என் மேகம் ???

Monday, June 22, 2009

குழந்தைகளும், ஒரு கவளம் சோறும் , கதைகளும்

"நானே சாப்பிடறேன் அம்மா", என்றபடி கையில் இருந்த தட்டை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாள் குட்டிப்பெண். என்ன செய்வது என்று ஒரு நொடி புரியாமல், அவர்களாகவே சாப்பிடும் பெண்களைப் பார்த்தேன். பெரியவள் ஒவ்வொரு கவளமாக சிந்தாது சாப்பிட்டாள். சின்னவள் எடுத்த கவளத்தில் பாதி கீழேயும் மீதி வாயுள்ளும் சென்றது. இந்த ஒரு கவளம் சோறு முன்பெல்லாம் உள்ளே செல்ல முன்பு என்னென்ன செய்ய வேண்டி இருக்கும்!!!

கோபமும், பொறுமையின்மையும் மட்டுமே என் குணமோ என்று அறிவு என்னைச் சுட்ட கணங்களில் , உள்ளிருந்த அன்பு, பொறுமை என்ற உணர்ச்சிகளுடன் என் கற்பனை வளங்களையும் ஊற்றெடுக்கச் செய்தவர்கள் இவர்கள் தானே?

ஒரு கவளம் சோறு உள்செல்ல, உணவைப் பங்கிட்டுக் கொண்ட காகமும், குருவியும், அணிலும், பூனையும், நாயும், (ஒற்றைக் காலிழந்த கருப்பு நாயும்) உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளைத் தேடிச் சென்றுவிட்டன. அளந்து தண்ணீர் செலவழிக்கும் வேளையிலும் உனக்கு உணவு உள் செல்ல நீ கைகளால் அளைந்து விளையாடிய நீர் முகந்த கோப்பையும், தெறித்த நீர்த்துளிகளின் நினைவு இப்பொழுதும் மனதைக் குளிர்விக்கின்றது.

எத்தனை கதைகள் உருவாயின? காகம், மயில், குயில் கிளி எல்லாம் சோற்றுருண்டையை முட்டையாகப் பாவித்து "என் முட்டை நீ சாப்பிடவில்லையா?" என்று என் நா வரள குரல் கொடுத்து கெஞ்சும். மீன் குஞ்சை எடுத்துச் சென்ற முதலையைத் தேடியும், முயல்குட்டியைக் கடத்திச் சென்ற டினோசரைத் தேடியும் நீங்கள் செய்த வீர சாகசங்கள் நினைவில் இருக்குமா? மீன் அம்மாவும் , முயல் அம்மாவும் வேறு அம்மாவிடம் போய் விட்டார்களோ?

உனக்கு சொன்ன கதையொன்றை நான் புத்தகமொன்றுக்கு அனுப்ப, எனக்கு கிடைத்த ஆறுதல் பரிசே மிகச் சிறந்த பரிசாக மின்னுகிறது. ஸ்கூலுக்கு செல்வதால் புத்திசாலியான யாழ் பாப்பா கதை தோழியால் இன்னொரு பள்ளியில் சொல்லி குழந்தைகள் இரசித்ததும் எனது மகிழ்ச்சியான தருணங்கள். நான் குரலெடுத்து பாடிய தாலாட்டில் நிம்மதியாக நீங்கள் தூங்கிய பொழுதுகள் தந்த நிம்மதி வேறெதற்கும் ஈடாகாது.

காணாமல் போன குழந்தையைத் தேடி வண்டிடம் வினவ, வண்டு நான் தோட்டத்தில் தான் திரிவேன், காற்றைக் கேள் என்று கூற, காற்றிடன் சொன்னவுடன் ஊரைச் சுற்றிய காற்று சற்று தொலைவில் குகையில் தூங்கும் குழந்தையைச் சொல்ல நீங்கள் அந்த குழந்தையை அம்மாவிடம் சேர்த்தது போன்ற கதைகள் பொக்கிஷமாக என் நினைவுகளுக்குள். இன்னும் உங்களுக்கு சமயம் பார்த்து சொல்ல தேவதைகளும், பட்டாம்பூச்சிகளும் , பூக்களும் , பறவைகளும் , விலங்குகளும் , பூஞ்சோலைகளும், நிலவும், தென்றல் காற்றும் என்னுள் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது எல்லாம் உங்கள் அறிவார்ந்த கேள்விகளுக்குப் பதிலை வலையில் தேடுகிறேன். இது வரை குழந்தைதனங்களை இரசித்த மனம், இனி, அறிவாற்றலையும் தனித்தன்மையும் இரசிக்க தயாராக வேண்டும். என் கற்பனையைத் தூண்டிய செல்வங்கள் இனி என் அறிவுக்கும் சவால் விடுவார்கள். பெருமிதம் கலந்த ஏக்கத்துடன் அவர்களைப் பார்க்கிறேன்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


"அம்மா நீயே ஊட்டி விடேன்", உடல் முழுதும் சோற்றுப் பருக்கைகள் அலங்கரிக்க குட்டிப்பெண் அழகாக சிரித்தாள். "கை கழுவிட்டு வா, ஊட்டி விடறேன்" என்றேன். "இப்ப ஊட்டறேன். இனிமேல் நீ வளர்ற, நீயாவே சாப்பிடணும் சரியா?" என்றபடி புதிய கதைகளைத் தேடியது என் மனம்.

17 comments:

சென்ஷி said...

:) அழகான பகிர்வுகள்!

ஆயில்யன் said...

/உனக்கு சொன்ன கதையொன்றை நான் புத்தகமொன்றுக்கு அனுப்ப, எனக்கு கிடைத்த ஆறுதல் பரிசே மிகச் சிறந்த பரிசாக மின்னுகிறது. ஸ்கூலுக்கு செல்வதால் புத்திசாலியான யாழ் பாப்பா கதை தோழியால் இன்னொரு பள்ளியில் சொல்லி குழந்தைகள் இரசித்ததும் எனது மகிழ்ச்சியான தருணங்கள்//

சூப்பரேய்ய்ய் :)))

ஆயில்யன் said...

//சென்ஷி said...

:) அழகான பகிர்வுகள்!///


ரிப்பிட்டேய்ய்ய்ய்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமை அமுதா.

ராமலக்ஷ்மி said...

வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் அமுதா.

//இது வரை குழந்தைதனங்களை இரசித்த மனம், இனி, அறிவாற்றலையும் தனித்தன்மையும் இரசிக்க தயாராக வேண்டும். என் கற்பனையைத் தூண்டிய செல்வங்கள் இனி என் அறிவுக்கும் சவால் விடுவார்கள். பெருமிதம் கலந்த ஏக்கத்துடன் அவர்களைப் பார்க்கிறேன்.//

அருமை.

//புதிய கதைகளைத் தேடியது என் மனம்.//

கண்டிப்பாக கிடைக்கும். வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

அழகு..

அ.மு.செய்யது said...

ம‌ட‌க்கி போட்டு க‌விதையா எழுதாம‌ உரைந‌டையா எழுதியிருக்கீங்க‌...

அசத்தல்.

தமிழ் said...

அருமை
அழகாக சொல்லி உள்ளீர்கள்

அன்புடன்
திகழ்

இந்த இடுகையைப் படிக்கையில்
ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.

/அதை இங்கே எழுத முடியவில்லை?/

ஒரு இடுகையாக வரும்
என்பதால்

Dhiyana said...

//என் கற்பனையைத் தூண்டிய செல்வங்கள் இனி என் அறிவுக்கும் சவால் விடுவார்கள்//

உண்மை அமுதா. படிச்ச/படிக்காத அறிவியலை தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு...

வழக்கம் போல் அருமையான பதிவு.

தமிழ் அமுதன் said...

///என் கற்பனையைத் தூண்டிய செல்வங்கள் இனி என் அறிவுக்கும் சவால் விடுவார்கள். பெருமிதம் கலந்த ஏக்கத்துடன் அவர்களைப் பார்க்கிறேன். ///

உண்மை! ஒரு பயமும் கூடவே வருகிறது!!

சந்தனமுல்லை said...

நல்ல இடுகை அமுதா!

Anoch said...

Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System

Anoch said...

Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System

"உழவன்" "Uzhavan" said...

//நான் குரலெடுத்து பாடிய தாலாட்டில் நிம்மதியாக நீங்கள் தூங்கிய பொழுதுகள் தந்த நிம்மதி வேறெதற்கும் ஈடாகாது//
 
தாலாட்டுலாம் பாடுவீங்களா?? சூப்பர் :-)
மகிழ்ச்சியின் தருணங்கள் அடங்கிய அழகான பதிவு.

Rajalakshmi Pakkirisamy said...

அழகான பகிர்வுகள்:)

தமிழ் காதலன் said...

arumaiyaana pathivukal.

Annam said...

super:)