என் மேகம் ???

Wednesday, December 30, 2009

மார்கழிப் பூவே!!!

வானிலை காரணமாக குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அதிகாலை கடற்கரையைக் காண நேரம் அமைந்தது. பூசணிப்பூக்கள் அழகாக மலர்ந்ததைக் கண்டதும் நினைவு வந்தது , அன்று மார்கழி பிறக்கிறதென்று. ஒரு பூவைப் பறித்துக் கொண்டேன். முதல் நாளேனும் பூசணிப்பூவை வைத்துவிட வேண்டும் என்று மகிழ்வோடு எண்ணியபடி... இந்த மாதிரி வழக்கங்கள் சின்ன சின்ன மகிழ்ச்சி தருகின்றன அல்லவா?

மார்கழி என்றாலே சில ஆண்டுகளுக்கு முன்பே விட்டுவிட்டு வந்த கோவையின் பனிபடர்ந்த பொழுதுகள் மனதுள் வந்து போகும்... அது ஒரு காலம்... சென்னை என்பதே வெகு தொலைவு என்று எண்ணி வாழ்ந்த காலம். காலை நாலு மணிக்கு எழும் அம்மாவுடன் உடலுக்கு ஆகாதென்றாலும் எழுந்து தலை குளித்து, துண்டை தலையில் கட்டிக்கொண்டு தெருவில் கோலம் போட்ட காலம். வாசல் முற்றம் அடைக்க கோலம் வரைந்து... மார்கழி என்றால் நட்சத்திரக் கோலங்கள் தான் (அட!! வலையில் தேடினால் கிடைக்கவில்லை. அருங்கோண வடிவ கோலத்தின் பக்கங்களில் அதே போல் கூம்பாக வருமாறு இழுத்துவிட்டால் நட்சத்திர வடிவில் கிடைக்கும் கோலம் வாசல் அடைத்து மலரும்) . வெள்ளி என்றால் தவறாமல் கோலம் முடிந்தவுடன் பிள்ளையார் கோவில் தான். மார்கழி வெள்ளியில் மட்டுமே கிடைக்கும் கல்யாணி மாமியின் அந்த ருசியான அளவாகச் செய்யப்பட்ட பூரணக் கொழுக்கட்டைக்காக கோயில் விஜயம் தவற விடப்படாது.



வாசல் கூட்டி, சாணம் தெளித்து முதல் நாள் ஒரு பூ, அடுத்த நாள் இரண்டு என்று முப்பதாம் நாள் முப்பது பூக்களுக்கு நடக்கும் கதைகள் தனி. மார்கழி மாதம் முழுக்க பால்காரம்மாவுக்கு டிமாண்ட்தான். சாணம் எடுத்து வைக்க சொல்லி வீட்டுக்கு வீடு வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல், நீங்களே வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சென்றுவிடுவார். விட்டோமா பார் என்று சட்டியையும், முறத்தையும் தூக்கிக் கொண்டு மாட்டு கொட்டிலுக்கு முற்றுகை துவங்கும். அதுவும், இந்த போகியன்று... கிட்டதட்ட எல்லோரும் மாட்டு வால் அருகே நின்று கொண்டு அது திரும்பும் திசையெல்லாம் சென்று கொண்டிருப்போம். காலையில் சாணி கரைத்து தெளிக்கப்படும் நீரால் புறப்படும் மண்வாசனை சாணிப்பவுடர் வந்த பொழுதே குறைய ஆரம்பித்தது. சாணி மெழுகப்பட்டிருக்கும் வீட்டின் அழகே தனி.




அடுத்து பூக்கள்... எங்கள் குடியிருப்பில் தோட்டம் ஒன்று உண்டு. ஒரு காவலர் எங்கள் நண்பர் மற்றொருவர் உள்ளே விட மாட்டார். நண்பர் காவல் என்றால் அனுமதியுடன் உள்நுழைந்து ஆடி பாடி களித்து, செர்ரி பழங்கள் பறித்து உண்டபின் செம்பருத்தி செடியெல்லாம் மொட்டுக்கள் இன்றி மொட்டையடிக்கப்படும். வெள்ளை, சிவப்பு, ரோஸ், மஞ்சள் என்ற வண்ணங்களிலும் சாதா, அடுக்கு, மிளகாய் என்று வகைகளிலும் அவை எங்கள் நீர் தொட்டியில் மறு நாள் காலை மலர்ந்து, கோலத்தின் மேல் சாணத்துடன் சேர்ந்து அழகு சேர்க்கும். நண்பரல்லா காவல் என்றால், நைசாக உள்நுழைந்து வெற்றிகரமாக மொட்டுக்கள் பறிக்கப்பட்டு திட்டு வாங்கிக்கொண்டே தப்பித்து வீடு வருவோம்.

பூக்கள் என்றால் செம்பருத்தியும் பூசணிப்பூவும் மட்டும் தானா? ”டிசம்பர் பூக்கள்” என்று மணமற்ற அழகு பூக்கள். வெள்ளை, ரோஸ், வயலட், நீலம், மஞ்சள் என்று பூத்துக் குலுங்கும். புது நிறம் கண்டுவிட்டால் அதைப் பதியம் போட தேடி அலைவோம். நிறம் நிறமாக அப்பொழுது பிடித்த மலர்கள், ஏனோ இப்பொழுது விருப்பமில்லை. முல்லையும் மல்லியும் மட்டுமே சூடப் பிடிக்கின்றது.

நினைவுகள் மனதில் ஓட வீடு வந்தோம். கோலமின்றி வாசல் வெறிச்சென்றிருந்தது. கோலமிட ஆசையுடன் கோலப்பொடி எடுத்த பொழுது தான் “இன்னிக்கு அமாவாசை... கோலம் போடக்கூடாது” என்று குரல் கேட்டது. பூவை ஓரமாக வைத்து விட்டு மார்கழியை மறந்து பரபர வாழ்வில் ஐக்கியமானேன். சில பழக்க வழக்கங்கள் மகிழ்ச்சி தருகின்றன... சில பழக்க வழக்கங்கள் மகிழ்ச்சி தருவதில்லை...

7 comments:

நட்புடன் ஜமால் said...

சில சமயங்களில்

இவை அவையாகவும்

அவை இவையாகவும் ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

சில பழக்க வழக்கங்கள் மகிழ்ச்சி தருகின்றன... சில பழக்க வழக்கங்கள் மகிழ்ச்சி தருவதில்லை...

:) வாழ்க்கை இப்படித்தான் போகிறது அமுதா.

தங்களின் மார்கழி நினைவுகள் அருமை.

sathishsangkavi.blogspot.com said...

மார்கழி மாதத்து நினைவுகள் சுகமாக என் மனதில்.........

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

மகிழ்ச்சி தருகின்ற பழக்க வழக்கங்களில் பதிவு போடுவது இல்லயா? ரொம்ப நாளாச்சு..?

ராமலக்ஷ்மி said...

சுகமான மார்கழி நினைவுகள் ஒரு அழகான கோலத்தைப் போல.

அரங்கப்பெருமாள் said...

இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

மார்கழி என்றாலே, அதிகாலையில் கையில் ஆர்மோனியம், மிருதங்கம் என ஏதாவதொன்றோடு தெருக்களில் பஜனை பாடி வந்த நாட்கள்தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றன.
அழகான சில்லிப்புடன் கூடிய பகிர்வு.