில் காலை 6 மணிக்கே எர்னாகுளத்தில் இருந்து பேருந்தில் பயணித்து 7 30 க்கு குருவாயுர் வந்து சேர்வேன். நேரே கோவிலுக்கு சென்று அங்கு வெளியே கையோடு கொண்டுவந்திருக்கும் வேஸ்டி கட்டிக்கொண்டு தரிசனம் கான வரிசையில் நிற்பேன்.. சில நாட்கள் மிக சீக்கிரமாக தரிசனம் கிடைக்கும்.. சில நாட்கள் நேரமாகும்.. (முக்கியமா எதாது விசேஷ நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம்!!) .. அதன் பின் வெளியே வந்து சாப்பிட்டு விட்டு.. 10 மணி மீட்டிங் வந்து சேர்ந்துவிடுவேன்.. எர்னாகுளத்தில் இருந்து நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளிலேயே குருவாயுர் சென்று வந்த அனுபவமும் உண்டு.. அது எல்லம் ஒரு காலம்... நண்றி.. எல்லவற்றையும் மீண்டும் நிணைத்து பார்க்க வைத்ததுக்கு..

Unknown said...

சென்னை டூ குருவாயூர் மூன்று பகுதிகளும் படித்தேன். மிக இயல்பான நடையில் நேர்த்தியான படங்களுடன் அழகாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!
நினைவலைகளை கிளறும் பதிவுகளாக இருந்தமைக்கு நன்றிகளும்!

அமுதா said...

நன்றி ரிது அப்பா, பொறுமையாகப் படித்ததற்கு. உங்கள் நினைவுகளை எழுதுங்கள்


வருகைகும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி மணியன்

Tech Shankar said...

எனது தந்தையார் குருவாயூர் சென்ற பிறகுதான் நான் பிறந்தேனாம். அதனால் எனக்கு சங்கரநாராயணன் எனப் பெயர் வைத்துவிட்டார்.

யானைகளைப் பார்த்ததும் இந்தப்பதிவு நினைவுக்கு வந்துவிட்டது.

யானை கிட்டே மிதி வாங்குவதற்கும் ஒரு போட்டி வைச்சுட்டாங்க.


ஒரு மாதிரி பயங்கரப் பதிவு.

அமுதா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்நெஞ்சம்

ஆயில்யன் said...

அழகாய் இருக்கிறது அத்தனை யானைகளும் படங்களும்....!


கேரளாவில் யானைகளும் அழகுதான் அதிகம்தான்! போட்டோஸ் போடறதுல தப்பே இல்ல பட் கேரளாவுக்கு போயிட்டு வந்தோம்ங்கற மாதிரி 1ம் போட்டோ வரவில்லை என்பதையும் என் மென்மையான கண்டனத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்!

அமுதா said...

/*ஆயில்யன் said...
அழகாய் இருக்கிறது அத்தனை யானைகளும் படங்களும்....!

கேரளாவில் யானைகளும் அழகுதான் அதிகம்தான்! போட்டோஸ் போடறதுல தப்பே இல்ல பட் கேரளாவுக்கு போயிட்டு வந்தோம்ங்கற மாதிரி 1ம் போட்டோ வரவில்லை என்பதையும் என் மென்மையான கண்டனத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்! */
:-)) இப்ப புரியுதா நான் ஏன் கேரளானு போடாமல் பயணம்னு லேபிள் போட்டேன்னு...

anbudan vaalu said...

நல்ல பயண அனுபவங்கள்....யானை படங்கள் சூப்பர்....

ஆனா சோறு ஊட்டறதுன்னா என்னா???

அமுதா said...

நன்றி அன்புடன் வாலு. குழந்தைக்கு முதன் முதலில் அரிசிச் சோறை வீட்டில் கொடுப்பதற்கு பதிலாக குருவாயூர் கோயிலில் கொடுப்பார்கள். அப்படி செய்தால் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை

துளசி கோபால் said...

முதலில் ராமலக்ஷ்மிக்கு நன்றி சொல்லிக்கணும். டோண்ட் மிஸ்ன்னு அனுப்புன சுட்டி திறக்கவே இல்லை.
இன்னிக்குத்தான் கொஞ்சம் சாவகாசமா அதை ஆராய்ஞ்சு ஒருவழியா தலைப்பைப் பிடிச்சு ஏப்ரல் மூணுக்கு வந்தேன். வந்தால்.......

ஆஹா..... நம்ம ஆளுங்க.

அங்கே வேணுகோபால் என்ற யானையும் இருக்கும். இந்த யானை முடிதான் இழுத்து எடுப்பது பயங்கரம். பாவம். எவ்வளோ வலிக்கும். மனுசனைப்போல ஒரு மிருகம் உண்டா? ப்ச்....

மகளுக்குத் துலாபாரம் கொடுத்த காலத்துலே எல்லாம் கேமெராவுக்கு தடை ஏதும் இல்லை.

இப்பத்தான் தீவிரவாதம் கூடிப்போய் எதுக்கெடுத்தாலும் தடைன்னு.......

அன்னப்ராஸனம் செஞ்சுட்டு அந்த இலையை அப்படியே எடுத்து ஏழைகளுக்குத் தானம் செய்யணும். இப்போ என்ன விதிமுறைன்னு தெரியலை.

நிர்மால்யம் கண்டதொக்கப் பண்டு. கொறைச்ச கொல்லம் மும்பு போயப்போள் சீவேலி மாத்ரம் கண்டு.

நில்க்கான் ஸ்தலம் வேண்டே? பயங்கரத் தரக்கு கேட்டோ.

அமுதா said...

ரொம்ப நன்றி துளசி மேடம்

/*அன்னப்ராஸனம் செஞ்சுட்டு அந்த இலையை அப்படியே எடுத்து ஏழைகளுக்குத் தானம் செய்யணும். இப்போ என்ன விதிமுறைன்னு தெரியலை.*/
ம்ஹூம்.. அப்படி அதுவும் சொல்லலை. பக்கத்திலேயே குப்பை கூடை வச்சிருக்காங்க. அதில் போடணும். கொஞ்ச நேரம் கையில் கூட வைச்சுக்க விடறதில்லை எச்சில் என்று சொல்லி...

/*நில்க்கான் ஸ்தலம் வேண்டே? பயங்கரத் தரக்கு கேட்டோ.*/
மன்னிச்சுக்கோங்க... எனக்கு ஒண்ணும் புரியல :-))

துளசி கோபால் said...

அச்சச்ச்சோ..... பேச்சு ஸ்வாரஸ்யத்தில் அப்படியே மலையாளம் வந்துருச்சு......

கோவிலில் நிற்க இடம் இல்லை. பயங்கரக்கூட்டம்

துளசி கோபால் said...

நிர்மால்யம் பார்த்தது முந்தி ஒரு சமயம் போனப்போது.

சில வருசங்களுக்கு முன்பு போனபோது சீவேலி ( யானை மீது சாமி வச்சுக் கோயிலுக்குள்ளே பிரகாரத்தில் வலம்வர்றது) மட்டும் பார்த்தேன்.

இப்போள் எல்லாம் மனசிலாயோ? எண்டே அமுதே:-)))

அமுதா said...

/*இப்போள் எல்லாம் மனசிலாயோ? எண்டே அமுதே:-)))*/
மனசிலாயி துளசி மேடம்


/*சில வருசங்களுக்கு முன்பு போனபோது சீவேலி ( யானை மீது சாமி வச்சுக் கோயிலுக்குள்ளே பிரகாரத்தில் வலம்வர்றது) மட்டும் பார்த்தேன்.*/
ம்.. நானும் நந்தினிக்கு சோறூட்டப் போன பொழுது அதுவும் பார்த்தேன். ஆனால் இப்ப கோயில்ல ரொம்ம்ம்ம்ம்ம்ப கூட்டம்.

Jay said...

manathuku ithamaga amainthathu ungal payanam...........

Anonymous said...

நாங்களும் குருவாயூர் போய் குருவாயூரப்பனை தரிசித்துவிட்டு வந்தோம். மம்மியூர் கோயில் நடக்கும் தூரத்தில் தான் இருக்கு. நீங்கள் அங்கும் சென்று தரிசித்திருக்கலாம். புன்னத்தூர் கோட்டைக்கு போக நேரமில்லை. ஒரு வழியாக கேரளத்து சிப்ஸ், அல்வா போன்ற ஐட்டங்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினோம்.