
கிருஸ்துமஸ் அன்னிக்கு புலிகாட் போகலாம்னு ப்ளான். ஆனால் சில மக்கள் அங்கே குடும்பத்தோடு போக வேண்டாம்னு அறிவுரை வழங்கியதால் (அப்படியா? எனி கமெண்ட்ஸ்?), வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைச் சரணடைந்தோம்.
அங்கே மதிய சாப்பாடு கிடைக்காது என்று புளிச்சோறும், தயிர்ச்சோறும் எடுத்துக்கொண்டோம். காரில் ஒரு மழலைப்பட்டாளத்தோடு காலை பத்து மணிக்குப் பயணம் தொடங்கியது. பரனூர் வரை சாதாரண காட்சிகள் தான். ஆனால் பரனூரில் இருந்து சில தொலைவு வரை இயற்கை காட்சி மிக மிக அழகாக இருந்தது. நம் சென்னை அருகிலா இது என்று ஆச்சரியப்படுத்தியது. வேடந்தாங்கலுக்குப் பிரியும் ஒரு கிளைச் சாலையை இம்முறை ஒழுங்காகப் பார்த்ததால் ஊரைச் சுற்றாமல் நேராக வேடந்தாங்கலுக்குப் போகும்பொழுது மணி 12.30.
பனங்கிழங்கு அவித்து விற்றுக் கொண்டிருந்தார்கள். நெல்லிக்காயும் , கொய்யாவும் பச்சை பனங்கிழங்கும் கிடைத்தன. 20 ரூபாய்க்கு பைனாகுலர் வாடகைக்குக் கொடுத்தார்கள். 20ருபாய்க்கு வாங்கும் பைனாகுலரை விட கொஞ்சம் பரவாயில்லை. நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே சென்றோம்.

மிக அழகான அமைதியான இடம். ஆரவாரமில்லாத கூட்டம். தண்ணீர் ஏரியில் தளும்பிக் கொண்டிருக்க, சற்று தொலைவில் பறவைகள் சுதந்திரமாகப் பறந்தும், அமர்ந்தும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தன. நாங்கள் கரையில் நடந்தவாறு இயற்கையைப் பருகிக் கொண்டிருந்தோம். நாரை, கொக்கு, அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, நீர்க்காகம், வாத்து என்று பலப்பல பறவைகள். சென்ற முறை பல பறவைக் குஞ்சுகளைக் காண முடிந்தது. இம்முறை ஒரே ஒரு பறவை தன் குஞ்சுகளுக்கு உணவு தருவதை மட்டுமே காண முடிந்தது. மீதியெல்லாம் வளர்ந்து விட்டன போலும்.
கரை நெடுக வெயிலின் கடுமை தெரிய விடாத நிழல் தரும் மரங்கள். ஆங்காங்கே நின்று காண வாட்ச் டவர், மற்றும் நின்று காண வசதியாக "platform" இருந்தது. வழி முழுமையும் ஓய்வெடுக்க பெஞ்சுகள், தாகம் தீர்க்க குடிநீர் குழாய், கழிவறை வசதி என்று எல்லாம் இருந்தன. முன்பெல்லாம் குரங்குகள் நிறைய இருக்கும், இம்முறை அவ்வளவாகத் தட்டுப்படவில்லை.
கட்டி வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, மேலும் சிறிது நேரம் பறவைகளை இரசித்தோம். குழந்தைகள் எல்லாம் நடைபாதையில் ஓடி விளையாடினர். நேரம் சென்றதே தெரியவில்லை. நான்கு மணிக்குப் பின்பு இன்னும் பல பறவைகள் வர ஆரம்பித்தன. ஐந்து மணிவரை இரசித்துவிட்டுக் கிளம்பினோம். வேடந்தாங்கலை விசிட் அடிக்க சரியான நேரம் நவம்பர் முதல் சனவரி வரை என
தமிழ்நாடு சுற்றுலா வலைதளம் கூறுகிறது.