கா கா என்றே கரைந்திடும் காகம் !!
பக் பக் என்றே அழைத்திடும் மாடப்புறா!!
கண்ணே மணியே காண்பாய் இவற்றை
கவளச் சோற்றினை வாயில் வாங்குவாய்!!!
பரபரவென்ற நகர வாழ்வில்..
கீச் கீச் என்றே அரிசி கொத்தும்
சிட்டுக்குருவி காண்பதில்லை
கீ கீ என்றே பழங்கள் தின்ன
பறக்கும் கிளிக்கூட்டம் தெரிவதில்லை
மருண்ட பார்வையுடன் கழுத்தை சாய்த்து
அழகாய் மைனா பார்ப்பதில்லை
குப்பை கிளறி குஞ்சுகளுடன்
கோழியும் சேவலும் உலவுவதில்லை
கோடை வெயிலுக்கு இதமாகக்
கூவும் கருங்குயிலும் கேட்பதில்லை
உயரே வானில் வட்டமிடும்
பருந்தும் இப்பொழுது பறப்பதில்லை
தோகையுள்ள காகம் போல் இருக்கும்
செம்போத்தைக் கண்டால் கூறும்
"சிவ சிவ" இப்பொழுது கூறுவதில்லை
கழுத்தில் வெண்மை தெரிய
வட்டமிடும் கருடனைக் கண்டு
"கிருஷ்ண கிருஷ்ண" என்றும் சொல்வதில்லை
பொதி சுமந்தும் உதைத்தும் கத்தும்
கழுதைகள் கண்ணில் படுவதில்லை
ஐந்தாறு குட்டிகளுடன் சாக்கடையில் புரளும்
கரும்பன்றிக் கூட்டம் தென்படுவதில்லை
நீர் விடுத்து பாலருந்தும் அன்னம்
கதைகளில் மட்டும் நான் கேட்டது போல்
நான் உணவுண்ண அம்மா காட்டிய
உயிரினங்களைப் பற்றி உனக்கு உரைக்கிறேன்!!!
உன் காலம் வரும் பொழுதேனும்
பூமியின் பசுமை காத்து...
மீண்டு வரட்டும் உயிரினங்கள்!!
அதுவரை காகமும் புறாவும் கண்டு
உணவு கொள்வாய் கண்மணியே!!!
12 comments:
//குப்பை கிளறி குஞ்சுகளுடன்
கோழியும் சேவலும் உலவுவதில்லை
//
//கழுத்தில் வெண்மை தெரிய
வட்டமிடும் கருடனைக் கண்டு
"கிருஷ்ண கிருஷ்ண" என்றும் சொல்வதில்லை//
அதிகம் பார்த்திருந்த காட்சிகளாக இருந்தவை இன்று எங்கு எங்கு என்று தேடத்தான் வேண்டியிருக்கிறது !
இயற்கையினை மனிதன் ஆக்ரமித்த விசயத்தை எளிதாய் உணர்த்தும் சாட்சிகள் ! :(
உண்மை உண்மை. சிட்டுக் குருவிகளையும் கிளிகளையும் கொக்குகளையும் மைனாக்களையும் கோழி சேவல்களையும் பார்த்துப் பார்த்து வளர்ந்தோமே. இப்போது காணக் கிடைப்பதெல்லாம் காகங்களும் புறாக்களும் மட்டுமே!
//உன் காலம் வரும் பொழுதேனும்
பூமியின் பசுமை காத்து...
மீண்டு வரட்டும் உயிரினங்கள்!!//
வரணும். இந்தக் கனவு மெய்ப்படணும்.
நல்லாருக்கு கவிதை! கருத்தும் அருமை! :-)
மிகவும் நன்றாகவும் உண்மையை அறைவது போலவும் உள்ளது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன், ராமலஷ்மி மேடம், முல்லை & மோகன்
உண்மை அமுதா.
//உன் காலம் வரும் பொழுதேனும்
பூமியின் பசுமை காத்து...
மீண்டு வரட்டும் உயிரினங்கள்!!//
வரட்டும்.
இயற்கையுணர்வு பதிவு.
உங்கள் விடயங்கள் உண்மை.
நன்று.
ஆஹா அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்.
ஒரு நல்ல சமூகப் பொறுப்பான செய்தி.
//அதுவரை காகமும் புறாவும் கண்டு
உணவு கொள்வாய் கண்மணியே!!! //
புறாவைக்கூட நான் சென்னையில் பார்த்ததில்லை. காகம் மட்டும்தான் கண்ணில் படுகிறது. :-)
//மருண்ட பார்வையுடன் கழுத்தை சாய்த்து
அழகாய் மைனா பார்ப்பதில்லை//
மைனாவும் கழுத்தைச் சாய்த்துதான் பார்க்குமோ?? புதிய தகவல். காகம் கழுத்தைச் சாய்த்துதான் பார்க்கும் என்பதுதான் தெரியும்.
வாழ்த்துக்கள் அமுதா!
கொஞ்சம் சம்பந்தப் பட்ட என் பதிவு http://tamiluzhavan.blogspot.com/2009/02/blog-post_25.html
அமுதா,அருமை...அருமை.உலகத்தின் புதிய கண்டுபிடிப்புக்களால் புதிதாய் கண்டுபிடிப்புக்கள் வர வர இருக்கும் இயற்கை அழிந்துகொண்டே போகிறது.
உங்கள் மனக்கவலை எனக்குள்ளும் உண்டு.இயற்கைகள் எங்களுக்கு அனுகூலமாய் இருந்தனவே தவிர புதிய கண்டுபிடிப்புக்கள் அழிவையும் ஆபத்தையும்தான் தேடித் தருகிறது.
அமுதா. ஒரு அம்மாவின் ஆதங்கம் உலகின் ஆதங்கமாகத் தெரிகிறது.
அருமையாக வடித்திருக்கிறீர்கள் கவிதையை.
எங்களுக்கும் ஏக்கம் உண்டு. பேரன் பேத்திகளுக்கு அருமையாக ,இந்தப் பறவை இனங்களைக் காண்பித்துக் கொடுக்க முடியவில்லையே என்று.
ஆனால் உன்ங்கள் இதயம் அழகும் உணர்ச்சியும் கலந்து வரிகளை வடீஹ்து இருக்கிறாது.
உங்கள் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
மனிதர்கள் உருவாக்கிய நகரங்கள் எனும் நரகங்களில் மற்ற உயிரினங்கள் வாழ விரும்புவதில்லை.
உண்மைய அருமையான கவிதையா கொடுத்திருக்கீங்க.
Post a Comment