என் மேகம் ???

Friday, May 29, 2009

கடிதங்களில் தவறியவை...

"சிறகு இல்லாமல் பறவை ஒன்று
தேசம் எங்கும் திரியும்
பிடிபட்டால் திறந்து விடும். அது என்ன? "

"ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?"


கிட்டதட்ட பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நான் ஒட்டி அத்தை மாமாவால் பிரிக்கப்பட்டு இருந்த கடிதம் , சமீபத்தில் மீண்டும் நான் பிரித்து படிக்க கிடைத்தது. கடிதத்தின் வாசனையும் எழுத்துக்களும் அப்படியே இருப்பதாகத் தோன்றியது. காலத்தைக் கடக்கச் செய்யும் கருவியாக அந்த கடிதம் தெரிந்தது.

சிறு வயதில், நாங்கள் கோவையில் இருப்போம். பெற்றோரின் உறவினரெல்லாம் சிவகாசியில். என் அண்ணன் (பெரியம்மாவின் மகன்) ஒருவர் சிவகாசியில் இருந்து வாரம் ஒரு கடிதம் போடுவார். நாங்கள் குவார்ட்டர்ஸில் இருந்தோம். அப்பாவின் அலுவலகத்திற்கு தான் கடிதம் வரும். தினம் அப்பா வரும்பொழுது கடிதத்திற்காக நானும் அம்மாவும் ஓடிப்போய் அவரை வரவேற்போம். ஊரில் நடக்கும் எல்லா விசயங்களும் அந்த கார்டில் இருக்கும். அந்த அண்ணனுக்கு மணமானவுடன் அடுத்த அண்ணன் கடிதம் எழுதும் வேலையை எடுத்துக் கொண்டார். அவருக்கு மணமானவுடன் அடுத்த அண்ணன். அதன் பிறகு தொலைபேசி வந்துவிட்டது.

அப்பொழுது இன்லாண்ட் லெட்டர் வசதியானவர்கள் எழுதுவதற்காகவோ மிக முக்கிய விசயம் எழுதுவதற்காகவோ இருக்கும். வெளிநாட்டு தபால்கள் தனியாகத் தெரிந்து பெறுநரை ஆச்சரியமாகப் பார்க்கச் செய்யும். தபால்களில் இருக்கும் தபால்தலைகளுக்காகக் குழந்தைகள் இடையே சண்டைகள் நடக்கும்; அதைக் கொடு நான் இதைத் தரேன் என்று பண்ட மாற்றங்கள் நடக்கும்.

தொலைபேசி வந்தாலும், சில நாட்கள் பொங்கல்/தீபாவளி/பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்பட்டன. பொங்கல்/தீபாவளி வரும்பொழுதே கடையில் சென்று கட்டு கட்டாக வாழ்த்து அட்டைகள் வாங்கி வந்து, யாருக்கெல்லாம் அனுப்ப வேண்டும் என்று பட்டியலிட்டு, எது யாருக்கு என்று நீண்ட ஆலோசனைகளுக்குப் பின் வாழ்த்து அட்டைகள் அஞ்சலில் சேர்க்கப்படும். அலைபேசிகள் வந்த பின் இந்த பரிமாற்றமும் குறுஞ்செய்தியாகி விட்டது.

மீண்டும் கடிதங்களைக் காணும்பொழுது அதன் தகவல் பரிமாற்றத்தின் வலிமை புரிகிறது. தொலைபேசியில் ஐந்து நிமிடம் பேசுவதை கடிதத்தில் எழுத எவ்வளவு நேரம் எடுப்போம்? யோசித்து யோசித்து எழுதுவதே ஒரு அழகு. நான் வீட்டை விட்டு விலகி இருந்த நேரங்களில் எல்லாம், தொலைபேசி பேச்சுக்கள் அந்த நிமிட சுகம் மட்டுமே தரும். கடிதத்தை எத்தனை முறை படித்தாலும் அம்மா அருகே இருப்பது போன்ற உணர்வு தரும். விடுதியில் கடிதம் இல்லாமல் வெற்றாக இருக்கும் கடிதப்பெட்டி கொடுக்கும் வெறுமை கொடியது. உறவுகளுக்கு அன்போடு எழுதும் கடிதங்கள் எழுதுவோருக்கும் படிப்போருக்கும் எத்தனை பக்கங்கள் இருந்தாலும் அலுப்பைத் தருவது இல்லை, புத்துணர்ச்சியைத் தரும் ஏதோ ஒன்று அந்த கடிதத்துடனே வந்திருக்கும்.

ஒரு முறை சித்தப்பாவிற்கு எழுதிய கடிதத்திற்கு பதில் வரவில்லை. ஏன் என்று விசாரித்தால் இனிஷியல் போடாது அவர் பெயரை முகவரியில் எழுதியதை மரியாதை குறைவாக அவர் கருதி இருந்ததே காரணம் என்று தெரிந்தது. இப்படி தான் எனக்கு இனிஷியலுக்கு பலர் கொடுக்கும் முக்கியத்துவம் தெரிந்தது.

என் கடிதங்கள் "அன்புள்ள" என்று தொடங்கி "நலம். நலமறிய ஆவல்" என்று தொடர்ந்து "இப்படிக்கு அமுதா" என்றே முடிந்துள்ளன. ஒவ்வொரு கடிதத்திலும் வீட்டில் உள்ள அனைவரும் நலம் விசாரிக்கப்பட்டு அவர்களை வீட்டிற்கு வரச் சொல்லும் அழைப்பும் சேர்க்கப்பட்டு இருக்கும். அது பாவனையாகத் தெரிந்ததில்லை. நேரில் சொல்ல முடியாத பல விசயங்கள் கடிதங்களில் அழகான வடிவம் பெறும். மனதை மிக அழகாகத் திறந்து காட்டும் திறவுகோலாக கடிதங்கள் இருந்தன.

இன்று என் குழந்தைகள் பள்ளியில், விடுப்புக்கு கூட விண்ணப்பம் நிரப்பித்தர வேண்டி உள்ளதே அன்றி கடிதம் இல்லை. என்றாலும் அவர்களுக்கு கடிதம் எழுதுதல் பற்றி பாடம் உண்டு. உனக்கு பிடித்த யாருக்கேனும் கடிதம் எழுது பாப்பா என்றேன். ஊரில் இருக்கும் அவள் தங்கையை நலம் விசாரித்து, எப்படி எல்லாம் அவளுடன் இங்கு நேரம் செலவழிக்க விருப்பபடுகிறாள் என்று எழுதினாள். அன்பை வெளிப்படுத்திய மிக அழகான கடிதம் அது. இன்று கடிதங்கள் எழுதாமல் பல அழகான விசயங்களைத் தவறவிடுகிறோம்.

28 comments:

ஆயில்யன் said...

கடிதங்கள் பற்றிய நினைவுகளில் எனக்கு ஒரு வருடத்திற்கு முதன் முறையாக அம்மா அனுப்பிய இன்லெண்ட் கடிதம்தான் உடன் ஞாபகத்துக்கு வருகிறது :(

கடித சண்டைகள் அதிகம் பார்த்திருக்கிறேன் ! பெயருக்கு பின் ஏன் அதை சேர்க்கவில்லை இதை சேர்க்கவில்லை என்று பெரிய ரணகள போராட்டங்களெல்லாம் கண்ட அனுபவமும் உண்டு :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

காலத்தின் மாற்றத்தால் ஏற்பட்ட தகவல் பரிமாற்ற முன்னேற்றங்களில் உறவுகளுக்கு ஏற்பட்ட இழப்பு இந்த கடிதம் எழுதும்முறை தான்.

இன்னமும் என் அத்தை என் அப்பாவுக்கு எழுதிய கடிதங்களின் வரிகள் அப்படியே நெஞ்சில் பசுமையாய்.

கூடிய சீக்கிரமே என்னிடமிருந்து ஒரு கொசுவத்தி பதிவு வரும் இது மாதிரியே :)-

வல்லிசிம்ஹன் said...

நேற்றுதான் நானும் நானானியும் கடிதங்கள் பற்றி பேசினோம் .

இன்று நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.

அம்மா, அப்பா, மாமியார், பாட்டி எல்லோர் எழுதின கடிதங்களையும் பொக்கிஷமாக வைத்து இருக்கிறேன்.
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

நட்புடன் ஜமால் said...

நாங்கள் பழைய கடிதங்களை பத்திரமாக வைத்து இருக்கின்றோம்

வாய்ப்பு கிடைக்கும் போது அப்படியே தட்டச்சுகிறேன் (எதனை முடியுமோ அதனை மட்டுமாவது)

அமுதா said...

/*ஆயில்யன் said...
பெயருக்கு பின் ஏன் அதை சேர்க்கவில்லை இதை சேர்க்கவில்லை என்று பெரிய ரணகள போராட்டங்களெல்லாம் கண்ட அனுபவமும் உண்டு :)

:-))ஆமாம் கொஞ்சம் கூட மதிக்காமல் கார்டு போட்டிருக்காங்க என்றெல்லாம் கூட...

அமுதா said...

/*அமிர்தவர்ஷினி அம்மா said...
கூடிய சீக்கிரமே என்னிடமிருந்து ஒரு கொசுவத்தி பதிவு வரும் இது மாதிரியே :)-*/
சூப்பர். காத்திட்டிருக்கிறேன்



/*வல்லிசிம்ஹன் said... அம்மா, அப்பா, மாமியார், பாட்டி எல்லோர் எழுதின கடிதங்களையும் பொக்கிஷமாக வைத்து இருக்கிறேன்.
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்*/
கடிதங்கள் பொக்கிஷம் தான். நன்றி மேடம்.

அமுதா said...

/* நட்புடன் ஜமால் said...
நாங்கள் பழைய கடிதங்களை பத்திரமாக வைத்து இருக்கின்றோம்

வாய்ப்பு கிடைக்கும் போது அப்படியே தட்டச்சுகிறேன் (எதனை முடியுமோ அதனை மட்டுமாவது)*/
கடிதங்கள் பத்திரப்படுத்தியது நன்று. பதிவு செய்யுங்கள். கடிதங்களின் வாசனையைப் பதிவில் பார்க்கிறோம்.

நர்சிம் said...

முன்பெல்லாம் வீட்டில் ஒரு மூலையில் ஒரு கம்பியை சற்று வளைத்து அதில் வரும் கடிதங்களை சொருகி வைப்பார்கள்.. 12 மணி ஆகிவிட்டால் “போஸ்ட் மேனக் காணோமே’ என்று வீட்டில் இருக்கும் யாராவது ஒருவர் அனிச்சையாக சொல்வார்கள்..

ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அமுதா said...

வருகைக்கு நன்றி நர்சிம்

Dhiyana said...

என்னிடம் கிட்டத்தட்ட எனக்கு வந்த அனைத்து கடிதங்களும் உள்ளன. நான் வேலைக்குச் சேர்ந்த பின் என் கல்லூரி தோழியர் எழுதிய கடிதங்களை போன வாரம் படித்துப் பார்த்தேன். பழைய கடிதங்களைப் படித்துப் பார்பதே ஒரு தனி சுகம்.

நல்ல பதிவு அமுதா.

goma said...

ஒரு கால கட்டத்தில் கடிதம் எழுதுவது என் மூச்சாக,இருந்து வந்தது.ஒரு நல்ல ஹாபி அதை எப்படி இழந்தேன் என்று தெரியவில்லை நின்று விட்டது.என் கடிதங்களை பொக்கிஷமாகப் பலர் பத்திரமாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லிக் கேட்கும் பொழுது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

Vinitha said...

அருமை.

Anonymous said...

கொசுவத்தி பதிவு வரும் இது மாதிரியே :)-
எனக்கு இந்த கொசுவத்திதான் புரிபடவே இல்லை என்னக்க அர்த்தம்?

அமுதா said...

/*தீஷு said...
என்னிடம் கிட்டத்தட்ட எனக்கு வந்த அனைத்து கடிதங்களும் உள்ளன. நான் வேலைக்குச் சேர்ந்த பின் என் கல்லூரி தோழியர் எழுதிய கடிதங்களை போன வாரம் படித்துப் பார்த்தேன். பழைய கடிதங்களைப் படித்துப் பார்பதே ஒரு தனி சுகம்.
*/
ம்.. நிறைய பேர் கடிதங்களப் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்கள். நல்லது. நன்றி தீஷு அம்மா

/* goma said...
...என் கடிதங்களை பொக்கிஷமாகப் பலர் பத்திரமாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லிக் கேட்கும் பொழுது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.
*/
ஓ.. எவ்வளவு அருமையான விஷயம். நன்றி கோமா மேடம்

அமுதா said...

/* Vinitha said...
அருமை.
*/
நன்றி வினிதா


/*Anonymous said...
கொசுவத்தி பதிவு வரும் இது மாதிரியே :)-
எனக்கு இந்த கொசுவத்திதான் புரிபடவே இல்லை என்னக்க அர்த்தம்?
*/
வருகைக்கு நன்றி அனானி. கொசுவத்தி எல்லாம் மலரும் நினைவுகள் தாங்க... நானும் முன்னாடி இப்படிதான் முழிச்சேன்... அப்புறம் புரிஞ்சுது...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அமுதா

உங்களுக்கு அனானி கமெண்ட் லாம் வருது

ப்ரபலமான ஆளாகிட்டீங்க போங்க.

:)-

தமிழ் அமுதன் said...

நான்கூட எனக்கு வந்த பழைய கடிதங்கள சேர்த்து வைச்சு இருக்கேன்! அது சம்பந்தமா நான் ஒரு ''குடத்துக்குள்ள தண்ணீர் சுத்தும்'' பதிவு ஒன்னு போடுறேன்!

ராமலக்ஷ்மி said...

அழகான நினைவுகள். ஒவ்வொரு வரியும் எனது மற்றும் எல்லோரது எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக. எனது தமிழ் வளர்ந்தது நான் எழுதிய கடிதங்கள் மூலம் என்றால் அது மிகையன்று. அவ்வளவு ரசித்து எழுதுவேன். இப்போதும் என்னிடம் என் அம்மா, அத்தைகள், தங்கைகள் ஆகியோர் 'தொலை அலை வலை' பேசிகள் வளரும் முன் எழுதிய பல கடிதங்கள் பொக்கிஷமாய்!

அதே போல வாழ்த்து அட்டைகள் பெறுவதை விட அனுப்புவது ஒரு ஆனந்தமான விஷயம். அதுவும் நம் கையால் தயாரித்து அனுப்புவது இன்னும் பரவசமாய் இருந்தது. ஹும்ம்ம்ம்ம்ம்... என எல்லோரையும் போல பெருமூச்சுடன் முடிக்கிறேன்:(!

"உழவன்" "Uzhavan" said...

பழைய நினைவுகள்
மனதிற்குள்
குறுஞ்செய்தியாய் வந்து நிற்கின்றன!

அன்புடன்
உழவன்

அமுதா said...

/* அமிர்தவர்ஷினி அம்மா said...
...
ப்ரபலமான ஆளாகிட்டீங்க போங்க...*/
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்.... சரி அத விடுங்க. ஏதோ நீங்களாவது ப்ரபலம்னு சொல்றீங்களேனு நினைச்சுக்கிறேன் :-)

அமுதா said...

/* ஜீவன் said...
அது சம்பந்தமா நான் ஒரு ''குடத்துக்குள்ள தண்ணீர் சுத்தும்'' பதிவு ஒன்னு போடுறேன்!...*/
போடுங்க.. போடறதை போடறீங்க பொன் குடமா போடுங்க :-)


/*ராமலக்ஷ்மி said...
அழகான நினைவுகள்.
...*/
நன்றி மேடம். கடிதம் வைத்திருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

அமுதா said...

/* " உழவன் " " Uzhavan " said...
பழைய நினைவுகள்
மனதிற்குள்
குறுஞ்செய்தியாய் வந்து நிற்கின்றன!

அன்புடன்
உழவன்
*/
நன்றி உழவன்.

அன்புடன் அருணா said...

அடிக்கடி என் பொக்கிஷப் பெட்டியைத் திறந்து பழைய கடிதக் குவியலுக்குள் முகம் புதைப்பது எனக்குப் பிடித்த ஒன்று!
அன்புடன் அருணா

மணிநரேன் said...

தொலைவினில் இருந்தாலும் உறவுகள் தங்கள் அன்பின் வெளிப்பாடாக எழுதி அனுப்பிய கடிதங்கள் எத்தனை எத்தனை... அதனை படிப்பதற்கே போட்டி நடக்கும்.

இப்போதெல்லாம் என்னதான் அடிக்கடி பேசிக்கொண்டாலும் அவை எழுத்தின் ஆழத்தை ஈடாக்க முடியுமா என்று தெரியவில்லை.

நினைவலைகளை எழுப்பிய பதிவு.

அ.மு.செய்யது said...

நம் கைபட எழுதும் கடிதங்கள் எப்பவுமே கனமானவைகள் தான்.

எஸ்.எம்.எஸ் உம் மின்னஞ்சலிலும் அந்த அளவுக்கு மனம் ஒப்ப மறுக்கிறது.


சேரனின் "பொக்கிஷம்" தவறாது பார்க்க வேண்டும்.

Venkatesh Kumaravel said...

ஆஹா! என்ன சுலபமா சொல்லிட்டீங்க.. சில வருஷங்கள் முன்னாடி கூட தபால் தலை சேகரிச்சுகிட்டு இருந்தென். இப்ப சுத்தமா விட்டாச்சு, பொழுதுபோக்குக்கு கூட யாரும் எழுதுறதில்ல... இயக்குனர் சேரன் பொக்கிஷம்-னு ஒரு படம் எடுக்குறாப்ல 70கள்ல நடக்குற மாதிரி.. படத்தோட போஸ்டர் எல்லாம் ரசிக்கும்படி இருந்துச்சு... அந்த காலகட்டத்துல கடிதமார்க்கமா காதலிச்சதை மையமா வச்சு எடுக்குறாங்களாம்!

அமுதா said...

நன்றி அன்புடன் அருணா
நன்றி மணிநரேன்
நன்றி செய்யது
நன்றி வெங்கிராஜா

அமுதா said...

சேரனின் பொக்கிஷம் பற்றி நானும் படித்தேன். பார்க்க ஆவலாக உள்ளேன்.