என் மேகம் ???

Wednesday, February 4, 2009

அறிவுஜீவமே!

எடக்கு மடக்காக ஏதாவது என் சுட்டிகள் செய்தால், "அறிவுஜீவியே!" என்போம். அது என் சுட்டிப் பெண்ணின் மொழியில் "அறிவுஜீவமே!" ஆனது. சுட்டிகளின் அறிவு ஜீவம் மற்றும் அறிவார்ந்த பேச்சுகள் சில...

*******************************
திரைப்படம் ஒன்றுக்கு சென்றிருந்தபொழுது, டிக்கட் கிடைக்கவில்லை.
சுட்டி: இனிமேல் இந்த தியேட்டருக்கே வரக்கூடாதும்மா
நான் : ஏண்டா செல்லம்?
சுட்டி : பாரும்மா, அப்பா டிக்கட் வாங்கறேன்னு சொல்றாங்க , ஆனால் டிக்கட் தரமாட்டாங்களாம். இனிமேல் இங்கே வரக்கூடாது

*******************************
சின்னவள் 3 வயதாகும் வரை அடிக்கடி கடி்த்து வைத்து விடுவாள். அவள் அக்கா தான் அதிகமாகக் கடிபடுவது. ஒரு நாள் தான் கண்ட கனவு என்று பெரியவள் கூறியது , கனவோ கற்பனையோ இன்றும் நாங்கள் நினைத்து மகிழும் சுவாரசியம் தான். "நாங்கள் எல்லாம் விளையாட்டிட்டு இருக்கோம்மா. அப்ப பெரிய டினோசர் வந்துச்சு. நாங்கள் எல்லாம் பயந்து ஓடலாம்னு பார்க்கறோம். திடீர்னு டினோசர் ஓடுது. என்னடானு பார்த்தால் யாழ் டினோசரைக் கடிச்சுட்டாள். அது ஐயோ சாமி காப்பாத்துனு ஓடிடிச்சு". அதானே கடிபட்டவளுக்கு தானே தெரியும் கடியோட வேதனை...
********************************கைக்குள் அடங்கும் இரப்பர் பந்தொன்று வாங்கி இருந்தோம். "இதுக்கு ஸ்ட்ரெஸ் பால் அப்படீனும் பெயர். கோபம் வந்தால் இதைக் கசக்கினால் கோபம் குறையும் என்றேன்". "எனக்கு கோபம் வருது அதைக் கொடு" என்று வாங்கிக் கசக்கினாள். பின், "சிரிச்சா இதை வச்சிக்ககூடாதா", என்றாள். "இதை வச்சு ஷூ கூட பாலிஷ் போடலாம் போல இருக்கே " என்றாள். அவளது கற்பனையில் நாங்கள் சிரிக்க ஆரம்பிக்க "முதுகு சொறியலாம், தூசி தட்டலாம்..." என்று பறந்த கற்பனைக் குதிரையோடு என்னால் பறக்க முடியவில்லை.

******************************

ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே அவளுக்குத் தெரியும். விடுமுறை விண்ணப்பம் எழுதிக் கொண்டிருந்தேன். சின்னவள் "C" பிரிவு, பெரியவள் "B" பிரிவு. நான் அவள் L.K.G "C" என நிரப்பிக் கொண்டிருந்தேன். குட்டிப் பெண் வந்தாள்.

"எனக்கு தானே முதல்ல எழுதற?"
"இல்லை அக்காவுக்கு"
"இல்லை. நீ "C" போட்டிருக்க. அக்காக்குனா "B" போட்டிருப்ப..."

என்னால் அவள் அறிவுக்கூர்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை

******************************

திடீரென்று ஒரு நாள் "அம்மா , அரிசி ஊசியில் இருந்தா வந்துச்சு?", என்றாள். எப்படி இப்படி ஒரு கேள்வி என்று எனக்கு இன்று வரை புரியவில்லை. "அரிசி செடியில் வரும். அப்பா கிட்ட சொல்லி உனக்கு காட்டச் சொல்றேன்" என்றேன். ஊருக்குச் சென்ற பொழுது வயலைக் காட்டி அவள் அப்பா "இங்க தான் அரிசி வரும். முதல்ல நெல் வரும், அப்புறம் அதை அரிசி ஆக்குவாங்க" என்றார். உடனே அவள் "அப்பா, இது எனக்கு ஏற்கனவே தெரியும்", என்றாள். அப்பப்ப மேடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ஆவார்கள். மழலையில் இதில் மகிழும் மனம், சற்று விவரம் தெரிந்தால் "கற்றது கைமண் அளவு" எனப் புரிய வைக்க விழைவது ஏன்?

*******************************

10 comments:

ராமலக்ஷ்மி said...

’அறிவுச் செல்லங்களே
என் செல்வங்களே’-ன்னும் தலைப்பிட்டிருக்கலாம் அமுதா. ஸோ க்யூட்:))!

Unknown said...

அப்பா டிக்கட் வாங்கறேன்னு சொல்றாங்க , ஆனால் டிக்கட் தரமாட்டாங்களாம். இனிமேல் இங்கே வரக்கூடாது//

சரிதான் :))

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத மாதிரில்ல இருக்கு.

அப்துல்மாலிக் said...

அறிவுச்செல்வங்களே..!! இதுக்கு இணை ஏதுமில்லைங்க..

இப்போதுல்ல குழந்தைகளுக்கு அவ்வளவு அறிவு.. சிலசமயம் அவங்க கேட்டுகும் கேள்விகளுக்கும் பதில் சொல்லதெரியாமல் பேய்முழி முழிச்ச காலமெல்லாம் உண்டு

நல்லா சொல்லிருக்கீங்க வாழ்த்துகள் அமுதா

அமிர்தவர்ஷினி அம்மா said...

so cute cuties.

படிக்கும்போது ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருக்கு

முக்கியமா ரப்பர் பந்து/

உங்கபசங்க அறிவு ஜீவிங்க தான்.

பாச மலர் / Paasa Malar said...

குழந்தைகளின் பேச்சே தனி அழகுதான்..அதிலும் இதுபோன்ற்ற விஷயங்கள் நினைத்து நினைத்து மகிழ வைக்கும்..

Dhiyana said...

//அதானே கடிபட்டவளுக்கு தானே தெரியும் கடியோட வேதனை//

:-). என் தங்கை கூட எப்பொழுதுமே என்னை கடித்து வைத்து விடுவாள்.

மேவி... said...

குழந்தையின் பேச்சு விலை இல்லாதது.......

அ.மு.செய்யது said...

அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்...

சந்தனமுல்லை said...

//சுட்டி : பாரும்மா, அப்பா டிக்கட் வாங்கறேன்னு சொல்றாங்க , ஆனால் டிக்கட் தரமாட்டாங்களாம். இனிமேல் இங்கே வரக்கூடாது//

avvvvvvv

//அது ஐயோ சாமி காப்பாத்துனு ஓடிடிச்சு". அதானே கடிபட்டவளுக்கு தானே தெரியும் //

அதானே!! :-))

//
இல்லை. நீ "C" போட்டிருக்க. அக்காக்குனா "B" போட்டிருப்ப..."
//

வெரிகுட்!!

ஹேமா said...

விலையில்லாச் செல்வங்கள்.ஆண்டவன் தரும் பெரும் செல்வம் குழந்தைகள்.