என் மேகம் ???

Tuesday, November 11, 2008

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

வழக்கம்போல் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு வீட்டில் நடந்து கொண்டிருந்தது. சச்சரவில் சத்தம் காதைத் துளைக்க, பெரியவளை அடக்கிவிட்டு சின்னவளிடம் கேட்டேன்:

"அக்கா ரொம்ப வம்பு பண்றாள் இல்லை"
"ஆமாம்"
"பேசாமல் மதுரைக்கு அனுப்பவா?"
""ம். சரி"
"அங்கேயே இருந்து படிக்கட்டுமா?
"ம். அவள் நிக்கி அக்கா, டிலானி அக்காவோட விளையாடிட்டு இருக்கட்டும்"
"அப்ப அக்கா வேண்டாமா?"
இதுவரை டாண் டாணென்று பதில்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த கேள்விக்கு மட்டும் சற்று மெளனம், பின் "இல்லைமா எனக்கு அக்கா வேணும்".

"அக்காவை ஹாஸ்டல்ல சேர்க்கட்டுமா?"
"வேண்டாம்மா இங்கேயே இருக்கட்டும்".

இந்த அன்பு பூரிக்க வைக்கின்றது. பெரியவளும் அன்புக்கு குறைந்தவள் அல்ல. ஒரு நாள் சின்னவள் பெரிய கரண்டியை வைத்து பெரியவள் முதுகில் ஒரு அடி போட்டாள். எதற்கு? அவள் அக்கா என்று அழைத்து இவள் திரும்பவில்லை என்று. நாங்களே மிரண்டு விட்டோம். "நல்லா ஒரு அடி கொடு, அப்ப தான் அவளுக்கு வலினா என்னனு புரியும்" என்றதற்கு, பெரியவள் அந்த அழுகைக்கு நடுவிலும் இலேசாகத் தொட்டுவிட்டு
"அடிச்சுட்டேன்" என்றாள். பாசத்தின் வெளிப்பாட்டில் அவ்விடம் சிரிப்பை எதிரொலித்தது.

**********************

பாலருந்திக் கொண்டே டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்கள். நேரம் சென்றது பால் கோப்பையில் பால் குறைந்தாற் போல் இல்லை. இது பரிசு தரும் நேரம் என்று எண்ணிக்
கொண்டேன். "யார் முதல்ல பால் குடிக்கிறாங்களோ அவங்களுக்கு ரெண்டு சாக்லேட்" என்றேன். அறிவிப்பிற்கு எந்தவொரு மாற்றமும் இல்லை. "யார் முதல்ல பால் குடிக்கிறாங்களோ அவங்களுக்கு முத்தம்" என்றேன். மட மட என்று காலியானது கோப்பை, பரிசிற்கு போட்டி வேறு. இந்த பரிசை கொடுக்கவோ பெறவோ கசக்குமா?

"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு"


***************************
"அம்மா இன்னிக்கு நான் தான் உனக்கு சோறுட்டுவேன்", என்று எண்ணி நான்கு பருக்கை கையில் எடுத்து , அவர்களுக்கு செய்வது போல், கடுகு, கறிவேப்பிலை நீக்கி தரும்பொழுது புரிகிறது...

"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்"

***********************

9 comments:

தமிழ் அமுதன் said...

"யார் முதல்ல பால் குடிக்கிறாங்களோ அவங்களுக்கு ரெண்டு சாக்லேட்" என்றேன். அறிவிப்பிற்கு எந்தவொரு மாற்றமும் இல்லை. "யார் முதல்ல பால் குடிக்கிறாங்களோ அவங்களுக்கு முத்தம்"

சூப்பர்..... உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு

ராமலக்ஷ்மி said...

மூன்று சம்பவங்களும் முத்துக்கள். அதை விளக்கக் குறள்களைக் கையாண்டிருப்பதற்கும் பாராட்டுக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படிக்கும் போதே ஆனந்தமாய் கண்ணில் நீர் முட்டுது...
:)

சிம்பா said...

இப்படி கூட திருக்குறளுக்கு அர்த்தம் குடுக்கலாமா.. எத்தனை முறை பதிவ படிக்கிறது... அருமைங்க..

//"அம்மா இன்னிக்கு நான் தான் உனக்கு சோறுட்டுவேன்", என்று எண்ணி நான்கு பருக்கை கையில் எடுத்து , அவர்களுக்கு செய்வது போல், கடுகு, கறிவேப்பிலை நீக்கி தரும்பொழுது புரிகிறது...//

இங்க கூட ஒரு குட்டி மகாராணி இருகாங்க.. சோறு ஊட்டி விடறதுல கில்லாடி.. அவங்களுக்கு ஒரு வாய், நமக்கு ஒருவாய்.. இந்த இன்பத்தை அனுபவிச்சாதான் புரியும்...

pudugaithendral said...

அருமை,

இதையே இன்னும் கொஞ்சம் டயலாக் சேர்த்து கொடுத்திருந்தீங்கன்னா திருக்குறள் கதையில் சேர்த்திருக்கலாம்.

அமுதா said...

நன்றி ஜீவன்
பாராட்டுக்களுக்கு நன்றி ராமலஷ்மி மேடம்
நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி
நன்றி சிம்பா /* இந்த இன்பத்தை அனுபவிச்சாதான் புரியும்...*/ உண்மை தான்
நன்றி புதுகை தென்றல். திருக்குறள் கதைக்கு சற்ற நேரம் எடுத்து எழுத வேண்டும் என்று உள்ளேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

திருக்குறளை வெச்சு குழந்தைகளோட நம் அனுபவத்தை வெச்சே நல்ல பதிவா போட்டுட்டீங்க.

நல்ல அக்கா தங்கைகள். நல்ல குறும்புகள்.

அந்த சிறு கை அளாவிய கூழ் ரொம்ப டச் பண்ணிடுச்சு என்னை.

அமித்து கூட சில சமயங்களில் வெறும் கையை எடுத்து என் வாயிடம் கொண்டு வந்து தலையை ஆட்டிக்கொண்டே ஆ, ஆ என்பாள்.

அமுதா said...

நன்றி அமித்து அம்மா

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா..க்யூட் கெஸ்ட்சர்ஸ் அமுதா!!

//அமித்து கூட சில சமயங்களில் வெறும் கையை எடுத்து என் வாயிடம் கொண்டு வந்து தலையை ஆட்டிக்கொண்டே ஆ, ஆ என்பாள்.//

அமித்து இப்போவே ஆரம்பிச்சாச்சா??
செம பாஸ்ட்தான்!