என் மேகம் ???

Thursday, December 31, 2020

2020-2021

 2020 - உலகை உலுக்கிப்  போட்ட வருடம். 

இனிமையாகத் தான் துவங்கியது இவ்வாண்டு... நடுநிசி வரை விழித்து வாழ்த்துக்கள் பரிமாறி....பின் பொங்கல் வந்து கோலமிட்டு. கொண்டாடி... ஜூலை மாதம் பொறியாளர் பட்டம் பெற்று 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி கல்லூரி விழாவுக்கு திட்டம்  இட்டு... என .நாட்கள் நகர்ந்து கொண்டு தான் இருந்தன.

ஜனவரி மாதக் கடைசியில் கொரோனா எச்சரிக்கைகள் துவங்க...ஸ்வைன் ப்ளூ வந்த பொழுது இருந்த பீதியுடன் பள்ளி கல்லூரி செல்லும் பிள்ளைகளைக் கவலையுடன் பார்த்தபொழுது தெரியாது... இது அதற்கும் மேலென்று.

மெல்ல மெல்ல ஊரடங்கு என்று தொடங்கிய பொழுது வித்தியாசமாகத் தான்  இருந்தது. குடும்பத்துடன் சில நாள் என குதூகலித்தாலும்... பலர் வாழ்க்கை தலைகீழானது...  நமக்கெல்லாம் வராது என்ற திமிரை சற்றே அசைத்தது..
இயல்பு வாழ்க்கை இன்றி வேலை இழந்து தொழில்நொடித்து இன்னலுற்றோர் ஏராளம். கோவில்கள் மூடின.  எனறாலும் மனிதமே தெய்வமாக  , உயிரைப்  பணயம் வைத்து களத்தில் இறங்கினர் மருத்துவர்கள் செவிலியர் தூய்மை பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும்  விசால மனமுள்ள  மனிதர்கள்.  திறந்திருக்கும் மருத்துவமனைகளில் கால் வைக்க பயந்தது ஒரு கூட்டம்;  என்றாலும் அவசர சிகிச்சைக்கு போராடியவரும் உண்டு; இறுதி விடை கூட கொடுக்க இயலாது  கற்பூரமாக  மறைந்தோரும் உண்டு . 

வீட்டு கவலைகள் விடுபட வீட்டை விட்டு வெளியேறியவர்கள் கவலைகளோடு உறையும் நிலை. உறவுகள் கூடி மகிழ்ந்தோர் பிரிந்தே வாழும் நிலை.  புலம் பெயர்ந்தோர் துயர்கள் சொல்லில் அடங்காது. அவரவர்க்கு அவரவர் இன்னல்கள்.

தட்டுத் தடுமாறி படித்த ஏழைபிள்ளைகளின் படிப்பும் தடம் மாறியது ஆன்லைன் வகுப்புகளின் தேவைகளால். எல்லா நேரமும் இல்லோரே துயர் படுகின்றனர்... அவர்களே உதவி எனறால் ஓடி வருகின்றனர்.  

கண்ணுக்குத்  தெரியாத நுண்ணியிர் , நீ பெரியவன் அல்ல என்று உயிர் பயம்  கொடுத்தும் மனிதன் மாறியதாகத் தெரியவில்லை. தீண்டாமையும் சுகாதரமும் ஒன்றென பெருமை பேசுவதில் இருந்து என் உணவு என் மதம் என் கடவுள் என் சாதி  என் மொழி என் நாடு  என் நிறம்  என்ற மனிதனின் வெறியும்  அகங்காரமும்  சற்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. மனிதம் மட்டுமே வாழ்வை மீட்கும் என்றாலும் மனம் சுருக்கி வாழ்கிறோம். நம்மை காக்கும் கடவுளை நாம் காப்பதாக மதம் கொள்கிறோம். 

இன்று பெரும்பாலும் கொரோனாவுடன் வாழத் தயாராகி விட்டோம். அது தான் காலத்தின் மாயம். ஏற்றமோ இறக்கமோ நகரும் வரை தான் வாழ்க்கை.  கோரோனாவின் எச்சரிக்கைக்குப் பின்னும் சிறு துளியேனும் நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளவில்லை எனில் பெயரளவில் மட்டுமே நாம் மனிதர்கள். 

2020 இனிமையாக தொடங்கி  திகிலோடும் (கொரோனா++)  நம்பிக்கையோடும் (தடுப்பு மருந்து)  முடிகிறது. திகிலோடும் நம்பிக்கையோடும் தொடங்கும் 2021 திகில் தொலைத்து நம்பிக்கை ஓங்கும் இனிய வளமானதொரு ஆண்டாக இருக்கட்டும் 

ஒவ்வோர் ஆண்டும் 
நிறைந்து வருகிறது 
நாட் காட்டி ...
முழுத்  தாள்கள் 
வெற்றுத் தாள்கள்
கிறுக்கிய தாள்கள்
கிழிந்த தாள்கள்
கசக்கிய தாள்கள்
மறைந்த தாள்கள்
கண்ணிமைக்கும் முன்
கரையும் தாள்கள்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொருவருக்கும்
ஒன்றாக இருப்பதில்லை
முழுதாக கிடைத்தாலும்
ஒருநாள் என்பது
எல்லோருக்கும் ...
முழுமை ஆவதில்லை

2020... 
பெரும்பாலோருக்கு
மாறுபட்டதொரு காலம்
கடந்தவை நினைந்து
மீத தூரம் 
சீர் திருத்திக் கொள்ள 
வந்த எச்சரிக்கை மணி


நீ பெரியவனல்ல
நான் எனது எல்லாம் வீண்
மனிதம் மட்டுமே மகத்தானது
என்று உயிர்தொட்டு சொல்லும்  
காலம் என்றும் நிற்பதில்லை
காலத்தின் குரல் கேட்டு 
சற்றேனும் மேம்பட்டாலன்றி
மனிதரல்ல நாம்

பூக்கும் புத்தாண்டு 
நலமும் வளமும் நிறைந்து 
மனிதம் மேம்பட்டு
நாட் காட்டி தாள்கள் 
நிறைந்த தாள்களாக 
இன்பம் தரும் ஆண்டாகட்டும் 

3 comments:

சுஜாதா அன்பழகன் said...

படிக்க படிக்க இனிமை+அருமை

Muthuraj said...

இவ்வருடத்தின் எல்லா நாட்களிலும் எல்லோரும் இன்புற்று சிறந்த ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

Muthuraj said...

All for the best