என் மேகம் ???

Thursday, January 22, 2009

துரித உணவு தேவையா?

சில சமயங்களில் நிஜம் முகத்தில் அறையும் பொழுதுதான் விழித்துக் கொள்கிறோம். துரித உணவு கேடானது என்று தெரியும். என்றாலும் சில சமயங்களில் குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்று விதிமுறைகள் தளர்த்தப்படும். எனக்கு தெரிந்து பெரும்பாலோர் இப்படி தான்.

இது பற்றி பேரண்ட்ஸ் க்ளப்ல "புதுகை தென்றல்" ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருக்காங்க. இது என்னோட அனுபவம்.

அலுவலக நண்பர் ஒருவர் சொன்ன செய்தி தான் அதிர்ச்சி அளித்தது. அவரது உறவினர் 17 வயது பையனின் மரணம்... கேன்சர் எனும் அரக்கனால்... மருத்துவர் கூறும் காரணம் : "துரித உணவு". அலுவலகத் தோழியர் அனைவருமே அதிர்ந்து விட்டோம். மிகக் கடுமையாக துரித உணவுப் பழக்கத்தை குழந்தைகளிடம் நிறுத்த முடிவு செய்தோம், செய்து விட்டோம்.

இந்த செய்தி தந்த அதிர்ச்சியில் உணவு பழக்கங்களை மாற்ற எடுத்த முயற்சியில் எனக்குப் புரிந்தது, "கேட்பது போல் கூறினால் குழந்தைகள் புரிந்து சொல்வதைக் கேட்கிறார்கள்". நாம் அறிமுகப்படுத்தாவிட்டாலும் நண்பர்கள் வாயிலாக எளிதாக நூடுல்ஸ், குர்குரே, சிப்ஸ் என்று அறிமுகம் ஆனவர்கள். என்ன தான் கட்டுப்பாடு விதித்தாலும் செல்லம் கொடுக்கும் உறவுகளைத் தாஜா செய்து வாங்கி வரும் பொழுது கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டி வரும். ஒரு நாள் மின்னஞ்சலில் "குர்குரேயை உருக்கினால் ப்ளாஸ்டிக்" என்ற செய்தியைப் படித்து காட்டினேன். இது போல தான் எல்லா பாக்கெட் தின்பண்டங்களும் என்றேன். அன்று முதல் அவர்கள் அதைத் தொடுவது இல்லை. ஒரு நாள் அவசரத்துக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று ஒரு பாக்கெட் லேஸ் வாங்க "எங்களைச் சொல்லிட்டு நீ என்ன செய்ற" என்றார்கள். அப்படியே தூக்கிப் போட்டேன் குப்பையில்.. நினைவுறுத்தியதற்கு நன்றி கூறியபடி...


நூடுல்ஸ் பைத்தியத்தை வாரம் ஒரு நாள் என்ற கட்டுப்பாடுடனும், ஒரு ஜங்க் ஃபுட் என்றால் ஒரு குட் ஃபுட் என்று உளுந்து களியும் அதனுடன் அறிமுகப்படுத்தி இருந்தேன். இதில் எனக்கு பெருமை வேறு . இப்பொழுது கிடைத்த அதிர்ச்சியில் நீ உளுந்து களி சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை "நோ நூடுல்ஸ்" என்று கேன்சர் காரணமும் கூறிய பிறகு, சற்றே எதிர்ப்பு இருந்தாலும் இப்பொழுது அடங்கிவிட்டது. பர்கர் , ஃப்ரென்ச் ஃப்ரைஸ் எல்லாம் என்றோ ஒரு நாள் என்று அறிமுகப்படுத்தப்பட்டு, தீரா ஆசை ஆனவை... இதே காரணத்திற்கு இப்பொழுது மறுக்கப்பட்டு விட்டவை. உன் நண்பர்களிடமும் கெடுதல்களைக் கூறு என்றேன்.

சூப் பிடிக்கும் என்று இன்ஸ்டண்ட் சூப் வாங்கும் வழக்கம் இருந்தது. இப்போ... சூப்?? பர்கர்?? ஃப்ரென்ச் ஃப்ரைஸ்... வீட்ல நான் செய்யறேன் கண்ணுகளா என்று கூறிவிட்டேன். இருக்கவே இருக்கு சமையல் பதிவுகள்.

நீங்கள் இன்னும் விழிக்கவில்லையெனில் விழித்துக் கொள்ளுங்கள். நம் கையாலேயே ஸ்லோ பாய்சனிங் எடுக்க வேண்டுமா என்று ஒவ்வொரு முறையும் துரித உணவுகளைக் காணும்பொழுது கேட்டுக்கொள்ளுங்கள். தானாக துரித உணவு குறைந்துவிடும்.

13 comments:

ராமலக்ஷ்மி said...

நானும் இவற்றை நிறுத்தி ஆயிற்று ஆறேழு வருடங்கள். உங்களைப் போலதான் செய்திகளைக் காட்டி மாற்றினேன் மகனை:)!

நட்புடன் ஜமால் said...

\\"எங்களைச் சொல்லிட்டு நீ என்ன செய்ற" என்றார்கள். அப்படியே தூக்கிப் போட்டேன் குப்பையில்.. நினைவுறுத்தியதற்கு நன்றி கூறியபடி...\\

அருமை ...

நட்புடன் ஜமால் said...

\\சூப் பிடிக்கும் என்று இன்ஸ்டண்ட் சூப் வாங்கும் வழக்கம் இருந்தது. இப்போ... சூப்?? பர்கர்?? ஃப்ரென்ச் ஃப்ரைஸ்... வீட்ல நான் செய்யறேன் கண்ணுகளா என்று கூறிவிட்டேன். இருக்கவே இருக்கு சமையல் பதிவுகள்\\

அக்கறை.

சமையல்

சந்தனமுல்லை said...

உண்மைதான் அமுதா!! ஆனா அவைதான் குட்டீஸை ஈர்க்கிறது! மேலும், விளம்பரங்கள்..அதன் டார்கெட்டே குட்டீஸ்தானே!

கணினி தேசம் said...

குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டுவதே இந்த பாழாய் போன டி.வி விளம்பரங்கள் தான்.
:-((((


எனக்கும் என் தங்கமணிக்கும் Mcdonalds வெஜ் -பர்கர் ரொம்ப விருப்பம் அனால் என்றாவது ஒருநாள்தான் அனுமதி உண்டு.

கணினி தேசம் said...

நீங்கள் இன்னும் விழிக்கவில்லையெனில் விழித்துக் கொள்ளுங்கள்.
//

கண்டிப்பாக...அக்கறைக்கு நன்றி !!

அ.மு.செய்யது said...

//மின்னஞ்சலில் "குர்குரேயை உருக்கினால் ப்ளாஸ்டிக்" என்ற செய்தியைப் படித்து காட்டினேன்.//

நல்ல தகவல்...

அதும‌ட்டுமின்றி,
மசால் தோசை,சமோசா,சிக்கன் 65 கெண்டகி சிக்கன் இவைகளும்
ஜங்க் ஃபுட் தான்.இதெல்லாம் நாம் யோசிப்பதே இல்லை.

ப‌ய‌னுள்ள‌ ப‌திவு.

குடந்தை அன்புமணி said...

துரித உணவில் அஜினமோட்டோ எனும் பொருள் கலக்கப்படுகிறது. இந்த பொருள் கேன்சர் வருவதற்கு காரணம் என்கிறார்கள் டாக்டர்கள். சமீபத்தில் நடிகர் பிரபுதேவாவின் மகன் விசால் துரித உணவு சாப்பிட்டதால் இறந்து போனது பற்றி என் வலைப்பதிவில் முன்பே நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன். சுவை உயிருக்கு பகை. ஞாபகத்தில் இருத்திக்கொண்டால் நலம்.

Dhiyana said...

உண்மை அமுதா. நான் பழக்காவிட்டாலும், ஸ்கூல போய் சிப்ஸ் சாப்பிட பழகிவிட்டாள். பர்கர், ஃப்ரென்ச் ஃப்ரைஸ் எதுவும் பழக்கவில்லை. ஆனா பீசா பைத்தியம். ஸ்கூல வாரத்தில ஒரு நாள் பீசா டே. இந்தியா வந்தவுடன், அதையும் குறைக்கனும்.

pudugaithendral said...

அருமையா அழகா சொல்லியிருக்கீங்க.

பிட்சா, பர்கர் எல்லாம் நான் தான் செஞ்சு தர்றேன்.

மெக்டோனால்ட்ஸ், பிட்சா ஹட் எல்லாவற்றுக்கும் தடா போட்டாச்சு.

அ.மு.செய்யது said...

//அன்புமணி said...
துரித உணவில் அஜினமோட்டோ எனும் பொருள் கலக்கப்படுகிறது. இந்த பொருள் கேன்சர் வருவதற்கு காரணம் என்கிறார்கள் டாக்டர்கள். சமீபத்தில் நடிகர் பிரபுதேவாவின் மகன் விசால் துரித உணவு சாப்பிட்டதால் இறந்து போனது பற்றி என் வலைப்பதிவில் முன்பே நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன். சுவை உயிருக்கு பகை. ஞாபகத்தில் இருத்திக்கொண்டால் நலம்.
//

நீங்கள் சொல்வது போல் அஜினமோடோ எனப்படும் சீன உப்பு துரித உணவில் கலக்கப் படுகிறது..( அதை நாங்க‌ள் 'அச்சோமோ' என்று அழைப்போம் )

ஆனால் இவர்கள் பயன்படுத்தும் Re-Cycled எண்ணெய்களை விட அஜினமோடோ ஒன்றும் ஆபத்தானதல்ல.அதுவும் கேன்சர் வரும் அளவுக்கெல்லாம் அது கொடியதல்ல.

எங்க‌ளை போன்ற, ப‌ர்மாவிலிருந்து புல‌ம் பெய‌ர்ந்த ம‌க்க‌ள் வார‌ம் 3 முறையாவ‌து
அஜின‌மோடோ ப‌ய‌ன்ப‌டுத்தி விடுவோம்.சீனர்கள் தினமும் பயன்படுத்துகிறார்கள்.
அது சேர்க்க‌ப் ப‌டும் அள‌வைப் பொறுத்த‌து அத‌ன் உபாதைக‌ள்.

குடுகுடுப்பை said...

நல்ல பயனுள்ள பதிவு

எனக்கு துரித உணவு பிடிக்காது

ஆனால் நல்ல உணவு துரிதமாய் வந்தால் பிடிக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல விழிப்புணர்வுப் பதிவு