என் மேகம் ???

Thursday, April 2, 2009

அழியாத கோலங்கள் (தொடர் பதிவு)

அன்புத் தோழி கவிதாவுக்கு,
நலம். நலமறிய ஆவல். எப்படி இருக்கிறாய் ? உன்னை நினைத்தாலே கலகல என்ற சிரிப்பொலி மனதில் சங்கீதமாக ஒலிக்கிறது. கடைசியாக நாம் சந்தித்தது என் திருமணம் நிச்சயமான சேதியுடன். அமெரிக்காவில் இருந்து உன் வீட்டிற்கு செல்லும் வழியில் சென்னையில் ஒரு பொழுது மட்டுமே பேச முடிந்த பொழுது கூட என்னவரைப் பற்றி கேட்டு என்னை சிரிக்க வைத்துவிட்டு சென்றவள் தான்... அதன் பின் உன்னைப் பற்றி தகவல் பெற முடியவில்லை.

உனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கலாம் என்று அறிகிறேன். ஒரு குழந்தை தானா? எனக்கு கண்ணின் மணி போன்ற இரு பெண்கள். நண்பர்கள் எல்லோருக்கும் உன்னைத் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று வருத்தம் இருக்கிறது. தினம் மின்னஞ்சலுடன் விளையாடும் துறையில் இருந்து கொண்டு, தகவல் தொடர்பில் சுருங்கிய உலகத்தில், தொடர்பின்றி இருப்பது வேடிக்கையாக இல்லை... வாழ்க்கையே வேடிக்கையாகத் தான் உள்ளது. ஆனால் நட்பு என்பதே இதமான உணர்வு. எவ்வளவு நாட்கள் கழிந்தாலும் மீண்டும் சந்திக்கும் பொழுது மீண்டும் அதே உலகில் அதே உணர்வுடன் நுழைகிறோம்.

இன்று வீடு, அலுவலகம் என்று இரட்டைக் குதிரை சவாரியில் , நான் செய்யும் சர்க்கஸ் வேலைகளை நினைத்தால், முதன் முதலில் இருவருக்கும் அறிமுகமில்லா சென்னை மாநகரில் வேலை நிமித்தம் அறிமுகமாகி மகளிர் விடுதியில் அறைத் தோழிகளாக இருந்த நாளில் இருந்த நானா என்ற ஆச்சர்யம் எழாமல் இல்லை.

நினைத்துப் பார்க்கிறேன் நம் விடுதி நாட்களை. கலீர் என்ற சிரிப்போடு நாம் வலம் வருகையில் திட்டி புகார் செய்த பெண்கள் பின் நம் பக்கம் சேர்ந்ததும், மற்றவரிடம் திட்டு வாங்கியதும், விடுதியில் உம்மென்று தனிமைச் சிறையில் இருந்த பெண்களும் நட்பானதும், நமக்கென ஒரு உலகம் விடுதியில் உருவானதும்...ம்.. நேற்று வரை குழந்தைகள் உலகத்தில் தான் என் முழு நேரமும்... குழந்தைகள் சற்றே வளர்ந்து அவர்கள் உலகை உருவாக்கும் இந்த நாட்களில் தான் என்னால் என் உலகில் உலவ சற்று நேரம் கிடைக்கிறது.

ஒரு நாள் சட்டென்று நினைத்துக் கொண்டு திருப்பதி சென்றோம் நினைவிருக்கிறதா? இப்பொழுது அலுவலகம் கிளம்புவது கூட சட்டென்று முடிவதில்லை... பால் ஃப்ரிஜில் வைத்தாச்சா? குழந்தைகளுக்கு எல்லாம் தயாரா? இன்னும் என்னென்ன வேண்டும் என்ற பட்டியலை சரி பார்த்து... சில சமயங்களில் அலுத்தாலும் சொந்தங்களின் அரவணைப்பில் அலுப்பு மறைகிறது.

விடுதியில் ஒரு சிவராத்திரி விழித்திருந்து விடிய விடிய கதை பேசியதை மறக்க முடியுமா? இப்பொழுதெல்லாம் கிழமைகள் தெரிவது கூட பிள்ளைகள் பள்ளி செல்வதால் தான், இதில் சிவராத்திரியும் ஏகாதசியும் செய்திகளைப் பார்த்தால் தான் தெரிகிறது. கிரிக்கெட் பார்த்து செய்த ஆர்ப்பாட்டங்கள் கொஞ்சமா? காலை நாளிதழ் செய்திகள் சுடசுட படித்து விவாதிப்போமே? இன்று விளம்பரங்களில் வருவதால் டோனி பெயர் தெரிகிறது. பாகிஸ்தானில் எமர்ஜென்சி என்று ஒரு வாரம் கழித்து தெரிந்து கொள்கிறேன். எப்படி மாறினேன் என்று எனக்கு புரியவில்லை.

அலுவலகத்தில் இருந்து ஆற அமர நடந்து வந்து, சுட சுட இருக்கும் உணவை சாப்பிட்டு (அது சூடா இருந்தா தான் சுவை தெரியாது என்பது வேறு விஷயம்) கதை அடித்து விட்டு கனவுகளுடன் கண்ணுறங்குவோம். இன்று , மழலைகள் ஏங்கும் முன் பர பர என வீட்டிற்கு ஓடி, அவர்களுக்கு அமுதூட்டி, கதை கூறி உறங்க வைத்து, நாளை என்ன சமையல் என திட்டமிட்டு மறுநாள் விரைவில் எழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தூங்கினால் கனவுகளுக்கு கூட நேரமில்லை; என்றாலும் வாழ்வின் சுவைக்கு குறைவில்லை.

திருமணத்திற்கு முன் என் கண்களுக்குள் என்னவர் பற்றிய கனவுகள் விரிந்ததில்லை. மேற்படிப்பும், வேலையும் தான் கண்களுக்குள் இருந்தன. ஒரு மெல்லிய இசைக்கு மயங்குவது போல், இனிமையான தென்றலில் இலயிப்பது போல் குடும்பம் என்ற நூலில் கட்டுண்டேன். குடும்பம் என்ற மையப் புள்ளியில் தொடங்கி படிப்பு, வேலை என்று விரிந்த என் உலகம் மீண்டும் ஒரு குடும்பம் என்ற மையப் புள்ளியில் இலாவகமாக சுருங்கிய விந்தையை இன்னும் இரசிக்கிறேன்.


இராமாயணத்தின் மீதான பார்வை பத்து வயதில் ஒன்று, இருபது வயதில் ஒன்று என்பாய். நம் ஹாஸ்டலில் தன் கூந்தலை நேசித்த ஹேமாவை நினைவில் உள்ளதா? ஞாயிறு முழுதும் இடுப்பு வரை நீண்ட கூந்தலை சிடுக்கெடுக்கும் பொழுது கூட உதிராமல் இருக்க பாடுபடுவதை வியந்த நாம், திருமணமான ஒரு மாதத்தில் "என் கணவருக்கு பாப் தான் பிடிக்கும்" என்று ஒட்ட வெட்டிய பொழுது வியந்தோம். திருமணத்திற்குப் பின் முன்பின் தெரியாத வீடு என் வீடாகிப் போனபொழுது ஹேமா வியப்பாக இல்லை.

திருமணத்திற்கு முன் பெற்றோராலும் உடன்பிறந்தோராலும் நேசம் நம் மீது காட்டப்பட்டது. திருமணத்திற்குப் பின் நாம் அதை இன்னும் பலருக்குக் கொடுக்கிறோம். சிறகை விரித்து வானைச் சுற்ற ஆசைபட்ட நான் எங்கே... என்னைச் சுற்றி வட்டம் போட்டு சுற்றிக் கொண்டிருக்கும் நான் எங்கே... வருத்தம் இல்லை ஆனால் ஏக்கம் உண்டு... குழந்தைகளின் சிரிப்பில் அந்த ஏக்கமும் காணாமல் போய் விடுகிறது.

உன் பெண் எப்படி இருக்கிறாள்? உன்னைப் போல் கல கல என்று இருப்பாளா அல்லது உன்னவரைப் போல் அமைதியானவளா? என்ன பேசினாலும் முடிவில் குழந்தைகளிடம் தான் எண்ணம் விழுகிறது. வாழ்வின் மையமே இப்பொழுது வீடு என்னும் அன்புச் சிறைதான்.

வேலை விட்டு உன் கணவருடன் சேர நீ கிளம்பிய பொழுது , "மீண்டும் சந்திப்போமா" என்று புகைவண்டி நிலையத்தில் கண்ணீர் விட்ட மனநிலையில் தான் இன்றும் உன்னைத் தேடுகிறேன். மடல் எழுதிவிட்டேன், அனுப்ப முகவரி தான் இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றேனும் நாம் சந்திப்போம் என்று. அப்பொழுது திருமதி X, குழந்தைகளுக்கான தாய் அல்லது பேரக்குழந்தைகளின் பாட்டி என்ற அடையாளங்கள் இருந்தாலும் நாம் மீனு, கவிதாவுமாகவே உணர்வோம் இல்லையா?.

அன்புடன்,
மீனு

இந்த அருமையான தொடருக்கு அழைத்த "அமிர்தவர்ஷினி அம்மாவுக்கு" எனது நன்றிகள்.

இந்த தொடரைத் தொடர நான் அழைப்பது "சிறுமுயற்சி" முத்துலெட்சுமி-கயல்விழி"

15 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) கிழமைப் பற்றி சொன்னீங்களே உண்மையோ உண்மை.. தேதியும் கிழமையும் குழந்தைகளுக்காகத்தான் தெரிஞ்சுக்கிறேன்...

\\கனவுகளுக்கு கூட நேரமில்லை; என்றாலும் வாழ்வின் சுவைக்கு குறைவில்லை.// அருமை..

நட்புடன் ஜமால் said...

\\ஆனால் நட்பு என்பதே இதமான உணர்வு. எவ்வளவு நாட்கள் கழிந்தாலும் மீண்டும் சந்திக்கும் பொழுது மீண்டும் அதே உலகில் அதே உணர்வுடன் நுழைகிறோம்.\\

அமிர்தவர்ஷினி அம்மா said...

அலுவலகத்தில் இருந்து ஆற அமர நடந்து வந்து, சுட சுட இருக்கும் உணவை சாப்பிட்டு (அது சூடா இருந்தா தான் சுவை தெரியாது என்பது வேறு விஷயம்) கதை அடித்து விட்டு கனவுகளுடன் கண்ணுறங்குவோம். இன்று , மழலைகள் ஏங்கும் முன் பர பர என வீட்டிற்கு ஓடி, அவர்களுக்கு அமுதூட்டி, கதை கூறி உறங்க வைத்து, நாளை என்ன சமையல் என திட்டமிட்டு மறுநாள் விரைவில் எழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தூங்கினால் கனவுகளுக்கு கூட நேரமில்லை; என்றாலும் வாழ்வின் சுவைக்கு குறைவில்லை.

தி.மு, தி.பி என்று பெண்களின் வாழ்வை பிரித்தால், ஆகக்கூடி அனைத்து பெண்களும், நீங்கள் மேற்சொன்னதில் அடங்கிவிடுவார்கள்.

குடும்பம் என்ற மையப் புள்ளியில் தொடங்கி படிப்பு, வேலை என்று விரிந்த என் உலகம் மீண்டும் ஒரு குடும்பம் என்ற மையப் புள்ளியில் இலாவகமாக சுருங்கிய விந்தையை இன்னும் இரசிக்கிறேன்.
நானும் இந்த வார்த்தைகளை ரசிக்கிறேன்.

இப்பொழுது அலுவலகம் கிளம்புவது கூட சட்டென்று முடிவதில்லை... பால் ஃப்ரிஜில் வைத்தாச்சா? குழந்தைகளுக்கு எல்லாம் தயாரா? இன்னும் என்னென்ன வேண்டும் என்ற பட்டியலை சரி பார்த்து... சில சமயங்களில் அலுத்தாலும் சொந்தங்களின் அரவணைப்பில் அலுப்பு மறைகிறது.
Exactly....

அங்கங்க மயிலிறகால தடவறாப்பல தடவி கவிதையை நச்சுன்னு முடிச்சிட்டீங்க.

ஆயில்யன் said...

//அது சூடா இருந்தா தான் சுவை தெரியாது என்பது வேறு விஷயம்//


100% உடன் படுகிறேன் இக்கருத்தில் :)

ஆயில்யன் said...

//இப்பொழுதெல்லாம் கிழமைகள் தெரிவது கூட பிள்ளைகள் பள்ளி செல்வதால் தான், இதில் சிவராத்திரியும் ஏகாதசியும் செய்திகளைப் பார்த்தால் தான் தெரிகிறது.//

எமக்கு இணையத்தில்தான் அதுவும் சனி ஞாயிறு என்றால் ரீடர் மெல்ல தூங்கும்

திங்கள் வழிந்து நிரம்பும் அதிலிருந்து 5 நாட்கள் கும்மியும் கமெண்ட்களும் கலாட்டா பேச்சுக்களும்

ம்ம்ம்ம்

இப்படியே எதோ போகிறது எங்களின் வாழ்க்கையும் :)))))

Deepa said...

அசத்தல்!

மொத்தமாகவே பிடித்திருந்தது.. ஆனாலும் ரொம்பப் பிடித்தது:

//வானைச் சுற்ற ஆசைபட்ட நான் எங்கே... என்னைச் சுற்றி வட்டம் போட்டு சுற்றிக் கொண்டிருக்கும் நான் எங்கே... வருத்தம் இல்லை ஆனால் ஏக்கம் உண்டு... குழந்தைகளின் சிரிப்பில் அந்த ஏக்கமும் காணாமல் போய் விடுகிறது.//

சந்தனமுல்லை said...

மிக அழகு அமுதா! அதுவும் ஹாஸ்டல் வாழ்க்கை..ரொம்ப கேர்ப்ரீ லைஃப் இல்லையா அது! ஹ்ம்ம்..

சந்தனமுல்லை said...

//குடும்பம் என்ற மையப் புள்ளியில் தொடங்கி படிப்பு, வேலை என்று விரிந்த என் உலகம் மீண்டும் ஒரு குடும்பம் என்ற மையப் புள்ளியில் இலாவகமாக சுருங்கிய விந்தையை இன்னும் இரசிக்கிறேன்.
//

அமுதா டச்!!

கடைசி பத்திலே டச்சிங்காக்கிட்டீங்க!! மீனா கவிதாவை சந்திக்கட்டும்!!

Dhiyana said...

//மடல் எழுதிவிட்டேன், அனுப்ப முகவரி தான் இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றேனும் நாம் சந்திப்போம் என்று. //

ரசித்த வரிகள். ஆறு வருடங்கள் கழித்து என் தோழியை சென்னையில் பஸ்சில் சந்தித்தேன். அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று என் தொலைபேசி எண்ணையை மட்டும் வாங்கி கொண்டு அவள் போய் விட்டாள். அவள் அழைப்பாள் என்று நான் தினமும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

அமுதா said...

நன்றி முத்துலெட்சுமி... ரொம்ப ஃபாஸ்டா தொடரை தொடர்ந்துட்டீங்க :-)

நன்றி ஜமால்

நன்றி அமித்து அம்மா.
/*தி.மு, தி.பி என்று பெண்களின் வாழ்வை பிரித்தால், ஆகக்கூடி அனைத்து பெண்களும், நீங்கள் மேற்சொன்னதில் அடங்கிவிடுவார்கள்.
*/... ஆமாம்

அமுதா said...

நன்றி ஆயிலயன். /*இப்படியே எதோ போகிறது எங்களின் வாழ்க்கையும் :)))))*/
:-)))

நன்றி தீபா கருத்துக்கும் முதல் வருகைக்கும்

நன்றி முல்லை /*கடைசி பத்திலே டச்சிங்காக்கிட்டீங்க!! மீனா கவிதாவை சந்திக்கட்டும்!! */
நடந்தால் மிக சந்தோஷம்...

அமுதா said...

நன்றி தீஷு. /*அவள் அழைப்பாள் என்று நான் தினமும் காத்துக் கொண்டிருக்கிறேன்.*/
நம்மைப் போல எத்தனை சூழ்நிலைகளோ? நேரம் கிடைக்கையில் நிச்சயம் ஒரு நாள் அழைப்பார்.

pudugaithendral said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை.

கடிதத்தில் எதிரே உட்கார்ந்து பேசுவது போல் எழுதுவது என் ஸ்டைல் என்று என் தோழி சொல்வாள். சேம் ப்ளட்டா இருக்கீங்க.

ராமலக்ஷ்மி said...

அமுதா அருமையாக உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

//மடல் எழுதிவிட்டேன், அனுப்ப முகவரி தான் இல்லை.//

இப்படி ஆரம்பித்து முடியும் அந்தக் கடைசி பத்தியில் கனக்கின்ற மனமும் அணையாத கனல் போன்ற நம்பிக்கையும் தெரிகிறது. பாராட்டுக்கள்.

அமுதா said...

நன்றி புதுகைத் தென்றல்.
நன்றி ராமலஷ்மி மேடம்