என் மேகம் ???

Thursday, April 9, 2009

பெண் என்றால்...

அலுவலகத் தோழிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவர்களைக் காணச் செல்ல பேசிக் கொண்டிருந்த பொழுது, ஒரு பெண் "ஹ்ம்.. ஆண்குழந்தை தானே!!" என்று அலுத்துக்கொண்டார். மற்றொருவர் "ஆ.. ஆண்குழந்தையா?" என்று அதிர்ச்சி அடைந்தார்.

எனக்கு இந்த ரியாஷன்ஸைப் பார்த்தால் ஊர்ப்பக்கம் இவை பெண்குழந்தைக்கு வந்திருக்கும் என்று தோன்றியது.

மாலை கணவருடன் பேசிக்கொண்டிருந்தேன். இம்முறை அவரது பிறந்த நாளுக்கு பெண்கள் இருவரும் பிறந்த நாள் வாழ்த்து எழுதி ஒரு வெண்பலகையைக் கொடுத்து இருந்தார்கள். அதைப் பார்த்த அவரது அலுவலக நண்பர், "உங்களுக்குப் பெண் குழந்தையா?" என்று கேட்டாராம். இவர், "ஆமாம் , எப்படி சொன்னீங்க?" என்றதற்கு "எனக்கு ஒரு பையன் இருக்கிறான் , பரிசெல்லாம் கொடுக்க மாட்டான் ", என்றாராம்.

சமீப காலங்களில் நிறைய பேர் பெண் குழந்தை வேண்டும் என்று விரும்புவதைக் காண முடிகிறது. பெண் என்றால் செலவு/சிரமம் என்ற எண்ணங்களை விட அன்பு/பாசம் என்ற எண்ணங்கள் ஊடுருவுவதைக் காண முடிகிறது.

எனக்கு பெண் சிசு கொலை பற்றியும் சமீபத்தில் அதைப் பற்றி நான் வாசித்து பதைத்த இராஜம் கிருஷ்ணன் மற்றும் வாஸந்தியின் நாவல்கள் (தலைப்பு மறந்துவிட்டது) நினைவுக்கு வந்தன.

மாற்றங்கள் எப்பொழுதும் உடனே வருவதில்லை. சின்ன சின்ன மாற்றங்கள் ஒரு நாள் நல்ல மாறுதலை ஏற்படுத்தி இருக்கும். இப்பொழுது நகர்ப்புறங்களில் பெண் குழந்தையைப் பற்றி உருவாகும் மாற்றம் விரைவில் கிராமப்புறங்களிலும் ஏற்படட்டும்.

21 comments:

நட்புடன் ஜமால் said...

\\சமீப காலங்களில் நிறைய பேர் பெண் குழந்தை வேண்டும் என்று விரும்புவதைக் காண முடிகிறது. \\

எங்கள் வீட்டில் அனைவருமே இதையே விரும்பினர்.

எனக்கும் கிடைத்தது அந்த வரம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதை படிக்கும்போது ஒரு ஆறுதல் வருகிறது, என்றாலும் மிகச் சமீபத்தில் 2ஆவது(ம்) பெண் குழந்தை பிறந்ததென்பதற்காக நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் பாதிப்பிலாழ்த்தியது.

ராமலக்ஷ்மி said...

//பெண் என்றால் செலவு/சிரமம் என்ற எண்ணங்களை விட அன்பு/பாசம் என்ற எண்ணங்கள் ஊடுருவுவதைக் காண முடிகிறது.//

இந்த வரிகளையே மையக் கருத்தாகக் கொண்டு ‘என்னுயிர்க் கண்ணம்மா’ என நேற்றுதான் ஒரு கவிதை எழுதினேன் அமுதா பெண் குழந்தைகளைக் கொண்டாடும் விதமாக. சீக்கிரமா வலையேற்றுவேன்.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

அமுதா said...

/* நட்புடன் ஜமால் said...
எங்கள் வீட்டில் அனைவருமே இதையே விரும்பினர்.
எனக்கும் கிடைத்தது அந்த வரம்.*/
கேட்க இனிக்கிறது ஜமால்


/* அமிர்தவர்ஷினி அம்மா said...
இதை படிக்கும்போது ஒரு ஆறுதல் வருகிறது, என்றாலும் மிகச் சமீபத்தில் 2ஆவது(ம்) பெண் குழந்தை பிறந்ததென்பதற்காக நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் பாதிப்பிலாழ்த்தியது. */
ஆம், அமித்து அம்மா. இன்னும் என்னை சிலர் "ரெண்டும் பெண்ணா" என்று சலித்துக் கொள்வார்கள். அவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நிச்சயம் காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது.

அமுதா said...

ராமலக்ஷ்மி said...
//பெண் என்றால் செலவு/சிரமம் என்ற எண்ணங்களை விட அன்பு/பாசம் என்ற எண்ணங்கள் ஊடுருவுவதைக் காண முடிகிறது.//

இந்த வரிகளையே மையக் கருத்தாகக் கொண்டு ‘என்னுயிர்க் கண்ணம்மா’ என நேற்றுதான் ஒரு கவிதை எழுதினேன் அமுதா பெண் குழந்தைகளைக் கொண்டாடும் விதமாக. சீக்கிரமா வலையேற்றுவேன்.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

/*நன்றி ராமலஷ்மி மேடம். சீக்கிரமா வலையேற்றுங்கள் கண்ணமாவை... காத்துக் கொண்டிருக்கிறேன்.../*

சந்தனமுல்லை said...

//பெண் என்றால் செலவு/சிரமம் என்ற எண்ணங்களை விட அன்பு/பாசம் என்ற எண்ணங்கள் ஊடுருவுவதைக் காண முடிகிறது.
//

:-) உண்மைதான் அமுதா!

கணினி தேசம் said...

ஆணென்ன பெண்ணென்ன
குழந்தையே வரம்தான்.

//இப்பொழுது நகர்ப்புறங்களில் பெண் குழந்தையைப் பற்றி உருவாகும் மாற்றம் விரைவில் கிராமப்புறங்களிலும் ஏற்படட்டும்.//

நல்ல மாற்றம்.

ச.பிரேம்குமார் said...

இது போல ஒரு சம்பவம் எங்கள் வீட்டில் 20 வருசத்திற்கு முன்பே நடந்துவிட்டது. தம்பி பிறந்த போது அப்பாவிடம் வந்த செவிலி உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்று சொல்ல, அப்பா ரொம்ப சுமாரான தொனியில் ‘ஓ, பையனா’ என்று சொல்லியிருக்கிறார்கள்....

அத கேட்ட செவிலி மிகவும் ஆச்சரியப்பட்டதாகவும் அம்மா இருந்த அறைக்கு வரும் போதெல்லாம் சொன்னதாகவும் சொல்வார்கள் :)

ச.பிரேம்குமார் said...

ஆண் என்றும் பெண் என்றும் பேதமில்லை. எல்லாமே நாம் வளர்க்கும் முறையில் தான் இருக்கிறது :)

தமிழ் said...

உண்மை தான்

Dhiyana said...

என் கஸின் இரண்டாவதும் ஆண் குழந்தைப் பிறந்ததற்காக மிகவும் வேதனைப்பட்டு அழுதாள். நீங்க கூறியுள்ளது போல் அனைவரும் பெண் குழந்தை விரும்பத் தொடங்கியுள்ளனர் அவர்களின் பாசத்திற்காக.

ஹேமா said...

மூத்ததாகப் பெண் பிள்ளை வேணும் என்பார்கள்.வீட்டுக்கு மூத்த பெண் பிள்ளைதான் லட்சுமிகடாட்சம் என்பார்கள் என் வீட்டில்.

Ungalranga said...

தோழி,
ஒரு சிறிய வருத்தமும் எனக்கு இருக்கிறது.
இதை நீங்கள் எப்படி எடுத்து கொள்வீர்கள் என்று தெரியவில்லை.
என்றாலும் சொல்லிவிடுகிறேன்.

ஆண் குழந்தை , பெண் குழந்தை என்கிற பேதம் குழந்தைகளுக்குள் இல்லை. அவர்களிடம் போய் நீ ஆண் குழந்தை நீ முரடனாக தான் இருப்பாய் பெண் குழந்தையோடு பழகாதே என்று சொல்லிவிடமுடியுமா..? முடியாது.
ஏன் ?
அந்த ஆண் குழந்தையிடத்தும் அன்பு ஊறி கிடக்கிறது. வளரும் போது அவனை அன்பானவனாக வளர்ப்பதை விட்டுவிட்டு ...

ஆணோ பெண்ணோ..அவர்களை அன்பானவர்களாக வளர்க்க வேண்டியது நம் கடமையே தவிர
ஆண் கீழானவன், பாசமற்ற ஜந்து என்கிற எண்ணத்தினை கொள்ளவேண்டாம்.

வார்ப்பை பொருத்தே பானை.
வளர்ப்பை பொறுத்தே குழந்தை.

கடவுள் மனிதர்களை படைத்ததாக தான் எனக்கு ஞாபகம்.

ஆனால் இன்று ஆண் தனி படைப்பாகவும் பெண் தனி படைப்பாகவும் அவன் படைக்கவில்லை.

இந்த கருத்தினை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்.

நன்றி.

அமுதா said...

/*கணினி தேசம் said...
ஆணென்ன பெண்ணென்ன
குழந்தையே வரம்தான். */

/*பிரேம்குமார் said...
ஆண் என்றும் பெண் என்றும் பேதமில்லை. எல்லாமே நாம் வளர்க்கும் முறையில் தான் இருக்கிறது :)*/


உண்மை. எல்லோரும் இப்படியே நினைக்க வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரேம் & கணினி தேசம்

அமுதா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ்மிளிர், தீஷு , ஹேமா

அமுதா said...

ரங்கன் said...
/*ஆணோ பெண்ணோ..அவர்களை அன்பானவர்களாக வளர்க்க வேண்டியது நம் கடமையே தவிர
ஆண் கீழானவன், பாசமற்ற ஜந்து என்கிற எண்ணத்தினை கொள்ளவேண்டாம். */
/*ஆனால் இன்று ஆண் தனி படைப்பாகவும் பெண் தனி படைப்பாகவும் அவன் படைக்கவில்லை. */
ரங்கன் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன். இது வரை "பெண்குழந்தையா!!!" என்ற சலிப்பையே கேட்டுப் பழகியவருக்கு இப்பொழுதெல்லாம் வித்யாசமாக கேட்பதைச் சொல்லவே. ஆண் என்றாலும் பெண் என்றாலும் நாம் நல்ல விதமாக வளர்க்க வேண்டும் பிற்காலத்தில் இதில் ஏற்ற இறக்கமின்றி... ஆனால் இன்றும் பெண் பல துன்பங்களை அனுபவிக்கிறாள் பெண் என்பதால். மாற்றமாகக் கேட்ட சில நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டேன். மற்றபடி ஆண்/பெண் குழந்தை என்ற வித்யாசங்கள் ஏதுமில்லை. பெண் என்றால் செலவு/சிரமம் என்ற எண்ணங்களை விட அன்பு/பாசம் என்ற எண்ணங்கள் எல்லா இடங்களிலும் பரவி ஆண்/பெண் ஒருவரை ஒருவர் மதித்து நடத்தல் வேண்டும். இருவரும் சமமே...

சந்திப்பு said...

சென்னை போன்ற நகரங்களில் தற்போது பெண் குழந்தைகளைத்தான் விரும்புகிறார்கள். ஆண் பிள்ளைகள் வீட்டுக்கு அடங்காது என்பதும், பின்னால் அவர்கள் பெற்றோர்களுக்கு உதவ மாட்டார்கள் என்ற கருத்தும் வலுவாக உள்ளது. மொத்தத்தில் பெண்கள் குழந்தைகள் குறித்து சரியான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. எனக்கும் பெண் குழந்தைகள்தான். வாழ்த்துக்கள். இந்தப் பதிவைப் பார்த்ததும் எனக்கும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. கடவுளும், பெண் குழந்தைகளும் என்ற தலைப்புதான் அது.

அமுதா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்திப்பு. நீங்கள் சொல்லிய கருத்துகள் போன்ற எண்ணங்கள் பலரிடம் இருக்கலாம். என்றாலும் எல்லோருக்கும் ஆண்/பெண் எதுவாக இருந்தாலும் குழந்தை என்ற அன்பு பாராட்டுதலுடன் வளர்க்கப்படும் எண்ணம் வரவேண்டும்

ஆ.ஞானசேகரன் said...

ஆணோ பெண்ணோ.... ஆரோக்கியமுள்ள அறிவான குழந்தை வேண்டும் என்ற மனநிலையை வரவேற்கின்றேன்...

அமுதா said...

/*ஆ.ஞானசேகரன் said...
ஆணோ பெண்ணோ.... ஆரோக்கியமுள்ள அறிவான குழந்தை வேண்டும் என்ற மனநிலையை வரவேற்கின்றேன்...*/

வ்ழிமொழிகிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Tech Shankar said...

தலைப்பு தெரிந்தவர்கள் சொல்லவும்.

உங்களுக்கே நினைவுக்கு வந்தால் அதைத் தெரிவிக்கவும்.

நன்றி

//வாஸந்தியின் நாவல்கள் (தலைப்பு மறந்துவிட்டது)